அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

14-வித்ருத் தொழுகை


அத்தியாயம் : 14
பாடம் : 1
வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை.
990 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். ஆனால், உங்களில் சுப்ஹு (நேரம் வந்து விட்டது) பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் (வித்ர்) தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று பதிலளித்தார்கள்.
991 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் வித்ர் தொழும் போது (மூன்று ரக்அத்களில் கடைசி) ஒரு ரக்அத்திற்கும் (முந்தைய) இரு ரக்அத்களுக்கு மிடையே சலாம் கொடுப்பார்கள். (அந்த இடை வெளியில்) தமது சில தேவைகள் பற்றி (தம் ஊழியருக்கு)க் கட்டளையிடுவார்கள்.
992 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். நான் ஓர் தலையணையின் அகலவாட்டில் தலைசாய்த்து உறங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அத்தலையணையின் நீளவாட்டில் தலைசாய்த்து உறங்கினர். நடு இரவு நேரம் வரை அல்லது ஏறக்குறைய அந்நேரம்வரை உறங்கினார்கள். அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தம் முகத்திலிருந்த தூக்க(க் கலக்க)த்தை (தமது கரத்தால்) துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் (கடைசிப்) பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதிலிருந்து தண்ணீர் சரித்து) அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். தமது உளூவை செம்மையாகச் செய்து கொண்ட பின் அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுவதற்காக நின்றார்கள்.
அவர்கள் செய்தது போன்று நானும் (அங்கசுத்தி) செய்து விட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தம் வலக் கரத்தை என் தலை மீது வைத்து எனது வலக் காதை திருகிப்பிடித்(து என்னைத் தம் வலப் பாகத்தில் நிறுத்தி வைத்)தார்கள். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் (2) தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் (+2) தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் (+2) தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் (+2) தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் (+2) தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் (+2=12) தொழுதார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள்.
பிறகு தொழுகை அறிவிப்பாளர் (பிலால் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்த வுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (இமாமாக நின்று) தொழுதார்கள்.
993 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! (இரவுத் தொழுகையை) நீ முடித்துக் கொள்ள விரும்பினால் ஒரு ரக்அத் தொழுது (முடித்துக்) கொள்! முன்னர் தொழுததை உமக்கு அது ஒற்றையாக ஆக்கிவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நமக்கு விவரம் தெரிந்த நாள் முதல் மக்கள் பலர் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். (மூன்று ரக்அத், ஒருரக்அத் ஆகியவற்றில்) ஒவ்வொன்றுக்குமே அனுமதி உண்டு. இதில் எதைச் செய்தாலும் தவறாகாது என்றே நான் கருதுகிறேன்.
994 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களது தொழுகையாக-அதாவது இரவுத் தொழுகையாக-இருந்தது. அத் தொழுகையில் ஒரு சஜ்தாவை முடித்ததும் தம் தலையை உயர்த்துவதற்கு முன் உங்களில் ஒருவர் ஐம்பது வசனம் ஓதும் அளவு நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வார்கள்.
ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (ஃபஜ்ருத்) தொழுகைக்கு (அழைக்க) தம்மிடம் வரும் வரையில் வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.
பாடம் : 2
வித்ருத் தொழுகையின் நேரம்.
தூங்குவதற்கு முன் வித்ருத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
995 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)களில் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா? என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுதவற்றை) ஒற்றையாக ஆக்குவார்கள்.
வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னால் இகாமத் சொல்லும் சப்தம் தம் காதில் விழுந்தது போன்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவது (சுப்ஹுடைய சுன்னத்தில் நீண்ட அத்தியாயங்களை ஓதிக் கொண்டிராமல்) விரைவாக (சுருக்கமாகத்) தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
996 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரவின் எல்லாப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகை தொழுதி ருக்கின்றார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ருத் தொழுகை சஹர் நேரம் வரை நீண்டுவிடும்.
பாடம் : 3
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரை வித்ருத் தொழுகைக்காக உறக்கத்திலிருந்து எழுப்பியது.
997 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (அவ்விரிப்பில்) தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ருத் தொழுகை தொழ எண்ணும் போது என்னைத் துயிலெழுப்புவார்கள். உடனே நானும் (எழுந்து) வித்ருத் தொழுவேன்.
பாடம் : 4
ஒருவர் தமது நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும்.
998 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உங்களது கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 5
வாகனப் பிராணியின் மீது அமர்ந்தவாறு வித்ருத் தொழுகை தொழுவது.
999 சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கா செல்லும் சாலையில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் சென்று கொண்டி ருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது)
பற்றி அஞ்சிய நான் (எனது வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுது விட்டுப் பிறகு அவர் களுடன் (போய்) சேர்ந்து கொண்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (இவ்வளவு நேரம்) எங்கே சென்றிருந்தீர்? என்று கேட்டார்கள். நான் சுப்ஹு நேரம் (நெருங்கி விட்டது) பற்றி நான் அஞ்சினேன். எனவே (வாகனத்திலிருந்து) வித்ருத் தொழுதேன் என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? என்று கேட் டார்கள். அதற்கு நான், ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக (இருக்கிறது) என்று சொன்னேன். அப்போது அவர்கள், அவ்வாறாயின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்தும் வித்ருத் தொழுவார்களே என்று கூறினார்கள்.
பாடம் : 6
பயணத்தில் வித்ருத் தொழுவது.
1000 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு தம் வாகனம் செல்லும் திசையில் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். ஆனால் கடமையான தொழுகைகளைத் தவிர! தமது வாகனத்தின் மீதமர்ந்தே வித்ருத் தொழுவார்கள்.
பாடம் : 7
(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுதல்.
1001 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதினார் களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ருகூஉவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம் அவர்கள் குனூத் ஓதினார்கள்) என்று பதிலளித்தார்கள்.
1002 ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் குனூத் (எனும் சிறப்பு துஆ நபி ளஸல்ன அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (ஆம்) குனூத் இருந்தது என்று பதிலளித்தார்கள். நான், ருகூஉவிற்கு முன்பா அல்லது பின்பா? என்றுகேட்டேன். அதற்கு அவர்கள், ருகூஉவிற்கு முன்புதான் என்று பதிலளித்தார்கள். உடனே நான், தாங்கள் ருகூஉவிற்கு பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே? என்று கேட்டேன். அதற்கு, அவர் தவறாகக் கூறியிருக் கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ரா- திருக்குர்ஆன் அறிஞர்கள் என்றழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபதுபேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க அவர்கள் எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் (இடர்காலப் பிரார்த்தனை) ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
1003 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாதகாலம் குனூத் (எனும் இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். (அதில் இணைவைப்பாளர்களான) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
1004 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) குனூத் (இடர் காலப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலுமே (நடைமுறையில்) இருந்தது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites