அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 14 ஜூலை, 2010

மானம் என்ற பெயரில்...



ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்' என்று பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் இந்தக் கணினி யுகத்திலும்கூட மானப் படுகொலைகள் நடக்கிறது என்பது வேதனையான உண்மை.
பாகிஸ்தானில் மிக அதிக அளவில் இந்த மானப் படுகொலை நடைபெறுகிறது. சில ஆயிரம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், இந்தியாவில் அது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் படுகொலைகளில் தெரியவந்துள்ளது.
ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதற்காக கொலை செய்யப்பட்டனர். வேறுஜாதியைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண், ஊர் பஞ்சாயத்து உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாள் என்று செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் வடஇந்தியாவில் சுமார் 900 பேரும், தென்னிந்தியாவில் 100 பேரும் குடும்ப மானத்தைக் காரணம்காட்டி கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த மானப் படுகொலையில் பலியாவது 90 விழுக்காடு பெண்கள் மட்டுமே.
இத்தகைய கொலைகள் அண்மையில் பரவலாகவும் அதிக எண்ணிக்கையிலும் நடக்கத் தொடங்கி, அவை பத்திரிகைகளிலும் வெளியாகி வருவதால், இதைத் தடுக்க எத்தகைய சட்டத் திருத்தம் கொண்டு வரலாம் என்பதைப் பரிந்துரைக்க அமைச்சர்கள் குழுவை நியமித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
மானப் படுகொலை என்பது பாகிஸ்தானில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூடதண்டனையில்லாத குற்றமாக இருந்து, தற்போது குறைந்த தண்டனைக்குரிய குற்றமாகத்தான் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஜோர்தான் நாட்டில் இப்போதும்கூட, தன் மனைவியின் கள்ளத்தொடர்பின் காரணமாக கொன்றதாக நிரூபித்தால் தண்டனை கிடையாது. இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பெண்கள் அமைப்பு போராடியும் பயனில்லை. கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து, அவனை மனைவி கொன்றால் மன்னிப்பீர்களா என்ற வாதத்தையும்கூட முன்வைத்தனர். ஜோர்தான் அரசு கொஞ்சம் கூட மாறவில்லை. சிரியா நாட்டில், இத்தகைய மானப் படுகொலைக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
மானப் படுகொலைகளை பொருள்படுத்தாத நிலைமை பிரேஸில் நாட்டில் 1991 வரையிலும், கொலம்பியாவில் 1980 வரையிலும் இருந்தது. ஆனால் நாகரிகம் வளர்ந்ததும், இந்த மானப் படுகொலைகளை வெறும் கொலையாகவே கருதி தண்டனை வழங்கத் தொடங்கி விட்டனர்.
இந்தியாவில் ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் இத்தகைய மானப் படுகொலைகள் ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் நடத்தப்படுகிறது. இது சட்டப்படி கொலை என்று தெரிந்தாலும், புகார் அளிக்கவும்சாட்சி சொல்லவும் அந்த ஊர் மக்கள் முன்வராதபோது இதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையால் முடிவதில்லை என்பதுதான் அரசு இதுநாள் வரையிலும் பொதுவாகக் கூறிவந்த பதில்.
மானப் படுகொலை என்று புகார் வருமேயானால், அதில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அக்கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான குடும்பம் அல்லது ஊர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது என்கிறபடியாக சாட்சிகள் சட்டத்தைத் திருத்தி அமைத்தால் இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று அமைச்சர்கள் குழு கருதுகிறது. அந்த வகையில் முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் மானப் படுகொலைகள் பலவும் குடும்பத்தினருக்கோ அல்லது ஊர் பஞ்சாயத்துக்கோ உடன்பாடில்லாத கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் காரணமாகத்தான் நடைபெறுகிறது. இந்தத் திருமணங்கள் பெரும்பாலும், ஊரைவிட்டு வெளியேறிப்போய் செய்துகொள்ளும் திருமணங்களாகவும் சட்டப்படி பதிவு செய்யப்படாத திருமணங்களாகவும் இருப்பதால், இவர்கள் ஜாதிக் கட்டுப்பாடு அல்லது குடும்ப விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்துகொண்டார்கள் என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில், இந்தச் சட்டத் திருத்தமும்கூட எதிர்பார்க்கும் பயனைத் தருமா என்கிற தயக்கம் இருக்கிறது.
இத்தகைய வழக்கில், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளியைச் சார்ந்தது என்று திருத்தம் செய்வதுடன் திருமணப் பதிவுச் சட்டத்திலும் சில  திருத்தங்களைச் செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்), கலப்புத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணும் பெண்ணும் 30 நாள்களுக்கு முன்பாக பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறது. இதனை மாற்ற வேண்டும். ஒன்று இந்த நாள்களின் எண்ணிக்கையை சில தினங்களாகக் குறைக்க வேண்டும். அல்லது திருமணப் பதிவு செய்திருந்த நிலையில் கொல்லப்பட்டாலும் அதனை மானப் படுகொலையாகக் கருதி வழக்குப் பதிவு செய்ய வகை செய்ய வேண்டும்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்று பதிவு செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில், "ஏதோ ஒரு ஆத்திரத்தில், கொலை செய்யும் நோக்கமில்லாமல் தாக்கியதில் மனைவி இறந்தார்' என்பதாக குறைந்த ஆண்டுகளே சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்று கொலை செய்தாலும்  மானப் படுகொலையாகவே பதிவு செய்து, வழக்கை நடத்த வேண்டும்.
ஒருபுறம் உலகமயம், மேலைநாட்டு மோகம் என்கிற பெயரில் ஒழுக்கக்கேடான இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறத்தில், கற்கால மனிதர்களிடமும் கல்வி அறிவேயில்லாத அநாகரிக சமுதாயத்திலும் மட்டுமே காணப்படும் மானப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடையாளங்கள் பங்குச்சந்தையும் இரண்டு இலக்க வளர்ச்சி விழுக்காடும் அல்ல, பகுத்தறிவும் அடிப்படை மனித தர்மமும் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை நெறியே. மானப் படுகொலைகள் என்பது தேசிய அவமானம்!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites