
2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது. தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத்...