ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது? எல்லோருமே எல்லா கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. சிறு சிறு தவறுகளைச் செய்யத் தான் செய்கின்றார். அப்படியிருக்கும் போது ஆண் குழந்தைகளுக்கு தங்க நகை அணிந்தால் என்ன தவறு?
ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை 2. சிறுவன் பெரியவராகும் வரை 3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)
நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822,இப்னுமாஜா 2031
எனவே தங்கம் அணியக்கூடாது என்ற கட்டளை பருவ வயதை அடைந்த ஆண்களை மட்டுமே கட்டுப்படுத்தும். பருவ வயதை அடையாத குழந்தைகளுக்கு இந்தச் சட்டம் இல்லை.
ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கு ஹஜ் இருக்கின்றதா?'' என்று கேட்டாள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்! உனக்குக் கூலி உண்டு'' என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2377)
இந்த ஹதீஸில் குழந்தைக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டாலும், அதை அழைத்து வந்ததற்காக அதன் பெற்றோருக்குக் கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி குழந்தைகளுக்குத் தங்கம் அணிவதற்குத் தடை இல்லாவிட்டாலும் பொதுவான தடையைக் கருதி, குழந்தைக்குத் தங்கம் அணிவிக்காமல் அதன் பெற்றோர் தவிர்த்துக் கொண்டால் அதற்கான நன்மை அவர்களுக்குக் கிடைக்கும்.
எல்லோரும் சிறு சிறு தவறுகள் செய்கின்றார்கள் என்பதால் நாமும் தவறு செய்யலாம் என்ற வாதம் ஆபத்தானது. ஒரு விஷயம் தடை செய்யப்பட்டுள்ளது என்றால் ஒரு முஃமின் அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)
இந்த வசனத்தின் அடிப்படையில் யார் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதற்கான பலனை மறுமையில் அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதைக் காரணம் காட்டி, நாம் செய்யும் பாவங்களை நியாயப்படுத்த முடியாது.
இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே?
இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
முஹம்மது யாஸீர், திருநெல்வேலி
பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.
இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை.
தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஷாம் நாட்டிற்குப் போகலாமா?'' என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிறகு மக்கா வெற்றி கொள்ளப் பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.
அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், "இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5279
கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.
அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா?
"ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி)
நூல்: நஸயீ 4149
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.
அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14ம் நாள், 21ம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.
குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. மேலும் அகீகா கட்டாயக் கடமை, கொடுக்க விட்டால் தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை கற்றுத் தந்தால் அதை இயன்ற வரை நாம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
சக்தி இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்று எந்த வணக்கத்தையும் மார்க்கம் கட்டளையிடவில்லை.
"ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
"எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்'' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
எனவே அகீகாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை.
ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மேற்கண்ட புகாரி 7288வது ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 2:286வசனத்தின் அடிப்படையில் இந்த சுன்னத்தை நிறைவேற்றாமல் இருப்பது குற்றமில்லை
பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.
நான் நபி (ஸல்) அவர்களிடம், கஅபாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி, "இது கஅபாவில் சேர்ந்ததா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்'' என்றார்கள். "எதற்காக அவர்கள் இதைக் கஅபாவோடு இணைக்கவில்லை?'' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், "உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்'' என்று பதிலளித்தார்கள். "கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவில் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1584
பள்ளிவாசல்களிலேயே மிக அந்தஸ்து வாய்ந்த, முதல் ஆலயமான கஅபத்துல்லாஹ்வை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் மக்காவிலிருந்த முஸ்லிமல்லாதவர்கள் தான் புனர் நிர்மாணம் செய்துள்ளார்கள்.
கட்டுமானத்தில் அந்த மக்கள் செய்த தவறுகளைச் சரி செய்திருப்பேன் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர அவர்கள் கஅபாவைக் கட்டியதே தவறு என்று கூறவில்லை.
எனவே பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து நிதி பெறுவது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
தெளிவான ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகப்படுவதையும், அவர் ஏதேனும் தவறு செய்கின்றாரா என்று துருவித் துருவி ஆராய்வதையும் திருக்குர்ஆன் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)
ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு இது போன்று விசாரிப்பது தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எப்போது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றோமோ அப்போதே அவரைப் பற்றி புறம் பேசத் துவங்கி விடுகின்றோம். புறம் என்று துவங்குவது இரு நபர்களுக்கிடையே பெரும் மோதலில் போய் முடிகின்றது. அல்லது இரண்டு சமுதாயங்களுக்கிடையே மோதலுக்கு வழி வகுக்கின்றது.
அதனால் தான் இத்தனைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சந்தேகம் எனும் யூகத்தை திருக்குர்ஆன் தடை செய்கின்றது.
ஒருவரைப் பற்றித் தவறான செய்தி கிடைத்தால் அதைச் சம்பந்தப் பட்டவரிடமே நேரடியாகக் கேட்டு விடுவது தான் அதற்குத் தீர்வாக அமையுமே தவிர அவரைப் பற்றித் துருவித் துருவி ஆராய்வது பிரச்சனைக்குத் தான் வழி வகுக்கும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது. அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா? தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது, "அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275
இந்த ஹதீஸில் இரவில் தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓத வேண்டும் என்ற நற்செயலை ஷைத்தான் கற்றுக் கொடுத்ததாக இடம் பெற்றுள்ளது. இது சரியா என்பதைப் பார்க்கும் முன் ஷைத்தான் குறித்து குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
"இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்த வனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமா னோரை நன்றி செலுத்து வோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்)
(அல்குர்ஆன் 7:13-17)
அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்குப் பணியுமாறு ஷைத்தானுக்குக் கட்டளையிட்ட போது அவன் மறுத்து விட்டான். அப்போது நடந்த உரையாடல் இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
கியாம நாள் வரை உள்ள மக்களை வழி கெடுப்பது தான் ஷைத்தானின் பணி என்பதை இந்த வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவன் ஆவான். (அல்குர்ஆன் 19:44)
இந்த வசனத்திலும் இது போன்ற எண்ணற்ற வசனங்களிலும் ஷைத்தான் தீய செயல்களை மட்டுமே ஏவுவான் என்பது தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. மனிதர்களை வழி கெடுத்து, தீய செயல்களைச் செய்யத் தூண்டுவது தான் ஷைத்தானின் வேலை என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.
மேலும் ஷைத்தானை மனிதர்களால் பார்க்க முடியாது என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத் தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7:27)
இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கு முரணில்லாத வகையில் தான், மேற்கண்ட ஆயத்துல் குர்ஸீ தொடர்பான ஹதீஸை விளங்க வேண்டும்.
ஒரு நற்செயலை ஷைத்தான் கற்றுக் கொடுத்தான் என்பது ஷைத்தானின் பண்புகளுக்கு மாற்றமாக அமைந்திருப்பதால், நிச்சயமாக ஆயத்துல் குர்ஸீயை ஷைத்தான் கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.
பொதுவாக, கெட்ட மனிதர்களைப் பற்றிக் கூறும் போது, ஷைத்தான் என்று சொல்வதுண்டு. குர்ஆனிலும் இதற்கு ஆதாரம் உள்ளது.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின் றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)
எனவே ஸதக்கத்துல் ஃபித்ர் பொருளைத் திருட வந்தவன் கெட்டவன் என்ற கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் "ஷைத்தான்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்று விளங்கினால் குர்ஆனுக்கும், ஏனைய நபிமொழிகளுக்கும் முரணில்லாத வகையில் அமையும்.
பனூ ஆமிர் தூதுக் குழுவினர், நபி (ஸல்) அவர்களை நோக்கி, நீங்கள் எங்களின் தலைவர் என்று கூறிய போது, அல்லாஹ் தான் தலைவன் என்று நபி (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. நாம் இஸ்லாமிய மேடைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தலைவர் என்று தான் கூறுகின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் தலைவர் என்று அழைக்கக் கூடாது என்றால் திமுக தலைவர் என்றும் சொல்லக் கூடாதா?
அப்துல் அலீம், அய்யம்பேட்டை
தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அபூதாவூதில் 4172வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்ரஃப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும் இதற்கு மாற்றமான கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸில் தலைவர் என்பதற்கு ஸய்யித் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸய்யித் - தலைவர் என்ற பதத்தை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தி உள்ளார்கள்.
பனூ குரைழா குலத்தவர் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் தான் (ஓரிடத்தில்) இருந்தார்கள். அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவருக்காக எழுந்து செல்லுங்கள்'' என்று கூறினார்கள்....
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 3043
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் (தம் பேரப் பிள்ளை) ஹஸன் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனே மிம்பரில் ஏறினார்கள். பிறகு, "இந்த என் மகன் தலைவர் ஆவார். இவர் வாயிலாக அல்லாஹ் முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே சமாதானம் செய்து வைக்கக் கூடும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 3629
அல்லாஹ் தான் தலைவன் என்று கூறிய நபி (ஸல்) அவர்களே, மற்றவர்களைத் தலைவர் என்று அழைத்திருப்பதால் இரண்டையும் இணைத்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
மனிதர்களைத் தலைவர் என்று அழைப்பது, அல்லாஹ்வுக்கு நிகராக மனிதர்களைக் கருதும் அளவுக்குக் குற்றம் என்றால் அதை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
எனவே மனிதர்களில் ஒரு கூட்டத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவரையோ அல்லது ஓர் அமைப்பிற்குத் தலைமை தாங்கக் கூடியவர்களையோ தலைவர் என்று அழைப்பதில் தவறில்லை என்பதை அறியலாம்.
அப்படியானால் நபி (ஸல்) அவர்களைத் தலைவர் என்று பனூ ஆமிர் கூட்டத்தினர் அழைத்த போது அல்லாஹ் தான் தலைவன் என்று கூறியது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த ஹதீஸின் கருத்தை வைத்துப் பார்க்கும் போது, குறிப்பிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாகத் தெரிகின்றது. எனவே பனூ ஆமிர் கூட்டத்தினர், ஸய்யித் - தலைவர் என்ற வார்த்தையை, அல்லாஹ்வுக்கு நிகரான பொருளில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதனால் தான், அல்லாஹ்வே தலைவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூதாவூதின் விரிவுரையான அவ்னுல் மஅபூத் எனும் நூலில் இந்த ஹதீஸிற்கு விளக்கம் எழுதும் போது, பனூ ஆமிர் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள், எனவே தலைவர் என்ற வார்த்தையை அல்லாஹ்வுக்குப் பயன்படுத்துவது போன்ற அர்த்தத்தில் அவர்கள் பயன் படுத்தியிருக்கலாம் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். இது ஏற்கத்தக்க விளக்கமாக அமைந்துள்ளது.
எனவே அல்லாஹ் அல்லாதவர் களைத் தலைவர் என்று அழைப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
அபூசுஃப்யான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அவரை குறைஷிகளின் தலைவர் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார் கள். எனவே முஸ்லிம்களாயினும் மற்ற சமூகத்தவர்களாயினும் அவர்களில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களை, தலைவர் என்று அழைப்பதில் தவறில்லை
நானும் ஒரு பெண்ணும் பள்ளிப் பருவத்திலிருந்தே தோழிகளாக இருந்தோம். சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் எங்களுக்கிடையே சண்டை வந்து கொண்டிருந்தது. அதனால் நான் அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் பேசவில்லை என்பதால் அவளும் என்னுடன் பேசவில்லை. நான் பேசாமல் இருப்பதால் அல்லாஹ் என்னைத் தண்டிப்பானா?
பவுஜியா, திருச்சி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப் பட்டதன்று!
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 6065
இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் இறைக் கட்டளைக்கு மாற்றமாக நடக்கிறார் என்பதற்காக ஒருவருடன் பேசாமல் இருப்பது இதில் அடங்காது.
உதாரணமாக வரதட்சணைத் திருமணத்திற்கு நண்பர் அழைக்கும் போது நாம் மறுத்து விடுகிறோம். அல்லது மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஒருவர் ஈடுபடுகின்றார் என்பதற்காக அவருடன் பகைத்துக் கொள்கிறோம் என்றால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வுக்காக ஒருவரைப் பகைத்துக் கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"யார் அல்லாஹ்வுக்காக நேசித்தும், அல்லாஹ்வுக்காகக் கோபம் கொண்டும், அல்லாஹ்வுக் காகக் கொடுத்தும், அல்லாஹ்வுக்காக வெறுத்தும் வருகிறாரோ அவர் பூரணமான ஈமானை அடைந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 4061
? வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது. வரதட்சணை வாங்குவது குற்றம் என்று தடுத்தும் மீறி செய்கின்றார்கள். அதே சமயம் நம் உறவினர்களையும் ஒட்டி வாழ வேண்டும். நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தால் நாம் உறவைத் துண்டித்ததாக ஆகாதா? விளக்கவும்.
ஆரிஃப்
புதுக்கோட்டை
உறவினர்களை ஆதரிப்பதாக இருந்தாலும், வேறு எந்த நன்மையான காரியமாக இருந்தாலும் ஒரு தீமையின் மூலம் தான் அதை நிறைவேற்ற முடியும் என்றால் அதை இஸ்லாம் அங்கீகரிக்காது.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
பாவமான காரியத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் தடை செய்து விட்டான். வரதட்சணை என்ற பெரும் பாவத்தைச் செய்பவர் உறவினர் என்பதால் அந்தத் திருமணத்தில் போய் கலந்து கொண்டு அந்தத் தீமையை அங்கீகரிக்க முடியாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தும் மீறி அந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள் என்றால் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி விட வேண்டும் என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70
இந்த ஹதீஸின் அடிப்படையில் தீமையைக் கண்டால் அதைத் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் அதை விட்டு விலகி ஒதுங்கி இருப்பது தான் ஈமானின் இறுதி நிலை.
நெருங்கிய உறவினராக இருந்தாலும், பெற்ற தாய், தந்தையராக இருந்தாலும் இது தான் நிலை.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, நபியவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச் சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, "எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 5256
நபி (ஸல்) அவர்கள் தனது மகளார் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற போது, அங்கு உருவம் வரையப்பட்ட திரையைக் கண்டு திரும்பி விடுகின்றார்கள். எனவே நெருங்கிய உறவினராக இருந்தாலும் தீமை என்று வந்து விட்டால் அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ரமளான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயது முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிது சிறிதாகத் தான் குர்ஆன் அருளப்பட்டிருக்கும் போது ஒரே இரவில் அருளப்பட்டது என்பதன் பொருள் என்ன?
இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25:32)
திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. 17:106, 20:114, 76:32 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன் 97:1)
இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இது லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்பதையே 97:1 வசனம் கூறுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கணவன், மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் உணர்ச்சியின் காரணமாக இச்சை நீர் வெளிப்பட்டால் அதற்காகக் குளிக்க வேண்டுமா? அல்லது உளூச் செய்தால் போதுமா?
உணர்ச்சியினால் ஏற்படும் இத்தகைய கசிவுக்கு அரபியில் மதீ என்று பெயர்.
மதீ வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டார். "அதற்காக உளூச் செய்வது தான் கடமை. (குளிக்க வேண்டிய அவசியமில்லை)'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 132, 178, 269
இந்த ஹதீஸின் படி மதீ என்ற இச்சை நீர் வெளிப்பட்டால் குளிக்கத் தேவையில்லை. உளூச் செய்வது போதுமானதாகும்.
என் நண்பர் ஒருவர் உளூச் செய்து விட்டு, சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்டு விட்டு மீண்டும் உளூச் செய்யாமல் தொழுகின்றார். கேட்டால் இதற்குத் தடையில்லை என்று கூறுகின்றார். இப்படிச் செய்தால் உளூ கூடுமா?
சினிமாப் பாடல்களைக் கேட்பது தவறு என்பதில் சந்தேகமில்லை. உளூவுடனோ, உளூ இல்லாமலோ எந்த நிலையிலும் சினிமா பாடல்களைப் போட்டுக் கேட்பது பாவம் தான்.
ஆனால் அதே சமயம் அதனால் உளூ முறியும் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.
மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், காற்றுப் பிரிதல், தூக்கம், மதீ வெளிப்படுதல் என உளூவை முறிக்கும் காரியங்கள் என்னென்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒரு தீமையைச் செய்தால் உளூ நீங்கி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.
அழகுக்காக மொட்டை யடித்துக் கொள்ளலாமா? அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா?
ஜே. அப்துல் அலீம்
அய்யம்பேட்டை
தலையில் கறுப்பு அல்லாத சாயம் பூசுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். குறிப்பாக தலை நரைத்தவர்கள் கறுப்பு அல்லாத சாயம் பூசுவதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
யூதர்களும் கிறித்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலை முடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3462
மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா அழைத்து வரப்பட்டார். அவரது தலையும், தாடியும் வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை எதையேனும் கொண்டு மாற்றி விடுங்கள். கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3925
எனவே தலைக்குச் சாயம் பூசிக் கொள்வதற்கு மார்க்த்தில் எந்தத் தடையும் இல்லை. அதே போன்று ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வதற்கும் மார்க்கத்தில் தடை இல்லை.
ஆனால் அழகு படுத்துவதாக எண்ணிக் கொண்டு பாதி சிரைத்து, பாதி சிரைக்காமல் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறுவனைப் பார்த்தார்கள். அவனது தலையில் சிறிது சிரைக்கப்பட்டும், சிறிது (சிரைக்காமல்) விடப்பட்டும் இருந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். "ஒன்று முழுமையாக மொட்டையடித்து விடுங்கள். அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 4962, புகாரி 5920
அரபு நாடுகளில் முதலாளிகளை அர்பாப் என்று அழைக்கின்றார்கள். 3:64 வசனத்தில் அர்பாப் என்ற சொல்லை இறைவனுக்குப் பயன்படுத்துகின்றான். எனவே மனிதர்களை அர்பாப் என்று அழைக்கலாமா?
கதீஜா ஜெஸ்மின், துபை
அர்பாப் என்பது ரப் என்பதன் பன்மையாகும்.
ரப் என்ற வார்த்தைக்கு பரிபாலிப்பவன், எஜமானன், தலைவன் என்று பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
ரப் என்ற வார்த்தையை அல்லாஹ் தனக்குப் பயன்படுத்தியிருப்பது போலவே மனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான்.
என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப் படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 12:41)
இந்த வசனத்தில் எஜமானனுக்கு என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் ரப் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலாளிகளை அர்பாப் என்று அழைப்பதில் தவறில்லை.
எனினும் அல்லாஹ்வின் பண்புகளைக் குறிப்பிடும் பெயர்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கூற வேண்டும்.
உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. இதற்கு செவியுறுபவன் என்று பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் உள்ளது. எனவே மனிதனும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)
தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் ஸமீவுன் என்று அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது அவனது தகுதிக்குத் தக்க அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன். எவ்வளவு தொலைவிலிருந்து அழைத்தாலும் கேட்பவன். அதாவது அனைத்தையும் செவியுறுபவன் என்று இதனைக் கூறலாம்.
ஆனால் மனிதனைச் செவியுறுபவன் என்று கூறும் போது, இந்தக் கருத்தில் விளங்கக் கூடாது. ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பேசுவதைக் கேட்டு விளங்கிக் கொள்ள மனிதனால் முடியாது. எனவே மனிதனுக்குத் தக்க பொருளில் விளங்க வேண்டும்.
அது போன்றே ரப் என்ற வார்த்தையை இறைவனுக்குப் பயன்படுத்தும் போது, அனைத்தையும் பரிபாலிப்பவன், அகிலங்கள் அனைத்திற்கும் எஜமானன் என்ற கருத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ரப் என்ற வார்த்தையை மனிதனுக்குப் பயன்படுத்தும் போது, சாதாரண எஜமானன், முதலாளி என்ற கருத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 222
அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மடியில் இருக்கும் போது, அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். "வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையைக் கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். "பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: லுபாபா பின்த் அல்ஹர்ஸ் நூல்: அபூதாவூத் 320
குழந்தைகளின் சிறுநீருக்கே கழுவ வேண்டும் அல்லது தண்ணீர் தெளித்து விட வேண்டும் எனும் போது குழந்தைகளின் மலம் அசுத்தம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
குழந்தைகள் என்றால் எத்தனை வயது வரை என்பது குறித்து ஹதீஸ்களில் எதுவும் கூறப்படவில்லை. என்றாலும் புகாரியின் 223 மற்றும் 5693 ஆகிய ஹதீஸ்களில் "திட உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீருக்காக நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தெளித்தார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. எனவே பால் குடிக்கும் ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் மட்டுமே தண்ணீர் தெளித்து விட வேண்டும். உணவு சாப்பிடும் குழந்தைகள் ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் கழுவ வேண்டும்.