அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இந்தியா - சீனா: இமயமலைச் சாரலிலும் மோதல் களம்



இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரகூடியது என்று கருதப்பட்ட ‘முத்து மாலை வியூகம்’ குறித்த  சீனா விரிக்கும் 'முத்து மாலை வியூகம்' இந்தியாவை உடைக்குமா?  தகவல்களை தொடர்ந்து இந்தியாவுக்கு வடக்கே பொருளாதாரம், பாதுகாப்பு, இயற்கை வளங்கள் என பல்வேறு மார்க்கங்கள் ஊடாக இந்திய வடமாநிலங்களின் உறுதியான வளர்ச்சிக்கு எதிராக 'நிச்சயமற்ற நிலையை பேணும்' மற்றுமோர் வியூகத்தை சீன ஆட்சித் தலைமை எவ்வாறு வகுத்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கின்றது.

இந்தியாவின் முன்னைநாள் பாதுகாப்பு ஆலோசகர் பிறஜேஸ் மிஸ்ராவின் அண்மைய எச்சரிக்கை அறிவுறுத்தலில் “இந்தியா வெவ்வேறு தருணங்களில் இரண்டு யுத்தமுனைகளை இதுவரை கண்டிருக்கிறது. ஓன்று 1962ல் சீனாவுடனும் அடுத்து 1965,1971ம் மேலும் 1999ம் பாகிஸ்தானுடனும் யுத்தத்தில் ஈடுபட்டு இருந்தது. ஆனால் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அனேகமாக, அல்லது நிச்சயமாக, இந்தியா ஒரே நேரத்தில் இந்த இரண்டு முனைகளிலும் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மிஸ்ரா அவர்களின் கருத்துப்படி தற்போதைய சீன கம்யூனிச எதேச்சாதிகார தலைமை தனது பொருளாதார பாதுகாப்பு கட்டுமானங்கள் அடுத்த சில ஆண்டுகளில் வலிமையான நிலையை அடையும் என எதிர்பார்கிறது. இதனைத் தொடர்ந்து கிழக்கு பிராந்தியத்தில் யப்பான் அவுஸ்திரேலியா போல் அல்லாது அணுஆயுத வல்லமை குறைந்த இந்தியாவை பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதற்கான ஏதுநிலைகளை சீனா கொண்டிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

“வாக்குகளை தம்பக்கம் ஈர்த்து கொள்வதற்காக முறைகேடான கலாச்சாரத்தை வளர்த்தெடுத்து வரும் தற்போதைய அரசியல் தலைவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு தொடர்பான பண்பாட்டில் பின்தங்கி இருப்பதாக”வும் மிஸ்ரா அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்.

இவ்வாறு இந்திய பாதுகாப்பு குறித்து கரிசனைகொண்ட கள அனுபவம் மிக்க பலரும் சீனாமீது சந்தேககண்கொண்டு பார்பதையே பொதுவாக காணகூடியதாக இருக்கிறது.

பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகள்

நீண்டகால நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலமாகவோ, மாதிரி பொருளாதார ஒத்துழைப்புகளை உருவாக்குவதன் மூலமாகவோ சீனாவுடன நெருங்கி பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார நலன்களை உருவாக்கி கொள்வதோடு சீனாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற சிந்தனையின் பிரகாரமே டெல்லி தலைமை செயற்பட்டு வருகிறது.

இதற்கமைய இந்திய குடியரசு அதிபர் பிரதீபா பட்டீல் அவர்கள் அண்மைய சீன பயணத்தின் போது, இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீன நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த காலங்களிலும் பார்க்க சீன-இந்திய வர்த்தக முயற்சிகள் மேலும் வலுவடைய வைப்பதற்கு இந்தியா விரும்புவதாகவும் இந்த சீன பயணத்தின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீன-இந்திய இருதரப்பு வர்த்தகம் 2000ம் ஆண்டளவில் மூன்று பில்லியன் டொலர்களாக இருந்தது ஆனால் 2008ம் ஆண்டளவில் 52 பில்லியன்களாக உயர்ந்து விட்டிருக்கிறது என்பது உன்மையே. மேலும் கடந்த ஆண்டு உலக பொருளாதார தேக்க நிலையை தொடர்ந்து இவ்வாண்டு இருதரப்புக்குமான வர்த்தக பரிமாற்றம் 60 பில்லியன் டொலர்களாக உயரும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

இருதரப்பு வர்த்தகத்தில் பார்வைக்கு பெருமெடுப்பிலான வளர்ச்சி நிலை தென்பட்டாலும் இந்தியாவுக்கு சீனாவே மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கும் அதேவேளை சீனாவுக்கோ இந்தியா பத்தாவது வர்த்தக பங்காளியே என்பது குறிப்பிட தக்கதாகும்.

வட எல்லை மோதலும் முரன்பாடுகளும்

வட இந்திய எல்லைகளில் இரு பிரதான பகுதிகளிலில் தீர்க்கப்படாத தகராறு இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது. முதலாவதாக மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு வடக்காக காரக்கோரம் மலைதொடர் அமைந்துள்ள வடகாஷ்மீரப்பகுதியை பாகிஸ்தான் தனதென உரிமை கோரியுள்ளது மட்டுமல்லாது காரக்கோரம் மலைதெடர்கள் ஊடாக சீனாவின் மத்திய பகுதியை இணைத்து ஒரு பிரதான பாதையையும் அமைத்து வருகிறது.

இரண்டாவதாக காஷ்மீருக்கு கிழக்காக அக்சை சின் என்ற பகுதியை சீனா 1962ம் ஆண்டின் யுத்தத்தை தொடர்ந்து தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறது.
மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் தூதுவர் டெல்லியில் உரிமை கொண்டாடியதை தொடர்ந்து சீன தலைமை மீது டெல்லியின் தேசிய பாதுகாப்பு நிபுணர்களுக்கு புதிய தலையிடியை உருவாக்கி உள்ளது.

அது மட்டுமல்லாமல் பல தடவை சீன எல்லை காவல் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் இந்திய தரப்பு எல்லை காவல் படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து சீன தலைமை மறுப்புகளையே தெரிவித்து வருகிறது.

ஆக வடக்கில் இந்திய -சீன எல்லைகளிலே பதட்டநிலையை பேணுவது மட்டுமல்லாது. இந்த பதட்டத்தை தணித்து சுமுகமான நிலையை ஏற்படுத்தாது வைத்திருப்பதில் சீனாவின் நாட்டமே இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் மத்தியிலே பெரும் சந்தேகங்களை உருவாக்கி வருகிறது.

அதேவேளை மிகப்பெரும் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தால் இலட்சக்கணக்கான கரையோர இந்தியர்களை இழந்த போதும் எந்தவித வித வெளிநாட்டு உதவியும் தமக்கு தேவை இல்லை என்று மறுத்த இந்தியா அருணாசலப் பிரதேச அபிவிருத்திக்காக மட்டும் US Aid நிறுவனத்திடமும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் உதவிகள் பெற்று அப்பகுதியை அபிவிருத்தி செய்வதாக காட்டி கொள்வது இங்கே குறிப்பிட தக்கதாகும்.
திபெத்
வடக்கே மற்றும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பது திபெத்தாகும்.

சீன ஆக்கிரமிப்பை தொடர்ந்து திபெத் பகுதியை சீனாவின் மாநிலமாக ஏற்று கொண்டது இந்தியா. இதனை திபெத்தியர்கள் இந்தியா தமக்கு துரோகம் இழைத்து விட்டதாகவே கருதுகின்றனர். இப்பொழுது திபெத்தின் தலைநகர் லாசா நோக்கிய சீனாவின் புதிய தொடருந்துப்பாதை திட்டம் இன்னும் ஒரு முக்கிய பாதுகாப்பு வியூகமாகும்.

2001ம் ஆண்டு திறந்து வைக்கும் போது சீனாவின் பிரதி தொடருந்துத்துறை அமைச்சர் “பிரதான நிலப்பகுதியுடன் திபெத்தை இணைப்பது அதன் பொருளாதார அபிவிருத்திக்கும் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும் பலமளிப்பதாக அமையும்” என்றார்.

மிகக்குறுகிய நாட்களே இடம்பெற்ற 1962ம் ஆண்டு நவம்பர் மாத யுத்தம் சீனாவின் தன்னிச்சையான போர் நிறுத்தத்துடன் முற்றுப்பெற்றது. இதற்கு இமய மலைதொடர்களில் ஏற்கனவே ஆரம்பித்து விட்ட பனிப்பொழிவும் போக்குவரத்து வசதி இன்மையும் தொலை தொடர்பு கஷ்டங்களும் பிரதான காரணிகளாக சொல்லபட்டது.

இப்பொழுது இந்திய எல்லைகளில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ள லாசா வரை கண்டம் விட்டு கண்டம் பாய கூடிய ஏவுகணைகளில் இருந்து சீன மக்கள் விடுதலை படை சிப்பாய்கள் வரை மிக எளிதாக நகர்த்தகூடிய ஏதுநிலையை இந்த தொடருந்துப்பாதை பெற்று கொடுத்திருக்கிறது.
 
பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் வழங்கியமை

ஒரு “தோல்வியுற்ற அரசு” என்ற பெயரை பெற்று வரும் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத உதவியும் அதற்குரிய தொழில் நுட்ப அறிவும் பெற்று கொடுத்த பெருமை சீனாவையே சாரும்.

இந்திய வடபகுதியில் பதட்டத்தை உருவாக்கும் நோக்குடனேயே பாகிஸ்தானுக்கான அணு விற்பனையை சீனா செய்ததாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

ஈரான் எல்லைக்கு 70 மைல் தொலைவில இருக்கக் கூடிய குவாடார் எண்ணை வள சேகரிப்பு துறைமுகத்தை பாகிஸ்தானூடாக வடக்கு தெற்காக காரக்கோரம் நெடுஞ்சாலையோரமாக சீனாவின் மத்திய பகுதிவரை எண்ணை குளாய்கள் அமைத்து வழங்கலை தரைவழியாக உறுதிசெய்யும் திட்டம், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாகிஸ்தானிய பலுசிஜ்தான் கிளர்ச்சிகளால் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

ஆகவே தோல்வியுற்ற அரசாக பாகிஸ்தான் இருப்பது ஈரானிய எண்ணை வழங்கல் சீனாவை அடைவதை தடுப்பதற்கு உதவுமாயின் இந்தியாவுடன், ஈரான்ககு எதிராக அமெரிக்க வல்லரசும் திருப்திபடலாம்.

சங்காய் கூட்டு அமைப்பு

அண்மையிலே “நேட்டா” நாடுகளுக்கு அடுத்தபடியாக தாம் ஆப்கானிஸ்தானத்தையே சிறந்த நண்பனாக கொள்வதாக அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் கூறியதற்கு சங்காய் கூட்டு அமைப்பு மிக முக்கிய காரணி ஆகும்.

சீனாவுக்கு கிழக்காக மத்திய ஆசிய பிராந்தியத்திலே உள்ள வளம் மிக்க நாடுகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு அமெரிக்க சார்பு நேட்டோ நாடுகளுக்கான சரியான போட்டி அமைப்பாக கருதப்படுகிறது.

முன்னைநாள் சோவியத் அரசிற்குள் அங்கம் வகித்த ரஷ்யா, கசாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிறுக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கூட்டு சோந்து சீனா இந்த அமைப்பை உருவாக்கி உள்ளது.
2001ம் ஆண்டே உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் முக்கிய கொள்கைகளாக அங்கத்துவ நாடுகளிடையே உள்ள அரசியல் எல்லைகளில் இராணுவ பாதுகாப்பை குறைத்தல், பரஸ்பரம் ஆழமான நம்பிக்கையை உருவாக்குதல் ஆகியவை மிக முக்கியமாக கருத்தில் கொள்ள கூடிய தாகும்.

ஈரானும் பாகிஸ்தானும் இவ்வமைப்பில் பார்வையாளர் நிலையிலிருந்து உறுப்பு நாடுகளாக இவ்வமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டிவரும் நிலையிலேயே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை கொண்டு வருவதனூடாக ஈரானை தனிமைபபடுத்த அமெரிக்கா முயல்கிறது.

மேலே குறிப்பிட்ட கொள்கைகளை கொண்டிருந்தும் சங்காய் கூட்டு அமைப்பு இந்தியாவுக்கு உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கிய போதும் இந்தியா இதனை மறுத்திருந்தது குறிப்பிட தக்கதாகும்.

இந்தியாவுக்கு மேற்கு நாடுகளுடன் தனக்கே உரித்தான தனித்துவமான உறவு நிலையை பேணும் கொள்கை இந்திய-சீன எல்லை முரண்பாட்டிலும் பார்க்க முக்கியமானதாகவே தெரிகிறது.

இயற்கை வள முரண்பாடு
வட எல்லை முரண்பாடுகளில் இன்னுமோர் பிரதான காரணியாய் இருக்ககூடியது தண்ணீர் சம்பந்தமான விடயமாகும்.

இந்திய நோக்கர்களின் கருத்துபடி மிகவிரைவில் சீனா வடபகுதியில் உள்ள பிரதான நதிகளான இந்துநதி, சட்லஜ்நதி, உட்பட முக்கியமானதான சீன மொழியிலே யலுங் சங்போ என்றழைக்கப்படும். இந்தியர்களால் வரலாற்று புகழ் பெற்றதாக கருதப்படும் பிரமபுத்ரா நதி ஆகியவற்றை திசைதிருப்பும் முயற்சியில் முழுமுனைப்புடன் ஈடுபட உள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வளர்ந்துவரும் நகரமயமாதலும் கைத்தொழில் பேட்டைகளும் மிகப்பாரிய விவசாய நடவடிக்கைகளுக்கும் முக்கிய தேவையாக இருப்பது தண்ணீராகும்.

இதனை வறண்ட இமயமலையின் மறுபறத்திலே செயற்கையாக அன்றி வேறு எந்த வகையிலும் பெற்று கொள்ள முடியாது. ஆகவே பின்விளைவுகள் எதனையும் எதிர் கொள்ளும் திடத்துடன் பாரிய செலவிலான நதி திருப்பு வேலை திட்டங்களில் சீனா இறங்கியுள்ளது.

இந்தியாவின் ஒரே ‘ஆண்நதி’ என்று கூறப்படும் பிரமபுத்ராவின் கணிசமான அளவு நீர் திசை திருப்பப்படுமிடத்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலஙகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆக பல்வேறுவிதமான எதிர் எதிர் காரணிகள் இந்தியாவுக்கும் அதன் வடஎல்லை வல்லரசான சீனாவுக்கும் இடையில் பரந்து விரிந்து இமய மலையின் பள்ளத்தாக்குகளிலும் மலைகளின் உச்சிகளின் மீதும் கிடப்பினும் சர்வதேச வர்த்தக போட்டியும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியும் முக்கியத்துவம் பெறுவதால் தற்போதைய உலக அரசியல் நியதிக்கேற்ப இவ்விரு வல்லரசுகளும் முன்னேறிவருகின்றன.

சீனாவின் முயல்வேக முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாது போனால் இந்திய ஆமையிடம் தேவையானதை பறித்தெடுக்கும் நிலைக்கு சீனா வருவது வெகுதூரத்தில் இல்லை.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk
Thanks :  http://www.puthinappalakai.com/

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites