அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

4-உளூ (அங்கசுத்தி)


அத்தியாயம் : 4

4-உளூ (அங்கசுத்தி)

பாடம் : 1

உளூச்செய்வது குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும் போது ( முன்னதாக) உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள். (5:6)
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
உளூ செய்யும் போது உறுப்புக்களை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் அவர்களே அவ்வுறுப்புக்களை இரண்டிரண்டு தடவைகளும் மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை.
நபி (ஸல்) அவர்களின் செயல்முறைக்கு மாற்றம் செய்வதையும் உளூ செய்வதில் (மூன்று தடவைகள் என்ற அந்த) வரம்பை மீறுவதையும் மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள்.

பாடம் : 2

உடல் தூய்மையின்றித் தொழுகை ஏற்கப்படாது.
135 ஹம்மாம் பின் முனப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுதுடக்கு (ஹதஸ்) ஏற்பட்டவர் உளூசெய்யாத வரை அவருடைய தொழுகை ஏற்கப்படாது எனக் கூறியதாக அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறுதுடக்கு என்பது என்ன? என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 3

உளூவின் சிறப்பும் உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன (மறுமையில்) பிரகாசிப்பதும்.
136 நுஅய்ம் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறப்புகளிலுள்ள அடையாளங்களால் (பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.

பாடம் : 4

உளூ முறிந்ததாக உறுதியாகத் தெரியாத வரை சந்தேகப்பட்டு மீண்டும் உளூ செய்யத் தேவையில்லை.
137 அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்து விடுமா?) என்று முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டாம் என்றார்கள்.

பாடம் : 5

குறைந்தபட்ச அளவில் சுருக்கமாக உளூச் செய்தல்.
138 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
 இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல்பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூ செய்தார்கள்.
-(இதன் அறிவிப்பவர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், சுருக்கமாக உளூ செய்தார்கள் என்பதோடு குறைந்தபட்ச அளவில் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார்கள்.-
பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்து விட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுது விட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் (மீண்டும்) அவர்கள் உளூ செய்யவில்லை.
(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கண்கள்தாம் உறங்குகின் றன; அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?) என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள் இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமி ருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும் என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். பிறகு (மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன் எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டு பிறகு (எழுந்து) தொழுவார்கள் என்றும் மற்ற சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள் என்றும் அறிவித்துள்ளார்கள். ஆனால், மேற்கண்ட முழு ஹதீஸிலுள்ளவாறே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 6

உளூவை முழுமையாகச் செய்தல்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், உளூவை முழுமையாகச் செய்தல் என்பதன் கருத்து நன்கு தூய்மைப்படுத்துதல் என்பது தான்  என்று கூறியுள்ளார்கள்.
139 உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா விற்குப்) போய்க் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கணவாயில் (தமது வாகனத்தை விட்டு) இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உளூ செய்தார்கள்; உளூவைƒ(சுருக்கமாகவே செய்தார்கள்.) முழுமையாக்கவில்லை. அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! (இங்கு) தொழப்போகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், தொழுகை உமக்கு முன்னர் (உள்ள முஸ்தலிஃபாவில்) நடைபெறும் என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும், இறங்கி மீண்டும் உளூ செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாக்கினார்கள். பின்னர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும், மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்கவைத்தனர். தொடர்ந்து இஷாத்தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட போது அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையி லும் வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.

பாடம் : 7

ஒரு கை நிறையத் தண்ணீர் அள்ளி இரண்டு கைகளையும் சேர்த்துக் கொண்டு முகத்தைக் கழுவுதல்.
140 அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். அப்போது (ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதைக் கொண்டு) தமது முகத்தைக் கழுவினார்கள். -அதாவது (ஒரே) ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாயும் கொப்பளித்து மூக்கிற்கும் நீர் செலுத்தினார்கள்.
பிறகு ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை -இவ்வாறு- மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.
 பிறகு ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது வலக் கையைக் கழுவினார்கள். பின்னர் ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது இடக் கையைக் கழுவினார்கள். பிறகு தமது (ஈரக்கையால்) தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள்.
பிறகு ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனைத் தமது வலக் காலின் மீது சிறுகச் சிறுக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.
பிறகு இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்ய நான் பார்த்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 8

தாம்பத்திய உறவின் போதும், (உளூ உட்பட) மற்ற எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது.
141 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்தியஉறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்,) அதன் மூலம் அவ்விரு வருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 9

கழிப்பிடம் செல்லும் போது சொல்ல வேண்டியவை.
142 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும் போது, இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் (கழிப்பிடத்திற்குள்) நுழைய முற்பட்டால் என்றும், அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (கழிப்பிடத்திற்குள்) நுழைய நினைத்தால் என்றும் இடம்பெற்றுள்ளது.

பாடம் : 10

கழிப்பிடம் அருகில் தண்ணீர் வைத்தல்.
143 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது (அவர்கள் அங்கசுத்தி செய்வதற்காக) அவர்களுக்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பி வந்ததும்), இதை வைத்தவர் யார்? என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. உடனே இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக! என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

பாடம் : 11

மலஜலம் கழிக்கும் போது கிப்லா(கஅபா)திசையை முன்னோக்கக் கூடாது. மதில் முதலிய கட்டடம் இருந்தால் தவறில்லை.
144 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்க வேண்டாம். (அதன் திசையில்) தமது முதுகுப் புறத்தால் பின்னோக்கவும் வேண்டாம். (மாறாக) கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும். நமது நாட்டைப் பொறுத்தவரையில் கிப்லா மேற்குத் திசையில் அமைந்துள்ளதால் வடக்கு தெற்காக அமர வேண்டும்.)

பாடம் : 12

இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்.
145 வாஸிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இயற்றைக் கடனை நிறைவேற்ற அமர்ந் தால் கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கி றார்கள். ஆனால் நான் ஒரு நாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். தற்செயலாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கிய படி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தி ருக்கக் கண்டேன் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு என்னிடம் புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ! என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் அவ்வாறு தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது என்றேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தரையுடன் (தம் புட்டத்தை) அப்பிக் கொண்டவராகவும் புட்டத்தைத் தரையிலிருந்து உயர்த்தாமலும் சஜ்தா செய்(து தொழு)பவரைத் தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இடித்துக்) கூறினார்கள்.

பாடம் : 13

பெண்கள் (ஆள் நடமாட்டமில்லாத) வெட்டவெளிகளுக்கு இயற்றைக் கடனை நிறைவேற்றச் செல்லுதல்.
146 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு நேரத்தில் மனாஸிஉகளுக்கு (வீட்டை விட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாய் இருந்தார்கள். -மனாஸிஉ என்பது (மதீனாவின் புறநகரிலிருந்த) விசாலமான திறந்த வெளிகளாகும்.- இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், உங்கள் துணைவியரை (வெளியே செல்லும் போது) பர்தா இட்டுமறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. (இப்படியிருக்க) நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான சவ்தா (ரலி) அவர்கள் ஓர் இரவு இஷா நேரத்தில் (இயற்கை கடனை நிறைவேற்ற) வெளியே சென்றார்கள். -நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சவ்தா (ரலி) அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.- அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், சவ்தா! உங்களைக் கண்டு கொண்டோம் என ஹிஜாப் (பர்தா பற்றிய வசனம்) அருளப்படாதா என்ற பேராவலில் சவ்தா (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள். அப்போது அல்லாஹ், ஹிஜாப் பற்றிய வசனத்தை அருளினான்.
147 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (என் துணைவியரே!) நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் வெளியே செல்லல் என்பதற்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்தவெளிகளுக்குச் செல்லுதல் என்பதே நபி (ஸல்) அவர்களின் கருத்தாகும் என்று கூறினார்கள்.

பாடம் : 14

வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துப் பயன்படுத்துதல்.
148 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தேவையொன்றிற்காக (என் சகோதரி) ஹப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸிருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் (தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்) கண்டேன்.
149 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் (ஒரு தேவை நிமித்தம்) எங்கள் வீட்டுக் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள் மீதமர்ந்தவர்களாக பைத்துல் மக்திஸிருக்கும் திசையை முன்னோக்கியபடி (இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக்) கண்டேன்.

பாடம் : 15

இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு தண்ணீரால் துப்புரவு செய்தல்.
150 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டால், நானும் இன்னொரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் எடுத்துக் கொண்டு செல்வோம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக் அவர்கள் கூறுகிறார்கள்:)
அந்தத் தண்ணீரால் நபி (ஸல்) அவர்கள் துப்புரவு செய்து கொள்வதற்காக (எடுத்துச் சென்றோம்) என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 16

ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல்.
ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி
(ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து (சேவகம் புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னுமஸ்ஊத்-ரலி) உங்களிடையே இல்லையா? என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் ளஅல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம்ன கேட்டார்கள்.
151 அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். (அந்தத் தண்ணீரால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.)

பாடம் : 17

(கழிப்பிடம் செல்லும் போது) துப்புரவு செய்யத் தண்ணீருடன் கைத்தடியையும் எடுத்துச் செல்லல்.
152 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதியிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் (-அனஸா) எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்து விட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்தள்ளது. அதன் அறிவிப்பாளர் களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் அனஸா என்பது மேற்புறத்தில் பூண் இடப்பட்டுள்ள கைத்தடியாகும் என்று குறிப்பிடுகிறார்கள்.

பாடம் : 18

வலக் கரத்தால் சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
153 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (எதையும்) பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறவிஉறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக்கரத்தால் சுத்தம்செய்ய வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 19

சிறுநீர் கழிக்கும் போது வலக்கரத்தால் பிறவிஉறுப்பைத் பிடிக்கக் கூடாது.
154 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது பிறவிஉறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும் போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 20

கற்களால் (துடைத்து) சுத்தம் செய்தல்.
155 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்ற போது, நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்காகச் சில கற்களை(த் தேடி எடுத்து) வா வா! எலும்புகளையோ கெட்டிச் சாணங்களையோ கொண்டு வந்து விடாதே! என்று சொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்து விட்டு அங்கிருந்து திரும்பிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்து விட்டு) அக்கற்களால் சுத்தம் செய்து கொண்டார்கள். பிறகு அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன்.

பாடம் : 21

கெட்டிச் சாணத்தின் மூலம் துப்புரவு செய்யக் கூடாது.
156 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது தமக்காக மூன்று கற்களைக் கொண்டு வருமாறு என்னைப் பணித்தார்கள். (நான் தேடிப் பார்த்த போது) இரண்டு கற்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. (கழுதையின்) கெட்டிச் சாணத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தேன். நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு சாணத்தை எறிந்து விட்டு இது அசுத்தமானது எனக் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 22

உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) ஒருமுறை கழுவுதல்.
157 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா ஒரு முறைக் கழுவி உளூ செய்தார்கள்.

பாடம் : 23

உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) இருமுறை கழுவுதல்.
158 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா இரண்டு முறை கழுவி உளூ செய்தார்கள்.

பாடம் : 24

உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) மும்முறை கழுவுதல்.
159 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (உளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள்.
பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
160 ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள், உளூ செய்யும் போது (எங்களைப் பார்த்து) நான் ஒரு நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா? (குர்ஆனின்) ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு, ஒரு மனிதர் அழகிய முறையில் உளூச் செய்து, (கடமையான ஓர்) தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவர் (அடுத்த வேளைத் தொழுகையை) தொழுதுமுடிக்கும் வரை அவருக்கும் அந்த (இரண்டாம் வேளைத்) தொழுகைக்கும் இடையில் ஏற்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாம் தெளிவான வசனங்களையும் நேர் வழியையும் இறக்கிவைத்து அவற்றை மனிதர்களுக்கு வேதத்தில் விளக்கிய பின்னரும் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான்; மேலும் சபிப்போரும் அவர்களைச் சபிக்கிறார்கள் (2:159) எனும் வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும்.

பாடம் : 25

உளூவின் போது மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்துதல்.
161 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ செய்பவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும்; மலஜலம் கழித்து விட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 26

கற்களால் சுத்தம் செய்யும் போது ஒற்றைப் படையாகச் செய்தல்.
162 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும் போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறிய மாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 27

உளூ செய்யும் போது கால்களைக் கழுவ வேண்டும்; தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது.
163 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி ளஸல்ன அவர்களுடன் நாங்கள் செய்த) ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்து விட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூ செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களைத் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். இதைக் கண்ணுற்ற நபி
(ஸல்) அவர்கள் (உளூவில் கழுவப்படாத) இத்தகைய குதிகால்களுக்கு நரகம்தான் என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள்.

பாடம் : 28

உளூ செய்யும் போது வாய் கொப்பளித்தல்.
164 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தமது (முன்) கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்ப ளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக்கையால் தடவி(மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை கழுவினார்கள்.
பிறகு (இதோ!) நான் செய்த இந்த உளூவைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யக் கண்டேன் என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் (என்னிடம்), யார் என்னுடைய இந்த உளூவைப் போன்று உளூசெய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தம் உள்ளத்தில் இடந் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவரது முன் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று கூறினார்கள் என்றார்கள்.

பாடம் : 29

குதிகால்களைக் கழுவுதல்.
இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் உளூ செய்யும் போது (விரலில்) மோதிரம் அணிந்த பகுதியையும் கழுவக் கூடியவராக இருந்தார்கள்.
165 முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) கூறியதாவது:
நீர்குவளையில் (தண்ணீர் அள்ளி) மக்கள் உளூசெய்து கொண்டிருந்த போது (அவ்வழியே) எங்களைக் கடந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (உளூவில்) சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான் என்று கூறினார்கள் என்றார்கள்.

பாடம் : 30

செருப்பு அணிந்திருந்தாலும் இரு கால் களையும் கழுவவே வேண்டும்; செருப்புகள் மீது தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது.
166 உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் நான்கு காரியங்களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்க(ளான நபித்தோழர்க)ளில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இப்னு ஜுரைஜே, அவை எவை? என்று கேட்டார்கள். நான், (தவாஃபின் போது கஅபாவின் மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன்.(மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை.) மேலும் முடி களையப்பட்ட தோல் செருப்பையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச் சாயம் பூசுவதையே நான் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருக்கும் போது மக்கள் (துல்ஹஜ்) பிறை கண்டவுடன் இஹ்ராம் கட்டுவதைப் போன்று இஹ்ராம் கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா) வரை இருப்பதைக் கண்டேன் (இவைதாம் அந்த நான்கு காரியங்கள்) என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் காணவில்லை (ஆகவே, நானும் அப்படிச் செய்கிறேன்). முடி களையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத செருப்புகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் ஆடையில்) அதன் மூலம்தான் சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன். இஹ்ராம் கட்டுவதைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ் எட்டாம் நாள்) வரை இஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை (எனவேதான் நானும் எட்டாம் நாள் இஹ்ராம் கட்டுகிறேன்).

பாடம் : 31

உளூவிலும் குளியலிலும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
167 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் மக(ள் ஸைனப் (ரலி) இறந்தவிட்ட போது அவர்க)ளை நீராட்டுவது குறித்துப் பெண்களிடம் கூறுகையில், அவருடைய வலப் பக்கத்திலிருந்தும், உளூச் செய்ய வேண்டிய உறுப்புக் களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள் என்று சொன்னார்கள்.
168 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.

பாடம் : 32

தொழுகையின் நேரம் வந்ததும் உளூ செய்வதற்காகத் தண்ணீரைத் தேடுதல்.
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வந்ததும் (உளூ செய்வதற்காகத்) தண்ணீர் தேடப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தான் தயம்மும் (சம்பந்தமான இறைவசனம்) அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
169 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். மக்கள் உளூ செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து, அப்பாத்திரத்திலிருந்து உளூ செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட் டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்கள் (அதிலிருந்து) உளூ செய்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களில் கடைசி நபர் வரை (அதிலேயே) உளூ செய்துமுடித்தார்கள்.

பாடம் : 33

மனித ரோமம் கழுவிய தண்ணீர் (பற்றிய சட்டம்).
மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. இவ்வாறே நாய் வாய் வைத்த தண்ணீரையும் பள்ளிவாசலுக்குள் நாய் கடந்துசென்ற இடத்தையும் அசுத்தமானவையாக அவர்கள் கருதவில்லை.
தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்து விட அதைத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால் அந்த தண்ணீரால் உளூ செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ƒசஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய)
இந்தச் சட்டம் நீங்கள் தண்ணீரைப்
பெற்றுக் கொள்ளவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் (4:43 ஆவது) இறைவசனத்திலிருந்தே பெறப்படு கிறது. (ஏனெனில் தண்ணீர் என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய் வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான் என்றாலும் உளூ செய்பவருடைய மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே அந்தத் தண்ணீரில் உளூ செய்பவர் தயம்மும் செய்து கொள்ளவும் வேண்டும்.
170 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உபைதா (பின் அம்ர் அஸ்ஸல்மானீ -ரஹ்) அவர்களிடம், அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத் தாரிடமிருந்து நாங்கள் பெற்ற நபி (ஸல்) அவர்களின் சில முடிகள் எங்களிடம் இருக்கின்றது என்று சொன்னேன். அதற்கு உபைதா (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர் களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றையும் விட எனக்கு மிக உகப்பானதாகும் என்று கூறினார்கள்.
171 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) தமது தலை முடியை (ஒருவரிடம்) மழித்த போது அபூதல்ஹா (ரலி) அவர்களே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முடிகளில் சிலவற்றைப் பெற்று (பத்திரப்படுத்தி)க் கொண்டார்கள்.
ளபாடம்ன
(பாத்திரத்தில் நாய் குடித்து விட்டால்...)
172 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் குடித்து விடுமானால் அவர் (அசுத்தமாகிவிட்ட) அந்தப் பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
173 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
174 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிக்குள் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக இருக்கவில்லை.
175 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது:
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பி வைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப் பிராணியை) நாண் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே வைத்துக் கொண்டுள்ளது என்று கூறினார்கள். நான், எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும் போது) அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?) என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் நாயைத் தான் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனப்பவில்லை என்று சொன்னார்கள்.

பாடம் : 34

முன் பின் இரு துவாரத்திலிருந்து ஏதேனும் வெளியேறினால் மட்டுமே உளூ முறியும் (துடக்கு ஏற்படும்).
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்து விட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கசுத்தி செய்து கொள்ள வேண்டும்.) (4:43)
ஒருவருடைய பின் துவாரத்திலிருந்து புழு அல்லது முன் துவாரத்திலிருந்து பேன் போன்ற சிறுபூச்சியோ வெளியேறினால் (அவருடைய அங்கசுத்தி நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத் தான் திரும்பத் தொழ வேண்டும் (; உளூமுறிவதில்லை. ஆகவே,) திரும்பவும் உளூ செய்ய வேண்டியதில்லை என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் (தம் உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால் அல்லது தமது காலுறையைக் கழற்றிவிடுவதால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டியதில்லை என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சிறுதுடக்கு (தூய்மைக்கேடு) ஏற்பட்டால் தான் உளூவைத் திரும்பச் செய்ய வேண்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள்.
தாத்துர் ரிகாஉ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர் மீது அம்பு பாய்ந்தது. அவருக்கு கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும் அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார் என ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
தங்களுடைய உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுது கொண்டேயிருந்தார்கள் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
இரத்தம் வெளிவருவதன் காரணமாக உளூவைத் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றுமுள்ள ஹிஜாஸ் வாசிகள் ஆகியோர் கூறியுள்ளனர்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் உடலிலிருந்து) சிறு கொப்புளத்தை நசுக்கினார்கள். அதிலிருந்து இரத்தம் வெளியானது. ஆனால் அவர்கள் திரும்பவும் உளூச் செய்யவில்லை.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ் நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக உளூவைத் திரும்பச் செய்யமாலே) அவர்கள் தொழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்:
ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால் அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (உளூவை திரும்பச் செய்ய வேண்டியதில்லை).
176 சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடியார் (உ.ளூ செய்து) தொழுமிடத்தில் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். (இது எதுவரையில் எனில்) அவருக்கு ஹதஸ் (சிறுதுடக்கு) ஏற்படாத வரை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (அரபி மொழி புரியாத) ஒரு பாரசீகர் ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!? என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், பின் துவராத்திலிருந்து வெளியாகும் காற்று என்று பதிலளித்தார்கள்.
177 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில் நிற்கும் போது பின் துவாரத்திலிருந்து பிரியும் காற்றின்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது (அதன்) நாற்றத்தை உணராத வரை (தொழுகையை விட்டு) திரும்பிச் செல்ல வேண்டியதில்லை.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
178 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இச்சைக் கசிவு (மதீ) அதிமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக்) கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்காக அங்கசுத்தி (உளூ) செய்வது தான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
179 ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒருவர் (தம் மனைவியுடன்) தாம்பத்திய உறவு மேற் கொண்டார். ஆனால் விந்து வெளியாக்கவில்லை (இந்நிலையில் அவர் மீது குளியல் கடமையாகுமா, என்ன) சொல்லுங்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவர் தமது குறியைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச் செய்வது போன்று அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள். மேலும் இது பற்றி அலீ, ஸுபைர், தல்ஹா, உபை பின் கஅப் (ரலி) ஆகியோரைக் கேட்ட போது இவ்வாறே அவர் செய்ய வேண்டுமென அவர்கள் அனைவரும் வலியுறுத்தினர்.
180 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (மனைவியோடு தாம்பத்தியஉறவு கொள்ளும் போது) அவசரப்பட்டு எழநேர்ந்தால், அல்லது விந்து வெளியாக்கா மலிருந்தால் (குளிக்க வேண்டியதில்லை), உளூ செய்வது மட்டுமே உங்கள் மீது கடமையாகும் என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து குன்துர் மற்றும் யஹ்யா (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் அறிவிப்பில் உளூ கடமையாகும் எனும் வாசகம் இடம்பெறவில்லை. (உங்கள் மீது குளியல் கடமையாகாது என்ற வாசகமே காணப்படுகிறது.)

பாடம் : 35

ஒருவர் தம் நண்பருக்கு உளூ செய்ய உதவுதல்.
181 உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) அரஃபா பெருவெளியிலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டி ருந்த போது அங்கிருந்த ஒரு கணவாயை நோக்கிச் சென்று அங்கு இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, அவர்கள் உளூ செய்யலானார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு, தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
182 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது (இயற்கைத்) தேவைக்காக புறப்பட்டுச் சென்றார்கள்.(அவர்கள் திரும்பி வந்த போது) அவர்களின் (கை கால்கள்) மீது நான் தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். ஈரக்கையால் தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். ஈரக்கையால் காலுறைகள் மீது தடவினார்கள் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவவில்லை).

பாடம் : 36

சிறு துடக்கான பின்னரும் குர்ஆன் முதலியவற்றை ஓதுதல்
மன்சூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குளியல் அறையில் குர்ஆன் ஓதுவதும் உளூவின்றி (அல்லாஹ்வின் திருப் பெயர் எழுதி) கடிதம் வரைவதும் குற்றமில்லை என்று இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (குளியல் அறையில் இருப்போர்) கீழாடை அணிந்திருந்தால் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்; அவ்வாறில்லை என்றால் சலாம் சொல்லாதீர்கள் என்று இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
183 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்கு சற்று முன்பு வரை அல்லது சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெ ழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தம் முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப் பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து உளூ செய்தார்கள். தமது உளூவை செம்மையாகச் செய்து கொண்ட பின்னர் தொழுவதற்காக நின்றார்கள். நானும் (எழுந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தம் வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்து (தம் வலப் பக்கத்தில் இழுத்து) நிறுத்தினார்கள்.
அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அஅத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு ரக்அத்துகள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர் தொழுதார்கள்.
 பின்னர் பாங்கு சொல்பவர் (பாங்கு சொல்லிவிட்டு தம்மிடம்) வரும் வரை சாய்ந்து படுத்திருந்தார்கள். பிறகு (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது விட்டு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.

பாடம் : 37

உணர்வு நிலையற்ற (முழுமையான) மயக்கத்தினால்தான் உளூ நீங்கும்.
184 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சூரிய கிரகணம் எற்பட்ட போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். (தொழுகையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நான், மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏதும் கூறாமல்) வானை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக) சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். இது (ஏதாவது) அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஆம் என்று தலையால் கைசை செய்தார்கள். உடனே நானும் (அவர்களோடு நீண்ட நெடிய அத்தொழுகையில்) நின்று கொண்டேன். எந்த அளவிற்கென்றால் (நீண்ட நேரம் நின்றதால்) எனக்கு கிறக்கமே ஏற்பட்டுவிட்டது. (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரை ஊற்றலானேன்.
தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இதோ) இந்த இடத்தில் (தொழுகையில் இருந்த போது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது: நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் தஜ்ஜால் என்பவனு டைய சோதனைக்கு நிகரான அல்லது நெருக்கமான அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.
-இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) கூறுகிறார்: (நிகரான/நெருக்கமான) இவற்றில் எந்த வாசகத்தை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.-
அப்போது (கப்றிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு இறை நம்பிக்கையாளரோ அல்லது உறுதி கொண்டவரோ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.- அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அன்னாரின் அழைப்பை) ஏற்றுப் பின்பற்றினோம் என்று பதிலளிப்பார். அப்போது கேள்விகேட்ட(வான)வர்களின் தரப்பிலிருந்து நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத்தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்து கொண்டோம் என்று (அவ்வானவர்களால்) கூறப்படும்.
நயவஞ்சகரோ அல்லது சந்தேகப்பேர்வழியோ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை- எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன். அதையே நானும் சொன்னேன் என்று கூறுவார்.

பாடம் : 38

உளூவில் ஈரக்கையால் தலை முழுவதும் தடவுதல்
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (ஈரக்கையால்) உங்களுடைய தலையையும் தடவுங்கள் (5:6) என்று கூறுகின்றான்.
சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள், பெண்களும் ஆண்களைப் போன்றே (ஈரக்கையால் தலை முழுவதும்) தடவ வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
மாலிக் (ரஹ்) அவர்களிடம், (உளூவில்) தலையில் ஒரு பகுதி மட்டும் (ஈரக்கையால்) தடவினால் போதுமா? என்று கேட்கப்பட்டது அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் பின்வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பதிலளித்தார்கள்.
185 யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உளூ செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா? எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஆம் (செய்துகாட்டு கிறேன்) என்று கூறித் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அதைத் தமது இரு (முன்) கைகளிலும் ஊற்றி இருமுறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டுவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பின்னர் (ஈரக்) கைகளால் தமது தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். (அதாவது) தமது இரு கைகளையும் (முன்)தலையில் வைத்து பின்னே கொண்டு சென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதை தமது பிடரிவரை கொண்டு சென்ற பின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டு சென்றார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள்.

பாடம் : 39

இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல்.
186 யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்ட இடத்தில் நானும் இருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூசெய்து காட்டினார்கள்.
(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்பளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டுவரை இரு முறை கழுவினார்கள். பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக்கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இருகைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டு சென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (அரம்பித்த இடத்திற்கே) கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்ய வில்லை). பின்னர் தமது கால்களை கணுக்கால்கள் வரை கழுவினார்கள்.

பாடம் : 40

மக்கள் உளூ செய்து விட்டு வைத்த மீதித் தண்ணீரைப் பயன்படுத்துதல்.
தாம் பல் துலக்கிவிட்டு மீதி வைத்த தண்ணீரில் உளூ செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள்.
187 அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின் போது அப்தஹ் எனுமிடத்திலிருந்த கூடாரத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கு உளூ செய்யத் தண்ணீர் கொண்டு வரப்படவே, அதில் அவர்கள் உளூ செய்தார்கள். அவர்கள் உளூ செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்று மக்கள் தங்கள் மீது தடவிக் கொள்ளலாயி னர். அப்போது தமக்கு முன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை (தடுப்பாக) வைத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டு இரண்டு ரக்அத்க்களாகத் தொழுதார்கள்.
188 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஜிஉரானா எனுமிடத்தில் நானும் பிலாலும் இருந்து கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் குவளையைக் கொண்டு வரச்சொல்லி, அதில் தம்மிரு கைகளையும் தமது முகத்தையும் கழுவிவிட்டு, அதனுள் (தமது வாயிலிருந்த) தண்ணீரை உமிழ்ந்தார்கள். பிறகு எங்கள் இருவரிடமும், இதிலிருந்து சிறிது பருகிவிட்டு, உங்கள் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக் கொள் ளுங்கள் என்று சொன்னார்கள்.
189 இப்னுஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
தாம் (ஐந்து வயதுச்) சிறுவனாக இருந்த போது தமது வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்து விட்டு) அதை தம்முடைய முகத்தில் உமிழ்ந்ததாக என்னிடம் குறிப்பிட்ட மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) (பின்வருமாறும்) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும் போது, அவர்கள் உளூசெய்தவிட்டு மீதி வைக்கின்ற தண்ணீரை எடுத்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக மக்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொள்ளுமளவிற்குச் சென்றுவிடுவார்கள்.
இதை உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் (மர்வான் பின் ஹகம் எனும்) மற்றொருவரிடமிருந்து அறிவிக்கிறார்கள். இவ்விருவரும் மற்றவர் சொன்னதை உறுதிப்படுத்தியுமுள்ளார்கள்.
190 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக் கொடுத்து எனது சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். அவர்கள் உளூ செய்து விட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.

பாடம் : 41

ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்துதல்.
191 யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் குவளையிலிருந்த தண்ணீரைத் தம்மிரு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு ஒரே கைத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து மூக்கிற்கும் நீர் செலுத்தி (சுத்தம் செய்யலா)னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு தம் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். (ஈரக்கையால் முன்னி ருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாக) முன் தலையையும் பின் தலையையும் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். மேலும் தம் இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவினார்கள். பின்னர், இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ அமைந்திருந்தது என்று கூறினார்கள்.

பாடம் : 42

தலைக்கு ஒரு தடவை மஸ்ஹுச் செய்தல்.
192 யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அவர்களுக்கு உளூ செய்துகாட்டினார்கள்.
(ஆரம்பமாக குவளையிலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைக் குவளைக்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்பளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைக் குவளையில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு அக்குவளைக்குள் தமது கையை நுழைத்து (ஈரக்கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டு வந்தார்கள். பிறகு அந்தக் குவளைக்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தமது இரு கால்களையும் கழுவினார்கள்.
உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக்கையால்) தடவினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

பாடம் : 43

ஒரு மனிதர் தம் மனைவியுடன் (ஒரே பாத்திரத்தில்) உளூ செய்வதும், ஒரு பெண் உளூ செய்து விட்டுவைத்த மீதத் தண்ணீர் பற்றிய சட்டமும்.
உமர் (ரலி) அவர்கள் வெந்நீரில் உளூ செய்தார்கள்; ஒரு கிறிஸ்தவ பெண்ணின் வீட்டில் உளூ செய்தார்கள்.
193 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய காலத்தில் (பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்) ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள்.

பாடம் : 44

நபி (ஸல்) அவர்கள் தாம் உளூ செய்த தண்ணீரை மயக்கமுற்றவர் மீது ஊற்றியது.
194 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் பனூசலிமா குலத்தாரிடையே) நோயுற்று சுயநினைவில்லாமல் இருந்த போது என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (தண்ணீர் கொண்டுவரச் சொல்லி) உளூ செய்து விட்டு தாம் உளூ செய்த தண்ணீரில் சிறிதை என் மீது ஊற்றினார்கள். நான் உணர்வு பெற்று, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய சொத்துக்கு யார் வாரிசு? என்னுடைய சொத்துக்கு என் சகோதரர்கள் மட்டுமே எனக்கு வாரிசாக ஆகும் நிலையில் நான் உள்ளேனே? என்று கேட்டேன். அப்போது தான் பாகப் பிரிவினை தொடர்பான (4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது.

பாடம் : 45

துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப்பாத்திரம், மரம் மற்றும் கற்களினாலான பாத்திரங்களில் உளூ செய்தல், குளித்தல்.
195 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்த போது தங்கள் வீடு சமீபத்தில் உள்ளவர்கள் எழுந்து (உளூ செய்வதற்காக) தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மற்றவர்கள் அங்கேயே (அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருகில்) இருந்தனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள ஒரு கல்லாலான (சிறு) பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அந்தப் பாத்திரத்திற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் கையை விரித்துக் கழுவ முடியாத படி (அதன் வாய்) சிறியதாக இருந்தது. ஆனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அதில் உளூ செய்தனர்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் எத்தனை பேர் (அப்போது) இருந்தீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம் என்று கூறினார்கள்.
196 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதில் தமது இரு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்.
197 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்த போது அவர்களுக்காக செம்பினாலான ஒரு குவளையில் தண்ணீர் கொணர்ந்தோம். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். தமது முகத்தை மூன்று முறையும் கைகளை இரண்டு முறையும் கழுவினார்கள். மேலும் (ஈரக் கையால்) தமது தலையை முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாக கொண்டு சென்று தடவினார்கள். மேலும் தமது இரு கால்களையும் கழுவினார்கள்.
198 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்த போது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.
-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் ளஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாதன அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். அவர்தாம் அலீ (பின் அபீதாலிப்-ரலி) என்று அவர்கள் கூறினார்கள்.-
மேலும், அயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நோய் கால பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்ட பின்னர் அவர்கள், வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல்பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்ய முடியும் என்றார்கள். எனவே அவர்கள் அவர்களின் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது அமர்த்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் மீது தோல்பைகளிலிருந்த நீரை ஊற்றத் தொடங்கினோம். அவர்கள் (சொன்னபடி) செய்து விட்டீர்கள் (போதும்) என்று (கையால்) சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

பாடம் : 46

குவளையில் உளூ செய்தல்.
199 யஹ்யா அல்மாஸினீ கூறியதாவது:
என் தந்தையின் சகோதரரர் (அம்ர் பின் அபீஹசன்) அடிக்கடி உளூ செய்பவராக இருந்தார். அன்னார் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூ செய்யக் கண்டீர்கள் என்று கூறுங்கள்! என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, தமது இருகைகள் மீது சரித்து இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு அந்தக் குவளைக்குள் தமது கையை நுழைத்து ஒரே ஒரு கை தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கைத் தண்ணீரால்
வாய் கொப்பளித்து (மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையை(க் குவளைக்குள்) நுழைத்துத் தண்ணீர் அள்ளி மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது இரு கைகளையும் மூட்டுவரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தமது கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலம் தமது தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். அதாவது தமது (ஈரக்)கையை முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டு சென்றார்கள். பிறகு தமது இரு கால்களையும் கழுவிவிட்டு, இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யக் கண்டேன் என்றார்கள்.
200 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் சொன்னார்கள். அப்போது தண்ணீருடன் வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் சிறிது தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதனுள் நபி (ஸல்) அவர்கள் தமது விரல்களை வைத்தார்கள். அப்போது அவர்களது விரல் களினூடே நீர் சுரப்பதை நான் பார்த்தேன். அதிலிருந்து உளூ செய்தவர்களை நான் கணக்கிட்டுப் பார்த்த போது (கிட்டத்தட்ட) எழுபதுபேரிலிருந்து எண்பதுபேர்கள் வரை இருந்தனர்.

பாடம் : 47

ஒரு முத்து தண்ணீரில் உளூ செய்வது.
201 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ (எட்டு கை) முதல் ஐந்து முத்து (பத்து கை கொள்ளளவுத்) தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு முத்து (இருகை) அளவுத் தண்ணீரில் உளூ செய்வார்கள்.
(குறிப்பு: ஸாஉ, முத் பற்றி அறிய காண்க: ஸஹீஹுல் புகாரீ பாகம்-7, ஹதீஸ் எண்-6712)

பாடம் : 48

(உளூ செய்யும் போது) காலுறைகள் மீது ஈரக்கையால் தடவுதல் (-மஸ்ஹுச் செய்தல்).
202 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்யும் போது) காலுறைகள் மீது (ஈரக் கையால்) தடவினார்கள் என்று கூறினார்கள். நான் இதுபற்றி (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட போது ஆம், நபி (ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை சஅத் உன்னிடம் சொன்னால் அது பற்றி வேறு யாரிடமும் நீ கேட்க வேண்டியதில்லை என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
203 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றார்கள். அப்போது தண்ணீர் நிரம்பிய ஒரு தோல்பையுடன் அவர்களைத் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டு வந்த போது அவர்களுக் குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது காலுறைகள் (இரண்டையும் கழற்றிக் கழுவாமல் அவற்றின்) மீது (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள்.
204 அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உளு செய்யும் போது) தமது காலுறைகள் மீது (ஈரக்கையால்) தடவிக் கொண்டதை நான் பார்த்தேன்.
205 அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்யும் போது) தமது தலைப்பாகையின் மீதும் தமது இரு காலுறைகள் மீதும் (ஈரக்கையால்) தடவிக் கொண்டதை நான் பார்த்தேன்.

பாடம் : 49

இரு கால்களும் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறை அணிந்தால்...
206 முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர் களுடன் இருந்தேன். அவர்கள் (உளூ செய்ய முற்பட்ட போது) அவர்களது இரு காலுறை களையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும் போது தான் காலுறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு, (ஈரக்கையால்) அவ்விரு காலுறைகள் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள்.

பாடம் : 50

ஆட்டிறைச்சி, மாவு ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு (புதிதாக) உளூ செய்யாமலிருப்பது.
அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் (இறைச்சி) சாப்பிட்ட பின் (புதிதாக) உளூ செய்யவில்லை.
207 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் சப்பைப் பகுதியைச் சாப்பிட்ட பின் தொழுதார்கள்; ஆனால், (புதிதாக) உளூ செய்யவில்லை.
208 அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை ஒன்றிலிருந்து (இறைச்சியை) வெட்டி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக (அன்னாரை) அழைக்கப்பட்டது. உடனே கத்தியைக் கீழே போட்டுவிட்டுத் தொழுதார்கள்; (புதிதாக) உளூ செய்யவில்லை.

பாடம் : 51

மாவு சாப்பிட்டுவிட்டு (புதிதாக) உளூ செய்யாமல் வாய் கொப்பளிப்பது.
209 சுவைத் பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கைபர் போர் நடந்த (ஹிஜ்ரீ 7ஆம்) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (கைபருக்குச்) சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா எனும் இடத்தை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பிறகு பயண உணவைக் கொண்டு வரச் சொன்னார்கள். அப்போது மாவைத் தவிர வேறெதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைத் தண்ணீரில் நனைக்கும் படி பணித்தார்கள். (அது நனைக்கப்பட்டதும் அதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அவர்கள் வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள்; நாங்களும் வாய் மட்டும் கொப்பளித்தோம். பிறகு (புதிதாக) உளூ செய்யாமலேயே (மஃக்ரிப்) தொழு(வித்)தார்கள்.
210 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுச் சப்பை இறைச்சியைச் சாப்பிட் டார்கள். பின்னர் (அதற்காகப் புதிதாக) உளூ செய்யாமலேயே தொழுதார்கள்.

பாடம் : 52

பால் குடித்தால் வாய் கொப்பளிக்க வேண்டுமா?
211 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். பிறகு இதில் கொழுப்பு இருக்கிறது (ஆகவே தான் வாய்கொப்பளித்தேன்) என்று சொன்னார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 53

ஆழ்ந்து உறங்கினால் உளூ செய்வதும், ஓரிரு முறை கண்ணயர்ந்து விடுவதலோ, தூங்கி விழுவதாலோ உளூ செய்யாமலிருத்தலும்.
212 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் தொழுது கொண்டிருக்கும் போது கண் அயர்ந்து விடுவாரானால் அவரைவிட்டும் உறக்கக் கலக்கம் விலகும் வரை (தொழுகையிலிருந்து பிரிந்து) அவர் உறங்கட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் தம்மையும் அறியாமல் பாவ மன்னிப்புக் கோர அது தமக்கெதிரான பிரார்த்தனையாகக்கூட ஆகிவிடலாம்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
213 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையில் கண்ணயர்ந்து விடுவாரானால், தாம் என்ன ஓதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறியும் வரை அவர் (தொழுகையிலிருந்து விலகி) தூங்கிக் கொள்ளட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 54

உளூ முறிவதற்குரிய காரணம் (ஹதஸ்) ஏற்படாமலேயே (புதிதாக) உளூ செய்தல்.
214 அம்ர் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கடமையான) ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூ செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நபித்தோழர்களான) நீங்கள் எப்படிச் செய்வீர்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் உளூவை முறிக்கும் காரணங்கள் (ஹதஸ்) நிகழாதவரை ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என்று கூறினார்கள்.
215 சுவைத் பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மேற்படி போருக்கு) புறப்பட்டுச் சென்றோம். (கைபரை அடுத்துள்ள) ஸஹ்பா என்ற இடத்தை நாங்கள் அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் உணவு கொண்டு வரும்படி கூறினார்கள். (வேறெதுவும் இல்லாததால்) அவர்களிடம் மாவு மட்டும் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்; குடித்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள். (புதிதாக) உளூ செய்யாமல் எங்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள்.

பாடம் : 55

சிறுநீரிலிருந்து (உடையையும் உடலையும்) மறைக்காமலிருப்பது பெரும் (பாவச்) செயல்களில் ஒன்றாகும்.
216 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று சொல்லிவிட்டு, ஆம்! (ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச் செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ, தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜரீர் பின் அப்தில்ஹமீத் (ரஹ்) அவர்கள் (மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தை எனும் வாசகத்திற்குப் பின் அல்லது மக்காவிலுள்ள ஒரு தோட்டத்தை என்று ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 56

சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.
அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறைக்கா மலிருந்தார் என்றே கூறினார்கள். மனிதர் களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.
217 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்ள (புறநகரிலிருக்கும்) திறந்தவெளிகளுக்குச் செல்வார்களானால் அவர்களுக்கு நான் தண்ணீர் கொண்டு செல்வேன். அதன் மூலம் அவர்கள் சுத்தம் செய்வார்கள்.
218 இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரு சவக்குழிகளைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீரிலிருந்து (தம் உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையைப் பெற்று அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின்மீதும் ஒன்றை ஊன்றினார்கள். அது பற்றி மக்கள், ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம் பெற்றுள்ளது.

பாடம் : 57

பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது.
219 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்குள் சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். (அவரை மக்கள் கண்டித்த போது) நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டு, அவர் (சிறுநீர் கழித்து) முடித்த பின் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதன் மீது ஊற்றினார்கள்.

பாடம் : 58

பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்து விட்டால் அதன் மீது தண்ணீர் ஊற்றுதல்.
220 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக் குள் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர். நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தைக் கொண்டு) நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப்பட்டுள் ளீர்கள். கடினமாக எடுத்துச் செல்லக்கூடிய வர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள்.
221 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்தள்ளது

பாடம்

சிறுநீர்(பட்ட இடத்தின்) மீது தண்ணீரை ஊற்றுவது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் கழித்து விட்டார். அப்போது அவரை மக்கள் கண்டித்தனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.

பாடம் : 59

சிறுவர்களின் சிறுநீர்.
222 இறை நம்பிக்கையாளர்களின் அன்னையார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.
223 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச்சொல்லி (சிறுநீர் பட்ட இடத்தில்) அதைத் தெளித்தார்கள். அ(ந்த இடத்)தைக் கழுவவில்லை.

பாடம் : 60

நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் சிறுநீர் கழித்தல்.
224 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள்.

பாடம் : 61

மற்றொருவர் பக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் சுவற்றினால் மறைத்துக் கொள்வதும்.
225 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த ஒரு குலத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பது போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை (த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.

பாடம் : 62

ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல்.
226 அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிப்பது) விஷயத்தில் மிகவும் கண்டிப்பவர்களாய் இருந்தார்கள். பனூ இஸ்ராயீல் மக்களில் ஒருவருடைய ஆடையில் சிறுநீர்பட்டுவிட்டால் அவர்கள் அந்தப் பாகத்தைக் கத்தரித்து விடக்கூடியவர் களாக இருந்தார்கள் எனக் கூறுவார்கள். இதைக் கேள்விப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், அவர் இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்றார்கள்.

பாடம் : 63

இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்.
227 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இரத்தம் பட்டுக் காய்ந்து விட்ட) அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர்விட்டு கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள்.
228 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! (தொழுகையைவிட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுது கொள்! என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கசுத்தி (உளூ) செய்து கொள்! என்றும் சொன்னார்கள்.

பாடம் : 64

இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டிவிடுவதும் பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்.
229 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். (அந்த ஆடையோடு) நபி (ஸல்) அவர்கள் தொழச் செல்வார்கள். அவர்களின் ஆடையில் ஈரம் அப்படியே இருக்கும்.
230 சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி கேட்டேன். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நான் கழுவுவேன். (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் காணப்படும் என்று கூறினார்கள்
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 65

இந்திரியம் முத-யவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதனைக் கழுவிய அடையாளம் விலகவில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)?
231 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் இந்திரியம் பட்டுவிட்ட ஆடையைப் பற்றி (அதை சுத்தப்படுத்துவது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். பின்னர் (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களுடைய ஆடையில் அப்படியே இருக்கும் என்று கூறினார்கள் என்றார்கள்.
232 சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவியதாகவும் பிறகு அதே ஆடையில் ஓரிரு இடங்களில் அதன் ஈரத்தின் அடையாளத்தைப் பார்த்ததாகவும் கூறினார்கள்.

பாடம் : 66

ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும், ஆட்டுத் தொழுவமும்.
அபூமூசா (ரலி) அவர்கள் தாருல் பரீத் எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் வெட்ட வெளியும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் வெட்ட வெளியையும் சுட்டிக் காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)என்றார்கள்.
233 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங் களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக் கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகப் பராமரிப்பாளரைக் கொன்றுவிட்டனர்; ஒட்கங்களை ஓட்டிச் சென்றனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி ளநபி (ஸல்) அவர்களிடம்ன வரவே அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்து வர ஒரு) படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்களை(ப் பிடித்து)க் கொண்டு வரப்பட்டது. அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ஹர்ரா பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்கு தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இவர்கள் (பொது மக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டகப் பராமரிப்பாளரைக்) கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரிப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். (இத்தகைய கொடுங்செயல் புரிந்ததனால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.)
234 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவில்) பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுவார்கள்.

பாடம் : 67

நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்து விட்டால்... (என்ன சட்டம்?)
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஒரு அசுத்தமான பொருளின்) ருசியோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றி விடாமலிருக்கும் வரை எந்தத் தண்ணீரையும் பயன் படுத்தலாம் என்று கூறியுள்ளார்கள்.
ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) பரவாயில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.)
இறந்து விட்ட யானை போன்ற மிருகங் களின் எலும்புகள் விஷயத்தில் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவற்றின் எலும்புகளால் அவர்கள் தலைவாரிக் கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக் கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதை குற்றமென அவர்கள் கருதவில்லை. முஹம்மத் பின் சீரீன், இப்றாஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்றமில்லை எனக் கூறியுள்ளனர்.
235 மைமூனா (பின்த் ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து விட்ட எ-யொன்றைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (உடனே) எறிந்து விடுங்கள்; உங்கள் நெய்யைச் சாப்பிடுங்கள் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
236 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெய்யில் விழுந்து விட்ட எலியொன்றைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து (உடனே) எறிந்து விடுங்கள்! (மீதி நெய்யைச் சாப்பிடுங்கள்) என்று பதிலளித்தார்கள்.
மஅன் (பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை மாலிக் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள்.
237 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்-முக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும் தாக்கப்பட்ட போது இருந்தது போன்றே இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும்
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 68

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்.
238 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்ததியவர்களாகவும் உள்ளோம்.
239 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறு நீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.
மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்.

பாடம் : 69

தொழுது கொண்டிருப்பவரின் முதுகில் அசுத்தமான பொருளோ இறந்த பிராணி களோ போடப்படுமானால் அதனால் அவருடைய தொழுகை வீணாகிவிடாது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது தமது ஆடையில் அசுத்தம் இருப்பதைக் கண்டுவிடுவீர் களானால் (தொழுகையில் இருந்தவாறே) அதைக் கழற்றி வைத்து விட்டுத் தமது தொழுகையைத் தொடர்வார்கள்.
தமது ஆடையில் இரத்தமோ இந்திரியமோ இருக்க (அது தெரியாமல்) ஒருவர் தொழுதார். அல்லது கிப்லா திசையை விட்டு வேறு திசையில் தொழுதார் (என்று தெரியவந்தது). அல்லது தயம்மும் செய்து தொழுது முடித்தார். பிறகு அதே நேரத்திற்குள் அவருக்கு தண்ணீர் கிடைத்து விட்டது. இந்நிலைகளில் அவர் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டியதில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.
240 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரிடம், இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டுவந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவருடைய முதுகின் மீது வைப்பர் யார்? என்று கேட்டனர்.
அக்கூட்டதிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று அதைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்களின் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு ஒத்தாசை செய்பவர்கள் (மட்டும்) இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.)
இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த (அபூ ஜஹ்லும் சகாக்களும்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். ளநபி (ஸல்) அவர்களின் புதல்வி, சிறுமின ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அவர்களின் முதுகிலிருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்). பிறகு தமது தலையை உயர்த்தி, இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்! என்று மூன்று முறை பிராத்தித்தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை பிராத்தனை புரிந்தது குறைஷிகளுக்கு மன வேதனை அளித்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப்படும் பிராத்தனை யாவும் ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந் தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக் கொள்வாயாக! என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டு) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடு கிறார்:
ஏழாவது நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் அதை நான் மறந்து விட்டேன்.
தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி கலீபு பத்ர் எனும் அந்த பாழும் கிணற்றில் மாண்டு கிடந்ததை நான் பார்த்தேன்.

பாடம் : 70

ஆடையில் எச்சில், மூக்குச் சளி போன்றவை படுதல்.
ஹுதைபியா உடன் படிக்கை நடைபெற்ற காலக்கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் செய்தியை மிஸ்வர் (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகியோர் கூறினர்:
(உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்தால் அதை (கீழே விழவிடாமல்) அவருடைய தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்.
(குறிப்பு: முழு ஹதீஸ் அறியக் காண்க: பாகம் -3, ஹதீஸ் எண்-2731)
241 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையில் உமிழ்ந்தார்கள்.
இப்னு அபீமர்யம் (சயீத் பின் ஹகம்-ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் நீண்டதோர் ஹதீஸும் இடம்பெற்றுள்ளது.

பாடம் : 71

பழரசம், போதையூட்டும் பானம் ஆகிய வற்றில் உளூ செய்வது கூடாது.
இவற்றில் உளூ செய்வதை ஹஸன் அல்பஸ்ரீ, அபுல் ஆ-யா (ரஹ்) ஆகியோர் வெறுப்பிற்குறிய செயலாகக் கருதுகின்றனர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (தண்ணீர் கிடைக்காத போது) பழரசம், பால் ஆகியவற்றில் உளூ செய்வதைவிட, தயம்மும் செய்வதே எனக்கு மிகவும் விருப்பமான தாகும் என்று கூறியுள்ளார்கள்.
242 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் (தன்மை கொண்ட) எல்லா பானமும் தடை செய்யப்பட்டதேயாகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கின்றார்கள்.

பாடம் : 72

ஒரு பெண் தம் தந்தையின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவுதல்.
அபுல் ஆ-யா (அர்ரியாஹீ-ரஹ்) அவர்கள், எனது (ஒரு) கால் மீது (ஈரக்கையால்) தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) விடுங்கள். ஏனெனில் அதில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
243 அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம் (உஹுதுப் போரில்) நபி (ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனை மருந்தாக இடப்பட்டது? என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும் சஅத் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை (அவ்வாறு நெருக்கமாக நாங்கள் இருவரும் இருந்தோம்.)- அதற்கு சஅத் (ரலி) அவர்கள், இதைப் பற்றி என்னைவிட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (கட்டுக் கடங்காமல் இரத்தம் வழியவே ஒரு ஈச்சம்) பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. (பிறகு கரிக்கப்பட்ட) பாயி(ன் சாம்பலி)னை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 73

பல் துலக்கல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். (அந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள்.
244 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் தமது கையிலிருந்த ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வாயில் குச்சியை வைத்து வாந்தி எடுப்பது போல் ஊவ் ஊவ் என்று சொல்லிக் கொண் டிருந்தார்கள்
245 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தம் வாயைச் சுத்தம் செய்)வார்கள்.

பாடம் : 74

வயதில் மூத்தவரிடம் பல்துலக்கும் குச்சியைக் கொடுப்பது.
246 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண் டிருப்பது போன்று (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரு மனிதர்கள் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட (வயதில்) பெரியவராயிருந்தார். நான் அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் அந்த பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது வயதில் மூத்தவரிடம் முதலில் கொடுப்பீராக என்று எனக்குச் சொல்லப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவரிடம் அதைக் கொடுத்து விட்டேன்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
நுஐம் (பின் ஹம்மாத்-ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் மூல உரையை இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக சுருக்கமாக அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 75

உளூவுடன் நித்திரை செய்பவர் அடையும் சிறப்பு.
247 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக் கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவ-லும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் நபியை நான் நம்பினேன். என்று பிராத்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிராத்தனை செய்து விட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்!
இந் நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன் என்ற இடத்தை அடைந்ததும் (உன் நபியை என்பதற்கு பதிலாக) உன் ரசூலை என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன் என்று சொல் என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites