அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

தவ்ராத், இஞ்சீல், ஸபூர் போன்ற வேதங்களை அல்லாஹ் எந்த வழியில் ஓதிக் காட்டினான்? அவற்றில் என்ன உள்ளது?


தவ்ராத், இஞ்சீல், ஸபூர் போன்ற வேதங்களை அல்லாஹ் எந்த வழியில் ஓதிக் காட்டினான்? அவற்றில் என்ன உள்ளது? நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் அருளப்பட்டது போன்று மற்ற நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்கள் என்ன?
நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (அல்குர்ஆன் 4:163)
(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 3:3)
நபி (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதைப் போன்றே எல்லா வேதங்களும் அருளப்பட்டன என்பதையும், அந்த வேதங்களில் உள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்பதையும் இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)
இறைத் தூதர்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு மூன்று விதமான வழிகளைக் கையாள்வதாக இந்த வசனம் தெரிவிக்கின்றது. எனவே இந்த மூன்று வழிகளின் அடிப்படையில் தான் தவ்ராத், இஞ்சீல், ஸபூர் உள்ளிட்ட எல்லா வேதங்களும் அருளப்பட்டுள்ளன.
முந்தைய வேதங்களிலுள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்று கூறப்படுவதால் திருக்குர்ஆன் கூறும் இதே ஓரிறைக் கொள்கையைத் தான் அனைத்து வேதங்களும் கொண்டிருந்தன என்பது தெளிவாகின்றது.
அந்த வேதங்களில் உள்ள சட்ட திட்டங்கள் வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றபடி வேறு பட்டிருக்கலாம். கொள்கையைப் பொறுத்த வரை திருக்குர்ஆனிலும் அதற்கு முந்தைய வேதங்களிலும் ஒரே விதமாகத் தான் இருந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4)
திருக்குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:
1.       ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)
2.       தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)
3.       இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)
4.       திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)
இந்த நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வேதங்கள் இல்லை என்று எண்ணி விடக் கூடாது. எல்லா இறைத் தூதர்களுக்கும் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான். ஆனால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். (அல்குர்ஆன் 2:213)
எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் நாம் பின்பற்ற வேண்டிய வேதம் திருக்குர்ஆன் மட்டுமே! முந்தைய வேதங்களை நாம் நம்ப வேண்டுமே தவிர அவற்றைப் பின்பற்றக் கூடாது.
முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன, மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன, திருத்தப்பட்டன எனவும் பல இடங்களில் கூறுகிறது.
அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ் வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.  (அல்குர்ஆன் 2:75)
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். "இது அல்லாஹ் விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.  (அல்குர்ஆன் 3:78)
திருக்குர்ஆனைத் தவிர எந்த வித மாறுதலுக்கும் உள்ளாகாத ஒரு வேதமும் உலகில் கிடையாது. அல்லாஹ் இதனைப் பாதுகாத்து உள்ளான். கியாமத் நாள் வரை இது தான் பின்பற்றப்பட வேண்டும்.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதினால் ஆணில் சிறிய குழந்தைகளுக்கு தங்கம் அணிவிப்பது தடையா ?

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது? எல்லோருமே எல்லா கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. சிறு சிறு தவறுகளைச் செய்யத் தான் செய்கின்றார். அப்படியிருக்கும் போது ஆண் குழந்தைகளுக்கு தங்க நகை அணிந்தால் என்ன தவறு?
ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை  2. சிறுவன் பெரியவராகும் வரை  3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)
நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031
எனவே தங்கம் அணியக்கூடாது என்ற கட்டளை பருவ வயதை அடைந்த ஆண்களை மட்டுமே கட்டுப்படுத்தும். பருவ வயதை அடையாத குழந்தைகளுக்கு இந்தச் சட்டம் இல்லை.
ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கு ஹஜ் இருக்கின்றதா?'' என்று கேட்டாள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்! உனக்குக் கூலி உண்டு'' என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2377)
இந்த ஹதீஸில் குழந்தைக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டாலும், அதை அழைத்து வந்ததற்காக அதன் பெற்றோருக்குக் கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி குழந்தைகளுக்குத் தங்கம் அணிவதற்குத் தடை இல்லாவிட்டாலும் பொதுவான தடையைக் கருதி, குழந்தைக்குத் தங்கம் அணிவிக்காமல் அதன் பெற்றோர் தவிர்த்துக் கொண்டால் அதற்கான நன்மை அவர்களுக்குக் கிடைக்கும்.
எல்லோரும் சிறு சிறு தவறுகள் செய்கின்றார்கள் என்பதால் நாமும் தவறு செய்யலாம் என்ற வாதம் ஆபத்தானது. ஒரு விஷயம் தடை செய்யப்பட்டுள்ளது என்றால் ஒரு முஃமின் அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)
இந்த வசனத்தின் அடிப்படையில் யார் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதற்கான பலனை மறுமையில் அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதைக் காரணம் காட்டி, நாம் செய்யும் பாவங்களை நியாயப்படுத்த முடியாது.

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?


இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே?
இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
முஹம்மது யாஸீர், திருநெல்வேலி
பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.
இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை.
தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஷாம் நாட்டிற்குப் போகலாமா?'' என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிறகு மக்கா வெற்றி கொள்ளப் பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.
அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், "இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி  5279
கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா?


அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா?
"ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி)
நூல்: நஸயீ 4149
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.
அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14ம் நாள், 21ம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.
குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. மேலும் அகீகா கட்டாயக் கடமை, கொடுக்க விட்டால் தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை கற்றுத் தந்தால் அதை இயன்ற வரை நாம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
சக்தி இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்று எந்த வணக்கத்தையும் மார்க்கம் கட்டளையிடவில்லை.
"ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
"எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்'' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
எனவே அகீகாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை.
ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மேற்கண்ட புகாரி 7288வது ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 2:286 வசனத்தின் அடிப்படையில் இந்த சுன்னத்தை நிறைவேற்றாமல் இருப்பது குற்றமில்லை

பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர் களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா?


பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.
நான் நபி (ஸல்) அவர்களிடம், கஅபாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி, "இது கஅபாவில் சேர்ந்ததா?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "ஆம்'' என்றார்கள். "எதற்காக அவர்கள் இதைக் கஅபாவோடு இணைக்கவில்லை?'' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், "உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்'' என்று பதிலளித்தார்கள். "கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவில் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1584
பள்ளிவாசல்களிலேயே மிக அந்தஸ்து வாய்ந்த, முதல் ஆலயமான கஅபத்துல்லாஹ்வை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் மக்காவிலிருந்த முஸ்லிமல்லாதவர்கள் தான் புனர் நிர்மாணம் செய்துள்ளார்கள்.
கட்டுமானத்தில் அந்த மக்கள் செய்த தவறுகளைச் சரி செய்திருப்பேன் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர அவர்கள் கஅபாவைக் கட்டியதே தவறு என்று கூறவில்லை.
எனவே பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து நிதி பெறுவது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒருவர் தவறு செய்யப் போகின்றார் என்று சந்தேகித்தால் அவரை அவருக்குத் தெரியாமல் உளவு பார்க்கலாமா? அவர் பிறரிடம் பேசுவதைக் கேட்கலாமா?


தெளிவான ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகப்படுவதையும், அவர் ஏதேனும் தவறு செய்கின்றாரா என்று துருவித் துருவி ஆராய்வதையும் திருக்குர்ஆன் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)
ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு இது போன்று விசாரிப்பது தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எப்போது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றோமோ அப்போதே அவரைப் பற்றி புறம் பேசத் துவங்கி விடுகின்றோம். புறம் என்று துவங்குவது இரு நபர்களுக்கிடையே பெரும் மோதலில் போய் முடிகின்றது. அல்லது இரண்டு சமுதாயங்களுக்கிடையே மோதலுக்கு வழி வகுக்கின்றது.
அதனால் தான் இத்தனைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சந்தேகம் எனும் யூகத்தை திருக்குர்ஆன் தடை செய்கின்றது.
ஒருவரைப் பற்றித் தவறான செய்தி கிடைத்தால் அதைச் சம்பந்தப் பட்டவரிடமே நேரடியாகக் கேட்டு விடுவது தான் அதற்குத் தீர்வாக அமையுமே தவிர அவரைப் பற்றித் துருவித் துருவி ஆராய்வது பிரச்சனைக்குத் தான் வழி வகுக்கும்.

தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?


அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது. அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா? தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது, "அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275
இந்த ஹதீஸில் இரவில் தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓத வேண்டும் என்ற நற்செயலை ஷைத்தான் கற்றுக் கொடுத்ததாக இடம் பெற்றுள்ளது. இது சரியா என்பதைப் பார்க்கும் முன் ஷைத்தான் குறித்து குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
"இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்த வனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமா னோரை நன்றி செலுத்து வோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்)
(அல்குர்ஆன் 7:13-17)
அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்குப் பணியுமாறு ஷைத்தானுக்குக் கட்டளையிட்ட போது அவன் மறுத்து விட்டான். அப்போது நடந்த உரையாடல் இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
கியாம நாள் வரை உள்ள மக்களை வழி கெடுப்பது தான் ஷைத்தானின் பணி என்பதை இந்த வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவன் ஆவான். (அல்குர்ஆன் 19:44)
இந்த வசனத்திலும் இது போன்ற எண்ணற்ற வசனங்களிலும் ஷைத்தான் தீய செயல்களை மட்டுமே ஏவுவான் என்பது தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. மனிதர்களை வழி கெடுத்து, தீய செயல்களைச் செய்யத் தூண்டுவது தான் ஷைத்தானின் வேலை என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.
மேலும் ஷைத்தானை மனிதர்களால் பார்க்க முடியாது என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்        தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.  (அல்குர்ஆன் 7:27)
இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கு முரணில்லாத வகையில் தான், மேற்கண்ட ஆயத்துல் குர்ஸீ தொடர்பான ஹதீஸை விளங்க வேண்டும்.
ஒரு நற்செயலை ஷைத்தான் கற்றுக் கொடுத்தான் என்பது ஷைத்தானின் பண்புகளுக்கு மாற்றமாக அமைந்திருப்பதால், நிச்சயமாக ஆயத்துல் குர்ஸீயை ஷைத்தான் கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.
பொதுவாக, கெட்ட மனிதர்களைப் பற்றிக் கூறும் போது, ஷைத்தான் என்று சொல்வதுண்டு. குர்ஆனிலும் இதற்கு ஆதாரம் உள்ளது.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின் றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)
எனவே ஸதக்கத்துல் ஃபித்ர் பொருளைத் திருட வந்தவன் கெட்டவன் என்ற கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் "ஷைத்தான்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்று விளங்கினால் குர்ஆனுக்கும், ஏனைய நபிமொழிகளுக்கும் முரணில்லாத வகையில் அமையும்.

மனிதர்களைத் தலைவர் என்று அழைக்கலாமா ?

 பனூ ஆமிர் தூதுக் குழுவினர், நபி (ஸல்) அவர்களை நோக்கி, நீங்கள் எங்களின் தலைவர் என்று கூறிய போது, அல்லாஹ் தான் தலைவன் என்று நபி (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. நாம் இஸ்லாமிய மேடைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தலைவர் என்று தான் கூறுகின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் தலைவர் என்று அழைக்கக் கூடாது என்றால் திமுக தலைவர் என்றும் சொல்லக் கூடாதா?
அப்துல் அலீம், அய்யம்பேட்டை
தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அபூதாவூதில் 4172வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மத்ரஃப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும் இதற்கு மாற்றமான கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸில் தலைவர் என்பதற்கு ஸய்யித் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸய்யித் - தலைவர் என்ற பதத்தை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தி உள்ளார்கள்.
பனூ குரைழா குலத்தவர் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் தான் (ஓரிடத்தில்) இருந்தார்கள். அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவருக்காக எழுந்து செல்லுங்கள்'' என்று கூறினார்கள்....
அறிவிப்பவர்: அபூஸயீத்   அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 3043
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் (தம் பேரப் பிள்ளை) ஹஸன் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனே மிம்பரில் ஏறினார்கள். பிறகு, "இந்த என் மகன் தலைவர் ஆவார். இவர் வாயிலாக அல்லாஹ் முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே சமாதானம் செய்து வைக்கக் கூடும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 3629
அல்லாஹ் தான் தலைவன் என்று கூறிய நபி (ஸல்) அவர்களே, மற்றவர்களைத் தலைவர் என்று அழைத்திருப்பதால் இரண்டையும் இணைத்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
மனிதர்களைத் தலைவர் என்று அழைப்பது, அல்லாஹ்வுக்கு நிகராக மனிதர்களைக் கருதும் அளவுக்குக் குற்றம் என்றால் அதை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
எனவே மனிதர்களில் ஒரு கூட்டத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவரையோ அல்லது ஓர் அமைப்பிற்குத் தலைமை தாங்கக் கூடியவர்களையோ தலைவர் என்று அழைப்பதில் தவறில்லை என்பதை அறியலாம்.
அப்படியானால் நபி (ஸல்) அவர்களைத் தலைவர் என்று பனூ ஆமிர் கூட்டத்தினர் அழைத்த போது அல்லாஹ் தான் தலைவன் என்று கூறியது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த ஹதீஸின் கருத்தை வைத்துப் பார்க்கும் போது, குறிப்பிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாகத் தெரிகின்றது. எனவே பனூ ஆமிர் கூட்டத்தினர், ஸய்யித் - தலைவர் என்ற வார்த்தையை, அல்லாஹ்வுக்கு நிகரான பொருளில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதனால் தான், அல்லாஹ்வே தலைவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூதாவூதின் விரிவுரையான அவ்னுல் மஅபூத் எனும் நூலில் இந்த ஹதீஸிற்கு விளக்கம் எழுதும் போது, பனூ ஆமிர் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள், எனவே தலைவர் என்ற வார்த்தையை அல்லாஹ்வுக்குப் பயன்படுத்துவது போன்ற அர்த்தத்தில் அவர்கள் பயன் படுத்தியிருக்கலாம் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். இது ஏற்கத்தக்க விளக்கமாக அமைந்துள்ளது.
எனவே அல்லாஹ் அல்லாதவர் களைத் தலைவர் என்று அழைப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
அபூசுஃப்யான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அவரை குறைஷிகளின் தலைவர் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார் கள். எனவே முஸ்லிம்களாயினும் மற்ற சமூகத்தவர்களாயினும் அவர்களில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களை, தலைவர் என்று அழைப்பதில் தவறில்லை

சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக பேசாமல் இருப்பது குற்றமா ?

 நானும் ஒரு பெண்ணும் பள்ளிப் பருவத்திலிருந்தே தோழிகளாக இருந்தோம். சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் எங்களுக்கிடையே சண்டை வந்து கொண்டிருந்தது. அதனால் நான் அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் பேசவில்லை என்பதால் அவளும் என்னுடன் பேசவில்லை. நான் பேசாமல் இருப்பதால் அல்லாஹ் என்னைத் தண்டிப்பானா?
பவுஜியா, திருச்சி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.  எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப் பட்டதன்று!
அறிவிப்பவர்: அனஸ் பின்  மாலிக் (ரலி),  நூல்: புகாரி 6065
இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் இறைக் கட்டளைக்கு மாற்றமாக நடக்கிறார் என்பதற்காக ஒருவருடன் பேசாமல் இருப்பது இதில் அடங்காது.
உதாரணமாக வரதட்சணைத் திருமணத்திற்கு நண்பர் அழைக்கும் போது நாம் மறுத்து விடுகிறோம். அல்லது மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஒருவர் ஈடுபடுகின்றார் என்பதற்காக அவருடன் பகைத்துக் கொள்கிறோம் என்றால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வுக்காக ஒருவரைப் பகைத்துக் கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"யார் அல்லாஹ்வுக்காக நேசித்தும், அல்லாஹ்வுக்காகக் கோபம் கொண்டும், அல்லாஹ்வுக் காகக் கொடுத்தும், அல்லாஹ்வுக்காக வெறுத்தும் வருகிறாரோ அவர் பூரணமான ஈமானை அடைந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 4061

வரதட்சனைத் திருமணத்தில் கஷ்க்காமல் இருப்பதினால் உறவினர்களைத் துண்டித்ததாக ஆப்ôதா?

? வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது. வரதட்சணை வாங்குவது குற்றம் என்று தடுத்தும் மீறி செய்கின்றார்கள். அதே சமயம் நம் உறவினர்களையும் ஒட்டி வாழ வேண்டும். நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தால் நாம் உறவைத் துண்டித்ததாக ஆகாதா? விளக்கவும்.
ஆரிஃப்
புதுக்கோட்டை
உறவினர்களை ஆதரிப்பதாக இருந்தாலும், வேறு எந்த நன்மையான காரியமாக இருந்தாலும் ஒரு தீமையின் மூலம் தான் அதை நிறைவேற்ற முடியும் என்றால் அதை இஸ்லாம் அங்கீகரிக்காது.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
பாவமான காரியத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் தடை செய்து விட்டான். வரதட்சணை என்ற பெரும் பாவத்தைச் செய்பவர் உறவினர் என்பதால் அந்தத் திருமணத்தில் போய் கலந்து கொண்டு அந்தத் தீமையை அங்கீகரிக்க முடியாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தும் மீறி அந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள் என்றால் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி விட வேண்டும் என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70
இந்த ஹதீஸின் அடிப்படையில் தீமையைக் கண்டால் அதைத் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் அதை விட்டு விலகி ஒதுங்கி இருப்பது தான் ஈமானின் இறுதி நிலை.
நெருங்கிய உறவினராக இருந்தாலும், பெற்ற தாய், தந்தையராக இருந்தாலும் இது தான் நிலை.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, நபியவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச் சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, "எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256
நபி (ஸல்) அவர்கள் தனது மகளார் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற போது, அங்கு உருவம் வரையப்பட்ட திரையைக் கண்டு திரும்பி விடுகின்றார்கள். எனவே நெருங்கிய உறவினராக இருந்தாலும் தீமை என்று வந்து விட்டால் அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டதா ? அல்லது சிறிது சிறிதாக அருளப்பட்டதா?

 ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயது முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிது சிறிதாகத் தான் குர்ஆன் அருளப்பட்டிருக்கும் போது ஒரே இரவில் அருளப்பட்டது என்பதன் பொருள் என்ன?

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25:32)
திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. 17:106, 20:114, 76:32 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன் 97:1)
இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம்  நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இது லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்பதையே 97:1 வசனம் கூறுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்தால் மட்டும் போதுமா ? அல்லது குளிக்க வேண்டுமா ?

 கணவன், மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் உணர்ச்சியின் காரணமாக இச்சை நீர் வெளிப்பட்டால் அதற்காகக் குளிக்க வேண்டுமா? அல்லது உளூச் செய்தால் போதுமா?

உணர்ச்சியினால் ஏற்படும் இத்தகைய கசிவுக்கு அரபியில் மதீ என்று பெயர்.
மதீ வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டார். "அதற்காக உளூச் செய்வது தான் கடமை. (குளிக்க வேண்டிய அவசியமில்லை)'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 132, 178, 269
இந்த ஹதீஸின் படி மதீ என்ற இச்சை நீர் வெளிப்பட்டால் குளிக்கத் தேவையில்லை. உளூச் செய்வது போதுமானதாகும்.

உளூச் செய்து விட்டு சினிமா பாடல்கள் படித்தால் உளூ முறிந்து விடுமா ?

 என் நண்பர் ஒருவர் உளூச் செய்து விட்டு, சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்டு விட்டு மீண்டும் உளூச் செய்யாமல் தொழுகின்றார். கேட்டால் இதற்குத் தடையில்லை என்று கூறுகின்றார். இப்படிச் செய்தால் உளூ கூடுமா?

சினிமாப் பாடல்களைக் கேட்பது தவறு என்பதில் சந்தேகமில்லை. உளூவுடனோ, உளூ இல்லாமலோ எந்த நிலையிலும் சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்பது பாவம் தான்.
ஆனால் அதே சமயம் அதனால் உளூ முறியும் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.
மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், காற்றுப் பிரிதல், தூக்கம், மதீ வெளிப்படுதல் என உளூவை முறிக்கும் காரியங்கள் என்னென்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒரு தீமையைச் செய்தால் உளூ நீங்கி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.

அழகுக்காக மொட்டை யடித்துக் கொள்ளலாமா? அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா?

 அழகுக்காக மொட்டை யடித்துக் கொள்ளலாமா? அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா?
ஜே. அப்துல் அலீம்
அய்யம்பேட்டை
தலையில் கறுப்பு அல்லாத சாயம் பூசுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். குறிப்பாக தலை நரைத்தவர்கள் கறுப்பு அல்லாத சாயம் பூசுவதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
யூதர்களும் கிறித்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலை முடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3462
மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா அழைத்து வரப்பட்டார். அவரது தலையும், தாடியும் வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை எதையேனும் கொண்டு மாற்றி விடுங்கள். கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3925
எனவே தலைக்குச் சாயம் பூசிக் கொள்வதற்கு மார்க்த்தில் எந்தத் தடையும் இல்லை. அதே போன்று ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வதற்கும் மார்க்கத்தில் தடை இல்லை.
ஆனால் அழகு படுத்துவதாக எண்ணிக் கொண்டு பாதி சிரைத்து, பாதி சிரைக்காமல் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறுவனைப் பார்த்தார்கள். அவனது தலையில் சிறிது சிரைக்கப்பட்டும், சிறிது (சிரைக்காமல்) விடப்பட்டும் இருந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். "ஒன்று முழுமையாக மொட்டையடித்து விடுங்கள். அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 4962, புகாரி 5920

ரப்பு என்ற வார்த்தையை முதலாளியை அழைக்கும் போது சொல்லலாமா ?

 அரபு நாடுகளில்  முதலாளிகளை அர்பாப் என்று அழைக்கின்றார்கள்.  3:64 வசனத்தில் அர்பாப் என்ற சொல்லை இறைவனுக்குப் பயன்படுத்துகின்றான். எனவே மனிதர்களை அர்பாப் என்று அழைக்கலாமா?
கதீஜா ஜெஸ்மின், துபை
அர்பாப் என்பது ரப் என்பதன் பன்மையாகும்.
ரப் என்ற வார்த்தைக்கு பரிபாலிப்பவன், எஜமானன், தலைவன் என்று பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
ரப் என்ற வார்த்தையை அல்லாஹ் தனக்குப் பயன்படுத்தியிருப்பது போலவே மனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான்.
என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப் படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 12:41)
இந்த வசனத்தில் எஜமானனுக்கு என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் ரப் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலாளிகளை அர்பாப் என்று அழைப்பதில் தவறில்லை.
எனினும் அல்லாஹ்வின் பண்புகளைக் குறிப்பிடும் பெயர்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கூற வேண்டும்.
உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. இதற்கு செவியுறுபவன் என்று பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் உள்ளது. எனவே மனிதனும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)
தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் ஸமீவுன் என்று அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது அவனது தகுதிக்குத் தக்க அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன். எவ்வளவு தொலைவிலிருந்து அழைத்தாலும் கேட்பவன். அதாவது அனைத்தையும் செவியுறுபவன் என்று இதனைக் கூறலாம்.
ஆனால் மனிதனைச் செவியுறுபவன் என்று கூறும் போது, இந்தக் கருத்தில் விளங்கக் கூடாது. ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பேசுவதைக் கேட்டு விளங்கிக் கொள்ள மனிதனால் முடியாது. எனவே மனிதனுக்குத் தக்க பொருளில் விளங்க வேண்டும்.
அது போன்றே ரப் என்ற வார்த்தையை இறைவனுக்குப் பயன்படுத்தும் போது, அனைத்தையும் பரிபாலிப்பவன், அகிலங்கள் அனைத்திற்கும் எஜமானன் என்ற கருத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ரப் என்ற வார்த்தையை மனிதனுக்குப் பயன்படுத்தும் போது, சாதாரண எஜமானன், முதலாளி என்ற கருத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் மலஜலம் நஜீஸாகுமா?

 சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 222
அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மடியில் இருக்கும் போது, அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள்.  "வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையைக் கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். "பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும்.  ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: லுபாபா பின்த் அல்ஹர்ஸ் நூல்: அபூதாவூத் 320
குழந்தைகளின் சிறுநீருக்கே கழுவ வேண்டும் அல்லது தண்ணீர் தெளித்து விட வேண்டும் எனும் போது குழந்தைகளின் மலம் அசுத்தம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
குழந்தைகள் என்றால் எத்தனை வயது வரை என்பது குறித்து ஹதீஸ்களில் எதுவும் கூறப்படவில்லை. என்றாலும் புகாரியின் 223 மற்றும் 5693 ஆகிய ஹதீஸ்களில் "திட உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீருக்காக நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தெளித்தார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. எனவே பால் குடிக்கும் ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் மட்டுமே தண்ணீர் தெளித்து விட வேண்டும். உணவு சாப்பிடும் குழந்தைகள் ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் கழுவ வேண்டும்.

ஓரே சமூதாயத்திற்கு மூன்று தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் சொல்லுகிறானே அந்த மூன்று நபர்கள் பெயர் என்ன ?

 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளனவா?
கே. அப்துர்ரஹ்மான், புதுக் கல்லூரி, சென்னை
ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 36:13,14)
இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்ற குறிப்பு குர்ஆனில் வேறு எங்கும் காணப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது குறித்து எந்த விளக்கத்தையும் கூறியதாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.
தப்ஸீர்களில் தான் இது குறித்து பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இறைத்தூதர்கள் இல்லை, ஈஸா நபியின் தூதர்கள் தான் என்று கூட தப்ஸீரில் இடம் பெற்றுள்ளது. எனவே இவற்றையெல்லாம் நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அந்த இறைத்தூதர்களின் வரலாற்றை அல்லாஹ் எடுத்துக் கூறுவதன் நோக்கம், அதிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும் என்பது தான். அவர்கள் யார் என்பதை அறிந்தால் தான் அந்த வரலாற்றிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதில்லை. அவர்கள் யாரென்று அறியாவிட்டால் நமது ஈமானுக்கோ அல்லது அமல்களுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் சிலர் குர்ஆனை ஓதும் போது சில உச்சரிப்புகளை மாற்றி ஓதுகிறார்களே இது சரியா ?
? நாங்கள் உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாங்கள் அரபி ஓதும் பொழுது,  ஹ  ங்  ந  ஆகிய மூன்று எழுத்துக்களையும்              ழ உச்சரிப்பில் ஓதி வருகின்றோம். இவ்வாறு ஓதுவது சரியா?
ஏ. பல்கீஸ் பானு, அஷ்ரபுத்தீன், பண்டாரவாடை
 குர்ஆன் வசனங்களை ஓதும் போது வார்த்தை, உச்சரிப்பு போன்றவற்றை இயன்ற வரை சரியாக ஓத வேண்டும். திருக்குர்ஆனும் இதையே வலியுறுத்துகின்றது.
குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73:4)
பொதுவாகவே உருது பேசும் மக்களிடம் நீங்கள் குறிப்பிடுவது போன்று அரபு எழுத்துக்களை உச்சரிக்கும் வழக்கம் உள்ளது. அரபு மொழியின் உச்சரிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அரபு மக்கள் எப்படி அந்த மொழியைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் மேற்குறிப்பிட்ட எழுத்துக்களை நீங்கள் குறிப்பிடும் விதத்தில் அரபு மக்கள் உச்சரிப்பதில்லை.
இந்த எழுத்துக்களின் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்வதற்கு எழுத்து வடிவில் எழுத முடியாது. பல்வேறு காரிகள் ஓதிய கிராஅத் கேஸட்டுக்கள் மற்றும் உச்சரிப்புடன் கூடிய அரபு மொழி அகராதி சிடிக்கள் போன்றவை உள்ளன. இதைக் கேட்பதன் மூலம் இந்த உச்சரிப்புகளின் சரியான பதத்தை அறிந்து கொள்ள முடியும்.

மீக்காயீல் என்ற மலக்கைப் பற்றி விளக்கவும் ?

 அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று அல்குர்ஆன் 2:98 வசனத்தில், வானவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று  அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? ஜிப்ரீலைப் பற்றி தெரியும். மீகாயீலைப் பற்றி விளக்கவும்.
எம். திவான் பஜிரா, பெரியகுளம்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார். பிறகு, "1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்? அது தாயின் சகோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், "வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அவர் அல்லாஹ்வுக்கு எதிரியே.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்'' என்ற (2:97) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.......
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3329, 4480
ஜிப்ரீலும் மீகாயீலும் வானவர்கள் தாம் என்றாலும் அவர்களைக் குறித்து யூதர்களிடம் இருந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இந்த வசனத்தை அல்லாஹ் அருளியிருக்கலாம். ஜிப்ரீலை யூதர்கள் பகைவராகக் கருதியிருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது. இதே போன்று மீகாயீலைப் பற்றியும் யூதர்கள் குறிப்பிட்ட கருத்து எதையேனும் கொண்டிருக்கலாம். ஆனால் அதைப் பற்றி ஹதீஸ்களில் எந்தக் குறிப்பும் இல்லை.
நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் தூதுச் செய்தியைக் கொண்டு வருவதால் நாங்கள் ஏற்கவில்லை, மீகாயீல் கொண்டு வந்திருந்தால் நாங்கள் ஏற்றிருப்போம் என்று மதீனாவிலிருந்த யூதர்கள் கூறியதாகவும் அதனால் இந்த வசனம் அருளப்பட்டதாகவும் தப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அவர்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் 64:16 வசனத்தில் உள்ளதே இதன் விளக்கம் என்ன ?

 திருக்குர்ஆனின் 64:16 வசனத்தில் உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். சிறு சிறு பாவங்கள் செய்பவர்கள் இதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வே இயன்ற வரை தான் இறையச்சத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகின்றான் என்று கூறலாம் அல்லவா? இதற்கு விளக்கம் என்ன?
நாஸர் இப்னு இப்ராஹீம், கோவை
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல்வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:16)
இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பதற்கு இயலாவிட்டால் பாவங்கள் செய்யலாம் என்று பொருளல்ல. பாவங்கள் செய்வதற்கு இயலாமையைக் காரணம் காட்ட முடியாது. என்னால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை; அதனால் நான் மது அருந்தி விட்டேன் என்று யாரும் கூற முடியாது. நமக்குக் கட்டளையிடப்பட்ட வணக்கங்களைச் செய்வதற்குத் தான் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளது.
நான் எதை உங்களுக்கு விட்டு விட்டேனோ அதை நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் கேள்வி கேட்டதும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7288, முஸ்லிம் 4348
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தடை செய்து விட்டால் விலகிக் கொள்ளுங்கள், செய்யுமாறு கட்டளையிட்டால் இயன்ற வரை கட்டுப்படுங்கள் என்று கூறுகின்றார்கள். எனவே தடை செய்யப்பட்ட காரியங்களைச் செய்வதில், அதாவது பாவம் செய்வதில் இயன்ற வரை தவிர்ந்து கொள்ளலாம், இயலாவிட்டால் பாவம் செய்யலாம் என்று கூறுவதற்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.
கட்டளையிடப்பட்ட செயல்களைச் செய்யும் போது, தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதில் குறைபாடு ஏற்படலாம். அல்லது சலுகையைப் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். இதுபோன்ற கட்டங்களில் இயன்ற வரை அதை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பதைத் தான் இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றது. இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று கூறி விட்டு அதன் தொடர்ச்சியாக தர்மத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதையும் சேர்த்துப் பார்த்தால் நன்மையான காரியங்களைச் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய செய்தியாகத் தான் இந்தக் கட்டளையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கலாம்.

இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு பால் புகட்டுவது கட்டாயமா ? இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பால் புகட்டுவது ஹராமா ?

 குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை முழுமையாக பாலூட்டும் படி இறைவன் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். அப்படியானால் இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பாலூட்டுவது ஹராமாகுமா?
பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்
குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 2:233 மற்றும் 31:14 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிறந்த குழந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று கொடுத்துள்ளார்கள்.
நான் (எனது மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) கருவுற்றிருந்தேன். கர்ப்பக் காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டு மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம்பழம் ஒன்றைக் கொண்டு வரும் படிக் கூறி, அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனது வாயினுள் வைத்துத் தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆச் செய்து, இறைவனிடம் அருள் வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன் தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்: புகாரி 3909
போதிய அளவு தாய்ப்பால் சுரக்காத பெண்களும் உண்டு. இவர்கள் வேறு உணவுகளை வழங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலூட்டுவது ஹராம் என்று கூற முடியாவிட்டாலும் பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் என்று திருக்குர்ஆன் கூறுவதால் அத்துடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுவது தான் சிறந்தது.

சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் தான் பிரகாசமா ? தமிழில் படிப்பவருக்குக் கிடையாதா ?

 சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அவருக்கு அடுத்த ஜும்ஆ வரை பிரகாசம் நீடிக்கின்றது என்று ஹதீஸ் உள்ளது. பிரகாசம் என்றால் ஒளி என்று அறிவோம். இதன் நன்மைகள் என்ன? அரபியில் ஓதினால் தான் இந்த நன்மைகளை அடைய முடியுமா? தமிழில் படித்தாலும் நன்மை கிடைக்குமா? விளக்கம் தரவும்.
ஏ. மாலிக், கோவை.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாகிம்
இந்த ஹதீஸில் பிரகாசம் நீடிக்கின்றது என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதன் நன்மைகள் என்ன என்று இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ விளக்கம் கூறவில்லை.  நபி (ஸல்) அவர்கள் நன்மை எதையும் வரையறுத்துச் சொல்லாத ஒன்றுக்கு நாம் வரையறுக்க முடியாது. பொதுவாக குர்ஆன் ஹதீஸில் பிரகாசம், ஒளி போன்ற வார்த்தைகள் நேர்வழியுடன் தொடர்பு படுத்தி இலக்கியமாகக் கூறப்படுவதால் அதிகமான நன்மை என்று மட்டும் கூற முடியும்.
அரபு மொழியில் தான் ஓத வேண்டும் என்பதற்கான விளக்கத்தை முந்தைய கேள்விக்கான பதிலில் பார்க்கவும்.

குர்ஆனை அரபியில் ஓதினால் மட்டும்தான் பத்து நன்மைகள் அதிகமா ? இது மொழி வேற்றுமையை உருவாக்கவில்லையா ?

 இஸ்லாத்தில் மொழி, நிறம் போன்றவற்றிற்கு எந்த மகத்துவமும் இல்லை. ஆனால் குர்ஆனை அரபியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்கிறார்கள். மற்றபடி அவரவர் தாய்மொழியில் ஓதினால் நன்மைகள் இல்லை என்கிறார்கள். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.

அல்லாஹ்வுடைய எழுத்தில் ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்து; லாம் என்பது ஒரு எழுத்து; மீம் என்பது ஒரு எழுத்து என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதீ 2835
இந்த ஹதீஸின்படி குர்ஆனை அதன் மூல மொழியான அரபு மொழியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் நமது தாய்மொழியில் குர்ஆனின் பொருளை உணர்ந்து படிப்பதற்கு நன்மையே இல்லை என்று எண்ணி விடக் கூடாது.

குர்ஆனை அரபியில் ஓதினால் மட்டும்தான் பத்து நன்மைகள் அதிகமா ? இது மொழி வேற்றுமையை உருவாக்கவில்லையா ?

 இஸ்லாத்தில் மொழி, நிறம் போன்றவற்றிற்கு எந்த மகத்துவமும் இல்லை. ஆனால் குர்ஆனை அரபியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்கிறார்கள். மற்றபடி அவரவர் தாய்மொழியில் ஓதினால் நன்மைகள் இல்லை என்கிறார்கள். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
சாதிக்கா முஹம்மது, முரார்பாத்
அல்லாஹ்வுடைய எழுத்தில் ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்து; லாம் என்பது ஒரு எழுத்து; மீம் என்பது ஒரு எழுத்து என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதீ 2835
இந்த ஹதீஸின்படி குர்ஆனை அதன் மூல மொழியான அரபு மொழியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் நமது தாய்மொழியில் குர்ஆனின் பொருளை உணர்ந்து படிப்பதற்கு நன்மையே இல்லை என்று எண்ணி விடக் கூடாது.
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)
இதுபோன்று குர்ஆனைப் பற்றி சிந்தித்து படிப்பினை பெறுமாறு வலியுறுத்தும் வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவை அனைத்துமே திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலை நாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர்.  (அல்குர்ஆன் 35:29)
அல்லாஹ்வின் வேதத்தைப் படிப்போர் நஷ்டமில்லாத வியாபாரத்தைச் செய்வதாக இந்த வசனம் கூறுகின்றது.
செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: புகாரி)
எனவே அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கின்றோம் என்ற எண்ணத்துடன் திருக்குர்ஆனை நமது தாய்மொழியில் படித்தாலும் அதற்கு நிச்சயம் நன்மை உண்டு.
ஆனால் அரபு மொழியில் படித்தால் எழுத்துக்குப் பத்து நன்மை என்பதை நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துக் கூறியுள்ளார்கள். மற்ற மொழிகளில் படிப்பதற்கு இதுபோன்று குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.
பொதுவாக எந்த ஒரு நூலாக இருந்தாலும் அது இயற்றப்பட்ட மூல மொழிக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எத்தனை மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த நூலின் தனித்தன்மை மாறாமல் இருப்பது மூல மொழியில் மட்டும் தான். சாதாரண நூற்களுக்கே இந்த நிலை இருக்கும் போது திருக்குர்ஆனுக்கு இத்தகைய முக்கியத்துவத்தை அளிப்பதற்கு அதிகமான முகாந்திரம் உள்ளது.
ஏனெனில் திருக்குர்ஆன் என்பது சாதாரண மனித வார்த்தைகள் அல்ல. அவை அல்லாஹ்வின் வார்த்தைகள். அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே நாம் ஓதுவதற்கென்று சிறப்பு நன்மைகள் இருப்பதை அரபு மொழிக்கு உள்ள சிறப்பு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அரபு மொழியில் எதைப் படித்தாலும் நன்மை என்று இஸ்லாம் கூறவில்லை. திருக்குர்ஆனைப் படிப்பதற்கு மட்டுமே நன்மை என்று கூறுவதால் இது திருக்குர்ஆனுக்குரிய சிறப்பு தானே தவிர அரபு மொழிக்குரிய சிறப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, குல் அவூது பிரப்பின்னாஸ் என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதுவதற்குப் பதிலாக குல் அஸ்தயீது பிரப்பின்னாஸ் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டும் அரபு மொழி தான், இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய வாசகம் தான். அரபு மொழிக்கு சிறப்பு இருப்பதாக இருந்தால் எப்படிக் கூறினாலும் இந்த நன்மை கிடைக்க வேண்டும். ஆனால், குல் அவூது பிரப்பின்னாஸ் என்பதற்குத் தான் குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்குமே தவிர, குல் அஸ்தயீது பிரப்பின்னாஸ் என்று கூறுவதற்கு அந்த நன்மை கிடைக்காது. எனவே குர்ஆன் ஓதுவதற்கு உள்ள சிறப்பு அரபு மொழிக்கு உள்ள சிறப்பு அல்ல! அது இறைவனின் வார்த்தைகளை, வஹீயை அப்படியே கூறுவதற்கான சிறப்பு என்பதை விளங்கலாம்.
"நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள்.  பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.  பின்னர், "யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன்.  என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை.  யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன்.  நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்' என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய்.  இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது "நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன்' என்று சொல்வதற்குப் பதிலாக "உனது ரசூலையும் நம்பினேன்' என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "இல்லை. நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன் என்று கூறுவீராக'' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ர-), நூல் : புகாரி 247
இந்த ஹதீஸில், நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்று நபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதிலிருந்து மொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, யாருடைய வார்த்தைகள் என்பது தான் நன்மையைத் தீர்மானிக்கின்றன என்பதை அறியலாம்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)
இஸ்லாத்தில் மொழி, இனம், குலம், நிறம் ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதற்கு இவ்வசனமே போதுமான சான்றாகும்.

குர்ஆன் ஹதீஸ் இல்லாமல் தனது சொந்த ஆய்வின் படி தீர்ப்புச் சொல்வது கூடும் என்று ஹதீஸில் உள்ளதே . அப்படியெனில் மத்ஹபுகளும் கூடும்தானே ?

 நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பும் போது, முஆத் (ரலி), குர்ஆன் மற்றும் ஹதீஸில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் எனது சிந்தனையைக் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறுகின்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களும் அனுமதிக்கின்றார்கள். இதைத் தான் மத்ஹபுவாதிகள் எடுத்துக் கொண்டு மத்ஹபுச் சட்டங்களை இயற்றலாம் என்று கூறுகின்றார்கள். இதற்கு விளக்கம் என்ன?
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஜ்திஹாத் (ஆய்வு) செய்து தீர்ப்பளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த ஹதீஸில் குர்ஆன் ஹதீஸ் இல்லாமல் சொந்தமாக மார்க்க விஷயத்தில் தீர்ப்பளிக்கலாம் என்ற கருத்தில் உள்ளது. இந்த ஹதீஸ் பல்வேறு நூற்களில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான ஹதீஸாகும்.
நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) பதிலளித்தார். அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்திலும் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, என்னுடைய சிந்தனையைக் கொண்டு இஜ்திஹாத் (ஆய்வு) செய்வேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வுடைய தூதருடைய தூதருக்கு அருள் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஆத் பின் ஜபல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் திர்மதீ, அபூதாவூத், அஹ்மத், தாரமீ, பைஹகீ உள்ளிட்ட பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அறிவிப்புகளிலுமே ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றார்கள். மேலும் இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரது பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

சூனியம் என்பது இப்போது இருக்கும் கண்கட்டி வித்தையைப் போன்றதா? அல்லது தாயத்து தகடு போன்றவற்றில் மந்திரித்து வைப்பது போன்றதா?


மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர். இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ உலகில் எந்த வித்தையும் கிடையாது.
தாயத்து, தகடு போன்றவற்றால் கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)
இந்த வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (அல்குர்ஆன் 20:66)
கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.  பாம்பைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது என்று அல்ôஹ் கூறுகின்றான். அதாவது பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது தான் இதன் பொருள்.
உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)
இங்கு சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் இது கண்கட்டு வித்தை என்பதால் தான், போட்டி என்று வந்தால் சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
எனவே சூனியம் என்பது வெறும் மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தை தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites