அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 11 டிசம்பர், 2010

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை.

நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!
மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!
இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்
1.                       சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
2.                       அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.
3.                       எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4.                       சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
5.                       சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
6.                       சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
7.                       சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.
ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.
8.                       நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!
9.                        மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

இதையும் கவனியுங்க...



தொலைநோக்குத் திட்டங்களுடன் செயல்படுவது மட்டுமல்லாமல், எல்லா தரப்பினரின் நலத்தையும் பேணுவதாக இருப்பதுதான் நல்லரசு, நல்லாட்சி. நம்மிடம் இல்லாததை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற மனப்போக்கு ஆபத்தில் முடியும். ஒரு சில துறைகளில் மட்டும் மிதமிஞ்சிய வளர்ச்சியை ஊக்குவித்து அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதும், பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சரிக்கட்டிக் கொள்வதும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் குறுகிய கண்ணோட்டத்துடனான நிர்வாகமாகத்தான் இருக்கும்.
இந்தியாவை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள் நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம் என்றெல்லாம் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறார்களே தவிர, அடிப்படையாக நம்மை எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அலைபேசி வைத்திருந்தால் இந்தியா ஒளிர்ந்துவிடும் என்று நம்மை நம்ப வைத்து, இப்போது ஒரு சில அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் பல லட்சம் கோடிகளை அள்ளிக் குவித்து விட்டது கூடப் பரவாயில்லை. நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.
கடந்த ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி சரித்திரம் காணாத அளவுக்கு உயர்ந்து, ஏறத்தாழ ஒரு கோடி டன்னாகி இருக்கிறது. சுமார்  40,000 கோடிக்கு நாம் சமையல் எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களுக்கும், தங்கத்துக்கும் அடுத்தபடியாக இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பை விழுங்குவது சமையல் எண்ணெயின் இறக்குமதிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நமது தேவையில் பாதிக்கு மேல் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது மட்டுமல்ல, உலகிலேயே மிக அதிகமாக சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு என்கிற சாதனையையும் நாம் படைத்து விட்டிருக்கிறோம். இதற்காக நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று கேட்டு விடாதீர்கள்.
ஆண்டுதோறும் நமது சமையல் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருகுவது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்து வருகிறது. நமது மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் பாமாயில்தான். பாமாயில் என்பது மலேசியா, இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளில்தான் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த இரண்டு நாடுகளிலும் ஏதாவது காரணத்தால் உற்பத்தி தடைபட்டு விட்டால் இந்தியாவின் கதிதான் என்ன?
அதைவிட கவலைதரும் பிரச்னை என்னவென்றால் நமது தேவைக்கும், உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான். அதாவது, எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் தேவை அதிகரிக்க, மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி குறைந்து கொண்டே போக, ஆண்டுதோறும் இறக்குமதிக்கான அன்னியச் செலாவணி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே இருப்பதை உணவு அமைச்சகம் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை.
இன்றைய இந்த நிலைமைக்கு மிக முக்கியமான காரணம், மத்திய உணவு அமைச்சகத்தின் தவறான கொள்கைகள்தான் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.
உணவு தானியங்கள் என்று வந்தால் இடைத்தரகர்களை அரசு ஆதரிக்கிறது. சர்க்கரை என்று வந்தால் கரும்பு உற்பத்தியாளர்களையும், பொதுமக்களையும் விட்டுவிட்டு சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைப் பேணுகிறது. எண்ணெய் வித்துகள் என்று வந்தால், உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு பயனாளிகள் கொதிப்படைந்து விடக்கூடாது என்று இறக்குமதியை அனுமதித்து முடிந்தவரை விலையைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.
அவ்வப்போதைய பிரச்னைகளைத் தீர்ப்பதல்ல நல்ல நிர்வாகம். எண்பதுகளில் இதேபோல ஒரு நிலைமை ஏற்பட்டபோது, அன்றைய இந்திரா காந்தி அரசு எண்ணெய் வித்துத் தொழில்நுட்பக் கழகம் ஒன்றை ஏற்படுத்தி, எண்ணெய் வித்துகளின் உற்பத்திப் பெருக்கத்துக்கு வழிகோலியது. சமையல் எண்ணெயின் அதிகபட்ச விலையை நிர்ணயித்தது போல, எண்ணெய் வித்துகளைக் பயிரிடும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலையையும் நிர்ணயித்து ஊக்குவித்தது.
இன்றைய நிலைமை என்ன தெரியுமா? அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கும், விலையுயர்ந்த பருப்பு வகைகளுக்கும்கூட குறைந்தபட்ச விலையை அதிகரித்து ஊக்குவிக்கும் அரசு, எண்ணெய் வித்துகளுக்குத் தரும் குறைந்தபட்ச விலை விவசாயியின் உற்பத்திச் செலவுக்குக் கூட போதாது.
இறக்குமதியால் ஒரு சிலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்தியா பாதிக்கப்படுகிறதே...!

ஏன் இந்தத் தயக்கம்?




தொடர்ந்து 18 நாள்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால், குடியரசு காயப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஊடகங்களில் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளைப் பற்றித் தொடர்ந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இப்போது பிரச்னை பூதாகரமாக மாறி, பிரதமரையே கபளீகரம் செய்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்காமல் விட்டிருந்தால், முழுப் பூசணிக்காயும் நிச்சயமாகச் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும்.
பிரச்னை வெளியானவுடன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி, புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏன், ஒரு விசாரணைக் கமிஷனேகூட அமைத்திருக்கலாமே?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதலே, காங்கிரஸ் தலைமைக்குத் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற இறுமாப்பும், எதிர்க்கட்சிகள் கைகோத்துவிடாது என்கிற அசட்டுத் தைரியமும் நிறையவே ஏற்பட்டுவிட்டது. "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையை ஒரு பொருட்டாகவே மத்திய அரசு கருதவில்லை என்பதுடன் பிரச்னைக்குரிய அமைச்சகத்தின் செயலராக இருந்தவரை, ஏற்கெனவே அவர் மீது மற்றொரு லஞ்ச ஊழல் புகார் விசாரணை முடிவடையாத நிலையில், தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்ததே, அதுதான் ஆணவத்தின் உச்சகட்டம்.
இப்போது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. செயல்படவிடாமல் தடுக்கின்றன என்று ஆளும்கட்சி கூறுவதில் அர்த்தமே இருப்பதாகத் தெரியவில்லை. அரசு என்னதான் விரும்புகிறது? "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பற்றி எதிர்க்கட்சிகள் எதுவுமே பேசாமல், பிரதமரைப் போல மெளனம் சாதிக்க வேண்டும் என்கிறதா? இல்லை, தினமும் நாடாளுமன்றத்துக்கு வந்து நாற்காலிகளில் தூங்கிவிட்டுப் போகவேண்டும் என்று நினைக்கிறதா?
கடந்த நவம்பர் 9 முதல் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இதுவரை ஒரு நாள்கூட செயல்படவில்லை என்பது உண்மை. இந்த நாடாளுமன்றப் புறக்கணிப்பால், அரசுக்கு ஏறத்தாழ  100 கோடி நஷ்டம் என்பதும் உண்மை. ஆனால், இதற்கு யார் பொறுப்பு, எதிர்க்கட்சிகளா, ஆளும் கட்சியா?
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இருப்பதால் அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதன் செயல்பாடுகள் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றால் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் தேவையில்லையே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, வெற்றி பெற்ற கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலோ, ஆளுநர் மாளிகைகளிலோ ஒன்றுகூடி, விருந்துண்டு, குசலம் விசாரித்துப் பிரியலாமே!
அவையில் பெரும்பான்மை இருப்பது ஆட்சியில் அமரவும், நிர்வாகத்தை நடத்தவும்தானே தவிர, அரசை நடத்துவது நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றம் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுதான். நாடாளுமன்றத்தை, பிரச்னைகள் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆளும்கட்சிக்குத் தானே தவிர, எதிர்க்கட்சிகளுடைய கடமை அதுவல்ல. அதனால்தான், அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துக்காக ஓர் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.
எதிர்க்கட்சிகள் பிரச்னையை அரசியலாக்கப் பார்க்கின்றன என்பது ஆளும்கட்சித் தரப்பின் குற்றச்சாட்டு. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயல்வதில் வியப்பென்ன இருக்கிறது? ஆளும்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முயற்சிப்பதும், ஆளும்கட்சி தவறுகளைத் திருத்தாமல் அடம் பிடித்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் தானே எதிர்க்கட்சிகளின் கடமை!
தலைமைத் தணிக்கை ஆணையரின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுதான் விசாரிக்குமே, பிறகு எதற்காக ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. பொதுக் கணக்குக் குழு என்பது "சி.ஏ.ஜி.' அறிக்கையில் கூறப்படும் எல்லா துறைகளின் அறிக்கையையும் பொதுவாக, மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்யும் குழு. ராணுவம், ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், உளவு என்று எல்லா அமைச்சகங்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்குகளையும் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதுதான் தணிக்கை ஆணையத்தின் பணி. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது மேலோட்டமானதுதான் என்று அரசுத் தரப்பே கூறும்போது, அதன் அடிப்படையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்கு என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது?
நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், குற்றச்சாட்டின், பிரச்னையின் எல்லா அம்சங்களையும் தீர விசாரிக்கும் அமைப்பு. இந்தஅமைப்பு பிரதமர் தொடங்கி, சோனியா காந்தி உள்ளிட்ட, ஏன் தனது கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்காக நாள்தோறும் ஆதரவு அறிக்கை வெளியிடும் தமிழக முதல்வர் உள்பட, நீரா ராடியா, ரத்தன் டாடா, அனில் அம்பானி என்று ஒருவர் விடாமல் விசாரிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு. இது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா என்ன?
நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்துமே என்கிற காங்கிரஸாரின் கேள்விக்கு இதுதான் பதில் - பிரதமர் என்ன கடவுளா? அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் அந்த நாட்டு நாடாளுமன்றங்களால் விசாரிக்கப்படும்போது, மன்மோகன் சிங்கை இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு விசாரித்தால் என்ன தவறு? அவருக்குத்தான் இதற்கு முன் இரண்டு "ஜே.பி.சி.'க்களால் விசாரணை செய்யப்பட்ட அனுபவம் உண்டே!
நாடாளுமன்றம் நடக்காமல் இருப்பதற்கு அரசுதான் காரணம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க அரசுத் தரப்பு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி!

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites