அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

பெண்புத்தி பின் புத்தியா?



கே.எம். அப்துன் நாசிர்
பெண்களை இழிவு படுத்தும் வண்ணம் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப் பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில செய்திகளையும், அவை தொடர்பான விமர்சனங்களையும், உண்மையான மார்க்க விளக்கத்தையும் நாம் கண்டு வருகிறோம்.. அந்த வரிசையில் உள்ளதுதான் பின்வரக்கூடிய செய்திகளாகும்.
1529 شاوروهن  وخالفوهن   (كشف الخفاء ج: 2 ص: 4)
பெண்களிடம் ஆலோசனை செய்யுங்கள். (ஆனால்) அதற்கு மாற்றமாக நடந்து கொள்ளுங்கள்.  (நூல் : கஷ்ஃபுல் கஃபா பாகம் : 2 பக்கம் 4)
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாதுஇது நபி (ஸல்) அவர்களால் கூறப்படாத, அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதற்கு எந்த விதமான அறிவிப்பாளர்களின் தொடரும் கிடையாது. இதே கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு வாசகங்களில் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றிக் காண்போம்.
عن أنس مرفوعا لا يفعلن أحدكم أمرا حتى يستشير فان لم يجد من يشيره فليستشر امرأة ثم ليخالفها فإن في خلافها البركة  (كشف الخفاء ج: 2 ص: 4)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : உங்களில் எவரும் ஆலோசனை செய்யாமல் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம். ஆலோசனை செய்வதற்கு யாரும் இல்லையென்றால் பெண்ணிடம் ஆலோசனை செய்யுங்கள். பிறகு அவளுக்கு மாற்றமாக நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பெண்ணுடைய (ஆலோசனைக்கு) மாறு செய்வதிலே பரகத் (அபிவிருத்தி) இருக்கிறது.  (நூல் : கஷ்ஃபுல் கஃபா பாகம் : 2 பக்கம் 4)
இதுவும் ஏற்றுக் கொள்ளமுடியாத பலவீனமான செய்தியாகும்.
இந்த செய்தியினுடைய அறிவிப்பாளர் வரிசையில் ஈஸா என்பவர் இடம் பெறுகிறார். இவர்  மிகவும் பலவீனமானவர் ஆவார். மேலும் இது அறிவிப்பாளர் வரிசையிலே தொடர்பறுந்த செய்தியாகும் ( துஹ்ஃபத்துல் அஹ்வதீ பாகம் : 6 பக்கம் : 449)
2971 حدثنا علي أنا أبو   عقيل عن حفص  بن عثمان بن عبيد الله عن عبد الله بن عمر قال عمر  خالفوا النساء فإن في خلافهن البركة   من حديث أبي جعفر الرازي  (مسند ابن الجعد ج: 1 ص: 436)
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : '' பெண்களுக்கு மாறுசெய்யுங்கள். அவர்களுக்கு மாற்றமாக நடப்பதிலே பரகத் (அபிவிருத்தி) இருக்கிறது. ( நூல்முஸ்னது இப்னுல் ஜஃத் பாகம் : 1 பக்கம் : 431 )
இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத மிகவும் பலவீனமான செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹப்ஸ் பின் உஸ்மான் என்பவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார். எனவே இவர் வழியாக வரக்கூடிய செய்திகள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது.
மேலும் இதில் '' அபூ உகைல் '' என்பவரும் இடம் பெறுகிறார்.
இவரும் பலவீமானவர் ஆவார். அனைத்து ஹதீஸ் கலை அறிஞர்களும் இவரை பலவாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இவர் யாரென்றே அறியப்படாதவர்கள் வழியாக அறிவிக்கக் கூடியவராவார் என்றும் அறிவிப்பாளர் விமர்சன நூற்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த செய்தியும் இட்டுக்கட்டபட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மேலே நாம் கண்ட செய்திகள் அனைத்தும் பெண்ணினத்தை இழிவு படுத்தும் வண்ணமும், பலவீனமானவைகளாகவும் அமைந்துள்ளவையாகும். மேலும் இவை நபி (ஸல்) அவர்களின் உண்மையான நடைமுறைக்கு மாற்றமாகவும், திருமறைக் குர்ஆனுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
பொதுவாக நாம் ஒரு விஷயத்தில் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து நாம் என்ன முடிவை எடுத்தோமோ அந்த அடிப்படையில்தான் செயல்படுத்த வேண்டும். அவர்களைத்தான் இறைவன் நேசிப்பான். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.  (அல்குர்ஆன் 3 : 159)
   மேலும் சில நேரங்களில் , சில விஷயங்களில் பெண்களுடன் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
(கணவன், தலாக் விடப்பட்ட பெண்) இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை.  (அல் குர்ஆன் 2 : 233 )
இங்கு பெண்ணோடு ஆலோசனை செய்து என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதைத்தான் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால்தான் நாம் இறைக்கட்டளையை நிறைவேற்றியவர்களாவோம். அந்த ஆலோசனைக்கு மாற்றமாக நடந்து கொள்வது இறைவனுடைய அருளுக்கு பதிலாக சாபத்தைத்தான் பெற்றுத்தரும்.
பெண்களிடம் ஆலோசனை செய்து அதற்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்று நபிகளார் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் திருமறைக்குர்ஆனுக்கு எதிரானதாகும் என்பதை நாம் மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்ததாகும். ஒரு ஆண்மகன் தன்னுடைய சமூக வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கின்றான். அவன் மனம் தளரும் போதெல்லாம் அவனுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி அவனை தேற்றக்கூடியவள் அவனுக்கு வாழ்க்கைத் துணையாக அமைகின்ற பெண்தான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள்தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும்போது (தன்னுடைய  கற்பை) அவனுக்காக பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பவர் : உமர் (ரலிநூல் : அபூதாவூத் (1417)
இதற்கு நாம் மிகச்சிறந்த உதாரணமாக ýதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவத்தைக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய கட்டளையின் பிரகாரம் ýதைபிய்யா எனுமிடத்தில் குறைஷிக் காஃபிர்களுடன் சில ஒப்பந்தங்தளைச் செய்து அதில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால் அந்த ஒப்பந்த வாசகங்களை வெளிப்படையாக படிக்கின்ற யாரும் அது முஸ்லிம்களுக்கு எதிரானதுதான் என்றே கருதுவார்கள். அது போன்றே அருமைச் ஸஹாபாக்களுக்கும் நபி (ஸல்) அந்த ஓப்பந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் தெரிவித்தது பேரதிர்ச்சியாக அமைந்து விடுகிறது. நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி '' எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்க வில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தினால் (தம் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடம் இருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும், (அதனால் அவர்கள் தமக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடியையும் களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணியை அறுத்து விட்டு முடிகளையப்) புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள். என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்து தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு சென்றனர் (நூல் : புகாரி 2731)
ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியிடம் ஆலோசனை செய்திருக்கிறார்கள். பெண்ணிடம் ஆலோசனை செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுதான் இறைவனுடைய அருளைப் பெற்றுத் தரும் என்றிருந்திருந்தால் இங்கு நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை செய்திருக்க மாட்டார்கள். மேலும் இங்கு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறிய ஆலோசனைதான் ஒரு மிகப்பெரிய பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு துணைபுரிந்துள்ளது.
மேலும் நபி ýஐப் (அலை) அவர்கள் தன்னுடைய மகளின் ஆலோசனையை ஏற்று நபி மூஸா (அலை) அவர்களை தனக்கு பணியாளராக அமர்த்திக் கொள்கிறார்கள். தன்னுடைய இரண்டு மகள்களில் ஒருவரை அவருக்கு திருமணம் செய்தும் கொடுக்கிறார்கள்.
"என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.
"எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார் (அல் குர்ஆன் 27 : 26, 27 )
எனவே பெண்ணினத்தை இழிவுபடுத்தும் வண்ணம் அமைந்த மேலே நாம் கண்ட செய்திகள் இட்டுக்கட்டப்பவை என்பதையும் , அதுமட்டுமின்றி திருமறைக்குர்ஆனுக்கு எதிரானது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites