
மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் எத்தனையோ விதவிதமானதும் விசித்திரமானதுமான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் எண்ணிவிட முடியாத வகையில் நிரம்பிக் காணப்படுகின்றன. அதிசய உயிரினங்கள் நிரம்பிக் கிடக்கிற இக்கடல் பகுதியில் வசிக்கும் மற்ற மீன் வகைகளிலிருந்து வித்தியாசமான உடலமைப்புடைய சூரிய மீனின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""கடலுக்கடியில் வாழும் இந்த மீனினம் கடலின் மேற்பரப்பிற்கு வந்து அடிக்கடி சூரியக்குளியல் போட்டு விட்டு மீண்டும் கடலுக்கு அடியில் சென்றுவிடும் குணமுடையதாக இருப்பதால் இவ்வினத்துக்கு சூரிய மீன்கள் என்று பெயர். மோலா என்பது இதன் விலங்கியல் பெயர்.லத்தீன் மொழியில் மோலா என்றால் மைல்கல் என்று பெயர்.சாலையோரங்களில் உள்ள மைல்கல் மாதிரி இம்மீனின் மேற்புறம் வட்டமாகவும் அடியில் தட்டையாகவும் உடலமைப்புடையது. சராசரியாக 1000 கிலோ வரை எடையுள்ள இம்மீன்களின் தலை மட்டும் மற்ற மீன்களைப் போல இருந்தாலும் பக்கவாட்டில் தட்டையாகவும் வாலானது சப்பட்டையாகவும் இருக்கும். உடலின் அகலத்தைவிட இதன் வால்துடுப்பு நீளமானதாகவும் செவுள் துடுப்பு ஒரு விசிறி வடிவத்திலும் இருக்கிறது. இதன் எலும்புகள் மிகவும் லேசான திசுக்களாக இருப்பதால் விரைவாக வளர்ந்து அதிவேக வளர்ச்சியும் அடைகின்றன. இதன் முதுகுத் துடுப்பு மட்டுமே சுமார் 9 அடி வரை நீளமுடையதாக இருக்கிறது. வால்துடுப்புகள் இரண்டும் பெரியதாகவும் நீளமானதாகவும் இருந்தாலும் உண்மையில் இம்மீனுக்கு வால் இல்லை. வால் துடுப்பில் ஏற்படும் ஒரு உந்துதல்தான் ஒரு படகு போல இம்மீன் நகர்ந்து செல்லவும் நீந்தவும் உதவுகிறது. இச்செயல் மற்ற மீன்களின் நீந்தும் ஸ்டைலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.இம்மீனின் மேல்புறம் அடர்த்தியாகவும் அடிப்புறம் வெளிறிய நிறத்திலும் இருப்பதால் இதன் நிறமே இவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது. சுறா, திமிங்கிலம் மற்றும் கடல் சிங்கம் போன்றவை இதன் எதிரிகளாக உள்ளன. இம்மீனின் செவுள்கள் மீன்பிடி வலைகளில் மாட்டிக் கொண்டும் உயிரிழக்கின்றன. மேலைநாடுகளில் இவற்றைக் கொன்று சுவையான உணவாக ஆக்கி விடுவதால் இவ்வினம் அழிந்து விடக்கூடாது என கொரியா,ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் இவற்றைப் பிடிக்கத் தடை விதித்துள்ளன.கடலில் வசிக்கும் ஜெல்லி மீன்கள் இவற்றின் விருப்ப உணவாக இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகமான ஜெல்லி மீன்களை சுவாகா செய்து விடும். இம்மீனின் மேற்புறத்தில் 40 விதமான ஒட்டுண்ணிகள் தோலில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கடலில் நீந்திக் கொண்டே பவளப் பாறைகள் உள்ள பகுதிகளுக்குள் சென்று தன் உடலில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகளை அங்கு வசிக்கும் ராஸ் என்ற மீன்களிடம் காட்டிக் கொடுத்து அவை அவற்றைப்பிடித்து தின்ன உதவுகின்றன. கடலின் மேற்புறத்தில் வந்து மிதக்கும் போதும் கடல்பறவைகள் அந்த ஒட்டுண்ணிகளைக் கொத்தித் தின்னவும் உதவுகின்றன. எப்போதும் தனித்து வாழவே விரும்பும் சூரிய மீன்கள் தனது உடலில் ஒட்டிக் கொள்ளும் ஒட்டுண்ணிகளை நீக்குவதற்காக மட்டுமே கூட்டம், கூட்டமாக பவளப்பாறைகள் உள்ள பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன.பெண் மீன் ஒரே நேரத்தில் 300 மில்லியன் முட்டைகள் வரை இடும். அதே நேரத்தில் ஆண் மீன் தனது விந்தணுக்களை வெளியேற்ற, இரண்டும் ஒன்றாக சேர்ந்து கருவுறுதல் நடந்து குஞ்சுகளாக மாறுகின்றன. குஞ்சுகளாக இருக்கும்போது இதன் வால்துடுப்பு பெரிதாகவும் உடல் உருண்டையாகவும் பலூன் போல இருந்து பெரிய மீனாக வந்தவுடன் வால்துடுப்பு மறைந்து உடம்பு தட்டையாகிவிடுகிறது. ஜப்பான், ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் உள்ள கடல் மீன் கண்காட்சியகங்களில் மிகச்சிறந்த பொழுது போக்கு மீனாகவும் இருக்கிறது. கடலுக்குள் நீந்தி ஆராய்ச்சி செய்யும் ஸ்கூபா டைவர்களிடம் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியது. இவற்றோடு விளையாடுவதற்காகவே சிலர் கடலுக்கடியில் செல்வதும் உண்டு'' என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக