அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 2 மே, 2010

மனிதர்களுக்கு ஓதிப்பார்ப்பது சரியா ?


ஓதிப் பார்க்கக் கூடாது என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், "பால், உப்பு போன்ற பொருட்களில் ஓதிப் பார்ப்பது தான் கூடாது. ஆனால் மனிதர்களுக்கு ஓதிப் பார்க்க அனுமதி உள்ளது' என்று கூறுகின்றார். இது சரியா?
உங்கள் நண்பர் கூறுவது சரி தான். எனினும் இதை வைத்துப் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதால் இது குறித்து விரிவாக விளக்க வேண்டும்.
நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டி விட்டது. "உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள், "நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்'' என்று கூறினர். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் "அல்ஹம்து' சூராவை ஓதி, (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். "நாங்கள் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்'' என்று நபித் தோழர்கள் கூறி விட்டுப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். "அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டு விட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூற்கள்: புகாரி 2226, முஸ்லிம் 4080
காரிஜா பின் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி, "உங்கள் தோழராகிய நபி (ஸல்) அவர்கள் சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியம் விலகிட உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா?'' என்றனர். அந்த நபித் தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியமும் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தனர். அதை நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர் கூறிய போது, "அதை நீ வைத்துக் கொள். தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட சத்தியத்தை ஓதிப் பார்த்த இது சிறந்ததாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: காரிஜா பின் ஸல்த் (ரலி)
நூற்கள்: அஹ்மத் 20834, அபூதாவூத் 3398
இந்த ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். "தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட சத்தியத்தை ஓதிப் பார்த்த இது சிறந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து குர்ஆன் அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப் பார்க்கக் கூடாது என்பதையும் அறியலாம்.
நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம்.
(அல்குர்ஆன் 17:82)
குர்ஆனிலுள்ள இந்த மருத்துவக் குணத்தைக் கொண்டு ஓதிப் பார்க்க அனுமதி உண்டு என்றாலும், குர்ஆனுடைய போதனையிலும் அதன் புனிதத் தன்மையிலும் நம்பிக்கை இல்லாத ஏமாற்றுப் பேர்வழிகள் "நாங்கள் குணப்படுத்துகிறோம்' என்று கூறி மக்களை ஏமாற்றுவதையும் நாம் காண முடிகின்றது.
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் இது போன்ற மோசடிகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில் மருத்துவ நோக்கில் ஓதிப் பார்க்கும் போது அதனால் குணம் அடைந்த பின்னரே கூலி பெறப்பட்டுள்ளது. ஒருவர் ஓதிப் பார்த்ததன் மூலம் அல்லாஹ் குணமளிக்கவில்லை என்றால் அதற்காக அவருக்கு எந்தக் கூலியும் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
குர்ஆனில் உள்ள இந்த மருத்துவத் தன்மையை வைத்து ஏமாற்ற முனைவோருக்கு இஸ்லாம் அறவே இடம் தரவில்லை. ஓதிப் பார்த்த பின் அதனால் குணம் அடைந்தது என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் தான் பேசப்பட்ட கூலியைப் பெற முடியும்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.
குர்ஆன் மூலமே ஓதிப் பார்த்தாலும் குறிப்பிட்ட சிலரிடம் சென்று ஓதிப் பார்த்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று நம்பக் கூடாது. ஏனென்றால் குர்ஆனில் தான் நிவாரணம் உள்ளதே தவிர ஓதிப் பார்க்கும் நபருக்கு நிவாரணம் அளிக்க எந்த ஆற்றலும் இல்லை.
இந்த நபரிடம் சென்று ஓதிப் பார்த்தால் குணமடையும் என்று நம்பினால் அந்த நபருக்கு நோய் நிவாரணம் அளிக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாகி விடும்; இது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும்.
குர்ஆனில் நிவாரணம் இருக்கின்றது என்று அல்லாஹ் கூறுவதால், நபி (ஸல்) அவர்களும் ஓதிப் பார்ப்பதை அனுமதித்துள்ளதால் அதைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம் என்று கூறுகின்றோம்.
குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவரே அதை ஓதி அதன் மூலம் நிவாரணம் தேடலாம்.
அப்படியானால் மேற்கண்ட ஹதீஸ்களில் அடுத்தவருக்கு ஓதிப் பார்த்ததாகக் கூறப்படுகின்றதே என்ற ஐயம் ஏற்படலாம். குர்ஆன் ஓதத் தெரியாத, முஸ்லிமல்லாதவர்களுக்குத் தான் நபித்தோழர்கள் ஓதிப் பார்த்தனர் என்று இந்த ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
எனவே குர்ஆன் ஓதத் தெரியாத மாற்று மதத்தவர்கள், குழந்தைகள், நோயின் காரணமாக ஓத முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அடுத்தவர்கள், அதாவது குர்ஆன் ஓதத் தெரிந்த யாரும் ஓதிப் பார்க்கலாம். மற்றவர்கள் தாங்களே குர்ஆனை ஓதி, நிவாரணம் தேட வேண்டும்.
மேலும் இந்த ஹதீஸ்களில் குர்ஆன் மூலம் ஓதிப் பார்த்து, அதற்குக் கூலி வாங்கியதாக இடம் பெறுவதால், குர்ஆன் ஓதி அதைக் கொண்டு சம்பாதிக்க அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதி அதற்காகக் கூலி வாங்குபவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.
ஏனெனில் குர்ஆன் ஓதுவதற்குக் கூலி வாங்கக் கூடாது என்று தடை செய்யும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே மேற்கண்ட ஹதீஸ்களில் பெறப்பட்ட கூலி, அதன் மூலம் மருத்துவம் செய்ததற்காகத் தான் என்றே விளங்க வேண்டும். இல்லையேல் குர்ஆனுக்குக் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மனைவிக்காக தாடியை விடலாமா ?


சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை; ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், "என் மனைவி இப்போது வைக்க வேண்டாம்; வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை' என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்?
"இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5892
தாடி வைப்பதை வலியுறுத்தி இது போன்ற பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. எனவே தாடி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும். இதை எக்காரணம் கொண்டும் ஒரு முஸ்லிம் புறக்கணிக்கக் கூடாது.
தாடியை மழித்தல் என்பது சுன்னத்தைப் புறக்கணிப்பது என்று சொல்வதை விட, தானாக வளரும் ஒரு சுன்னத்தை அழித்தல் என்று தான் கூற வேண்டும்.
பாவமான காரியத்தில் மனைவிக்குக் கணவனோ, அல்லது கணவனுக்கு மனைவியோ கட்டுப்படக் கூடாது.
அன்சாரிகளில் ஒரு பெண் தனது மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்து விட்டு, "என் கணவர் எனது தலையில் ஒட்டு முடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாôள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேண்டாம்! ஒட்டு முடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5205, 5934
எனவே மனைவியோ, அல்லது மற்றவர்களோ கூறுகின்றார்கள் என்பதற்காக தாடியைச் சிரைக்கக் கூடாது.
இவ்வாறு செய்பவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்? என்று கேட்டுள்ளீர்கள்.
ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு, அவரது நிலை மறுமையில் எப்படியிருக்கும் என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை. எனவே தவறு என்று கண்டால் அதைச் சுட்டிக் காட்டுவது தான் நமது கடமை. மறுமை நிலை குறித்து அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.
அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 7:8,9)

தொப்பியை கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு இது சரியான ஆதாரம் தானே ?


"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளை அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842
இந்த ஹதீஸில் இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று கூறியிருப்பதால் இஹ்ராமைக் களைந்தவுடன் அவற்றை அணிய வேண்டும் என்பது தான் பொருள் என்று கூறுகின்றீர்கள்.
தொப்பிக்கு இதிலிருந்து இப்படிச் சட்டம் எடுப்பவர்கள் இதே ஹதீஸில் இடம் பெற்றுள்ள சட்டை, பேண்ட், காலுறை போன்றவற்றுக்கு இவ்வாறு சட்டம் எடுப்பதில்லை.
அதாவது இஹ்ராமைக் களைந்த உடன் சட்டை, பேண்ட், காலுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்தாக வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். விரும்பினால் அவற்றை அணியலாம்; அல்லது அணியாமல் இருக்கலாம்; அது அவரவர் விருப்பம் என்று விளங்கிக் கொள்கிறோம்.
இதே நிலை தான் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
சட்டை, பேண்ட், காலுறை போன்றவற்றை அணிவது எப்படி மார்க்கக் கடமை இல்லையோ அது போன்று தொப்பி அணிவதும் மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்று தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.
அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

உறவினர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படும் போது ஒருவர் மண்ணை வாரி இறைத்து விடுகின்றார். பிறகு அவர்களுக்குள் உப்பு பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இது சரியா?


உறவினர்களுக்குள் சண்டை ஏற்பட்டு விட்டால் அந்த உறவுடன் மீண்டும் இணைந்து வாழ்வதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகின்றது.
"பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின்       அம்ர் (ரலி)
நூல்: புகாரி 5991
இது போன்ற ஏராளமான செய்திகள் உறவைப் பேணி வாழ்வது குறித்து வந்துள்ளன. ஆனால் சண்டை ஏற்படும் போது மண்ணை வாரி இறைப்பதும், பின்பு உப்பு பரிமாறிக் கொள்வதும் மாற்று மதக் கலாச்சாரமாகும். இதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதியில்லை.
எனவே மண்ணை வாரி இறைத்தல், உப்புப் பரிமாற்றம் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் ஒரு போதும் செய்யக் கூடாது.

தூதுச் செய்தியில் எதனையும் நபித்தோழர்கள் மறைத்தனரா ?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே! விளக்கவும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகத் தெரிவிக்கும் இந்தச் செய்தி எது என்பது குறித்த விளக்கம் எதுவும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. எனினும் நிச்சயமாக அந்தச் செய்திகள் மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
"அபூஹுரைரா அதிகமாக அறிவிக்கின்றாரே' என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் ஒரு நபி மொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்'' என்று அபூஹுரைரா (ரலி) கூறி விட்டு,
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159,160) ஆகிய இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து,
"மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரிகளோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூஹுரைராவோ, முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) வயிறு நிரம்பினால் போதும் என்று நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றை எல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டு இருந்தேன்'' என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஃரஜ்
நூல்: புகாரி 118
இந்த ஹதீஸில் மார்க்கம் தொடர்பான எந்தச் செய்தியையும் மறைக்கக் கூடாது என்று கூறும் மேற்கண்ட இரு வசனங்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கோள் காட்டி, அதனால் தான் தாம் எதையும் மறைக்காமல் அறிவிப்பதாகக் கூறுகின்றார்கள். எனவே அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகக் கூறுவது மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவை எது குறித்த செய்திகள் என்பதையும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வார்த்தையிலிருந்தே விளக்கத்தைப் பெற முடியும். அந்தச் செய்திகளைச் சொல்லியிருந்தால் கழுத்து வெட்டப்பட்டிருக்கும் என்று கூறுகின்றார்கள். எனவே அரசியல், அதிகாரம் குறித்த செய்திகளாக அவை இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் குறித்த செய்திகளை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த முன்னறிவிப்புக்கள் அன்றைய ஆட்சியாளர்கள் சிலருக்கு எதிராகவும் இருந்தன.
அது போன்ற செய்திகள் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குத் தெரிந்திருந்து, அதைப் பரப்பினால் அன்றைய ஆட்சியாளர்களால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் கூறியிருப்பதற்குத்  தான் வாய்ப்புள்ளது.

இணை வைப்பவர்களுக்குப் பாவ மன்னிப்பு தேடுவது கூடுமா ?


இணை வைப்பவர்களுக்குப் பாவ மன்னிப்பு தேடுவது முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும், நபிக்கும் தடுக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் 3:159 வசனத்தில், அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! என்று கூறுகின்றானே! இது யாரைக் குறிக்கிறது என்பதை விளக்கவும்.
இணை கற்பிப்பவர்களுக்காகப் பாவ மன்னிப்பு தேடக் கூடாது என்பது தான் திருக்குர்ஆனின் தீர்ப்பாகும். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த வசனம் முஃமின்களைக் குறித்தே கூறுகின்றது.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)
"முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்'' என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களுடன் இருந்தவர்களைப் பற்றியே இந்த வசனம் பேசுகின்றது.
எனவே பாவ மன்னிப்புத் தேடுமாறு இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த நபித் தோழர்களுக்காகத் தான் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசனத்தின் முன் பின் வசனங்களைப் பார்க்கும் போது, உஹதுப் போர் குறித்து இந்த வசனங்கள் கூறுகின்றன.
இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் ஓட்டம் பிடித்தோரை அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 3:155)
இந்த நபித் தோழர்கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் 3:159 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். எனவே இந்த வசனம் இணை வைப்பவர்களுக்காகப் பாவ மன்னிப்பு தேடுமாறு கூறவில்லை. முஃமின்களுக்குப் பாவ மன்னிப்பு தேடுமாறு தான் கட்டளையிடுகின்றது.

தாய்க்குத் தெரியாமல் பிள்ளைகள் வீட்டில் எதனையாவது எடுத்தால் திருட்டாகுமா ? இது போன்று மற்ற உறவுகளுக்கும் சொல்லவும் ?


திருட்டு என்பது என்ன? தாய்க்குத் தெரியாமல் மகனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், பிள்ளைகளுக்குத் தெரியாமல் தாயும் சிறு சிறு பொருட்களையோ அல்லது பணத்தையோ எடுக்கின்றார்கள். இவ்வாறு பொறுப்பாளரிடம் கேட்காமல் எடுப்பது திருட்டா? இல்லையா?
ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது தான் திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான்.
எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பாளரோ பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் குடும்பத் தேவைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடம்பரச் செலவுக்காகவோ அல்லது வேறு வகைகளுக்காகவோ எடுக்கக் கூடாது.
முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், "(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமா?'' என்று கேட்டார். அதற்கு, "உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2211
இந்த ஹதீஸில், "நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்ற வாசகத்தைக் கவனிக்கும் போது, குடும்பச் செலவு அல்லாத இதர தேவைகளுக்காக எடுப்பது கூடாது என்பதை அறியலாம்.

பெயர் வைக்கும் முறை எப்படி ? முதலில் வைத்த பெயரை மீண்டும் மாற்றலாமா ?


எனக்கு மூன்று வயதுடைய மகள் இருக்கிறாள். அவளுக்கு ஃபஜினா அமீர் என்று பெயர் வைத்து, அதை நகராட்சியிலும் பதிவு செய்து விட்டோம். உறவினர்கள் சொன்னதைக் கேட்டு, அர்த்தத்தைப் பார்க்காமல் இந்தப் பெயரை வைத்து விட்டோம். தற்போது அந்தப் பெயர் அரபிப் பெயரா? அதன் அர்த்தம் என்ன? என்று சிலர் சந்தேகத்தை எழுப்புகின்றார்கள். எனவே இந்தப் பெயருக்கு ஷிர்க்கான அர்த்தம் ஏதும் உள்ளதா? இந்தப் பெயரை மாற்றித் தான் ஆக வேண்டுமா? என்பதை விளக்கவும்.
ஃபஜினா, அமீர் ஆகிய இரண்டும் தனித்தனி வார்த்தைகள். இதில் ஃபஜினா என்ற சொல் அரபு மொழியில் காணப்படவில்லை. வேற்று மொழியில் இருந்து அரபு மொழியில் நுழைந்த வார்த்தையாகத் தான் உள்ளது. "ஒரு வகைச் செடியிலிருந்து சாப்பிடுபவள்'' என்பது இதன் பொருளாகும். அமீர் என்றால் அதிகாரமுடையவர், தலைவர் என்று பொருள்.
பெயர் வைக்கும் போதே நல்ல பொருளுள்ள பெயராகத் தேர்வு செய்து வைக்க வேண்டும். புதுமையான பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் இது போன்ற அனர்த்தமான பெயர்களை வைத்து விடுகின்றார்கள்.
"மாறு செய்யக் கூடியவள்'' என்ற பெயருடைய பெண் குழந்தை உமர் (ரலி) அவர்களுக்கு இருந்தாள். அந்தப் பெயரை மாற்றி அந்தக் குழந்தைக்கு ஜமீலா (அழகானவள்) என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3988
இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற பல ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள் தவறான அர்த்தத்தைத் தரக் கூடிய பெயரை மாற்றியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 6190, 6191, 6192, 6193)
எனவே தவறான அர்த்தங்கள் கொண்ட பெயராக இருந்தால் அதை மாற்றி வைக்க வேண்டும். ஃபஜினா அமீர் என்ற பெயரைப் பொறுத்தவரை தவறான அர்த்தங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

வரதட்சணை, பித்அத்தான திருமணங்களிலிருந்து வரும் சாப்பாட்டை கூடும் என்றால் நேர்ச்சை உணவை அனுப்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாமா?

வரதட்சணை, பித்அத்தான திருமணங்களுக்குச் செல்லக் கூடாது என்றும், ஆனால் அவர்கள் நம் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பும் உணவைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். அவர்கள் நேர்ச்சை உணவை அனுப்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாமா?
வரதட்சணைத் திருமணங்களைப் பொறுத்த வரை அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்ற அடிப்படையில் நாம் அதைப் புறக்கணிப்பதில்லை. உணவு ஹலால் என்றாலும் தீமை நடப்பதால் அங்கு செல்லாமல் புறக்கணிக்கின்றோம். அந்த உணவைக் கொடுத்து விடும் போது அன்பளிப்பு என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கூறியிருந்தோம்.
ஆனால் மவ்லித் அல்லது இறந்தவர்களுக்காக பாத்திஹா ஓதி நேர்ச்சை செய்தால் அந்த உணவே தடுக்கப்பட்டதாகி விடுகின்றது. இந்த உணவை அந்த இடத்திற்குச் சென்றும் உண்ணக்கூடாது. யாரும் நமக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் உண்ணக் கூடாது.
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே. (6:121)
இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் படைக்கப்படும் உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவுகளை அன்பளிப்பாக யாரும் வழங்கினாலும் அதை உண்ணக் கூடாது.

மக்காவில் இருப்பவர் கஃபாவில் தொழுது கொண்டே இருப்பதா ? அல்லது மற்ற காரியங்களில் ஈடுபடலாமா ?


நான் மக்கா நகரில் பணியில் இருக்கிறேன். வார விடுமுறையான வெள்ளிக்கிழமையில் மக்ரிபிலிருந்து இஷா வரை இஸ்லாமிய சென்டரில் மார்க்க பயான் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு வருகின்றேன். இருந்தாலும் இந்த நேரத்தில் இறை இல்லம் கஅபா சென்று தவாஃப் செய்து, மக்ரிப், இஷா தொழுதால் ஒரு லட்சம் நன்மை கிடைக்குமே என்று நினைக்கிறேன். இதில் எது சிறந்த அமல்? நன்மைகள் அதிகம் தரும் என்பதை விளக்கவும்.
மக்காவில் தொழுவது நன்மையான காரியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயத்தில்  மார்க்க விளக்கங்களைக் கேட்பதற்காக நேரம் ஒதுக்குவதும் நன்மையான காரியம் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்-ரலி) ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, "அபூ அப்துர்ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகின்றேன்'' என்றார். அதற்கு, "உங்களை சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதை விட்டும் என்னைத் தடுக்கின்றது. நான் உங்களுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கவனித்து அறிவுரை கூறுகின்றேன். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில்
நூல்: புகாரி 70
எந்தெந்தக் காரியத்தை எப்போது செய்ய வேண்டுமோ அப்போது தான் செய்ய வேண்டும். கஅபாவில் தொழுவதை விட, மார்க்க விளக்கத்தைக் கேட்பது சிறந்ததா? என்பது போன்ற ஒப்பீடுகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, தொழுகைக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளைக் கூறுகின்றோம். இதைவிட குர்ஆன் ஓதினால் எழுத்துக்குப் பத்து நன்மை கிடைக்குமே என்று கூறக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய முடியாது.
கஅபாவில் தொழுதால் நன்மை கிடைக்கும் என்று சொன்ன அதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் மற்ற வணக்கங்களையும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதையும் கற்றுத் தந்துள்ளார்கள்.
அப்படிப் பார்த்தால் கஅபாவில் நிரந்தரமாகத் தங்கி தொழுது கொண்டே இருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் அவ்வாறு செய்திக்க வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்ததாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.
எனவே கஅபாவில் தொழுவதன் சிறப்பை அந்த ஹதீஸ் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அது மட்டும் தான் நன்மையான காரியம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை இந்தியா போன்ற நாடுகளில் நிறைவேற்ற முடியாதா ?


இஸ்லாமியச் சட்டம் உள்ள இடத்தில் முஸ்லிமல்லாத ஒருவர் விபச்சாரம் செய்து பிடிபட்டால் அவருக்கு இஸ்லாமியச் சட்டப்படி தண்டனை உண்டா? இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் நாமாக எங்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை வழங்குங்கள் என்று கேட்கலாம் அல்லவா? ஏன் தவ்ஹீத் ஜமாஅத் உட்பட யாரும் அவ்வாறு கோருவதில்லை?

இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே அமைந்துள்ளது. திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு என்றும் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்றும் தனித்தனியான சட்டத்தைக் கூறவில்லை. எனவே இஸ்லாமிய சட்டம் உள்ள நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் விபச்சாரம் செய்து பிடிபட்டாலும் அவர்களுக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப் பட வேண்டும். ஹதீஸ்களிலும் இதற்கு ஆதாரம் உள்ளது.
(விபச்சாரம் செய்து விட்ட) யூத இனத்தைச் சேர்ந்த ஆணையும் பெண்ணையும், பள்ளியின் வாசலில் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்: அஹ்மத் 2250
இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவான சட்டமாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சி அல்லாத நாடுகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை. இந்தியாவில் முஸ்லிம்களுக்குத் தனி சிவில் சட்டம் கோரும் நாம் கிரிமினல் சட்டத்தைக் கோருவதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இஸ்லாமிய சிவில் சட்டம் என்பது தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டது ஆகும். சொத்துரிமை, திருமணம் போன்ற விவகாரங்களில் தனியான சட்டம் இருப்பதால் பிற மக்களுக்கு எந்தப் பாதிப்போ, பாகுபாடோ ஏற்படப் போவதில்லை.
ஆனால் குற்றவியல் சட்டம் என்பது அவ்வாறல்ல! குற்றங்களைக் குறைப்பதற்காகவே தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
திருமணம் செய்த ஒருவன் விபச்சாரம் செய்து விட்டால் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். ஆனால் இந்தியத் தண்டனைச் சட்டப்படி ஒரு சில ஆண்டுகள் சிறையில் இருந்தால் போதுமானது. இந்தப் பாரபட்சம் சாதாரண ஒன்றல்ல! மரண தண்டனைக்கும், சாதாரண சிறைத் தண்டனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது.
அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழக்கூடிய ஒரு நாட்டில் ஒரே குற்றத்தைச் செய்த ஒரு பிரிவினருக்கு மரண தண்டனையும் மற்றொரு பிரிவினருக்கு சாதாரண தண்டனையும் அளித்தால் அதனால் குற்றங்கள் குறைவதை விட அதிகரிக்கவே செய்யும்.
உதாரணமாக முஸ்லிம் பெண்ணுடன் முஸ்லிமல்லாத ஒருவர் விபச்சாரம் செய்து விட்டால் ஒரே குற்றத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கினால் இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தி விடும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகி விடும்.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, ஓரளவாவது மார்க்கத்திற்கு உட்பட்டு நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். முஸ்லிமல்லாதவர்கள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, மறுமையைப் பயந்து, மார்க்கத்திற்கு உட்பட்டு நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்தச் சட்டங்களை ஆட்சியாளர்கள் தவறாகக் கையாளும் நிலை ஏற்படும்.
முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுத் துன்புறுத்தும் நிலையைப் பல்வேறு சமயங்களில், பல்வேறு ஆட்சிகளில் நாம் அனுபவித்து உள்ளோம். இது கடுமை குறைந்த இந்தியத் தண்டனைச் சட்டம் என்பதால் இதன் பாதிப்பு அவ்வளவாகத் தெரியவில்லை. பொய் வழக்குப் போட்டு, இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு சாதாரணமாக இருக்காது.
முஸ்லிம்களைக் கருவருக்க நினைக்கும் மோடி போன்ற ஆட்சியாளர்கள் அதற்குக் கருவியாக இஸ்லாமியச் சட்டங்களையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விடும்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் தான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நமக்கு வழங்க வேண்டும் என்று நாம் கோருவதில்லை.

இந்து விழாக்களில் வரும் மக்களுக்கு பானைக்கரம், மோர் ஊற்றுதல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் செய்து கொடுக்கலாமா ?


எங்கள் ஊரில் இந்து சமுதாய மக்கள் பங்குனி மாதத்தில் விரதம் இருந்து தீச்சட்டி எடுப்பார்கள். அன்றைய தினம் அதைப் பார்க்க வரும் மக்களுக்கு சிலர் பானைக்கரம், மோர் ஊற்றுதல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற நேர்ச்சைகளை நேர்ந்து செய்வார்கள். சில அமைப்புகளும் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எங்கள் ஊர் பள்ளிவாசலில் நிர்வாகிகள் கூடி இந்த விழாவில் தண்ணீர்ப் பந்தல் வைப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார்கள். இவ்வாறு தண்ணீர் பந்தல் வைப்பதற்கு அனுமதி இருக்கின்றதா? மனித நேய அடிப்படையில் வைக்கின்றோம். அது கூடாது என்றால் குர்ஆன், ஹதீஸில் தடை இருக்கின்றதா? என்று கேட்கின்றார்கள். விளக்கவும்.
மனித நேயம் என்பது வேறு! பிற மத வணக்க வழிபாட்டிற்கு உதவுதல் என்பது வேறு! முஸ்லிமல்லாத மக்களுக்கு முஸ்லிம்கள் குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் இரத்த தானம் வழங்குகின்றனர். இது மனித நேயம். அது போன்று திருவிழாவிற்கு வந்த இடத்தில் உங்கள் வீட்டில் வந்து தண்ணீர் கேட்கும் போது கொடுப்பது மனிதாபிமானம். அந்தத் திருவிழா நடக்கும் இடத்திற்கு நீங்கள் கொண்டு போய் தண்ணீர் வழங்குவது அந்த வழிபாட்டை நீங்கள் ஊக்குவிப்பதாகத் தான் அமையும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
இந்த வசனத்தின் அடிப்படையில் தெளிவான பாவம் என்று தெரிந்தும் அதற்கு உதவுவது இறைக் கட்டளைக்கு மாற்றமான செயல்.
மேலும் இந்துச் சமுதாய மக்கள் தண்ணீர் பந்தல் அமைப்பதை வணக்கமாகக் கருதி நேர்ச்சை செய்து வைப்பதாகவும் கூறுகின்றீர்கள். மாற்று மதத்தினர் வணக்கமாகக் கருதிச் செய்யும் ஒரு செயலை நாம் வணக்கம் என்று கருதாமல், நன்மை என்று கருதியோ அல்லது வேறு எந்தக் காரணத்தைக் கூறியோ செய்ய முடியாது. நன்மையான காரியமாக இருந்தாலும் இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் இடங்களில் வைத்து அதைச் செய்வதற்குத் தடை உள்ளது.
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?'' என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். "அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். "நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அஹ்மத் 16012
அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமை! அது போன்ற ஒரு செயலைச் செய்யும் போது கூட அங்கு சிலைகள் உள்ளதா? இஸ்லாத்திற்கு மாற்றமான திருவிழாக்கள் நடக்கின்றதா? என்பன போன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.
எனவே தீச்சட்டி எடுத்தல் போன்ற திருவிழாக்கள் நடக்கும் இடத்தில், அதிலும் அவர்கள் வணக்கம் என்று கருதும் ஒரு செயலை நாம் எந்தக் காரணம் கூறியும் நியாயப்படுத்த முடியாது.

விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் இருந்தால் அவருக்கு 80 கசையடிகள் கொடுக்க வேண்டுமா ?

சாட்சி கூறுபவருக்கு தண்டனையா? என்ற கோணத்தில் தங்கள் கேள்வி அமைந்துள்ளது. ஆனால் பெண்கள் மீது அவதூறு கூறுவோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது தான் தாங்கள் குறிப்பிடும் சட்டம்.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராத வர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:4)
ஒரு பெண் விபச்சாரம் செய்து விட்டாள் என்று ஒருவர் கூறுகின்றார் என்றால் அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்.
நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர் களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
நான்கு சாட்சிகள் இல்லாமல் குற்றம் சுமத்துபவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினாலும் தண்டனை யிலிருந்து தப்ப முடியாது.
இந்த விஷயத்தில் மார்க்கம் இவ்வளவு கடுமை காட்டுவதற்குக் காரணம், பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்பு படுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.
தனக்குப் பிடிக்காத பெண்ணையோ, அல்லது தனது ஆசைக்கு இணங்காத பெண்ணையோ ஒருவர் விபச்சாரி என்ற பட்டம் சுமத்தி விட வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவதூறு கூறுபவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலை இருந்தால் அதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே தான் இந்த விஷயத்தில் மார்க்கம் கடுமை காட்டுகின்றது. இதில் கணவன் மனைவிக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது.
ஒருவர் தன் மனைவி மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் அவரிடம் நான்கு சாட்சிகள் இல்லை என்றால் அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து, ஐந்தாவது முறை, "தான் கூறுவது பொய் என்றால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்'' என்று கூற வேண்டும். இது போன்று அந்தப் பெண்ணும் தன் மீதுள்ள குற்றத்தை மறுத்து சத்தியம் செய்தால் இருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். இது கணவன் மனைவிக்கு மட்டும் உள்ள தனிச் சட்டமாகும்.
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும். "அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (அல்குர்ஆன் 24:6-9)

வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் கல்யாண வீட்டிலிருந்து வரும் உணவுகளை உண்ணலாமா ?


எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு அழைக்கின்றார்கள். திருமணத்தின் போது அனாச்சாரங்கள் நடப்பதால் நாங்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வீட்டிற்குச் சாப்பாடு கொடுத்து விடுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாமா? இல்லாவிட்டால் பக்கத்து வீடு பகையாகும். பக்கத்து வீட்டைப் பேணுங்கள் என்பது நபிமொழி அல்லவா?
அண்டை வீட்டாரைப் பேண வேண்டும் என்பதெல்லாம் மார்க்கத் திற்கு முரணில்லாத வகையில் தான். அந்த அடிப்படையில் அனாச்சாரங்கள் நடைபெறும் திருமண சபைகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியான செயல் தான்.
வரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை இந்தத் திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல!
எனவே நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.
பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1495
தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites