அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 16 அக்டோபர், 2010

நாடாளுமன்றமா? சிலைகள் மன்றமா?

சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த அமைச்சரின் சிலை திறப்பு நிகழ்ச்சி விவகாரமாக ஆக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முரசொலி மாறனின் சிலையை நாடாளுமன்றத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். "இவரின் சிலையை நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவிற்கு இவரின் சாதனைகள்  பெரிதாக ஒன்றும் இல்லை'' என்று சிலையை அமைக்கும் கமிட்டி தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆரின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் திறப்பதற்கு முதலமைச்சர் மு.கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார் எனவும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் சிலைகள் நிறைந்து காணப்படுகிறது. எதில் சாதிக்க வேண்டுமோ அதில் கோட்டை விட்டு விட்டு, எந்த நன்மையும் தராத காரியங்களில் இன்றைய அரசியல் வாதிகள் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு இந்தச் சிலை விவகாரம் தெளிவான சான்று.
மக்களை ஏமாற்றுவதற்காக, மறைந்த தலைவர்களின் சிலைகளை ஆங்காங்கே திறந்து வைப்பது, மணிமண்டபம் கட்டுவது என்று கண் துடைப்புக் காரியங்களில் இன்றைய அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் சிலைகளை நிரப்பும் வேலைகளை செய்யத் துவங்கியுள்ளனர்.
ஏற்கனவோ காந்தி, நேரு, அம்பேத்கார், பிர்சா முண்டா, மராட்டிய சிவாஜி, ரஞ்சித் சிங் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் நாடாளு மன்றத்தின் வெளிப்புறமும், வல்லபாய் படேல், ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தி, நேதாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் உள்புறமும், கோவிந்த வல்லப பந்த், பாபு ஜெகஜீவன் ராம், ஒய்.பி.சவான், காமராஜர், பண்டித ரவிசங்கர், சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே ஆகியோரது சிலைகள் நாடாளுமன்ற அரங்கத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் அரவிந்தர், தேவி அஹில்யா, பாய் ஹோல்கர் மற்றும் முரசொலிமாறன் உள்ளிட்டவர்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றம் முழுவதும் சிலைகளின் கூடாரங்களாக மாறிவிடும். இறந்து போகும் எல்லா அரசியல்வாதிகளின் சிலையையும் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
இவ்வாறு சிலைகள் வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த சிலைகளினால் மக்களின் கஷ்டங்கள் நீங்கப் போகின்றதா? இந்தியாவின் கடன்கள் இல்லாமல் ஆகப் போகிறதா? வறுமை தான் நீங்கப் போகிறதா?
ஒரு தலைவர் நாட்டுக்கு நல்லது செய்துச் சென்றிருந்தால் அவரின் நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
அவர்கள் காட்டிய நல்ல நடைமுறைகளை, ஆலோசனைகளை ஒன்றையும் பின்பற்றாமல் அவரின் சிலை திறந்து வைப்பதால் என்ன பலன் ஏற்படப் போகிறது?
சிலைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் இந்தியாவில் ஏராளம். மதக் கலவரங்கள் ஏற்படுவதற்கு இந்தச் சிலை கலாச்சாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மதக்கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் தீயவர்களுக்கு இந்தச் சிலைகள் நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
சிலைகளுக்குச் செருப்பு மாலைகள் போடுவது, சிலைகளை சேதப்படுத்துவது என்று ஏதாவது ஒன்றைச் செய்ய, இதில் எதிலும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்கூட நாம் பார்த்து வருகிறோம்.
சமீபத்தில் மும்பையில் பால் தாக்கரேயின் தாயின் உருவச்சிலையில் சேற்றை யாரோ தடவ, அல்லது பேருந்து போகும் போது, தேங்கி நின்ற தண்ணீர் தெறித்ததால் சிலை சேறு பட, அதுவே பெரும் கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது.
இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும் போது இந்தச் சிலைகள் வைப்பது தேவையா? என்பதை மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கக் வேண்டும்.
மத்தியிலும் மாநிலத்திலும் எத்தனையோ அவசியப் பிரச்சனைகள் இருக்கும் போது இதுபோன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடாமல் நல்ல காரியங்களில் ஈடுபட முயற்சிக்கட்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites