அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

20-புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு


அத்தியாயம்: 20
20-மக்கா மற்றும் மதீனாவின் (மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ உள்ளிட்ட) புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
பாடம் : 1
மக்கா, மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் களில் தொழுவதன் சிறப்பு.
1188 நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கேற்றவரான
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நான்கு செய்திகளை) செவியேற்றுள்ளேன்.
(குறிப்பு: 1197ஆவது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க!)
1189 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இறையில்லம் கஅபா அமைந்துள்ள பள்ளியே மஸ்ஜிதுல் ஹராம் ஆகும். மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியே மஸ்ஜிதுந் நபவீ எனப்படுகிறது. ஜெரூசலேமிலுள்ள புனிதப் பள்ளிவாசலே மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்.)
1190 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 2
குபா பள்ளிவாசல்.
1191 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் இரண்டு நாட்கள் தவிர வேறு நாட்களில் ளுஹாத் தொழுகை தொழ  மாட்டார்கள்:
1. அவர்கள் மக்காவுக்கு வரக் கூடிய நாள். அந்நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் வந்து, கஅபாவைத் தவாஃப் செய்து மகாமு இப்ராஹீம் எனும் இடத்திற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
2. குபா பள்ளிவாசலுக்குச் செல்லும் நாள். அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் குபாப் பள்ளிக்கு சென்று நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்' என்றும் கூறுவார்கள்.
1192 மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்:
நான் என் தோழர்கள் செய்தது போன்றே செய்கிறேன். இரவு பகலில் தாம் நாடிய எந்த நேரத்தில் யார் தொழுதாலும் நான் தடுக்க மாட்டேன். ஆயினும் (சரியாக) சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.
(குறிப்பு : காண்க முன்சென்ற ஹதீஸ்-589)
பாடம் : 3
ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்குச் செல்வது.
1193 அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் செய்வார்கள்.
பாடம் : 4
குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் செல்வது.
1194 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் குபாவுக்கு நடந்தும் வாகனத்திலும் செல்வார்கள்.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், அங்கே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்றும் (இப்னு உமர் ளரலின அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 5
நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு.
1195 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் அவர்களது இல்லத்திலேயே அடக்கப்பட்டார்கள்.)
1196 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற் பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத் தின் மீது அமைந்துள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 6
பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல்.
1197 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறிதயாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களைச் செவியுற்றேன்:
1. ஒரு பெண் கணவனோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு பயணம் செய்யக் கூடாது.
2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது.
3. சுப்ஹுத் தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ர் தொழுததிலிருந்து அஸ்தமனம் வரையும் தொழக் கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல்மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடிப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.
(முதல் பாகம் முற்றிற்று)
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites