அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 2 மே, 2010

பிரச்சாரம் செய்ய பொய் சொல்லலாமா ?


மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது, மக்களுக்கு உண்மையை விளங்க வைப்பதற்காகப் பொய் கூறுவது தவறில்லை என்று நாம் சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ் தனது திருமறையில், இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறி, அதில் முன்மாதிரி இருக்கின்றது என்று கூறுவதன் அடிப்படையில் தான் கூறுகின்றோம்.
குர்ஆன், ஹதீஸ் இரண்டுமே மார்க்கத்தின் அடிப்படைகள் தான். குர்ஆனில் ஒரு விஷயம் சொல்லப்பட்டு, ஹதீஸில் மற்றொரு விஷயம் சொல்லப்பட்டால் இரண்டையுமே முஸ்லிம்கள் பின்பற்றியாக வேண்டும்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சொல்லப்படும் செய்திகளும் வஹீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காகக் குர்ஆனைப் புறக்கணித்து விட்டு, ஹதீஸைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறக்கூடாது.
இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
"யார் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி, நன்மையைச் சொல்கிறாரோ அல்லது நன்மையை வளர்க்கிறாரோ அவர் பொய்யர் அல்ல'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 1. போர், 2. மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துதல், 3. கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் (இணக்கத்திற்காக) சொல்கின்ற பொய் செய்தி என்ற இந்த மூன்று கட்டங்களில் தவிர வேறு எப்போதும் நபி (ஸல்) அவர்கள் பொய் சொல்வதற்கு அனுமதித்ததாக நான் செவியுற்றதில்லை.
அறிவிப்பவர்: உம்மு குல்ஸும் (ரலி)
நூல்: முஸ்லிம் 4717
இந்த ஹதீஸில் சமாதானம் ஏற்படுத்துதல், போர், கணவன் மனைவி இணக்கம் ஆகியற்றுக்காகப் பொய் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள்.
இவை தவிர, அறியாமையில் உள்ள மக்களிடம் மார்க்கத்தை விளங்க வைப்பதற்காகப் பொய் கூறுவதை திருக்குர்ஆன் அங்கீகரிக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது மக்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காக சில   தந்திரமான வழி முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
ஊர் மக்கள் திருவிழாவுக்காகச் சென்ற போது இப்ராஹீம் (அலை) அவர்கள், "நான் நோயாளி' என்று கூறிவிட்டு ஊரிலேயே தங்கினார்கள். மக்கள் சென்ற பின் அங்கிருந்த சிலைகளை உடைத்து விட்டு, "பெரிய சிலை தான் இதைச் செய்தது'' என்று கூறினார்கள்.
இந்த வரலாற்றை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறான். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பினையாக அல்லாஹ் நமக்கு சொல்-க் காட்டுவதால் ஏகத்துவக் கொள்கையை, பிறருக்குப் புரிய வைப்பதற்காக இது போன்ற தந்திரங்களைக் கையாளலாம் என்று கூறியுள்ளோம். எனவே இது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல!
மார்க்கத்திற்காகப் பொய் கூறலாம் என்றால், குருடர்கள் பார்க்கிறார்கள்; ஊமைகள் பேசுகிறார்கள் என்று பொய்யைச் சொல்லி மார்க்கத்தை வளர்க்கலாம் என்றோ, அல்லது ஷியாக்களைப் போன்று தகிய்யா கொள்கை கொண்டிருக்கலாம் என்பதோ இதன் பொருளல்ல! இப்ராஹீம் (அலை) அவர்கள் அது போன்ற பொய்களைக் கூறியதில்லை.
சிலைகளுக்கோ, சூரியன், சந்திரன் போன்ற இதர படைப்பினங்களுக்கோ எந்தச் சக்தியும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் ஆயுதமாகத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய்யைப் பயன்படுத்தினார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites