கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்? **** *********** ********** *******
சாஜிதா ஹுஸைன், சென்னை.
பதில்: இஸ்லாமிய மாக்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது முதலில் தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்க வேண்டும். இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லையென்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.
ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.
வர்ணம் அடிப்படையிலான பிரிவுகள் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கக் கூடியவை. முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகள் மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் ஏற்பட்டவை.
தலித் சமுதாயத்தில் பிறந்தவர் ஒருக்காலும் அவர் என்ன தான் முயன்றாலும் ஐயராக முடியாது. முதலியாராக முடியாது. செட்டியாராக முடியாது. ஆனால் ஷியாப் பிரிவில் இருந்தவர் அக்கொள்கையிலிருந்து விலகி எந்த நிமிடத்திலும் சன்னி பிரிவில் சேர்ந்து விட முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்தவர் அப்பிரிவில் அவருக்கு விருப்பமில்லாவிட்டால் எந்த நிமிடமும் ஷியாப் பிரிவில் சேர முடியும்.
ஷியாப் பிரிவினர் இறந்தவர்களின் சமாதிகளை வழிபடுவார்கள். சன்னி பிரிவினர் அவ்வாறு வழிபட மாட்டார்கள். இது போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல. இது வர்ணாசிரமத்துக்கும் முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு.
மேலும் வர்ணாசிரம தர்மம் என்பது தீண்டாமையை நிலை நாட்டுவதற்காகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும். சன்னிகள் ஷியாக்களைத் தீண்டாக்தகாதவர்கள் என்று கருதுவதில்லை. அது போல் ஷியாக்களும் கருதுவதில்லை. தவறான கொள்கையில் உள்ளனர் என்று ஒருவர் மற்றவரைப் பற்றி கருதுகிறார்களே தவிர பிறப்பால் தாமே உயர்ந்தவர்கள் என்று எந்தப் பிரிவும் கருதுவதில்லை.
ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன. ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன. ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.
சண்டைகள் நடப்பதால் எப்படி இஸ்லாத்தைத் தேர்வு செய்வது என்று தயங்கத் தேவையில்லை. சண்டைகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.
இன்னும் சொல்வதானால் இவர்களிடையே சண்டைகள் நிலவிடக் காரணம் இஸ்லாத்தின் போதனைகளை அவர்கள் கைவிட்டது தான்.
கேள்வி: முஸ்லிம்களிடத்திலும் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக என் இந்து நண்பர் கூறினார். மற்ற பிரிவுகளுக்கு விளக்கம் சொல்லும் என்னால் ஷியா-சன்னி பிரிவுக்கு விளக்கம் தர முடியவில்லையே?
கௌதியா ஹாஜா, அதிரை.
பதில்: இஸ்லாத்தில் ஷியா, சன்னிப் பிரிவுகள் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களிடத்தில் அது இருப்பதை நாம் மறுக்க முடியாது.
ஆனால், அது ஜாதிப் பிரிவு என்பதை ஏற்க முடியாது. மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கொள்கைப் பிரிவு தான் இது.
ஆன்மீகத் தலைவரிடம் பைஅத் (தீட்சை) பெறுதல், சமாதிகளை வழிபடுதல், நபிகள் நாயகத்தின் வாரிசுகள் மட்டுமே ஆள்வதற்கு உரிமை பெற்றவர்கள், ???அலீ தான் நபிகள் நாயகத்துக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்பதெல்லாம் ஷியாக் கொள்கையில் சில.
இக்கொள்கைகளை ஏற்றவர்கள் ஷியா எனவும், ஏற்காதவர்கள் சன்னி எனவும் அழைக்கப்பட்டனர். இன்றைக்கும் கூட, ஷியாப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தனது கொள்கை தவறானது என உணர்ந்து சன்னிப் பிரிவில் சேரலாம். யாரும் தடுக்க முடியாது.
ஆனால், ஒரு செட்டியார் என்ன தான் விரும்பினாலும் பிராமணர் பிரிவில் சேர முடியாது. எனவே தான் இது ஜாதிப் பிரிவு அல்ல என்கிறோம். அதையும் ஒழித்து அனைவரும் ஒன்றுபடுவதற்காக நாம் முயற்சிப்பதன் அவசியத்தை உங்கள் இந்து நண்பரின் கேள்வி உணர்த்துகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக