அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 23 பிப்ரவரி, 2011

ஏகத்துவம் ஜனவரி 2008 - C


கேள்வி பதில்
? அக்டோபர் மாத இதழில், முகத்திரையைக் கிழித்த முதல் பிறை என்ற தலைப்பில், "உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை தினத்தில் முதல் பிறை என்று அறிவித்து உள்ளனர்' என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதே நாளில் சவூதியிலும், மலேஷியாவிலும் நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்? இரண்டும் வேறு கிரகங்களில் உள்ளதா? மேலும் அதே கட்டுரையில், கமாலுத்தீனின் அடிவருடிகள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மார்க்கப் பத்திரிகையில் இது போன்ற மஞ்சள் பத்திரிகை வார்த்தைகள் இடம் பெறுவது ஏன்?
பி. ஹபீப் முஹம்மது  மேற்கு மாம்பலம், சென்னை
ஜாக் இயக்கத்தினர் 12.09.07 அன்று முதல் பிறை என்று அறிவித்தனர். 11.09.07 அன்று பிறை பார்த்தால் தான் 12ஆம் தேதி முதல் பிறையாக இருக்க முடியும். ஆனால் 11ஆம் தேதி உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாது என்று நாம் மட்டும் கூறவில்லை. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் கூறுகின்றது. மேலும் அன்றைய தினம் பிறை பார்த்ததாக உலகத்தில் யாருமே கூறவில்லை. முதல் பிறை என்று கூறியவர்கள் கூட பிறை பார்த்ததன் அடிப்படையில் முதல் பிறை என்று சொல்லவில்லை. கணிப்பின் அடிப்படையில் தான் கூறினார்கள்.
சவூதியிலும், மலேசியாவிலும் அன்றைய தினம் (12.09.07) நோன்பைத் துவக்கியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பச்சைப் பொய். இந்த இரண்டு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். மார்க்க விஷயத்தில் தெளிவடைய வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இருந்திருந்தால் இது போன்ற பொய்யான தகவலைக் கூறியிருக்க மாட்டீர்கள்.
ஒரு வேளை அன்றைய தினம் வேறு எங்காவது நோன்பைத் துவக்கியிருந்தாலும் அதற்காக அன்று பிறை தென்பட்டது என்று கூற முடியாது. கணிப்பின் அடிப்படையில் தான் நோன்பைத் துவக்கியிருப்பார்கள். பிறை பார்த்து நோன்பைத் துவக்க வேண்டும் என்றால் 13 அல்லது 14ஆம் தேதி தான் முதல் நோன்பாகும்.
அடிவருடிகள் என்ற வார்த்தையையும் விமர்சித்துள்ளீர்கள். இது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாது. தமிழில் வழக்கத்தில் உள்ள வார்த்தை தான். தமிழ் அகராதிகளில் எதில் வேண்டுமானாலும் இதற்கான பொருளைப் பார்த்துக் கொள்ளலாம். அடிவருடிகள் என்றால் சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று பொருள். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஜாக் தலைமையிலிருந்து கிடைக்கும் பணத்திற்காகக் கொள்கையை அடகு வைப்பவர்களை வேறு எந்த வார்த்தையில் அழைப்பது?
சவூதி உட்பட அனைத்து அரபு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். ஆனால் இவர்கள் 12.09.07 அன்றே, அதாவது சவூதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நோன்பைத் துவக்கினார்கள். இதன் மூலம் சவூதியே பிறை விஷயத்தில் தவறில் இருக்கிறது, நாங்கள் தான் சரியான கருத்தில் இருக்கிறோம் என்று வாதிட்டார்கள். இவர்கள் இதில் உறுதியாக இருந்தால் ஹஜ் பெருநாளிலும் அதே நிலையை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 18.12.07 அன்று கமாலுத்தீன் மதனி பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அரபாவில் மக்கள் கூடுவதால் இன்று தான் அரபா நாள்; அதற்கு அடுத்த நாள் பெருநாள் என்று கூறியுள்ளார். அதைப் பின்பற்றி அவருடைய அடிவருடிகளும் இதே கருத்தை மறு நாள் பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட்டதுடன் 19.12.07 அன்று பெருநாளும் கொண்டாடினார்கள்.
பிறையின் அடிப்படையில் இன்று பெருநாள் என்று கூறாமல் சவூதியில் அரபாவில் மக்கள் கூடுகிறார்கள் என்பதால் அதற்கு அடுத்த நாள் தான் பெருநாள் என்று கூறுகிறார்கள்.
 "பிறை பார்த்த அடிப்படையில் 12.09.07 அன்று நோன்பு துவக்கம்'' என்று சுவரொட்டி ஒட்டினார்கள். "பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீசுக்கு எதிரானதா?'' என்று பிரசுரம் வெளியிட்டார்கள். "சவூதியில் பெருநாள் என்பதால் நமக்கும் பெருநாள்'' என்று பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
இவர்கள் பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்களா? கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா? அல்லது சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்களா?
மார்க்க விஷயத்தில் இவர்கள் செய்து வரும் இந்தக் குழப்பத்தை நாம் பலமுறை சுட்டிக் காட்டிய பின்னரும் அதைக் கண்டு கொள்ளாமல் ஜாக்கின் தலைமையிலிருந்து தங்களுக்கு வரும் உதவிகளுக்காக மார்க்கத்தில் விளையாடுகிறார்கள் என்றால் இவர்களை அடிவருடிகள் - சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
? மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?
சுபைதா பீவி தோப்புத்துறை
பொதுவாக மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் யாருக்கும் விருந்தளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மார்க்கத்திற்கு முரணில்லாத விருந்துகளில் கலந்து கொள்வதிலும் தவறில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்த போது உம்மு சுலைம் என்ற பெண்மணி விருந்தளித்ததாகவும் அதில் பல நபித்தோழர்கள் கலந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். தமது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸ் எனும் உணவைத் தயாரித்து அதை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனது தாய் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். "எங்களிடமிருந்து உங்களுக்குரிய சிறிய அன்பளிப்பு' என்று கூறுமாறு சொன்னாôர்கள்'' என்று கூறினேன். "அதை அங்கு வை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி, சில பெயர்களைக் குறிப்பிட்டு, "இன்னின்ன ஆட்களையும் நீ யாரையெல்லாம் அறிந்திருக்கிறாயோ அவர்களையும் அழைத்து வா'' என்று கூறினார்கள். நான் சந்தித்த ஆட்களையும், நபி (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறிய நபர்களையும் நான் அழைத்தேன்.
(இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்களிடம்) "அவர்கள் எத்தனை பேர்?'' என்று அபூ உஸ்மான் கேட்டார். "முன்னூறு பேர்'' என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள். நூல்: நஸயீ 3334
? நாம் தொழும் போது நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்கலாமா? தொழுகையில் எந்தெந்த இடங்களில் பிரார்த்திக்க வேண்டும்?
என். ராதிகா செங்கல்பட்டு
தொழுகையில் ஸஜ்தாவிலும், இரண்டாவது மற்றும் நான்காவது ரக்அத்தில் இருப்பில் அமரும் போதும் விரும்பிய பிரார்த்தனையைச் செய்யலாம். இந்த இடங்களில் பிரார்த்திப்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
"அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),, நூல்: முஸ்லிம் 744
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: நஸயீ 1151
? ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி? அபூபக்கர் சித்தீக்மேலப்பாளையம்
"பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 699
இமாமைப் பின்பற்ற வேண்டும்; இமாமை முந்தக் கூடாது என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இமாமைப் பின்பற்ற வேண்டும் என்றால், இமாம் செய்வதைத் தொடர்ந்து செய்வது தான் பின்பற்றுதல் ஆகும். இமாமுடன் சேர்ந்து செய்வது பின்பற்றுதல் ஆகாது.
எனவே இமாம் ருகூவுக்குச் சென்ற பிறகு, அதாவது அவரைப் பின்தொடர்ந்து நாம் ருகூவுக்குச் செல்ல வேண்டும். இமாமுடன் சேர்ந்து செய்யக் கூடாது.
? முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
எஸ். அனீஸ் ஃபாத்திமா ,தொண்டி
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 3971
? வட்டி என்ற வியாபாரத்தில் தான் உண்மை உள்ளது. மற்ற வியாபாரம் அனைத்திலும் பொய் உள்ளது. எனவே உண்மையான தொழிலான வட்டி எப்படி ஹராமாகும் என்று மாற்று மத நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்குப் பதில் என்ன?
முஜிபுர்ரஹ்மான்பள்ளப்பட்டி
வட்டி என்பதை வியாபாரம் என்று கூறுவதே தவறு. ஏனென்றால் வியாபாரம் என்பது லாபம், நஷ்டம் இரண்டும் கொண்டது. ஆனால் வட்டியில் நஷ்டம் என்பதே கிடையாது.
நமது தேவைக்குப் போக நம்மிடம் பணம் உள்ளது. தேவையுடைய ஒருவர் இதைக் கடனாகக் கேட்கிறார். இவருக்குக் கொடுத்து உதவுவது மனிதாபிமான அடிப்படையில் உள்ளதாகும். ஆனால் இந்த மனிதாபிமான உதவிக்கு எதிரானது தான் வட்டி.
ஆயிரம் ரூபாயை வட்டிக்குக் கடனாக வாங்கியவர்கள், ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி செலுத்திய பின்னரும் அசல் தொகையான ஆயிரம் ரூபாய் கடனாகவே இருந்து கொண்டிருக்கும். இது எந்த வகையில் வியாபாரமாகும்?
இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்திலிருந்து, ஏழைகளுக்குத் தர்மம் வழங்குதல், கடனுதவி போன்ற நன்மையான காரியங்களைச் செய்வதை விட்டும் வட்டி என்ற பெரும் பாவம் நம்மைத் தடுத்து விடுகின்றது. இதனால் தான் வட்டி விஷயத்தில் இஸ்லாம் கடுமையான நிலையை மேற்கொள்கிறது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்குர்ஆன் 2:275, 276
வட்டியில் பொய்யே கிடையாது என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலைகள் அனைத்தும் வட்டித் தொழிலில் தான் அதிகம் உள்ளது. வட்டிக்கு வாங்கியவர்களை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்குவது, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி என்று போட்டு அடகு வைத்த பொருட்களைச் சுருட்டிக் கொள்வது போன்ற அநியாயங்கள் வட்டித் தொழிலில் வாடிக்கையாக நடைபெறுகின்றன.
நவீன வட்டித் தொழிலான கிரடிட் கார்டு வாங்கும் படித்த மக்கள் கூட எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பது தெரியாமலேயே கடனில் மூழ்கி, வங்கிகளின் அடியாட்களுடைய மிரட்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எனவே வட்டித் தொழில் உண்மையான தொழில் என்பது போலியான வாதமாகும்.
                                                               

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites