அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 4 ஜூலை, 2011

பஸ்பமாக்கப்பட்ட 12 மில்லியன் பெண் சிசுக்கள்


கருவறையா? கல்லறையா?
இப்போது பெண்களுக்கு மிக மிக இன்றியமையாத தேவை உயிர் வாழும் உரிமை தான். தாயின் கரு என்பது கருணையின் மறு பெயர். இப்போது அந்தக் கருவறையே கல்லறையாக மாற்றப்பட்டு விட்டது.
கருவறையில் நவீன கருவிகளின் நாசகாரக் கதிரலைகள் பாய்ந்து பெண் சிசு என்று கண்டறியப்படுகின்றது. அங்கே அந்தத் திடப் பொருள் (கரு) திரவப் பொருளாக மாற்றப்பட்டு, கழுவி, கழிவு நீராக வெளியேற்றப்பட்டு விடுகின்றது. கருவறை காலி செய்யப்படுகின்றது.
உள்ளத்தை உருக வைக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, அக்கிரமத்தை அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து The Lancet என்ற இதழ் படம்பிடித்துக் காட்டுகின்றது. அந்த ஆய்வை இப்போது பார்ப்போம்.
பஸ்பமாக்கப்பட்ட 12 மில்லியன் பெண் சிசுக்கள்
4.2 மில்லியன் முதல் 12.1 மில்லியன் வரையிலான பெண் குழந்தைகள் 1980 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், குறி வைத்துக் கருவிலேயே பஸ்பமாக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பெண் குழந்தைகள் 1990ல் அழிக்கப்பட்டுள்ளனர்.
கருவில் உருவாகும் பெண் குழந்தை, தலைக் குழந்தையாக இருந்தால், அதாவது தாய்க்கு முதல் குழந்தையாக இருந்தால் அது இந்தக் கொலையை விட்டுத் தப்பி விடுகிறது. இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்.
இந்தியாவில் அதிகமான மக்கள் தொகையினர் வசிக்கும் மாநிலங்களில் தான் இது போன்று பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கருக்கலைப்பு செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது.
பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மொத்தக் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விட 71 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
இதே வயதுக் குழந்தைகளில் ஆண்களை விட பெண் குழந்தைகள் 60 லட்சம் குறைவான இருந்தனர் என்று 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
42 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே குறைவாக இருந்ததாக 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டுகின்றது.
1990 ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது. 2005ஆம் ஆண்டு இந்த விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்று சரிந்து விட்டது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
மொத்தக் குழந்தைகளில் ஆண்களை விட 42 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக இருந்தது, தற்போது 71 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது பெண் குழந்தைகள் குறைவதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பிலும் கருக்கலைப்பு கூடிக் கொண்டிருப்பதையே இந்தப் புள்ளி விபரம் காட்டுகின்றது.
காட்டுமிராண்டியாக்கும் கல்வியறிவு
படிக்காத, பாமர, பரம ஏழை வர்க்கத்தினரை விட படித்த, பணக்கார வர்க்கமே இந்தப் பெண் சிசுக் கலைப்பில் மிஞ்சி நிற்கின்றனர் என்பதையும் இந்த ஆய்வு விவரிக்கின்றது. அதாவது கற்றவர்கள், கல்வியறிவு மிக்கவர்கள் தான் காட்டுமிராண்டித்தனத்தில் மிஞ்சியுள்ளனர்.
இதன் விளைவாகத் தான் 2001ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் என்றிருந்த பிறப்பு விகிதம், 2011ல் 1000க்கு 914 ஆகக் குறைந்தது.
கலைப்பிற்குக் காரணம் என்ன?
இந்தக் கருவழிப்புகள், கருக்கலைப்புகள் மட்டும் நிகழாவிட்டால் இயற்கையாகவே 1000 ஆணுக்கு 952 பெண் என பிறப்பு விகிதம் அமைந்திருக்கும். ஆனால் அந்த அளவை அடைவதை விட்டும் கருக்கலைப்பு தடுத்து விட்டது.
இன்று விலங்கின உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணின உரிமைக்குப் பெரும் கோஷமிடுபவர்கள், பேயாட்டம் போடுபவர்கள் அந்தப் பெண்ணினத்தின் கருவுயிரைக் காக்கும் உரிமைக்கு, மனித உயிரின் புனிதம் காப்பதற்காகப் போர்க் குரல் எழுப்ப வேண்டாம். குறைந்தபட்சம் இதற்காக முணுமுணுப்பதற்குக் கூட மறுப்பது தான் பெரும் வேதனைக்குரிய விஷயம்.
இப்படிக் கருக்கலைப்பிற்கும், அதைக் கண்டு கொள்ளாத மனப்பான்மைக்கும் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
1. பிரசவத்திற்கு முந்திய கண்டுபிடிப்புத் தொழில் நுட்பச் சட்டம் (Prenatal Diagnostic Techniques Act) அதாவது பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கருவிலேயே கண்டுபிடிப்பது தொடர்பான இந்தச் சட்டத்தின் செயலிழப்பு மற்றும் முடக்கம். இந்தச் சட்டத்தின்படி கருக்கலைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2. பெரும் பெரும் பண முதலைகள், பேராசை கொண்ட ரேடியாலஜிஸ்ட், பணமே குறியாகக் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள், சட்டத்திற்குப் புறம்பாகப் பெருகிக் கொண்டிருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள்!
இவர்கள் தான் ஆணாதிக்கம் கொண்ட கருக்கலைப்பையும், கருவழிப்பையும் நாடுகின்ற கொலைகார மக்களுக்குக் கொலைக் கருவிகளாகவும் கொலைக் காரணிகளாகவும் ஆகியிருக்கின்றார்கள்.
கருக்கலைப்புக்காக வரக் கூடியவர்கள் சொல்லும் காரணங்கள் சில சமயங்களில் உண்மையாகவும் இருக்கின்றன. சமயங்களில் பொய்யாகவும் ஆகி விடுகின்றன.
3. கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் (The Medical Termination of Pregnancy Act - 1971) இந்தச் சட்டத்தை டாக்டர்களின் காவல் சக்தி என்றழைக்கலாம்.
கருவில் வளரும் குழந்தை தாயின் நலத்திற்குப் பெரும் ஆபத்து என்று ஒரு டாக்டர் கருதினால் போதும். அந்தக் கருவை அவர் கலைத்து விடலாம்.
சட்டத்திற்குப் புறம்பாக அவர் கருவைக் கலைக்கும் போது கூட இந்தச் சட்டத்தின் காரணமாக அவரைத் தண்டிக்க முடியாது. தாயின் நலத்திற்குப் பேராபத்து என்ற காரணத்தைச் சொல்லி அவர் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.
4. தடுக்க முடியாத தடுப்பு சாதனங்கள்:
கருவுறாமல் இருப்பதற்காக வேண்டி கருத்தடைச் சாதனங்களை தம்பதியர் பயன்படுத்துகின்றனர். ஆனால் கருத்தடைச் சாதனங்கள் பல கட்டங்களில் காலை வாரி விடுகின்றன. இந்தக் கருத்தடைச் சாதனங்களுக்கு டாக்டர்கள் எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்க முடிவதில்லை. இறுதியில் இதன் காரணமாகவும் கருக்கலைப்பு தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
5. தாய் மரணம்:
தாராளமயமான கருக் கலைப்பின் காரணமாகத் தாயின் உயிர் பாதுகாக்கப்படுகின்றது; இதனால் தாய் மரணம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது என்ற தவறான நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் அது முற்றிலும் தவறு என்பதற்கு அயர்லாந்து ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு கருக்கலைப்பிற்கு எதிரான கடும் சட்டம் அமலில் இருக்கின்றது. இப்படி இருந்தும் அங்கு தான் தாய் மரணம் மிக மிகக் குறைவாக உள்ளது. அதனால் தாராள கருக்கலைப்பு தான் தாய் மரணத்தைத் தடுக்கின்றது என்ற கருத்து தவறானது என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகின்றது.
இவை இந்திய மற்றும் உலக அளவில் கருக்கலைப்பிற்காகச் சொல்லப்படுகின்ற காரணங்கள். மேற்கத்திய நாட்டில் ஆண் பெண் பாகுபாடின்றி கருக்கலைப்பு நடைபெறுகின்றது. ஆனால் இந்தியாவிலோ பெண் இனம் குறி வைத்து அழிக்கப்படுகின்றது.
இப்போது பெண்களுக்கு உடனடியான, அவசியமான, அவசரத் தேவை அவர்களின் உயிர் வாழும் உரிமை தான். அந்த உரிமைக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் செய்யாமல் 33 சதவிகித இடஒதுக்கீட்டில் இந்த அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் களமிறங்கியிருக்கிறார்கள்.
உயிரைக் காக்க உரிய வழி
சரி! அப்படியே இவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரும்பி, கருக்கலைப்பை தடுப்பதற்குச் சட்டம் இயற்றி, கருக்கலைப்பு தடுக்கப்பட்டு விடும் என்று எண்ணினால் அதுவும் முற்றிலும் தவறாகும். காரணம் இப்போதும் கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் நம் நாட்டில் அமலில் இருக்கத் தான் செய்கின்றது. ஆனாலும் கருக்கலைப்பைத் தடுக்க முடியவில்லையே! ஏன்? எனவே இந்தச் சட்டம் இதற்குத் தீர்வாகவோ திருப்பமாகவோ ஆகாது.
இதற்கு ஒரே வழி, உரிய வழி இஸ்லாமிய மார்க்கம் தான். அது எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கூறுகின்றது என்பதை நாம் தனித் தலைப்பில் பார்க்கவுள்ளோம்.
கற்பழிப்புக்கள்  தொடரும் .....

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites