அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் மத்ஹபுகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள் திரு மறைக் குர்ஆனும் திரு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் தான். ஆனால் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் இந்த அடிப்படையை விட்டும் விலகிய காரணத்தினால் எண்ணற்ற பிரிவுகள் இம்மார்க்கத்தில் நுழைந்து அவைதான் இஸ்லாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்தப்பிரிவுகள் அனைத்தும் இம்மார்க்கத்திற்காக தியாகம் செய்த அறிஞர் பெருமக்களின் பெயரைப் பயன்படுத்தித் தான் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் இமாம்களில் எந்த ஒருவரும் என்னைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறவேயில்லை. மாறாக திருமறைக் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையுமே பின்பற்றுமாறு கூறியுள்ளார்கள்.
இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த மத்ஹபு பிரிவுகளினால் நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட நல்ல காரியங்கள் சுன்னத்தான நடைமுறைகள்  கட்டளைகள் மூடிமறைக்கப் பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல் நபியவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமான காரியங்கள்தான் சரியானவை என்று கருதி நடைமுறைப்படுத்தவும் படுகிறது.
அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் பெண்களை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வரவிடாமல் தடைசெய்வது. பெண்கள் அல்லாஹ்வைத் தொழுவதற்காக பள்ளிவாசல்களுக்கு வருவதை தடை செய்வதில்  மிக முக்கிய பங்காற்றுபவர்கள் தமிழக ஜமாத்துல் உலமாவினர்தான். இவர்கள் தங்களுக்கு சான்றாக திருமறை வசனங்களையோ ஹதீஸ்களையோ காட்டமாட்டார்கள், மாறாக தங்கள் பிரிவிற்கென்று உள்ள மத்ஹபு கிரந்தங்களைத் தான் ஆதாரமாக்கு கிறார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களின் எண்ணற்ற ஹதீஸ்கள் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகை நடத்துவதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதோ அவற்றைத் தருகின்றோம்.
தொழுகையை நீட்டித் தொழவேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி)
நூல்: புகாரி (868, 707)
பிள்ளைக்குட்டிகளுடன் குடும்பம் சகிதம் கூட்டாகவல்லவா கூட்டுத் தொழுகைக்கு வந்திருக்கின்றனர் பெண்கள்? இந்த ஹதீஸை அவர்கள் பார்க்கவில்லையோ? அவர் இதை எப்படி இஸ்லாமிய வழிமுறை இல்லை என்று கூறலாம்.
வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77 வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள் என்னருமை மகனே இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (763) திர்மிதி (283)
மக்ரிபில் நபி (ஸல்) அவர்கள் அன்று ஓதிய அத்தியாயத்தை இன்று இப்னு அப்பாஸ் (ரலி) ஓதக்கேட்டவுடன் பரவசம் அடையும் இந்த அம்மையார் பள்ளிக்கு வந்திருந்தால் தானே இவ்வளவு பசுமையாக நினைவு கூறமுடியும்.
குரல் கொடுக்கும் ஆண்களும் கைதட்டும் பெண்களும்
சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்குரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : புகாரி (1203) திர்மிதி (337)
ஒரே பள்ளியில் ஆண்களும் பெண்களும் தொழும் போது இமாமுக்கு கூட்டுத் தொழுகையில் தவறு ஏற்பட்டால் எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கற்றுத் தருகிறார்களே! வீட்டில் தொழும் பெண்களுக்கா இந்தக் கட்டளைகள்?
பள்ளிக்கு வந்து விட்டு திரும்பும் பெண்கள்
நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : புகாரி (837) (866) (875)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப் படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்படமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (867, 372, 578, 872)
பள்ளியில் உறங்கி வழியும் பெண்கள்
நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். "இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத்தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்கவில்லை'' என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (864, 866, 569, 862)
இந்த ஹதீஸ் ஆண்களும் பெண்களும் பள்ளியில் தூங்கி வழிவதைக் காட்டுகிறது.
இமாமின் குறைகளைச் சுட்டிக்காட்டும் பெண்கள்
 எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில்  குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபார கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாக குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிருத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தா செய்யும் போது அது என்னை விட்டு விலகி ( எனது பித்தட்டு தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண் உங்கள் இமாமின் பித்தட்டை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா? என்று கேட்டார். உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்த சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல் : புகாரி (4302)
ஒரு பெண் சிறு வயது இமாமிடம் கண்ட குறையை எடுத்துச் சொல்கின்றாரே அவர் இந்த ஜமாத்திற்காக பள்ளிக்கு வந்ததால் தானே இந்தக் குறையைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
பள்ளிக்கு வரும் பெண்கள் நறுமணம் பூசக் கூடாது
உஙகளில் ஒருத்தி பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசக் கூடாது என்று எங்களுக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அ வர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜைனப் (ரலி)
நூல் : முஸ்லிம் (674)
பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து பள்ளிக்கு ஒரு பெண் தாரளமாக வரலாம் ஆனால் நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது என்று தானே விளங்க முடியும் . அறவே வரக்கூடாது என்று விளங்க முடியுமா?
கிரகணத் தொழுகையும் பெண்களும்
எனக்கு மயக்கம் ஏற்படும் அளவிற்கு நானும் (கிரகணத் தொழுûயில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரி (1053)
பள்ளியில் தொழும் கிரகணத் தொழுகையில் பெண்களும் சேர்ந்து தொழுதிருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆக சாதாரணமான தொழுகையிலிருந்து விசேஷமான தொழுகை வரை பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கான வாய்ப்பை இந்த மார்க்கம் வழங்கியுள்ளது என்பதை தெளிவாக விளங்கலாம்.
இப்னு உமர் (ரலி) அவர்களின் ஆவேசம்
"உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) (தன்னுடைய மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு " நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்'' என்று கூறினார்கள்’
அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்
நூல் : முஸ்லிம் (666)
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவில் பள்ளிக்கு பெண்கள் வருவதைத் தடுக்காதீர்கள் என்று சொன்னதும் இப்னு உமர்(ரலி) அவர்களின் மகனார் பெண்களை வரவிடமாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள் என்று பதில் சொல்கின்றார். உடனே அவர்ளை கடுமையாக வெறுக்கின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சொல்கிறேன்  நீ வரவிடமாட்டேன் என்கிறாயா? என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஜாஹித்
நூல் : முஸ்லிம்(670)
இந்த பதிலைச் செவியுற்றதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் மகனின் நெஞ்சில் ஓங்கி அறைந்தார்கள் என்று முஸ்லிமில்  இன்னொரு இடத்தில் (671) இடம் பெற்றுள்ளது.
தான் மரணிக்கும் வரை இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் மகனுடன் பேசவில்லை என்ற செய்தி அஹ்மது(4696) எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திய செயலுக்கு மாற்றமாக செயல்படுவேன் என்று சொன்ன தன் மகனுடன் தகப்பனார் இப்னு உமர் (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை பேசவில்லை எனும் போது எந்த அளவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் இப்னு உமர் (ரலி) அவர்கள் உறுதியாக இருந்திருக்கின் றார்கள் என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது.
இப்னு உமர் (ரலி) எப்படி பின்பற்றினார்களோ அப்படித் தான் நாம் நபிகள் நாயகம் (அல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும்.
ஜமாத்துல் உலமாவின் ஏமாற்று வேலை
முஸ்லிம் பெண்களில் சிலர் இரண்டாம் கலீஃபா அவர்களின் மனைவியிடத்தில் அனுமதி கோரினாராம். அதற்கு அம்மனைவியார் உமர் (ரலி) அவர்கள் எது செய்தாலும் அதுசரிதான் என்றும், யூதப் பெண்கள் எப்படி வணக்கத் தலங்களில் அனுமதிக்கப்படவில்லையோ அது போல் முஸ்லிம் பெண்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்று பதில் கூறினாராம். இரண்டு காரணங்களால் இந்தக் கூற்று நிராகரிக்கப்படவேண்டும
முதலாவதாக,
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
என்ற அல்லாஹ்வின் கட்டளையில் உறுதியாக இருந்த உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அமல்படுத்திய நடைமுறையை எப்படி மாற்றத் துணிவார்கள்?
இரண்டாவதாக, உமர் (ரலி) அவர்கள் எது செய்தாலும் அது சரி என்று ஒரு அஸ்திவாரத்தைப் போட்டு, உமர் (ரலி) அவர்களை புகழ்வது போன்று ஒரு மாயையைத் தோற்றுவித்து, இச்செய்தியைக் கூறுவது உமர் (ரலி) அவர்களை மிகத் தரக்குறைவாகக் கேவலப்படுத்துகின்றது என்பதாலும், இது நிராகரிக்கப்பட வேண்டும்.
உமர் (ரலி) அவர்களை இது எப்படிக் கேவலப்படுத்துகிறது? அண்ணல் நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றி, யூதர்களின் நிழல் கூட தன்மீது படியாமலும், படராமலும் வாழ்க்கையை நடத்திச் சென்ற உமர் (ரலி) அவர்கள் பாழாய்ப் போன யூதர்களின் பாதையைப் பின்பற்றி தொழத் தடைவிதித்தார்கள் என்று மோசமான சிந்தனையை அல்லவா இது நம்மிடம் பதியவைக்கின்றது என்ற அடிப்படையில் இது நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். இந்த ஆதாரமற்ற செய்தியைக் கொண்டு மார்க்கமாகக் கூறுவது மார்க்கத்தில் விளையாடுவதாகும்.
இவர்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும் செய்திக்கு நேர்முரணாக ஆதாரப்பூôவமான செய்தியை புகாரியில் காண்கின்றோம்
உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் சுப்ஹு, இஷா தொழுகை களை பள்ளியில் ஜமாஅத்தாக தொழச் செல்வார்கள். அவரிடம் (உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதை தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, அதற்கு, அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (900)
உங்கள் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (873)
என்ற ஹதீஸின் அடிப்படையிலும் தன்னைத் தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் தடுக்க முடியாது, தடுக்கவும் மாட்டார்கள் என்று பள்ளிக்குச் சென்று வரும் உமர் (ரலி) அவர்கள் மனைவியின் கூற்று, ஜமாத்துல் உலமா எடுத்து வைக்கும் கூற்றுக்கு நேர் முரணான கருத்தாகும் என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டும்.
இங்கு இன்னொன்றையும் நாம் விளங்க வேண்டும். உமர்(ரலி) அவர்கள் தடுத்தார்கள் என்றே ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இத்தனை ஹதீஸ்களையும் ஓரங்கட்டிவிட்டு, உமர் (ரலி) அவர்களின் சொல்லை எடுக்க வேண்டும் என்று சொல்லுவதின் மூலம் உமர்(ரலி) அவர்கனை நபி (ஸல்)     அவர்களை விட உயர்த்தியதாக ஆகாதா? இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?
பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி (ஸல்) அவர்கள் (இன்று ) கண்டறிந்தால், பனூ இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 869)
பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்ற கருத்தையல்லவா இந்த செய்தி தருகின்றது என்று கேட்கலாம்.
அதிகமான சேட்டை செய்யும் தன் தம்பியைப் பார்த்து அண்ணன், நம்முடைய தகப்பனார் உயிரோடு இருந்திருந்தால் உன்னைக் கொன்றிருப்பார் என்று சொல்லும் போது நாம் என்ன விளங்கிக் கொள்வோமோ அதைத் தான் நாம் இங்கு விளங்க வேண்டும். பெண்களிடம் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியங்களை ஆயிஷா (ரலி) அவர்கள் காணும் போது அதைக் கண்டு பொறுக்காமல் இப்படியொரு கருத்தைத் தெரிவிக்கின்றார்கள். என்பதை நாம் தெளிவாகவே உணர முடிகின்றது.
 ஆலிம் பெருமக்கள் (?) சிந்திக்கத் துவங்கி பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பது போன்ற முத்துக்களைச் சிந்தவும் செய்வார்கள் என்ற காரணத்தால் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் இவ்வாறு ஒரு நிரந்தரக் கட்டளையைப் பிறப்பிக்கச் செய்துள்ளான்.
அல்லாஹ்வின் பெண் அடியார்களான    (பெண்கள்) பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (900)
இவ்வளவு சான்றுகளைக் கண்ட பிறகும் நபியவர்களின் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படுவது நியாயமா என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெண்கள் மாதவிடாய் போன்ற துப்புரவற்ற காலகட்டங்களில் பள்ளிக்கு வரஇயலாது. இந்த நிலையை நம்மால் கண்டறியவும் முடியாது. எனவே பெண்களை பள்ளிக்கு வரவிடமால் தடுப்பதே சிறந்ததாகும் என சிலர்  கூறுகின்றனர்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட குளிப்புக்கடமையான நிலையில் பள்ளிக்கு வருவதற்கு மார்க்கத்தில் தடையுள்ளது. ஒருவன் குளிப்புக் கடமையான நிலையில் இருக்கிறானா? இல்லையா? என்பதையும் நம்மால் கண்டறியவும் முடியாது. எனவே ஆண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என இவர்கள் தடைவிதிப்பார்களா?
இப்படிப்பட்ட தேவையற்ற காரணங்களைக் கூறி பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு தடைவிதிப்பது நபி வழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.
பெண்களும் பெருநாட்களும்
நபி (ஸல்) அவர்களுடைய காலகட்டத்தில் சாதரண நாட்களிலேயே பெண்கள் பள்ளிக்கு வந்து ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றி யிருக்கிறார்கள் என்பதற்கு நாம் எண்ணற்ற சான்றுகளைக் கண்டோம்.
சாதாரண நாளிலேயே பெண்கள் பள்ளியில் வந்து தொழலாம் எனும் போது பெருநாளில் தொழலாமா? என்ற கேள்வி அடிபட்டு போய்விடுகின்றது. பெண்களுக்கு என்று உள்ள உபாதையான காலகட்டங்களில் பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் தொழமுடியாது. இக்காலகட்டத்தில் மட்டும் பள்ளிக்கு வரமுடியாது அவ்வளவுதான். இது போன்ற காலகட்டங்களில் பெண்கள் பீடைகள் என்று கருதி வீட்டின் மூலையில் முடக்கி வைத்து முக்காடிட்டு அழச் செய்யாது இந்த மார்க்கம்.
அன்னை ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது மாதவிலக்காகி விடுகின்றார்கள். அப்போது அந்த நிலையை எண்ணி அன்னையார் அழும்போது,
நீ மாதவிலக்காகி விட்டாயா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் விதித்திருக்கும் உபாதையாகும் இது. ஹாஜிகள் செய்யும் எல்லா வணக்கங்களையும் செய்து கொள்க. ஆனால் நீ குளிக்கும் வரை தவாஃப் மட்டும் செய்யாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (294)
அண்ணலாரின் ஆறுதல் மிக்க இந்த வார்த்தைகள் இது பெண்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்த வேண்டிய சாபத்திற்குரிய காரியம் இல்லை என்பதைக் காட்டுகிறது.
இது போன்ற கால கட்டங்களில் பெண்கள் பெருநாளன்று கவலைப்பட்டு வீட்டில் முடங்கி விடக்கூடாது. அதே சமயத்தில் இந்த நிலையில் பள்ளிக்கும் வரஇயலாது என்பதாலோ என்னவோ அந்தத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் திடலுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அதே சமயம் தொழும் போது தொழுமிடத்தை விட்டும் தள்ளியிருக்க வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் உள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாத விடாயுள்ளவர்கள் தொழும் இடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)  நூல் : புகாரி (981)
ஆடையில்லாத பெண்ணுக்கு ஆடைவழங்குதல்
நாங்கள் இரு பெருநாட்களிலும் தொழுமிடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண்வந்து பனீ கலஃப் வம்சத்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரது சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக இந்தச் செய்தியை அறிவித்தார். (அவருடைய அறிவிப்பில் பெருநாள் தொடர்பாக இடம் பெற்ற செய்தி இதோ)
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை யளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 324)
அடுத்த பெண்ணுக்கு ஆடையில்லாவிட்டால் கூட ஆடையை கொடுத்து திடலுக்கு வரச் சொல்கிறார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இது பெருநாள் தொழுகை பெண்கள் கண்டிப்பாகக் கலந்து  கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
பெண்கள் பள்ளிக்கு வருவது தொடர்பான ஏராளமான சான்றுகளைக் கண்டோம். இவ்வளவு சான்றுகளைக் கண்ட பின்பும் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க முயன்றால்...
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழை யும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர் களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
(அல்குர்ஆன் 2:114)
என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியமாகக் கருதிவிட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஞாயிறு, 2 மே, 2010

இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் பெயரால்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு வருகிறோம்.
   தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.
    இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.
    ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். "உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி" எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.
    அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.
    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி "முஅத்தா முஹம்மது" என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் "இமாமுல் அஃலம்" எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.
    ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.
    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
    ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
 
 
  நூல்கள் ஹிஜ்ரி நூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  9.ஜாமிஉல்ருமூஸ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  10.ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  11.பதாஉல் கதீர் 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  12.குலாஸத் கைதானி 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  13.சல்பீ 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  14.பஹ்ரு ராயின் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  15.தன்வீர் அப்ஸார் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  16.தகீரா 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  17.துர்ருல் முக்தார் 11ம் நூற்றாண்டு 900 வருடங்களுக்குப் பின்
  18.ஃபதாவா ஆலம்கீரி 12ம் நூற்றாண்டு 1000 வருடங்களுக்குப் பின்
 

    இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள "ஃபதாவா ஆலம்கீரி" மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.
    இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் "ஃபத்வா" (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.
    இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய "முஅத்தா மாலிகி" நூலுக்கு விளக்கம் தந்து "அவ்ஜஜுல் மஸாலிக்" என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் "முஹன்னஃபுல் மாலிகி" மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
    எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.
    அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜின்கள் வானங்களையும் பூமியையும் கடக்க முடியுமா ?


மனிதனும் ஜின்னும் ஆற்றலைப் பெற்றுத் தான் வானங்கள் மற்றும் பூமியைக் கடந்து செல்ல முடியும் என்று 55:33 வசனம் கூறுகின்றது  ஆனால் 72:8,9 வசனங்களில் நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்திலேயே ஜின்கள் பூமியைக் கடந்து சாதாரணமாகச் சென்றதாக உள்ளதே! விளக்கவும்.
வானம் மற்றும் பூமியைக் கடப்பதற்கு ஆற்றல் தேவை என்று குர்ஆன் கூறுவதை ஒரு முன்னறிவிப்பு என்ற கோணத்தில் மட்டுமே பார்ப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மனிதனுக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்பே ஜின் இனத்திற்கு அந்த ஆற்றல் வழங்கப் பட்டிருந்ததாக குர்ஆன் கூறுகிறது.  இது எந்த வகையிலும் 55:33 வசனத்திற்கு முரண்பட்டதல்ல!
இரண்டு பேரை அழைத்து, உங்களிடம் அதிக பணம் இருந்தால் தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம்.  இதில் இரண்டு பேரிடமும் பணம் இருக்கின்றதா இல்லையா என்ற தகவல் இல்லை.  இரண்டு பேரில் ஒருவரிடம் பணம் இருக்கலாம்.  மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். அது இங்கு குறிப்பிடப்படவில்லை.  வெளிநாடு செல்வதற்கு அதிகப் பணம் தேவை என்ற செய்தி மட்டுமே சொல்லப்படுகின்றது.
இது போல் இந்த வசனத்தில், வானம் மற்றும் பூமியின் விளிம்பைக் கடப்பதற்கு ஓர் ஆற்றல் தேவை என்று தான் கூறப்படுகின்றதே தவிர, இன்னும் யாருக்குமே அந்த ஆற்றல் இல்லை என்று கூறப் படவில்லை.  மனிதனுக்கு தற்காலத்தில் அந்த ஆற்றல் கிடைத்திருப்பது போல் ஜின்களுக்கு முற்காலத்திலேயே அந்த ஆற்றல் வழங்கப் பட்டிருந்தது என்று தான் இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.  பூமியைக் கடந்து செல்வது பற்றி மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அந்தக் காலத்தில் இதைப் பற்றி குர்ஆன் கூறுவதால் இதை மனித சமுதாயத்திற்குக் கூறப்பட்ட முன்னறிவிப்பாக எடுத்துக் கொள்கிறோம்.

இமாமுக்கு சம்பளம் கொடுப்பது சரிதானா ?


எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படுவதை ஆதாரமாகக் காட்டுகிறார். இமாமுக்குச் சம்பளம் கொடுப்பது சரியா? தவறா? விளக்கவும்.
மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:273
பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.
இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்தி-ருந்து தெரிகிறது.
ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்தி-ருந்து அறியலாம்.
அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுயமரியாதையை இழப்பதோ கூடாது.
எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ?


என் பெயர் ஆறுமுகம். நான் ஒரு முஸ்லிம் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய முதலாளி, எல்லோரும் ஒன்று என்று தான் கூறுவார். ஆனால் ரமளான் மாதத்தில் ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு மட்டுமே கொடுக்கிறார். முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிறார். அப்படிப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் ஆட்சிக் காலத்தில் ஜகாத் பணம் வசூலித்து, கஷ்டப்பட்ட மக்களுக்குத் தான் வழங்கினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் எப்படி வாழ்ந்திருக்க முடியும்?
பொதுவாக தர்மங்களை எந்த ஏழைக்கும் வழங்கலாம். முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் என்று பிரிக்கத் தேவையில்லை.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:60
மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் எட்டு பிரிவினருக்கு மட்டுமே ஜகாத் எனும் கடமையான தர்மத்தை வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது. இந்த எட்டு பிரிவினரில் முஸ்-மல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்-மல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்-ம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது.
எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் நிதியைத் தர முடியாது என்று ஒரேயடியாக மறுக்கும் உங்களது முதலாளியின் கருத்து தவறானதாகும். இஸ்லாம் குறித்து நல்லெண்ணம் கொண்ட தங்களைப் போன்றவர்களுக்கு ஜகாத்தை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.
இவ்வாறு ஜகாத் நிதியைக் கொடுப்பதன் மூலம் அந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி நல்லெண்ணம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் இதை வலியுறுத்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இந்த அடிப்படையில் ஜகாத் நிதியை வழங்கியுள்ளார்கள்.

155. 2:62 வசனத்தின் படி யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?


திருக்குர்ஆன் 2:62 வசனத்தில் நல்லறம் செய்யும் யூத, கிறித்தவர்களுக்குக் கவலை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?
நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 9:60
இந்த வசனத்தில், நல்லறம் செய்யும் எல்லா யூத, கிறித்தவர்களுக்கும் கவலை இல்லை என்று கூறப்படவில்லை. யூத, கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி, அதாவது ஈமான் கொண்டு நல்லறம் செய்பவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தான் இந்த வசனம் கூறுகின்றது.
ஈமான் கொள்ளாத யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று அழைப்பதில் தவறில்லை. இதைக் கீழ்க்கண்ட வசனத்திலிருந்தும் அறியலாம்.
இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.
அல்குர்ஆன் 29:47
முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பாத, அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாத அனைவருமே இஸ்லாத்தின் பார்வையில் காஃபிர்கள் - இறை மறுப்பாளர்கள் தான். காஃபிர்களைத் தவிர வேறு யாரும் நமது வசனங்களை மறுப்பதில்லை என்று இறைவன் கூறுவதிலிருந்து இதை அறிய முடியும்

பள்ளிவாசல் மிம்பர் படிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இருக்க வேண்டுமா ?


பள்ளிவாசல் மிம்பர் படிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்று ஆகஸ்ட் 07 இதழில் எழுதியுள்ளீர்கள். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறும் போது ஆமீன், ஆமீன், ஆமீன் என்று மூன்று படிகளில் கூறி அதற்கு விளக்கமும் அளித்தார்கள். எனவே மிம்பர் படிகள் அமைக்கும் போது மூன்று தான் அமைக்க வேண்டும் என்று தெரிகிறதே?
மிம்பர் என்பது இமாம் உரையாற்றுவதற்காக அமைக்கப்படும் மேடை தான். இது குறிப்பிட்ட வடிவத்தில், இத்தனை படிகளுடன் அமைந்திருக்க வேண்டும் என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.
நபித்தோழர் ஒருவர் மிம்பர் செய்து கொடுப்பதற்கு முன்பு வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு மரப் பலகையின் மீது சாய்ந்தவாறு அல்லது ஊன்றியவாறு நின்று தான் உரையாற்றியுள்ளார்கள். நபித்தோழர் கேட்ட பின்னர், விரும்பினால் செய்து தாருங்கள் என்று கேட்டு, அதன் மீது நின்று உரையாற்றியுள்ளார்கள்.
அதிலும் இன்ன வடிவத்தில் தான் மிம்பர் அமைந்திருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதிலிருந்து ஒரு உயரமான மேடை என்பது தான் முக்கியமே தவிர, மிம்பர் என்பதன் வடிவத்திலோ, படிகளின் எண்ணிக்கையிலோ எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை விளங்கலாம்.
நீங்கள் குறிப்பிடும் ஹதீஸிலும் மிம்பர் படிகளின் எண்ணிக்கை குறித்து உத்தரவோ அல்லது மூன்று படிகள் அமைப்பது நபிவழி என்றோ குறிப்பிடப்படவில்லை. மூன்று படிகளின் மீது ஏறும் போதும் நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து மூன்று தான் அமைக்க வேண்டும் என்று சட்டம் எடுக்க முடியாது.
நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் கூரைகளால் அமைக்கப்பட்டது என்பதால் கூரைகளில் தான் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்று கூற முடியுமா? இது போன்று தான் மிம்பர் விஷயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?


முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971

பிரச்சாரம் செய்ய பொய் சொல்லலாமா ?


மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது, மக்களுக்கு உண்மையை விளங்க வைப்பதற்காகப் பொய் கூறுவது தவறில்லை என்று நாம் சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ் தனது திருமறையில், இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறி, அதில் முன்மாதிரி இருக்கின்றது என்று கூறுவதன் அடிப்படையில் தான் கூறுகின்றோம்.
குர்ஆன், ஹதீஸ் இரண்டுமே மார்க்கத்தின் அடிப்படைகள் தான். குர்ஆனில் ஒரு விஷயம் சொல்லப்பட்டு, ஹதீஸில் மற்றொரு விஷயம் சொல்லப்பட்டால் இரண்டையுமே முஸ்லிம்கள் பின்பற்றியாக வேண்டும்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சொல்லப்படும் செய்திகளும் வஹீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காகக் குர்ஆனைப் புறக்கணித்து விட்டு, ஹதீஸைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறக்கூடாது.
இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
"யார் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி, நன்மையைச் சொல்கிறாரோ அல்லது நன்மையை வளர்க்கிறாரோ அவர் பொய்யர் அல்ல'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 1. போர், 2. மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துதல், 3. கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் (இணக்கத்திற்காக) சொல்கின்ற பொய் செய்தி என்ற இந்த மூன்று கட்டங்களில் தவிர வேறு எப்போதும் நபி (ஸல்) அவர்கள் பொய் சொல்வதற்கு அனுமதித்ததாக நான் செவியுற்றதில்லை.
அறிவிப்பவர்: உம்மு குல்ஸும் (ரலி)
நூல்: முஸ்லிம் 4717
இந்த ஹதீஸில் சமாதானம் ஏற்படுத்துதல், போர், கணவன் மனைவி இணக்கம் ஆகியற்றுக்காகப் பொய் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள்.
இவை தவிர, அறியாமையில் உள்ள மக்களிடம் மார்க்கத்தை விளங்க வைப்பதற்காகப் பொய் கூறுவதை திருக்குர்ஆன் அங்கீகரிக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது மக்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காக சில   தந்திரமான வழி முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
ஊர் மக்கள் திருவிழாவுக்காகச் சென்ற போது இப்ராஹீம் (அலை) அவர்கள், "நான் நோயாளி' என்று கூறிவிட்டு ஊரிலேயே தங்கினார்கள். மக்கள் சென்ற பின் அங்கிருந்த சிலைகளை உடைத்து விட்டு, "பெரிய சிலை தான் இதைச் செய்தது'' என்று கூறினார்கள்.
இந்த வரலாற்றை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறான். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பினையாக அல்லாஹ் நமக்கு சொல்-க் காட்டுவதால் ஏகத்துவக் கொள்கையை, பிறருக்குப் புரிய வைப்பதற்காக இது போன்ற தந்திரங்களைக் கையாளலாம் என்று கூறியுள்ளோம். எனவே இது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல!
மார்க்கத்திற்காகப் பொய் கூறலாம் என்றால், குருடர்கள் பார்க்கிறார்கள்; ஊமைகள் பேசுகிறார்கள் என்று பொய்யைச் சொல்லி மார்க்கத்தை வளர்க்கலாம் என்றோ, அல்லது ஷியாக்களைப் போன்று தகிய்யா கொள்கை கொண்டிருக்கலாம் என்பதோ இதன் பொருளல்ல! இப்ராஹீம் (அலை) அவர்கள் அது போன்ற பொய்களைக் கூறியதில்லை.
சிலைகளுக்கோ, சூரியன், சந்திரன் போன்ற இதர படைப்பினங்களுக்கோ எந்தச் சக்தியும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் ஆயுதமாகத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய்யைப் பயன்படுத்தினார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாஸா தொழுகையை பள்ளிவாசல் அல்லாத சாதாரண இடங்களில் தொழ வைக்கலாமா ?


சுன்னத் ஜமாஅத்தினரால் ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பள்ளிவாசலில் இருக்கும் ஜனாஸா பெட்டியைத் தர மறுக்கிறார்கள் என்றால் எப்படி மய்யித்தைக் கொண்டு போய் அடக்கம் செய்வது? மேலும் ஜனாஸா தொழுûயை வீட்டு முன்பாகத் தொழுது விட்டு ஜனாஸாவைக் கொண்டு போய் அடக்கம் செய்யலாமா?
இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
முஸ்லிம்களில் யாருக்கும் ஜனாஸா பெட்டி தர மறுப்பதற்கோ, அல்லது அடக்கம் செய்வதைத் தடுப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு தடுப்பவர்கள் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அடக்கம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
இனி கேள்விக்கு வருவோம்.
ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கென குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை.
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். "அபூ ஹம்ஸாவே நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். "நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?'' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955,
அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640
"நல்ல மனிதரின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் "என்னை முற்படுத்துங்கள்!' என்று அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் "எனக்குக் கேடு தான்! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று அது கேட்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1882
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கட்டிலில் வைத்து ஜனாஸா எடுத்துச் செல்லப் பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன.
கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து வழக்கம். உடலை வளையாமல் எடுத்துச் செல்வது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட வடிவம் முக்கியம் அல்ல.
இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் சந்தாக் பெட்டியில் எடுத்துச் செல்வதும் கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வதும் சமமானது தான்.
எனவே பள்ளிவாசலில் ஜனாஸா பெட்டி தரவில்லை என்றால் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. சாதாரண கட்டிலில் வைத்துக் கொண்டு போய் அடக்கம் செய்யலாம்.
அது போன்று ஜனாஸா தொழுகையும் பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. வீட்டில் கூட ஜனாஸாவை வைத்துத் தொழுது விட்டுப் பின்னர் அடக்கத்தலம் கொண்டு சென்று அடக்கலாம்.
தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள், அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். (தொழுவிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா
நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

ஒருவனது சுமையை இன்னொருவன் சுமக்க மாட்டான்


ஒருவனது சுமையை இன்னொருவன் சுமக்க மாட்டான் 17:15 என்பதுவும் "உன் பாவத்துடன் என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (5:29) முரண்படில்லையா ?
 ஒருவனது சுமையை இன்னொருவன் சுமக்க மாட்டான் என்று 17:15 வசனம் கூறுகின்றது. இன்னொரு வசனத்தில், "உன் பாவத்துடன் என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (5:29) என்று இடம் பெறுகின்றது. இரண்டும் முரணாகத் தோன்றுகிறதே! ஒருவர் சுமையை மற்றொருவர் சுமப்பாரா? மாட்டாரா? விளக்கவும்.
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
அல்குர்ஆன் 17:15
ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று திருக்குர்ஆன் மேற்கண்ட வசனத்திலும், 6:164, 35:18, 39:7 உள்ளிட்ட பல வசனங்களிலும் கூறுகிறது.
இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.
எனவே இதற்கு முரணில்லாத வகையில் தான் நீங்கள் குறிப்பிடும் 5:29 வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
"என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்''
"உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்)
அல்குர்ஆன் 5:27, 28, 29
இந்த வசனங்கள் ஆதம் (அலை) அவர்களின் இரண்டு புதல்வர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் பற்றிப் பேசுகின்றன. அதில் ஒருவர், மற்றொருவரைக் கொல்வேன் என்று கூறும் போது, அந்த நல்லவர், "நான் உன்னைக் கொல்ல முயற்சி செய்ய மாட்டேன்; நீ ஏற்கனவே செய்த பாவங்களுடன் என்னைக் கொலை செய்த பாவத்தையும் சுமந்து நரகவாசியாக ஆக வேண்டும்'' என்று கூறுகிறார்.
இந்த வசனங்களில் ஒருவரது பாவத்தை மற்றொருவர் சுமப்பார் என்று கூறப்படவில்லை.
எனது பாவம் என்பது, என்னைக் கொலை செய்த பாவம் என்ற கருத்தில் இங்கு கையாளப்படுகிறது. இது எல்லா மொழிகளிலும் வழக்கில் உள்ளது தான். என்னுடைய பாவம் உன்னைச் சும்மா விடாது என்று நாம் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. அது தான் இந்த வசனத்திலும் கூறப்படுகின்றதே தவிர, ஒருவரது பாவத்தை மற்றவர் சுமப்பார் என்ற கருத்தில் கூறப்படவில்லை.

வசதி வந்தவுடன் அகீகா கொடுக்கலாமா ?

எனக்குப் பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா? அதற்கு நன்மை உண்டா?
மார்க்கத்தில் சில அமல்களைக் குறிப்பிட்ட காலத்தில் தான் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் அதை அந்தக் காலத்தில் தான் செய்ய வேண்டும். அதுவல்லாத நாட்களில் செய்யலாம் என்றால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமையான வணக்கங்களுக்கும் இது தான் சட்டமாகும். கடமையல்லாத, சுன்னத்தான அமல்களுக்கும் இது பொருந்தும்.
உதாரணமாக ஆஷுரா நோன்பு, அரஃபா நோன்பு போன்ற நபிவழிகளை அந்தந்த நாட்களில் செய்தால் தான் அதற்கான நன்மை கிடைக்கும். இந்த அமல்களை வேறு நாட்களில் செய்ய முடியாது.
அது போன்று அகீகா எனப்படும் நபிவழியையும் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் செய்ய வேண்டும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இதுவல்லாத மற்ற நாட்களில் கொடுப்பதால் அகீகா என்ற அந்த நபிவழிக்குரிய நன்மை கிடைக்காது.
"ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப்(ரலி)
நூல்: நஸயீ 4149
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.
அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14ஆம் நாள், 21ஆம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன.
எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.
ஏழாவது நாளில் கொடுப்பதற்கு வசதியில்லை என்றால் நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான்.
எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க: 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites