அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

2-இறைநம்பிக்கை (ஈமான்)


பாடம் : 1
இறைநம்பிக்கை (ஈமான்), அடிபணிதல் (இஸ்லாம்), அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்) ஆகியவை பற்றிய விளக்கமும்; தூய்மை யாளனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதியை நம்புவதன் அவசியமும்; விதியை நம்பாதவனுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை' என்பதற்கான ஆதாரமும்; அவன் தொடர்பாக வந்துள்ள கண்டனமும்.2
அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் அல்குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கி றோம். அவனைக்கொண்டே நாம் நிறைவடை கிறோம். வல்லமை மிக்க (அந்த) அல்லாஹ்வின் நல்லருள் இன்றி நாம் நல்வாய்ப்பினைப் பெற இயலாது.
1 யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:3
(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ என்பவரேயாவார்.4 இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்' அல்லது உம்ரா'ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்'' என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப் பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப் பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன். அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்'' என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்' செய்வதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்'' என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்'' என்றார்.
அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்'' என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)'' என்று கூறினார்கள்.
அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும்,5 காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்'' என்று கூறினார்கள்.6
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்'' என்று சொன்னார்கள்.7
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
2 யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅபத் பின் காலித் அல்ஜுஹனீ என்பார் விதி தொடர்பாக (மாறுபட்ட) கருத்தைத் தெரிவித்த போது அதை நாங்கள் ஆட்சேபித்தோம். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஒரு தடவை ஹஜ்ஜுக்குச் சென்றோம்.
இதையடுத்து மேற்கண்ட ஹதீஸை அதன் அறிவிப்பாளர்தொடர் (இஸ்னாத்) உடன் அப்படியே முழுமையாகக் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிற்சில வார்த்தைகளில் கூடுதல் குறைவு உண்டு.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
3 அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் யஅமர் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோர், நாங்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது விதியைப் பற்றியும் அது குறித்து அவர்கள் (-மஅபதும் அவர் ஆதரவாளர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம்'' என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளபடி அறிவித்தனர். ஆனால், அதைவிடச் சற்றுக் கூடுதலாகவும் சில இடங்களில் சற்றுக் குறைத்தும் அறிவித்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
4 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
5 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ் வின் தூதரே! ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலி ருப்பதும், கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையான ஸகாத்தை நிறைவேற்றி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்றார்கள்.
அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டி ருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்'' என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?'' என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப் படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:
ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். முழு ஆடையில்லாத, செருப்பணியாதவர்கள் எல்லாம் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டினால் அதுவும் மறுமையின் அடையாளங் களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது நிகழ விருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங் களில் அடங்கும்.
பிறகு,நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ் விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல் லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்'' எனும் (31:34ஆவது) இறைவசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
பின்னர் (கேள்வி கேட்ட) அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்'' என்று சொன்னார்கள். மக்கள் உடனே அவரைத் திரும்ப அழைத்துவரச் செல்லலாயினர். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை. பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். மக்களுக்கு அவர்களது மார்க்கத்(தின் அடிப்படைத் தத்துவத்)தை கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்'' என்று சொன்னார்கள்.8
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
6 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களால் அறிவிக்கப்பெற்றுள்ளது. ஆயினும், அவர்களது அறிவிப்பில் (ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின்...' என்பதற்கு பதிலாக) ஓர் அடிமைப் பெண் தன் கணவனைப் பெற்றெடுப்பாளாயின்...'' என்று காணப்படுகிறது.
7 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அப்போது (எங்கிருந்தோ) ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் ஒட்டி அமர்ந்து,அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாம் என்பது), அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அம்மனிதர் உண்மைதான்'' என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?'' என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர் களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும், விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்'' என்றார்.
அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டி ருப்பதைப் போன்ற உணர்வுடன் அவனை நீங்கள் அஞ்சுவதாகும். ஏனெனில், நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது நிகழும்?'' என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்) கேள்வி கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எசமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, உடலில் உடையணியாத, செவிடர்களையும் குருடர்களையும் (போன்று வாழ்கின்ற கல்வி கலாசாரமற்ற மக்களை) நீங்கள் பூமியின் அரசர்களாய்க் கண்டால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும். இவ்வாறு கூறிவிட்டு, நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்'' எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
பிறகு (கேள்வி கேட்க வந்த) அம்மனிதர் எழுந்து (சென்று)விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை என்னிடம் திரும்ப அழைத்துவாருங்கள்'' என்று கூறினார்கள்.
உடனே அவர் தேடப்பட்டார். ஆனால், மக்களால் அவரைக் காண இயலவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்துபோன)வர்
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். நீங்கள் என்னிடம் (விளக்கம்) கேட்க முற்படாதபோது, (தம் வாயிலாக) நீங்கள் விளக்கம் பெற வேண்டும் என அவர் விரும்பினார். (அதற் காகவே அவர் வந்தார்)'' என்று கூறினார்கள்.
04.01.2010. 17:44

பாடம் : 2

பாடம் : 2
இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை பற்றிய விளக்கம்.
8 தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. பின்னர் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கினார். அப்போதுதான் அவர் இஸ்லாத்தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின் விதியாகும்)'' என்று பதிலளித்தார்கள். உடனே அவர், "இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, "இல்லை; நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்'' என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்'' என்று சொன்னார்கள்.9
9 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், (அவற்றின் இறுதியில்) "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்' அல்லது "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.10
04.01.2010. 17:45

பாடம் : 3

பாடம் : 3
இஸ்லாத்தின் தூண்(களான முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.
10 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் -புத்திசாலியான- ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து,11 முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்'' என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்' என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்' என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?'' என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்' என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்' என்று சொன்னார்கள்.
அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்'' என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்' என்றார்கள்.
தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்'' என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?'' என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்' என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்'' என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்' என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?'' என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்'' என்றார்கள்.
பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவுமாட்டேன்'' என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்'' என்று கூறினார்கள்.12
11 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்'' என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள்.
04.01.2010. 17:46

பாடம் : 4

பாடம் : 4
சொர்க்கம் செல்வதற்குக் காரணமாய் அமையும் இறைநம்பிக்கை (ஈமான்) பற்றிய விளக்கமும், தமக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார் என்பது பற்றிய விளக்கமும்.
12 அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தை' அல்லது மூக்கணாங் கயிற்றைப்' பிடித்துக்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதரே' அல்லது முஹம்மதே' என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத் திலிருந்து விலக்கியும்வைக்குமே அத்தகைய ஒரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (ஏதும் பேசாமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்' அல்லது நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்''' என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் நீர் என்ன சொன்னீர்?'' என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை வழங்க வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்'' என்று கூறிவிட்டு, ஒட்டகத்தை விட்டுவிடுவீராக (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்)'' என்று கூறினார்கள்.13
13 மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும்வைக்க வேண்டும்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்'' என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்றுவிடுவார்'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதை இவர் கடைப்பிடித்தால்...'' என்று இடம்பெற்றுள்ளது.
15 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்'' என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மனிதர், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவு மாட்டேன்'' என்று கூறினார்.
அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.14
16 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் கவ்கல் (ரலிலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி, (மார்க்கத்தில்) விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஆம்' என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
17 மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துளது.
அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்'' என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
18 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கடமையான தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று, (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து, இவற்றைவிட வேறெதையும் அதிக மாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?'' என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்' என்றார்கள். அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்'' என்று கூறினார்.15
04.01.2010. 17:48

பாடம் : 5

பாடம் : 5
இஸ்லாத்தின் (ஐம்)பெரும் தூண்களான முக்கியக் கடமைகள் பற்றிய விளக்கம்.16
19 சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்றார்கள்.
அப்போது ஒருவர், "(நான்காவதாக) ஹஜ் செய்வதையும் (ஐந்தாவதாக) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதையும்தானே (நபி அவர்கள் குறிப்பிட்டார்கள்)?'' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இல்லை. (நான்காவது) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, (ஐந்தாவது) ஹஜ் செய்வது'' என்று கூறிவிட்டு, "இவ்வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்'' என்று கூறினார்கள்.
20 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப் பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆகியனவே அந்த ஐந்தும்.)
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
21 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
22 தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அறப்போரில் கலந்துகொள்வதில்லையே (ஏன்)?'' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன்: நிச்சயமாக இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. (போரில் கலந்துகொள்வது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றல்ல. அதிலும் இப்போது நடைபெறும் போர்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன)'' என்று கூறினார்கள்.17
04.01.2010. 17:49

பாடம் : 6

பாடம் : 6
அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மார்க்க நெறிமுறைகளையும் நம்பிக்கை கொள்ளுமாறும், அதன்பால் (மக்களை) அழைத்தல், அதைக் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளல், அ(வ்வாறு தெரிந்துகொண்ட)தை மனனம் செய்து காத்தல், அதைப் பற்றிய தகவல் எட்டாத மக்களுக்கு அதை எட்டச் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறும் வந்துள்ள கட்டளை.
23 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் "ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். (உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே "முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும்.18 ஆகவே, எங்களுக்குச் சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்களும் கடைப்பிடித்து, எங்களுக்குப் பின்னால் (எங்கள் ஊரில்) இருப்பவர்களையும் அவற்றைக் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்'' என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.
(கட்டளையிடும் நான்கு விஷயங்கள்:)
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. (பிறகு அதை மக்களுக்கு விவரித்துக் கூறும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிகூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை (அரசு பொது நிதிக்கு)ச் செலுத்துவது (ஆகியவைதாம் அவை).
(மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்.19
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை'' என்று கூறி, (அந்த நான்கில்) "ஒன்று' என (தமது விரலை) மடித்துக் காட்டினார்கள் என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.20
24 அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அரபுமொழி தெரியாத) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து பழச்சாறு (மது) ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும் மண்பானை குறித்து (அதை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாமா? என)க் கேட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தூதுக் குழுவினர் யார்?' அல்லது "இக்கூட்டத்தார் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ரபீஆ' (குடும்பத்தினர்)'' என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இழிவுக்குள்ளாகாமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த சமூகத்தாரே! வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக் குழுவினர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்' குலத்து இறைமறுப்பாளர்களில் இன்ன குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். (இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்குத் தெளிவான சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்கள் எங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம்; அ(வற்றைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்'' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளையிட் டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த் தடை செய்தார்கள்: அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என விளக்கமளித்துவிட்டு); தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. அத்துடன், போரில் கிடைக்கும் பொருள்களிலி ருந்து ஐந்திலொரு பங்கை (அரசுப் பொது நிதிக்கு) நீங்கள் செலுத்திட வேண்டும்'' என்று(ம்) கூறினார்கள்.
மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை (பயன் படுத்தக் கூடாதெனத்) தடை விதித்தார்கள். "இவற்றை நினைவில் வைத்து, உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்'' என்றும் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர் அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் "(பேரீச்சமரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப் படும்) மரப் பீப்பாய்' ("அந்நகீர்') என்றும், வேறு சில நேரங்களில் "தார் பூசப்பட்ட பாத்திரம்' (அல்முகய்யர்) என்றும் அறிவித்தார்கள்.
அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களுக்குப் பின்னால் இருப்பவர் களுக்கு (அறிவித்துவிடுங்கள்)' என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. "தார் பூசப்பட்ட பாத்திரம்' ("அல்முகய்யர்') பற்றி அதில் காணப்படவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.21
25 மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், "(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண்சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை விதிக்கிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஆத் அல்அம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது:
(அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல்
2. நிதானம்.
26 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இறைவனின் தூதரே! நாங்கள் "ரபீஆ' குலத்தாரின் (இன்ன) குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு) எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணையாக் காதீர்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொது நிதிக்கு)ச் செலுத்துங்கள்.
நான்கு பொருட்களை உங்களுக்கு நான் தடை செய்கிறேன். சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் மரப் பீப்பாய் ("அந்நகீர்') ஆகியவைதாம் அவை'' என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், "இறைவனின் தூதரே! "அந்நகீர் என்பது என்னவென்று தாங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (அறிவேன்). பேரீச்சமரத்தின் அடி மரத்தைத் துளையிட்டு அதில் "சிறு பேரீச்சம் பழங்களை' அல்லது "பேரீச்சம் பழங்களை' நீங்கள் போட்டு வைப்பீர்கள். பிறகு அதில் தண்ணீரை ஊற்றுவீர்கள். அதன் கொதி நிலை அடங்கியதும் அதை நீங்கள் அருந்துவீர்கள். (அதை அருந்தியதும் போதையேற்றப்பட்டுவிடுகிறது.) எந்த அளவிற் கென்றால் "உங்களில் ஒருவர்' அல்லது "மக்களில் ஒருவர்' தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையே கூட வாளால் வெட்டிவிடுகின்றார்'' என்று கூறினார்கள்.
அந்தத் தூதுக் குழுவினரிடையே இவ்வாறு காயமேற்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்கப்பட்டுக்கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்'' என்று கூறுகிறார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப் பாத்திரத்தில்தான் அருந்துவோம்?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகளில்'' என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்கு தோல் பைகள் சரிப்பட்டு வரா'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட் டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!'' என்று கூறினார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரின் (தலைவர்) அஷஜ் (ரலி) அவர் களிடம் கூறினார்கள்:
உங்களிடம் அல்லாஹ் நேசிக்கின்ற இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல் 2. நிதானம்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த அப்துல் கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த ஹதீஸை) நமக்கு அறிவித்தார்.
27 அபூநள்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் அதில், (மரப் பீப்பாய் (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில் நபி (ஸல்) அவர்கள்) "பேரீச்ச மரத்தின் அடி மரத்தைக் குடைந்து அதனுள் "சிறு பேரீச்சம் பழங்களை' அல்லது "பேரீச்சம் பழத்தையும் தண்ணீரையும்' கலந்துவிடுவீர்கள்'' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
"சிறு பேரீச்ச மரங்களை' அல்லது "பேரீச்சம் பழங்களை' என்று ஐயப்பாட்டுடன் அறிவிப்பாளர் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள வாசகம் அதில் இடம்பெறவில்லை.
அந்தத் தூதுக் குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு இதை அறிவித்தனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா மேற்கண்டவாறு அறிவித்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
28 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத் தகும்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மரப் பீப்பாயில் ("அந்நகீரில்'-ஊற்றிவைக்கப்பட்ட பானத்தை) அருந்தாதீர்கள்'' என்று கூறினார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! அந்நகீர் என்பது என்ன என்று தாங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தின் நடுவே துளையிடப்படு வதுதான்'' என்று கூறிவிட்டு, "சுரைக்காய்க் குடுவையிலும் மண் சாடியிலும் நீங்கள் அருந்தாதீர்கள். சுருக்குக் கயிற்றால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
04.01.2010. 17:50

பாடம் : 7

பாடம் : 7
இஸ்லாமிய உறுதிமொழிகள் மற்றும்
நெறி முறைகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தல்.
29 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன் னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர் களுக்கு அழைப்புவிடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகை களைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம் ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
30 அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது "நீங்கள் ஒரு
சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள்...' என்று சொன்னார்கள்'' எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முழுமையாக அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
31 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரி டம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் அவர்கள்மீது (நாளொன்றுக்கு) இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களில் செல்வர்களாயிருப்பவர்களிடமிருந்து வசூலிக் கப்பெற்று அவர்களில் ஏழைகளாயிருப்பவர் களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக்கொள் ளுங்கள். ஆனால், மக்களின் செல்வங்களிலி ருந்து உயர்ந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றை ஸகாத்தாகப் பெறாதீர்கள்).
04.01.2010. 17:51

பாடம் : 8

பாடம் : 8
மக்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்று கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் வழங்கி, நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த அனைத்துக் கட்டளைகளையும் நம்பிக்கை கொள்ளாதவரை அவர்களுடன் போரிடுமாறு (இறைத் தூதருக்கு) இடப்பெற்ற உத்தரவு; அவ்வாறு செய்தவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தமது உயிரையும் உடைமையையும் காத்துக்கொள்வார்; அவரது அந்தரங்கம் அல்லாஹ்விடம் விடப்படும் என்ற அறிவிப்பு; ஸகாத் முதலான இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றை மறுப்பவருடன் போரிடப்படும் என்ற அறிவிப்பு; ஆட்சித் தலைவர் இஸ்லாமிய அடையாளங்(களான சில விதிமுறை)களுக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்ற உத்தரவு.
32 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயத்தமானார்கள். அப்போது) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று (இந்த) மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் -தகுந்த காரணமிருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார். அவரது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ் வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழங்கிவந்த ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் வழங்க மறுத்தாலும் அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்'' என்றார்கள். இது குறித்து உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை, போர் (தொடுப்பதன் மீது உறுதியான முடிவு) செய்வதற்காக அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக்கொண்டேன்'' என்று கூறினார்கள்.23
33 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டையிடப்பட்டுள்ளது. யார் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து காத்துக்கொள்வார். அவரது (அந்தரங்கம் குறித்த)
விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
34 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள (மார்க்கத்)தையும் நம்புகின்றவரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதை அவர்கள் செயல்படுத்தினால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது உயிரையும் செல்வத்தை யும் என்னிடமிருந்து காத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
35 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அவர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லி விட்டால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமை களையும் பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'' என்று கூறினார்கள். பிறகு, "(நபியே!) நிச்சயமாக நீர் நினைவூட்டுபவர்தாம். அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவர் அல்லர்'' எனும் இறை வசனங்களை (88:21, 22) ஓதிக் காட்டினார்கள்.
வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
36 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
37 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்துவிடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதைத் தாரிக் பின் அஷ்யம் பின் மஸ்ஊத் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
38 மேற்கண்ட ஹதீஸ் தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று...' என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.24
04.01.2010. 17:53

பாடம் : 9

பாடம் : 9
மரணத் தறுவாயில் உள்ள ஒருவர், உயிர் பிரிவதற்கு சற்று முன்னர் இஸ்லாத்தை ஏற்றால்கூட அது செல்லும்; இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுஇணைவைப்பாளராக உள்ள நிலையில் இறந்துபோனவர் நரகவாசிகளில் ஒருவர்தாம். அவரை எந்த வகையிலும் காப்பாற்ற முடியாது- என்பதற்கான ஆதாரம்.25
39 முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டைய பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லை யும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் அல்முஃகீராவையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லைவைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்'' என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் "அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?'' என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அபூதாலிப் அவர்களிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள்; தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது "நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்'' என்பதாகவே இருந்தது. "லா இலாஹ இல்லல்லாஹ்'' எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்'' என்று சொன்னார்கள். அப்போது தான் கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் -அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி- அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை'' எனும் (9:113ஆவது) வசனத்தை அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்து கிறான்'' எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.26
40 மேற்கண்ட ஹதீஸ் மேலும் சில அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்போது அல்லாஹ் வசனத்தை அருளினான்'' என்று ஹதீஸ் முடிகிறது. அவ்விரு வசனங்களும் அந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை. மேலும், "அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் தாம் முன்பு சொன்னதையே (அபூதாலிபிடம்) திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந் தார்கள்'' என்றும் இடம்பெற்றுள்ளது.
மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த இடத்தில் "அவ்விருவரும் அவரிடம் அதைச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்'' என்று இடம்பெற்றுள்ளது.
41 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை (அபூதாலிப்) உடைய மரண தறுவாயில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமை நாளில் (அல்லாஹ்விடம்) சாட்சியம் கூறுவேன்'' என்று கூறினார்கள். ஆனால் அவர், (ஏகத்துவ உறுதி மொழி கூற) மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது'' எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
42 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் பெரிய தந்தை (அபூதாலிபின் மரண தறுவாயில்) அவர்களிடம், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இதை வைத்து உங்களுக்காக நான் மறுமை நாளில் சாட்சியம் கூறுவேன்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "பயம்தான் அவரை இவ்வாறு செய்யவைத்தது என்று என்னைப் பற்றிக் குறைஷியர் குறை கூறிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் (ஏகத்துவ உறுதிமொழியான) இதைக் கூறி உம்முடைய கண்களை நான் குளிர வைத்திருப்பேன்'' என்று கூறினார். அப்போதுதான் அல்லாஹ் "(நபியே!) நீங்கள் விரும்பியவரை (யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்'' எனும் (28:56 ஆவது) வசனத்தை அருளினான்.
04.01.2010. 17:54

பாடம் : 10

பாடம் : 10
ஓரிறைக் கோட்பாட்டில் இறந்தவர் சொர்க்கம் செல்வது உறுதி என்பதற்கான ஆதாரம்.27
43 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
44 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது மக்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. அதனால் மக்களின் (உணவுக்காகப்) பயண ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்கலாம் என்று கூட நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்றுதிரட்டி, அதில் (பெருக்கம் ஏற்பட) தாங்கள் பிரார்த்தித்தால் நன்றாயிருக்குமே!'' என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அப்போது தம்மிடம் கோதுமை வைத்திருந்தவர் கோதுமையைக் கொண்டுவந்தார்; பேரீச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். -அறிவிப்பாளர் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கூறுகிறார்கள்: முஜாஹித் (ரஹ்) அவர்கள், "பேரீச்சம் பழங்களின் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கொண்டுவந்தார்'' என்று கூறினார்கள். நான், "பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்துகொண்டி ருந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவற்றை வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை அருந்திக்கொள்வார்கள்'' என்று கூறினார்கள்.-
(மக்களிடமிருந்த உணவுப் பொருட்கள் ஒன்று திரட்டப்பட்டன.) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவ்வாறே பெருக்கம் ஏற்பட்டது.) எந்த அளவிற்கென்றால் மக்கள் அனைவரும் தங்கள் பயண(த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொண்டனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ் வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார்'' என்று கூறி னார்கள்.28
45 அபூஹுரைரா (ரலி), அல்லது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!'' என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்'' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
(மக்களில்) ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு "உங்கள் பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர். (இருப்பினும்) இன்னும் அது எஞ்சியது. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாரும் சொர்க்கத்தைவிட்டுத் தடுக்கப்படமாட்டார்'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
46 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக' எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப் பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்' என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்' என்பது இடம்பெறவில்லை.
47 அபூஅப்தில்லாஹ் அப்துர் ரஹ்மான் பின் உசைலா அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்று அழுதேன். அப்போது அவர்கள் "அமைதியாயிருங்கள். ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! சாட்சியம் கூறுமாறு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன். பரிந்துரை செய்ய எனக்கு வாய்ப்பளிக்கப் பட்டால் உங்களுக்காக நான் பரிந்துரைப்பேன்; எனக்கு சக்தி இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நான் பயன் அளிப்பேன்'' என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற உங்களுக்குப் பயனுள்ள எந்தச் செய்தியையும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்ததில்லை. ஆனால், ஒரே ஒரு செய்தியைத் தவிர. அந்தச் செய்தியையும் இதோ என் உயிர் பிரியப்போகும் இந்நேரத்தில் உங்களிடம் நான் சொல்லப் போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்.
48 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர் களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத்பின் ஜபல்!!'' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது'' என்றார்கள்.
இன்னும் சிறிது தூரம் சென்ற பின் "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். அவர்கள், "அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பது தான்'' என்று சொன்னார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30
49 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்குப் பின்னால் "உஃபைர்' என்றழைக்கப் பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "முஆத்! அல்லாஹ்வுக்கு அடியார்கள் மீதுள்ள உரிமை என்ன? அடியார் களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று (என்னிடம்) கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதில் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வின் மீது அடியார்களுக்குள்ள உரிமை யாதெனில், அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமலிருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்'' என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.31
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
50 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "முஆத்! அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே வணங்கப்பட வேண்டும். அவனுக்கு எதுவும் இணையாக்கப்படக் கூடாது'' என்று கூறிவிட்டு, "அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணைகற்பிக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்'' என்று சொன்னார்கள்.
இதை அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
51 அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆத் (ரலி) அவர்கள், "என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளித்தேன். அப்போது அவர்கள் "மனிதர்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று கேட்டார்கள்''. (இவ்வாறு கூறிவிட்டு) மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
52 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "அபூஹுரைராவா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். "நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவேதான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக்கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா!' (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணி களையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!'' என்று கூறினார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்'' என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!'' என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள்.
நான், "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, "திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறினார்'' என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?'' என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)'' என்று சொன்னார்கள்.
53 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை "முஆத்!' என்று அழைத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கி றேன்(கூறுங்கள்)'' என்று முஆத் பதிலளித் தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!' என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றார்கள். (இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!' என்று (மீண்டும்) அழைத் தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இதையே நம்பிக்கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்'' என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.33
54 மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, "தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)'' என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (என் கண் பார்வை போய்)விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "நீங்கள் வந்து என் வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்று சொல்லியனுப்பினேன். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறுநாள் என் வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றியும்) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் அவர்களுக்குப் பெரும் பங்கிருப்பதாகக் கூறினர்.
அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்துபோக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேர வேண்டும் என்றும் விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (-மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?'' என்று கேட்டார்கள். மக்கள், "அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் "நரகத்தில் நுழையமாட்டார்' அல்லது "நரகம் அவரைத் தீண்டாது' '' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை (மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே, நான் என் புதல்வரிடம் "இதை எழுதி வைத்துக்கொள்'' என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.34
55 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
எனக்குக் கண்பார்வை போய்விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "(என் வீட்டுக்கு) நீங்கள் வந்து எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள்'' என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களும் (என் வீட்டுக்கு) வந்தனர். அப்போது மக்களில் மாலிக் பின் துக்ஷும் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது. (இவ்வாறு கூறிவிட்டு) சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப் போன்றே தொடர்ந்து கூறினார்கள்.
04.01.2010. 17:56

பாடம் : 11

பாடம் : 11
அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டவர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)தாம். அவர் பெரும் பாவங்களைச் செய்திருந் தாலும் சரியே- என்பதற்கான ஆதாரம்.35
56 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
04.01.2010. 17:57

பாடம் : 12

பாடம் : 12
இறைநம்பிக்கையின் கிளைகளின் எண்ணிக்கை, அவற்றில் உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, இறைநம்பிக்கையின் ஓர் அம்சமான நாணத்தின் சிறப்பு ஆகியவை பற்றிய விளக்கம்.
57 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.36
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
58 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது "அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
59 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் சகோதரருக்கு, (அதிகமாக) நாணம் (கொள்வதால் ஏற்படும் நஷ்டம்) தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.
அப்போது "(அவரை விட்டுவிடு!) நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்'' என்று நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் தம் சகோதரருக்கு நாணப்படுவது தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்'' என்று அந்த அறிவிப்பு (சிறு வித்தியாசத்துடன்) தொடங்குகிறது.
60 அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நாணம் நன்மையே தரும்'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "சில (வகை) நாணத்தில் கம்பீரம் உண்டு; சில (வகை) நாணத்தில் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறினார். அப்போது (அவரிடம்) இம்ரான் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏடுகளில் உள்ளவை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள்.37
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
61 அபூகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தினம் இம்ரான் (ரலி) அவர்கள் "நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "நாங்கள் "சில நூல்களில்' அல்லது "தத்துவ(ப் புத்தகத்)தில்' அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் மன அமைதியும் கம்பீரமும் உண்டு. மற்றச் சில வகையில் பலவீனம் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்) காண்கிறோம்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இம்ரான் (ரலி)
அவர்கள் தம் கண்கள் சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு எதிர்க்கருத்து கூறுகின்றீர்களே!'' என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள். புஷைர் அவர்களும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும் கூறினார்கள். அப்போதும் இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். நாங்கள், "அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை'' என்று கூறி (இம்ரான் அவர்களை சமாதானப் படுத்தி)க்கொண்டிருந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
04.01.2010. 17:59

பாடம் : 13

பாடம் : 13
இஸ்லாத்தின் அனைத்து விஷயங் களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம்.
62 சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்' அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்' அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது'' என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்' என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!'' என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
04.01.2010. 17:59

பாடம் : 14

பாடம் : 14
இஸ்லாம் கூறும் நல்லறங்களுக்கிடையேயான வித்தியாசமும் அவற்றில் மிகவும் சிறந்தது எது என்பது பற்றிய விளக்கமும்.
63 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும்
சிறந்தது எது?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்''
என்று பதிலளித்தார்கள்.38
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
64 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலி ருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள்.
65 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார் களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
66 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?'' என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய பண்பே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டது'' என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மீதி மேற்கண்டவாறே இடம்பெற்றுள்ளது.39
04.01.2010. 18:00

பாடம் : 15

பாடம் : 15
இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றிய விளக்கம்.
67 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட நேசத்திற்குரி யோராய் இருப்பது.
2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
68 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்துகொள்வார்.
1. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசித்துக்கொண்டிருப்பது.
2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட நேசத்திற்குரியோராவது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே அவர் விரும்புவது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில் "மீண்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ தாம் மாறுவதைவிட (நெருப்பில் வீசப்படுவதை அவர் விரும்புவது)'' என்று (சிறு மாற்றத்துடன்) ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites