அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 25 நவம்பர், 2010

செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்


அப்பாஸ் அலீ எம். ஐ. எஸ். சீ

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள்.
   மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. இயற்கையாக மனிதன் தீமைகளை செய்யவே அதிக நாட்டம் கொள்பவனாக இருப்பதால் இச்சாதனைங்களையும் தீமையான காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறான். இதனால் உலகில் ஒரு புறம் இக்கருவிகள் மூலம் பல நன்மைகள் குவிந்துகொண்டிருந்தாலும் இதேக் கருவிகள் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் மாபெரும் குவியலாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
   இக்கருவிகளால் பலனடைந்து கொண்டிருந்த மக்கள் இதேக் கருவிகளால் பலத்த சங்கடத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை வருகிறது. கண்டுபிடிப்பு சாதனங்களால் ஏற்படும் விபரீதங்கள் படுபயங்கரமானதாக இருப்பதால் தங்களையும் தங்கள் குடும்பத்தார்களையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இக்கருவிகளால் நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தீமைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி இச்சாதனங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறார்கள்.
தீமைசெய்பவர்களுக்கு இக்கருவிகள் வலுமையான கூட்டாளியாகவும் உதவும் நண்பனாகவும் இருப்பதால் இச்சாதனங்களை தீயவர்கள் விரும்பி நேசிக்கிறார்கள். நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் சில தருணங்களில் தடம்புரண்டு செல்வதற்கு இச்சாதனங்கள் காரணமாகிவிடுகின்றது. இவற்றின் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருப்பதாலும் தீமைகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாகரீகம் என்று போற்றக்கூடிய படுமோசமான நிலை ஏற்படுகிறது.
பிஞ்சில் பழுத்த பழம்
   மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய கருவிகளில் ஒன்று தான் செல்போன் என்பது. பழம் சுவையானதாகவும் உண்ணுவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டுமானால் நன்கு காய்த்தப் பின்பு தானாக கனியும் நிலையை அப்பழம் அடைய வேண்டும். அவ்வாறில்லாமல் காய்க்கும் பருவத்தை அடைவதற்கு முன்பு பிஞ்சாக இருக்கும் நிலையில் பழுத்துவிட்டால் அதில் எந்தப் பயனும் இல்லை. குப்பைத் தொட்டி தான் அது சேர வேண்டிய இடம். செல்போன்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.
   படிப்பிலும் அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இன்றைக்கு திருமணமான தம்பதிகள் கூட அறிந்திராத அளவிற்கு ஆபாசங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகங்களை சுமந்து செல்லும் இளம் வயது சிறுமிகள் கருவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. தாய் தந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் தந்தையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே தங்களது வாலிபத்தை வீணடித்து பருவ வயதை அடையும் போது எதற்கும் சக்தியற்ற கிளவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இந்தக் கதிர்கள் சீக்கிரமே சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.
பூக்கடை சாக்கடையாகலாமா?
சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரும் பெரும் கல்லூரிகளில் படிக்கும் வாலிபர்களின் நிலையும் இதைப் போன்று தான் உள்ளது. அல்லது இதை விடவும் மோசமாக உள்ளது.  படங்களை பார்ப்பதற்கான வசனதி செல்போன்களில் செய்யப்பட்டு இருப்பதால் ஆபாசக் காட்சிகள் மற்றும் சினிமாப் பாடல்களை அதில் பதிவு செய்துகொண்டு பார்த்து இரசிக்கிறார்கள். ஆபாசத்தின் இன்னொரு பெயர் தான் சினிமா என்பது. பாடல்களிலும் காட்சிகளிலும் ஆபாசத்தைக் கலக்காவிட்டால் அந்த படம் நீண்ட நாள் திரையரங்குகளில் ஓடாது என்கின்ற அளவிற்கு சினிமாவில் ஆபாசம் பெருகியிருக்கிறது.
இந்த சினிமாக்காட்சிகளும் பாடல் வரிகளும் இசையும் பூக்கடையாக இருந்த  மனிதனுடைய மூளையை மழுங்கச் செய்து நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாற்றிவிடுகிறது.  இந்தப் பருவத்தில் இரத்தம் அதிக துடிப்புடன் இருப்பதால் இவர்களின் கவனம் வழிகேட்டின் பக்கம் செலுத்தப்படும் போது தடம்புரண்ட குதிரையின் வேகத்திற்கு இவர்கள் வழிகேட்டை நோக்கி ஓடுகிறார்கள். திரையரங்குகளுக்குச் செல்வது பள்ளிக்கூடம் போகாமல் கட்டடிப்பது போன்ற பல தீமையான காரியங்களுக்கு பலரை கூட்டு சேர்த்து கொள்வதற்கு இக்கருவி அவர்களுக்கு மிகவும் பயன்படுகிறது.
இளமையில் கல். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் போன்ற உபதேசங்களை கூட கற்க வழியில்லாமல் பொன்னான காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். விலைமதிக்க முடியாத கல்வி காலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மாணவன் இழப்பதற்கு செல்ஃபோன்கள் தான் மிக முக்கியமான காரணம். தற்போது காதல் என்ற உயிர்கொல்லி நோய் நாகரீகம் தெய்வீகம் என்ற போர்வையில் தற்போது படிக்கும் மாணவ மாணவியர்களுக்கிடையே காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த காதல் பைத்தியம் தலைவிரித்து ஆடுவதற்கும் இந்த செல்போன்களின் பங்கு இணையற்றது.
நல்ல நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ மாணவிகள் ஆபாச எஸ்எம்எஸ்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் தமிழகத்தில் சில கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் செல்போன்களை கல்லூரி நேரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. பிறருக்கு ஆபாச செய்திகளையும் படங்களையும் அனுப்பி குறும்பு செய்வதால் அனுப்பிய மாணவன் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் சிறைக்குச் சென்றுவிடுகிறான். பயத்துடன் கல்லூரிக்கு சென்று வந்த மாணவிகள் வீட்டுக்கு வந்தப் பின்பும் நிம்மதியாக இருக்கமுடிவதில்லை.
அத்துமீறி நுழையும் அக்கிரமம்.
செல்போன்களில் காமிர வசதியுள்ளவைகளும் உள்ளன, பெண்கள் அஜாக்ரதையாக இருக்கும் போது வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள் பெண்களின் மறைவிடங்களை செல்போன்களின் மூலம் படம் எடுத்துவிடுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்டக் காட்சி ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிக்கொண்டு கடைசியில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வருகிறது. இதற்குப் பிறகு அப்பெண்ணால் எப்படி தலை நிமிந்து நடக்க முடியும்?. இந்த அவமானம் தாங்க முடியாமல் மணமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் உண்டு.                செல்போன்களில் ப்ளூடூத் என்ற ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் செய்திகளையோ பாடல்களையோ படங்களையோ பலருடை செல்களுக்கு அனுப்ப முடியும். இவ்வசதியை தவறாக பயன்படுத்திக் கொண்டு பலருடைய செல்போன்களுக்கு தப்பான விஷயங்களை பரப்புகிறார்கள். இதனால் ஆபாசத்தை எட்டிப்பார்க்காதவர்கள் கூட அவசியம் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால் வந்த செய்தியை திறந்தால் தான் அது நல்லதா கெட்டதா என்பது தெரியவரும்.
ஒழுக்கமாக வாழ நினைப்பவனை இக்கருவிகள் வாழவிடுவதில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவனும் அசிங்கமான விஷயங்களை அங்கீகரிக்கத் தொடங்கிவிடுகின்றான். இப்படி நம்முடைய அனுமதி இல்லாமலேயே நம்முடைய பொருளில் அன்னியர்கள் விளையாடிவிடுகிறார்கள்.
வீடு தேடி வரும் அழைப்பு
கெட்ட எண்ணம் கொண்டவன் விபச்சாரத்திற்கு துணையை தேடும் நோக்கில் பலருக்கு போன் செய்து பேசுபவர் ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொண்டு பெண்ணாக இருந்தால் அவளை வலையில் சிக்கவைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்கிறான். விபச்சாரம் செய்வதற்கு அழைப்பு ஊர்கடந்து நாடுகடந்து வீடு தேடி வருகின்றது.
ஆண்களை தவறானப் பாதைக்கு அழைக்கும் பெண்களும் இத்தகயை யுக்தியை கையாளுகிறார்கள். எனவே தான் விபச்சாரிகள் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் போôது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தியையும் சேர்த்தே சொல்லுவார்கள்.
   கணவன் ஊரில் இல்லாத போது தனிமையில் வாடும் எத்தனையோ பெண்கள் தங்கள் கற்புக்களை காத்துக்கொண்டாலும் சில பெண்கள் அயோக்கியர்கள் வீசும் இந்த மாயவலையில் சிக்கிவிடுகிறார்கள். கணவனை நினைத்து வாடும் பெண்களிடம் எந்த ஆணாவது வேறு நோக்கத்தில் பேசினாலும் இப்பெண்களே அந்த ஆண்களை தவற்றுக்கு அழைக்கிறார்கள். தெரிந்த ஆண்களுக்கு போன் செய்து பலமணி நேரம் அவர்களிடம் உறையாடுகிறார்கள்.
எந்தவிதமான சிரமுமின்றி யாருக்கும் தெரியாமலும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலும் வீட்டுக்குள் இருந்துகொண்டே விபச்சாரத்திற்கு ஆள் தேடுவது என்பது இக்கருவியால் எளிதாகிவிடுகின்றது. கள்ளத்தொடர்பு எங்கேயோ யாருடனோ முடிந்துவிடாமல் காலம் முழுக்க நீடிக்கும் பந்தமாக தொடர்வதற்கு இந்த செல்போன்கள் உறுதுணைபுரிகிறது.
பொன்னான காலம் வீணாய் போகிறதே !
   சிலர் விளையாட்டாக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன்களின் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்கள். விஷயம் பெரிதாகி செய்தியை அனுப்பியவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாம் அனுப்பாவிட்டாலும் நமக்குத் தெரியாமல் எவனாவது நமது செல்போனை பயன்படுத்தி இத்தகைய செய்திகளை பிறருக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் பாதிப்பு நமக்குத் தான் வருகிறது.
ஏப்ரல் 1 ம் தேதியை பிறரை ஏமாற்றுவதற்குரிய நாள் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நாளில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பிறருடைய செல்போன்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனாலும் பல விபரீதங்கள் ஏற்படுகின்றது.
   பேசுவதற்கு விஷயமே இல்லாவிட்டாலும் சிலர் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் அவர்களுக்குத் தலை வெடித்துவிடும். எத்தனையோ வேலைகள் பல இருந்தும் கூட அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பிரயோஜனம் இல்லாத பேச்சுக்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். செல்போன்களில் பேசுவதையே பலர் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறார்கள்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாலும் சரி பேசுவதை நிறுத்தமாட்டார்கள். செல்போன்களின் மீது இவர்களுக்கிருந்த எல்லை கடந்த பாசம் விபத்திற்குக்காரணமாகி உயிரையே பறித்துவிடுகிறது. பிறரை தொல்லை செய்வதற்காக ஒன்றும் எழுதப்படாத வெற்று மெஸ்ஸேஜ்களை 50 100 என்ற கணக்கில் அனுப்பி தங்கள் காலத்தை விரையம் செய்துகொள்கிறார்கள். பிறரையும் துன்புறுத்துகிறார்கள். சென்றால் திரும்ப வராத நம் காலத்தையும் உயிரைûயும் அழித்துக்கொள்வதற்கு செல்போன் கருவிகள் உதவிபுரிகின்றன. நேரம் வீணாகுவதுடன் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகை செல்போன்களுக்காக வீண்விரயம் செய்யப்படுகின்றது.
அவதூறுக் கருவி
   ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த பாவங்களை பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். இந்த பாவங்களில் ஒன்று தான் பிறரைப் பற்றி அவதூறு பேசுவது. இன்றைக்கு செல்போன்கள் இந்த மாபெரும் பாவத்தை நமக்கு சம்பாரித்து தந்துகொண்டிருக்கின்றன. ஒரு தனிநபரைப் பற்றி அல்லது ஒரு இயக்கத்தைப் பற்றி தவறான பொய்யான விஷயங்கள் இந்தக் கருவிகளின் மூலம் பரப்பப்படுகின்றது. தனக்கு வந்த தகவல் உண்மையானதா? பொய்யானதா? என்றெல்லாம் பார்க்காமல் வந்த மாத்திரத்திலேயே தன்னுடைய பங்கிற்கு ஒவ்வொருவரும் அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பண்டையக் காலங்களில் ஒரு அவதூறு பலருக்குப் பரவ பலமணி நேரமானது. பல நாட்களானது. ஆனால் இன்றைக்கு செல்போன் கருவியின் மூலம் பல நூறு பேருக்கு ஒரு நிமிடத்தில் பல பொய்யான செய்திகளை பரப்பிவிடமுடியும். நாம் அனுப்பிய ஆதாரமற்ற தகவலை நம்பி யார் யாரெல்லாம் பரப்பினார்களோ அவர்களுடைய பாவத்தில் நமக்கும் கட்டாயம் பங்குண்டு. நாம் பாவியானதோடில்லாமல் பிறரையும் பாவியாக்கிக்கொண்டிருக்கிறோம்.
எனவே ஒருவன் பாவச்சுமையை சுமந்து நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அவன் இதற்காக பெரும் சிரமத்தை எடுக்க வேண்டியதில்லை. ஒரு இயக்கத்தைப் பற்றி அல்லது ஒரு தனிநபரைப் பற்றி ஒரு பொய்யை போன்கள் மூலம் அனுப்பினாலே போதும்.. இங்கு சொல்லப்பட்ட விஷயங்கள் மட்டுமில்லாமல் நமக்குத் தெரியாத இன்னும் பல தீமைகளும் செல்போன்களால் ஏற்படலாம்.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் நாமும் இதை வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம். எனவே முடிந்த அளவு இக்கருவிகளை நமது பிள்ளைகளுக்கும் வீட்டுப் பெண்களுக்கும் வாங்கிக்கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. இக்கருவியின் பயன்பாடு நமக்கு அவசியப்பட்டால் இஸ்லாமிய வரம்பை மீறாத வகையில் பல கட்டுப்பாடுகளை நமக்குள்  நாமே இட்டுக்கொண்டு முறையான அடிப்படையில் கையாளுவது அவசியம். மறுமை நாளில் செவியும் கண்ணும் நாம் செய்த குற்றங்களை ஆவணங்களாக தயாரித்து அல்லாஹ்வின் முன் நிறுத்தும். நமக்கு கொடுக்கப்பட்ட காலம் குறித்தும் செல்வம் குறித்தும் அல்லாஹ் விசாரணை செய்வான். இந்த நம்பிக்கையை மனதில் ஆழமாக பதித்து அல்லாஹ்விற்கு பயப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது.
எல்லாம் வல்ல இறைவன் நம்மை தீமைகளிலிருந்து காத்து நன்மைகளில் செலுத்துவானாக.

செவ்வாய், 23 நவம்பர், 2010

பிரார்த்தனைகள் (துஆ)



எஸ்.எஸ்.யூ. ஸைஃபுல்லாஹ் ஹாஜா
மாலைப் பொழுதினில்...
காலையில் எழுகின்ற மனிதன், விரும்பியோ, விரும்பாமலோ மாலைப் பொழுதை அடைந்து விடுகின்றான்.  காலையி-ருந்து மாலை வரை அவன் வாழ்வது அல்லாஹ்வின் செயலன்றி வேறில்லை.  தன்னை மாலைப் பொழுது வரை வாழ வைத்தவனை நினைத்துப் பிரார்த்திக்கச் சொல்கிறது மார்க்கம்.
அம்ஸைனா வ அம்ஸல் முல்க்கு -ல்லாஹி. வல்ஹம்து -ல்லாஹி லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்- ஷய்யின் கதீர்.  ரப்பி அஸ்அலுக்க ஹைர மா ஃபீ ஹாதிஹில் லைலத்தி வஹைர மா பஅதஹா. வஅவூது பிக்க மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலத்தி வஷர்ரி மா பஅதஹா. ரப்பி அவூது பிக்க மினல் கஸ- வ ஸூயில் கிபர். ரப்பி அவூது பிக்க மின் அதாபின் ஃபின்னாரி வஅதாபின் ஃபில் கப்ர்.
பொருள் : நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே ஆகி விட்டது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே புகழும் உரியது. அவனே அனைத்திலும் ஆற்றல் பெற்றவன்.  எனது இறைவனே! இந்த இரவில் உள்ள நன்மையையும் அதற்குப் பின்னர் உள்ள நன்மையையும் உன்னிடம் வேண்டுகின்றேன்.  இந்த இரவில் உள்ள தீமையை விட்டும் அதற்குப் பின்னர் உள்ள தீமையை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்.  எனது இறைவனே! சோம்பல் மற்றும் கெட்ட முதுமையை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்.  நரகில் உள்ள வேதனையை விட்டும் கப்ரில் உள்ள வேதனையை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ர-)
நூல் : முஸ்-ம் 4901
அல்லாஹும்ம பிக்க அம்ஸய்னா வபிக்க நஹ்யா வபிக்க நமூத்து வஇலைக்கன் நுஷூர்.
பொருள் : உன்னைக் கொண்டே மாலைப் பொழுதை அடைந்தோம். உன்னைக் கொண்டு உயிர் பெறுகின்றோம்.  உன்னைக் கொண்டே மரணம் அடைவோம்.  உன் பக்கமே கொண்டு வரப்படுவோம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல்கள் : அபூதாவூத் 4406, இப்னுமாஜா 3858
"இரவு தேள் கொட்டி விட்டது'' என்று கூறிய மனிதரிடம்,
அவூது பிக-மாதில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
(பொருள் : அல்லாஹ் படைத்த அனைத்து தீங்குகளை விட்டும் பூரணத்துவம் வாய்ந்த அவனுடைய வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்)
என்று நீர் மாலைப்பொழுதை அடைந்த போது சொல்-யிருந்தால் உமக்கு அது தீங்கிழைத்திருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)நூல் : முஸ்-ம் 4883
காலையிலும் மாலையிலும்
பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம்
(பொருள் : அல்லாஹ்வுடைய திருநாமத்தின் பொருட்டால் (காவல் தேடுகின்றேன்)  அவனுடைய திருநாமம் கூறி செய்யப்படும் எந்தச் செயலுக்கும் வானம் பூமியிலுள்ள எதுவும் இடையூறு செய்யாது.)
என்று ஒருவர் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மூன்று முறை சொல்வாரானால் அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:உஸ்மான் பின் அஃப்பான் (ர-),
 நூல்கள் : அபூதாவூத் 4425, திர்மிதி 3310
சுப்ஹு தொழுகைக்காக பள்ளிக்குச் சென்றால்...
அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ -ஸானீ நூரன். வஜ்அல் ஃபீ ஸம்யீ நூரன். வஜ்அல் ஃபீ பஸரீ நூரன். வஜ்அல் மின் கல்ஃபீ நூரன். வமின் அமாமீ நூரன். வஜ்அல் மின் ஃபவ்கீ நூரன். வமின் தஹ்தீ நூரன். அல்லாஹும்மஃத்தினீ நூரன்.
பொருள் : அல்லாஹ்வே! எனது உள்ளத்திலும், எனது நாவிலும், எனது செவிப்புலனிலும், எனது பார்வையிலும் எனக்குப் பின்னாலும் எனக்கு முன்னாலும் எனக்கு மேலும் எனக்குக் கீழும் பிரகாசத்தை ஆக்கியருள்வாயாக! அல்லாஹ்வே! எனக்குப் பிரகாசத்தைத் தந்தருள்வாயாக!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக் கொண்டே செல்வார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-)நூல் : முஸ்-ம் 1280
பள்ளிவாச-ல் நுழையும் போது....
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாச-ல் நுழைந்தால் அவர்,
அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக
பொருள் : அல்லாஹ்வே! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக! என்று சொல்லட்டும்.
அவர் பள்ளியி-ருந்து வெளியேறினால்,
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்-க
பொருள் : "அல்லாஹ்வே! நான் உன்னிடம் உன் பேரருளைக் கேட்கின்றேன்'' என்று சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஉஸைத் (ர-)நூல் : முஸ்-ம் 1165
பாங்கு சத்தம் கேட்டால்...
முஅத்தின் அழைப்பைக் கேட்பவர் அதை அப்படியே திருப்பிச் சொல்ல வேண்டும்.  அவர், ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகையை நோக்கி வாருங்கள்) என்றும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்றும் சொன்னால்,
லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள் : பாவத்தை விட்டு மீளுவதற்கும், நன்மைகள் செய்வதற்கும் அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறு சுயமான ஆற்றலோ, சக்தியோ (எனக்கு) இல்லை. என்று சொல்ல வேண்டும்.
இறுதியில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்- உளப்பூர்வமாக முடிப்பாரானால் அவர் சுவர்க்கம் புகுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் இப்னுல் கத்தாப் (ர-),   நூல் : முஸ்-ம் 578
முஅத்தினுடைய அழைப்பைக் கேட்ட போது,
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு. ரழீது பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதன் ரசூலன் வபில் இஸ்லாமி தீனன்.
பொருள் : வணங்கப் படுவதற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை, முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவார்கள் என்று நான் சான்றுரைக்கின்றேன்.  அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மதை தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் பொருந்திக் கொண்டேன். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஃது பின் அபீவக்காஸ் (ர-)நூல் : முஸ்-ம் 579
எவர் முஅத்தினுடைய அழைப்பைக் கேட்டதும்,
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மதி. வஸ்ஸலாதில் காயிமதி. ஆதி முஹம்மதனில் வஸீலத வல் ஃபழீலத வபஅஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு
பொருள் : நிறைவான இவ்வழைப்பிற்கும், நிலையான இத்தொழுகைக்கும் இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற பதவியையும், சிறப்பையும் கொடுத்தருள்!  நீ வாக்களித்துள்ள புகழப்பட்ட இடத்திற்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக!
என்று கூறுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் எனது பரிந்துரை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர-)நூல் : புகாரி 614
தொழுகையில் சொல்ல வேண்டிய பிரார்த்தனைகள் இன்ஷா அல்லாஹ் "தொழுகை'' என்ற தொடரில் இடம் பெறவுள்ளது என்பதால் தொழுகையை முடித்ததும் கூற வேண்டியவற்றை இங்கு காண்போம்.
தொழுகையை முடித்ததும்...
நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்துத் திரும்பினால்,
அஸ்தஃக்ஃபிருல்லாஹ்
(பொருள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகின்றேன்) என்று மூன்று முறை சொல்வார்கள்.  இன்னும்,
அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம். வமின்கஸ் ஸலாம்.  தபாரக்த யாதல் ஜலா- வல் இக்ராம்.
பொருள்: அல்லாஹ்வே! நீயே சாந்தியானவன்.  உன்னிடமிருந்து தான் சாந்தி உண்டாகின்றது.  கவுரவத்திற்கும், கண்ணியத்திற்கும் உரியவனே! நீயே பாக்கிய மிக்கவனாவாய்! என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்ஃபான் (ர-)நூல் : முஸ்-ம் 931
 லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்- ஷையின் கதீர்.  அல்லாஹும்ம லா மானிஅ -மா அஃதைத வலா முஃதிஅ -மா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்து மின்கல் ஜத்து.
பொருள்: வணங்கப்படுவதற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.  அவன் தனித்தவன்.  இணை இல்லாதவன். அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியதாகும். அவனுக்கே புகழ் அனைத்தும்!  அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்.  அல்லாஹ்வே! நீ கொடுத்ததை யாராலும் தடுக்க முடியாது.  நீ தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது.  மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்க முடியாது.  மதிப்பு உன்னிடமே உள்ளது.
என்று நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஅபா (ர-)
நூல் : புகாரி 844, முஸ்-ம் 933
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு. லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்- ஷையின் கதீர்.  லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.  லாயிலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு.  லஹுன் நிஃமது வல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு.  லாயிலாஹ இல்லல்லாஹு முக்-ஸீன லஹுத் தீன வலவ் கரிஹல் காஃபிரூன்.
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவனும் இல்லை.  ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்.  நல்லவற்றைச் செய்வதற்கோ தீயவற்றி-ருந்து விலகுவதற்கோ இறைவனின் துணையின்றி இயலாது.  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளில்லை! அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம்.  அருள் அவனுக்குரியது. உபகாரம் அவனுக்குரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை.  நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே!
என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர் ஸலாம் கொடுத்த போதும் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ர-)
நூல் : முஸ்-ம் 935
நபி (ஸல்) அவர்கள், முஆத் (ர-) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, "முஆதே! உன்னை நான் நேசிக்கின்றேன். முஆதே!
அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக
பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக!
என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே! என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ர-), நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 1286
அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மினல் ஜுப்னி வஅவூதுபிக அன் உரத்த இலா அர்த-ல் உமுரி வஅவூதுபிக மின் ஃபித்னதித் துன்யா வஅவூது பிக மின் அதாபில் கப்ரி
பொருள்: அல்லாஹ்வே! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்.  தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.  இவ்வுலக குழப்பங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.  மண்ணறை வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
என்ற இந்த வார்த்தைகளைக் கொண்டு தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடுவார்கள்.
அறிவிப்பவர் : ஸஅத் பின் முஆத் (ர-)நூல் : புகாரி 2822
நல்லதைத் தேர்ந்தெடுக்கக் கேட்கும் போது...
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்துகளை அவர் தொழட்டும். பின்னர்  பின்வருமாறு கூறட்டும். அதன் பிறகு தமது தேவையைக் குறிப்பிடட்டும்.


அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக பிஇல்மிக்க வஅஸ்தக்திருக பிகுத்ரதிக வஅஸ்அலுக மின் ஃபழ்லிகல் அளீம். ஃபஇன்னக தக்திரு வலா அக்திரு. வதஃலமு வலா அஃலமு வஅன்த்த அல்லாமுல் குயூப்.  அல்லாஹும்ம இன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபக்துர்ஹுலீ வயஸ்ஸிர்ஹுலீ சும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருல்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் ஹைர ஹைசு கான சும்ம அர்ழினீ பிஹி
பொருள் : இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன்.  உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன்.  உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன்.  நீ அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன்.  நான் ஆற்றல் உள்ளவன் அல்லன்.  நீ அனைத்தையும் அறிகிறாய்.  நான் அறிய மாட்டேன்.  மறைவானவற்றையும் நீ அறிபவன்.  இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும் எனது வாழ்க்கைக்கும் எனது மறுமைக்கும் சிறந்தது என நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா!  அதை எனக்கு எளிதாக்கு!  பின்னர் அதில் எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும் எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ அறிந்தால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு!  எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா!  பின்னர் அதில் எனக்கு திருப்தியைத் தா!
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 1162, 6382, 7390
துன்பம் நேரும் போது....
லாயிலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாதி வரப்புல் அர்ழீ வரப்புல் அர்ஷில் கரீம்
பொருள்: கண்ணியம் வாய்ந்தவனும், பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் யாரும் இல்லை.  மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் யாரும் இல்லை.  வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் கண்ணியம் வாய்ந்த அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் யாரும் இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் துன்பம் ஏற்படும் போது கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூற்கள்: புகாரி 6345, 6346, 7431, முஸ்லிம் 4909
மீன் வயிற்றில் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இருந்த போது கேட்ட பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன்
பொருள்: உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன். (அல்குர்ஆன் 21:87)
முஸ்லிமான ஒவ்வொருவரும் இதைக் கூறுவாரானால் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படாமல் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது (ரலி)நூல்: திர்மிதி 3427
காரியம் கைமீறி விட்டால்...
நபி (ஸல்) அவர்கள் இரு மனிதர்களுக்கிடையில் தீர்ப்பு சொன்னார்கள். தீர்ப்பளிக்கப்பட்(டு அதில் பாதிக்கப்பட்)டவர் திரும்பிச் செல்லும் போது,
ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்
(பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பாளன்) என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் "அம்மனிதரைத் திரும்பி வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவரிடம், "நீ என்ன சொன்னாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்'' என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இயலாமையைப் பழிக்கின்றான். என்றாலும் அறிவுப்பூர்வமாக நடந்து கொள். காரியம் உன்னை (கை) மீறி விட்டால், "ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்' என்று சொல்'' என கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி), நூல்: அஹ்மத் 22858
தீய எண்ணங்கள் ஏற்பட்டால்...
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவீராக! அவன் செவியுறுபவன். அறிந்தவன். (அல்குர்ஆன்7:200)
"உங்களில் ஒருவரிடம் (அவரது மனதிற்குள்) ஷைத்தான் வந்து, "இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கிறான். இந்தக் கட்டத்தை அடையும் போது அம்மனிதர்,
"அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3276, முஸ்லிம் 191
உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், என் தொழுகை, குர்ஆன் ஓதுதலுக்கும் இடையே குறுக்கிட்டு அதை என் மீது குழப்பி விடுகின்றான்'' என்று கூறினார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை நீ உணர்ந்தால் (அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி) அவனிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவாயாக! உன் இடது பக்கம் மூன்று முறை துப்பு!'' என்று கூறினார்கள். அவ்வாறு நான் செய்தேன். அல்லாஹ் என்னை விட்டும் அவனைப் போக்கி விட்டான்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 4083
நச்சுப் பிராணிகள் கொட்டினால்...
நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள்.  ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை.  இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது.  "உங்களிடம் மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?'' என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கு நபித்தோழர்கள், "நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்'' என்று கூறினார்கள்.  அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் ஒருவர்,
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கய்ரில் மஃளூபி அலைஹிம் வலல் ழால்லீன்.
(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்து) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. (எனவே) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள் மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்) என்ற "அல்ஹம்து' சூராவை ஓதி உமிழ்ந்தார்.  இதனால் அவர் குணமடைந்து விட்டார்.  அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். "நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள்.  இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.  "அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டு விட்டு "எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 2276, 5749, 5736, 5007
சிறுவர்களுக்குப் பாதுகாப்பு தேடும் போது...
நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்பு கோரி வந்தார்கள்.
அவூது பிகலிமாதில்லாஹித் தாம்மதி மின் குல்லி ஷைத்தானின் வஹாம்மதின் வமின் குல்லி அய்னின் லாம்மதின்
(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணிகளிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்பு கோருகின்றேன்) எனும் இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை, (இப்ராஹீம்-அலை அவர்கள் தமது மகன்களான) இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்பு கோரி வந்தார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3371

திருமணம் மற்றும் இதர சபைகளில் உரையாற்றும் போது...
எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தேவைக்காக உரை (நிகழ்த்தும் முறை)யை கற்றுக் கொடுத்தார்கள்.
அனில்ஹம்துலில்லாஹ் நஸ்தயீனுஹு வநஸ்தஃபிருஹு வ நவூதுபிஹி மின்ஷுரூரி அன்ஃபுஸினா ம(ன்)ய்யஹ்தில்லாஹு ஃபலாமுழில்ல லஹு வமய் யுழ்லில் ஃபலா ஹாதிய லஹு வஅஷ்ஹது அன்(ல்)லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு  யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ அல்லதீ தஸாஅலூன பிஹி வல் அர்ஹாம இன்னல்லாஹ கான அலை(க்)கும் ர(க்)கீபா. யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ ஹக்க துகா(த்)திஹி வலா தமூ(த்)துன்ன இல்லா வஅன்(த்)தும் முஸ்லிமூன் யாஅய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ வகூலூ கவ்லன் ஸதீதன் யுஸ்லிஹ் ல(க்)கும் அஃமால(க்)கும் வ யஃக்ஃபிர் ல(க்)கும் துனூப(க்)கும் வமய் யு(த்)தியில்லாஹ வரஸூலஹு ஃபகத் ஃபாஸ ஃபவ்ஸன் அழீமன்.
(பொருள்:  அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாங்கள் அவனிடமே உதவி தேடுகிறோம் எங்களிடமிருந்து ஏற்படும் தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவனை வழி கெடுப்பவனில்லை. அவன் யாரை வழி கேட்டில் விடுகிறானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை. வணங்கப் படுவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர், அவனது அடியார் என்றும் நான் சான்றுறைக்கிறேன். நம்பிக்கை கொண்டோரே! எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1809
மணமகனுக்கு வாழ்த்துச் சொல்லும்போது...
ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு
பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி
(பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!)
என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதி 1011, அபூதாவூத் 1819
மனைவியிடம் உறவு கொள்ளும் போது...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியிடத்தில் (உறவு கொள்ள) வந்தால்
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா
(பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (நான் உடலுறவு கொள்ளப் போகிறேன்) இறைவா! எங்களை விட்டு ஷைத்தானை தூரமாக்குவாயாக! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்துவாயாக!)
என்று சொல்லி விட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 141
குழந்தைக்காகப் பிரார்த்திக்கும் போது...
நபி (ஸல்) அவர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
அவூது பி கலிமா(த்)தில்லாஹித் தாம்ம(த்)தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்ம(த்)தி வமின் குல்லி அய்னின் லாம்ம(த்)தி
(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்)
"இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை (இபுறாஹீம் நபியவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்பு கோரி வந்தார்கள்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3371
புதைகுழிகளைச் சந்திக்கும் போது...
ஆயிஷா (ரலி) அவர்களுக்குரிய இரவு வந்த போது, அதன் கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் பகீஃ என்ற (மையவாடி) இடத்திற்குச் சென்றார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மிம் முஃமினீன் வஅதாகும் மாதூஅதூன கதன் முஅஜ்ஜலூன வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன் அல்லாஹும்மஃக்ஃபிர் லிஅஹ்லி பகீஃயில் கர்கத்
பொருள்: முஃமினான சமூகத்தவரின் வீட்டுக்குரியவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது உங்களிடம் வந்து விட்டது. தவணை அளிக்கப்பட்டவர்களாக மறுமையைச் சந்திப்பீர்கள். அல்லாஹ் நாடினால் உங்களுடன் நாங்கள் சேரக் கூடியவர்களே! அல்லாஹ்வே! பகீஃ கர்கத் இடத்துக்காரர்களுக்கு மன்னித்தருள்வாயாக!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் 1618
(புதைகுழிகளைச் சந்திக்கும் போது) நான் என்ன கூற வேண்டும் என்று கேட்ட போது, பின்வருமாறு கூற வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்கும் வமின்னா வல் முஸ்தஃகிரீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்
பொருள்: முஃமின் மற்றும் முஸ்லிம்களின் வீட்டுக்குச் சொந்தக்காரர்களே! உங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களில் முந்திச் சென்றவர்களுக்கும் எங்களில் பிந்தி வரக்கூடியவர்களுக்கும் அல்லாஹ் அருள் பாலிக்கட்டும். அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுடன் சேரக்கூடியர்களே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1619
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா
பொருள்: முஃமின் மற்றும் முஸ்லிம்களான உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்
என்று புதைகுழிகளுக்குச் சென்றால் உங்களில் ஒருவர் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: முஸ்லிம் 1620
பயணிக்கும் போது...
நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்யக் கிளம்பும் போது, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் பின்வருமாறு கூறினார்கள்.
 சுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹூ முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க ஃபீ ஸஃபரினா ஹாதல் பிர்ர வத்தக்வா வமினல் அமலீ மா தர்ழா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹூ. அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃபத்து ஃபில் அஹ்லீ. அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகஆபதில் மன்ளரீ வசூயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி
(பொருள்: எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எங்களின் இந்தப் பயணத்தில் நல்லதையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்ல செயலையும் உன்னிடம் நாங்கள் வேண்டுகிறோம். அல்லாஹ்வே! எங்கள் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குக் குறைத்து விடு! அல்லாஹ்வே! நீயே இந்தப் பயணத்தின் தோழனாக இருக்கிறாய். நீயே எங்கள் குடும்பத்தைக் காக்கிறாய். அல்லாஹ்வே! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும், செல்வத்திலும், குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்)
நபியவர்கள் பயணத்திலிருந்து திரும்பினால் மேற்கண்டவற்றைச் சொல்வதுடன்
ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன
(பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், மன்னிப்பு கேட்டவர்களாகவும் திரும்புகிறோம்) என்று அதிகப்படியாக கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 2392
நபி (ஸல்) அவர்கள் பயணம் செய்தால் பின்வரும் துஆவைக் கூறி பாதுகாப்பு தேடுவார்கள்.
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் வஃஸாயிஸ் ஸஃபரீ வ கஆபதில் முன்கலபீ வல் ஹவ்ரீ பஃதல் கவ்னீ வதஃவதில் மள்லூமீ வசூயில் மன்ளரீ. ஃபில் அஹ்லி வல் மாலி
(பொருள்: அல்லாஹ்வே! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான விளைவுகளிலிருந்தும் இறை நம்பிக்கைக்குப் பின் நிராகரிப்பதிலிருந்தும், பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனையிலிருந்தும், குடும்பத்திலும், செல்வத்திலும் ஏற்படும் தீய தோற்றத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2393
நபி (ஸல்) அவர்கள் பயணம் செய்தால் பின்வருமாறு கூறுவார்கள்.
அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃபத்து ஃபில் அஹ்லீ அல்லாஹும் மஸ்ஹப்னா ஃபீஸஃபரினா வஃலஃப்னா ஃபீ அஹ்லினா அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகஆபதில் முன்கலபீ வமினல் ஹவ்ரீ பஃதல் கவ்னீ வமின் தஃவதில் மள்லூமி வமின் சூயில் மன்ளரீ ஃபில் அஹ்லி வல் மாலி
(பொருள்: அலலாஹ்வே! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காப்பவன். அல்லாஹ்வே! எங்கள் பயணத்தில் எங்களுக்குத் தோழனாக இருப்பாயாக! எங்கள் குடும்பத்தில் எங்களைப் பாதுகாப்பவனாக இருப்பாயாக! அல்லாஹ்வே! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான விளைவுகளிலிருந்தும் இறை நம்பிக்கைக்குப் பின் இறை நிராகரிப்பிலிருந்தும், பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனையிலிருந்தும் குடும்பத்திலும் செல்வத்திலும் ஏற்படும் தீய தோற்றத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 3361
மேடு, பள்ளத்தாக்கில் ஏறும் போதும் இறங்கும் போதும்...
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ, உம்ராவிலிருந்தோ அல்லது புனிதப் போரிலிருந்தோ திரும்பும் போது, ஒரு மலைப் பாதையில் அல்லது ஒரு கெட்டியான நிலத்தின் மேடான பகுதியில் ஏறிச் செல்லும் போதெல்லாம் மூன்று முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்.
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன ஸதகல்லாஹு வஹ்தஹு வநஸர அப்தஹு வஹஸமல் அஹ்ழஸாப வஹ்தஹு
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன். பாவ மன்னிப்பு கோரியவர்களாகவும் வணக்கம் புரிந்தவர்களாகவும் எங்கள் இறைவனுக்கு சிரம் பணிந்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் நாங்கள் திரும்புகின்றோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டான். தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான். தன்னந்தனியாக நின்று குலங்கள் அனைத்தையும் தோற்கடித்து விட்டான்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),   நூல்: புகாரி 2995
மனிதனையோ, மற்றவர்களையோ கண்டு அஞ்சினால்...
நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அஞ்சினால் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தனர்.
அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வநவூதுபிக மின் ஷுரூரிஹிம்
(பொருள்: அல்லாஹ்வே, உன்னை அவர்களுடைய தொண்டைக் குழிகளின் மீது ஆக்குகிறேன். அவர்களுடைய தீயவற்றிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்பு தேடுகின்றேன்)
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரி(ரலி)நூல்: அபூதாவூத் 1314
வெளியூரில் தங்கும் போது...
அவூது பிகலிமாதில்லாஹித் தாம்மதி மின் ஷர்ரிமா கலக
(பொருள்: முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்பு தேடுகிறேன்)
என்று யாரேனும் வெளியூரில் தங்கும் போது கூறுவாரானால் அவ்வூரிலிருந்து அவர் கிளம்பும் வரை எதுவும் அவருக்கு இடையூறு தராது என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: கவ்லா பின்த் ஹகீம் (ரலி), நூல்: முஸ்லிம் 4881

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites