அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

3-கல்வி


அத்தியாயம் : 3
3-கல்வி
பாடம் : 1
கல்வியின் சிறப்பும்உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும்.
வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
என் இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114).
பாடம் : 2                              
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக் கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்கு பதிலளிக்கலாம்.
59 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். -அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற் றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்று கூறினர். மற்ற சிலர், நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை என்றனர்.- நபி(ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்து விட்டு, மறுமை நாளைப் பற்றி (என்னிடம் கேள்வி) கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான் என்றார். நபி (ஸல்) அவர்கள், அமானிதம் (அடைக்கலம்) பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்! என்று சொன்னார்கள். அதற்கவர், அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (மார்க்கம் மற்றும் அரசுசார்ந்த) அதிகாரங்கள் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்! என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 3
உரத்த குரலில் கல்விபோதிப்பது.
60 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற் கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (-பிந்தி) வந்து கொண்டிருந்தார்கள். (அஸ்ர்) தொழுகையின் நேரம் எங்களை அடைந்து விட்ட நிலையில் நாங்கள் அங்கத்தூய்மை (உளூ) செய்து கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள்; அப்போது நாங்கள் (நேரத்தின் நெருக்கடியால்) எங்கள் கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹுச் செய்ய) ஆரம்பித்தோம். (அதைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்கள் குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நாசம்தான் என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
பாடம் : 4
ஹதீஸ்துறை நிபுணர் ஹத்தஸனா, அஃக்பரனா, அன்பஅனா (-எமக்கு அறிவித்தார்) என்று கூறுவது.
அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் ஸுபைர் அல்ஹுமைதீ (ரஹ்) அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்:
ஹத்தஸனா அஃக்பரனா, அன்பஅனா, சமிஉத்து (-நான் செவியுற்றேன்) என்ற நான்கு வார்த்தைகளையும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒரே கருத்துடைய வார்த்தை களாகவே கருதினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஒரு நபிமொழியை அறிவிக்கும் போது) உண்மையாளரும் உண்மையுரைக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் எமக்கு அறிவித்தார்கள் (-ஹத்தஸனா) என்று சொன்னார்கள்.
ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
 நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் ஒரு வார்த்தையை செவியுற்றேன் (-சமிஉத்து) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எமக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள் (-ஹத்தஸனா).
அபுல் ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தரப்பிலிருந்து அறிவித்த சில செய்திகளை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அன்னார் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (-யர்வீ அன் ரப்பிஹி) என்று சொன்னார்கள்.
அனஸ் (ரலி), அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வல்லோனும் மாண்புடையோனுமாகிய தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (-யர்வீ அன் ரப்பிஹி அஸ்ஸ வஜல்ல) என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வல்லோனும் மாண்புடையோனு மாகிய உங்கள் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (-யர்வீ அன் ரப்பிக்கும் அஸ்ஸ வ ஜல்ல) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
61 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று நான் நினைத்தேன். ஆனால், (மூத்தவர்கள் அமைதியாய் இருக்கும் அந்த அவையில் நான் எப்படிச் சொல்வதென) வெட்கப்பட்(டுக் கொண்டு மொளனமாக) இருந்து விட்டேன். பின்னர் மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்ச மரம் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 5
மக்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக தலைவர் மக்களிடமே கேள்வி கேட்பது.
62 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. ஆனால், அது பேரீச்ச மரம்தான் என்று என் மனதில் பட்டது. பின்னர் மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அது பேரீச்ச மரம் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாடம் : 6
கல்வி (கற்பித்தல்) குறித்து வந்துள்ளவை.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
என் இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114).
ஹதீஸ்துறை அறிஞர் ஒருவரிடம் (பயிலும் மாணவர்கள் ஹதீஸ்களை) வாசித்துக்காட்டுவது; எடுத்துச் சொல்வது.
ஹஸன் அல்பஸ்ரீ, சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு வாசித்துக் காட்டுவதன் மூலம் ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறுவதை அனுமதிக்கப்பட்ட முறையாகக் கருதுகின் றார்கள்.
ஹதீஸ்துறை அறிஞரிடம் வாசித்துக் காட்டுவது(ம் அதை அறிவிப்புச் செய்ய அவர் அங்கீகாரமளித்தததாகக் கருதுவதும் செல்லும் என்பத)ற்கு பின்வரும் நபிமொழியை அவர் களில் சிலர் ஆதாரமாக எடுத்துக் கொள் கின்றனர்:
ளிமாம் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் (நபி ளஸல்ன அவர்களிடம் வந்து) (ஐவேளைத்) தொழுது வரவேண்டும் என அல்லாஹ்வா தாங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்றார்கள். -இங்கே நபி (ஸல்) அவர்களிடம் வாசித்துக் காட்டப்பட்டுள்ளது. (இது அசிரியரிடம் மாணவர் வாசித்துக் காட்டும் முறையாகும்.)- பின்னர் ளிமாம் (ரலி) அவர்கள் இதைத் தமது கூட்டத்தாருக்கு அறிவித்ததும் அவர்கள் அனைவரும் அவ(ர் கூறியவ)ற்றை ஏற்றுக்கெண்டனர்.
மாலிக் (ரஹ்) அவர்கள் இதற்கு மற்றொரு சான்றை ஆதாரமாகக் கொள்கிறார்கள். அதாவது எழுதப்பட்ட படிவம் மக்களிடம் வாசித்துக் காட்டப்படுகிறது. அதனை (முழுமையாகக்) கேட்டுவிட்டு அவர்கள் இன்னார் எங்களுக்கு அங்கீகாரம் அளித்தார் எனக் கூறுகிறார்கள். மற்ற (சில சமயம்) அவர்களிடம் அது (மனனமாகவும்) சொல்லிக் காட்டப்படுகிறது. இன்னும் சிலசமயம் ஒருவர் திருக்குர்ஆன் அறிஞரிடம் ஓதிக்காட்டிவிட்டு ஓதிய அவரே இன்னார் எனக்கு ஒதிக்காட்டினார் என்று (மக்களிடம்) கூறுகிறார்கள். (நடைமுறையில் இவைகளெல்லாம் ஒருவர் மற்றவரிடம் கற்றார் என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு நபிமொழி அறிஞரிடம் (மாணவர்) வாசித்துக்காட்டி (அங்கீகாரம் பெறுவத)னால் தவறில்லை என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒருமாணவர்) நபிமொழித் துறை வல்லுநரிடம் வாசித்துக்காட்டி (-அங்கீகாரம் பெற்று) விட்டு, (வாசித்துக்காட்டிய அம்மாணவர்) அவர் எனக்கு (இதை) அறிவித்தார் என்று கூறுவது தவறில்லை என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு நபிமொழித்துறை அறிஞரிடம் (மாணவர்) வாசித்துக் காட்டு(வதன் மூலம் ஆசிரியரிடம் அங்கீகாரம் பெறு)வதும் அந்த அறிஞர் (மாணவருக்கு) படித்துக் காட்டு(வதன் மூலம் அங்கீகராம் தரு)வதும் சமம்தான் என சுஃப்யான் (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அபூஆஸிம் (ளஹ்ஹாக்-ரஹ்) அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன்.
63 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப்படுக்கவைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் உங்களில் முஹம்மது அவர்கள் யார்? என்று கேட்டார். -அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.- இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம் என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே! என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்வி களையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உம் மனதில் பட்டதைக் கேளும்! என்றார்கள்.
உடனே அம்மனிதர் உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா? என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அடுத்து அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன் றுக்கு) ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக என்றார்கள். அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அவர், அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள்.
 (இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் என்று கூறிவிட்டு நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா என்றும் கூறினார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 7
ஆசிரியர் மாணவரிடம் ஒரு நபிமொழிச் சுவடியை ஒப்படைப்பது , கல்வியை மார்க்க அறிஞர்கள் பல்வேறு ஊர்களுக்கு எழுதி அனுப்புவது ஆகியவை தொடர்பாக வந்துள்ளவை.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைப் பல பிரதிகளில் படியெடுத்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள்.
இது அனுமதிக்கப்பட்ட முறையே என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), யஹ்யா பின் சயீத் (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் கருதியுள்ளனர்.
நபிமொழிச் சுவடியை ஒப்படைக்கலாம் என்பதற்கு ஹிஜாஸ்வாசிகள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்: ஒரு படைப்பிரிவிற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து இன்ன இடத்தை நீர் அடையும் வரை இதனைப் படிக்கக் கூடாது என்று சொல்லிய னுப்பினார்கள். அதன்படி அவர் அந்த இடத்தை அடைந்ததும்தான் அதனை(த் தம்முடன் வந்த மற்ற) மக்களுக்குப் படித்துக் காட்டி நபி (ஸல்) அவர்களின் கட்டளையை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
64 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் கிஸ்ராவுக்கு) தாம் எழுதிய கடிதத்தை ஒரு மனிதர் மூலம் அனுப்பிவைத்தார்கள். அதனை பஹ்ரைனின் ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அம்மனிதர் பஹ்ரைன் ஆளுநரிடம் ஒப்படைத்தார். அவர் அதை கிஸ்ரா (குஸ்ரூ) இடம் ஒப்படைத்தார்.) அதனைக் கிஸ்ரா படித்ததும் (கோபப்பட்டு) அதை(த் துண்டு துண்டாகக்) கிழித்துப் போட்டுவிட்டான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
 (இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்தித்தார்கள் என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்.
65 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரோம பைஸாந்திய அரசுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து) கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார்கள் அல்லது எழுதிட விரும்பினார்கள். அப்போது அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள் என்று நபியவர் களிடம் சொல்லப்பட்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள். அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று (இலச்சினை) பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளத..
(இதன் அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா கூறுகிறார்கள்:)
(எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடம், அ(ந்த மோதிரத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்ததாக (தங்களிடம்) யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள்தாம் என்று சொன்னார்கள்.
பாடம் : 8
(கல்வி முதலியவற்றுக்காகக் குழுமியிருக்கும்) ஓர் அவையில் கடைசியில் அமரலாம். வட்டமாக அமர்ந்து இருப்பவர்களின் மத்தியில் இடைவெளி கண்டால் அதிலும் அமரலாம்.
66 அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ-ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்த போது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:
இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க் கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.
பாடம் : 9
நேரில் கேட்டவரைவிடக் கேட்டவரிடம் கேட்கும் எத்தனையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.
67 அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது எந்த நாள்? என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்றோம். அடுத்து இது எந்த மாதம்? என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா? என்றார்கள். நாங்கள் ஆம் என்றோம். நபி (ஸல்) அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும் என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும் என்றார்கள்.
பாடம் : 10
சொல்வதற்கும் செயல்படுவதற்கும் முன்னர் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (நபியே!) நீர் அறிந்து கொள்வீராக: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை (47:19) என்று கூறுகின் றான். இந்த வசனத்தில் அறிந்து கொள்வதைப் பற்றி இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான்.
அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசு களாவர். அவர்கள் அறிவைத் தான் வாரிசுச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பாக்கியம் பெற்றவராவர்.
கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்குச் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள்தாம். (35:28)
அல்லாஹ் கூறுகின்றான்:
(உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை அறிஞர்களைத் தவிர (வேறெவரும்) புரிந்து கொள்ள மாட்டார்கள். (29:43)
அல்லாஹ் கூறுகின்றான்:
நாங்கள் (அவரது போதனையை செவி தாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்து கொண்டிருந்தாலோ (இன்று) நரக வாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று (நிராகரிப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (67:10)
அல்லாஹ் (மற்றோர் வசனத்தில்), அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? (39:9) என்று கூறுகின்றான்.
ஒருவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை நாடினால் அவரை (மார்க்கத்தில்) விளக்கமுடையவராக ஆக்கிவிடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: மார்க்க ஞானம் என்பது கற்றுக் கொள்வதின் மூலம்தான் கிடைக்கும்.
அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக் காட்டி இதன் மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும் நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்து விட்டால் என்னைக் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லிமுடித்து விடுவேன் என்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்களே!) ரப்பானீகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய், இருங்கள்! என்று கூறினார்கள்.
ரப்பானீ என்பவர் மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப்படியாகப் பயிற்று விப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.
பாடம் : 11
மக்கள் சலிப்படைந்து விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) பக்குவமாகப் போதனை செய்ததும் கல்வி புகட்டியதும்.
68 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்.
69 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) சொல்லுங்கள்.வெறுப்பேற்றிடாதீர்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 12
அறிவுரை வழங்குவதற்காகக் கற்றவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்குவது.
70 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அபூ அப்திர்ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரைகூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள் என்றார்கள்.
பாடம் : 13
அல்லாஹ் யாருக்கு (மிகப் பெரும்) நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.
71 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகி றானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்கு கிறான். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவ தில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.
இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
பாடம் : 14
கல்வியில் சமயோஜிதம்.
72 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மதீனா வரை சென்றேன். (அப்பயணத்தில்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை. ஆனால், ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:)
(ஒரு சமயம்) நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்ச மரக்குருத்தொன்று கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் மரங்களில் ஒரு வகை மரமுள்ளது; அது முஸ்லிமுக்கு உவமானமாகும் (அது என்ன மரம்?) என்று கேட்டார்கள். அது பேரீச்ச மரம்தான் என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால், அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல் லாம் வயதில் சிறியவனாயிருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க நான் கூறுவதா என்று எண்ணி) மௌனமாயிருந்து விட்டேன். அப்போது நபி(ஸல்) அது பேரீச்சமரம்! என்று கூறினார்கள்.
பாடம் : 15
கல்வியிலும் ஞானத்திலும் தாமும் பிறர் போல் சிறந்து விளங்க வேண்டுமென்று ஆர்வம் காட்டுவது.
உமர் (ரலி) அவர்கள், நீங்கள் தலைவர்களாவதற்கு முன்னர் இஸ்லாமியச் சட்ட ஞானங் களைத் தெரிந்து கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.
அபூஅப்தில்லாஹ் (முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (மார்க்க சட்ட விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்). (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களது முதிய வயதில்கூடக் கல்வி கற்றுள்ளனர்.
73 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
பாடம் : 16
களிர் (அலை) அவர்களைத் தேடி மூசா (அலை) அவர்கள் கடலில் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை.
உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தர நான் உங்களைப் பின்தொடர்ந்து வரலாமா? (18:66) என்று (களிர் ளஅலைன அவர்களிடம் மூசா (அலை) அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் கூறுகின்றான்.
74 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் (மூசா ளஅலைன அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) மூசா அவர்களுடனிருந்த அடியார் யார்? எனும் விஷயத்தில் விவாதித்துக் கொண்டனர். அவர் களிர் (அலை) அவர்கள்தாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.(ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் வேறொரு மனிதரைக் குறிப்பிட்டார்கள்.) அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ்(ரலி) அழைத்து, நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்லவேண்டிய பாதையை கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) விவாதித்துக் கொண்டோம். நபி (ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர் களா? என்று கேட்டார்கள்! அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டுத் தொடர்ந்து கூறினார்கள்:
பனூஇஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள் (அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை என்றார்கள். அப்போது அல்லாஹ் அப்படியல்ல; நம் அடியார் களிர் உங்களைவிட அறிந்தவராயிரக்கிறார் என்று கூறினான். உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று (இறைவனிடம்) கேட்டார்கள். அப்போது (களிர் அவர்களைச் சந்திக்கும் முனை வந்து விட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் (மீனை அவர்களுக் கொரு அடையாளமாக ஏற்படுத்தி,) அவர்களிடம் இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர் என்று சொல்லப்பட்டது. (அதன்படி) அவர்கள் (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர்பார்த்தவர்களாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர் நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்த போது அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான் தான் மறக்கடித்து விட்டான் என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், (அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே பேசிக் கொண்டே திரும்பி வந்தார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லோன் அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத் துள்ள நிகழ்ச்சிகள் நடைபெற்றன
பாடம் : 17
இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
75 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை(த் தம் நெஞ்சோடு) அணைத்து இறைவா! இவருக்கு உன் வேத (ஞான)த்தைக் கற்றுத் தருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
பாடம் : 18
சிறுவர்கள் எந்தவயதில் செவியேற்ற செய்தி அங்கீகாரம்பெறும்?
76 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விடைபெறும் ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில் மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன்.-அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று (ஒரு வரிசையில்) நானும் நின்று கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையை கடந்துசென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.
77 மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் (கிணற்றிலிருந்து சேந்திய) ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.
பாடம் : 19
கல்வியைத் தேடிப் புறப்படுவது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிவதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி ஒரு மாதத் தொலை தூரத்திற்கு (ஷாம் நாட்டுக்கு) பயணமாகிச் சென்றார்கள்.
78 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் ளமூசா (அலை) அவர்கள் ஒரு அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்ன மூசா அவர்களுடனிருந்த அடியார் யார்? எனும் விஷயத்தில் விவாதித்துக் கொண் டனர். அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அழைத்து, நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்லவேண்டிய பாதையை கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) விவாதித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றிக் கூறக் கேட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்! அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்:
பனூஇஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள் (அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை என்றார்கள். அப்போது அல்லாஹ் அப்படியல்ல; நம் அடியார் களிர் (உங்களைவிட அறிந்தவராய்) இருக்கிறார் என்று கூறினான். உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று (இறைவனிடம்) கேட்டார்கள். அப்போது (களிர் அவர்களைச் சந்திக்கும் முனை வந்து விட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் (மீனை அவர்களுக் கொரு அடையாளமாக ஏற்படுத்தி,) அவர்களிடம் இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர் என்று சொல்லப்பட்டது. (அதன்படி) அவர்கள் (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர்பார்த்தவர்களாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர் நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்த போது அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்து விட்டான் என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், (அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே பேசிக் கொண்டே திரும்பி வந்தார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லோன் அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன
பாடம் : 20
கற்பவர் மற்றும் கற்பிப்பவரின் சிறப்பு.
79 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமை யான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.
இது தான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அவற்றில் இன்னும் சில நிலங்களும் உள்ளன. அவை தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன என்று இடம்பெற்றுள்ளது.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள கீஆன் என்பதன் பன்மை காஉ. என்பதாகும்.) காஉ என்பதற்கு தண்ணீர் தேங்காத பூமி என்று பொருள். ஸஃப் ஸஃப் என்பதற்கு சமநிலம் என்று பொருள்.
பாடம் : 21
கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும்.
 ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழாடித்து விடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள்.
80 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வியறிவு அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை நிலைத்து விடுவதும், மது (மலிவாக) அருந்தப்படுவதும், விபசாரம் (பரவலாய்) நடப்பதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
81 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்காத அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற
செய்தி (-நபிமொழி) ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வியறிவு குறைந்து விடுவதும், அறியாமை வெளிப்படுவதும், விபசாரம் (பகிரங்கமாய்) நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்.
பாடம் : 22
கூடுதலான கல்வியாற்றல்.
82 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக் கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 23
வாகனப் பிராணிகள் முதலியவற்றின் மீது இருந்து கொண்டு தீர்ப்பு வழங்குவது.
83 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்து விட்டேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், பரவாயில்லை; இப்போது குர்பானி கொடுத்துக் கொள்வீராக! என்றார்கள். மற்றொருவர் வந்து நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக! என்றார்கள். (அன்றைய தினம்) (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்ட தாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் பரவாயில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்! என்றே சொன்னார்கள்.
பாடம் : 24
கையால் அல்லது தலையால் சைகை செய்து தீர்ப்பு வழங்குதல்.
84 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் விடைபெற்றுக் கொண்ட) ஹஜ்ஜின் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒருவர் நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன் என்று கேட் டார். நபி (ஸல்) அவர்கள் பரவாயில்லை எனத் தமது கையால் சைகை செய்தார்கள். மற்றொருவர், குர்பானி கொடுப்பதற்கு முன் தலை முடியை மழித்து விட்டேன் என்றார். அதற்கும் நபி அவர்கள் பரவாயில்லை எனத் தமது கையால் சைகை செய்தார்கள்.
85 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (உலக முடிவு நாளின் போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும். அறியாமையும் குழப்பங்களும் வெளிப்பட்டு (பரவி) விடும். கொந்தளிப்பு (ஹர்ஜ்) மிகுந்து விடும் என்று கூறினார்கள். அப்போது கொந்தளிப்பு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் இப்படி என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்துகாட்டினார்கள்.
86 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி (த் தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்த) சுப்ஹானல்லாஹ் (-அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது (இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஆம் என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன். (தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இதோ) இடத்தில் (தொழுகையில் இருந்த போது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு (பின்வருமாறு) இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நிங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு நிகரான அல்லது நெருக்கமான அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.
அப்போது (கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும். அப்போது இறை நம்பிக்கையாளர் அல்லது உறுதி கொண்ட வர் இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் (அன்னாரின் அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம் என்று மும்முறை கூறுவார். அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிரந்து) (சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக! என்றும் நிச்சயமாகவே நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம் என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ அல்லது சந்தேகப்பேர்வழியோ, எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கி றேன். எனவே நானும் அது போன்று கூறினேன் என்பான்.
-அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) கூறுகிறார்கள்:
(நிகரான அல்லது நெருக்கமான ஆகிய) இவற்றில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
பாடம் : 25
இறை நம்பிக்கை (ஈமான்), மார்க்கக் கல்வி ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும், (அவற்றை) அவர்களுக்கப்பால் (ஊரில்) இருப்பவர்களிடம் (சென்று) அறிவிக்கும்படியும் அப்துல்கைஸ் தூதுக் குழுவினரை நபி (ஸல்) அவர்கள் தூண்டியது.
(அப்துல்கைஸ் தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்த) மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு (நான் கூறியவற்றைக்) கற்றுக் கொடுங்கள் என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
87 அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே நான் (பார்சீ மொழியில்) மொழி பெயர்க்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது இம்மக்கள் யார்? அல்லது இத்தூதுக் குழுவினர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், (இவர்கள்) ரபீஆ குடும்பத்தினர் என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நலவரவாகுக! என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அத்தூதுக் குழுவினர் நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமி டையே (எதிரிகளான) முளர் குலத்து இறை மறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தினர் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர்நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங் களில் எங்களால் தங்களிடம் வர முடிய வில்லை. எனவே, தெளிவான ஆணையொன் றைப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கை செயல்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்; நான்கை (கைவிடு மாறு) அவர்களுக்குத் தடைவிதித்தார்கள். வல்லோன் அல்லாஹ் ஒருவனையே நம்பு மாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது; ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது.
மேலும் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கிட வேண்டும் என்று கூறினார்கள்.
(மது சேகரித்துவைக்கப் பயன்படுத்தப்பட்டுவரும்) சுரைக் காய் குடுவை, மண்சாடி,தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் (பழரசம் முதலிய பானங்கள் உற்றிவைக்கப் பயன்படுத்த) வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன். (இத்தடை பின்னர் நீக்கப்பட்டது.) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு (இங்கே வராமல்) உங்கள் பின்னணியில் (உங்களை அனுப்பி) இருப்போரிடம் சென்று அறிவித்து விடுங்கள் என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
 பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும் மரப் பீப்பாய் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.
பாடம் : 26
ஒரு சட்டப் பிரச்சனை(யின் தீர்வு)க்காகப் பயணம் மேற் கொண்டு செல்வதும் அதைத் தன் குடும்பத்தினருக்குக் கற்றுக் கொடுப்பதும்.
88 உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:
நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்ட போது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன்.
ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல் லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்து விட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.
பாடம் : 27
முறைவைத்துக் கற்றல்.
89 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூஉமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து)விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். தம்மடைய முறைவந்த போது எனது (அந்த) அன்சாரி நண்பர் (சென்றுவிட்டு வந்து) என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா? என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி (வீட்டிலிருந்து) வெளியே வந்தேன். அப்போது அவர் ள நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டுன ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டிருக்கிறது என்றார்.
உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்து விட்டார்களா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் எனக்குத் தெரியவில்லை என்றார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டீர்களா? என்று நின்ற நிலையில் கேட்டேன். நபியவர்கள் இல்லை என்றார்கள். உடனே நான் அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன்.
பாடம் : 28
அறிவுரை கூறும் போதும் கல்வி கற்றுக் கொடுக்கும் போதும் தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் சினம் கொள்ளுதல்.
90 அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இன்னார் (இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது) தொழு கையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையில் சேர்ந்து கொள்ள முடிவதில்லை என்று (முறையிட்டுக்) கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள். முன் எப்போதும் அடைந்திராத அளவுகோபத்தை அன்றைய தின உரையில் நான் கண்டேன். (அவ்வுரையில்) மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர் களாகவே உள்ளீர்கள். எவர் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமா(கவே தொழுவி)க் கட்டும். ஏனெனில் (தொழவந்த) மக்களில் நோயாளிகள், பலவீனமானவர்கள், (பல்வேறு) அலுவல் உடையோர் நிச்சயம் இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
91 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொரு(ளின் சட்டங்க)ளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதன் முடிச்சை அல்லது அதன் பையையும் அதன் உறையையும் (அதன் முழு விவரங்களை) நீ அறிந்துவைத்துக் கொள்! பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்! அதன் உரிமையாளர் (முறைப்படி அதைக் கேட்டு) வந்து விட்டால் அதை அவரிடம் கொடுத்து விடு! என்றார்கள். அப்படியானால் வழி தவறி வந்து விட்ட ஒட்டகம் (பற்றிய சட்டம் என்ன)? என்று அம்மனிதர் கேட்டார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவிற்கென்றால் அன்னாரின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டன அல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது. பிறகு, அதைப் பற்றி உமக்கு என்ன (அக்கறை)? அதனுடன்தான் அதன் தண்ணீர்பையும் அதன் கால்குளம்புகளும் உள்ளனவே! அது (நீரருந்த தானாக) நீர் நிலைக்கச் செல்கிறது; மரத்தில் (இலை தழைகளை) மேய்ந்து கொள்கிறது. எனவே அதனை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும் வரை (அதன் போக்கில்) விட்டுவிடு! என்று கூறினார்கள். அப்படியானால் வழிதவறி வந்த ஆடு (குறித்து என்ன சொல்கிறீர்கள்)? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அது உனக்கு உரியது; அல்லது (உரிமையாளரோ மற்றவரோ அதனைப் பிடித்தால் அது உம்முடைய அந்த சகோதரருக்குரியது. அவ்வாறு யாருமே அதனைப் பிடித்துச் சொல்லாவிட்டால்) ஓநாய்க்கு உரியது என்று கூறினார்கள்.
92 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்களிடம் (இது போன்ற) கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்ட போது (அதைக் கேட்டு) கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஹுதாஃபாதாம் உன் தந்தை என்று பதிலளித்தார்கள். உடனே மற்றொருவர் எழுந்து என் தந்தை யார், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, உமது தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம்தாம் என்றார்கள்.
(இம்மாதிரியான கேள்விகளால்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மெய்யாகவே வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் என்றார்கள்.
பாடம் : 29
தலைவர் அல்லது நபிமொழித்துறை அறிஞர் அருகில் மண்டியிட்டு அமர்தல்.
93 அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டிலிருந்து) வெளியே வந்த போது ளமக்கள் அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கேபப்படும் விதத்தில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, என் தந்தை யார்? என்று கேட்டார். ஹுதாஃபாதாம் உன் தந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு என்னிடம் கேளுங்கள்! என்று அடிக்கடி கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தைக் கண்ட) உடன் உமர் (ரலி) அவர்கள் (நபியருகில்) மண்டியிட்டு அமர்ந்து, நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
பாடம் : 30
தாம் சொல்வது நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல்.
(ஒருமுறை பெரும் பாவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) நான் எல்லாவற்றையும் (உங்களுக்கு) சமர்ப்பித்து விட்டேனா? என்று மூன்று முறை கேட்டார்கள்.
94 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் சலாம் சொன்னால் மூன்று முறை சொல்வார்கள்; ஏதேனும் ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்று முறை (திரும்பச்) சொல்வார்கள்.
95 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை சலாம் சொல்வார்கள்.
96 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற் கொண்ட பயணம் ஒன்றில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்து கொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) உளூ (அங்கசுத்தி) செய்து கொண்டிருக்கும் போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளலானோம். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
பாடம் : 31
ஒருவர் அடிமைப் பெண்ணுக்கும் தம் குடும்பத்தாருக்கும் கல்வி கற்றுக் கொடுத்தல்.
97 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.
1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத்தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார்.
2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.)
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சாலிஹ் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
(இந்நபிமொழியை அறிவித்த) பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்.டுவந்த குராசான்வாசி ஒருவரிடம்), (சிரமம்) ஏதுமில்லாமலேயே இந்தக் கல்வியை நான் உங்களுக்கு வழங்கியிருக்கிறேன். இதை விடச் சிறியப் பிரச்சினைகளுக்காக மதீனா வுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள் ளப்பட்டதுண்டு.
பாடம் : 32
தலைவர் (இமாம்) பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும் அவர்களுக்கு (கல்வி) போதிப்பதும்.
98 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெரு நாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக் கிறேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
 நான் உறுதியளிக்கிறேன் என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்களா அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில் நான் உறுதியளிக்கிறேன் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 33
நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளைக் (ஹதீஸ்கள்) கற்பதன் மீது பேரவாக் கொள்ளுதல்.
99 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தாம் என்றார்கள்.
பாடம் : 34
கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?
உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அதனை எழுதி(த் தொகுத்து) வைத்துக் கொள்வீர்களாக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் மார்க்க அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்று விடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும் போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுசெய்ய) ஏற்கக் கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாத வர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி இரகசிய மாக இருக்கும்போதே அழிகிறது.
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர் களிடமிருந்து வரும் (மேற்கண்ட) அறிவிப்பில் அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்பது வரைதான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.
100 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே கருத்தில் அமைந்த இன்னோர் ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 35
பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்கலாமா?
101 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருசமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், (நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களி டம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள் எனக் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்து விடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள் என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி, இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்து விட்டால்...? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) இரண்டு, குழந்தை களை இழந்து விட்டாலும்தான் என்றும் அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.
102 மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில் பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் இழந்து விட்டால் அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்) என்று ளநபி (ஸல்) அவர்கள் கூறியதாகன அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 36
ஒரு செய்தியைக் கேட்டுவிட்டு அதனை (நன்றாகப்) புரிந்து கொள்ளும் வரை அதையொட்டி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பது.
103 இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், எவர் (மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார் என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் (குர்ஆனில்) வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும் (84:8) என்றல்லவா கூறுகின்றான்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான் . துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார் என்று கூறினார்கள்.
பாடம் : 37
இந்தக் கல்வியை இங்கே வந்திருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்!
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
104 சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுந ராயிருந்த) அம்ர் பின் சயீத், ளஅப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராகன மக்காவை நோக்கி ஒரு படைப்பிரிவுகளை அனுப்பிய போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: எனது காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒருபகல் பொபது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக் கொண்டு) இதைப் பொதுஅனுமதி என்று யாரேனும் கருதினால், அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்)தான் அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை என்று சொல்லிவிடுங்கள். எனக்குக் கூட (நேற்றைய) பகல்பொழுது மட்டுமே (இங்கு போர்புரிய) அனுமதியளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்து விட்டது. (நாம் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறினார்.
அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்? என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரணதண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்து விட்டு ஓடி வந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ர் கூறினார் என்றேன்.
105 அபூபக்ரா (நுஃபைஉ பின் ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய பேருரையில்) ...எனவே, (மக்களே!) உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமிக்கவையாகும். அறிந்து கொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு (நான் கூறியவற்றை) சொல்லிவிடட்டும்! என்று கூறினார்கள். மேலும் (மக்களுக்குத் தெரிவிக்கும்படி என்னிடம் பணிக்கப்பட்டவற்றை) நான் சமர்ப்பித்து விட்டேனா? என்றும் இரண்டு முறை (மக்களைப் பார்த்துக்) கேட்டார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(அபூபக்ரா (ரலி)அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை செவியுற்ற அன்னாரின் புதல்வர்) இப்னு அபீபக்ரா (ரஹ்) அவர்கள், (உங்கள் உடைமைகளும் என்பதற்கடுத்து) உங்கள் மானமரியாதைகளும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே நடந்தது என்று (இந்த நபிமொழியை அறிவித்த பின்) கூறுவது வழக்கம்.-
பாடம் : 38
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பாவம்.
106 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.
இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
107 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம், (தந்தையே!) உங்களைப் போன்று (நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட) இன்னார் இன்னாரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல் தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்? என்று கேட்டேன். அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், (மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும்பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், என்மீது யார் பொய்சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். (அதனால் தான் நான் அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கவில்லை) என்றார்கள்.
108 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக் கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால் தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்.
109 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக
யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
இதை சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
110 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள் ளுங்கள்; (அபுல்காசிம் என்ற எனது குறிப்புப் பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் எவர் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டவரா வார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். மேலும் என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 39
கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்.
111 அபூஜுஹைஃபா (வஹ்புனிஸ் ஸுவாஈ-ரலி) அவர்கள் கூறியதாவது :
அலீ (ரலி) அவர்களிடம், (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களிடம் எழுதப்பட்ட ஏடு ஏதேனும் உள்ளதா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் வேதத்தையும், (குர்ஆனிலிருந்து) ஒரு முஸ்லீமான மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும், மேலும் இந்த எழுதப்பட்ட சுவடியில் இருப்பவற்றையும் தவிர, வேறு (எங்களிடம்) ஒன்றுமில்லை என்றார்கள். நான் இந்தச் சுவடியில் என்ன இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டங்கள்), போர்க்கைதிகளை (பணம்கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ) விடுவிப்பது, மற்றும் நிராகரிப்பாளன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது (என்பன பற்றிய சட்டங்கள் இதில் உள்ளன) என்று பதிலளித்தார்கள்.
112 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூலைஸ் குலத்தார் (ஒருவர்), குஸாஆ குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்து விட்டதற்குப் பதிலாக அவர்களில் ஒருவரை குஸாஆ குலத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இந்த செய்தி நபி (ஸல்) அவர்ளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தவர்களாக ஓர் உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த (ப் புனித மக்கா) நகரைவிட்டும் யானைப் படையை அல்லது கொலையை தடுத்து விட்டான். மேலும் மக்கா வாசிகள் மீது அல்லாஹ் தன் தூதரையும் (ஓரிறை) நம்பிக்கையாளர்களையும் அதிகாரம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனும திக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவது மில்லை. நினைவில் கொள்க! எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இங்கு போர்செய்வது இந்த நேரத்திலேயே (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் பிடுங்கப்படக் கூடாது; இதன் மரங்கள் வெட்டப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர்) எடுக்கக் கூடாது. (இனிமேல்) எவரேனும் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் உயிர் ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்ளல் அல்லது பழிக்கு பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள்.
அப்போது யமன்வாசிகளில் (அபூஷாஹ் எனும்) ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இ(ந்தப் பிரசங்கத்)தை எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்! என்று கேட்டுக் கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இன்னாரின் தந்தைக்கு (அபூஷாஹிற்கு) எழுதிக் கொடுத்து விடுங்கள் என்றார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடி கொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத்தாவரமான) இத்கிர் புல்லிற்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில் நாங்கள் அதனை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். நபி (ஸல்) அவர்கள் இத்கிர் புற்களைத் தவிர என்று சொன்னார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள அய்யுகாத எனும் சொல்லை) யுகாது என்றும் வாசிக்கப்படுகிறது.
என்னிடம் (அபூஷாஹ் எனும்) அவருக்கு எதை எழுதிக் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? என்று கேட்கப்பட்டது. நான், ளநபி (ஸல்) அவர்கள் ஆற்றியன இந்த உரையைத் தான் (எழுதித் தரச்சொன்னார்கள்) என்று பதிலளித்தேன்.
113 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னைவிட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழி களைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
114 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய (மரணத் தறுவாயில் நோயின்) வேதனை அதிகமான போது என்னிடம் ஒரு ஏடு கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் (இறுதி உபதேசமாக) ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள் என்றார்கள். (நபி அவர்களின் வேதனையை அறிந்த) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது; (அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) நம்மிடம்தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே! நமக்கு (அதுவே) போதும் என்றார்கள். உடனே (அங்கிருந்த மக்கள்) கருத்து வேறுபாடு கொண்டனர். கூச்சல் அதிகரித்தது. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்; என்னருகில் (இது போன்ற) சச்சரவுகள் இருப்பது தகாது என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் ளரஹ்ன அவர்கள் கூறுகின்றார்கள்:)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்து விட்டு), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் மத்தியில் குறுக்கீடு ஏற்பட்டதே முழுக்க முழுக்க சோதனை யாகும் என்று கூறியபடி (எங்களிடமிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.
பாடம் : 40
இரவில் கற்(பிப்)பதும் போதிப்பதும்.
115 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித்தெழுந்து அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தாம் என்ன! (இன்றிரவு) திறந்து விடப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன! என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை மனத்தில் கொண்டு) இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள்! (அவர்கள் அல்லாஹ்வை வணங்கட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள் என்று கூறினார்கள்.
பாடம் : 41
இரவில் (உறங்கச் செல்லும் முன்) கல்வி கற்பிப்பதற்காகப் பேசுதல்.
116 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில் (ஒரு நாள்) எங்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள். சலாம் கொடுத்து முடிந்ததும் எழுந்து நின்று, இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றிலிருந்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.
117 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர் களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்களும் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுவித்து விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரகஅத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து சின்னப் பையன் தூங்கிவிட்டானா? அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். உடனே (தொழுது கொண்டி ருக்கும்போதே) என்னை இழுத்து தம் வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுது விட்டு, அவர்களின் குறட்டை சப்தத்தை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
பாடம் : 42
கற்றதை மனனம் செய்தல்.
118 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறார் என்று மக்கள் (குறையாகக்) கூறுகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையாயின் நான் ஒரு நபிமொழியைக்கூட அறிவித்திருக்க மாட்டேன். அந்த வசனங்கள் வருமாறு:
 நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நாம் வேதத்தில் எடுத்தரைத்த பின்னரும் எவர் மறைக்கின்றார்களோ அவர்களைத் திண்ணமாக அல்லாஹ் சபிக்கின்றான்.மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள். ஆனால், யார் (இத்தவற்றிலிருந்து) திருந்தி, தம் செயல்முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்து வைத்தவற்றை) எடுத்துரைக்கின்றார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் உள்ளேன் (2:159, 160).
 நம்முடைய முஹாஜிர் சகோதரர்களின் கவனத்தை கடைவீதிகளில் அவர்கள் செய்துவந்த வியாபாரம் ஈர்த்துக் கொண்டது. நம்முடைய அன்சாரி சகோதரர்களின் கவனத்தை அவர்களுடைய (விளைநிலம் போன்ற) செல்வங்களைப் பராமரிக்கும் பணி ஈர்த்துக் கொண்டது. ஆனால், (இந்த) அபூஹுரைராவோ வயிறு நிரம்பினால் போதுமென்ற திருப்தியுடன் (வேறு அலுவல்களில் கவனம் செலுத்தாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே ஒட்டிக் கொண்டிருந்தேன். (அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர்களுடன்) மற்றவர்கள் ஆஜராகாத இடங்களிலெல்லாம் நான் ஆஜராகி விடுவேன்; மற்றவர்கள் மனனம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனனம் செய்து கொண்டிருந்தேன்.
119 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன்மொழி களைக் கேட்கின்றேன். ஆனால், அவற்றை நான் மறந்து விடுகின்றேன் என ளநபி (ஸல்) அவர்களிடம்ன கூறினேன். நபி (ஸல்) அவர்கள், உனது மேலங்கியை விரி! என்று சொல்ல, உடனே நான் அதை விரித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது கைகளால் (எதையோ அள்ளுவது போன்று சைகை செய்து) அள்ளி(க் கொட்டிவிட்டு), (நெஞ்சோடு) அணைத்துக் கொள்! என்றார்கள். உடனே நான் அதை (என் நெஞ்சோடு) அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதையும் மறந்ததே இல்லை.
120 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டமிருந்து இரண்டு பை(செய்தி)களை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பிவிட்டேன்; மற்றொன் றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும். (அவைய னைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர் பானவை.)
பாடம் : 43
அறிஞர்கள் கூறுவதை அமைதியாக செவியேற்பது.
121 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது (மக்களுக்கு உரையாற்றிய போது) என்னிடம் மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்! என்று கூறிவிட்டு, (மக்களே!) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள் என்று சொன்னார்கள்.
பாடம் : 44
ஓர் அறிஞரிடம் மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டால் இதைப் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று இறைவனிடம் சாட்டிவிடுவதே நன்று.
122 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (களிர் ளஅலைன அவர்களைச் சந்தித்த) மூசா, இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா அல்லர். அவர் வேறொரு மூசா என்று (கதைஞரான) நவ்ஃப் அல்பகாலீ என்பார் கூறுகிறாரே? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இறைவிரோதியான அவர் பொய்யுரைத்து விட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற் றியபடி) நின்று கொண்டிருந்த போது அவர் களிடம், மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் (நான் அறிந்தவரையில்) நானே மிகவும் அறிந்தவன் என்று பதிலளித்து விட்டார்கள்.
ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித் தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று சொல்லாமல் விட்டுவிட் டார்கள். எனவே அல்லாஹ் (இல்லை) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர் என்று அறிவித்தான்.
மூசா (அலை) அவர்கள் என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி? என்று கேட்டார்கள். அதற்கு, கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு (அப்படியே கடலோரமாக நடந்து) செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அவ்வாறே மூசா (அலை) அவர்கள் (தம்முடன்) தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும் அழைத்துக்காண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் (இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்த) ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினர்.
கூடையிலிருந்த மீன் (உயிராகி) மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்து விட்(டுச் சென்றுவிட்)டது. (இந்தப் பாதை உறங்கியெழுந்த) மூசா (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய உதவியாளருக்கும் வியப்பாய் அமைந்தது. (மீன் நழுவியதை உதவியாளர் கண்டிருந்தும் அதைக் கூற மறந்து விட்டார்.) இந்நிலையில் அன்றைய மீதிப்பொழுதிலும் இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர். மறுநாள் பொழுது விடிந்த போது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்றார்கள். தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும்வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை.
 அவர்களுடைய உதவியாளர் நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது என்றார். மூசா (அலை) அவர்கள், நாம் தேடி வந்த இடம் அது தான் என்று கூறினார்கள். பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே தம்மை முழுவதுமாக ஓர் துணியால் அல்லது தமது அடையால் தம்மைப் போர்த்தியபடி ஒருமனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்?) என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் தான் மூசா என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், இஸ்ரவேலர்களின் (இறைத்தூத ரான) மூசாவா? என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ஆம் என்று பதிலளித்து விட்டு, உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா? என்று கேட் டார்கள்.
அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசா! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்றார்கள்.
(முடிவில் மூசா, களிர் ஆகிய) இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் (தங்களது மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.
அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ் சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது ளமூசா (அலை) அவர் களிடம்ன களிர் (அலை) அவர்கள் மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில்தான் உள்ளது என்று கூறினார்கள்.
(சற்று நேரம் கழிந்ததும்) களிர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை களில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக் குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமலேயே ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்திவிட்டீர்களே? என்று கேட்டார்கள்.
 அதற்கு களிர் (அலை) அவர்கள், என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள் என்று கூறினார்கள்.
-(அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.-
(பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து வெளியேறி கடலோரமாக) நடந்துபோய்க் கொண்டி ருக்கும் போது ஒரு சிறுவன் சிறுவர்கள் சிலருடன் விளையாடிக் கொண்டிருந்தான். களிர் (அலை) அவர்கள் அவனது உச்சந்தலையைப் திருகி தலையைத் தணியே எடுத்து விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? என்று கேட்டார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், நீங்கள் என்னுடன் பொறுமை யாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.
-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இனம்முறை களிர் (அலை) அவர்கள் கூறியனது, முதல் முறை கூறியதை விட கூடுதலான அழுத்தம் கொண்டதாகும்.-
மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விரு வரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) களிர் (அலை) அவர்கள் அச்சுவரை தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே என்றார்கள்.
களிர் (அலை) அவர்கள், இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம் என்று கூறினார்கள்.
(இந்த நிகழ்ச்சியை கூறி முடித்தபின்) நபி (ஸல்) அவர்கள், மூசா பொறுமையாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிரக்குமே என நாம் விரும்பினோம் என்று சொன்னார்கள். (காண்க: இதேபாகம், ஹதீஸ்-74)
பாடம் : 45
அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்று கொண்டு கேள்வி கேட்பது.
123 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இனமாச்சர்யத்தினால் போரிடு கின்றார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார் என்று பதிலளித்தார்கள்.
கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப்பார்த்தார்கள்.
பாடம் : 46
(ஹஜ்ஜின் போது கல்லெறிய வேண்டிய இடங்களில்) கல்லெறியும் நேரத்தில் மார்க்கத் தீர்ப்புக் கேட்பதும் பதிலளிப்பதும் (செல்லும்).
124 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ராவில் (மக்களால்) கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல்எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல்லெறிந்து விடும்! என்றார்கள். மற்றொரு வர், அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலைமடியை மழித்து விட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பரவாயில்லை; இப்போது குர்பானிகொடுத்து விடும்! என்றார்கள்.
(அன்றைய தினம் பிற்படுத்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முற்படுத்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் பரவாயில்லை; (விடுபட்டதை) செய்வீராக! என்றே சொன்னார்கள்.
பாடம் : 47
உங்களுக்கு சிறிதளவு ஞானமே கொடுக்கப்பட்டுள்ளது! எனும் (17:85ஆவது) இறைவசனம்.
125 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (மக்கள் நடமாட்டமில்லாத)ஒரு பாழ்வெளியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த பேரீச்ச மட்டையாலான கைத்தடியை ஊன்றிக் கொண்டுவந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள்.
அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (நபியவர்களைச் சுட்டிக் காட்டி) அவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்! என்றார். இன்னொருவர் அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத (பதில்) ஏதும் அவரிடமிருந்து வந்து விடப்போகிறது என்றார். இறுதியில் அவர்களில் சிலர் இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) கட்டாயம் அவரிடம் கேட்டேவிடுவோம் என்றனர். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது நான் நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து வேத அறிவிப்பு (வஹீ) அறிவிக்கப்படுகிறது என்று கூறிக் கொண்டேன். (வேத அறிவிப்பின் போது ஏற்படும் சிரமநிலை விலகி) அவர்கள் தெளிவடைந்த போது, (நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவளின் கட்டளையால் உருவானது. அவர்களுக்கு சிறிதளவு ஞானமே கொடுக்கப்பட்டுள்ளது! எனும் (17:85ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (சுலைமான் பின் மிஹ்ரான்-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(உங்களுக்கு சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டள்ளது) என்பதற்கு பதிலாக அவர்களுக்கு என்றுதான் எங்களது ஓதலில் அமைந்துள்ளது.
பாடம் : 48
மக்கள் சிலர், ஒன்றைத் தவறாக விளங்கி விபரீத முடிவுக்கு வந்து விடக்கூடும் என்று அஞ்சி, சிறந்த ஒன்றைக்கூட செய்யாமல் விட்டுவிடுவது.
126 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
என்னிடம் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் உங்களிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் இறையில்லம் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் (பின்வருமாறு) பதிலளித்தேன்:
ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) அண்மைக்காலத்(தில் இஸ்லாத்திற்கு வந்)த வர்கள் என்பது மட்டும் இல்லாமலிருந்தால் நான் இறையில்லம் கஅபாவைத் துளைத்து (அதனை தற்போதுள்ள வாசல் அமைப்பிலில்லாமல்) அதற்கு இரண்டு வாசல்கள் அமைத்து விட்டிருப்பேன் என்று கூறினார்கள்.
நான் அண்மைக் காலத்தவர்கள் என்று சொன்னதும் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் இறைமறுப்புக் (கோலோச்சிய அறியாமைக் காலத்துக்)கு அண்மைக் காலத்தவர்கள் என்று குறிப்பிடும்படி நினைவூட்டினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக்காலத்தில் நபி ளஸல்ன அவர்களின் எண்ணத்தை) செய்து முடித்தார்கள்.
பாடம் : 49
ஒரு சாரார் (ஒன்றை முழுமையாகப்) புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தால் புரிந்து கொள்ளாதோரை விடுத்துப் புரிந்து கொள்ளும் ஒரு சாராருக்குத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்தல்.
127 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :
மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றி பேசி, அதனால்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (அவர்களால்) பொய்யார்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா, என்ன?
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
128 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :
(ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலே! என்று அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்) என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். முஆதே! என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்) என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக் கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்து விட்டான் என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள் என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.
129 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத்திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார் என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள் இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்க, (இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக் கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாடம் : 50
கற்பதில் வெட்கப்படுவது.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக் கொள்ள மாட்டார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. (ஏனெனில்,) மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் ஒரு போதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
130 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமை தான்) என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது? என்று கேட்டார்கள்.
131 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக் கொண்டு (அமைதியாக) இருந்து விட்டேன். பிறகு மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அது பேரீச்ச மரம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும் என்றார்கள்.
பாடம் : 51
(கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல்.
132 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இச்சைக் கசிவு (மதீ) அதிமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க வெட்கப்பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் (இதபற்றிக்) கேட்குமாறு பணித்தேன். அவர் அதுபற்றி நபியவர்களிடம் கேட்டார். அதற்காக அங்கசுத்தி (உளூ) செய்வது தான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாடம் : 52
பள்ளிவாசலில் கற்பதும் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும்.
133 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமனிதர் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளி வாசலில் எழுந்து நின்று (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகள் துல்ஹுலைஃபா எனும் இடத்திலிருந்தும், ஷாம் (சிரியா) வாசிகள் ஜுஹ்ஃபா எனும் இடத்திலிருந்தும், நஜ்த்வாசிகள் கர்ன் எனும் இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்று பதிலளித்தார்கள்.
யமன்வாசிகள் யலம்லம் (இப்போதைய சஅதியா) எனும் இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (எதையும்) நான் அறியவில்லை.
பாடம் : 53
வினவப்பட்டதைவிட விரிவாகப் பதில் கூறுதல்.
134 இப்னு உமர் (ரலி) கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) வர்ஸ் எனும் செடியினால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்கவிட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி (செய்ய அதற்கு மேலிருப்பவற்றை) வெட்டி விடவேண்டும் என்று சொன்னார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites