அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 28 ஏப்ரல், 2010

தலையங்கம்:வளர்த்த கடா...!

First Published : 28 Apr 2010 12:43:00 AM IST

Last Updated : 28 Apr 2010 02:08:36 AM IST

அரசியல்வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும்படி, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தற்போது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ அல்லது அதற்கு முந்தைய அரசோ அதிகாரம் வழங்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உறுதிபடக் கூறிய பிறகும், பிரதமர் வந்து பதில் அளிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

"நான் அவைக்கு மாலை 3 மணிக்கு வந்து விளக்கம் அளிக்கவிருந்தேன். ஆனால் அதற்குள் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது' என்று பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ள அதேவேளையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு உத்தரவிடும் அளவுக்கு இது பெரிய விஷயமல்ல என்பதாகவும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஓர் ஆங்கில இதழ்தான் இந்த பிரச்னையைக் கிளப்பியது. அரசியல்வாதிகளின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுதியது. கார்கில் போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தால், தற்போதைய அமைச்சர் சரத் பவார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகச் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தது.

அமைச்சர் ப. சிதம்பரம் சொல்வதைப்போல, அரசியல்வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அதிகாரத்தை அரசு எந்த நிறுவனத்துக்கும் வழங்கவில்லை என்று கூறுவது உண்மையானால், ஒன்று அந்த ஆங்கில இதழில் வெளியான செய்திக்கு ஆதாரம் என்ன என்பதை அரசு கேட்டிருக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று சொல்லாமல், வெறுமனே அரசு உத்தரவிடவில்லை என்று கூறுவது, மத்திய அரசு தன்னைத்தானே தரம் தாழ்த்திக் கொள்வதாக இருக்கிறது.

ஒரு செய்தி பொய் அல்லது உண்மை என்ற இரண்டைத் தவிர வேறு மாறுபாடுகளுக்கு வழியில்லை. உண்மை என்றால், அரசைத் தவிர யார் இந்த நிறுவனத்துக்கு உத்தரவு கொடுத்தார்கள்? உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாகத் தொலைபேசி ஒட்டுக்கேட்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? பொய் என்றால், ஏன் அந்தப் பத்திரிகையின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பிரச்னை மிகப் பெரிதாக உருவெடுத்ததிலும், அதில் அதிக தொடர்புடையவர் மத்திய அமைச்சர் சரத் பவார் என்று கருதப்படுவதாலும், இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டால் மத்திய அரசுக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கையில் அவர் இறங்குவார் என்று பத்திரிகைகளே யூகச் செய்திகளை விரித்ததாலும், சரத் பவார் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அரசு மறைமுகமாக உத்தரவிட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ஓர் அரசு தன்னைக் காத்துக்கொள்ள தன் அமைச்சரையும்கூட விட்டுவைக்க முடியாது. ஒட்டுக் கேட்கத்தான் செய்யும்.

அதேபோன்று, நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிடும்போது அதனை எதிர்கொள்ள ஓர் அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கத்தான் செய்யும். இதையெல்லாம் ஏதோ இப்போதுதான் நடப்பதைப் போலவும், தங்களுக்கு மட்டுமே நேர்ந்ததுபோலவும் அரசியல்வாதிகள் பிரச்னை கிளப்புவது தேவைதானா என்று யோசிக்க வைக்கிறது.

மேலும், இன்று இந்தியாவில் 56 கோடி மக்களிடம் தொலைபேசி அல்லது செல்போன் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 48 சதவீதம்! இவற்றில் 75 சதவீத தொலைபேசிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இன்றைய நவீன தொலைபேசி யுகத்தில் எந்த ஒரு தொலைபேசி அல்லது செல்போன் இணைப்பு வழங்கிய நிறுவனமும் ஒட்டுக்கேட்க முடியும். தொழில்நுட்பம் அந்த அளவுக்கு எளிதாக உள்ளது. காவல்துறை, உளவுத் துறை, மாநில அரசு அல்லது அந்த செல்போன் நிறுவனம் உரிமம் பெற ஆதரவாக நின்ற அரசியல்வாதி என யார் கேட்டாலும், தயக்கமில்லாமல், எந்தச் சிரமமும் இல்லாமல் தகவல்களை மடை திறந்து, ஒட்டுக்கேட்கச் சொன்னவர் காதுக்கே நேரடியாக ஒலிக்கும்படி திசை திருப்புகிறது இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம். பேசுபவரின் குரல் ஏற்றத்தாழ்வைக்கூடப் பதிவுசெய்து, அதைப் பேசியவர் யார் என்று உளவு பார்க்கவும்கூட இன்றைய தகவல் தொழில்நுட்பம் வகை செய்கிறது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், தனிநபர் அந்தரங்க உரிமை (ரைட் டு பிரைவசி) என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், இந்தியத் தொலைபேசிச் சட்டம் காலாவதியாகி, அர்த்தமற்றதாக மாறி பல காலமாகிவிட்டது. இப்போது அந்தச் சட்டம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தனியார் தொலைபேசி நிறுவனங்களின் பெருக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலைமை உள்ளது.  

இந்த நிலையில், தங்கள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அரசு மீது மட்டுமே குற்றம்சுமத்திப் பயனில்லை. பணமும், செல்வாக்கும் இருந்தால் யார் வேண்டுமானாலும் யாருடைய தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கலாம், இணையதளத்தைத் திறந்து படிக்கலாம், கடிதங்களை உடைக்கலாம். அரசாங்கத்தைவிட தனியார் துறைகளின் பங்குதான் இதில் அதிகம் என்பதை இந்த அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

இவர்கள் தொலைபேசியை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்தான் ஒட்டுக்கேட்க வேண்டும் என்றில்லை.

இந்த அரசியல்வாதிகள்தான் தனியார் துறையை தொலைபேசித் துறையில் புகுத்தி ஊக்குவித்தவர்கள். இந்த அரசியல்வாதிகளின் பலரது கைகளில் புழங்குவது இந்த தனியார் நிறுவனங்கள் கொடுத்த எவ்வளவு நேரமும் பேசிக்கொள்ளும் இலவச கைபேசிகள்தான்.

வளர்த்த கடா மார்பில்தானே பாயும்!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites