அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

4-மாதவிடாய்


பாடம் : 1
மாதவிடாயில் உள்ள மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது.2
492 (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருக்கும்போது கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆடை கட்டிக்கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்.3
இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
493 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் நிலையிலேயே கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். பிறகு அணைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உஙகளில் எவரால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? (அவ்வாறி ருந்தும் ஆடைக்கு மேல்தான் அணைத்தார்கள்.)
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
494 (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள தம் துணைவியரை கீழாடைக்கு மேலாக அணைத்துக்கொள்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 2
மாதவிடாய் உள்ள மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுப்பது.
495 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுத்திருப்பார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் ஆடையே (தடையாக) இருக்கும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை குறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
496 (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குஞ்சம் வைத்த ஒரு போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் (போர்வைக்குள்ளி ருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய் (கால)த் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். (ஆயினும்) அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். பெருந்துடக்குடன் இருந்த நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் நீராடுவோம்.4
பாடம் : 3
மாதவிடாய் உள்ள பெண் தன் கணவனின் தலையைக் கழுவிவிடுவதும் தலைவாரி விடுவதும் செல்லும்; அவளது உமிழ்நீர் தூய்மையானதுதான்; அவளது மடியில் தலை வைத்துப் படுக்கலாம்; அவ்வாறு படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதவும் செய்யலாம்.5
497 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருக்கும்போது (அருகிலிருக்கும் வீட்டிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.
498 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது) இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவேன். வீட்டில் யாரேனும் உடல் நலமில்லாமல் இருந்தால் போகிற போக்கில் அப்படியே (உடல்நலம்) விசாரித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஃதிகாஃபில் இருந்தால்) பள்ளிவாசலில் இருந்துகொண்டு தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.6
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (மக்கள்) இஃதிகாஃபில் இருக்கும் போது... என இடம்பெற்றுள்ளது.
499 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது பள்ளிவாசலிலிருந்து தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். மாதவிடாய் எற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.
500 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் எற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன்.
501 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையைக் கழுவிவிடுவதுண்டு.
502 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
503 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா! மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
504 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்துகொண்டிருக்கும்போது (தம் துணைவியாரிடம்), ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் உனது கையிலில்லை என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.7
505 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவர்கள் அருந்து வார்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை.
506 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஒதுவார்கள்.
507 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர் களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்றபோது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்... என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர்.
பாடம் : 4
பாலுணர்வு கிளர்ச்சி நீர்8
508 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள்.9
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
509 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) பற்றிக் கேட்க வெட்கப்பட்டேன். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தல் வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று பதிலளித்தார்கள்.
510 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனிதனிலிருந்து வெளியாகும் பாலுணர்வு கிளர்ச்சி நீர் குறித்து, அது கசிந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பதற்காக மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் அனுப்பிவைத்தோம். அ(வர் கேட்ட)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள்: பிறவி உறுப்பில் தண்ணீர் ஊற்றி(க் கழுவி)விடுங்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
பாடம் : 5
உறங்கியெழுந்ததும் முகத்தையும் கைகளையும் அலம்பிக்கொள்வது.
511 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன்.) நபி (ஸல்) அவர்கள் இரவில் விழித்தெழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு முகத்தையும் கைகளையும் அலம்பிவிட்டு வந்து பின்னர் (மீண்டும்) உறங்கினார்கள்.10
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
பாடம் : 6
பெருந்துடக்கு உடையவர் (குளிக்காமலேயே) உறங்கலாம்; அவர் உண்ணவோ பருகவோ உறங்கவோ (மீண்டும்) புணரவோ விரும்பினால் தமது பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வது விரும்பத் தக்கதாகும்.11
512 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் உறங்கப் போவதற்கு முன் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
513 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது
514 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் பெருந்துடக்கு உடையவராய் இருக்க, (குளிக்காமலேயே) அவர் உறங்கலாமா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்ட பின் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
515 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருவர் பெருந்துடக்கு உடையவராய் இருக்க, அவர் (குளிக்காமல்) உறங்கலாமா? என்று விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் பின்னர் உறங்கட்டும். விரும்பும்போது குளித்துக்கொள்ளட்டும் என்று பதிலளித்தார்கள்.
516 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள்; பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உறங்குங்கள் என்று கூறினார்கள்.12
517 முஆவியா பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வித்ர் தொழுகை பற்றிக் கேட்டேன் என்று கூறி விட்டு அது தொடர்பான ஹதீஸை அறிவித் தார்கள். (மேலும் அவர்கள் கூறினார்கள்:)
நான் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), பெருந்துடக்கு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டர்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? அல்லது குளித்துவிட்டு உறங்குவார்களா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இரண்டு முறை களையும் கையாண்டுவந்தார்கள். சில நேரங் களில் குளித்துவிட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு உறங்கினார்கள் என்று பதிலளித்தார்கள். நான், (மார்க்க) விஷயங்களில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
518 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளட்டும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிறு வாசக மாற்றத்துடன் அவ்விரண்டுக்குமிடையே அவர் ஒரு முறை உளூச் செய்துகொள்ளட்டும் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
519 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்தியஉறவு கொள்ளச்) சென்றுவிட்டு வந்து ஒரேயொரு தடவை குளிப்பார்கள்.
பாடம் : 7
பெண்ணுக்கு (மதன) நீர் வெளிப்படுவதன் மூலம், அவள்மீது குளியல் கடமையாகும்.13
520 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் (கனவில்) காண்பதைப் போன்று பெண்ணும் கண்டு, ஆண்கள் தம்மிடம் காண்பதைப் போன்றே பெண்ணும் தம்மிடம் (நீரைக்) கண்டாள். (இந்நிலையில் அவள்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களும் அங்கு இருந் தார்கள். அவர்கள், உம்மு சுலைம்! (இவ்வாறு வெட்கமின்றி கேட்டதன் மூலம்) பெண்ணினத் தையே கேவலப்படுத்திவிட்டாயே! உன் வலக் கை மண்ணைக் கவ்வட்டும் என்று கூறி னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், இல்லை; நீதான் (பெண்ணினத்தைக் கேவலப் படுத்திவிட்டாய்!) உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறிவிட்டு, ஆம்; அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக்கொள்ள வேண்டும் என்று (உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள்.
இதை இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னாருடைய பாட்டிதான் உம்முசுலைம் (ரலி) அவர்கள்.
521 உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். (இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப் பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள்.
522 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆண் உறக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள்.
523 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவ தில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் எற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; (விழித்தெழும்போது தன்மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள்மீது கடமைதான்) என்று பதிலளித்தார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் எற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உனது கை மண்ணைக் கவ்வட்டும்! பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.14
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம்) பெண்ணினத்தையே நீ கேவலப்படுத்திவிட்டாய் என்று உம் முசலமா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளளது.
- மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆயிஷா (ரலி) அவர்கள், சீ! பெண்ணும் அதைக் காண்பாளா? என்று உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
524 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
அப்போது நான் அந்தப் பெண்ணிடம், உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயம டையட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடு! (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது! பெண்ணுடைய நீர் (-கருமுட்டை) ஆணுடைய நீரை (-விந்தணுவை)விட மேலோங்கி (முந்தி) விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது (-மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கிவிட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 8
ஆண் மற்றும் பெண்ணுடைய விந்தின் தன்மையும், இருவருடைய நீர்மத்திலிருந்தே குழந்தை படைக்கப்படுகிறது என்ற விவரமும்.15
525 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க! என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். நான், அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே)? என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா? என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்! என்றார்கள்.
அந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர், மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று கேட்டார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க, சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.
பிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தை(யின் பிறப்பு) குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.
அந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தேன் என்று ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், (மீனில் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்பதைக் குறிக்க ஸியாதத் எனும் சொல்லுக்கு பதிலாக) ஸாயிதத் எனும் சொல்லும், (ஆண் குழந்தை பிறக்கும்; பெண் குழந்தை பிறக்கும் என்பதைச் சுட்ட) அத்கரா மற்றும் ஆனஸா எனும் இருமை வாசகத்திற்கு பதிலாக, அத்கர மற்றும் ஆனஸ எனும் ஒருமை வாசகமும் இடம் பெற்றுள்ளன.
பாடம் : 9
பெருந்துடக்கிற்கான குளியல் முறை
526 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றிப் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள். பிறகு மேனி முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், கால்களைக் கழுவியது பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
527 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் இரு கைகளையும் (மணிக்கட்டு வரை) மூன்று முறை கழுவுவார்கள்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பிலும் கால்களைக் கழுவியது பற்றியக் குறிப்பு இடம் பெறவில்லை.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பாத்திரத் திற்குள் கையை நுழைப்பதற்கு முன்பாக தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள்.
528 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டுவந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) பிறவி உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக் கையால் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவினார்கள்.
பின்னர் தொழுகைக்கு அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டுவந்தேன். ஆனால், அவர்கள் அதை வாங்கி(த் துடைத்து)க்கொள்ள மறுத்துவிட்டார்கள்.16
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மூன்று முறை கை நிரம்ப தலைக்குத் தண்ணீர் ஊற்றியது பற்றிய வாசகம் இடம்பெறவில்லை.
வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அங்கத் தூய்மை செய்த முறை முழுமையாக விவரிக்கப் பட்டுள்ளது. வாய் கொப்புளித்தது, மூக்கிற்கு நீர் செலுத்தியது பற்றியக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் துவாலை (கொண்டுவந்தது) பற்றிய குறிப்பு இல்லை.
529 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் துவாலை கொண்டு வரப்பட்டது. ஆனால், அவர்கள் அதைத் தொடவில்லை. தண்ணீரைத் தமது கரத்தால் இவ்வாறு உதறிவிடலானார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
530 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப் பக்கத்திலும் பிறகு இடப் பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள்.17
இதை காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 10
பெருந்துடக்கிற்காகக் குளிப்பவர் பயன்படுத்த வேண்டிய தண்ணீரின் விரும்பத் தக்க அளவு, ஒரே நேரத்தில் ஒரே பாத்திரத்திலிருந்து ஆணும் பெண்ணும் நீராடுவது, இரு பாலரில் ஒருவர் மிச்சம் வைத்த தண்ணீரில் மற்றொருவர் குளிப்பது ஆகியவை பற்றி.18
531 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக ஒரு ஃபரக் கொள்ளளவு பாத்திரத்தில் குளிப்பார்கள்.19
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
532 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில், சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் எடுத்து) குளிப்போம் என்றும் ஒரு ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும் என்றும் இடம்பெற்றுள்ளது.
533 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்.20 அப்போது அவர் களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு ஸாஉ அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள். (அது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.)21
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்துவிடுவார்கள்.22
534 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிக்கும்போது முதலில் தம் (உடலின்) வலப் பக்கத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவுவார்கள். பிறகு தம்மீதுள்ள அசுசிமீது தமது வலக் கரத்தால் தண்ணீர் ஊற்றி இடக் கரத்தால் அதை(த் தேய்த்து)க் கழுவுவார்கள். இவற்றைச் செய்து முடித்துவிட்டுத்தான் தலைக்குத் தண்ணீர் உற்றுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
535 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் மூன்று முத்து அல்லது அதற்கு நெருக்கமான அளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்போம்.23
இதை ஹஃப்ஸா பின்த் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
536 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவருடைய கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறிமாறிச் செல்லும்.24
இதைக் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
537 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும்போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டுவையுங்கள் என்று கூறுவேன்.
538 (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
539 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்கள் மிச்சம் வைத்த தண்ணீரில் குளிப்பார்கள்.25
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
540 (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களும் பெருந்துடக்கிற்காக ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.26
இதை ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
541 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.27
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
542 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள். ஒரு ஸாஉ அளவு முதல் ஐந்து முத்து வரைத் தண்ணீரில் குளிப்பார்கள்.
543 (நபித்தோழர் அபூஅப்திர் ரஹ்மான்) சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉத் தண்ணீரில் பெருந்துடக்கிற்காகக் குளித்துவிடுவார்கள்; ஒரு முத்துத் தண்ணீரில் உளூச் செய்துவிடுவார்கள்.
இதை அபூரைஹானா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
544 நபித்தோழர் சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத் அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிடுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளரான அபூரைஹானா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
சஃபீனா (ரலி) அவர்கள் (நினைவாற்றல் குறைந்த) முதுமைப் பருவத்தை அடைந்திருந்தார்கள். எனவே, அன்னாரது அறிவிப்பின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.28
பாடம் : 11
(குளியலின்போது) தலை உள்ளிட்ட உறுப்புகள்மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவது விரும்பத் தக்கதாகும்.
545 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (குளியல் முறை தொடர்பாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் விவாதித்துக் கொண்டனர். அப்போது மக்களில் ஒருவர், நானோ என் தலையை இப்படி இப்படிக் கழுவுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானோ என் தலையில் மூன்று முறை இரு கைகள் நிரம்பத் தண்ணீரை ஊற்றுகிறேன் என்று சொன்னார்கள்.29
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
546 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற் காகக் குளிக்கும் முறை பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், நானோ என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று சொன்னார்கள்.
547 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும்; (நாங்கள்) எப்படிக் குளிப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நானோ என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்மாயீல் பின் சாலிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர், அல்லாஹ்வின் தூதரே! என்று (அழைத்து மேற்கண்டவாறு) வினவினார்கள் என இடம்பெற்றுள்ளது.
548 முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது இரு கைகள் நிரம்பத் தண்ணீர் அள்ளித் தமது தலையில் மூன்று முறை ஊற்றுவார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர் களிடம் ஹசன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், எனக்குத் தலைமுடி அதிகமாக இருக்கிறதே?(மூன்று முறை ஊற்றினால் போதாதே!) என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி உமது முடியைவிட அதிகமாகவும் சிறந்ததாகவும் இருந்தது (அவர்களே மூன்று முறைதான் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார்கள்) என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 12
குளிக்கும் பெண்களின் பின்னல்முடி பற்றிய சட்டம்.
549 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக்கொள்ளும் பெண் ஆவேன். பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பின்னலை நான் அவிழ்த்துவிட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை; நீ இரு கையளவுத் தண்ணீரை உன் தலைமீது மூன்று முறை ஊற்றினால் போதும். பிறகு உன் (உடல்)மீது தண்ணீர் ஊற்றிக்கொள்; துப்பரவாகி விடுவாய் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், மாதவிடாய் மற்றும் பெருந்துடக்கிற்காக (குளிக்கும்போது) பின்னலை அவிழ்த்துவிட வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாகவும், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை என்று கூறியதாகவும், பிறகு மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படி கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது அந்தப் பின்னலை நான் அவிழ்த்துக் கழுவ வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் பற்றியக் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
550 உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், இந்த இப்னு அம்ரைப் பார்த்து நான் வியப்படைகிறேன். பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிடுமாறு பணிக்கிறாரே! ஏன் தலையை மழித்துக்கொள்ளுமாறு பெண்களுக்கு அவர் கட்டளையிட வேண்டியதுதானே! நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவதைவிடக் கூடுதாலாக வேறொன்றும் நான் செய்யவில்லை என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 13
பெண்கள் மாதவிடாய்க் குளியலின் போது கஸ்தூரி தோய்த்த (நறுமணப்) பஞ்சைக் குருதி வந்த இடத்தில் உபயோகிப்பது விரும்பத் தக்கதாகும்.30
551 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து (நீங்கிக்கொள்ள) தாம் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையை விளக்கினார்கள். பிறகு கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் தூய்மைப்படுத்திக்கொள் என்று சென்னார்கள்.
அந்தப் பெண்மணி, அதை வைத்து நான் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், (வெட்கப் பட்டவாறு) அல்லாஹ் தூயவன்; அதனால் தூய்மைப்படுத்திக்கொள் என்று (மறுபடியும்) சொன்னார்கள். -அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது முகத்தை) மூடிக்கொண்டார்கள் என்பதை அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது முகத்தின் மீது கையை வைத்து (மூடி) சைகை செய்து காட்டினார்கள்-
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு, அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்தேன். இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப் பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக! என்று கூறினேன்.31
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இரத்தம் படிந்த இடங்களை என்று (பன்மையில்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, (மாதவிடாயிலிருந்து) துப்புரவு செய்துகொள்ளும்போது நான் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதன் மூலம் துப்புரவு செய்துகொள்வாயாக! என்று சொன்னார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
552 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப் பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள் என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.
மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று! என்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக்கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ் தூயவன்! அதனால் துப்புரவு செய்துகொள் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வெட்கப்பட்டு) மறைத்துக்கொண்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அஸ்மா பின்த் ஷகல் எனும் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் நின்று விட்டால் அவர் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி பதிலளித்தார்கள். இந்த அறிவிப்பில் பெருந் துடக்கிற்கான குளியலைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
பாடம் : 14
உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண்களும், அவர்களது குளியல் மற்றும் தொழுகை முறையும்.32
553 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப் போக்கு (இஸ்திஹாளா) ஏற்படுபவளாக இருக்கி றேன்; (மாதம் முழுதும்) நான் சுத்தமாவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை (தொழுகையை விட்டுவிடாதே!) ஏனெனில், இது (-இஸ்திஹாளா), இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும்) மாதவிடாயன்று. (மாதத்தில் வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்துவிட்டால் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுது கொள்! என்று கூறினார்கள்.33
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஜரீர் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அசத் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) வந்தார்கள். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார் எனும் குறிப்பு (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு கூடுதலான தகவல் காணப்படுகிறது. (இரத்தத்தைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள் என்பதே அந்தத் தகவலாகும்.) ஆயினும், அதை நாம் குறிப்பிடவில்லை. (ஹம்மாத் ஒருவர் மட்டுமே இதை அறிவித்திருப்பதே அதற்குக் காரணம்.)
554 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படுபவளாக இருக்கிறேன் என்று கூறி தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது இரத்தக் குழா(யிலி ருந்து வருவதே)யாகும். எனவே (மாதவிடாய் காலம் முடிந்தவுடன்) குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்றார்கள். எனவே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக (தனிப்பட்ட விருப்பில்) உம்மு ஹபீபா அவர்கள் தாமாகவே அவ்வாறு செய்துவந்தார்கள்.
இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இப்னத்து ஜஹ்ஷ் என்று இடம்பெற்றுள்ளது. உம்மு ஹபீபா எனும் பெயர் இடம்பெறவில்லை.
555 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு வருட காலமாக உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்துவந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது மாதவிடாயன்று; இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே நீ (மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்! என்று கூறினார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார்கள். (அவ்வாறு அவர்கள் குளிக்கும்போது அந்தப் பாத்திரத்தில்) அவர்களது இரத்தத்தின் நிறம் தண்ணீரை மிகைத்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அபூபக்ர் (ரஹ்) அவர்கள், ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபி (ஸல்) அவர்கள் அளித்த) இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர் அழுதுவிடுவார். ஏனெனில், ஹிந்தா (உயர் இரத்தப்போக்கின் காரணமாக) தொழாமல் இருந்துவந்தார் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாக உயர் இரத்தப்போக்கு இருந்து வந்தது என்று ஹதீஸ் தொடங்குகிறது.
556 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உயர்) இரத்தப் போக்கு பற்றிக் கேட்டார். நான் அவர் (நின்று) குளித்துவந்த துணி அலசும் பாத்திரத்தில் இரத்தம் நிரம்பியிருக்கக் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்று அவரிடம் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
557 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் தமக்கு (உயர்) இரத்தப்போக்கு ஏற்படுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்! என்று அவரிடம் கூறினார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்கள்.
பாடம் : 15
மாதவிடாய் நாட்களில் விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்பது (களாச் செய்வது) கட்டாயமாகும்; விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.34
558 முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ (கரிஜிய்யாக் கூட்டத்தாரின் கேந்திரமான) ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் ஏற்படும். பின்னர் எதையும் மீண்டும் தொழுமாறு அவள் கட்டளையிடப்பட்டதில்லை என்று கூறினார்கள்.35
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
559 முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்படும்போது (விடுபட்டத் தொழுகைகளை மீண்டும்) நிறைவேற்றுமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடவா செய்தார்கள்? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
560 முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? என்று கேட்டார்கள். நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும், (தெரிந்துகொள்வதற்காகவே) கேட்கிறேன் என்றேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், எங்களுக்கும் அது (-மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்பட வில்லை என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 16
குளிப்பவர் துணி போன்றவற்றைத் திரையாக்கிக்கொள்வது.
561 உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தார்கள்.36
562 உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்தார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
563 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக்கொண்டார்கள். குளித்து முடிந்த பின் அந்த ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண் டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும் என்று உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
564 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு (குளிக்கத்) தண்ணீர் வைத்துவிட்டு அவர்களைத் திரையிட்டு மறைத்துக்கொண்டேன். அவர்கள் குளித்தார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 17
மறைக்க வேண்டிய பிறருடைய உறுப்பு களைப் பார்ப்பது தடை செய்யப் பட்டுள்ளது.37
565 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்;
ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மறைக்க வேண்டிய உறுப்பு (அவ்ரத்) எனும் வார்த்தைக்கு பதிலாக மற்றோர் ஆணின் நிர்வாணத்தை, மற்றொரு பெண்ணின் நிர்வாணத்தை(ப் பார்க்க வேண்டாம்) என்று இடம்பெற்றுள்ளது.
பாடம் : 18
தனிமையில் குளிக்கும்போது ஆடையின்றிக் குளிக்கலாம்.
566 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் பிறந்த மேனியுடன் ஒருவர் மற்றவரது மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துக்கொண்டே குளிப்பார்கள். மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். (அன்னாரைக் கொச்சைப்படுத்த விரும்பிய) அந்த மக்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குடலிறக்க நோயாளியாய் இருப்பதனால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என்று கூறினர். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின்
மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து கல்லே, எனது துணி! கல்லே, எனது துணி! என்று கூறியவாறு விரைந்து ஓடினார்கள். இறுதியாக (பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துவிட்டு, அல்லாஹ்வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையுமில்லை என்று கூறினர். மூசா (அலை) அவர்கள் (நன்கு) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் (பின்பு) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக்கொண்டு அந்தக் கல்லை (தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையிலிருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்துவிட்டன.
அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். இந்த ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்.38
பாடம் : 19
மறைக்க வேண்டிய உறுப்பை (மறைத்து)க் காப்பதில் கவனம் செலுத்துதல்.
567 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர் களும் கற்களைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களை நோக்கி கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர் களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலை குத்தி நின்றன. பிறகு எழுந்து என் வேட்டி, என் வேட்டி என்றார்கள். வேட்டியை (எடுத்துக் கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமது தோளில் என்பதற்கு பதிலாக உமது பிடரியில் என இடம்பெற்றுள்ளது.39
568 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷிக் குலத்தார் கஅபாவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு வேட்டி அணிந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்து, தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக்கொள்ளலாமே! என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள்மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.
569 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். அப்போது என் உடலில் ஒரு மெல்லிய வேட்டி இருந்தது. அது அவிழ்ந்துவிட்டது. என்னிடமோ பெரிய கல். எனவே, என்னால் அதை இறக்கி வை(த்துவிட்டு வேட்டியைப் பிடி)க்க முடியாமல் சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமது ஆடையை நோக்கிச் சென்று அதை எடுத்து (உடுத்தி)க்கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்! என்று கூறினார்கள்.
பாடம் : 20
இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கான மறைவான இடங்கள்.
570 அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு சென்றார்கள். அப்போது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லும் மறைவிடங்களிலேயே மேடு அல்லது பேரீச்சந்தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அஸ்மா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ஹாயிஷு நக்ல் என்பதற்கு பேரீச்சந்தோட்டம் என்று பொருள் என இடம்பெற்றுள்ளது.
பாடம் : 21
நீர் (-விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (-குளியல்) கடமையாகும்.40
571 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு திங்கள் கிழமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ சாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களது வீட்டு வாசலில் நின்று அவர்களைச் சப்தமிட்டு அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் தமது கீழங்கியை இழுத்தபடி (அவசர அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் இம்மனிதரை அவசரப்படுத்திவிட்டோம் என்று கூறினார்கள்.
அப்போது இத்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (தாம்பத்திய உறவுகொள்ளும்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியைவிட்டு அவசரப்படுத் தப்பட்டு (விலக்கப்பட்டு)விட்டார். இந்நிலையில் என்ன சட்டம், (அவர்மீது குளியல் கடமையாகுமா) கூறுங்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் (-விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (-குளியல்) கடமையாகும் என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
572 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தண்ணீர் (-விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (-குளியல்) கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
573 அபுல்அலா யஸீத் பின் அப்தில்லாஹ் பின் ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனின் ஒரு வசனம் மற்றொரு வசனத்(தின் சட்டத்)தை மாற்றுவதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் (பொன்மொழி)களில் ஒன்று மற்றொன்றை மாற்றி (காலாவதியாக்கி) வந்தது.41
574 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றபோது அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். உடனே அந்த அன்சாரி (அவசர அவசரமாகக் குளித்துவிட்டுத்) தமது தலையிலிருந்து தண்ணீர் வழியும் நிலையில் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும் என்றார்கள். அதற்கு அவர், ஆம், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால் அல்லது விந்தை வெளியேற்றாமலி ருந்தால் நீங்கள் குளிக்க வேண்டியதில்லை; அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சொல் வித்தியாசம் காணப்படுகிறது.42
575 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் சிறிது நேரம் தாம்பத்தியஉறவு கொண்டு, விந்தை வெளியேற்ற முடியாமற்போவது பற்றிக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மனைவியிடமிருந்து தம்மீது பட்டதை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு தொழலாம் என்று கூறினார்கள்.43
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
576 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டார். ஆனால் விந்தை வெளியேற்ற வில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் தமது பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
577 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டார். ஆனால், விந்தை வெளியேற்றவில்லை. (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர் பிறவி உறுப்பைக் கழுவிவிட்டுத் தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.44
- மேற்கண்ட ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களும் செவியேற்றதாக அறிவித்துள்ளார்கள்.
பாடம் : 22
நீர் (விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (குளியல்) கடமையாகும் எனும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது; ஆண்-பெண் குறிகள் சந்தித்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும்.45
578 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கி டையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர்மீது குளியல் கடமையாகிவிடும்.46
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், ம(த்)தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் விந்து வெளியாகா விட்டாலும் சரியே! எனும் வாசகமும் (அதிகப் படியாக) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்னர் அவர் முயற்சி செய்தால் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
579 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா, அல்லது விந்து வெளிப்பட்டால் தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர். அன்சாரிகள், விந்து வெளியானால் தான் அல்லது துள்ளல் இருந்தால்தான் குளியல் கடமையாகும் என்று கூறினர். முஹாஜிர்கள், இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படா விட்டாலும் சரியே!) என்று கூறினர்.
உடனே நான், இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அன்னையே! அல்லது இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம் என்றார்கள். நான், குளியல் எதனால் கடமையாகும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
580 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம் என்றார்கள்.
இதை உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 23
சமைக்கப்பட்ட பொருளைச் சாப்பிட்ட பின் அங்கத் தூய்மை செய்வது.47
581 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெருப்புத் தீண்டிய பொருளை (-சமைத்த உணவை) உண்ட பின் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டும்.
இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பள்ளி வாசலில் உளூச் செய்துகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (சமைக்கப்பட்ட) பாலாடைக் கட்டிகளை நான் சாப்பிட்டதால்தான் (இப்போது) உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நெருப்புத் தீண்டிய பொருளை (-சமைத்த உணவை) சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
- இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் காலித் பின் அம்ர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது சயீத் பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை (-சமைத்த உணவை)ச் சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்து கொள்ளுங்கள்.
பாடம் : 24
சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டும் எனும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது.
582 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை இறைச்சியைச் சாப்பிட்ட பின் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) இறைச்சி அல்லது இறைச்சியுள்ள எலும்பைச் சாப்பிட்ட பின் தொழுதார்கள். (புதிதாக) உளூச் செய்யவுமில்லை; தண்ணீரைத் தொடவுமில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
583 அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த) ஆட்டுச் சப்பையை (க் கத்தியால்) துண்டுபோட்டுச் சாப்பிடுவதை
நான் பார்த்தேன். பிறகு (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.48
584 அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியைப் போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள்; அவர்கள் (புதிதாக) உளூச் செய்யவில்லை.
இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பெற்றுள்ளது.
- நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (வந்து) (ஆட்டுச்) சப்பையை சாப்பிட்டுவிட்டுத் தொழுதார்கள். ஆனால், அவர்கள் (புதிதாக) உளூச் செய்ய வில்லை.49
- மேற்கண்ட ஹதீஸ் மைமூனா (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
585 அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக ஆட்டு ஈரலையும் அதையொட்டி உள்ள பகுதியையும் பொரித்துக்கொடுத்துள் ளேன் என்று உறுதிகூறுகிறேன். (அவர்கள் அதை உண்டுவிட்டுத்) தொழுதார்கள்.(புதிதாக) உளூச் செய்யவில்லை.
586 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி
வாய் கொப்புளித்தார்கள். பிறகு இதில்
கொழுப்பு இருக்கிறது (ஆகவேதான், வாய் கொப்புளித்தேன்) என்று கூறினார்கள்.50
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
587 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டுவரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தண்ணீரைத் தொடக்கூட இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அப்போது நபி (ஸல்) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள் என்று காணப்படுகிறது. மேலும், தொழுதார்கள் என்று இடம்பெற்றுள்ளதே தவிர, மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் என்று இடம்பெறவில்லை.
பாடம் : 25
ஒட்டக இறைச்சி சாப்பிட்ட பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வது.51
588 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் விரும்பினால் உளூச் செய்துகொள்க! விரும்பா விட்டால் உளூச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அந்த மனிதர், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூச் செய்துகொள்க! என்றார்கள். அவர், ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா? என்று கேட்டார். அதற்கு ஆம் (தொழலாம்) என்றார்கள். அவர், ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை (தொழ வேண்டாம்) என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
04.01.2010. 18:59

பாடம் : 26 - பாடம் : 33 அத்தியாம் 4

பாடம் : 26
தாம் (அங்கத்) தூய்மையோடு இருப்பதாக நம்பும் ஒருவருக்கு, பின்னர் துடக்கு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தால், அவர் (பழைய) தூய்மையோடே தொழலாம் என்பதற்கான சான்று.52
589 அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்-ரலி) இடமிருந்து கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ஒருவருக்குத் தொழும்போது வாயு பிரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக முறையிடப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை அவர் (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டியதில்லை என்று கூறினார்கள்.53
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), மற்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது.
590 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து, அதிலிருந்து ஏதேனும் வெளியேறிவிட்டதா இல்லையா என்று சந்தேகப்பட்டால், அவர் (வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்துவிட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 27
செத்த பிராணியின் தோல் பதனிடப்படுவதால் தூய்மை அடையும்.54
591 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண் ஒருவருக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துவிட்டது. அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்துசென்றார்கள். அப்போது, நீங்கள் இதன் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள். மக்கள், இது செத்துப்போனதாயிற்றே! என்று கேட்க, அதற்கு அவர்கள், இதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித் தார்கள்.55
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), இப்னு அபீஉமர் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை மைமூனா (ரலி) அவர்களே அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
592 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, நீங்கள் இதன் தோலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள். மக்கள், இது செத்துப்போனதாயிற்றே! என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
593 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஆடு ஒன்று செத்துக் கிடந்தது. அந்த வழியாகக் கடந்துசென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதன் தோலை எடுத்துப் பதனிட்டு அவர்கள் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
594 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஒருவருக்கு வளர்ப்புப் பிராணி (ஆடு) ஒன்று இருந்தது. அது செத்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் இதன் தோலை எடுத்து (பதனிட்டு)ப் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள்.
595 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று (செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள்.
596 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது.
597அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்) அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப்பார்த்தேன். அப்போது அவர்கள், ஏன் இதைத் தடவிப்பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நாங்கள் மேற்கே வசித்துவருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டுவரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல்பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டுவருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள், அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கிவிடும் என்று பதிலளித்தார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
598 அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நாங்கள் மேற்கே வசித்துவருகிறோம். அக்னி ஆராதனையாளர்(-மஜூசி)கள் தோல்பைகளில் தண்ணீரையும் கொழுப்பையும் எங்களிடம் கொண்டுவருகின்றனர். (நாங்கள் அந்தத் தோல் பைகளில் அருந்தலாமா?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அருந்தலாம் என்றார்கள். நான், இது உங்களது சுயமான கருத்தா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பதப்படுத்துவதே அதைத் தூய்மையாக்கிவிடும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
பாடம் : 28
தயம்மும்56
599 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.
அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலை வைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர்.
-(இது குறித்து) அல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான- உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.57
600 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) அஸ்மாவிடம் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) தொலைந்துபோய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் தயம்மும் தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இதையடுத்து (என்னிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம் களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
601 ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம்), அபூஅப்திர் ரஹ்மான்! பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்ட ஒருவருக்கு ஒரு மாத காலம்வரை தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எவ்வாறு தொழுவார்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒரு மாத
காலம் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் சரியே, அவர் தயம்மும் செய்யமாட்டார். (அவர் தொழவுமாட்டார்) என்று கூறினார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், அப்படியானால் அல்மாயிதா அத்தியாயத்தில் வரும் உங்களுக் குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்துகொள்ளுங்கள் எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், இந்த வசனத்தை முன்னிட்டு மக்களுக்கு (பொதுவான) அனுமதி அளிக்கப்பட்டுவிடுமானால் தண்ணீர் அவர்களுக்குக் குளிராகத் தெரிந்தால்கூட மண்ணில் தயம்மும் செய்துகொள்ளப் பார்ப்பார்கள் என்றார்கள்.
உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்) சொன்ன (பின்வரும்) செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்டார்கள். (அம்மார் கூறினார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு தேவை நிமித்தம் (படைப்பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளியலுக்குத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே! என்று கூறிவிட்டுத் தம் கரங்களால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் தமது இடக் கரத்தால் வலக் கரத்தையும் இரு புறங்கைகளையும் முகத்தையும் தடவலானார்கள்.
(இந்நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்கள் சொன்னதில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பதைத் தாங்கள் அறியவில்லையா? என்று கேட்டார்கள்.58
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
602 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால் அதில், நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்திருந்தால் உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்குமே! என்று கூறிவிட்டு, தம் கைகளை பூமியில் அடித்து, பின்னர் அவற்றை உதறிவிட்டு, தமது முகத்திலும் முன் கைகளிலும் தடவினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
603 அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, நான் பெருந்துடக்குடையவனாகிவிட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்க வில்லை. (இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?) என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், நீர் தொழ வேண்டியதில்லை என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அம்மார் (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! நானும் நீங்களும் ஒரு படைப் பிரிவில் இருந்தோம். அப்போது நமக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்கு பதிலாக தயம்மும் செய்வதைப் போன்று குளியலுக்கு பதிலாக) மண்ணில் புரண்டெழுந்து பின்னர் தொழுதேன். (இதுபற்றி நான் தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், உம்மிரு கைகளையும் தரையில் அடித்துப் பிறகு (கைகளை) ஊதிவிட்டுப் பின்னர் இரு கைகளால் உமது முகத்தையும் இரு முன் கைகளையும் தடவிக்கொண்டிருந்தால் போதுமே (ஏன் மண்ணில் புரண்டீர்கள்?) என்று கூறியது உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை அஞ்சிக்கொள், அம்மாரே! என்று சொன்னார்கள். உடனே அம்மார் (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் இதை நான் யாருக்கும் அறிவிக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் நீர் எதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டீரோ அதற்கு உம்மையே நாம் பொறுப்பாளியாக்கினோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.59
604 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது... என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. அதில், அம்மார் (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு என்மீது இறைவன் விதியாக்கிய கடமையை முன்னிட்டு இதை நான் யாரிடமும் அறிவிக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால் நான் இதை யாருக்கும் அறிவிக்கமாட்டேன் என்று கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
605 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துர் ரஹ்மான் பின் யசார் (ரஹ்) அவர்களும் அபுல்ஜஹ்ம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல்ஜஹ்ம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) பிஃரு ஜமல் எனும் இடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உடனடியாக பதில் சலாம் சொல்லாமல் ஒரு சுவரை நோக்கிப் போய் (அதில் தம் கைகளை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து)கொண்ட பின்னர் அவருக்கு பதில் சலாம் சொன்னார்கள்.60
606 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
பாடம் : 29
ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிடமாட்டார் என்பதற்கான சான்று.61
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளியல் கடமையான நிலையில்) மதீனாவின் சாலைகளில் ஒன்றில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து நழுவிச் சென்று குளித்தேன். இதற்கிடையே நபி (ஸல்) அவர்கள் என்னைக் காணாமற் தேடினார்கள். நான் (குளியலை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது, (இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர், அபூஹுரைரா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் நானிருந்த நிலையில் என்னைத் தாங்கள் சந்தித்தீர்கள். குளிக்காமல் தங்களிடம் அமர்வதை நான் வெறுத்தேன் என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இறைநம்பிக்கையாளர் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிடமாட்டார் என்று கூறினார்கள்.62
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
607 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளியல் கடமையான நிலையில்) இருந்தபோது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து விலகிச்சென்று குளித்துவிட்டு வந்து, நான் பெருந்துடக்கு உள்ளவனாய் இருந்தேன். (குளித்துவிட்டு வரத் தாமதமாகி விட்டது) என்று கூறினேன். அதற்கு அவர்கள் ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகிவிட மாட்டார் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 30
பெருந்துடக்கு போன்ற நிலைகளில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் (துதித்தல்).63
608 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களாய் இருந் தார்கள்.
இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொôடர் களில் வந்துள்ளது.
பாடம் : 31
சிறு துடக்கு ஏற்பட்டவர் (உளூச் செய்யாமல்) உணவு உட்கொள்ளலாம். அவ்வாறு செய்வது ஓர் அருவருக்கத் தக்க செயலன்று. (துடக்கு ஏற்பட்ட) உடனே உளூச் செய்வது கட்டாயமல்ல.64
609 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளியேறியபோது அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. அப்போது மக்கள் உளூச் செய்யுமாறு அவர்களுக்கு நினைவூட்டினர். நபி (ஸல்) அவர்கள், நானென்ன தொழவா போகிறேன், உளூச் செய்துகொள்வதற்கு? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
610 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்று விட்டு வந்தார்கள். மேலும், அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. (அவர்கள் சாப்பிடப்போனபோது) அவர்களிடம், நீங்கள் உளூச் செய்துகொள்ளவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஏன்? நானென்ன தொழவாபோகிறேன், உளூச் செய்துகொள்வதற்கு? என்று கேட்டார்கள்.
611 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டது. அப்போது, நீங்கள் உளூச் செய்துகொள்ளவில்லையே, அல்லாஹ்வின் தூதரே!? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், எதற்கு, தொழுகைக்கா? என்று கேட்டார்கள்.
612 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டுக் கழிவறையிலிருந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால், தண்ணீரைத் தொடவேயில்லை (உளூச் செய்யவில்லை).
சயீத் பின் அல்ஹுவைரிஸ் (ரஹ்) அவர் களிடமிருந்து அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் நபி (ஸல்) அவர் களிடம் நீங்கள் உளூச் செய்யவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நான் எந்தத் தொழுகையையும் நிறைவேற்றப்போக வில்லையே, அவ்வாறிருந்தால்தானே நான் உளூச் செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 32
கழிப்பிடத்திற்குச் செல்லும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
613 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (கழிப்பிடம் என்பதைக் குறிக்க அல்கலா எனும் சொல்லுக்கு பதிலாக) அல்கனீஃப் எனும் சொல் காணப்படுகிறது.
- இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், நபி (ஸல்) அவர்கள் அவூது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.
(பொருள்: ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
பாடம் : 33
உட்கார்ந்துகொண்டு உறங்கினால் உளூ முறியாது என்பதற்கான சான்று.
614 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியில் மக்கள் (உட்கார்ந்துகொண்டே) தூங்கிவிட்டார்கள். பின்னர்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு (வந்து) நின்றார்கள்.65
615 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி (ஸல்) அவர்களோ ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்ட நேரம்) பேசிக்கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்துகொண்டே) தூங்கிவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.
616 ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (உட்கார்ந்துகொண்டே) உறங்கிவிட்டு (பிறகு எழுந்து) தொழுவார்கள். (அதற்காகப் புதிதாக) உளூச் செய்யமாட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன் என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான், இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! என்று சொன்னார்கள்.
617 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்) எனக்கு (தங்களிடம்) ஓர் அலுவல் (குறித்துப் பேச வேண்டியது) இருக்கிறது என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அவரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக்கொண்டி ருந்தார்கள். (எந்த அளவுக்கென்றால்) மக்கள் அனைவரும் அல்லது மக்களில் சிலர் (உட்கார்ந்த நிலையிலேயே) உறங்கிவிட்டனர். பிறகு (புதிதாக உளூச் செய்யாமலேயே) தொழுதனர்.66



0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites