அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 30 செப்டம்பர், 2010

இறைநேசத்தை பெறுவதற்குரிய வழிகள்


எம். முஹம்மது ஸலீம்,
இறைவனின் நேசத்தை பெற்றவருடைய  வாழ்க்கை, இம்மையிலும் மறுமையிலும் இறையருள் நிறைந்த இனிமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆதலால் தான் அன்று முதல் இன்று வரை இறைநேசத்தை பெறுவதற்காக என்றே மக்கள்மனந்தளராமல் பல்வேறு விதமான காரியங்களை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். துறவறம் மேற்கொள்வது, மனிதனை  நரபலி கொடுப்பது, நேர்ச்சை காணிக்கை என்ற பெயரில் தேகத்தை வருத்திக்கொள்வது  இன்னும் இதுபோன்ற காரியங்களையெல்லாம் இறைநேசத்தைப் பெற வேண்டும் என்பதை முதன்மையான நோக்கமாக வைத்தே செய்துகொண்டிருக்கின்றார்கள். அதேசமயம் ஆராய்ந்து பார்த்தால் "அதிகமதிகமான மக்கள், தாங்களாகவே பல காரியங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின் மூலம் இறைவனின் அளவற்ற அன்பையும் திருப்பொருத்தத்தையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்' என்பதை அறிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமா? "அவர்கள் தங்களைப் போன்றே அழிந்துபோகக்கூடிய  படைப்பினங்களுக்காக அக்காரியங்களை அரும்பாடுபட்டு செய்த நிலையில், அவைகளிடம் கையேந்தி கூனிக்குறுகி நின்று ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தாத பேதைகளாக பொன்னான பெருவாழ்வை  பொருளற்றக் காரியங்களால் வீணான முறையில் கழித்துக்கொண்டிருக்கின்றார்கள். அழகிய படைப்பாளனிடத்தில் முறையிடாமல் அவனுக்கு மாறுசெய்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்' என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். இதோ இவர்களின் இந்த அர்த்தமற்ற செயல்களைப் பற்றி  ஏகஇறைவன் திருமறையில் குறிப்பிடுவதை பாருங்கள்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே  அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.  (அல்குர்ஆன் 39 : 3)
பின்னர், அவர்களின் அடிச்சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம். தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேண வில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.     (அல்குர்ஆன் 57 : 27)
இதற்கெல்லாம் காரணம், அவர்கள் அகிலத்தை படைத்த ஆண்டவனைப் பற்றியும், அவன் அருளியிருக்கின்ற அப்பழுக்கற்ற அருமையான வாழ்வியல் அடிப்படைகளைப் பற்றியும் அறியாதவர்களாக அல்லது அறிந்து கொள்வதற்குரிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாதவர்களாக அலைபாய்ந்து கொண்டிருப்பது தான். ஆனால் அவர்களின் நிலையை போன்று நம்முடைய நிலை இல்லை. அந்த இரட்சகனின் மகத்தான கிருபையால் ஒப்பற்ற ஓரிறைக்கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இத்தருணத்தில் நாம், அவனிடமிருந்து அருளப்பட்டிருக்கின்ற அருள்மறையிலே அவனது அருட்பெரும் நேசத்தை பற்றியும், அதை அடைந்து கொள்வதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கலாமா? அவசியமாக அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் நின்றுவிடாமல்அதற்கேற்ப நமது அமல்களை அமைத்துக்கொண்டால் அந்த நிகரற்ற நாயனின் நேசத்தைப் பெற்ற பாக்கியவான்களாக பிரகாசிக்கமுடியும். இனி அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இவர்களைதான் இறைவன் நேசிக்கிறான்
சாதாரணமாக நமது நடைமுறை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நாம் எவரையாவது  நேசித்தால் அல்லது எவரிடமிருந்தாவது நேசத்தை எதிர்பார்த்தால் முதலில் நாம் செய்வது என்ன? அவருக்கு அகமகிழ்ச்சியளிக்கின்ற, விருப்பமான செயல்களை தாமாக முன்வந்து அதிகமான அக்கறையோடும் சிரத்தையோடும் செய்து, அதன் மூலம் அவருக்குரிய விருப்பமானவர்களின் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்வதற்காக முழுமையாக முயற்சிக்கின்றோம். இதை கவனத்தில் இறுக்கமாக நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் இதே கோணத்தில், இறைவன் எந்தமாதிரியான தன்மைகளை நம்மிடம் எதிர்பார்க்கின்றான்? இன்னும் அவன் எத்தகைய குணநலன்கள், செயல்பாடுகள் கொண்டவர்களை நேசிக்கின்றான்? என்பதை அறிந்து அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்கின்ற போது, அவனுடைய நிகரற்ற நேசப்பார்வை நம்மை சூழ்ந்து கொள்கின்ற பொன்னான வாய்ப்பினைப் பெற்றுவிடலாம். ஆகவே அதன் ஆரம்பமாக, அவனுக்கு விருப்பமானவர்களைப் பற்றி அருள்மறையிலே அடுக்கடுக்காக சொல்லப்பட்டிருப்பதை வரிசையாக தெரிந்துகொள்வோம்.
இறைவனையே சார்ந்திருப்பவர்கள் :
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக!  காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3 : 159)
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ் ஒருவனின் மீதே முழுமையான ஆதரவு வைப்பவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக, பிணியிலிருந்து பாதுகாக்கும்படி பிரார்த்திப்பதாக இருந்தாலும், மழைவேண்டி மன்றாடுவதாக இருந்தாலும், குழந்தை பாக்கியத்தை கோருவதாக இருந்தாலும் அவனிடமே முறையிட்டு, அதற்கான பதிலை அவனிடமிருந்தே எதிர்பார்க்கவேண்டும்.
இறைவனை அஞ்சுபவர்கள் :
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 3 : 76)
இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக் குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்.   (அல்குர்ஆன் 9 : 4)
அந்த இணை கற்பிப்போருக்கு அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் எவ்வாறு உடன்படிக்கை இருக்க முடியும்? மஸ்ஜிதுல் ஹராமில் நீங்கள் உடன்படிக்கை செய்தோரைத் தவிர. அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடக்கும் வரை அவர்களிடம் நீங்களும் நேர்மையாக நடங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்.   (அல்குர்ஆன் 9 : 7)
இறைநம்பிக்கையாளர்களிடத்தில் இருக்கவேண்டிய இன்றியமையாத பண்புகளில் ஒன்று, இறையச்சமாகும். இரவு, பகல், தனிமை, பிறருடன் இருத்தல் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் என்றென்றும் தங்களால் இயன்றவரை இறைவனுக்குப்  பயந்தவர்களாக வாழவேண்டும்.
இறைத்தூதரைப் பின்பற்றுபவர்கள்:
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 3 : 31)
இறைமறையான திருக்குர்ஆனுக்கு கட்டுப்படுவதோடு, அதைக் கற்றுத்தந்து அதற்கு விளக்கமாக வாழ்ந்துகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் செயல், செயல், அங்கீரத்திற்கும் அழகிய வகையில் கட்டுப்பட்டு வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அண்ணலார் அவர்களால் ஏவப்பட்ட காரியங்களை கண்ணும் கருத்துமாக கடைபிடிப்பதுடன், தடுக்கப்பட்ட அனைத்துக் காரியங்களை விட்டும் விலகிக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
நன்மைகளை செய்பவர்கள் :
(இறைவனை) அஞ்சி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப் பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.   (அல்குர்ஆன் 5 : 93)
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.   (அல்குர்ஆன் 2: 195)
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்றுவிழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.  (அல்குர்ஆன் 3 : 134)
வெறுமனே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது, மாறாக தினந்தோறும் தங்களால் இயன்றளவு நன்மையான காரியங்களை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் செய்பவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் காரியங்கள் நிறுத்தப்பட்டு கூலிகள் வழங்கப்படுகின்ற இறுதிநாளிலே ஒவ்வொரு நபருடைய இறுதிமுடிவும் அவரவர் ஆற்றிய நற்காரியங்களின் கணத்தைப் பொறுத்துதான்  இருக்கும்.
திருந்திக் கொள்பவர்கள் :
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்வோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 2 : 222)
பகுத்தறிவுமிக்க சிறந்த படைப்பாக மனிதன் இருந்தாலும், அவன் பாவம் புரியக்கூடிய பலவீனமான படைப்பாகதான் இருக்கின்றான். இந்தவகையில், இறைநம்பிக்கையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் தவறிழைத்துவிடும் போது, படைத்தவனிடத்தில் பாவமன்னிப்பு தேடியவர்களாக தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும். மாறாகதெரிந்துகொண்டே பாவமான காரியங்களில் பிடிவாதமாக ஊறித்திளைப்பவர்களாக இருந்துவிடக் கூடாது.
துன்பங்களை சகித்துக்கொள்பவர்கள் :
எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்து விடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்து விடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 3 : 146)
இந்த உலகம் ஒரு சோதனைக்களம். இந்த உலக வாழ்க்கையிலே இன்பங்களும் துன்பங்களும் ஆழிஅலைகளைப் போல ஒன்றையொன்று தொடர்ந்து மாறி வரும்போது, இறைவனிடத்தில் உதவிதேடிய நிலையில் பொறுமையாளர்களாக இருக்கவேண்டும். எதிர்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் சோதனைகளை சகித்துகொள்ளவேண்டும். 
தூய்மையாக இருப்பவர்கள் :
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.  (அல்குர்ஆன் 9 : 108)
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மை யாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்வோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 222)
 அசத்தியமான கருத்துகள், சிந்தனைகள் போன்ற அசுத்தங்களை விட்டும்  நமது செயல்களை செம்மையான முறையில் பாதுகாத்துகொள்ளவேண்டும், சீரிய வகையில் சீர்படுத்திக் கொள்ளவேண்டும், இறைவிசுவாசிகள், இறைக்கொள்கையை பேணுவதன் மூலம் அடிக்கடி அகத்தை அசுத்தமில்லாமல் சுத்தீகரித்துக் கொள்வதோடு, தங்களது புறத்தூய்மையையும் பேணக்கூடியவர்களாக இருக்கவேண்டும். "சுத்தம் சுகம் தரும்' என்பது முதுமொழி. சுத்தமாக இருப்பதன் மூலம் சுற்றியுள்ள மற்ற மக்களுக்கும் நலன் ஏற்படுகின்றது. ஆதலால்தான் இஸ்லாம் தூய்மையை மிகவும் வலியுறுத்துகின்றது.
நீதமாக நடந்து கொள்பவர்கள் :
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49 : 9)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 60 : 8)
பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.  (அல்குர்ஆன் 5 : 42)
ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் என்ற எந்தவொரு பாகுபாடுமில்லாமல் எப்போதும் நீதியை நேர்மையான முறையில் நிலை நாட்டக்கூடியவர்களாக நடந்துகொள்ளவேண்டும். சொந்தபந்தம், உலகஆதாயம் போன்ற காரணங்களுக்காவும் சுயநலங்களுக்காகவும் நீதியை வளைப்பவர்களாக ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. அநீதமான முறையில் நீதி மறுக்கப்பட்டு சமுதாயத்தில் அநீதிகள் அதிகரிக்க காரணமானவர்களாக இருந்துவிடக்கூடாது.
இறைவனது பாதையில் போராடுதல் :
உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 61 : 4)
இறைநம்பிக்கையாளர்கள் இறைக்கட்டளைக்கு இசைந்தவர்களாக வாழ்வதோடு, இருளிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் அழைத்து செல்கின்ற இறை கொள்கையை இவ்வையகத்தில் மேலோங்கச் செய்தவற்காக விவேகமான வழிகளில் விழையவேண்டும். மேலும் அதற்கு எதிராக தொடுக்கப்படுகின்ற கருத்துத் தாக்குதல்களையும், தீட்டப்படுகின்ற சதிவலைகளையும் மார்க்கத்திற்குட்ட நிலையில் களைந்தெறிய முற்படுபவர்களாக இருக்கவேண்டும்.
இவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்
ஒருவருடைய நேசத்தை பெறுவதற்காக அவருக்கு விருப்பமான காரியங்களை மட்டுமா நாம் செய்கின்றோம்?             அவருக்கு கோபத்தை தருகின்ற, பிடிக்காத செயல்கள் எவை? அவரால் வெறுக்கப்படுகின்ற பிடிக்காத நபர்களுடைய நடத்தைகள் எவை? என்பதையறிந்து அவற்றை விட்டும் வெகுதூரம் விலகிவிடுகின்றோமா? இல்லையா? நன்றாக சிந்தித்துபாருங்கள். அவர் நம்மை நேசிக்கவேண்டும் என்பதற்காக அவர் அவமதிக்கின்ற அனைத்துக் காரியங்களை விட்டும் நாம் அகன்றுகொள்கின்றோம். இதே போலதான் மகத்துவமிக்க இறைவனின் நேசத்தை பெறுவதற்காக ஆசைப்படுகின்ற நாம், இறைவன் எதையெல்லாம் தடுத்திருக்கின்றான்? எத்தகைய  தன்மைகளை பெற்றிருக்கின்ற மனிதர்களை வெறுக்கின்றான்? என்பதை அறிந்து அவற்றை விட்டும் அகன்றிருக்கவேண்டும், அப்போதுதான் அவனுடைய நெருக்கத்தையும் நேசத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஆகவே அவனுடைய அன்பை பெற்றுக்கொள்கின்ற அற்புதமான வாய்ப்பினை இழந்தவர்களைப் பற்றி இங்கே காண்போம்.
ஏக இறைவனை மறுப்பவர்கள் :
 "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்பமாட்டான்'' எனக் கூறுவீராக!   (அல்குர்ஆன் 3 : 32)
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அவனது அருளிலிருந்து அவன் கூலி வழங்குவான். அவன் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 30 : 45)
" ஒரு இறைவன்தான் இருக்கின்றான்' என்பதற்கு எத்தனையோ சான்றுகள் நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் பரவிகிடக்கின்றன. இதைப் பகுத்தறிந்து நம்மை படைத்துப் பரிபாலிக்கின்ற அந்த ஒரேவொரு இறைவனுக்கு மட்டுமே  அடிபணிந்தவர்களாக வாழவேண்டும். மாறாக மண், மட்டை, மரம், மனிதன், சிலைகள் உட்பட அவனையன்றி இருக்கின்ற படைப்பினங்களை வணங்குகின்ற மாபாதகமான, வழிகேட்டினை விட்டும் தூரசென்றுவிடவேண்டும்
வரம்பு மீறக்கூடியவர்கள் :
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.  (அல்குர்ஆன் 2 : 190)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை விலக்கப்பட்டவைகளாக்கி விடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 5 : 87)
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7 : 55)
எது நன்மை? எது தீமை? எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்று மார்க்கத்திலே வரையக்கப்பட்டு இருப்பதற்கு இயைந்தவாறு வாழவேண்டும். மாறாக மார்க்கத்தின் கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகளை உடைத்தெறிந்துவிட்டு "எப்படியும் வாழலாம்' என்று தறிகெட்டு வாழ்பவர்களாக இருந்துவிடக்கூடாது.
நன்றி கெட்ட துரோகிகள் :
 அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.  (அல்குர்ஆன் 2 : 276)
நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான். துரோகம் செய்வோரையும், நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 22 : 38)
தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 4 : 107)
நம்மை  படைத்தவன், நம்முடைய வாழ்க்கை வளமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக அளவிடமுடியாத அளவிற்கு அருட்கொடைகளை அள்ளிவழங்கியிருக்கின்றான். எல்லாவற்றுக்கும் மேலாக "இஸ்லாம்'' என்ற மாபெரும் நேர்வழியை வழங்கியிருக்கின்றான். அவற்றை நினைத்து பார்த்து அவனுக்கு நன்றிசெலுத்துபவர்களாக இருக்கவேண்டும். தவிர, நாம் துன்பமான நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் போது நமக்கு உதவிபுரிந்து உறுதுணையாக நின்றவர்களை, நாம் நல்லவிதமான நிலைக்கு வந்தபிறகு நன்றியுணர்வில்லாமல் அவர்களை ஊதாசினப்படுத்துபவர்களாக இருந்துவிடக்கூடாது.
அநீதி இழைப்பவர்கள் :
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு அவன் முழுமையாக வழங்குவான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 3 : 57)
தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 42 : 40)
உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் இது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும், உங்களில் உயிர்தியாகிகளை ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 3 : 140)
பிறர்நலத்தை நாடக்கூடிய பரிசுத்தமான கொள்கையை பின்பற்றுகின்ற முஸ்லிம்கள், பிறருக்கு பாதகத்தை தோற்றுவிப்பவர்களாக இருக்கலாமா? எனவே எந்த விதத்திலும் அடுத்தவர்களுக்கு அநீதி இழைப்பவர்களாக இருக்கக் கூடாது என்று எச்சரிக்கை உணர்வோடு வாழவேண்டும்.
குழப்பம் விளைவிப்பவர்கள் :
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான் (என்றும் கூறினர்).   (அல்குர்ஆன் 28 : 77)
"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம். அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்துவிடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை விரும்ப மாட்டான்.  (அல்குர்ஆன் 5 : 64)
இஸ்லாம் அமைதியை அள்ளித்தந்து, அமைதியின்மையை ஆதரிக்காமல் அதை அடியோடு அழிக்கின்ற அழகிய மார்க்கம். ஆதலால்தான், "குழப்பம் விளைவிப்பது கொலையைவிட மிகக்கொடியது' என்ற மாற்றாரும் போற்றுகின்ற கருத்தினை பிரகடனப்படுத்தியுள்ளது. இத்தகைய மார்க்கத்தில் இருந்து கொண்டு ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளமாக இருக்கின்ற அமைதியை சீர்குழைப்பவர்களாக இருந்துவிடவே கூடாது.
பெருமையடிப்பவர்கள் :
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும். உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.    (அல்குர்ஆன் 4 :36)
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 31 : 18)
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்கு சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!   (அல்குர்ஆன் 28 : 76)
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57 : 23)
நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கல்வி, ஆரோக்கியம், செல்வம், அழகு போன்ற அனைத்து அருட்கொடைகளும் நம்மை சோதிப்பதற்காகவே தரப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றைக் கொண்டு கடுகளவுகூட கர்வம் ஆணவம் கொள்ளாமல் வாழவேண்டும். மாறாக, நமக்கு இருப்பதைப் போன்று கொடுக்கப்படாத அல்லது அதைவிட குறைவாக தரப்பட்டிருக்கின்ற பிறமக்களை கேவலமாகவும் இழிவாகவும் கருதுபவர்களாக இருந்துவிடக்கூடாது.
மோசடி பேர்வழிகள் :
 (முஹம்மதே!) ஒரு சமுதாயத்தவர் மோசடிசெய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக! அல்லாஹ் மோசடி செய்வோரை விரும்பமாட்டான். (அல்குர்ஆன் 8 : 58)
மோசடி செய்வது என்பது இருமுகமுடையவர்களின் பண்பு என்று இஸ்லாம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் நம்பிக்கையாளர்களிடத்தில் இத்தகைய பண்பு இருந்துவிடவே கூடாது. தங்களிடம்  நம்பிக்கையாக ஒப்படைக்கப்பட்ட பொருளை மறுப்பது, கொடுத்த வாக்குறுதியை மீறுவது இன்னும் இது போன்ற மோசடித்தனங்களை விட்டும் தூரவிலகிக் கொள்ளவேண்டும்.
வீண்விரையம் செய்பவர்கள் :
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.   (அல்குர்ஆன் 7 : 31)
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.   (அல்குர்ஆன் 6 : 141)
"வெயிலில் அலைந்தவனுக்கே நிழலின் அருமைத் தெரியும்' என்பார்கள். எந்தவொரு பொருளும் அது இல்லாதபோதுதான் அதனுடைய அருமை பெருமைகள் தெரியவரும். ஆகவே அருப்பட்டிருக்கின்ற எந்தவொரு அருட்கொடையையும் வீணாக்காமல், அதனுடைய பயனையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, அவற்றை சரியான முறையில் பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். மாறாக, "இவற்றைப் பயன்படுத்தியதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவோம்' என்பதை மறந்துவாழ்பவர்களாக இருக்கக்கூடாது.
தீயசொற்களை பேசுபவர்கள்:
அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4 : 148)
அருவருக்கதக்க, அடுத்தவர்களுக்கு அவஸ்தையை அளிக்கின்ற வார்த்தைகளை உதிர்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும். பேசுவதாக இருந்தால் பயனளிக்கின்ற பேச்சுகளையே பேச வேண்டும். பொய்களையும், பாரதூரமான பாவகரமான விஷயங்களையும் பேசுபவர்களாக இருக்கக்கூடாது.
இறைவனின் நேசத்தைப் பெறவேண்டும் என்று ஆவல்கொண்டவர்கள், முன்னால் சொல்லப்பட்ட   அனைத்து வசனங்களையும் கவனித்து வாழ்வதோடு, இது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) தெரிவித்ததையும் பின்பற்றி வாழ்பவர்களாக இருக்கவேண்டும். 
இறைநெறியை மீறிய இஸ்லாமியர்கள் :
இறைவனை நேசிப்பதை பற்றியும் அவனது நேசத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் இஸ்லாத்திலே கூறப்பட்டுள்ளதை சரியான முறையில் விளங்காத காரணத்தால், இஸ்லாத்தின் பெயராலேயே பல்வேறு விதமான விபரீதங்கள் தாங்கிய கொள்கைள் கோட்பாடுகள் இஸ்லாமியர்களிடத்திலே குடிகொள்ள ஆரம்பித்தன. இந்தவகையில், இறைநம்பிக்கையாளர்களை இரைச்சல் கொண்ட நரகத்தின் இரைகளாக மாற்றுகின்ற விதத்தில் இயங்கிய கொள்கைகளில் முக்கியமான ஒன்று, சூஃபித்துவமாகும். இந்த சித்தாந்தத்தை பரப்பியவர்கள், நாங்கள் இறைநேசத்தை பெறுவதற்காகவே இக்காரியங்களை செய்கின்றோம் என்று பெருமையாக பிதற்றிக்கொண்டாலும், இவர்களுடைய செயல்களுக்கும்  கற்சிலைகளின் நேசத்தை பெறுவதற்காக  யாகங்கள், தவங்கள், தியானங்கள், யோக பயிற்சி போன்றவற்றை செய்துகொண்டிருக்கின்ற இறைநிராகரிப்பாளர்களின் செயல்களுக்கும் இடையே எந்தவொரு வித்தியாசமும் இருக்கவே இல்லை. இதை கற்பனையாக சொல்லவில்லை. சூஃபித்துவத்தின் இரத்த ஓட்டமாக இருக்கின்ற தரீக்காக்களிலே ஒன்றான மௌலவிய்யா தரீக்காவில் செய்யப்படுகின்ற சில குருட்டுத்தனமான பக்திநிறைந்த காரியங்களை பாருங்கள்.
மௌலவிய்யா பாதையின் இறைவனோடு இணையும்  பயிற்சி :
மிகவும் கட்டுப்பாடான விதிகளைக் கொண்டு இந்த பயிற்சி தரப்படுகிறது. மிக உயர்ந்த இடத்தின் குறியீடான ஒரு வட்டத்தின் மையத்தில் ஞானகுரு நிற்பார். இறையில்லமான கஅபா இருக்கும் திசையை நோக்கி ஒரு சிவப்பு கம்பளம் அல்லது துணி அல்லது விரிப்பு போடப்பட்டிருக்கும். (தொழுகைப்பாய் என்றும் "முஸல்லா" என்றும் அதைச் சொல்வர்).
சிவப்பு என்பது இணைப்பின் நிறம். இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உலகுக்கும் அதுதான் குறியீடு, 24 வகையான நிறங்கள் இணைப்புக்காக வைக்கப்பட்டிருக்கும். குருவின் இடதுபக்கமாக சுழல் நடனத்தில் கலந்து கொள்ள இருப்பவர்கள் சுற்றி நிற்பர்.
நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து பாடும் "நஅத்' என்ற வகைப்பாடலுடன் சடங்கு துவக்கப்படும். அதையடுத்து திருக்குர்ஆனிலிருந்து சிலவசனங்கள் ஓதப்படும். பிறகு "குடும்' எனப்படும் முரசுகள் இசைக்கப்பட்டு அமைதி உடைக்கப்படும். பிறகு புல்லாங்குழல் தனியாக வாசிக்கப்படும். இறைவனோடு இணைய வேண்டும் என்ற ஏக்கத்தை அது வெளிப்படுத்தும். (புல்லாங்குழலின் ஏக்கத்தைச் சொல்வதில்தான் ரூமியின் உலகப்புகழ் பெற்ற "மஸ்னவி' என்ற ஆன்மிக காவியம் துவங்குகிறது).
 அடுத்த கட்டம் " சுல்தான் வலது நடை' என்று சொல்லப்படுகிறது. ரூமியின் மூத்த மகனும் மௌலவிய்யா தரீக்காவை ஏற்படுத்தியவருமான சுல்தான் வலதின் நினைவாக அது செய்யப்படுகிறது. இதில், குரு இருக்கும ஸ்தானத்தைப் பார்த்து, ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக்கொண்டே அந்த ஹாலைச் சுற்றி குருவைப் பின்பற்றி மூன்றுவரை வருவர்.
முதல் ஸலாம் நடனத்தை அறிமுகப்படுத்தும். குருவின் கையை முத்தமிடுவதன் மூலம் நடனத்தைத் துவக்க அனுமதி பெறுவர். நடன இயக்குனர் சுழல இருப்பவரின் இடத்தைச் சுட்டுவார். குரு தமதிடத்தில் நிற்க, இசைக் கலைஞர்கள் வாசிக்க , சுழல்வோர் கேட்காத ஸ்தாயியில் "அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ்' என்று கோரஸாக சொல்லிக்கொண்டே சுழல ஆரம்பிப்பர்.
இந்தப் பகுதி ஒரு பத்து நிமிடம் நடக்கும். நாலாவது முறையாக ஸலாம் சொல்லும்போது, குருவும் சுழல் நடனத்தில் கலந்து கொள்வார். அவர் மையத்தை அல்லது சூரியனை உணர்த்துவார். மற்றவர்கள் கிரகங்களைக் குறிப்பர். இது ரூமியின் சூரியப் பாதை. அதில் வலம் வரும் கோளங்கள் இந்த தர்வேஷ்கள்.
ஃபாத்திஹா ஓதி இந்த சடங்கு முடித்துக் கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து மௌலானா ரூமிக்கும் அவரது குருவாக இருந்த ஷம்ஸ் தப்ரேஸ் பேரிலும் ஃபாத்திஹா ஓதப்படும். பின்னர் எல்லா தர்வேஷ்களும் சேர்ந்து "ஹ' என்ற இறைவனின் திருப்பெயரை உச்சரிக்கத் தொடங்குவர்.
(நூல் : சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம், பக்கம் : 108, 109, 110)
இவை மட்டுமல்ல. இறைநேசத்தை தேடுகிறோம் என்ற பெயரில் இந்த சூஃபிகள் செய்த கூத்துக்களை பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம், எந்தளவிற்கெனில் எல்லாப் பொருள்களிலும் இறைவன் இருக்கின்றான் என்ற அத்வைத சிந்தனை, திக்ரு என்ற பெயரில் தூயஇறைவனின் திருப்பெயர்களைத் திரிப்பது, பைத் செய்வது, ஃபாத்திஹா ஓதுவது, இசையை ஆகுமாக்குவது, துறவறம் மேற்கொள்ளுவது, தியானம் என்ற பெயரில் உடலை வருத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுவது என்றெல்லாம் இவர்கள் இறைநிராகரிப்பு இணைவைப்பு மற்றும் பித்அத் நிறைந்த காரியங்களின் மூலம் ஒரு தனிமதத்தையே கட்டியெழுப்பியிருந்தார்கள். இன்னும் இதற்காகவென்றே அனைத்து மதங்களிலிருந்தும் பல்வேறுவிதமான சடங்கு சம்பிரதாயங்களை காப்பியடித்து கடைபிடித்துக்கொண்டிருந்தார்கள். இவ்வாறெல்லாம் மக்களை மாக்களாக மாற்றிக்கொண்டு, ஊர் உலகை மறந்து சுற்றிக் கொண்டிருந்த இவர்களைப் போன்றவர்களையே மகான்கள், அவ்லியாக்கள், ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு, இவர்களுக்காக என்று தனியாக தர்காக்களை கட்டிவைத்துக் கொண்டு இன்று முஸ்லிம்களில் பலர் பெயர்தாங்கிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சமாதி வழிபாட்டிலே மாற்றுமதத்தவர்களையே மிஞ்சி நிற்கின்றார்கள்.
கி.பி 1049ல் மறைந்த பாரசீகரான அபூ சயீத் இப்ன் அபீ அல் ஹைர் என்பவர்தான் முதன் முதலில் ஒரு தரீக்காவையும் அதற்குத் தேவையான இடம் அல்லது மடத்தையும் உருவாக்கினார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் 12 ம் நூற்றாண்டில் இருந்து தான் தரீக்கா என்ற அமைப்பு பரிபூரணப்படுத்தப்பட்டது என்று சொல்லலாம். கௌதுனா அப்துல் காதிர் ஜீலானி அவர்கள்தான் முதன் முதலாக தரீக்காவை முக்கியத்துவப் படுத்தினார்கள். காதிரிய்யா தரீக்காவை அடுத்து சுஹ்ரவர்திய்யா தரீக்காவும், பின்பு ஷாதுலிய்யா போன்ற தரீக்காக்களும் தோன்றி முக்கியத்துவம் பெற்றன.
(நூல் : சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம், பக்கம் : 116)
சூஃபித்துவத்துக்கு தமிழ்நாட்டின் பங்கு மிகமிக முக்கியமானது. குறிப்பாக, நாகூர், திருச்சி, தக்கலை, கீழக்கரை, காயல்பட்டினம், ஏர்வாடி போன்ற ஊர்கள் ஆன்மிகத் தளங்களாகத் திகழ்ந்து உள்ளன. இன்னும் திகழ்ந்து கொண்டுள்ளன.
(நூல் : சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம், பக்கம் : 379)
காயல்பட்டினத்தில் பிறந்து கீழக்கரையில் வாழ்வை அமைத்துக் கொண்ட சதக்கத்துல்லாஹ் அப்பா இரண்டு வகையில் முக்கியமானவர். பிரபலமான சூஃபியாக மட்டுமின்றி சூஃபி இலக்கியங்களை அரபிமொழியில் கொடுத்த முக்கிய படைப்பாளியாகவும் இருந்தார்.
(நூல் : சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம், பக்கம் : 387)
ஒரு மனிதர், அவர் அல்லாஹ்வோ, அவதாரமோ அல்ல. அவர் ஒரு இறைநேசர். சொந்த முயற்சிகளால் தன்னை உயர்த்திக் கொண்டு இறைவனில் ஒன்றியவர். அற்புதங்கள் என்று நாம் எதையெல்லாம் சொல்வோமோ அவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர். செத்துப்போன மூளைகளுக்குப் புரியாத வண்ணம் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த உலகில் தன் உடலோடு இருந்த போது செய்ததையெல்லாம் , உடலை விட்டுச் சென்ற பிறகும் செய்து கொண்டிருப்பவர். மரணம் என்பது முற்றுப்புள்ளியல்லநிரந்தரமான மிகச்சிறந்த வாழ்க்கையின் ஆரம்பம் அது என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.  நாகூரின் வரலாறும், நாகூர் தர்காவின் வரலாறும் அவரில்லாவிட்டால் உப்பில்லாத சோறு. அவர்தான் நாகூர் ஆண்டவர் என்ற புகழ்ப் பெயரில் அடக்கமாகியிருக்கும் மகான் காதர்வலீ, மீரான் சாஹிப், ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள்.
(நூல் : சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம், பக்கம் : 392)
இதையெல்லாம் அறியாமல், "இந்த தர்காக்களிலே இருப்பவர்கள் இறைவனின் நேசத்தை பெற்றவர்கள்தான். ஆகவே அவர்களிடத்தில் மண்டியிட்டு மன்றாடினால் நாமும் இறைநேசத்தை பெற்றுவிடலாம்'' என்று  பல்வேறான அனாச்சாரங்கள் மூடநம்பிக்கைகள் மற்றும் கேடுகெட்ட கேவமான ஹராமான காரியங்களை செய்துகொண்டு இறைவனின் சாபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள், பல முஸ்லிம்கள். ஆனால் இம்மையில் மட்டுமல்லமீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்ற மறுமை நாளிலும் அவர்களால் இவர்களுக்கு துரும்பளவு கூட பயனளிக்கவே முடியாது. ஏன், அவர்கள் தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களாக தான் தவித்துக்கொண்டிருப்பார்கள். இதோ இறைவனின் வார்த்தைகளை கேளுங்கள்.
அல்லாஹ்வையன்றி யாரை அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தும் கடவுள்களாகக் கற்பனை செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவியிருக்க வேண்டாமா? மாறாக இவர்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர். இது இவர்களின் பொய்யும் இட்டுக்கட்டியதுமாகும்.  (அல்குர்ஆன் 46 : 28)
ஆகவே, எந்தவொரு நோக்கத்திற்காகவும் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸக்கு எதிரான விதத்தில் எந்தவொரு காரியத்தையும்  செய்யவேகூடாது என்பதையும், இதையும் மீறி செயல்பட்டால் ஈருலகிலும் கைசேதப்பட்டவர்களாகவே இருப்போம் என்பதையும் நம்முடைய மனதிலே பதியவைத்துக்கொள்ளவோமாக. இஸ்லாத்திலே கூறப்பட்டிருக்கின்ற விதத்தில் இறைநேசத்தைப் பெறுவதற்காக முயற்சிப்பவர்களாக இருந்து வெற்றிபெறுவோமாக.  


நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்


   M.முஹம்மது ஸலீம்


      அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள் ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து  இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவதுதான் முக்கியம் என்பதால், தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்துக் கொண்டிருக்கிறோம்.

       அதே நேரத்தில் நமது அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்பட்டு ஆசைப்பட்ட சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் சில தன்மைகளை நம்மிடமிருந்து நாம் வேறொடு களைந்தெரிய வேண்டும். அந்தபண்புகளின் அடையாளங்கள் தென்படுகின்ற நிலையிலே காலத்தை ஒதுக்கி வியர்வையை சிந்தி அருமையான காரியங்களை செய்திருந்தாலும் அவை அல்லாவிடத்திலே விலைமதிப்பற்றதாகிவிடும். வழங்கப்பற்ற அருட்கொடைகளை வாரி இறைத்திருந்தாலும் அக்காரியங்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாமல் வீணாகிவிடும். ஆகவே, நமது அமல்களை பாழ்படுத்தக்கூடிய அத்தகைய நச்சுப்பன்புகளை பற்றி இக்கட்டுரையிலே காண்போம்.

இனைவைத்தல்

         நாள்தோரும் இறைநிராகரிப்பாளர்கள் நாடேபோற்றுகின்ற வகையிலே நற்காரியங்களை செய்தாலும் சேவை செய்வதையே தங்களது கொள்கையாக கொண்டிருந்தாலும் மற்றவர்களின் வாழ்விலே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதையே தங்களது இலட்சியமாகக் கொண்டிருந்தாலும் அல்லாஹ் அவர்களுடைய அனைத்து அமல்கலையும் அழித்துவிடுவான் என்பதை அனைத்து முஸ்லீம்களும் அறிந்துள்ளனர்.

       அந்த இறைநிராகரிப்பாளர்களிடம் நிறைந்துள்ளதைப் போன்றே பலவழிகேடான செயல்கள் முஸ்லிமகளிடத்திலே மலிந்து காணப்படுகின்றன. காஃபிர்கள் தங்களது கடவுள்களை படைப்பினங்களின் தரத்திற்கு தாழ்த்தி பல விஷயங்களில் சிலைகளை வடிப்பதை போன்று பல பெயர் தாங்கி முஸ்லிம்கள் படைப்பினங்களான மனிதர்களை அவ்லியாக்கள் மகான்கள் ஷேகுமார்கள் என்று துதிப்பாடி அல்லாஹ்வுடைய அந்தஸ்துக்கு உயர்த்தி தர்கா வழிபாட்டிலே வீழ்ந்துகிடக்கின்றன. தாயத்து தகடு ஜோதிடம் குறிபார்த்தல் நல்லநேரம் கெட்டநேரம் போன்ற மூடநம்பிக்கையிலே முழ்கி இணைவைப்பிலே ஊரிப்போய்கிடக்கின்றனர்.

       முஃமின்களாக நோன்பு தொழுகை ஹஜ் மற்றும் பல வழிபாடுகளை புரிந்தாலும் அவர்களது வாழ்விலே இணைவைப்பு என்பது சாக்கடை நீரைப் போன்று இரண்டறக்கலந்து காணப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் நற்காரியங்கள் ஏற்று கொள்பட்டு அதற்குரிய பிரதிபலனை பெற்று கொள்வார்களா? மாறாக நஷ்டவாளிகளாக மாறிவிடுவார்களா? என்பதை அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்.

        இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.  (அல்குர்ஆன் 9:17)

        இணைவைப்பாளர்கள் இமயமலையளவிற்கு நல்லமல்களை செய்திருந்தாலும் அல்லாஹ் அவற்றை அற்பமாகக் கருதி அழித்துவிடுவான். எந்தளவிற்கு எனில் இறைப்பணியை பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே மக்கள் மன்றத்திலே எடுத்துவைத்த நபிமார்களை கூட இணைவைத்தால் உங்களது அனைத்து அமல்களும் நாசமாகிவிடும் என அல்லாஹ் எச்சரித்துள்ளான். இதை திருமறையிலே கூறுகிறான்

        "நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்ட மடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.         (அல்குர்ஆன் 39: 65 66)

         ஆகவே, நமது அமல்கள் அங்கீகரிக்கப்பட்டு இன்பமான வாழ்வினை பெற முதலில் இணைவைப்பின் சாயல் கடுகளவு கூட நமது வாழ்விலே பட்டுவிடாமல் கவனமாக வாழ வேண்டும்

பித்அத்

        அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற விதத்திலே வாழ்ந்து வியப்பிற்குரிய வாழ்வியல் திட்டத்தை நம்மிடத்திலே சமர்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்களுடைய வாழ்வின் அடிப்படையில் நமது அமல்களை அமைத்துக்கொண்டால் தான் மறுமையிலே அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அருகதையானதாக இருக்கும். இல்லையெனில் அல்லாஹ்விடத்திலே அவை மதிப்பற்றதாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிடும். 

இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
          நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
                        அறிவிப்பவர் : ஆயிஷா ரலி , நூல்   : புகாரி 3697

        நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப்பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்க்ள
                                                அறிவிப்பவர் : ஆயிஷா ரலி, நூல் : முஸ்லிம் 3243

      அநேகமான முஸ்லிம்கள் அண்ணலாரின் வழிமுறையை சரியான முறையில் அறியாமல் அவருக்கு நேர்மாற்றமாக பல வணக்கவழிபாடுகளை செய்வதோடு அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமின்றி பலகாரியங்களை நன்மைகிடைக்குமெனக் கருதி செய்துகொண்டிருக்கிறார்கள்
 
    உதாரணமாக மவ்லூது மீலாது விழா பாத்திஹா, ஹீஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா மற்றும் பஞ்சா எடுத்தல் இதுபோன்ற காரியங்களை மார்க்கத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுமையிலே இந்த நூதனமான காரியங்களுக்கு நன்மை கிடைக்காததோடு இவை நரகத்திலே தள்ளக்கூடிய வழிகேடுகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

    செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.
                        அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல்  : நஸயீ1560

    எனவே, நமது அமல்கள் மகிழ்ச்சியான சுவர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் அவற்றை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்ளவேண்டும்.

இறையச்சமின்மை

    இறைநம்பிக்கையாளர்களை இறையச்சமுடையவர்களாக மாற்றுவதற்காகவும் அவர்கள் பெற்றிருக்கின்ற இறையச்சத்தின் தரத்தை பரிசோதிப்பதற்காகவும் அல்லாஹ் பல கடமையான விஷயங்களை கொடுத்துள்ளான். அவற்றை நிறைவேற்ற பல்வேறு விதமான விதிமுறைகளையும் வரம்புகளையும் விதித்துள்ளான்.

     இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான நோன்பைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

   நம்பிக்கை கொண்டோரே நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
                                                            (அல்குர்ஆன் 2:183)

    நமக்கு சொந்தமான ஆகாரத்தை விட்டும் அடுத்தவர்கள் நம்மை தடுக்க முடியாத போதிலும் மற்றவர்களை விட்டும் மறைவாக தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற போதிலும் ஒரு அடியான் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சாப்பிடாமலும் பருகாமலும் இருக்கிறான் . இத்தகைய இறையச்சவாதிகளாக நம்மை மாற்றுவதற்குத் தான் நோன்பை கடமையாக்கியுள்ளான். இன்னும் முஃமின்கள் தங்களது சக்திக்கேற்ப ஆடு, மாடு, ஒட்டகம் என்று கொடுக்கின்ற குர்பானியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

   அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களிடம் உள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.  (அல்குர்ஆன் 22:37)

    இவ்வுலகிலே தரப்பட்ட பொருளாதாரத்தைப்பற்றி தீர்ப்பு நாளிலே விசாரிக்கப்படுவோம் என்று இறைவழியிலே செல்வத்தைச் செலவிட நாம் தயாராக இருக்கிறோமா என்று சோதிப்பதற்காகவே குர்பானியை வலியுறுத்தியுள்ளான். கண்டிப்பாக நமது அமல்களிலே நகமும் சதையுமாக இறையச்சம் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு அற்புதமான சம்பவத்தை அருள்மறையிலே கூறுகிறான்.

     ஆதமுடைய இருபுதல்வர்களில் உண்மை வரலாற்றை அவர்களுக்கு கூறுவீராக அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்க்கப்பட்டது மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. நான் உன்னைக் கொள்வேன் என்று ஏற்கப்படாதவர் கூறினார். தன்னை அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்று ஏற்கப்பட்டவர் கூறினார். (அல்குர்ஆன்:5:27)
    
   ஆதம்(அலை) அவர்களுடைய இரு புதல்வர்களில் இறையச்சத்தோடு ஒருவர் வணக்கத்தை புரிந்ததால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கிறான். மற்றொருவருடைய வணக்கத்திலே இறையச்சம் இல்லாததால் அதை அல்லாஹ் மறுத்துவிடுகிறான். ஆகவே எந்த அமலைச் செய்தாலும் இறையச்சத்தோடு செய்வோமாக.
  
 விருப்பமின்மை

     எந்தவொரு அமலையும் எடுத்தோம் முடித்தோம் என்று அலட்சியமாகச் செய்யாமல் அதன்மூலம் நன்மைகளை நாடியவராக செய்யவேண்டும். இறைப்பொருத்தத்தை எதிர்ப்பார்த்தவராக இறையருளின்மீது ஆசைப்பட்டவராக அனைத்து அமல்களையும் அமைத்துக்கொள்ளவேண்டும்.

     உதாரணமாக செல்வத்தை செலவழிப்பதைப்பற்றி அருள்மறையிலே அல்லாஹ் கூறும்போது அவனுடையத் திருமுகத்திற்காகத் தரவேண்டுமென்று கூறுகிறான்.            

    நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)

    தர்மம் மட்டுமல்ல தொழுகை நோன்பு ஹஜ் உட்பட அனைத்துக் கடமைகளையும் வெறுப்பில்லாமல் விருப்பத்தோடு செய்யவேண்டும். மணிக்கணக்காக துôங்கிக் கொண்டிருப்பதால் தொழுவோம் கோடி கோடியாய் கொட்டிக் கிடப்பதால் தர்மம் செய்வோம். உடல் பெருத்துவிட்டதால் நோன்பு நோற்போம். ஏதோ கேட்டுவிட்டார் என்பற்காக உதவி செய்வோம் என்று அலட்சியமாக ஆர்வமின்றி செயல்படாமல் அல்லாஹ்வின் அருள் மீது ஆசைப்பட்டவராக இக்காரியத்தை அவன் பொருந்திக் கொள்ள வேண்டும் என்று செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த அமல்கள் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்படும். இதை திருமறையில் கூறுகிறான்.

   அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும் சோம்பலாகவே தொழுது வந்ததும் விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்கு தடையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 9:54)

   நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்திலே நின்று வணங்குவதைப் பற்றி பின்வருமாறு நவின்றார்கள்.

   எவரொருவர் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ரமழானிலே நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படும்.

                        அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), நூல்  : புகாரி  37

    ஈமான் கொண்டவராக இருப்பதோடு இறைப்பொருத்தத்தினை எதிர் பார்த்தவராக இரவுத் தொழுகையிலே ஈடுபடும் போதுதான் அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முகஸ்துதி

    வல்ல ரஹ்மானை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அதுவும் கட்டளைகளுக்கு அடிபணிந்து மனத்தூய்மையோடு அவனை வணங்க வேண்டும் என்று அல்லாஹ் அருள் மறையிலே கூறுகிறான்.

     வணக்கத்தை அல்லாஹ்விற்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும் உறுதியாக நிற்குமாறும் தொழுகையை நிலைநாட்டுமாறும் ஸகாத்தை கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறுகட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன்     : 98:5)

    நமது அருமையான செயல்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக போற்றி பேச வேண்டுமென்றோ நம்மைப் புகழ்ந்து வாழ்த்த வேண்டுமென்றோ அமல் செய்தால் அவற்றை அல்லாஹ் நன்மையை விட்டும் அப்புறப்படுத்திவிடுவான். முகஸ்துதியோடு செய்யப்படுகின்ற அமல்களை அல்லாஹ் அணு அளவு கூட அவற்றை அங்கீகரிக்கமாட்டான். இதைத் திருமறையிலே தெளிவுபடுத்துகிறான்.

    நம்பிக்கைக் கொண்டோரே அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தை செலவிட்டவனைப் போல உங்கள் தர்மங்களை சொல்லிக்காட்டியும் தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் :2:264)

    வழுக்குப் பாறையின் மீது படிந்திருக்கின்ற மண் அடை மழையிலே கரைந்தோடி விடுவதைப் போன்றே வெறும் கை தட்டலுக்காக செய்யப்படுகின்ற காரியங்கள் நன்மையை விட்டும் தடுக்க்ப்பட்டுவிடும். இதை நபி (ஸல்) அவர்க்ள் அழகிய சம்பவத்தின் மூலம் எச்சரிக்கின்றார்கள்.

    செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல், மார்க்கத்தை தெளிவுபடுத்திய ஆலிம், மார்க்கப் பாதையில் உயிரை விட்ட தியாகி இம்மூவரும் மனிதர்களிடம் கிடைக்கின்ற நன்மதிப்பிற்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் செயல்பட்டதால் அவர்களின் அமலை மறுமையிலே அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (ஹதீஸின் கருத்து)
            அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி),நூல் : முஸ்லிம் 3527

   ஆகவே, நம்முடைய அமல்கள் மறுமையிலே சுகமான சுவர்க்க வாழ்க்கைக்கு பாதை வகுத்துத் தரவேண்டுமெனில் அவற்றை முகஸ்துதியின்றி செய்ய வேண்டும்.

தீமைகளோடு கலந்திருத்தல்

     அழைப்புப்பணி செய்வது அனைத்து முஃமின்கள் மீதும் மறுக்க முடியாத தவிர்க்க இயலாத அரும்பணியாகும். தரணியிலே சிறப்பு மிகு சமுதாயமென்ற நற்சான்றைப் பெற அன்றாடம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமான பணியாகும். இதை அல்லாஹ் கூறுகிறான்.
      
   நீங்கள் மனித குலத்திற்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவுகிறீர்கள். தீமையை தடுக்கிறீர்கள்.  (அல்குர்ஆன் :    3:110)

   திருமறையிலே நன்மையை ஏவுமாறு கட்டளையிடும் போதெல்லாம் தீமையைத் தடுக்குமாறும் வலியுறுத்திக் கூறுகிறான். ஆனால், சிலர் தாங்கள் தவறான தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்தாலும் அதன் மூலம் பெறுகின்றவற்றை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்துகிறோம் என்று அற்பக் காரணத்தை கூறுகிறார்கள். ஆனால், பின்வருமாறு திருமறையிலே அல்லாஹ் ஏவுகிறான்.

     நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக. அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.  (அல்குர்ஆன் :23:96)

    நன்மையும் தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டு (ளளபகைமையைத்) தடுப்பீராக. எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். (அல்குர்ஆன் : 41:34)

   திருட்டுப் பணத்திலே தர்மம் செய்வது மோசடி செய்து குடிசைப் போட்டுத் தருவது வட்டிப் பணத்திலே விருந்து வைப்பது விபச்சாரம் செய்து ஊரே மெச்சுமளவிற்கு நற்செயல் செய்வது போன்ற தடுக்கப்பட்ட வழிகளிலே நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு தகுதியற்றவைகளாகும்.

    உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது. மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 329   

  ஆகவே, மறுமைநாளிலே நம்மைக் காப்பாற்றக்கூடியதாக நமது அமல்கள் இருக்க வேண்டுமெனில், அவை அனுமதிக்கப்பட்ட வழிகளிலே ஆக்கம் பெற்றதாக இருக்க வேண்டும்.
                                                           

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites