அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 1 மே, 2010

ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனையில் பாகுபாடு உள்ளதே?

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ரில் வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று கேட்டுள்ளீர்கள்.
பொதுவாக இது தான் இறைவனின் ஏற்பாடு என்பது தெரிந்த பின்னர் அதில் நாம் கேள்வி கேட்கக் கூடாது. எனினும் இதற்கான விளக்கம் ஹதீஸ்களில் உள்ளது.
உலகில் ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர் தான் முதன் முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 3335
நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். தனக்குப் பின்னுள்ளவர்கள் அப்பாவத்தைச் செய்வதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறான்.
நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அந்தப் பாவங்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளான்.
எனவே இவன், தான் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.
ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னோடியாக இருந்தது. அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.
எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது சரியானது தான் என்பதை விளங்கலாம்

"இறைவனை வணங்கியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்'

"இறைவனை வணங்கியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்'' என்பதுவும் நபிமொழிகளில் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றியும் உள்ளதே இது முரண்பாடில்லையா ?
? 25:64 வசனத்தில் நல்லடியார்களைப் பற்றிக் கூறும் போது, "இறைவனை வணங்கியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. சில நபிமொழிகளில் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பவர்கள் இந்த நபிமொழிக்கு மாறுபடுகின்றார்களே! விளக்கவும்.
அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள். (அல்குர்ஆன் 25:64)
திருக்குர்ஆனில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும். இந்த வசனத்தில் இரவைக் கழிப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ள வேறு சில வசனங்கள் இரவின் ஒரு பகுதியில் நின்று வணங்குவதைப் பற்றியே குறிப்பிடுகின்றன.
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)  (அல்குர்ஆன் 3:17)
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.  (அல்குர்ஆன் 51:18)
இந்த வசனங்களும் நல்லடியார்களைப் பற்றியே கூறுவதால் 26:64 வசனத்திற்கு இவை விளக்கமாக அமைந்துள்ளன. இந்த வசனங்களில் இரவு முழுவதும் வணங்குமாறு இறைவன் கூறவில்லை. இரவின் ஒரு பகுதியில், குறிப்பாக இரவின் கடைசிப் பகுதியில் வணங்குவதைத் தான் சிறப்பித்துக் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் மூன்று பகுதிகளில் மூன்றாவது பகுதியில் வணங்குவதைப் பற்றி மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இதை விளங்கிக் கொண்டால் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களுக்கும் இந்த வசனங்களுக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை விளங்கலாம்.

நபிமார்களின் உயிர் அவர்களிள் சம்மத்துடன்தான் மலக்குல் மவ்தினால் எடுக்கப்படுமா ?

 சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா?
எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை
இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் உள்ளது. எனினும் நபிமார்களின் சம்மதம் கேட்டு உயிரைக் கைப்பற்றுவதாக இல்லை.
"(இறுதியாக) நோயுற்று விடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலகவாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின் போது அவர்களின் குரல் கடுமையாகக் கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 4586
இந்த ஹதீஸில் "நோயுற்று விட்ட இறைத்தூதருக்கு உலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, மரணிக்கும் தருவாயில் வாழ்நாளை நீட்டிக்கும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகின்றான் என்பதை அறிய முடியும்.
நபிமார்கள் சம்மதித்தால் தான் உயிர் கைப்பற்றப்படும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை. மாறாக நபிமார்களின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர்கள் விரும்பினால் மேலும் சிலகாலம் உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது மறுமையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அல்லாஹ் வழங்குகின்றான். இதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

பெண்களுக்கு மாதவிடாயை ஏற்படுத்தியது இறைவனே ! அப்படியிருக்க நபியவர்கள் பெண்கள் அமலில் குறைவானவர்கள் என்று கூறுவது முரண்பாடில்லையா ?

 பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டு தொழுகை, நோன்பை விடுவதால் அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது என்று அல்லாஹ் தானே கூறுகின்றான். பின்னர் எப்படி அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவுள்ளவர்களாக ஆவார்கள்?
ஷிபானா பேகம், தஞ்சாவூர்
மாதவிடாய் காலத்தில் நோன்பு, தொழுகைகளை விட வேண்டும் என்று அல்லாஹ்வே கூறியிருக்கும் போது அதை மார்க்கக் கடமையில் குறை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது முரண்பாடாகத் தெரிவதால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.
ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திட-ற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்ற போது, "பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரக வாசிகüல் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு "நீங்கள்அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு "அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன?'' என்று பெண்கள் கேட்டனர். "ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம் என அப்பெண்கள் பதில் கூறினார்கள். "அது தான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகின்றது. "ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் ஆம் என பெண்கள் பதில் கூறினார்கள். "அது தான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ர-),  நூல்: புகாரி  304
இந்த ஹதீஸில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் நோன்பு, தொழுகைகளை விடுவதற்காக அல்லாஹ் குற்றம் பிடிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.  மாறாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயற்கையாகவே அமைந்துள்ள வித்தியாசத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகின்றார்கள். சாட்சியத்தில் இரண்டு பெண்களின் சாட்சி ஓர் ஆணின் சாட்சிக்குச் சமம் என்பதையும் சேர்த்துக் கூறுவதிலிருந்து இதை அறியலாம்.
பொதுவாக ஒரு கடமையான தொழுகையை விடுவது பாவம் என்ற நிலையில் மாதவிடாய் சமயத்தில் தொழுகையை விடுவதால் அத்தகைய பாவம் ஏற்படாது. ஏனென்றால் அல்லாஹ் தான் அந்த சமயத்தில் தொழக்கூடாது என்று கூறியுள்ளான். ஆனால் அதே சமயம் ஆண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இருவருடைய வணக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாரும் மறுக்க முடியாது. இதைத் தான் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது என்று விளங்கிக் கொண்டால் முரண்பாடில்லை.

ஃபஜ்ர் தொழுகையைப் பேணாதவர் அழைப்புப் பணி செய்யலாமா ?

 எங்களிடம் சில குறைபாடுகள் உள்ளன. நாங்கள் அழைப்புப் பணியில் ஈடுபடலாமா? உதாரணமாக, வேலைப் பளுவின் காரணமாக சில நேரங்களில் ஃபஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்க முடியவில்லை. இதைக் காரணமாக வைத்து, நாங்கள் குர்ஆன் ஹதீஸைச் சொல்லும் போது, நீங்கள் முதலில் முழுமையாகத் திருந்துங்கள் என்று கூறி கடிந்து பேசுகின்றனர். இதை அலட்சியப் படுத்தி விட்டு தொடர்ந்து அழைப்புப் பணி செய்யலாமா? அல்லது முழுமையாகத் திருந்திய பிறகு தான் அழைப்புப் பணி செய்ய வேண்டுமா?
பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹீம், அபுதாபி.
அழைப்புப் பணி செய்பவர்களின் ஒழுக்க வாழ்வு, நேர்மை, நாணயம், வணக்க வழிபாடுகள் அனைத்தும் மக்களால் கண்காணிக்கப் படுவது இயற்கையே! எனவே சாதாரண மக்களை விட அழைப்புப் பணி செய்பவர்கள் மிகவும் கவனமாகவும், பேணுதலாகவும் நடக்க வேண்டும். நாம் சொல்லும் செய்தி எவ்வளவு தான் சரியானதாக இருந்தாலும் நம்மிடம் சில குறைபாடுகள் இருந்தால் அந்தச் செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மற்றவர்களை விட அழைப்பாளர்கள் மிகவும் பேணுதலாக நடக்க வேண்டும்.  குறிப்பாக அமல்கள் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
அல்லாஹ்வை நோக்கி அழைத்து, நல்லறம் செய்து, நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (அல்குர்ஆன் 41:33)
இந்த வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி அழைப்பவர் நல்லறம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அல்லாஹ் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 2:44)
நாம் சரியாக நடந்து கொண்டு அடுத்தவருக்கு அறிவுரை செய்ய வேண்டும் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது. இது போல் ஏராளமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.  எனவே அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் இயன்ற வரை சரியாக நடக்க முயற்சிக்க வேண்டும்.
எனினும் மனிதன் என்ற முறையில் சில குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் தான் என்பது நபிமொழி.  இதை எப்படி  எடுத்துக் கொள்வது?  உதாரணமாக ஃபஜ்ர் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே எடுத்துக் கொள்வோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்து விடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், "இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!'' என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமக்கு விதிக்கப் பட்டிருந்த அளவுக்குத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உறங்கினார்கள்.  ஃபஜ்ர் நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை திசையை முன்னோக்கிய படி தமது வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்த படியே கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும் வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், "பிலாலே!'' என்று அழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களை தழுவிக் கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டது'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்'' என்று கூற, உடனே மக்கள் தங்கள் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி)யிடம் இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும், "தொழுகையை மறந்து விட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், "என்னை நினைவு கூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக' (அல்குர்ஆன் 20:14) என்று கூறுகின்றான்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 1097
நாங்கள் ஒரு இரவு நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலாமே?'' என்று கேட்டனர். "நீங்கள் தொழுகையை விட்டும் உறங்கி விடுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் (ரலி), "நான் உங்களை எழுப்பி விடுகின்றேன்'' என்று கூறியதும் அனைவரும் படுத்துக் கொண்டனர். பிலால் (ரலி) தம் முதுகைத் தமது கூடாரத்தின் பால் சாய்த்துக் கொண்டார். அவரையும் மீறி உறங்கி விட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் விழித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?'' என்று கேட்டார்கள். "இதுபோன்ற தூக்கம் எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார். "நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பிய போது கைப்பற்றிக் கொள்கிறான். அவன் விரும்பிய போது திரும்பவும் ஒப்படைக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, "பிலாலே! எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக!'' என்று கூறினார்கள். (பின்னர்) உளூச் செய்து விட்டு, சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்ட போது தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),  நூல்: புகாரி 595
இந்த ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகைக்கு எழுப்புவதற்காக பிலால் (ரலி)யை நியமித்து விட்டு உறங்குகின்றார்கள். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு விழிக்காமல் அனைவரும் உறங்கி விடுகின்றார்கள். விழித்தவுடன் சுப்ஹ் தொழுது விட்டு, உறக்கம், மறதி ஆகியவற்றால் தொழுகையை விட்டுவிட்டால் நினைவு வந்ததும் தொழுவதற்கு அனுமதியும் வழங்குகின்றார்கள்.
இது போன்று தொழுகைக்கு எழுவதற்கான முயற்சிகளைச் செய்து, அதையும் மீறி எழுந்திருக்கவில்லை என்றால் அது குற்றமில்லை. உதாரணமாக, ஃபஜ்ர் தொழுகையின் நேரத்திற்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்து, அலாரம் அடித்தும் எழுந்திருக்கவில்லை என்றால் அல்லது தூக்கத்தில் அலாரத்தை அணைத்து விட்டுப் படுத்து விட்டோம் என்றால் இவை நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்கள்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (அல்குர்ஆன் 2:286) என்ற வசனத்தின் அடிப்படையில் இதற்காக அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான்.  எந்த விஷயத்திற்கு அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டானோ அந்த விஷயத்தில் மக்கள் குறை கூறுவார்களே என்றும் அஞ்சத் தேவையில்லை.
அதே சமயத்தில் படுக்கும் போதே நாளைக்கு சுப்ஹ் தொழுகை சந்தேகம் தான் என்ற முடிவோடு படுப்பது, யாரேனும் எழுப்பினால் கூட அலட்சியம் செய்து விட்டு உறங்குவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.  இது போன்ற நிலை சாதாரண மக்களிடமும் இருக்கக் கூடாது.  அழைப்பாளரிடத்தில் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

அகீகாகாவில் பிள்ளையின் தலைமுடியை மழிக்கவும் என்பது சாத்தியமா ?

ஏனெனில் சிறு பிள்ளையின் தலையில் பிளேடு வைக்க முடியுமா ?
? ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் ஏழாம் நாள் அகீகா கொடுத்து பெயர் சூட்டி, தலைமுடியை மழிக்க வேண்டும் என்று புகாரி முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிகவும் எளிதாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமாகும்?

அகீகாவுடன் தலைமுடி மழிப்பது தொடர்பான செய்தி தாங்கள் குறிப்பிடுவது போல் புகாரி, முஸ்லிமில் இல்லை. முஸ்னத் அஹ்மதில் 19337வது ஹதீஸாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் அதையும் மீறி இந்த ஹதீஸைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று மார்க்கம் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.
"ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.  "எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்'' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே குழந்தைக்கு ஏதும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று பயந்து ஏழாம் நாளில் தலைமுடியை மழிக்காமல் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் தவறில்லை.

சிலை வணங்குபவரை அநியாமாகக் கொன்றால் கொலை செய்யப்பட்டவருக்கு சொர்க்கமா ? நரகமா ?

 சிலையை வணங்கக் கூடிய ஒருவரை அநியாயமாக யாரேனும் கொலை செய்து விட்டால் கொல்லப்பட்டவருக்கு சொர்க்கமா? நரகமா? கொலை செய்தவருக்குத் தண்டனை என்ன?
அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் (அல்குர்ஆன் 5:72)
இணை வைப்பவர்களுக்கு சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டதாக அல்லாஹ் கூறுவதால் கொல்லப்பட்டவர் சுவனம் செல்வார் என்று கூற முடியாது.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)
இந்த வசனத்தின் அடிப்படையில் கொலை செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் அதற்குரிய தண்டனை அவருக்கு உண்டு.
"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். (அல்குர்ஆன் 5:32)
ஒரு மனிதரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதரையும் கொலை செய்வதர் போலாவார் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  முஸ்லிம், முஷ்ரிக் என்று பிரித்துக் கூறாமல் பொதுவாக மனித உயிரைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது.  இதன் அடிப்படையில் எந்த உயிரையும் கொல்வது கடும் குற்றம் தான்.  எனவே கொல்லப்பட்டவர் முஸ்லிமாக இருந்தாலும் இணை வைப்பவராக இருந்தாலும் கொன்றவருக்கு நிச்சயமாக தண்டனை உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாதா ?

 மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது என்று நபிமொழிகள் உள்ளதாக அறிகின்றோம்.  ஆனால் குர்ஆன் 2:223 வசனமும் புகாரி 4528 ஹதீசும் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றதே?
எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு
யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப் பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : அபூதாவூத் 1847, அஹ்மத் 3356
யார் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),  நூல் : திர்மிதீ 1086
மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதை இந்த ஹதீஸ்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன.  இது தடை செய்யப்பட்ட செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  புகாரியின் 4528வது ஹதீஸில் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வது தொடர்பாகக் கூறப்படவில்லை.  அதன் பொருளை தவறாக விளங்கிக் கொண்டதால் இந்தக் கேள்வி எழுகின்றது.
ஒருவர் தம் மனைவியிடம் பின்னாலிருந்து (பெண்ணுறுப்பில்) உடலுறவு கொண்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள்.  எனவே "உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்!'' என்ற (2:223வது) வசனம் இறங்கியது.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல் : புகாரி 4528
இந்த ஹதீஸில் பின் பக்கத்திலிருந்து என்பதைக் குறிக்க "மின் வராயிஹா'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இது மலத் துவாரத்தைக் குறிப்பதல்ல.  மாறாக பின் பக்கம் (இஹஸ்ரீந்ள்ண்க்ங்) என்பதையே குறிக்கும்.
மனைவியின் பின் புறத்தில் இருந்து கொண்டு பெண்ணுறுப்பில் புணரக் கூடாது என்றும், அவ்வாறு புணர்ந்தால் பிறக்கும் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்றும் யூதர்கள் நம்பி வந்தனர்.  இதை மறுக்கும் விதமாக 2:223 வசனம் அருளப் பட்டது.  இதைத் தான் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றதே தவிர மலத்துவாரத்தில் புணர்வதை இந்த ஹதீஸ் அனுமதிக்கவில்லை.

காதுகுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா ? 4:119 வது வசனம்தான் அதைத் தடுக்கிறதா?

திருக்குர்ஆனின் 4:119 வசனத்தில் "அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள்'' என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?
இஸ்லாமிய பொது நூலகம், வடகரை.
காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வது என்பதை யாரும் மறுக்க முடியாது.  பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது.  எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.  (அல்குர்ஆன் 4 : 119)
இந்த வசனத்தை நன்கு சிந்தித்தால் இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புரியும்.  இவ்வாறு படைப்பினங்களின் கோலத்தை மாற்றுவது ஷைத்தானுடைய முக்கிய இலக்காக அமைந்துள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் இரண்டு வகை உள்ளது.  ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தடுக்கப் பட்ட செயலாகும்.  ஆனால் அதே சமயம் பொதுவான மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக அமைந்த, உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரி செய்வதற்காக சர்ஜரி செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.  இதற்கான ஆதாரம் வருமாறு.
அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது.  எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன்.  அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது.  அதனால் நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அர்ஃபஜத் பின் அஸ்அத் (ரலி)
நூல்கள் : திர்மிதீ 1692, அபூதாவூத் 3696

பேய் பிசாசு உண்டா?

 பேய் பிசாசு உண்டா? சிலர் இல்லை என்கிறார்கள். சிலர் ஷைத்தான் தான் பேய் பிசாசாக மனிதன் மேலாடும் என்கிறார்கள்.  குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
ஏகத்துவ வாசகர், கடையநல்லூர்
! பேய் பிசாசைப் பற்றி முஸ்லிம்களிடம் இருவிதமான நம்பிக்கைகள் உள்ளன.  இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள் என்பது முதல் நம்பிக்கை.
இறந்தவர்களின் ஆவி திரும்ப உலகுக்கு வர முடியாது,  ஆனால் ஷைத்தான் மனிதனிடம் மேலாடுவான்.  அது தான் பேய் எனபது இரண்டாவது நம்பிக்கை.
இந்த இரண்டு நம்பிக்கைகளுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானவையாகும்.  பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றைஅவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட் டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 39:42)
இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.  இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.  இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது. 
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் 23:99, 100)
நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.  அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும் என்று இந்த வசனம் கூறுகின்றது.  நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால், மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப் படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். 
இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.
உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப் படும்.  சொர்க்க வாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப் படும்.  நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப் படும்.  கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி 1290, 3001, 6034
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் அடக்கம் செய்யப் பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள்.  (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள்.  "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார்.  "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள்.  பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப் படும்.  பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.
நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார்.  அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.
இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான்.  அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள்.  அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும்.  இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப் பட்டுக் கொண்டே இருப்பான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : திர்மிதீ 991
இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன.  எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.
ஷைத்தான் தான் பேயாக மனிதர்கள் மேலாடுகின்றான் என்பது பேய் குறித்த இரண்டாவது வகை நம்பிக்கை.  இந்த வகையினர் ஷைத்தான் குறித்த வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, பேய் பிடித்தல் என்றால் ஷைத்தானின் வேலை! எனவே நாங்கள் மந்திரித்து பேயை விரட்டுகின்றோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.  தாயத்து தகடு என்று மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் லெப்பைமார்கள், தங்கள்மார்கள் இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
"ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போல் வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதீ 2914
ஆதமுடைய மக்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான் என்ற நபிமொழி புகாரியில் (1897, 1894, 1898, 2870, 3039, 5751, 6636) இடம் பெற்றுள்ளது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். (அல்குர்ஆன்2:275)
இந்த ஹதீஸ்களையும் வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி மனிதனை ஷைத்தான் தீண்டுவதால் அவனுக்குப் பேய் பிடிக்கின்றது என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள்.  இதுவும் அடிப்படையற்ற வாதமாகும்.  ஏனெனில் மேற்கண்ட ஹதீஸ்களில் ஆதமுடைய மக்கள் அனைவரிடமும் ஷைத்தானின் ஆதிக்கம் உள்ளது என்று தான் குறிப்பிடுகின்றது.  அப்படியானால் உலகிலுள்ள அனைவருக்கும் பேய் பிடித்திருக்க வேண்டும்.  இந்த ஹதீஸ்களிலிருந்து இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஷைத்தான் பேயாக வந்து மனிதர்களைப் பிடிப்பான் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  ஷைத்தான் என்ற படைப்பைப் பற்றிக் கூறும் இஸ்லாம் அந்த ஷைத்தானின் வேலை என்ன என்பதையும் கூறுகின்றது.  மனிதனை வழி கெடுப்பது தான் ஷைத்தானின் வேலையே தவிர மனிதனுடைய அறிவை நீக்கி அவனைப் பைத்தியத்தைப் போல் ஆக்குவது அவனது வேலை இல்லை.  அதற்கு அவனுக்கு அதிகாரமும் இல்லை.  மேற்கண்ட நபிமொழியே இதற்குப் போதுமான சான்றாகும்.  ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும் ஒரு ஷைத்தானும் இருக்கின்றார்கள் என்று மட்டும் அந்த ஹதீஸில் கூறப்படவில்லை.  மாறாக, ஷைத்தான் எவ்வாறு தீண்டுவான் என்பதையும் சேர்த்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"ஷைத்தானின் தாக்கம் என்பது தீமையில் ஆர்வமூட்டுவதும், சத்தியத்தை நிராகரிப்பதுமாகும்'' என்பது திர்மிதீ ஹதீஸின் பிற்பகுதியாகும்.  இதையும் சேர்த்து வாசிக்கும் போது ஷைத்தான் மனிதர்களை வழி கெடுப்பான் என்பது தான் இதன் பொருளே தவிர மனிதன் மேல் ஆடி, மென்டல் ஆக்குவான் என்பதல்ல.
வானவர் நல்ல விஷயங்களைச் செய்யுமாறு மனிதனைத் தூண்டுவார்.  ஷைத்தான் கெட்ட விஷயங்களைச் செய்யுமாறு தூண்டுவான்.  இதில் மனிதன் தனது சுய சிந்தனையுடன் தான் இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுக்கின்றான்.  ஷைத்தானுக்குக் கட்டுப்படுபவன் தீய காரியங்களைச் செய்கின்றான்.  வானவருக்குக் கட்டுப்படுபவன் நல்ல காரியங்களைச் செய்கின்றான்.  இதைத் தான் மேற்கண்ட நபிமொழி கூறுகின்றது.  ஷைத்தானுக்குக் கட்டுப்பட்ட மனிதன் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் இழந்து பைத்தியமாகி விடுவதில்லை என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  எனவே ஷைத்தான் தான் பேயாக மாறி மேலாடுகின்றான் என்பது குர்ஆன் ஹதீசுக்கும் அறிவுக்கும் பொருந்தாத வாதமாகும்.
 2:275 வசனத்தில் ஷைத்தான் தீண்டியவன் என்று கூறப்படுவதற்கு ஆகஸ்ட் இதழ் கேள்வி பதில் பகுதியில் விளக்கமளிக்கப் பட்டுள்ளதைப் பார்க்கவும்.

தான் செய்யாததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னால் தவறா ?

 ஒருவர் ஓரளவு குர்ஆன் ஹதீஸ்களைத் தெரிந்து வைத்துள்ளார்.  அவர் மற்றவர்களுக்கும் இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றார்.  ஆனால் அவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்தவில்லை.  தான் செய்யாவிட்டாலும் அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம் என்று வாதாடுகின்றார். இது சரியா?

! தான் செய்யாததை அடுத்தவர்களுக்கு மட்டும் சொல்வது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும்.
நம்பிக்கை கொண்டோரே!  நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?  நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.  (அல்குர்ஆன் 61:2,3)
இத்தகையவர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார்.  அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும்.  கழுதை செக்கைச் சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார்.  அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, "இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், "நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்.  ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை.  தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்.  ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று உஸாமா பின் ஸைத் (ர-) அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி 3267

நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா ? குர்ஆனில் சில வசனங்கள் சூனியத்ûû வலியுறுத்துவதாகத் தெரிகிறதே ?

 ஏவல், பில்-, சூனியம் போன்றவற்றை யாரும் யாருக்கும் செய்ய முடியாது என்று நம்புகின்றோம். அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் கூட இது தவறான வாதம் என்பது புலப்படும். ஆனால் இறைவன் தன் திருமறையில், "முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்'' பாதுகாவல் தேடுமாறு (அல்குர்ஆன் 113:4) கூறுகின்றானே! மேலும் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட போது தான் அல்லாஹ் இந்த 113, 114 அத்தியாயங்களை அருளி சூனியத்தி-ருந்து நிவாரணம் அடையச் செய்தான் என்று அன்வாருல் குர்ஆன் நூ-ல் கூறப்பட்டுள்ளது. எனவே 113:4 வசனத்தை விளக்கி, நபியவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதா என்பதையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.

! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதனொருவன் சூனியம் செய்ததாகவும் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டு அதன் மூலம் சூனியம் விலகியதாகவும் பரவலாக முஸ்-லிம்களால் நம்பப்படுகிறது.  எனவே இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் என்னிடம் "நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து ஒருவர் தலைமாட்டிலும், மற்றொருவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். இவருக்கு என்ன நேர்ந்துள்ளது என ஒருவர் கேட்டார். சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். சூனியம் வைத்தவன் யார் என ஒருவர் கேட்க, லபீத் பின் அஃஸம் என மற்றவர் விடையளித்தார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என ஒருவர் கேட்க சீப்பு, உதிர்ந்த தலைமுடி, பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். எந்த இடத்தில் என்று ஒருவர் கேட்க தர்வான் எனும் கிணற்றுக்குள் என்று மற்றவர் கூறினார்'' என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். அதை வெளியேற்றி விட்டீர்களா என்று நான் கேட்டேன். "இல்லை; அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கிணறு மூடப்பட்டது என்று ஆயிஷா (ர-லி) அறிவிக்கிறார்கள்.
இது புகாரி 3268-வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு மாற்றங்களுடன் புகாரியின் வேறு சில எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது.  (பார்க்க புகாரி 5763, 5765, 5766, 6063, 6391)
தமது மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலே உறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது என்று புகாரி 5769 வது ஹதீஸ் கூறுகிறது.  இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் இந்த ஹதீஸ்கள் யாவும் ஏற்கத்தக்க அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுபவை. ஆயினும் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்று கருதும் அளவுக்கு வேறு பல சான்றுகளும் கிடைக்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறியே நிராகரித்தனர். இந்தக் குற்றச்சாட்டை திருக்குர்ஆன் மறுக்கிறது.
சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.  (அல்குர்ஆன் 17:47)
"அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.  (அல்குர்ஆன் 25:8)
அநியாயக்காரர்கள் தாம் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
நபிமார்கள் பலரும் இவ்வாறு விமர்சிக்கப்பட்டதாக 26:153, 26:185, 17:101 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
நபிமார்களுக்கு குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்க முடியாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. அவ்வாறு கூறுபவர்கள் அநியாயக்காரர்கள், நிராகரிப்பவர்கள் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டனர் எனக் கூறும் ஹதீஸ்களில் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்படுகிறது. உடல் பாதிப்பையாவது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். மனநிலை பாதிப்பை சாதாரணமாகக் கருத முடியாது.
செய்யாததைச் செய்ததாகக் கூறுவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் ஈடுபட்டதாக எண்ணுவதும் கடுமையான மனநிலை பாதிப்பைக் காட்டுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட நினைவில் வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது உண்மையாக இருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வேதம், அவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திலும் இதனால் சந்தேகம் ஏற்பட்டு விடும். "இது ஏன் அந்த ஆறு மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இருக்க முடியாது'' என்ற கேள்வி எழும். ஒவ்வொரு ஹதீஸிலும் இது போன்ற கேள்விகள் எழும்.
ஆனால் இம்மார்க்கத்தை, திருக்குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் உறுதி மொழி தருகிறான். (15:9)
இவ்வேதத்தைப் பாதுகாப்பது என்றால் அதைக் கொண்டு வந்தவரின் மனநிலையை முத-லில் பாதுகாத்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலையே பாதிக்கப்பட்டால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படாத நிலை ஏற்பட்டு விடும். இதன் காரணமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.
மனிதர்களையே அல்லாஹ் தனது தூதர்களாக நியமிக்கிறான். அவர்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன் தான் அனுப்பப்பட்டனர்.
தங்களைப் போலவே மனிதராக இருப்பவர், தங்களைப் போலவே உண்பவர், குடும்பம் நடத்துபவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும் என்ற எண்ணம் தான் தூதர்களை அம்மக்கள் நம்ப மறுத்ததற்குக் காரணமாக இருந்தது.
தங்களைப் போலவே உள்ள ஒரு மனிதரை இறைவனின் தூதர் என்று மக்கள் ஏற்க மறுப்பது இயல்பானது தான் என்பதால் தான் எல்லாத் தூதர்களும் தம்மைத் தூதர்கள் என்று மெய்ப்பிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர். எந்தத் தூதரும் அற்புதம் வழங்கப்படாமல் அனுப்பப்படவில்லை.  (3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25, 64:6)
அற்புதங்கள் மூலம் தான் இறைத்தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்க முடியும் என்றிருக்கும் போது இறைத்தூதராக இல்லாதவரும், இறைவனின் எதிரிகளாக இருப்போரும் இறைத்தூதர்கள் செய்வதைப் போன்று அற்புதங்கள் நிகழ்த்தினால் இறைத்தூதர்களின் அற்புதத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். உம்மைப் போலவே உமது எதிரிகளும் செய்கிறார்களே என்று கேட்டு விடுவார்கள். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.
ஏதோ ஒரு கிணற்றில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்தது அல்லாஹ்வின் தூதரின் மனநிலையை மாற்றியது என்றால் இது மிகப் பெரிய அற்புதமே. இத்தகைய அற்புதம் நடந்திருந்தால் இதையே காரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நிராகரித்திருப்பார்கள்.
"அல்லாஹ் உங்களைத் தூதராக நியமித்ததை நாங்கள் பார்க்கவில்லை; நீங்கள் செய்து காட்டிய சில அற்புதங்கள் காரணமாகவே உங்களைத் தூதர் என நம்பினோம்; இப்போது உங்களையே புரட்டிப் போடும் அளவுக்கு உங்கள் எதிரிகள் அற்புதம் நிகழ்த்திக் காட்டிவிட்டதால் உங்களை எப்படி இறைத்தூதராக நாங்கள் ஏற்போம்'' என்று கேட்டிருப்பார்கள்.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய நிகழ்ச்சியை நடத்திக் காட்டி நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் தடம் புரளச் செய்ய மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று தெரிகிறது.
மேலும் மூஸா நபியவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை எதிரிகள் சூனியம் எனக் கூறினார்கள். சூனியக்காரர்களுடன் போட்டிக்கும் ஏற்பாடு செய்தனர்.
போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் செய்த வித்தையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது "மகத்தான சூனியத்தைச் செய்து காட்டினர்'' எனக் கூறுகிறான்.(7:116)
அவர்கள் செய்த மகத்தான சூனியத்தினால் செய்ய முடிந்தது என்ன என்பது பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது.
"அவர்கள் தமது கைத்தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களின் சூனியம் காரணமாக அவை சீறுவது போல் அவருக்குத் தோற்றமளித்தது'' என்று 20:66 வசனம் கூறுகிறது.
அவர்கள் செய்தது சூழ்ச்சி தான் என்று 20:69 வசனம் கூறுகிறது.
அவர்கள் மக்களின் கண்களை வயப்படுத்தி பயமுறுத்தினார்கள் என்று 7:116 வசனம் கூறுகிறது.
சூனியத்தின் மூலம் கண்களை ஏமாற்ற முடியுமே தவிர உண்மையில் எதையும் மாற்ற முடியாது என்பது இவ்வசனங்களின் மூலம் தெரிகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்மையாகவே மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுவது இதற்கு முரணாக அமைந்துள்ளது.
மேலும் நபிமார்கள் அற்புதங்கள் கொண்டு வந்த போது எதிரிகள் அதை சூனியம் என்று கூறினார்கள்.
(பார்க்க திருக்குர்ஆன் 5:110, 6:7, 10:2, 10:76, 15:15, 21:3, 10:77, 27:13, 28:36, 34:43, 37:15, 40:30, 46:7, 54:2, 74:24, 61:6)
நபிமார்கள் கொண்டு வந்த அற்புதங்களை சூனியம் என்று கூறி அவர்கள் மறுத்ததாக மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. சூனியம் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் தந்திர வித்தை என்று அவர்களே விளங்கியிருந்ததால் தான் இவ்வாறு கூறி அற்புதங்களை நிராகரித்தனர். உண்மையாகவே நடக்கும் அற்புதம் வேறு. சூனியம் என்னும் ஏமாற்று வித்தை வேறு என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.
இதிலி-ருந்து சூனியத்தால் உடலுக்கோ மனநிலைக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. மேற்கண்ட ஹதீஸ்கள் இதற்கும் முரணாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் என்ன செய்வது?
குர்ஆனைப் போலவே ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50க்கும் குறைவாக உள்ளன.
இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். திருக்குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இத்தகைய ஹதீஸ்களை அப்படியே ஏற்பேன் என்று கூற முடியாது.
உதாரணத்திற்காக ஒரு ஹதீஸை நாம் சுட்டிக் காட்டலாம்.
ஒரு குழந்தை அன்னியப் பெண்ணிடம் பால் அருந்தினால் பத்து தடவை அருந்தினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. அது குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்று ஆயிஷா (ரலி-) அறிவிக்கிறார்கள்.   (முஸ்லி-ம் 2634, 2635)
நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை மேற்கண்ட வசனம் குர்ஆனில் இருந்தது உண்மை என்றால் அது இன்றளவும் இருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா (ர-) கூறும் அந்த வசனம் குர்ஆனில் இல்லை.
மேற்கண்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டால் நபிகள் நாயகத்துக்குப் பின் குர்ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து வரும். இறைவனோ குர்ஆனை நாம் பாதுகாப்போம் என்கிறான். இதற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்காது விட்டு விட வேண்டும். இதை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு வந்து விடக் கூடாது.
ஸாலி-ம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ர-லி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸா-லிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது “ஸாலி-முக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும்''என்று கூறியதாக முஸ்லி-ம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.
இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸையும் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும் ஆயிஷா (ர-லி) அறிவிக்கும் அந்தச் சம்பவத்தில் பலவிதமான முரண்பாடுகளும் உள்ளன. அது இந்தக் கருத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது.
சூனியம் வைக்கப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தாமல் கிணற்றை மூடினார்கள் என்று புகாரி 5763, 3268, 5766 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
ஆனால் அப்பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) வெளியே எடுத்து அப்புறப்படுத்தியதாக புகாரி 5765வது ஹதீஸ் கூறுகிறது.
ஆட்களை அனுப்பி அப்பொருட்களை வெளியே எடுத்ததாக நஸயீ 4012-வது ஹதீஸ் கூறுகிறது.
இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசிக் கொண்டதாக புகாரியில் இடம் பெறும் ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் ஜிப்ரீல் (அலை) நபிகள் நாயகத்திடம் வந்து சூனியம் வைக்கப்பட்ட விபரத்தைத் தெரிவித்ததாக நஸயீ 4012, அஹ்மத் 4701 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
இதன் காரணமாகவும் இந்தச் செய்தியில் ஏற்படும் சந்தேகம் அதிகரிக்கின்றது.
113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தை அகற்றுவதற்காக அருளப்பட்டது என்று பல விரிவுரை நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக ஏற்கத்தக்க எந்த ஹதீஸையும் அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவில் அருளப்பட்டதா? என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது என்பது தான் உண்மையாகும்.
எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுவதாகக் கூறப்படுவதைத் தான் சிலர் சான்றாகக் காட்டுகின்றனர். இது சூனியம் செய்யும் பெண்களையே குறிக்கிறது என்று இவர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.
இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலி-ருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.
ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)
முடிச்சு என்றவுடன் நூலி-ல் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள முடிச்சை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது (20:27) முடிச்சு என்று தான் கூறினார்கள். நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (அபூதாவூத் 651)
தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண்பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும் சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
மேலும் மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவேன் என்றும் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். (பார்க்க திருக்குர்ஆன்5:67)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப் போகும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள் எனும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலத்தை விட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அறிவிப்பாளர்களைப் பொருத்த வரை ஆதாரப்பூர்வமான செய்திகள் இருந்தாலும் அதை விட ஆதாரப்பூர்வமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு முரணாக இருப்பதால் திருக்குர்ஆனுக்கே முத-லிடம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

மனிதனைப் பைத்தியமாக்கும் வேலையை ஷைத்தான் செய்கிறானா ?

 ஷைத்தானால் பைத்தியம் பிடிக்காது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் 2:275 வசனம் இதற்கு மாற்றமாக உள்ளதே!  மேலும் ஷைத்தானிடருந்து பைத்தியம் பிடிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் உள்ளது. மேலும் மனிதனைப் பைத்தியமாக்குவதால் ஷைத்தானுக்குப் பெரிய லாபமும் உண்டு.  இதன் மூலம் மனிதன் எந்த நற்செயலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே மனிதனை ஷைத்தான் பைத்தியமாக்குகின்றான் என்று விளங்கலாம் அல்லவா?  விளக்கவும்.

! "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.  "நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று (ஷைத்தான்) கூறினான்.  (அல்குர்ஆன் 7:14-16)
இந்த வசனங்களில் ஷைத்தானின் பணி என்ன என்பது பற்றி கூறப்படுகின்றது. கியாம நாள் வரை மக்களை வழி கெடுப்பதற்காக இறைவனிடம் ஷைத்தான் அவகாசம் வாங்கியுள்ளான்.  இதைத் தவிர வேறெந்த அதிகாரமும் ஷைத்தானுக்கு இல்லை. மனிதனைப் பைத்தியமாக்குவதோ, அல்லது அதைக் குணப்படுத்துவதோ அவனது வேலை இல்லை.
மனிதனைப் பைத்தியமாக்கும் அதிகாரம் ஒருவேளை ஷைத்தானுக்கு இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் அவன் அதைச் செய்ய மாட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை  2. சிறுவன் பெரியவராகும் வரை  3. பைத்தியக்காரர் பைத்தியத்தி-ருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-)
நூல்கள் : நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031
இந்த ஹதீஸின் படி பைத்தியமாக இருப்பவர் எந்தத் தீமையைச் செய்தாலும் அவருக்கு பாவம் எழுதப்படாது. எனவே மனிதன் பைத்தியமாக இருப்பது, மனிதனை வழி கெடுப்பதாக சபதமேற்றுள்ள ஷைத்தானுக்கு மிகப் பெரிய இழப்பாகும். எனவே பைத்தியம் பிடிப்பதற்கும், ஷைத்தானுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். (அல்குர்ஆன்2:275)
இந்த வசனத்தில் மறுமையில் பைத்தியமாக எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று கூறப்படுவதைப் பற்றி கேட்டுள்ளீர்கள்.
பேய் விரட்டுவோர், பிசாசுகளை ஓட்டுவோர் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வோர் இவ்வசனத்தைக் காட்டியே மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.
தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது ஷைத்தான் அதை ஏற்படுத்தினான் என்று கூறுவதை குர்ஆன் அனுமதிக்கிறது.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).  (அல்குர்ஆன் 38:41, 42)
அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் தீண்டி விட்டான் என்று கூறுகின்றார்கள்.  இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது.  கெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் (அலை) கூறினார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது போல் பைத்தியத்தையும் அல்லாஹ் தான் ஏற்படுத்துகின்றான் என்றாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷைத்தானால் பைத்தியம் பிடிப்பதி-ருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியதாக ஹதீஸ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் தேடிப் பார்த்த வரை இவ்வாறு ஹதீஸ் எதையும் காண முடியவில்லை. அப்படியே ஹதீஸ் இருந்தாலும் இந்த இடத்தில் பைத்தியம் என்பதற்கு "வழி கெடுத்தல்' என்ற பொருளைத் தான் தர முடியும். இல்லையென்றால் அல்லாஹ்வின் அதிகாரம் ஷைத்தானுக்கு இருப்பதாக ஆகி விடும்.

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? அவர்களுக்குத் தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா?

ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை.  இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.  இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை.  ஆனால் முதன்முத-ல் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர்ஆன் 3:96
மனித சமுதாயம் இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்றால் அதை ஏற்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களாகத் தான் இருக்க வேண்டும்.  ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் அவர்கள் வணங்குவதற்காக நிச்சயம் ஓர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பார்கள்.  அந்த ஆலயம் மக்காவில் உள்ள கஃபா என்று இறைவன் கூறுகின்றான்.  எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஆதம் (அலை) அவர்களும் அவரது துணைவியாரும் இறக்கப்பட்டது மக்காவில் தான் என்பது தெளிவாகின்றது.
அவ்விருவருக்கும் தொப்புள் உண்டா என்று கேட்டுள்ளீர்கள்.  தொப்புள் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் செல்லும் குழாயின் இணைப்பாகவுள்ளது.  கருவில் வளரும் குழந்தைக்குத் தான் தொப்புள் கொடி இருக்கும்.  இறைவனால் நேரடியாக இருவரும் படைக்கப்பட்டதால் தொப்புள் இருக்க முடியாது என்ற லாஜிக்கின் அடிப்படையில் அவ்விருவருக்கும் தொப்புள் கிடையாது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த லாஜிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஏனெனில் தொப்புள் கொடிக்கு இவர்கள் கூறுகின்ற காரணம் பொருந்தினாலும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஒரு படைப்பாக அமைந்துள்ளது.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம் என்று இறைவன் கூறுவது தொப்புளையும் சேர்த்துத் தான்.  தொப்புள் இல்லாத ஆணையோ பெண்ணையோ கற்பனை செய்து பாருங்கள்.  விகாரமாக இருக்கும்.  எனவே ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் அவ்வாறு இருந்திருந்தால் நிச்சயமாக அது அழகிய வடிவமாக இருக்காது.
தொப்புள் இல்லாமல் இருப்பது தான் அழகிய வடிவம் என்றால் அவ்விருவரின் வழித் தோன்றல்களுக்கு மற்ற தழும்புகள் காலப்போக்கில் மறைவது போல் தொப்புளும் மறைந்து சமமாக ஆகி விடவேண்டும்.  அவ்வாறு ஆகாமால் வேண்டுமென்றே அல்லாஹ் குறிப்பிட்ட வடிவத்தில் அதை விட்டு வைத்துள்ளான்.  எனவே தொப்புள் கொடி லாஜிக் பேசி, ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

7:133 வசனத்தில் கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளையையும் இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

 7:133 வசனத்தில் கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளையையும் இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.  பேன் என்றால் பனூ இஸ்ராயீல் மக்களின் உரோமங்களில் அதிகமான பேன்கள் மூலம் சோதிக்கப்பட்டார்கள் என்று விளங்குகின்றது.  ஆனால் வெட்டுக்கிளி, தவளை, இரத்தம் ஆகியவற்றால் எப்படி சோதிக்கப்பட்டார்கள்?
வஹிதா & ஃபாத்திமா, மஹ்மூதியா அரபிக் கல்லூரி, கோம்பை
! இதுகுறித்து ஹதீஸ்களில் எந்த விளக்கமும் இடம் பெறுவதாகத் தெரியவில்லை.  பேன் மூலம் சோதனை என்றால் அதை எப்படி விளங்கிக் கொண்டீர்களோ அதே போல் மற்றதையும் விளங்கிக் கொள்ள வேண்டியது தான்.
வெட்டுக்கிளியின் மூலம் சோதனை என்றால் வெட்டுக்கிளி அதிகமாக அனுப்பி சோதிக்கப்பட்டார்கள் என்பது தான் அதன் கருத்து.  ஒன்றிரண்டு வெட்டுக்கிளிகள் வருவதை சோதனை என்று கூற முடியாது.  ஏனென்றால் சாதாரணமாக எல்லா நேரங்களிலும் அவை இருக்கக் கூடியவை தான்.  ஆனால் பார்க்கும் இடங்களில் எல்லாம் வெட்டுக்கிளியாக இருந்தால் எப்படி இருக்கும்?  இதுபோன்று அந்த வசனத்தில் கூறப்படும் ஒவ்வொன்றையும் அதிகமாகக் கொடுத்து தொந்தரவுக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பது அதன் பொருளாகும்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites