அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 7 ஏப்ரல், 2011

விபரீத முடிவு..



தற்கொலை என்பது மற்ற குற்ற நிகழ்வுகளைப்போல் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் ஒருவரது தற்கொலைக்குக் காரணமாகிவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, புகுந்த வீட்டில் கொடுமை தாளாமல் மணமான பெண் தற்கொலை, தொழில் தோல்வி, காதலில் தோல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் தொல்லை என்று கணக்கில் அடங்காத காரணங்களால் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில் ஜெர்மனியில் தலைசிறந்த கால்பந்து வீரர் ராபர்ட் என்கே தன் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் கால்பந்து விளையாட்டில் முன்போல ஜொலிக்க முடியாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டின் கால்பந்து வீரர் சத்தியன், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது மறக்க முடியாத சம்பவம்.

மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு, ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.

இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்னை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விளைவுகளைச் சிந்திக்காமல் மனதுக்குப் பட்டதை வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.

படிப்பறிவில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளம். ஆனால் அங்கு தற்கொலைகள் அதிகம். ஆண்டுக்கு சுமார் 9,000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 2007, 2008-ம் ஆண்டுகளில் முறையே 13,811, 14,425 நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை கணக்கை எடுத்துக் கொண்டால் முந்தைய 10 ஆண்டுகளைவிட சுமார் 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.
இந்தியாவில் 2007-ம் ஆண்டு 1,22,637 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-ம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,25,017 ஆகும். சராசரி ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 10 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

எதற்காக தற்கொலை என்ற விபரீத முடிவு எடுக்கப்படுகிறது, காரணங்கள் யாவை, சுற்றுப்புறப் பாதிப்புகள், படிப்பறிவின் தாக்கம் போன்ற நிலைகளிலிருந்து இந்தப் பிரச்னை ஆராயப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கத்தை எடுத்துக்கொண்டால் (2008-ம் ஆண்டு மக்கள்தொகை 115.3 கோடி) 1 லட்சம் மக்கள்தொகைக்கு தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை 10.8-ல் இருந்து 2007, 2008-ம் ஆண்டுகளில் மாற்றமில்லை.

அறிவாற்றலிலும், கலைத்திறனிலும் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்குவங்கம். அந்த மாநிலத்தில் தான் 2008-ம் ஆண்டு எல்லா மாநிலங்களையும்விட அதிகமாக 14,852 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் 56.2 சதவிகிதம், மற்ற 23 மாநிலங்கள் மைய அரசுப் பகுதிகளில் 43.8 சதவிகிதம் என்ற புள்ளிவிவரம் நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்த தற்கொலைகளில் 3.3 சதவிகிதம் எண்ணிக்கையில் 4,125 மட்டுமே நிகழ்ந்துள்ளது.

தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 14,000 தற்கொலைகள் ஆண்டொன்றுக்கு நிகழ்கின்றன. இது மொத்த நிகழ்வுகளில் 10 சதவிகிதம் ஆகும். தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008-ம் ஆண்டு 2,396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

அதே ஆண்டில் மும்பையில் 1,111, தில்லியில் 1,107, சென்னையில் 1,319 பதிவாகியுள்ளது. சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1,353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்குக் காரணமாகி விடுகின்றன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், ஹிமாசலபிரதேசம், காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2008-ம் ஆண்டு முந்தைய ஆண்டுகளைவிட 10 சதவிகிதம் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

தற்கொலை என்றால் நமது நினைவுக்கு வருவது அபலைப் பெண்கள் மணம் முடித்து புகுந்த வீட்டில் எழக்கூடிய பிரச்னைகள் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்றுதான். சமீபத்தில் சேலையூரில் மணமான 2 ஆண்டுகளில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது வரதட்சிணை பிரச்னை காரணமாக நிகழ்ந்தது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கைக்குழந்தை வேறு உள்ளது. இருந்தும் இத்தகைய முடிவுக்கு இந்த இளம் தாய் தள்ளப்பட்டார் என்பது வேதனைக்குரியது. இந்தியவில் 2008-ம் ஆண்டு 3,038 பெண்கள் வரதட்சிணை சம்பந்தமான நிகழ்வுகளில் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2008-ம் ஆண்டு 207 மற்றும் 2009-ம் ஆண்டு 194.

இளமை என்றென்றும் இனிமை என்று போற்றப்படுகிறது. ஆனால் 15 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இது 35.7 சதவிகிதம் ஆகும். ஆண்பால், பெண்பால் என்ற அடிப்படையில் கணக்கெடுத்தால் ஆண்கள் 64 சதவிகிதம், பெண்கள் 35 சதவிகிதம். ஆனால் பதிநான்கு வயதுக்குள்பட்ட தற்கொலைப் பாதிப்புக்கு உள்ளாகிய குழந்தைகளைக் கணக்கிட்டால் 49 சதவிகிதம் சிறுவர்கள், 51 சதவிகிதம் சிறுமிகள். ஆகக்கூடி பாதிக்கப்படும் ஆண், பெண், குழந்தைகளின் மனநிலை ஒத்திருப்பது கண்கூடு.

தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும்பம் மற்றும் பொருளாதாரப் பிரச்னையால் ஆண்கள் பெருவாரியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான வரதட்சிணை பிரச்னை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்னைகளுக்குக் கணக்கில்லை.

ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் பொதுவான பிரச்னை குடும்பச் சச்சரவு. 2008-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொண்ட 1.25 லட்சம் மக்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குள்பட்டவர்கள் 10,027 இளைஞர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே காரணத்துக்காக 11,363 நடுத்தர வகுப்பினர் உயிரைவிட்டுள்ளனர்.

அறுபது வயதுக்கு மேற்பட்ட 9,230 வயோதிகர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உடல்நலக் குறைவே முக்கிய காரணம். இதில் 15 சதவிகிதம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்கம்.

இந்தியாவின் மக்கள்தொகையில் 55 சதவிகிதம் பேர் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது என்பது கசப்பான உண்மை. குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமைப் பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு.
அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.

புதன், 6 ஏப்ரல், 2011

அமெரிக்காவைத் தாக்கிய பனிச் சூறாவளி


அமெரிக்காவின் மத்திய பிரதேசத்தில் இப்போது பயங்கர பனிச் சூறாவளிக் காலம் ஆரம்பித்துள்ளது. இதனால் லூசியானா மற்றும் மிஸிசிப்பி பிரதேசங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. 

அங்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருப்பதுடன் இவ்விரு நகரங்களுக்கும் வரும் ஆயிரக்கணக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

1950 களின் பின்னர் அமெரிக்காவை தாக்கிய மிகப்பெரிய பனிச்சூறாவளி இதுவாகும். இதனால் இவ்விரு நகரங்களிலுள்ள அறுபதாயிரம் வாடிக்கை யாளர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள் ளது. 

ஒஹியோ நகரில் மட்டும் 22,000 வாடிக்கை யாளர்களுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு ள்ளது.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அமிலங்களும் அவற்றின் மூலங்களும்


1) எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
2) சிறுநீரில் உள்ள அமிலம் எது?
3) எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
4) புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
5) கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
6) புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
7) வினிகரில் உள்ள அமிலம் எது?
8) ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
9) தக்காளியில் உள்ள அமிலம் எது?
10) கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
11) பித்தநீரில் உள்ள அமிலம் எது?

விடைகள் :
1) சிட்ரிக் அமிலம்  2) யூரிக் அமிலம் 3) பார்மிக் அமிலம்
4) லாக்டிக் அமிலம் 5) பியூட்டிரிக் அமிலம்  6) டார்டாரிக் அமிலம்
7) அசிட்டிக் அமிலம்  8) மாலிக் அமிலம்
9)ஆக்ஸாலிக் அமிலம் 10) ஸ்டீயரிக் அமிலம்  11) கோலிக் அமிலம்

திங்கள், 4 ஏப்ரல், 2011

இஸ்லாத்தில் பாட்டுப்பாடுவது கூடுமா?


பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இஸ்லாம் தடை செய்கின்றது. நற்கருத்துகள் அடங்கிய பாடல்களை இசையின்றி பாடுவதற்கு மட்டுமே அனுமதியுள்ளது. பின்வரும் செய்திகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) "எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து  பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, "எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், "இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள். புகாரி (4001)
மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது
-265-
(ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.
 எனவே தவறான கருத்துள்ள பாடல்களைப் பாடுவது கூடாது. நற்கருத்துள்ள பாடல்களை மட்டுமே பாடலாம்.
இந்தச் சம்பவத்தில் சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து இசைத்ததாகக் கூறப்படுகின்றது. எனவே இசைக்கருவிகளைப் பயன்படுத்தி பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
இசைக்கருவிகளை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம். திருமணம் பெருநாள் போன்ற சந்தோஷமான நேரங்களில் மட்டும் கஞ்சிராக்களை அடித்து பாடுவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. கஞ்சிராக்களுக்கு மட்டுமே இந்த அனுமதி உள்ளது. இந்த நேரங்களில் கஞ்சிராக்கள் அல்லாத தற்காலத்தில் உள்ள புதுபுது இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது கூடாது. இதைப் பின்வரும் சம்பவமும் விளக்குகின்றது.
ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது. நூல்: முஸ்லிம் 1619
சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
அதே நேரத்தில் பெருநாள் தினத்தில் மட்டும் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் இவ்வாறு செய்பவர்களைத் தடுக்கக் கூடாது.
பின்வரும் செய்திகளும் நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்று கூறுகின்றது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.
புகாரி (5162)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (3841)
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ச் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)'' என்றேன். "பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன். முஸ்லிம் (4540)
நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பவளப் பாறைகள்


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.  இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும்.  இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும்.  இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன.  இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது.பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன.இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது.  இந்தியாவில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம். கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும்.கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும்.  பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள்,கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன. இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.  வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. சுனாமி வந்த போது பவளப்பாறைகள் அதிகம் இருந்ததால் தான் ராமேசுவரம் பகுதி எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது.  தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும்,கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.  கடலுக்கு அடியில் கூட்டம்,கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளை வண்ண மீன்களோடு இணைந்து பார்த்து ரசிக்க வனத்துறை கண்ணாடிப்படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் கடல் வளங்களை கண்குளிரக் கண்டு ரசிக்க முடியும்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites