அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 25 மார்ச், 2011

உயிர் வரம் தரும் தாவரம்தாவர இனம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறை சாற்றி நிற்கும் ஓர் அற்புதமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில்,
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164)
இந்த வசனத்திலும், இன்னும் பல இடங்களிலும் தாவர இனத்தைத் தன்னுடைய தன்னிகரற்ற அரிய படைப்புக்குச் சான்றாகக் கூறுகின்றான். அறிவுடையோருக்கு அழகிய பாடமும் படிப்பினையும் இருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்கின்றான். அறிவியல் உலகம் இன்று தாவரத்தில் மண்டி, மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் போது நாம் அதிசயத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். என்ன ஒரு அற்புதப் படைப்பு! என்று எண்ணி வியக்கின்றோம். எனவே தாவரத்தின் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் தாவரத்தின் அவசியத்தை முதலில் பார்ப்போம்.
மரங்களின்றி மனிதன் இல்லை
வனப் பகுதிக்குச் செல்கின்ற போது அங்குள்ள அறிவிப்புப் பலகைகளில் "மரங்களின்றி மனிதன் இல்லை. ஆனால் மனிதன் இன்றி மரங்கள் வாழும்'' என்று வனத்துறையினர் எழுதி வைத்திப்பார்கள். இது மனிதனுக்கும், தாவர இனத்திற்கும் இடையேயுள்ள தொடர்பைத் தெளிவு படுத்துகின்றது.
மனிதனை அழிக்க அணுகுண்டு எல்லாம் தேவையில்லை. தாவர இனத்தை அழித்தால் போதும். மனிதன் அழிந்து போவான். அந்த அளவுக்கு மரம் மனிதனுக்கு இன்றியமையாதது. ஆனால் மரத்திற்கு மனிதன் தேவையில்லை.
நாம் இன்று சுவாசிக்கின்ற இந்தக் காற்று - ஆக்ஸிஜன் மரத்திலிருந்து தான் கிடைக்கின்றது. தாவரங்கள் தருகின்ற இன்னும் சொல்லப் போனால் அவை போடுகின்ற ஆக்ஸிஜன் என்ற பிச்சை மூலம் தான் நாம் மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன.
தாவரங்கள் வெளியிடுகின்ற இந்த ஆக்ஸிஜன் மனிதனின் உடலுக்குள் நுழைந்து ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் அளிக்கின்றது; உரிய சத்தளிக்கின்றது.
ஒளிச் சேர்க்கையும் உயிரினப் பிச்சையும்
பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம். (அல்குர்ஆன் 15:19,20)
பூமியில் தாவரங்களை முளைக்கச் செய்து, அதில் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை அமைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படியென்ன வாழ்வாதாரம் அதில் அமைந்துள்ளது?
தாவரங்களில் ஏற்படும் ஒளிச் சேர்க்கை என்பது பசுமையான இலைகளில் உள்ள பச்சையம், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, நீர் இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் (எனும் தாவர இனத்தின் உணவை) தயாரிக்கும் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் போது தான் ஆக்ஸிஜன் வெளியிடப் படுகின்றது. இந்த ஆக்ஸிஜனை, மனித இனம் முதல் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கின்றன.
இதன் படி தாவர இனமின்றி மனிதன் மட்டுமல்ல! நிலம், நீர் வாழ் உயிரினங்களே இல்லை என்றாகி விடுகின்றது. இந்த அடிப்படையில் தாவர இனங்கள் உயிர் ஜீவன்களாக அமைந்திருக்கின்றன.
உணவுப் பிச்சை தரும் தாவரம்
உலகில் அனைத்து உயிரினங் களுக்கும் தாவர இனம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ உணவு அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்களும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் தாவர இனத்தைச் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. இங்கு தாவரம் நேரடி உணவாக இருக்கின்றது. சிங்கம், புலி போன்ற பிராணிகள் தாவர உண்ணிகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. இங்கு தாவரம் இந்த விலங்குகளுக்கு மறைமுக உணவாகி விடுகின்றது.
இவ்வாறு தாவரம் அனைத்து உயிரினங்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உணவாக அமைந்திருக்கின்றது. உயிர் பிச்சை மட்டுமின்றி உணவுப் பிச்சையும் இட்டு உயிரினங்களைக் காக்கின்றது.
தாவரம் தரும் மழைப் பிச்சை
நாம் வாழ்கின்ற இந்த உலகம் மறு சுழற்சி என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. துவைத்த துணியில் குடி கொண்டிருந்த நீர், தரையில் கொட்டிக் கிடந்த நீர் கொஞ்ச நேரத்தில் காணாமல் போகின்றதே, ஏன்? சூரிய வெப்பத்தின் மூலம் நீராவியாகி வான்வெளிக்குச் சென்று விடுவதால் தான். வானிலிருந்து வந்த நீர் வானுக்கே சென்று விடுகின்றது. மீண்டும் மழையாகப் பொழிந்து பூமிக்கு வந்து விடுகின்றது. திரும்பவும் வானுக்குச் செல்கின்றது. இது தான் மறுசுழற்சியாகும்.
இதில் தாவர இனத்தின் வழியாக மாபெரும் பங்கு வானத்தை நோக்கிச் செல்கிறது. மரத்தின் இலைகளில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக விண்ணை நோக்கி நீராவியாகச் செல்கின்றது.
கல்லையும் கிழித்துக் கொண்டு, பூமிக்குள் ஊடுருவிச் செல்கின்ற வேர்கள் மண்ணில் படிந்திருக்கும் கனிமச் சத்துக்களையும் சேர்த்து தண்ணீரை மரத்திற்குள் கடத்துகின்றன.
இன்று மனிதன், தான் கட்டியிருக்கும் அடுக்கு மாடி வீட்டிற்கு மோட்டார் துணை கொண்டு ஹோஸ் வழியாக தண்ணீரைப் பாய்ச்சுகின்றான். ஆனால் வானளாவ வளர்ந்து நிற்கும் மரங்கள் தங்களுக்குரிய தண்ணீரை உச்சியில் நிற்கும் ஓர் இலை வரைக்கும் மோட்டார், ஹோஸ் எதுவுமின்றி சைலம் என்ற நீர் கடத்தி திசுக்கள் மூலம் கொண்டு செல்கின்றன.
இவ்வாறு செலுத்தப்படும் இந்த நீர் தான் நீராவியாக விண்ணுலகம் சென்று, பின் மழையாகப் பொழிகின்றது. இதனால் தான் மரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் திரும்பத் திரும்ப மழை பொழிகின்றது. எனவே தான் அரசாங்கம், "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்'' என்ற வசனங்களைப் பொது இடங்களில் எழுதி வைத்திருக்கின்றது.
இப்படி மழை தருகின்ற மரங்களையும் அவற்றைத் தாங்கி நிற்கின்ற காடுகளையும் மனிதன் தன் சுயநலத்திற்காக அழித்து, தனக்கு மட்டுமல்லாது ஏனைய உயிரினங்கள் அனைத்திற்கும் கேடு உருவாக்கிக் கொண்டிருக்கின்றான். நாம் விடும் மூச்சுக்கும், பொழியும் மழைக்கும் மரம் தான் காரணம் என்று தெரிந்தால் இப்படி மனிதன் காடுகளை அழிக்க முன் வர மாட்டான்.
தாவர இனத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பு வெறும் விறகு, நிழல் என்ற சாதாரண தொடர்பல்ல. நாம் விடுகின்ற உயிர் மூச்சான தொடர்பு என்பதை இன்றைய அறிவியல் உலகம் தெளிவுபடுத்துகின்றது.
எல்லா உயிரினங்களுக்கும் உயிரியாகவும், உணவாகவும் திகழ்கின்ற இந்தத் தாவரம் தனது உணவுக்கு என்ன செய்கின்றது? இங்கு தான் அல்லாஹ்வின் அற்புதம் வெளிப் படுகின்றது.
மற்ற அனைத்தும் இந்தத் தாவரத்தைச் சார்ந்து நிற்கின்ற போது, தாவர இனம் மட்டும் தனக்கு உணவு தயாரிப்பதற்குத் தன்னை மட்டுமே சார்ந்து நிற்கின்றது. இந்த வகையில் தாவரம் விலங்குகளை விடவும், மனிதனை விடவும் விஞ்சி நிற்கின்றது.
ஒளிச் சேர்க்கை ஓர் அற்புதம்
பொதுவாக எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பூவுலகில் ஒன்றின் கழிவை மற்றொன்றின் மூலதனமாக ஆக்கி வைத்திருக்கின்றான். தாவரம் விடுகின்ற ஆக்ஸிஜனை நாம் எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றோம்.
அந்தக் கார்பன் டை ஆக்ஸைடை தாவரம் எடுத்துக் கொள்கின்ற போது புவியின் வெப்பம் குறைகின்றது. மலைப் பாங்கான பகுதியில் வெப்பம் குறைந்து காணப்படுவதற்கு இது தான் காரணம்.
சூரியனைப் பார்த்து இதழ் விரித்து சிரித்து நிற்கும் பசுமையான இந்த இலைகள் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றன. பச்சையம், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு இவற்றைக் கொண்டு, ஸ்டார்ச்சை, அதாவது தனக்குரிய உணவைத் தாவரம் தயாரித்துக் கொள்கின்றது. ஒளிச் சேர்க்கைக்கு பச்சையம் முக்கியக் காரணியாகும். இது விலங்குகளிடமும் மனிதனிடமும் இல்லாததால் அவர்கள் தங்கள் உணவைச் சொந்தமாக உருவாக்க முடிவதில்லை.
தாவரங்கள் யாரிடமும் பிச்சை கேட்காமல் தங்கள் உணவைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் நிகழ்ச்சியான ஒளிச் சேர்க்கையின் போது தான் ஆக்ஸிஜன் வெளியிடப் படுகின்றது.
மனிதன் தன் உணவுக்காகப் பிற இனத்தை அழிக்கின்றான். ஆனால் தாவரமோ தன் உணவாக்கத்தின் போது பிற உயிரினத்திற்கு உயிர் அளித்து வாழ்கின்றது; வளர்கின்றது.
இங்கு தான் தாவரம் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாகி விடுகின்றது. இது பூமியில் தாவரத்திற்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பாகும். இத்தகைய சிறப்பம்சம் கொண்ட தாவர வர்க்கம் பூமி எங்கும் நிறைந்து நிற்க வேண்டுமாயின் அது இனப் பெருக்கம் அடைய வேண்டும்.
தாவரத்தின் இனப் பெருக்கத்திலும் உயிர் வளி எனப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கின்றது. உணவு உற்பத்தி பெருகுகின்றது.
இப்படி இன்றியமையாத தாவரம் இனப் பெருக்கம் அடைவதற்கு இறை விதி என்ன வழிமுறைகளை ஏற்பாடு செய்திருக்கின்றது?
மனிதன் மற்றும் விலங்கினத்தில் ஆண், பெண் உறவு மூலம் இனப் பெருக்கம் ஏற்படுகின்றது. இது போல் தாவரத்திலும் ஆண், பெண் உறவு முறை உள்ளது.
வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப் படுத்தினோம். (அல்குர்ஆன் 20:53)
உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாக இந்த வசனத்திலும் இன்னும் இது போன்ற பல வசனங்களிலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 13:3, 36:36, 43:12, 51:49)
தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக் குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
உணவுக்காக யாரிடமும் கையேந்தாத தாவரம் உறவுக்கு மட்டும் அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு மட்டும் வண்டுகள், பட்டாம் பூச்சிகள், விட்டில்கள், தேனீக்கள் ஆகியவற்றை எதிர் பார்த்து ஏங்கி நிற்கின்றது. அதுவும் பண்ட மாற்று முறை எனப்படும் கொடுத்து எடுத்தல் முறையில் தான்.
அந்தத் தேன் மதுரச் சுவையை அடுத்த மலரில் சுவைப்போம், இன்ஷா அல்லாஹ்.

மங்கையருக்கு ஒப்பான மலர்கள்
பூமி முளைக்கச் செய்வதில் இருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். (அல்குர்ஆன் 36:36)
இந்த வசனத்தை, சுப்ஹானல்லதீ... என்ற சொற்றொடருடன் திருக்குர்ஆன் துவக்குகின்றது.
மிக மகத்தான அற்புதத்திற்கும், அதிசயத்திற்கும் தான் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பிரயோகிக்கின்றான்.
இதே வார்த்தையை கீழ்க்கண்ட வசனத்திலும் உபயோகிக்கின்றான்.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 17:1)
அறிவியல் வளர்ந்திராத ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் தரை மார்க்கமாகவும் பின்னர் ஆகாய மார்க்கமாகவும் போய் விட்டுத் திரும்புவது மனித அறிவு கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு காரியமாகும். அத்தகைய அதிசயத்தைக் கூறுவதால் இதற்கும் அல்லாஹ், "சுப்ஹான'' - தூய்மையானவன், தனக்கு நிகரானவன் எவனும் இல்லை என்று குறிப்பிடுகின்றான்.
அதைப் போன்று தான் இந்தத் தாவர இனத்தில், ஜோடிகளைப் படைத்திருப்பதில் தனக்கு நிகரானவன் எவனும் இல்லை என்று கூறுகின்றான். தாவர இனத்தில் அப்படி என்ன ஒரு ஜோடி அமைப்பு? என்று தாவரத்தின் இனப் பெருக்கத்தையும், அதற்கு வழிவகை செய்யும் மகரந்தச் சேர்க்கையையும் பார்க்கும் போது ஆச்சரியத்தில், அதிசயத்தில் அல்லாஹ்வின் அற்புதத்தில் "சுப்ஹானக்க - நீ தூய்மையானவன்'' என்று மெய் சிலிர்த்துக் கூறி நிற்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தாவர இனத்தில் ஆண், பெண் இனங்கள் இருக்கின்றன என்ற விபரம் மக்களுக்கு மேலோட்டமாகத் தெரிந்திருந்தது. அது முழுமையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதற்கு கீழ்க்காணும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
மாநபி காலத்தில் மகரந்தச் சேர்க்கை
பேரீச்ச மர உச்சியில் இருந்த மக்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கடந்து சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் என்ன செய்கின்றார்கள்?'' என்று கேட்டார்கள்.
"ஆண் மரத்தைப் பெண் மரத்துடன் இணைத்து மகரந்தச் சேர்க்கை செய்கின்றனர். அதனால் அது சூலுறும்'' என்று அம்மக்கள் பதிலளித்தனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது எந்தப் பயனையும் அளிக்கும் என்று நான் எண்ணவில்லை'' என்று சொன்னார்கள். இந்தச் செய்தி அம்மக்களுக்குத் தெரிவிக்கப் பட்டதும் அவர்கள் மகரந்தச் சேர்க்கையை விட்டு விட்டனர்.
"இது அவர்களுக்குப் பயன் தருமானால் அதை அவர்கள் செய்து கொள்ளட்டும். நான் தெரிவித்தது (எனது) எண்ணத்தைத் தான். இந்த எண்ணத்தின் மூலம் என்னை நீங்கள் பிடித்து விடாதீர்கள். எனினும் அல்லாஹ்வைப் பற்றி (மார்க்கம் தொடர்பாக) உங்களுக்கு எதையேனும் தெரிவித்தால் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் மீது ஒருபோதும் நான் தவறான செய்தி கூற மாட்டேன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4356
தாவர இனத்தில் ஆண், பெண் இனச் சேர்க்கை உள்ளது என்ற மேலோட்டமான விளக்கம் மட்டும் அன்றைய மக்களிடம் இருந்தது. ஆழ்ந்த விளக்கம் இல்லை. அதற்கான அறிவியல் சாதனங்கள் அன்றைய கால மக்களிடம் இல்லை.
ஆனால் இன்று அறிவியலார்கள் தாவர இனத்தை சோதனைப் பகுப்பாய்வுக் கூடத்திற்குக் கொண்டு வந்து, அதனுடைய வேர் வரைக்கும் சென்று, தாவர இனத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி, ஆய்ந்தெடுத்து விட்டார்கள்.
அவர்களது இன்றைய காலத்து மகரந்தச் சேர்க்கை பற்றிய கண்டு பிடிப்புகள் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல், "சுப்ஹானல்லாஹ்'' என்று கூற வைக்கின்றது.
இப்படி, சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ் என்று மூச்சுக்கு மூச்சு சொல்ல வைக்கின்ற தாவர இனத்தில் ரகசிய சுரங்கத்திற்குள் இந்த அறிவியல் எனும் கைவிளக்குடன் சென்று வருவோம்.
மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு மலரின் மகரந்தத் தூளானது, மலரின் சூலக முடியை அடைவதாகும். இத்தகைய மகரந்தச் சேர்க்கை இரு வகையில் நடக்கிறது. 1. தன் மகரந்தச் சேர்க்கை 2.அயல் மகரந்தச் சேர்க்கை.
தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலக முடியை அடைவதாகும். அயல் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலக முடியை அடைவதாகும்.
அயல் மகரந்தச் சேர்க்கையும் அதன் அற்புதங்களும்
மங்கையரைக் கவிஞர்கள் மலர்களுக்கு ஒப்பிடுவார்கள். உண்மையில் இந்த உவமையும் ஒப்பீடும் மிகப் பொருத்தமானதாகும்.
பெண்களின் கவர்ச்சியும், காந்தமிகு ஈர்ப்பு சக்தியும் தான் இதற்குக் காரணம். அதனால் தான், அவர்களின் கவர்ச்சியைக் கவனத்தில் கொண்டு தான் அவர்களுக்கு புர்கா எனும் கவசத்தை இறைவன் அணியச் சொல்கின்றான்.
மனித இனத்தின் பெருக்கத்திற்குப் பயன்படுகின்ற மகளிருக்குக் கொடுத்துள்ள அதே கவர்ச்சியை அல்லாஹ் மலர்களுக்கும் கொடுத்து பூச்சியினங்களைக் கவர்ந்து இழுக்கச் செய்கின்றான்.
பூக்களும் பூச்சிகளும்
அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள், வட்டமடித்துப் பாடி நிற்கும் தேனீக்களை, வண்டுகளை, வண்ணத்துப் பூச்சிகளை, வவ்வால்களை, விட்டில்களை வளைத்துத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வண்ணம், வண்ண, வண்ண நிறங்களைப் பெற்றிருக்கின்றன.
வருகின்ற தேனீக்கள், வண்டு மற்றும் இதர பூச்சியினங்களை மையல் கொள்ள வைக்கும் நறுமணத்தையும் பூக்கள் பெற்றிருக்கின்றன.
தங்கள் வண்ணங்களிலும், வாசனையிலும் மயங்கி வந்த அந்தப் பூச்சிகளுக்கு அந்தப் பூக்கள் மகரந்தத் தூளையும், மதுரத் தேனையும் பரிசாக வழங்குகின்றன.
மலரின் மயக்கும் பகட்டான பாகங்கள்
மலரைத் தாங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு மலர்க் காம்பு என்று பெயர். மலர்க் காம்பின் நுனிப்பகுதியில் பூத்தளம் உள்ளது. பூத்தளத்தில் மலரின் உறுப்புகள் அமைந்துள்ளன. மலரின் அடுத்தடுத்த நான்கு வட்டங்களில் மலரின் பாகங்கள் உள்ளன.
அவற்றில் வெளி அடுக்கு புல்லி வட்டம் எனப்படும். இது புல்லி இதழ்களால் ஆனது. இந்தப் புல்லி வட்டம் இலைகளைப் போன்று பசுமை நிறத்தைக் கொண்டிருக்கும். மலர் அரும்பாக இருக்கும் போது அதை மூடிக் காப்பது இதன் வேலையாகும்.
மலரின் இரண்டாம் அடுக்கு அல்லி வட்டம் எனப்படும். இது அல்லி இதழ்களால் ஆனது. இது தான் மகரந்தச் சேர்க்கைக்கு வண்டு மற்றும் பூச்சிகளை ஈர்க்கிறது. புல்லி வட்டமும், அல்லி வட்டமும் துணை வட்டங்கள் எனப்படும். இவை இனப்பெருக்கத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை.
இந்த அல்லி வட்டம் தான் பகட்டான வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் கொண்டிருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி தான் பூச்சிகளைத் தங்கள் பக்கம் இழுத்து மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
மூன்றாம் வட்டம் மகரந்தத் தாள் வட்டம் ஆகும். இது மலரின் ஆண் பாகம் ஆகும். ஒவ்வொரு மகரந்தத் தாளிலும் மகரந்தப் பையும், மகரந்தத் தாள் கம்பியும் உள்ளன. மகரந்தப் பையில் மகரந்தத் தூள்கள் உருவாகின்றன.
நான்காம் வட்டம் சூலக வட்டம் ஆகும். இது மலரின் பெண் பாகம் ஆகும். இதில் சூல்பை, சூல் தண்டு, சூலக முடி என மூன்று பாகங்கள் உள்ளன.
பூக்களின் இந்தச் சுற்று வட்டங்களுக்குள் இப்படி ஒரு மகரந்தத் தூளை உருவாக்கி, மதுர சுவை மிகு பானத்தைச் சுரக்க வைத்து தாவர இனத்தின் பெருக்கத்திற்காக அவற்றை ஜோடியாக ஆக்கி வைத்த இறைவன் உண்மையில் தூய்மையானவன்.
மலரில் சுரக்கும் இந்த சுவை பானம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலில் ஆவியாகி விடாமலும் கொட்டுகின்ற மழை நீரில் கரைந்து விடாமலும், மகரந்தச் சேர்க்கைக்குப் பயன் தராத பூச்சிக்கள் இந்தப் பானத்தைச் சூறையாடி விடாமலும் சுத்தமான பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கின்றது இயற்கை என்று அறிவியலார்கள் சொல்கின்றார்கள்.
ஆனால் அது இயற்கை அல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ் தான் என்று நாம் சொல்கின்றோம். இப்படி ஒரு படைப்பு இரகசியமா? என்று வியந்து அவன் தூய்மையானவன் என்று கூறுகின்றோம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites