அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 4 ஜூலை, 2011

உறையச் செய்யும் உ.பி. கற்பழிப்புக்கள்


உறையச் செய்யும் உ.பி. கற்பழிப்புக்கள்
உத்தர பிரதேச மாநில மனித உரிமை ஆணையம், பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாயாவதி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் வேளையில் உ.பி.யில் கடந்த ஐந்தாறு நாட்களில் மட்டும் ஆறு கற்பழிப்புக்கள் அரங்கேறியுள்ளன.
1. ஜூன் 13: லக்கிப்பூர்கேரி மாவட்டத்தில் நிதாஷான் காவல் நிலையத்தில் 14 வயதுப் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
2. ஜூன் 19: உ.பி. கன்னாவுஜ் மாவட்டத்தில் 14 வயது இளம் பெண், ஒரு காமவெறிக் கும்பலின் கற்பழிப்புக்கு இணங்க மறுத்து, எதிர்த்துப் போரிட்டதில் ஒரு கண்ணில் கத்தியால் குத்தி குருடாக்கி விட்டு, மறு கண்ணையும் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பி விட்டனர். கற்பையும் கண்ணையும் இழந்த அந்தப் பெண்ணை கிராம மக்கள் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு ஒரு கண் முழுமையாகப் பறி போய் விட்டதாகவும் மறு கண் 80 சதவிகிதம் சேதமடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
3. ஜூன் 20: எடா மாவட்டம் பிரபாப்பூர் கிராமத்தில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஒரு வீட்டில் நுழைந்து தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அனார்கலி என்ற 35 வயதுப் பெண்ணைக் கற்பழித்தனர். பின்னர் அந்தப் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர். அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அப்பெண்மணி இறந்து விட்டார். இறப்பதற்கு முன்னால் அப்பெண்ணிடம் மாவட்ட கூடுதல் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றுக் கொண்டார். பிள்ளைகள் அடையாளம் காட்டியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இப்பெண்ணின் கணவர் சம்பவத்தன்று ஊரில் இல்லை. அவர் டெல்லியில் பணி புரிகின்றார்.
4. ஜூன் 21: லக்னோ, சீதாப்பூரில் ஸாலிஹா என்ற 12 வயதுப் பெண், தனது சகோதரனுடன் மதரஸாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது கடுமையான மழையில் மாட்டிக் கொள்கிறாள். அதனால் ஒரு மரத்திற்கு அருகே ஒதுங்குகின்றாள். ஆனால் உடன் வந்த சகோதரனோ மழையில் ஓட்டம் பிடித்து வீட்டுக்குச் சென்று விடுகின்றான். அவனது சகோதரி வீட்டுக்குத் திரும்பவே இல்லை. பெற்றோர் வலைவீசித் தேடியதில் ஒரு கரும்புத் தோட்டத்தில் ஸாலிஹாவைப் பிணமாகத் தான் கண்டெடுக்கின்றார்கள். உடலில் கோரக் காயத்துடன்.
5. ஜூன் 24: பைசாபாத் மாவட்டத்தில் அன்ஜ்ராலி கிராமத்தில் ஒரு பருவ வயதுப் பெண், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு மத விழாவுக்குச் சென்ற போது 20 வயது வாலிபர்களான ரமேஷ் யாதவ், மகேஷ் யாதவ் ஆகியோரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகின்றாள்.
6. ஜூன் 25: முஸஃப்பர் நகரில் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்ற 14 வயது இளம் பெண்ணை லால் என்ற இளைஞன் துப்பாக்கி முனையில் அருகிலுள்ள வயல் வெளிக்குக் கடத்திச் சென்று கற்பழித்தான்.
7. ஜூன் 25: பக்ருபூர் நகரில் 17 வயது இளம் பெண் ஒரு போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டாள்.
இந்தக் கற்பழிப்புக்கள் அனைத்தும் உ.பி.யில் மட்டும் கடந்த ஐந்தாறு நாட்களில் நடந்தவை. நாடெங்கும் நடந்த கற்பழிப்புக்களைக் கொண்டு வந்தால் இந்த ஏடு தாங்காது.
பெண்களுக்கு எதிராக நடந்த இந்தக் கற்பழிப்புகளுக்கும் கொடூரமான கொலைகளுக்கும் தீர்வு என்ன?
இன்று பெண்ணியம் பேசுபவர்கள், பெண் விடுதலைக்காகப் போராடுபவர்கள், அரசியல்வாதிகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி, மாபெரும் புரட்சி ஏற்பட்டு விடும் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்; பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு இப்போது உண்மையான, உடனடியான, அதிரடியான, அவசியமான தேவை ஆளும் உரிமை அல்ல, வாழும் உரிமை! காரணம் ஒரு பெண் கருவில் உருவெடுத்தாலே அதைக் கருவியின் கழுகுப் பார்வையில் கதிர் வீச்சு அலைப் பாய்ச்சலில் கண்டுபிடித்து, தாயின் கருவறையையே கல்லறையாக்கி விடுகின்றனர். ஒரு கருப் பொருள் கருக்கலைப்பு என்ற பெயரில் கழிவுப் பொருளாகக் கழுவப்படுகின்றது.
இப்படிக் கழுவப்பட்ட, கலைக்கப்பட்ட, கழிவு நீராக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1980 முதல் 2010 வரையிலான முப்பது ஆண்டுகளில் மட்டும் 12 மில்லியன் (ஒரு கோடியே இருபது லட்சம்) ஆகும்.
அப்படியே கருவறையில் தப்பி உருவெடுத்து உயிரெடுத்து உலகத்தில் உதயமாகி விட்டால் இருக்கவே இருக்கின்றது கள்ளிப்பால், எருக்கம்பால்! இந்தக் கைப்பக்குவ மருந்துகளில் அந்தப் பெண் குழந்தைகளின் உயிர்களைப் பறித்து விடுகின்றனர்.
பெண் சிசுக் கொலை செய்வதில் இந்தப் பழைய முறைகள் நமக்குத் தெரியும். ஆனால் "புதிய கலைகள்' என்ற தலைப்பில் இந்து நாளேடு வெளியிட்ட செய்தி, நம்மை மலைப்பில் அல்ல. மயக்கத்திலேயே ஆழ்த்தி விடும். பெண் குழந்தைகளை எருக்கஞ்செடி அல்லது கள்ளிப் பாலை வைத்துக் கொலை செய்வது பழைய முறை. இப்போது புதிய கொலை முறைகளைப் பாருங்கள்.
(1) புகையிலைச் சாற்றை குழந்தை வாயில் புகட்டி சாகடித்தல்
(2) காரம் நிறைந்த கோழி சூப்பை கொடுத்தல். இதன் விளைவால் கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் குருத்து, குய்யோ முறையோ என்று கீச் குரலில் கத்தி விட்டு இறந்து குளிர்ந்து போதல். 
(3) குழந்தைக்கு அளவுக்கு அதிகம் பால் புகட்டி விட்டு ஈவு இரக்கமின்றி ஒரு ஈரத்துணியால் பொதிந்து அதிலேயே உயிர் துடிப்பு நிற்கும் வரை உறையச் செய்தல். 
(4) பிறந்த அந்த இளங்கொழுந்தின் அறுக்கப்பட்ட தொப்புள் கொடியிலிருந்து வழிகின்ற இரத்தத்தை நிறுத்தாது அப்படியே ஓட விட்டு உயிரிழக்கச் செய்தல். 
(5) குழந்தையை கைக் காற்றாடியின் முன்னால் படுக்க வைத்து அந்தக் காற்றாடியின் விசிறிகளை அறுந்து போகும் வேகத்தில் சுழலச் செய்தல். புயலென வீசும் இந்தச் சுழல் காற்று வீச்சில் இந்த அரும்பின் சுவாசக் காற்றை நிறுத்தி விடுதல்.
என இந்த மாபாதகங்களை சேலம் பகுதியில் வசிக்கும் பெண்கள் செய்கின்றனர். "எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தைகள் இரண்டு. நான்காவது ஒரு பெண் என்றால் அக்குழந்தையை விட்டு வைக்க மாட்டேன்' என்று இந்தப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருத்தி குறிப்பிடுகின்றாள். பெண் குழந்தை எனில் பெரும் செலவு, கல்யாணம் முடிக்கக் காசு பணம் அதிகம் தேவை.  இதுதான் பெண் குழந்தைகளை கொல்லக் காரணம் என்று அந்தப் பெண் சொல்கின்றாள். 
இதையும் தாண்டி அந்தப் பெண் குழந்தை வளருமானால் பருவமடைவதற்கு முன்போ, அல்லது பருவமடைந்த பின்போ கற்பழித்து, கழுத்தை நெறித்து அல்லது கொளுத்தி சாகடித்து விடுகின்றனர்.
திருமணம் முடித்த பின்பு ஒரு பெண், தான் பெற்ற பிள்ளைகளுக்கு முன்னாலேயே கதறக் கதற காமுகர்களின் கும்பலால் கற்பழித்துக் கொல்லப்படுவது இதயம் உள்ள எவராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு கோர, கொடூரச் சம்பவமாகும். 
இப்படிக் கற்பழிப்புகளிலிருந்து தப்பி விட்டால் வரதட்சணை என்ற கொடுமையால் மாப்பிள்ளை வீட்டுக் கோடரியால் ஒரு பெண் கொல்லப்படுகின்றாள். மாப்பிள்ளை வீட்டில் ஸ்டவ் வெடித்து, மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்தி, அல்லது அடித்தே கொல்லப்படுகின்றாள்.
காட்டு மிராண்டித்தனம் தொடரும்.....
thanks : ஏகத்துவம் ஜூலை 2011

பஸ்பமாக்கப்பட்ட 12 மில்லியன் பெண் சிசுக்கள்


கருவறையா? கல்லறையா?
இப்போது பெண்களுக்கு மிக மிக இன்றியமையாத தேவை உயிர் வாழும் உரிமை தான். தாயின் கரு என்பது கருணையின் மறு பெயர். இப்போது அந்தக் கருவறையே கல்லறையாக மாற்றப்பட்டு விட்டது.
கருவறையில் நவீன கருவிகளின் நாசகாரக் கதிரலைகள் பாய்ந்து பெண் சிசு என்று கண்டறியப்படுகின்றது. அங்கே அந்தத் திடப் பொருள் (கரு) திரவப் பொருளாக மாற்றப்பட்டு, கழுவி, கழிவு நீராக வெளியேற்றப்பட்டு விடுகின்றது. கருவறை காலி செய்யப்படுகின்றது.
உள்ளத்தை உருக வைக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, அக்கிரமத்தை அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து The Lancet என்ற இதழ் படம்பிடித்துக் காட்டுகின்றது. அந்த ஆய்வை இப்போது பார்ப்போம்.
பஸ்பமாக்கப்பட்ட 12 மில்லியன் பெண் சிசுக்கள்
4.2 மில்லியன் முதல் 12.1 மில்லியன் வரையிலான பெண் குழந்தைகள் 1980 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், குறி வைத்துக் கருவிலேயே பஸ்பமாக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பெண் குழந்தைகள் 1990ல் அழிக்கப்பட்டுள்ளனர்.
கருவில் உருவாகும் பெண் குழந்தை, தலைக் குழந்தையாக இருந்தால், அதாவது தாய்க்கு முதல் குழந்தையாக இருந்தால் அது இந்தக் கொலையை விட்டுத் தப்பி விடுகிறது. இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்.
இந்தியாவில் அதிகமான மக்கள் தொகையினர் வசிக்கும் மாநிலங்களில் தான் இது போன்று பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கருக்கலைப்பு செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது.
பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மொத்தக் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விட 71 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
இதே வயதுக் குழந்தைகளில் ஆண்களை விட பெண் குழந்தைகள் 60 லட்சம் குறைவான இருந்தனர் என்று 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
42 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே குறைவாக இருந்ததாக 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டுகின்றது.
1990 ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது. 2005ஆம் ஆண்டு இந்த விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்று சரிந்து விட்டது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
மொத்தக் குழந்தைகளில் ஆண்களை விட 42 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக இருந்தது, தற்போது 71 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது பெண் குழந்தைகள் குறைவதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பிலும் கருக்கலைப்பு கூடிக் கொண்டிருப்பதையே இந்தப் புள்ளி விபரம் காட்டுகின்றது.
காட்டுமிராண்டியாக்கும் கல்வியறிவு
படிக்காத, பாமர, பரம ஏழை வர்க்கத்தினரை விட படித்த, பணக்கார வர்க்கமே இந்தப் பெண் சிசுக் கலைப்பில் மிஞ்சி நிற்கின்றனர் என்பதையும் இந்த ஆய்வு விவரிக்கின்றது. அதாவது கற்றவர்கள், கல்வியறிவு மிக்கவர்கள் தான் காட்டுமிராண்டித்தனத்தில் மிஞ்சியுள்ளனர்.
இதன் விளைவாகத் தான் 2001ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் என்றிருந்த பிறப்பு விகிதம், 2011ல் 1000க்கு 914 ஆகக் குறைந்தது.
கலைப்பிற்குக் காரணம் என்ன?
இந்தக் கருவழிப்புகள், கருக்கலைப்புகள் மட்டும் நிகழாவிட்டால் இயற்கையாகவே 1000 ஆணுக்கு 952 பெண் என பிறப்பு விகிதம் அமைந்திருக்கும். ஆனால் அந்த அளவை அடைவதை விட்டும் கருக்கலைப்பு தடுத்து விட்டது.
இன்று விலங்கின உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணின உரிமைக்குப் பெரும் கோஷமிடுபவர்கள், பேயாட்டம் போடுபவர்கள் அந்தப் பெண்ணினத்தின் கருவுயிரைக் காக்கும் உரிமைக்கு, மனித உயிரின் புனிதம் காப்பதற்காகப் போர்க் குரல் எழுப்ப வேண்டாம். குறைந்தபட்சம் இதற்காக முணுமுணுப்பதற்குக் கூட மறுப்பது தான் பெரும் வேதனைக்குரிய விஷயம்.
இப்படிக் கருக்கலைப்பிற்கும், அதைக் கண்டு கொள்ளாத மனப்பான்மைக்கும் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
1. பிரசவத்திற்கு முந்திய கண்டுபிடிப்புத் தொழில் நுட்பச் சட்டம் (Prenatal Diagnostic Techniques Act) அதாவது பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கருவிலேயே கண்டுபிடிப்பது தொடர்பான இந்தச் சட்டத்தின் செயலிழப்பு மற்றும் முடக்கம். இந்தச் சட்டத்தின்படி கருக்கலைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2. பெரும் பெரும் பண முதலைகள், பேராசை கொண்ட ரேடியாலஜிஸ்ட், பணமே குறியாகக் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள், சட்டத்திற்குப் புறம்பாகப் பெருகிக் கொண்டிருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள்!
இவர்கள் தான் ஆணாதிக்கம் கொண்ட கருக்கலைப்பையும், கருவழிப்பையும் நாடுகின்ற கொலைகார மக்களுக்குக் கொலைக் கருவிகளாகவும் கொலைக் காரணிகளாகவும் ஆகியிருக்கின்றார்கள்.
கருக்கலைப்புக்காக வரக் கூடியவர்கள் சொல்லும் காரணங்கள் சில சமயங்களில் உண்மையாகவும் இருக்கின்றன. சமயங்களில் பொய்யாகவும் ஆகி விடுகின்றன.
3. கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் (The Medical Termination of Pregnancy Act - 1971) இந்தச் சட்டத்தை டாக்டர்களின் காவல் சக்தி என்றழைக்கலாம்.
கருவில் வளரும் குழந்தை தாயின் நலத்திற்குப் பெரும் ஆபத்து என்று ஒரு டாக்டர் கருதினால் போதும். அந்தக் கருவை அவர் கலைத்து விடலாம்.
சட்டத்திற்குப் புறம்பாக அவர் கருவைக் கலைக்கும் போது கூட இந்தச் சட்டத்தின் காரணமாக அவரைத் தண்டிக்க முடியாது. தாயின் நலத்திற்குப் பேராபத்து என்ற காரணத்தைச் சொல்லி அவர் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.
4. தடுக்க முடியாத தடுப்பு சாதனங்கள்:
கருவுறாமல் இருப்பதற்காக வேண்டி கருத்தடைச் சாதனங்களை தம்பதியர் பயன்படுத்துகின்றனர். ஆனால் கருத்தடைச் சாதனங்கள் பல கட்டங்களில் காலை வாரி விடுகின்றன. இந்தக் கருத்தடைச் சாதனங்களுக்கு டாக்டர்கள் எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்க முடிவதில்லை. இறுதியில் இதன் காரணமாகவும் கருக்கலைப்பு தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
5. தாய் மரணம்:
தாராளமயமான கருக் கலைப்பின் காரணமாகத் தாயின் உயிர் பாதுகாக்கப்படுகின்றது; இதனால் தாய் மரணம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது என்ற தவறான நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் அது முற்றிலும் தவறு என்பதற்கு அயர்லாந்து ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு கருக்கலைப்பிற்கு எதிரான கடும் சட்டம் அமலில் இருக்கின்றது. இப்படி இருந்தும் அங்கு தான் தாய் மரணம் மிக மிகக் குறைவாக உள்ளது. அதனால் தாராள கருக்கலைப்பு தான் தாய் மரணத்தைத் தடுக்கின்றது என்ற கருத்து தவறானது என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகின்றது.
இவை இந்திய மற்றும் உலக அளவில் கருக்கலைப்பிற்காகச் சொல்லப்படுகின்ற காரணங்கள். மேற்கத்திய நாட்டில் ஆண் பெண் பாகுபாடின்றி கருக்கலைப்பு நடைபெறுகின்றது. ஆனால் இந்தியாவிலோ பெண் இனம் குறி வைத்து அழிக்கப்படுகின்றது.
இப்போது பெண்களுக்கு உடனடியான, அவசியமான, அவசரத் தேவை அவர்களின் உயிர் வாழும் உரிமை தான். அந்த உரிமைக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் செய்யாமல் 33 சதவிகித இடஒதுக்கீட்டில் இந்த அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் களமிறங்கியிருக்கிறார்கள்.
உயிரைக் காக்க உரிய வழி
சரி! அப்படியே இவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரும்பி, கருக்கலைப்பை தடுப்பதற்குச் சட்டம் இயற்றி, கருக்கலைப்பு தடுக்கப்பட்டு விடும் என்று எண்ணினால் அதுவும் முற்றிலும் தவறாகும். காரணம் இப்போதும் கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் நம் நாட்டில் அமலில் இருக்கத் தான் செய்கின்றது. ஆனாலும் கருக்கலைப்பைத் தடுக்க முடியவில்லையே! ஏன்? எனவே இந்தச் சட்டம் இதற்குத் தீர்வாகவோ திருப்பமாகவோ ஆகாது.
இதற்கு ஒரே வழி, உரிய வழி இஸ்லாமிய மார்க்கம் தான். அது எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கூறுகின்றது என்பதை நாம் தனித் தலைப்பில் பார்க்கவுள்ளோம்.
கற்பழிப்புக்கள்  தொடரும் .....

ஞாயிறு, 26 ஜூன், 2011

25,50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது


25 பைசா, 50 பைசா நாணயங்களை மக்கள் அதிகம்  பயன்படுத்துவது இல்லை. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இந்த நிலையில் 25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. வரும் புதன்கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணயங்களை யாரும் பயன்படுத்தவும் இயலாது.
யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25 பைசா, 50 பைசா நாணயங்களை கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்!

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.
ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.
எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.
நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்…
Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…
எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.
- அபு நபீலா

செவ்வாய், 21 ஜூன், 2011

அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும் : ஆய்வில் தகவல்



 
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள் மிகவும் குறைவு. சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ ஆலோசனை ஆகியவை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மறுபுறம் இந்த பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் நடந்த வண்ணம் உள்ளது.
உடலில் அதிகரிக்கும் கொழுப்பால் மூளை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொழுப்பு சேர்வதால் நரம்புகளில் உள்ள நியூரான்ஸ் என்ற நரம்பு செல்கள் பாதிக்கப்படுகிறது. இது மூளை செயல்பாடுகளை பாதிக்குமாம். முதல் பாதிப்பாக உடல் எடை அதிகரிக்கும், படிப்படியாக மற்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உடல் பருமன் குறித்து ஆய்வு நடத்தும் தனியார் ஆய்வு நிறுவனம் இணைந்து ஜோஷ்வா தலெர் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மூளைச் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் குறித்து மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் வருமாறு: உடலில் சேரும் மிக அதிக அளவிலான கொழுப்பு 3 நாட்களில் மூளையில் மெதுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.
கவனிக்கப்படாமல் விடும் போதும், தொடர்ந்து அதிக அளவிலான கொழுப்பு சேரும் போதும் இந்த பாதிப்பு விரைவாக தாக்கும். எலிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் இது உறுதியாகி உள்ளது.
கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதன் மூலமும் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

திங்கள், 20 ஜூன், 2011

சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்டம் – சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.
அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களில் எவ்வாறு கலந்து கொள்வது கூடாதோ அது போன்று பெண்வீட்டு விருந்து வைக்கப்படும் திருமணங்களிலும கலந்து கொள்வது கூடாது. அதுவும் ஒர் பித்அத்துதான். அனாச்சாரம் தான் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.
பிறகு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஏன் புதிதாக வாங்கும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்காக பதிவு செய்ய வேண்டும்? என்பதையும் டிரஸ்டாக பதிவு செய்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் கொள்கையற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்கள்.
பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத் தலைவரும், கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினருமான முஹம்மது நாசிர் அவர்கள் முபாரக் பள்ளிவாசல் அருகில் வாங்கப்பட்ட இடத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில்தான் ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூல் செய்தார் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்து நான் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்யவில்லை என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பதையும் நிருபித்தார்.
மேலும ஸைஃபுல்லாஹ் ஹாஜா இடம் வாங்குவதற்காக வசூல் செய்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டால் இந்த உண்மைகள் அவருடைய வாயினாலே வெளிப்படும் என்றும் அவர் அவ்வாறு வெளியிடுவாரா? என்றும் பொதுக் குழு உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஸைஃபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும், மாவட்டப் பொறுப்பிலும் கிளைப் பொறுப்பிலும் இருந்த அவருடைய வகைறாக்களும் கீழ்கண்ட காரணங்களினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.
1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மூலமாகவே நடத்தப்படவேண்டும். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களோ தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச் சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவாக் குழு, அக்ஸா மாணவர் அணி அமைப்பு போன்றவற்றை உருவாக்கி அவற்றின் பெயரில் தேர்தல் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் வாதிகள் சந்திப்பு என்று செயல்பட்டு வருகிறார். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிரானதாகும்.
2- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்த தானம் செய்தல், கத்னா முகாம் நடத்துதல், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற பல்வேறு பணிகளைக் குறிப்பிட்டு அரபியிலும் ஆங்கிலத்திலும் புரஃபைல் தயாரித்து அதனைக் காட்டி பல இலட்சங்களை (சுமார் 40 இலட்சம் அல்லது அதைவிட அதிகம்) வசூல் செய்து முபாரக் பள்ளிவாசல் அருகில் உள்ள நிலத்தை வாங்கி அது தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.
3- இவ்வாறு பதிவு செய்யலாமா? என்று ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பிஜேயிடம் கேட்ட பொழுது அவ்வாறு செய்வது கூடாது, ஜமாஅத்தின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும், அல்தாஃபி அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகம் இது பற்றி கேள்விப்பட்டு அல்தாஃபி, பிஜே, சம்சுல்லுஹா இன்னும் பல நிர்வாகிகள் முன்னிலையில் ஸைஃபுல்லாஹ் அவர்களை எச்சரிக்கை செய்த பிறகும் ஜமாஅத்திற்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட தனி நபர் பெயரில் பதிவு செய்தது மிகப் பெரும் மோசடியாகும்.
4- நாங்கள் கடையநல்லூர் மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்தோம் என்று ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் கூறுகிறார். ஆனால் இது பொய்யாகும். கடையநல்லூர் மக்களிடம் மட்டும் வசூல் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி அரபியிலும் ஆங்கிலத்திலும் ஏன் புரஃபைல் தயாரிக்க வேண்டும்.? ஆங்கிலத்தில் அல்லது அரபியில் படித்தால் தான் கடையநல்லூர் மக்கள் உதவி செய்வார்களா? மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலத்தின் சார்பில் விசா எடுக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகியாக பேச்சாளராக ரமலான் பிரச்சாரத்திற்காக துபாய் சென்ற பொழுது ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அமீரகம், குவைத், சவூதி அரேபியாவில் உள்ள கடையநல்லூர் அல்லாத தமிழ்நாடு தவ்ஹீத் சகோதரர்களிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையநல்லூரைச் சார்ந்த பலரும் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காகவே உதவி செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்து கொண்டே, தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக்காட்டி புரபைல் தயாரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களிடம் வசூல் செய்து தனிப்பட்ட கமிட்டிக்கு பாத்தியப்பட்டது என்று கூறுவது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதும் ஜமாஅத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மைக்கு எதிரானதாகும்.
5- புதிதாக எந்த ஒரு சொத்து வாங்கினாலும் அது அந்தந்த கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே வாங்கப்பட வேண்டும், அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையிலுள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது நமது சட்ட விதியாகும். இதில் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வந்து பல்வேறு ஊர்களிலும் இவ்வாறு தான் நம்முடைய மர்கஸ்களுக்கு இடம் வாங்கப்படுகிறது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த பிறகு இந்த விதிக்கு எதிராக கடையநல்லூரில் புதிதாக வாங்கிய இடத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்ததுடன் அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது முபாரக் கமிட்டிக்கு பாத்தியப்பட்டதாகும், மாநிலத் தலைமை எங்கள் நிர்வாகத்தில் தலையிட அதிகாரமில்லை என்றெல்லாம் கூறுவது அமைப்பிற்கு எதிரான மிகப்பெரும் துரோகமாகும்.
6- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான் பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின் மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம் விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும் மோசடியாகும்.
7- ஆடம்பரத் திருமணங்களிலும், பித்அத்கள்,பெண்வீட்டு விருந்து நடைபெறும் திருமணங்களிலும் கலந்து கொள்வது, அத்திருமணங்களை நடத்தி வைப்பது, சீர் சீராட்டு என்ற பெயரில் தவ்ஹீத் வாதிகள் இலட்சக்கணக்கில் பாத்திர பண்டங்களை வாங்கிக் கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
8- கிளை நிர்வாகத்தை கிளை நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக கடையநல்லூர் கிளை நிர்வாகத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக கிளையின் பெயரில் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் வரவு செலவு கணக்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் நிர்வாகக் குழுவிலோ பொதுக் குழுவிலோ மக்களுக்கு மத்தியில் அதன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
9- கிளை நிர்வாகிகள் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பப் பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தான் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைப்பது.
10- மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல், கிளை உறுப்பினர்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கடையநல்லூரைச் சார்ந்த மாவட்ட நிர்வாகியையும், கிளை நிர்வாகிகளையும் கைப்பாவைகளாக்கி, ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஆதாயம் தேடி புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் என்ற பெயரில் கட்டிடம் கட்டியது இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பணத்தினை இலட்சக்கணக்கில் செலவு செய்தது பொதுமக்களுக்கு மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியததிற்கு பாதிப்பை ஏற்பறடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக திகழ்ந்தவர் ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தான்.
11- மாநில நிர்வாகத்திற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல் மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சகோதரர் அப்துந் நாசிர் அவர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தி முபாரக் பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுவதற்கு பல மாதங்கள் தடைவித்தது ஜமாஅத்திற்கு எதிரான செயலாகும். மாநில நிர்வாகிககள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலத் தலைமைக்குரியதே என்பதை ஸைஃபுல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தும் மாநிலத் தலைமைக்கு எதையும் தெரிவிக்காமல் இவ்வாறு செயல்பட்டிருப்பது ஜமாஅத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
12- மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஜும்ஆ உரைக்காக தாயிக்களை அனுப்பும் போது மாநில நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதேச்சதிகாரமாக அந்த தாயிக்களை மாற்றியதும் அவர்களுக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுக்கிறோம் எனவே எங்கள் விருப்பப்படி தான் பயன்படுத்துவோம் என்று கூறி ஜமாஅத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டினார்.
13- கடையநல்லூரைச் சார்ந்த ஒரு தனவந்தர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதுள்ள நம்பக்தன்மையாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு தன்னுடைய நிலத்தினை பள்ளிவாசல் கட்டுவதற்காகவும், மையவாடி அமைப்பதற்காகவும் தானமாக வழங்கினார். அவருக்கு ஸைஃபுல்லாவாகிய என்னைத் தான் தெரியும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டு ஜமாஅத்தின் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்தி ஸைஃபுல்லாஹ் பேசி வருகின்றார். இது அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சகட்டம் ஆகும். ஸைஃபுல்லாஹ் ஜமாஅத்தினுடைய நிர்வாகியாக இல்லாமல் இருந்திருந்தால் இவரை யாருக்காவது தெரிந்திருக்குமா? நபியவர்கள் ஸகாத்தை வசூலிக்க அனுப்பிய நபித்தோழர் இவ்வாறு கூறிய போது இவர் தன்னுடைய தந்தை வீட்டிலோ தாய் வீட்டிலோ இருந்திருந்திருந்தால் இவருக்கு கிடைத்திருக்குமா? என்று நபியவர்கள் பதில் கூறினார்கள். அந்த நபித் தோழரின் கூற்றைப் போன்று தான் ஸைஃபுல்லாஹ்வின் பேச்சுகளும் அமைந்துள்ளன.
14- சுய இலாபத்திற்காக அரசியில் வாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் செயல்பட்டுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
15- தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கி வ்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட முபாரக் பள்ளிவாசல் அருகில் அந்த ஆம்புலன்ஸிற்காக உள்ள இடம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட இடத்தில் நிறுத்தக் கூடாது. என்று கூறியதுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டில் எடுத்து நிறுத்தி ஜமாஅத்திற்கு எதிரான தன்னுடைய குரோதத்தை ஸைஃபுல்லாஹ் வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் இன்னும் ஜமாஅத்திற்கு எதிரான பல செயல்பாடுகளாலும் ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
எனவே சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முபாரக் பள்ளிவாசல் தொடர்பாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்து தனி நபரின் பெயரில் பதிவு செய்தது தொடர்பாகவும் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுது.
மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த கூட்டம் சரியாக 1 : 30 மணிக்கு பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

வியாழன், 16 ஜூன், 2011

கிருஷ்ணா - கோதாவரி டி6

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது. தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.
கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது. இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது. பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?

ஞாயிறு, 5 ஜூன், 2011

வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?


1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites