அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பெண்கொடுத்து பெண் எடுத்தல் பற்றியது

கேள்வி ; எனக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றது. என் அண்ணனுக்கு என் கணவருடைய தங்கையைக் கொடுத்தார்கள். அதாவது பெண் கொடுத்து பெண் எடுத்தோம். வரதட்சணை எதுவும் வாங்கவில்லை. நகை, சீர் போன்றவற்றை இரு தரப்புமே கட்டாயப்படுத்தி கேட்காமல் அவரவர் சக்திக்குட்பட்டதைச் செய்தார்கள். சீர், நகை போன்றவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகின்றது. என் அண்ணன்கள் மூன்று பேருக்கும் திருமணமாகி தனியாக இருக்கிறார்கள். நாங்கள் பெண் கொடுத்து எடுத்திருப்பதால் திருப்பிக் கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. இந்நிலையில் நாங்கள் என்ன செய்வது?
பதில் ; பொதுவாக பெண் கொடுத்து பெண் எடுப்பதே ஒரு மறைமுக வரதட்சணையாகத் தான் நடைபெறுகிறது. நீ என் தங்கையைத் திருமணம் முடித்தால் நான் உன் தங்கையைத் திருமணம் முடிக்கிறேன் என்று நிபந்தனை வைத்து நடைபெறுவதால் எது நடந்தாலும் அது இரண்டு வீடுகளிலும் எதிரொலிக்கிறது. கொடுக்கல் வாங்கலிலும் இதே நிலை தான். நான் ஃபிரிட்ஜ் கொடுத்தால் நீயும் தர வேண்டும் என்ற அடிப்படை தான் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. இதில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம்.
திருமணத்தின் போது நகை, சீர் போன்றவற்றை வாங்குவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதால்  அதற்குப் பரிகாரமாகத் தான் அதைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
மார்க்க அடிப்படையில் திருப்பிக் கொடுப்பது தான் சரி எனும் போது, அதனால் பயன் இருக்குமா? இருக்காதா? என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.
திருப்பிக் கொடுப்பதால் பயனில்லை என்று முடிவு செய்து கொடுக்காமல் இருப்பதை விட, அல்லாஹ்வுக்குப் பயந்து பரஸ்பரம் திருப்பிக் கொடுத்து விட்டால் செய்த தவறுக்குப் பரிகாரம் செய்து விட்டோம் என்ற நிம்மதி கிடைக்கும். இறைவனிடமும் அதற்கான கூலியைப் பெற முடியும்.
உங்களுக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். பரஸ்பரம் திருப்பிக் கொடுப்பதன் மூலம் உங்கள் கணவரின் தங்கையை மணமுடித்த ஒரு சகோதரரிடம் இருக்கும் நகை, சீர் போன்றவற்றை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஒருவர் மட்டுமே அதன் மூலம் பயனடைந்து கொண்டிருப்பார்.
இரண்டு தரப்பிலும் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் அவரவர் சக்திக்கேற்ப செய்ததாகக் கூறியுள்ளீர்கள். அனைவரும் மனப்பூர்வமாக பொருந்திக் கொண்டு பரஸ்பரம் மன்னித்து விட்டால் குற்றமில்லை. எனினும் பொருளாதார விஷயத்தில் யாரும் இவ்வாறு மனப்பூர்வமாகப் பொருந்திக் கொள்வதில்லை. எனவே மறுமையில் யாரும் பிடித்து விடக் கூடாது என்பதைப் பயந்து திருப்பிக் கொடுப்பது தான் சிறந்தது.

தர்காவிற்கு செல்லபவர்களுக்கு திருமணம் முடித்துவைப்பது பற்றியது

கேள்வி ;  இணை கற்பிக்கும் பெண்கள், ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் (2:221) கூறுகின்றது. எங்கள் ஊரில் இறைவன் ஒருவன் என்று ஏற்றவர்கள் ஒரு சதவிகிதமும் தர்கா வழிபாடு, வரதட்சணை, வட்டி போன்றவற்றில் ஈடுபடுவோர் 99 சதவிகிதமும் உள்ளனர். இந்நிலையில் எங்களுடைய பெண்களுக்கு இந்த ஒரு சதவிகிதத்தில் மாப்பிள்ளை இல்லை. எனவே இணை வைக்கும் கொள்கையுடைவர்களிடத்தில் மாப்பிள்ளை பார்க்கலாமா?
பதில் ; இணை வைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். எனவே எந்தக் காரணம் கூறியும் அதை நியாயப்படுத்த முடியாது.
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 60:10)
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இணை கற்பிக்கும் மாப்பிள்ளைகள் ஹலால் இல்லை என்று இந்த வசனத்தில் கூறுகின்றான். இதற்குப் பிறகு எப்படி அவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்ள முடியும்? இணை கற்பிக்காத நிலையில் மற்ற தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் என்றால் அதைப் பரிசீலிக்கலாம். ஆனால் இணை கற்பிப்பவர் என்று தெளிவாக தெரிந்து அவர்களுக்குப் பெண் கொடுப்பது இறைவனின் கட்டளைக்கு மாற்றமான செயலாகும்.
இணை கற்பிக்கும் குடும்பங்களில் வாழ்க்கைப்படும் பெண்கள் தங்களது கொள்கையை விட்டு விட்டு கணவனின் மார்க்கத்தையே பின்பற்றும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள் என்பதை நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். அதையும் மீறி கணவன் வீட்டில் தன் கொள்கையைப் பின்பற்றினால் அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். இது தான் யதார்த்தம்.
இவ்வாறிருக்கையில் அங்கு திருமணம் செய்து கொடுப்பது, அவர்களைத் தெரிந்தே நரகத்தில் தள்ளுவதைப் போன்றதாகும். இவ்வுலக வாழ்க்கையில் திருமணம் தாமதமாகின்றது என்பதை மட்டும் பார்த்து, அந்தப் பெண்ணுடைய மறுமை வாழ்க்கையை வீணாக்கி விடக் கூடாது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தி னரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)
நம்மை மட்டுமல்லாது நமது குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
எனவே இணைகற்பிப்பவர்களுடன் கண்டிப்பாக திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
உள்ளூரில் மாப்பிள்ளை கிடைக்காத பட்சத்தில் வெளியூரில் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்.
இது போன்ற நிலை ஏற்படுவதற்குக் காரணம், ஏகத்துவ வாதிகள் என்று கூறிக் கொள்வோர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பெண்களை மணம் முடிக்காமல் மற்றவர்களைத் தேடிச் செல்வது தான். இத்தகையவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும். (மேலும் விபரங்களுக்கு ஏகத்துவத்தில் வெளிவரும் "ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்'' என்ற தொடரைப் பார்வையிடவும்)

திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா?

கேள்வி ; திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? அல்லது ஓரிரு நாட்கள் கழித்துத் தான் வைக்க வேண்டுமா?
பதில் ; திருமணம் முடித்த மணமகனை வலீமா விருந்து கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள் திருமணம் முடித்த போதும் வலீமா விருந்தளித்துள்ளார்கள். எனவே ஒருவர் திருமணம் முடித்தால் அவர் விருந்தளிப்பது நபிவழியாகும்.
அதே சமயம், திருமணம் நடந்த அன்றே வைக்க வேண்டும் என்றோ, அல்லது ஓரிரு நாட்கள் கழித்து வைக்க வேண்டும் என்றோ நபி (ஸல்) அவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ்ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா - மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 4213
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு விருந்தளித்துள்ளதால், திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விருந்தளிப்பது தான் நபிவழி என்று சிலர் வாதிடுகின்றனர்.
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும், ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், "எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்'' என்று கூறினார்.
அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), "உமது குடும்பத்திலும், செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்'' என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார்.
சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "என்ன விசேஷம்?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார்கள். "ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்'' என்று பதில் கூறினார். அதற்கு, "ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2048, 2049
"ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன்'' என்று கூறும் நபித் தோழரிடம், "நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா?'' என்று கேட்டு விட்டு விருந்தளிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் மண விருந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடியும். எனவே ஒருவர் மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம்.
ஆனால் அதே சமயம், திருமணம் நடப்பதற்கு முன்னரே சிலர் விருந்து வைக்கின்றனர். விருந்து முடிந்த பின்னர் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு திருமணமே நடக்காத நிலையில் வைக்கப்படும் விருந்து மண விருந்தாக ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்து மஹராக கொடுப்பது பற்றியது

கேள்வி ;  ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க, அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பி.ஜே. அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மஹர் என்பது இஸ்லாமிய அடிப்படையில் மணப்பெண்ணிற்கு உரியது தானே? எனவே இதை எவ்வாறு விளங்க வேண்டும் என்று விளக்கம் தரவும்.
பதில் ; "எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 28:27)
மூஸா நபியவர்கள் ஒரு பெண்ணை மணமுடிப்பதற்கு அப்பெண்ணின் தந்தையிடம் எட்டு அல்லது பத்து ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்கள். அதாவது அவர்கள் பார்த்த வேலையின் ஊதியத்தை மஹராகத் தந்துள்ளார்கள் என்பது இதன் பொருள்.
இதனடிப்படையில் பெண்ணுக்குத் தர வேண்டிய மஹர் தொகையை அவளின் தந்தையிடம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளீர்கள்.
ஒருவர் தமது மகளின் மஹர் தொகையைக் குறித்து மூஸா நபியிடத்தில் கூறுகின்றார். இந்த உரையாடலின் போது சம்பந்தப்பட்ட பெண்களும் அருகில் தான் இருக்கின்றார்கள். அவர்களது சம்மதத்தின் பேரில் தான் இந்த மஹர் தொகை முடிவு செய்யப்படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் மூஸா நபியவர்களை வேலைக்கு அமர்த்துமாறு பரிந்துரை செய்வதே அந்தப் பெண்களில் ஒருவர் தான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
"என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள். (அல்குர்ஆன் 28:26)
மஹர் என்பது பெண்ணிற்கு உரியது தான் என்றாலும் அதை விரும்பினால் யாருக்கும் விட்டுத் தருவதற்கு அவளுக்கு உரிமையுள்ளது. அந்த அடிப்படையில் அந்தப் பெண் தனது தந்தையிடம் அதை வழங்கியிருக்கலாம். அல்லது மூஸா நபியவர்கள் வேலை பார்த்தற்கான ஊதியத்தை தமது மகளிடம் தந்தையார் வழங்கியிருக்கலாம்.
இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும் அது மஹர் குறித்த சட்டத்திற்கு மாற்றமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தாலி, கருகமணி போன்றவற்றை பயன்படுத்துவது பற்றியது;

கேள்வி ; திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி போடுகின்றார்கள். அல்லது கருகமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்?

பதில் ; இந்து மதத்தில் தாலி அணிவதை மதச் சடங்காகக் கருதிச் செய்து வருகின்றனர். எனவே திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க இந்து மதக் கலாச்சாரமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தை, சடங்குகளைப் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது.
திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இதுவும் இந்து மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.
திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு
பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி
(பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!)
என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 1011

திருமண பத்திரிக்கை சம்பந்தமானது

கேள்வி ;  திருமணத்திற்குப் பத்திரிகை அச்சிடுவது வீண் விரயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்னிடம் கம்ப்யூட்டர் இருப்பதால் அதனைக் கொண்டு திருமணப் பத்திரிகை தயாரித்துக் கொடுப்பதைத் தொழிலா கச் செய்வது இஸ்லாத்தில் கூடுமா?
பதில் ; வீண் விரையம் செய்யக் கூடாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திருமண அழைப்பிதழைப் பொறுத்த வரை அது வீண் விரையமா? என்பதை யார் அதற்காக செலவளிக்கின்றாரோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் கம்ப்யூட்டரில் டிசைன் செய்து தயாரித்துக் கொடுப்பதை ஆடம்பரமில்லாமல் சாதாரண பேப்பரிலும் அவர் அச்சிடலாம். அல்லது விலை உயர்ந்த அட்டைகளிலும் அச்சிடலாம். எனவே அதை ஆடம்பரமாக்குவதும் இல்லாததும் அவரைப் பொறுத்தது.
நீங்கள் ஒரு கத்தியை விற்கிறீர்கள். அதை அனுமதிக்கப் பட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். தடை செய்யப்பட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கு உதவுகின்றது என்ற அடிப்படையில் கத்தியை விற்பது போல் திருமண அட்டைகளையும் டிசைன் செய்து கொடுக்கலாம்.
திருமணத்திற்கு வாய் மொழியாக அழைப்பது கூடும் என்றால் அதை எழுத்து வடிவில் அச்சிட்டு அழைப்பதும் தவறான செயல் என்று கருத முடியாது. எனவே திருமணப் பத்திரிகை டிசைன் செய்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதே சமயம் அந்த அழைப்பிதழில் மார்க்கத்திற்கு முரணான செய்திகள் இருந்தால் அதை அச்சிட்டுக் கொடுக்கக் கூடாது. தீமையைத் தடுத்தல் என்ற அடிப்படையில் அதிலுள்ள மார்க்கத்திற்கு முரணான செய்திகளைச் சுட்டிக் காட்டி, மறுத்து விட வேண்டும்.

ஒருவர் ஏழை பெண்ணையோ அல்லது பணக்கார பெண்ணையோ திருமணம் செய்வது பற்றியது

கேள்வி ; ஒரு தவ்ஹீதுவாதி ஓரளவு வசதி படைத்தவர். அவர் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? அல்லது ஏழையைத் திருமணம் செய்ய வேண்டுமா? மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்கின்றார். என்றாலும் பெண் வீட்டில் பெண்ணுக்கு அதிகம் நகை போடுகின்றார்கள். இது சரியா?
பதில் ; பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்குத் தடையோ அல்லது ஏழைப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ மார்க்கத்தில் இல்லை. ஆனால் அந்தப் பெண் வசதியுள்ளவள் என்பதற்காக அவளைத் திருமணம் செய்வதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள். (பார்க்க புகாரி 5090) பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் மார்க்கம் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்)
அல்குர்ஆன் 2:221
இந்த வசனத்திலும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் போது அவளது கொள்கையைத் தான் பார்க்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்று தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் கூட மார்க்கத்தை முன்னிறுத்தாமல் குடும்பம், செல்வம், அழகு போன்றவற்றிற்கே முன்னுரிமை அளிக்கின்றார்கள்.
ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எத்தனையோ பெண்கள் மாப்பிள்ளை கிடைக்காமல் காத்துக் கிடக்கின்றனர். இவர்களையெல்லாம் விட்டு விட்டு தர்காவுக்குச் செல்லும் ஒரு பெண்ணைப் போய் திருமணம் செய்து கொள்கின்றனர் என்றால் இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையையும் காற்றில் பறக்க விடுகின்றனர் என்பது தான் அர்த்தம்

பெண்வீட்டார்கள் விருப்பமாக நகை கொடுத்தால் பெறுவது பற்றியது

கேள்வி ; நான் பெண் வீட்டில் வரதட்சணை வாங்கவில்லை. ஆனால் பெண்ணின் தாயார், என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்று கூறுகின்றார்கள். இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா?
பதில் ; ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர் அன்பளிப்பாக எதையும் வழங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா? என்பது குறித்து அந்தப் பெண் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவளது கணவனுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை.
பெண்ணின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம்.
கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள் என்ற செய்தி புகாரியில் 1466வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்குப் பெண்களுக்கு உரிமை வழங்கியுள்ளது இஸ்லாமிய மார்க்கம்.
எனவே பெண்களுக்கு அவர்களது பெற்றோர் அளிக்கும் அன்பளிப்பை மறுப்பதற்கோ அல்லது இவ்வளவு நகை போட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை.
ஆனால் அதே சமயம் அந்த நகைகளையோ, அல்லது அவளது பொருளாதாரத்தையோ எதிர்பார்த்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் நான்கு நோக்கங்களுக்காக மண முடிக்கப்படுகிறாள்.  1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்க நெறியுடையவளை (மணம் முடித்து) வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன் இரு கைகளும் மண்ணாகட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5090
திருமணத்தின் போது மட்டுல்லாமல் எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் தனது மகளுக்காக அன்பளிப்புகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் அதில் அவர்கள் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:
என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்கள்.  என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?'' என்று கேட்டார்கள்.  அதற்கு என் தந்தை, "இல்லை'' என்று பதிலளித்தார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.  இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல்,  நூல்: புகாரி 2587
மற்றொரு அறிவிப்பில், "நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற் போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர்.  குறிப்பாக, பெண் மக்களுக்குத் திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்ப ளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.
மேலும் திருமணத்தின் போது நகை போடுவதைக் காரணம் காட்டி பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கும் நிலையும் உள்ளது. இது போன்ற பாரபட்சங்கள் நடைபெறாமல் ஒரு பெண்ணுக்கு அவர்களது பெற்றோர் அன்பளிப்புச் செய்தால் தவறில்லை.

பெண்வீட்டாரிடம் கடன் வாங்கி திருமணம் முடிப்பது பற்றியது

கேள்வி ;  சில ஆண்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை என்று கேட்டு வாங்காமல் "ஒரு லட்சம், இரண்டு லட்சம் கடனாகத் தாருங்கள், திருமணத்தின் பின்பு திருப்பித் தருகின்றேன்'' என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றார்கள். அதைத் திரும்பச் செலுத்துகின்றார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் பெண் வீட்டாரிடம் இது போன்று கடன் வாங்கித் திருமணம் செய்வது மார்க்க அடிப்படையில் சரியா?
பதில் ; பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)
பெண்களுக்கு மஹர் கொடுத்துத் தான் மணம் முடிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால் இன்று இறைக் கட்டளைக்கு நேர் மாற்றமாக மஹர் கொடுக்காதது மட்டுமின்றி பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கித் திருமணம் செய்யும் அவல நிலை உள்ளது.
நீங்கள் கூறுவது போன்று சிலர், மஹர் கொடுத்துத் திருமணம் செய்கின்றேன் என்று கூறிக் கொண்டு, பெண் வீட்டில் கடன் வாங்கித் திருமணம் செய்கின்றனர். கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது தானே என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கின்றனர். ஆனால் இதுவும் ஒரு வகையில் மறைமுகமான வரதட்சணை தான் என்பதில் சந்தேகமில்லை.
மஹர் தொகையிலிருந்து அவர்களாக எதையேனும் மனமுவந்து விட்டுத் தந்தால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது மாப்பிள்ளை கொடுத்த மஹர் தொகையிலிருந்து பெண் தருவதாக இருந்தாலும் மனமுவந்து தர வேண்டும். நிர்ப்பந்தத்திற்குப் பயந்து கொடுக்கக் கூடாது. ஆனால் இங்கு என்ன நடக்கின்றது? பெயரளவிற்கு ஆயிரம் ரூபாய் பெருந்தன்மையாக (?) மஹர் கொடுத்து விட்டு, லட்சக் கணக்கில் பெண் வீட்டிலிருந்து கடன் வாங்குகின்றார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று சர்வ சாதாரணமாகக் கடன் கொடுத்து விட மாட்டார்கள். ஆனால் பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கின் றார்கள் என்றால் அவர்கள் ஒரு வித நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் கொடுக்கின்றார்கள்.
மார்க்கம் விதிக்கின்ற நிபந்தனைகளான அடைமானம், எழுதிக் கொள்ளுதல், சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற எதுவுமே இல்லாமல் மாப்பிள்ளை என்ற ஒரே அந்தஸ்தைப் பயன்படுத்தி இந்தக் கடன் நாடகம் அரங்கேறுகின்றது.
அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி(ரலி), நூல்: புகாரி 2597
அன்பளிப்பு என்பது அனுமதிக்கப்பட்டது தான் என்றாலும் இந்த இடத்தில் அதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இவர் வீட்டில் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்கின்றார்கள்.
இது போன்று தான், கடன் என்பது அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் ஒருவித நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கப்படுவதை நாம் கடனாக எடுத்துக் கொள்ள முடியாது.
அதே மாப்பிள்ளை அங்கு பெண் எடுக்கவில்லை என்றால் இந்தத் தொகையை கடனாகக் கொடுப் பார்களா? என்றால் நிச்சயமாகக் கொடுக்க மாட்டார்கள். இந்த ஒரு லாஜிக்கே இது மறைமுகமான வரதட்சணை என்பதற்குப் போதுமான சான்றாகும்.
அதே போல் பெண் வீட்டுக்காரர்கள் இவ்வாறு கடன் கேட்டிருந்தால் அதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிப்பார்களா? என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். தனக்கு வர வேண்டிய மஹரைக் கூட ஒரு பெண், தானாக நிர்ணயம் செய்து, அதை அழுத்தமாகக் கேட்க முடியாத சூழ்நிலை நமது நாட்டில் நிலவும் போது, கடன் கேட்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பெண் வீடு என்றால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை நிலவுவது தான். இந்த நிலைமை மாறாத வரை இது போன்ற கட்டாயக் கடன்களை (?) தடுக்க முடியாது.

தடை செய்யப்பட பெண்களை திருமணம் செய்த எங்கள் தந்தையுடன் சேர்ந்து வாழ்வது பற்றியது

கேள்வி ;  எனது தந்தை முதலில் என் பெரிய தாயாரைத் திருமணம் செய்து, அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்ற நிலையில் என் தாயாரை (முதல் மனைவியின் உடன்பிறந்த சகோதரியை) திருமணம் செய்துள்ளார். இத்திருமணம் ஹராம் என்று தெரிந்தும் நடந்துள்ளது. இதுகுறித்து பலமுறை எடுத்துச் சொல்லியும், முதல் மனைவியை (பெரிய தாயாரை) தலாக் விட்டு விட்டதாகப் பொய் கூறி, இரண்டு பேருடனும் குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நாங்கள் எங்கள் பெற்றோருடன் சேர்ந்து வாழலாமா? தற்பொழுது அவர்கள் திருந்தி வாழ வழியுண்டா?
பதில் ; இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணம் முடிப்பது திருக்குர்ஆனின் 4:23 வசனத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருமணம் முடித்து விட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கான ஒரே வழி இரண்டு பேரில் ஒருவரைத் தலாக் விடுவது தான். அதைச் செய்யாத வரையில் உங்கள் தாய், தந்தை மற்றும் பெரிய தாயார் ஆகிய மூவருமே தவறில் தான் இருக்கின்றார்கள்.
உங்கள் தாய் தந்தையர் தவறில் இருந்தாலும் அவர்களோடு இணங்கி வாழ்வதால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் என் தாயார் என்னிடம் வந்திருந்தார். அப்போது அவர் இணை வைப்பவராக இருந்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடமும் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 2620
மிகப் பெரும் பாவமான ஷிர்க்கில் அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் இருந்த போது கூட அவருடன் உறவைப் பேணி நடந்து கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கின்றார்கள். அல்லாஹ்வும் தனது திருமறையில் இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன்31:15)
 எனவே தாய், தந்தையர் தவறில் இருந்தாலும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, இணங்கி வாழ்வது தான் பிள்ளைகள் மீது கடமையாகும்.

திருமணத்தின் போது வீடியோ, போட்டோ போன்ற பொருள்களை பயன்படுத்துவது பற்றியது

கேள்வி ;  திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபி (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? விளக்கவும்.
பதில் ; திருமணங்களில் வீடியோ, போட்டோ போன்ற காரியங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதைக் கடந்த இதழில் "வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்' என்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். திருமணத்தை வீடியோ எடுக்கவில்லை, சொற்பொழிவுகளை மட்டும் வீடியோ எடுக்கிறோம் என்று சிலர் கூறினாலும் உண்மையில் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் இருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இந்த வீடியோ கலாச்சாரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் நடத்தியிருப்பதால் திருமண உரை நிகழ்த்துவது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
குத்பா என்று சில வாசகங்களைக் குறிப்பிட்டு, இவற்றைக் கூறினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கும் பிரசங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரசங்கம் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் திருமணம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம் திருமணத்தில் உரை நிகழ்த்தப்படுவதை மார்க்கத்திற்கு முரணான செயலாகச் சித்தரிப்பதும் தவறு.
பொதுவாக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் செய்தியை அடிப்படையாக வைத்து, திருமணத்திற்கு யாரையும் அழைக்கக் கூடாது, யாருக்கும் தெரியாமல் திருமணம் நடத்த வேண்டும் என்ற கருத்து ஏகத்துவவாதிகளிடம் பரவலாக உள்ளது.
திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), நூல்: அஹ்மத் 15545
இந்த ஹதீஸில் திருமணத்தை அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதே பலருக்கும் தெரியும் வகையில் திருமணம் நடத்தப் படவேண்டும் என்பதையே காட்டுகின்றது.  தற்போதுள்ள நடைமுறையில் இருப்பது போல் பலரையும் அழைத்து திருமணம் நடத்துவது மார்க்க அடிப்படையில் சரியான செயல் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடியும். இவ்வாறு செய்வதால் அதை செலவு குறைந்த திருமணம் இல்லை என்று யாரும் கூறி விடமுடியாது.  மேள தாளங்கள், மேடை அலங்காரங்கள், ஆடியோ வீடியோ கலாச்சாரம் போன்ற அனாச்சாரங்களைக் கூடாது என்று கூறலாம். ஆனால் யாரையுமே அழைக்கக் கூடாது என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்புடையதல்ல!
திருமண உரை என்று தனியாக எதுவும் இல்லை. பொதுவாக எந்த இடத்திலும் பிரசங்கம், சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்காக பொதுக்கூட்டம் போடுகின்றோம். இதைத் தவறு என்று யாரும் வாதிடுவது கிடையாது.  அது போல் திருமணத்தின் போதும் ஒருவர் மார்க்கத்தைப் போதித்தால், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தால் அது கூடாது என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இந்த இடத்தில் இந்தக் கருத்தைக் கூறினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று ஒருவர் நினைத்தால் அதை திருமண சபை மட்டுமல்ல, எந்த சபையிலும் சொல்லலாம்.
உதாரணமாக ஜனாஸா தொழுகையை நடத்துவதற்காக ஒருவர் முன்னே நிற்கின்றார். அந்தத் தொழுகையில் கலந்து கொள்பவர்கள் ஹதீஸ் அடிப்படையில் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, ஜனாஸா தொழுகையின் சட்ட திட்டங்களைப் பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்துகின்றார். இதற்கு ஜனாஸா உரை என்று பெயரிட்டு, இது கூடுமா என்று கேட்க மாட்டோம்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். அந்த சமயத்தில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவு நிச்சயமாக ஒரு பயனைத் தரும் என்று ஒருவர் கருதினால் அவர் அங்கு பிரச்சாரம் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் போதும் (மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும்) தேவை ஏற்படும் போதும் தஷஹ்ஹுதை கற்றுத் தந்தார்கள். தொழுகையில் உள்ள தஷஹ்ஹுத் அத்தஹிய்யாத் (என்று துவங்கும் துஆ) ஆகும். (மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும்) தேவை ஏற்படும் போது சொல்லும் தஷஹ்ஹுத் கீழ்க்கண்ட தஷஹ்ஹுத் ஆகும்.
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம். அவனிடமே நாம் பாவமன்னிப்பு தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்பாடுகளை விட்டும் அவனிடமே நாம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அல்லாஹ் வழிகெடுத்தவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன்.  அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்காதீர்கள்.
எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி),  நூல்: திர்மிதீ 1023
இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தேவை ஏற்படும் போது இறையச்சத்தைப் பற்றி மக்களுக்குப் போதிக்குமாறு கற்றுத் தந்துள்ளதால் எங்கு தேவை ஏற்பட்டாலும் நாம் பிரச்சாரம் செய்வது நமது கடமையாகும். அது திருமண சபையாக இருந்தாலும் வேறு எந்த சபையாக இருந்தாலும் சரி. அதனால் தான் இந்த ஹதீஸை, இமாம் திர்மிதீ அவர்கள் திருணமத்தில் பிரசங்கம் செய்வது பற்றிய பாடம் என்ற தலைப்பில் இடம் பெறச் செய்துள்ளார்கள்.
ஆனால் அதே சமயம், திருமணத்தின் போது உரை நிகழ்த்துவதை திருமணம் நிறைவேறுவதற்கான விதிமுறைகளில் ஒன்றாகக் கருதும் நிலை உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. குத்பா ஓதினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் கருதும் நிலை இருப்பதால் அதைத் தவறு என்று நிரூபிப்பதற்காக குத்பா இல்லாமலும் திருமணங்களை நடத்திக் காட்ட வேண்டும்.
ஒரேயடியாக பிரசங்கம் செய்வதே தவறு என்று கூறவும் கூடாது. அதேபோல் திருமணத்தில் பிரசங்கம் செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தவும் கூடாது.  திருமணத்திற்கு குத்பா அவசியமில்லை என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்காக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் அவ்வப்போது குத்பா இல்லாத திருமணங்களையும் நடத்த வேண்டும்

இளம் வயதில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்வது பற்றியது

கேள்வி ;  எனக்கும் என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப் பட்டுள்ளது.  மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப் பெண் கேட்டார்.  அவரிடம் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்ட விஷயத்தைச் சொல்லி விட்டேன். (மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த) அவரை மறுத்ததால் நான் பாவத்திற்குள்ளாவேனா?
பதில் ; திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை.  எனவே வயதில் இளைய ஆணைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.
புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவருக்கு உதவிகள் செய்யலாம்.  அதற்காக அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. திருமணத்தைப் பொறுத்த வரை இஸ்லாம் பெண்களுக்கு முழு உரிமையை வழங்கியுள்ளது.
இணை வைப்பவர்களைத் திருமணம் செய்து கொள்ளத் தடை இருக்கின்றது.  மற்றபடி ஒரு பெண் தான் விரும்பிய மணமகனைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபரை நீங்கள் விரும்பினால் அவரை உங்களது தந்தை அல்லது சகோதரர் போன்ற பொறுப்பாளர் முன்னிலையிலோ அல்லது சமுதாயத் தலைவரின் முன்னிலையிலோ மணம் முடிக்கலாம்.  விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடலாம்.  இதில் தவறேதும் இல்லை

திருமணத்திற்கு பிறகு பெண் இருக்க வேண்டிய இடம்

கேள்வி ; திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் போய் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் போய் வாழ வேண்டுமா? இது குறித்து மார்க்கம் என்ன கூறுகின்றது?
பதில் ; சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.  (அல்குர்ஆன் 4:34)
ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும் ஆண்களே பெண்களுக்காக பொருள் செலவு செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது.  இந்த அடிப்படையில் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் கணவன் தான் கொடுத்தாக வேண்டும்.
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்!  (அல்குர்ஆன்65:6)
இந்த வசனத்தில் தலாக் விடப்பட்ட பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை கணவன் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி அல்லாஹ் சொல்-க் காட்டுகின்றான்.  இதில் கணவன் தான் மனைவிக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். தலாக் விடப்பட்ட பெண்களுக்கே கணவன் தான் இருப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் போது, சேர்ந்து வாழும் போது சொல்ல வேண்டியதே இல்லை. கண்டிப்பாக கணவனின் வீட்டில் தான் மனைவி இருக்க வேண்டுமே தவிர, மனைவியின் வீட்டில் கணவன் போய் இருப்பது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமானது.
வரதட்சணை வாங்கவில்லை என்று கூறிக் கொண்டு, பெண்ணிடமிருந்து வீடு வாங்கும் வழக்கம் ஏகத்துவவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலரிடம் கூட உள்ளது.  குறிப்பாக காயல்பட்டிணம், கீழக்கரை போன்ற பகுதிகளில் மாப்பிள்ளைக்கு வீடு கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.
ஆண்கள் செலவு செய்வதால் தான் பெண்களை நிர்வாகம் செய்யக் கூடிய தகுதி ஆண்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.  அதற்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் ஆண் இருக்கும் போது, இயற்கையாகவே ஆண்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அந்த நிர்வாகத் திறன் இல்லாமல் போய் அங்கு ஆண்கள் அடிமைகளாக நடத்தப் படுவதையும் நாம் பார்க்க முடிகின்றது.  எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் கணவன் தங்கும் நிலை முற்றிலும் மாற வேண்டும். வரதட்சணை திருமணங்களைப் புறக்கணிப்பது போல், இது போன்று பெண்ணிடமிருந்து வீடு வாங்கி நடத்தப்படும் திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும்.

ஆண்களிடம் மார்க்கத்தை கேட்டு திருமணம் முடிப்பது

கேள்வி ; பெண் பார்க்கும் போது மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஓதத் தெரியுமா? தொழத் தெரியுமா? என்று கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில் என்னைத் திருமணம் செய்தார்கள். ஆனால் இது போன்று ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா? தொழுகை உள்ளவரா? என்று கேட்டுத் திருமணம் செய்ய முடியுமா?
பதில் ; இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் தவ்ஹீத் கொள்கை உள்ளவராக, திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவராக, தொழும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்ணிடம் எப்படி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதோ அதே அடிப்படையில் பெண் வீட்டு சார்பாக மணமகனையும் விசாரித்தே தேர்வு செய்ய வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.    
(அல்குர்ஆன் 2:221)
இந்த வசனம் தவ்ஹீத் கொள்கை உள்ளவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கும் போது, நல்ல மனிதரைத் தேர்வு செய்ய அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
... நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள்.
நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உஸாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2953)

உளவு கேமராக்கள்!










அதிநவீன உளவு கேமராக்கள் !
இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.

அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?

அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.

கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.

இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.

இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!எனவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites