அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

வினா: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், தீய மனிதன் செய்யும் செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம் என்று ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் என்னிடம் கேட்டார். இதற்கு தாங்கள் விளக்கம் அளிக்கவும்.
- எஸ். ஷேக் பீர் முஹம்மது, மேலப்பாளையம்.
விடை: விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகûளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக - கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.
நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன் என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.
நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. எனக்கு எப்படி நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.
நாளை நான் சென்னை செல்வது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்; நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.
இரண்டு நம்பிக்கைளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (அ?மத் 6381)
இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப் பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.
அறிவுப் பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.
விதியையும் நம்ப வேண்டும்; மனிதர்கள் நல்லறங்களி?ம் ஈடுபடவேண்டும்; அவரவர் செயலுக்கு அவரவர் பொறுப்பு என்பதையும் நம்ப வேண்டும் இதைத் தவிர வேறு வழியில்லை.
அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.
ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
"நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறுநாளே சகஜ நிலைக்கு விதியை நம்புகின்றவன் வந்து விடுவான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். "இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மனநோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதாமாகும்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(57:23)
துன்பங்களைச் சந்திக்கும் போது மனிதன் ஆடிப் போய் விடாமல் தடுக்கும் கேடயமே விதி என்னும் நம்பிக்கை.
******* *************
விதியை நம்பி முடங்கிக்கிட! என்று மற்ற சில சமயங்கள் கூறுவது போல் இஸ்லாம் கூறவில்லை. மனிதனின் நடவடிக்கைக்கு எந்தத் தடங்கலும் ஏற்படுத்தாத வகையில் தான் இஸ்லாம் விதியை நம்பச் சொல்கிறது.
இந்த நிமிடம் வரை என்ன நடந்து விட்டதோ, அது தான் நமது விதி என்பது நமக்குத் தெரியும். அடுத்த நிமிடம் நடப்பது நமக்குத் தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.
எது நடந்து முடிந்து விதி இன்னதென்று தெரிந்து விட்டதோ அதில் விதியை நம்பி ஆறுதல் படு! எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டுச் செயல்படு! என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாது.
தொழுவது, நோன்பு நோற்பது போன்ற வணக்கங்களை விதியின் அடிப்படையில் நாம் செய்கிறோம் என்று காரணம் கூறி, தங்கள் செயலை நியாயப்படுத்துவோர்; உளப்பூர்வமாக அவ்வாறு நியாயப்படுத்த முடியாது.
ஒருவருக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி ஒருவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாட்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.
எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites