
பெருந்தலைக் கடலாமை
ஊர்ந்து செல்லும் பிராணிகளில் ஆமைகள், "டெஸ்டுடைன்' எனும் பிரிவைச் சேர்ந்தவை. ஆமைகள் கடலில் வாழ்பவையானாலும், கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரைகூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள். எனவே இங்கே ஒவ்வொரு ஆமை படத்துடன் அதன் ஓட்டின் வடிவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு கடல் ஆமைகளைப் பற்றிய அடிப்படையான சில தகவல்களை அறிந்துகொள்வோம்.
ஏழுவரி ஆமை :
LEATHER BACK TURTLE OR LUTH(அறிவியல் பெயர்: DERMOCHELYS CORIACEA)
உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான். ஏறத்தாழ இரண்டு மீட்டர்வரை நீளமும் 500 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும். மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 85 முட்டைகள்வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.
சிற்றாமை:
OLIVE RIDLEY TURTLE(அறிவியல் பெயர்: LEPIDOCHELYS OLIVACEA)
நம் பிரதேசங்களில் காணப்படுகிற மிகச் சிறிய கடலாமை இனம் இது. இவ்வகையைச் சேர்ந்த ஆமைகள் முக்கால் மீட்டர்வரை நீளமும் 50 கிலோவரை எடையும்கொண்டவை. இவற்றின் மேல் ஓடு தவிட்டு நிறம் கலந்த அடர் பச்சை வண்ணத்தில் இருக்கும். முக்கோண வடிவத்தில் உள்ள பெரிய தலையும், கால்களில் உள்ள நகமும் இவற்றை எளிதில் அடையாளம் காண உதவும். ஒரு தடவையில் இவை, 40 லிருந்து 125 முட்டைகள்வரை இடும். ஒரிசாவில் கஹிர்மாதா கடற்கரையில், ஒரு லட்சத்திற்கும் மேலான ஆமைகள் கூட்டமாக வந்து முட்டையிடுவதுண்டு. மீன்கள், இறால்கள், நண்டுகள் முதலான கடல் உயிரிகளைத் தின்று இவை வாழும்.
அளுங்காமை:
HAWKSBILL TURTLE(அறிவியல் பெயர்: ERETMOCHELYS IMBRICATA)
இந்த வகையான ஆமைகள்தான், கடல் ஆமைகளில் மிகவும் அழகானவை. தவிட்டு நிறத்தில் மஞ்சள் புள்ளிகளுடன்கூடிய மேலோட்டைப் பெற்றிருக்கும். இவற்றின் உதடுகள் பருந்தின் அலகுபோல அமைந்திருப்பது இவற்றின் பிரத்தியேகத் தன்மையாகும். உதடுகளைப் பயன்படுத்தி இவை சிப்பிகளை உடைத்துத் தின்னும். ஒரு மீட்டர் நீளம்வரை வளரும். அந்தமான் கடலில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. அரிதாக இவை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு முட்டையிடுவதற்காக வருவதுண்டு. ஒரு முறையில் இவை, 96 முதல் 182 முட்டைகள்வரை இடும். இவற்றின் இறைச்சி விஷத்தன்மையுள்ளது. எனவே இவற்றை யாரும் உண்பதில்லை. ஆயினும் இவற்றின் அழகான மேல் ஓட்டுக்காக இவை பெருமளவில் கொல்லப்படுகின்றன.
பேராமை:
THE GREEN TURTLE(அறிவியல் பெயர்: CHELONIA MYDAS)
இவ்வகை ஆமைகள் ஒன்றரை மீட்டர் நீளம் இருக்கும். 150 கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கும். இவற்றின் மேல் ஓடு அடர்ந்த பச்சை நிறம் கொண்டது. பாசிகளுக்கிடையே வளர்வதால்தான் இவை இந்த நிறத்தில் இருக்கின்றன. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும், அந்தமான் கடற்பகுதிகளிலும் காணப்படுகின்றன. எப்போதாவது முட்டையிடுவதற்காக குஜராத் கடற்கரைப் பகுதிகளுக்கு வரும். இவை ஒரு தடவையில் 104 முட்டைகள்வரை இடும். இவை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுவதால் சில பகுதி மக்கள் இவற்றை வழிபடுகிறார்கள். இவற்றின் எலும்புகளால் சமைக்கப்பட்ட சூப் மிகவும் புகழ் பெற்றது. இவை, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. பெரிய துடுப்புபோன்ற இவற்றின் கால்கள் மூடுகாலணிகள் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன.
பெருந்தலைக் கடலாமை:
LOGGERHEAD SEA TURTLE(அறிவியல் பெயர்: CARETTA CARETTA)
இவை தோற்றத்தில் சிற்றாமையை ஒத்திருக்கும். ஆயினும் இவற்றின் பெரிய தலையும், தவிட்டு நிறத்திலுள்ள மேல் ஓடும் இவற்றை சிற்றாமையிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன. இவை ஒன்றரை மீட்டர் நீளம்வரை வளரும். எடை, 110 கிலோவரை இருக்கும். அரிதாகத்தான் இவை இந்தியக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. மீன்கள், இறால்கள், நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றை உண்கின்றன. இவை ஒரு தடவையில் 60 முதல் 200 முட்டைகள்வரை இடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக