அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பான் கார்டைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.
பான் என்றால் என்ன?
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பான் கார்டின் முக்கியத்துவம்
ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும்.
பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள
எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம்.
இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும்.
நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும்.
ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும்.
அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும்.
இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.
பான் கார்டு முக்கியமா?
ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது.
பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு அறிக்கை
5. கிரெடிட் கார்ட் அறிக்கை
6. வங்கி பாஸ்புக் அறிக்கை
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
8. ரேஷன் அட்டை
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
10. பாஸ்போர்ட்
11. வாக்காளர் அடையாள அட்டை
12. ஓட்டுனர் உரிம அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
வாழ்விடத்திற்கான சான்றுகள்
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
3. வங்கிக் கணக்கு அறிக்கை
4. கிரெடிட் கார்டு அறிக்கை
5. வங்கி பாஸ்புக் அறிக்கை
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று
8. பாஸ்போர்ட்
9. வாக்காளர் அடையாள அட்டை
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
11. ஓட்டுநர் உரிம அட்டை
12. ரேஷன் அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

நன்றி : தட்ஸ் தமிழ்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites