
பத்து கால்களை வைத்துக் கொண்டு பக்கவாட்டில் நடக்கும் உயிரினங்களில் ஒன்று நண்டு. சகதி நிறைந்த மற்றும் மணற்பாங்கான கடற்கரைகளில் துளையமைத்துக் கொண்டு அதில் வாழும் உயிரினங்களில் ஒன்று தான் வண்ணாத்தி நண்டு. இந்த நண்டுக்கான பெயர்க்காரணம்,தோற்றம்,சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""யூகா என்பது இதன் விலங்கியல் பெயர்.இதன் மேல்ஓட்டின் முன்பக்கம் கூர்மையாகவும் இரு கண்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தைக் காட்டிலும் அதன் கண்கள் துருத்திக் கொண்டும் இருக்கும். நீளமான கண் இழைகள் உடையது. இதன் 10 கால்களில் 8 நடப்பதற்கும் மற்ற இரு முன்னங்கால்கள் உணவைப் பிடிக்கவும், சண்டையிடவும், உடலுறவுக்கும் பயன்படுகின்றன.இவற்றில் ஆண் நண்டுகளில் மட்டும் முன்புறம் உள்ள முன்னங்கால்களில் ஒன்று மட்டும் பருத்துப் பெருத்து அதிக நீளமாகவும் இருக்கும். ஒரே இடத்தில் துளைகளமைத்து பல ஆண்டுகள்தான் அமைத்த குழியிலேயே உயிர் வாழ்கிறது. இதனைப் பிடித்து சற்று தூரத்தில் கொண்டு சென்று விட்ட பிறகும் திரும்பவும் உடனே அதே குழிக்குத் திரும்பி விடும் அளவுக்கு ஞாபக சக்தியுடைய விநோத ஜீவன்.இருப்பினும் அவை தங்கியிருக்கும் குழிகளைத் தன் சொந்த வீடாகவே நினைப்பதால் அதை விட்டு அதிக தூரம் செல்வதேயில்லை. ஏனெனில் எதிரிகள் விரட்டும்போது அவை உடனே தன் குழிக்குத் திரும்ப வேண்டும்.பாறைகள் நிறைந்த கடற்பகுதிகளில் பெரும்பாலும் வாழாமல் சதுப்பு நிலக் காடுகளிலும் சகதியான இடங்களிலும் அதிகமாக காணப்படுகின்றன. துணிகளைத் துவைக்க சலவை செய்பவர்கள் கைகளை உயர்த்தி பின்னர் கீழே இறக்குவதைப் போலவே இந்த நண்டும் தனது முன்னங்காலை ஆட்டிக்கொண்டே இருப்பதால் இதனை வண்ணாத்தி நண்டுகள் என்றே அழைக்கின்றனர்.மண்ணில் இருக்கும் பாக்டீரியா, புரோட்டாசோவா போன்ற நுண்ணியிரிகளைப் பிரித்து உண்ணும் குணம் உடையது. கடலில் அலைகள் குறைந்து இருக்கும்போது மண்ணைத் தின்பது போலவே தெரிந்தாலும் அந்த மண்ணை மக்கச் செய்து அதிலுள்ள கழிவுகளை மட்டும் பிரித்துவிட்டு நுண்ணுயிரிகளைச் சாப்பிடுகின்றன. கொக்குகள், நாரைகள், கடல் காகங்கள் மற்றும் பெரிய நண்டுகளுக்கு இவை இரையாகின்றன. தாவர குப்பைகளை மக்கச் செய்தும்,மண்ணுக்குள் ஆக்சிஜனை ஊடுருவச் செய்தும், தான் சார்ந்திருக்கும் சுற்றுப்புறத்துக்கு நன்மை செய்கின்றன. பகல் நேரங்களில் அடர்ந்த நிறமாகவும் இரவில் வெளிறிய நிறமாகவும் இருப்பதால் இதன் அடையாளம் சில சமயங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றது.கடலில் ஏற்படும் மாசுகளால் அழிந்து கொண்டே வரும் இவ்வினங்கள் தனது உடல் நிறத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும் அதிசய உயிரினம். பிற நண்டுகளுடன் சண்டையிடும்போதோ அல்லது இரையைப்பிடிக்கும்போதோ ஒரு முன்னங்கால் துண்டிக்கப்பட்டு விட்டால் அதே இடத்தில் சிறிது நாளில் இன்னொரு கால் முளைத்துவிடும் அரிய வகை கடல் வாழ் உயிரினமே வண்ணாத்தி நண்டு'' என்ற
0 கருத்துகள்:
கருத்துரையிடுக