உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும் வட்டியில்லாமல் கொடுப்பதில்லை. இப்படிப் பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா?
வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டுமே இஸ்லாத்தில் மிகப் பெரும் பாவமாகும். வட்டி கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் பாவத்தில் சம பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வட்டிக்குக் கடன் வாங்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அதே சமயம் வட்டிக்குக் கடன் வாங்கிய ஒருவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது என்று மார்க்கம் கூறவில்லை. ஏனென்றால் வட்டி வாங்கி உண்பவர் தான் ஹராமான உணவை உட்கொள்கின்றார். வட்டி கொடுப்பவர், அதாவது வட்டிக்குக் கடன் வாங்கியவர் ஹராமான உணவை உட்கொள்கிறார் என்று கூற முடியாது.
"தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், "என் இறைவா! என் இறைவா!'' என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1686
இந்த ஹதீஸில் ஒருவனது உணவு, குடிப்பு ஆகியவை ஹராமாக இருக்கும் நிலையில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது என்று கூறப்படுகிறது. வட்டிக்குக் கடன் வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதில்லை என்பதால் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. இன்று பெண்களுக்கென்றே தனியாக பேண்ட், சட்டைகள் இருக்கின்றன. இவற்றின் நிலை என்ன? இதை ஆண்களின் ஆடை என்று கணிப்பதா? பெண்களின் ஆடை என்று கூறுவதா?
பெண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற ஆணையும், ஆண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 3575
ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது; பெண்களின் ஆடையை ஆண்கள் அணியக் கூடாது என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ் இது தான்.
பொதுவாக இது பெண்கள் ஆடை, இது ஆண்கள் ஆடை என்று குறிப்பிட்டுப் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் இது வித்தியாசப்படும். உதாரணமாக நமது நாட்டில் பாவாடை என்ற உடையை பெண்கள் அணிகிறார்கள். ஆனால் ஃபிஜி என்ற நாட்டில் அதையே ஆண்கள் அணிகிறார்கள்.
ஒரு பகுதியிலேயே ஒரே விதமான ஆடையை இரு சாராரும் அணிகிறார்கள். தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்களில் சிலர் கைலி போன்ற ஆடையை அணிவது வழக்கம். ஆண்களும் கைலி அணிகின்றனர். இது போன்று இரு சாராருக்கும் பொதுவான ஆடைகளும் உள்ளன.
எனவே குறிப்பிட்டு இந்த உடையை ஆண்கள் அணியக் கூடாது; இந்த உடையைப் பெண்கள் அணியக் கூடாது என்று இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடும். எனவே இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைத் தரவில்லை.
பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் ஆடை அணியக் கூடாது; ஆண்கள் அணியும் விதத்தில் பெண்கள் அணியக் கூடாது என்று தான் இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.
சேலை, தாவணி போன்ற ஆடைகளை எடுத்துக் கொள்வோம். அதைப் பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் அணிவதற்குத் தடை உள்ளது. ஆனால் அதையே லுங்கி போன்று ஒரு ஆண் கட்டினால் அதைத் தடுக்க முடியாது.
ஆடையின் மூலம் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும், பெண்கள் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும் தான் இந்த ஹதீஸ் தடை செய்கின்றதே தவிர குறிப்பிட்ட ஆடையை அணிவதைத் தடை செய்யவில்லை. கீழ்க்கண்ட ஹதீஸ் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன. சுன்னத் வல் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் இந்தப் பள்ளி வாசல்களுக்குச் சந்தா மற்றும் இமாமுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கு என்று வசூல் செய்கிறார்கள். இது தர்மம், நன்மையான காரியத்தில் சேருமா? அல்லாஹ்வுடைய பள்ளி என்ற அடிப்படையில் அங்கு போய் தொழுகிறோம்; பள்ளி கட்டடத்திற்கு நிதி உதவி செய்கிறோம். இது சரியா? விளக்கவும்.
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:265
அல்லாஹ்வின் திருப்தியை நாடி நாம் எதைச் செலவிட்டாலும் நம்முடைய எண்ணத்திற்காக அல்லாஹ் கூலி வழங்குவான். எனவே பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்ற அடிப்படையில் அதன் கட்டுமானப் பணிகளுக்காகவோ, அல்லது நிர்வாகப் பணிகளுக் காகவோ நிதி உதவி வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அது போன்று இமாமுக்கு உணவு வழங்குவதும் தர்மம் என்ற அடிப்படையில் அமைந்தது தான்.
எனினும் நாம் வழங்கும் இந்த உதவிகளைக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மவ்லிதுகள், கந்தூரி விழாக்கள் போன்றவற்றுக்குச் செலவிடுகிறார்கள் என்று தெரிந்தால், "பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!'' எனும் (5:2) வசனத்தின் அடிப்படையில் அதற்கு உதவுதல் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது தான் ஆற்றினார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படும் சில பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரையை மிம்பர் போன்ற உயரமான இடத்தில் (மிம்பரில்) நடத்துவது இல்லையே! இது நபிவழிக்கு முரணில்லையா? என்று என் நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.
ஜும்ஆ உரையை நபி (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடை மீது தான் நிகழ்த்தினார்கள் என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. எனினும் மிம்பர் என்பது ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மேடை தான் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸைச் சிந்தித்தால் விளங்க முடியும்.
நபி (ஸல்) அவர்கள், ஜும்ஆ நாளின் போது ஒரு மரம் அல்லது பேரீச்ச மரத்தின் (அடிபாகத்தின்) மீது சாய்ந்தபடி (உரையாற்றிய வண்ணம்) நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரிப் பெண்மணி.... அல்லது அன்சாரித் தோழர்...., "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)'' என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரைமேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள்.
நூல்: புகாரி 3584
நபித்தோழர் மிம்பர் செய்து கொடுப்பதற்கு முன்பு வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு மரப் பலகையின் மீது சாய்ந்தவாறு அல்லது ஊன்றியவாறு நின்று தான் உரையாற்றியுள்ளார்கள். நபித்தோழர் கேட்ட பின்னர், விரும்பினால் செய்து தாருங்கள் என்று கேட்டு, அதன் மீது நின்று உரையாற்றியுள்ளார்கள்.
எனவே மிம்பர் என்பது ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மேடை தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனினும் அதன் பின்னர் அந்த மேடையின் மீது தான் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தியுள்ளனர் என்பதற்குப் பல்வேறு ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.
முறையாகப் பள்ளிவாசல் ஏற்படுத்தி, ஜும்ஆ நடத்தப்படும் இடங்களில் மிம்பர் அமைத்தே உரை நிகழ்த்துகின்றனர். ஆனால் சில பகுதிகளில் இணை கற்பிப்பவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவதைத் தவிர்த்து, தவ்ஹீது சகோதரர்கள் சிலர் சேர்ந்து தனியாக ஜும்ஆ நடத்தும் போது மிம்பர் அமைக்க முடிவதில்லை.
இவர்களும் இயன்ற வரை மேடை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றாலும் மேற்கண்ட நபிமொழியின் படி மிம்பர் இல்லாதபட்சத்தில் தரையில் நின்று உரை நிகழ்த்துவதைக் குறை கூற முடியாது.
மிம்பர் என்றால் மத்ஹபுகளில் உள்ளது போன்று இத்தனை படிகள் இருக்க வேண்டும், இன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.
தொழுகையை எப்படித் தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, மிம்பரின் மீது நின்று தொழுது காட்டியுள்ளார்கள். எனவே மிம்பர் என்பது தற்போது நாம் விளங்கி வைத்திருக்கும் குறிப்பிட்ட வடிவம் கொண்டதல்ல! அது ஒரு மேடை தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தஜ்ஜால் செல்லாத இடங்களில் கஅபாவும் ஒன்று. அப்படியிருக்க, தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே? விளக்கம் தரவும்.
நிரவி சகோதரிகள்
நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் தூங்கிக் கொண்டிருக் கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய, தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... (நின்றிருந்தார்). அங்கே இருந்த நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். "மர்யமின் குமாரர்'' என்று பதிலளித்தார். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலைமுடியுள்ள, வலக்கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், "யாரது?'' என்று கேட்டேன். "தஜ்ஜால்'' என்று பதிலளித்தார்கள். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் இப்னு கத்தன் தான்.
இமாம் ஸுஹர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு கத்தன் குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன். அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.
நூல்: புகாரி 3441
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கனவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகின்றார்கள். ஈஸா (அலை) அவர்களையும், தஜ்ஜாலையும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கா, மதீனாவிற்குள் தஜ்ஜால் நுழைய முடியாது என்று இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும். அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1881
இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாள் பற்றிய முன்னறிவிப்பாகவே கூறப்படுகின்றன. அதாவது கியாமத் நாள் நெருங்கும் போது தஜ்ஜால் வருவான். அவ்வாறு வரும் போது அவனால் மக்கா, மதீனாவிற்குள் நுழைய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இதற்கும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில் இது சூதாட்டமா?
மேலும் டோர்னமென்ட் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் 26 அணிகளிடமும் தலா ரூ. 150 வீதம் போட்டி அமைப்பாளர்கள் வசூலிப்பார்கள். மொத்த ரூபாய் 3600ல் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2000, 2ம் இடத்தை அடைபவர்களுக்கு ரூ. 1000, போட்டியை நடத்துபவர்களுக்கு ரூ. 600 என்று வழங்குவார்கள். தோல்வியடையும் அணிகளுக்கு எதுவும் கிடையாது. இவ்வாறு விளையாடுவது கூடுமா?
உடற்பயிற்சி, விளையாட்டு என்ற அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுவதில் தவறில்லை. எனினும் நீங்கள் குறிப்பிடுவது போன்று வெற்றி பெறுபவர்களுக்கு, தோற்றவர்கள் பந்தைக் கொடுக்க வேண்டும் என்பது கண்டிப்பாக சூதாட்டம் என்ற வகையில் தான் சேரும். சூதாட்டம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயலாகும்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் 5:90, 91
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பணம் வைத்துப் பந்தயம் கட்டி விளையாடும் போது, வெற்றி பெறுபவர்கள் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வதும், தோற்றவர்கள் நஷ்டம் அடைவதும் சூதாட்டம் எனப்படுகின்றது.
பணமாக இல்லாமல் கிரிக்கெட் பந்தாக இருந்தாலும் அது சூதாட்டம் தான். இதே போன்று டோர்னமெண்ட் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முறையும் தெளிவான சூதாட்டமாகும்.
வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகப் பரிசுகள் வழங்கலாம். ஆனால் அந்தப் பரிசை போட்டி நடத்துபவர்கள் தங்களது சொந்தச் செலவிலோ, அல்லது மூன்றாவது நபரோ வழங்கினால் தவறில்லை. பத்துப் பேர் சேர்ந்து பணம் போட்டு, முதலிடத்தைப் பிடிப்பவர்களுக்கு மட்டும் அந்தப் பணத்தைக் கொடுப்பதற்குப் பெயர் தான் சூதாட்டம்.
கிரிக்கெட் என்பதால் இது விளையாட்டு, பரிசு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது. இதையே சீட்டு விளையாட்டுக்குப் பொருத்திப் பார்த்தால் நீங்கள் குறிப்பிடும் முறையும் சூதாட்டம் தான் என்பதை விளங்க முடியும்.
சீட்டு விளையாட்டில் ஐந்து பேர் பணம் கட்டி விளையாடுவார்கள். தோற்பவர்கள் வெளியேறிய பின் இறுதியில் வெற்றி பெறுபவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வார். இது சூதாட்டம் எனும் போது மேற்கண்ட கிரிக்கெட் போட்டியும் சூதாட்டம் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
(பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்குக் கருணை காட்டுவாயாக.
நூல்: முஸ்லிம் 3805
இது அனைவருக்கும் பொதுவான துஆ என்றாலும் முஸ்லிமல்லாத மற்றவர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடுவதற்குத் தடை உள்ளது என்பதால் இந்தப் பிரார்த்தனையை மாற்று மதத்தவர்களுக்குச் செய்ய முடியாது. அவர்களுக்கு பரக்கத் ஏற்படவும், நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்றும், வெள்ளிக் கிழமைகளில் இந்த சூராவிற்கென்று தனிச் சிறப்பு உள்ளதாகவும் கூறுகின்றனரே! குர்ஆன், ஹதீஸில் இது பற்றி ஏதேனும் குறிப்புள்ளதா?
பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அது'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5011, 3614, முஸ்லிம் 1325,திர்மிதி 2810,அஹ்மத் 17776
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெரும் குழப்ப வாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.
நூல்: முஸ்லிம் 1475,திர்மிதி 2811,அபூதாவூத் 3765,அஹ்மத் 20720
இவையே கஹ்ஃப் எனும் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களில் சரியான ஹதீஸ்களாகும். இவை தவிர மற்ற அனைத்து செய்திகளும் குறையுடைய, பலவீனமான செய்திகளாகவே அமைந்துள்ளன.
வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது தொடர்பாக ஹதீஸ் நூற்களில் இடம் பெறும் செய்திகளும் ஆதாரப்பூர்வமானவையாக இல்லை.
நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?
நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்து ஹதீஸ் உள்ளது.
"இந்த விரலிலும் இந்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'' என்று அலீ (ரலி) அவர்கள் கூறி விட்டு, நடு விரலையும், ஆட்காட்டி விரலையும் குறிப்பிட்டார்கள்.
குர்ஆனின் சில சூராக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?
மன்ஜில் என்ற நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த சூராவை ஓதினால் இன்ன நோய் குணமாகும், செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற கருத்தில் ஆதாரமற்ற செய்திகள் ஏராளமாக சமுதாயத்தில் உலவி வருகின்றன. இவற்றிற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் கிடையாது.
திருக்குர்ஆனில் நோய் நிவாரணம் இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.
நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு அது நஷ்டத்தையே அதிகப்படுத்தும்.
அல்குர்ஆன் 17:82
தேள் கடித்த ஒருவருக்கு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி மந்திரித்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்த செய்தி புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூற்களில் பதிவாகியுள்ளது.
இது தவிர குறிப்பிட்ட சூராவில் குறிப்பிட்ட இன்ன நோய்க்கு நிவாரணம் இருக்கிறது என்று ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.
"யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. "அலிஃப் லாம் மீம்' என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து'' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: திர்மிதீ (2835)
இது தவிர சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூரத்துல் ஃபாத்திஹா, கஹ்ஃப், குல்ஹுவல்லாஹு அஹத், ஃபலக், நாஸ் போன்ற அத்தியாயங்களுக்கும் ஆயத்துல் குர்ஸீ போன்ற சில வசனங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில சிறப்புகளைக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளில் பெரும்பாலும் மறுமைப் பயன் தொடர்புள்ளவை தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று ஹதீஸ் உள்ளதா? எவ்வாறு ஓதிப் பார்ப்பது கூடாது? நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் அல்முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) அத்தியாயங்களை ஓதி விட்டுத் தூங்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது போன்று மரணத் தருவாயில் வேதனை குறைவதற்காக ஓதிப் பார்க்க அனுமதியுள்ளது. இவ்வாறு ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?
ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று எந்த ஹதீசும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நோய்க்காக குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதை அனுமதித்துள்ளார்கள். ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். எனவே இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
மறுமையில் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, ''அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மிஃராஜின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப் பட்டனர். அப்போது இறைத் தூதர்களில் ஓரிருவருடன் ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத் தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காண்பிக்கப்பட்டது. நான், "இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?'' என்று கேட்டேன். அப்போது, "இல்லை! இது மூஸாவும் அவருடைய சமுதாயமும்'' என்று சொல்லப்பட்டது.
அப்போது, "அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பின்னர், "அடிவானங்களில் இங்கும் பாருங்கள்'' என்று சொல்லப்பட்டது. அப்போது வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் கண்டேன். "இது உங்கள் சமுதாயம்! விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இதில் அடங்குவர்' என்று சொல்லப்பட்டது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். மக்கள் விவாதிக்கத் துவங்கினார்கள். "நாம் தான் அவர்கள்; நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனது தூதரைப் பின்பற்றினோம். அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள்; நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று சொன்னார்கள்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே அவர்கள் புறப்பட்டு வந்து "அவர்கள் யாரெனில் அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள். பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள். (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் நானும் ஒருவனா?'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, "அவர்களில் நானும் ஒருவனா?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டு விட்டார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5705
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகள், உறங்கும் போது முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) சூராக்களை ஓதுதல் போன்றவை இதில் அடங்காது. ஏனெனில் "ஓதிப் பார்த்தல்' என்பது ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டு, அது குணமடைவதற்காக மந்திரிப்பதாகும்.
இறைவனுக்கு இணை கற்பிக்காமல் குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதற்கு நபியவர்கள் அனுமதித்துள்ளதால் அதைச் செய்வது குற்றமில்லை. ஆனால் அது போன்று எதையும் செய்யாமல் இறைவன் மீதே முழுமையாக தவக்கல் வைக்கக் கூடியவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு அந்தஸ்து தான் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் பாக்கியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் ஓதிப் பார்த்தாலும் இந்தப் பாக்கியம் கிடைக்காது என்றால் அதை ஏன் நபியவர்கள் கற்றுத் தர வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.
ஓதிப் பார்க்க விரும்புவோர் எதைக் கொண்டு ஓதிப் பார்க்க வேண்டும்? என்று கற்றுத் தருவது நபி (ஸல்) அவர்களின் பொறுப்புகளில் உள்ளது என்பதால் அதைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதே சமயம் ஓதிப் பார்க்காமல் இருப்பது சிறந்த செயல் என்பதை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.
பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும். அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது?
பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 15036, 15037
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு குழந்தையை முஸ்லிமாகவோ அல்லது முஸ்லிமல்லாதவராகவோ மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர் தான்.
ஏனெனில் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத் திலிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர். கடவுள் கொள்கையையும் அவர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
அந்த அடிப்படையில் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெற்றோர் முக்கியக் காரணமாக அமைந்தாலும் மனிதனுக்கென்று பகுத்தறிவை இறைவன் வழங்கியுள்ளான். எல்லா விஷயங்களிலும் அவன் பெற்றோர் சொன்னதை மட்டுமே பின்பற்றுவதில்லை. எது தனக்கு நன்மை தரும் என்பதை ஆராய்ந்து அதைத் தான் எடுத்துக் கொள்கிறான்.
இது போன்றே கடவுள் கொள்கையிலும் மனிதன் சிந்தித்து, எது உண்மையான மார்க்கம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.
திருக்குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் வானம், பூமி, மலைகள், காற்று, மழை, சூரியன், சந்திரன், கோள்கள் போன்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கூறி விட்டு, இவற்றையெல்லாம் படைத்தது யார் என்பதைச் சிந்திக்கச் சொல்கிறது. இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால் அவற்றைப் படைத்தது ஓர் இறைவன் தான் என்பதை மனிதன் அறிந்து கொள்வான். இவ்வாறு சிந்தித்து இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை வாரிசு அடிப்படையிலோ அல்லது பெயர் அடிப்படையிலோ யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது. முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள், முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இன்று இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இவர்களெல்லாம் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தாலும் இறைவனின் பார்வையில் இவர்கள் ஒரு போதும் முஸ்லிம்களாக முடியாது.
எனவே இஸ்லாம் என்பது பிறப்பு அடிப்படையில் ஏற்படுவதல்ல. ஒரு மனிதனிடம் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!
அல்குர்ஆன் 47:19
வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சொல்லுங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை. மாறாக, அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.
ஃபஅலம் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றான். சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளுங்கள் என்பது இதன் கருத்து! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று வாயளவில் சொன்னால் போதாது. அதை விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தவிர கடவுள் இல்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
எனவே முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது. அதே போல் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் அந்த மார்க்கத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இந்துவாக இருந்தவர்கள் தான். இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான்.
எனவே பெற்றோர்கள் தங்களது மார்க்கத்தைப் பிள்ளைகளுக்குப் போதித்தாலும், இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து, எந்த மார்க்கம் உண்மையானது என்பதை விளங்கி ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும்.
ஒரு கடவுள் தான் இருக்க முடியும்; அந்த ஓரிறைக் கொள்கையைப் போதிக்கின்ற இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை முஸ்லிம்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர். அவர்கள் அந்தப் பணியை முழுமையாகச் செய்யாததால் தான் இது போன்ற கேள்விகள் எழுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடிதம் எழுதும் போது நாம் "அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும்; நபி (ஸல்) அவர்கள் இப்படித் தான் எழுதியுள்ளார்கள் என்று என் கணவர் கூறுகிறார். இது சரியா?
பொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனினும் கடிதங்களின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாக எழுதியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு எழுதி அனுப்பிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அனுப்பினார்கள். (பார்க்க: புகாரி 7, 2941)
சுலைமான் நபியவர்கள் ஸபா நாட்டு அரசிக்குக் கடிதம் எழுதிய போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
"பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க கடிதம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! என்று அதில் உள்ளது'' என்று அவள் கூறினாள்.
அல்குர்ஆன் 27:30, 31
எனவே கடிதங்கள் எழுதும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று துவங்குவது தான் சரியானதாகும்.
இறைவன் தன் திருமறையில் அந்நூர் அத்தியாயத்தில், "இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்'' என்று கூறுகிறான். பெண்கள் தொழுகிறார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. அப்படி என்றால் பெண்கள் பள்ளியில் தொழ அல்லாஹ் அனுமதிக்கவில்லையா?
(இறை) இல்லங்கள் உயர்த்தப் படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
அல்குர்ஆன் 24:36,37
இந்த வசனத்தில் ஆண்கள் என்று குறிப்பிடப்படுவதால் பெண்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்து ஏராளமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெண்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் கருத்து என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். எனவே இந்த வசனம் நீங்கள் கூறும் அந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை அறியலாம்.
ஆண்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்? என்ற கேள்வி எழலாம். பள்ளிக்கு வரும் அனைவரைப் பற்றியும் இந்த வசனம் பேசவில்லை. வணிகமோ, வர்த்தகமோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுக்காத ஆண்களும் அதில் இருக்கிறார்கள் என்று தான் கூறுகிறது.
பொதுவாக ஆண்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள்; சில சமயங்களில் வியாபாரம் என்பது இறை நினைவை விட்டும் திசை திருப்பி விடும். இந்த நிலை ஏற்படாமல் மறுமையை அஞ்சி தொழுகை, ஸகாத் போன்றவற்றை நிறைவேற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பதையே இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? இது மாற்று மதப் பழக்கமாக உள்ளது. ஆனால் எனக்குக் கண்களை மூடிக் கொண்டு கேட்டால் தான் இக்லாஸ் உள்ளது. விளக்கவும்.
கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். கண்களை மூடிக் கொண்டால் தான் உங்களால் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை.
நமக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களை மாற்று மதத்தவர்கள் செய்வது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை