அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 2 மே, 2010

இந்து விழாக்களில் வரும் மக்களுக்கு பானைக்கரம், மோர் ஊற்றுதல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற காரியங்களை முஸ்லிம்கள் செய்து கொடுக்கலாமா ?


எங்கள் ஊரில் இந்து சமுதாய மக்கள் பங்குனி மாதத்தில் விரதம் இருந்து தீச்சட்டி எடுப்பார்கள். அன்றைய தினம் அதைப் பார்க்க வரும் மக்களுக்கு சிலர் பானைக்கரம், மோர் ஊற்றுதல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற நேர்ச்சைகளை நேர்ந்து செய்வார்கள். சில அமைப்புகளும் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எங்கள் ஊர் பள்ளிவாசலில் நிர்வாகிகள் கூடி இந்த விழாவில் தண்ணீர்ப் பந்தல் வைப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார்கள். இவ்வாறு தண்ணீர் பந்தல் வைப்பதற்கு அனுமதி இருக்கின்றதா? மனித நேய அடிப்படையில் வைக்கின்றோம். அது கூடாது என்றால் குர்ஆன், ஹதீஸில் தடை இருக்கின்றதா? என்று கேட்கின்றார்கள். விளக்கவும்.
மனித நேயம் என்பது வேறு! பிற மத வணக்க வழிபாட்டிற்கு உதவுதல் என்பது வேறு! முஸ்லிமல்லாத மக்களுக்கு முஸ்லிம்கள் குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் இரத்த தானம் வழங்குகின்றனர். இது மனித நேயம். அது போன்று திருவிழாவிற்கு வந்த இடத்தில் உங்கள் வீட்டில் வந்து தண்ணீர் கேட்கும் போது கொடுப்பது மனிதாபிமானம். அந்தத் திருவிழா நடக்கும் இடத்திற்கு நீங்கள் கொண்டு போய் தண்ணீர் வழங்குவது அந்த வழிபாட்டை நீங்கள் ஊக்குவிப்பதாகத் தான் அமையும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
இந்த வசனத்தின் அடிப்படையில் தெளிவான பாவம் என்று தெரிந்தும் அதற்கு உதவுவது இறைக் கட்டளைக்கு மாற்றமான செயல்.
மேலும் இந்துச் சமுதாய மக்கள் தண்ணீர் பந்தல் அமைப்பதை வணக்கமாகக் கருதி நேர்ச்சை செய்து வைப்பதாகவும் கூறுகின்றீர்கள். மாற்று மதத்தினர் வணக்கமாகக் கருதிச் செய்யும் ஒரு செயலை நாம் வணக்கம் என்று கருதாமல், நன்மை என்று கருதியோ அல்லது வேறு எந்தக் காரணத்தைக் கூறியோ செய்ய முடியாது. நன்மையான காரியமாக இருந்தாலும் இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் இடங்களில் வைத்து அதைச் செய்வதற்குத் தடை உள்ளது.
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?'' என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். "அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். "நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அஹ்மத் 16012
அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமை! அது போன்ற ஒரு செயலைச் செய்யும் போது கூட அங்கு சிலைகள் உள்ளதா? இஸ்லாத்திற்கு மாற்றமான திருவிழாக்கள் நடக்கின்றதா? என்பன போன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.
எனவே தீச்சட்டி எடுத்தல் போன்ற திருவிழாக்கள் நடக்கும் இடத்தில், அதிலும் அவர்கள் வணக்கம் என்று கருதும் ஒரு செயலை நாம் எந்தக் காரணம் கூறியும் நியாயப்படுத்த முடியாது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites