உலக அளவில் 20 கோடியே 50 இலட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில் ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 இலட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 இலட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 இலட்சமாக இருந்தது.
உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 இலட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.
ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள், இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வித் திட்டங்களால், கடந்த 20,30 ஆண்டுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில், படித்த, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் கடந்த 2004-05ம் ஆண்டில் பணிக்கு சேருவோர் எண்ணிக்கை 0.32 சதவீதம் குறைந்துள்ளது.
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாக இந்தியாவிலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கடந்த 1993-94ம் ஆண்டுகளில் விவசாய துறையில் வேலை வாய்ப்புகள் 61.67 சதவீதமாக இருந்தன. ஆனால் 2004-05ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 52 சதவீதமாக குறைந்துவிட்டது.
விவசாயத்துறை மூலம் வரும் வருமானம் அதிகமாக உள்ள நிலையில், விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகம், ஹோட்டல், உணவு விடுதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த துறைகளில் பணி செய்பவர்கள், தங்களின் பணி பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கின்றனர். எனவே, பல இளைஞர்கள் சுய தொழில்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், இவர்களுக்கும் ஒரு தடை ஏற்படுகிறது. சுயதொழில், சிறு தொழில் செய்யும் இளைஞர்களின் தொழிலை பாதிக்கும் அளவிற்கு பெரிய நிறுவனங்களும், சந்தைகளும் பல்கலை கட்டடத் தொகுதிகளும் ஏராளமாக வந்துவிட்டன. இதன் காரணமாக, வேலை இல்லாமல், சுயதொழில் செய்யும் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பெரிய நிறுவனங்களுக்கு செல்கிறது. இது, வேலை இல்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com