Pages

Pages

வியாழன், 17 நவம்பர், 2011

குண்டாகும் பள்ளி குழந்தைகள்!

இந்தியாவில் உணவு பழக்கம் மாறி வருவதாலும், ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் 20 சதவீத குழந்தைகள் குண்டாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்டு வாழ்நாள் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் மாறி வரும் உணவு பழக்கம் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகள் குறித்து போர்ட்டிஸ் டயபடீஸ் மையம் மற்றும் போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது.

இதில் கிடைத்த தகவல்கள் குறித்து டயபடீஸ் மையத்தின் தலைவர் அனூப் மிஸ்ரா கூறியதாவது:

உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
9  18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
நமது பாரம்பரிய உணவுகள் குறைந்த கொழுப்பு உள்ளவை, உடலுக்கு ஆரோக்கியமானவை, நார்ச் சத்து அதிகம் உள்ளவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. இதில் இருந்து விலகிப் போகும் நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து, இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். குண்டாக இருக்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் வயதான பிறகும் குண்டாகவே இருப்பார்கள். இவர்களுக்கு டயபடீஸ், அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com