அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

9-தொழுகை நேரங்கள்


பாடம் : 1
தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (4:103)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள மவ்கூத்' எனும் சொற்றொடரும்) மவக்கத்' எனும் சொல்லும் தவ்கீத்' எனும் வேர்ச் செல்-லிருந்து பிரிந்தவை யேயாகும். இதன் கருத்தாவது: நம்பிக்கையாளர்கள் மீது அவற்றிற்கான நேரத்தை வரையுறுத்துள்ளான்.
521 இப்னு ஷிஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(வலீத் பின் அப்தில் ம-க்கின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (ஒரு நாள் அஸ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
இராக் நாட்டில் (கூஃபாவில்) ஆளுநராயிருந்த முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டார்கள். அப்போது அவர்களிடம் அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர) அல்அன்சாரி (ரலி) அவர்கள் வந்து, ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்), முஃகீராவே? (தொழுகை கடமையாக்கப்பட்ட இஸ்ரா' இரவுக்கு அடுத்த நாள்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவ்வாறே) தொழுதார்கள். (ஐங்காலத் தொழுகையையும் முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறே (ஒவ்வொரு நாளும் தொழவேண்டுமென) நீங்கள் பணிக்கப்பட்டுள்ளீர்கள் என்று (கூறியதெல்லாம்) தாங்கள் அறிந்திருக்கவில்லையா, என்ன? என்று கேட்டார்கள்.
(இதைச் செவியுற்ற ஆளுநர்) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், நீங்கள் அறிவிப்பதை சிந்தித்து அறிவியுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை தெளிவுபடுத்தினார்களா? என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், (ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்உத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்புச் செய்வார்கள் என்று பதிலளித்தார்கள்.
522 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது அறையிலிருந்து சூரிய வெளிச்சம் உயரா நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.
பாடம் : 2
நீங்கள் அவன் பக்கமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள் ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போ ரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள் எனும் (30:31ஆவது) இறைவசனம்.
523 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், (அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் (இன்ன குலத்தாரில்) இந்தக் குடும்பத்தார் ஆவோம். (முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் நாம் ஒருவரையொருவர் சந்திக்கத் தடையாக உள்ளனர்); (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) புனித மாதங்களிலே தவிர வேறு மாதங்களில் நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெளிவான) ஆணையொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள்.அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம்; எங்கள் பின்னணியில் (இங்கே வராமல் ஊரில்) இருப்போருக்கு, அதன்பக்கம் அழைப்பு விடுப்போம் என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிடு கிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடைவிதிக்கிறேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ் வின் மீது நம்பிக்கை கொள்வது - அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதி கூறுவது, தொழுகையை நிரந்தமாகக் கடைபிடிப்பது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து ஐந்திலொரு பங்கை (இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியனதாம் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள்.
மேலும், (மது சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண்சாடி,தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய் ஆகியவற்றை (குடிபானங்கள் ஊற்றி வைக்கப் புழங்க வேண்டாமென) நான் உங்களுக்குத் தடைவிதிக்கிறேன் என்று கூறினார்கள்.
(குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி(ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்க!)
பாடம் : 3
தொழுகையை நிலைநிறுத்துவதாக ஒருவரிடம் மற்றவர் உறுதிமொழி அளிப்பது.
524 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் தொழுகையை நிலைநாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி அளித்தேன்
பாடம் : 4
தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
525 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், உங்களில் யார் (இனி தலைதூக்கவி ருக்கும்) ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்? என்று கேட்டார்கள். நான், நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், (அதைக்கூறுங்கள்)நீங்கள்தான் நபி (ஸல்) அவர்களிடம்' அல்லது (நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றின் மீது' துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள் என்று சொன்னார்கள்.
நான், ஒரு மனிதன் தன் குடும்பத்தார், தனது சொத்து, தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (இறைவழிபாட்டிலிருந்து தனது கவனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும் போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை (புரியும்படி கட்டளையிட்டு)-தீமை (யிலிருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும் எனளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகனச் சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், நான் (சோதனை' எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதை (ப்பற்றி)க் கேட்கவரவில்லை. கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக் கூடிய ளநபி (ஸல்) அவர்களால் முன்னேறிவிப்புச் செய்யப்பட்ட குழப்பம்' எனும் பொருள் கொண்டன ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன் என்று சொன்னார்கள். அதற்கு நான், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை). உங்களுக்கும் அவற்றுக்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது என்று கூறினேன். அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா என்று கேட்டார்கள்.நான், இல்லை, அது உடைக்கப்படும் என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அவ்வாறாயின் (அது உடைக்கப்பட்டுவிட்டால் பின்னர் மறுமை நாள் வரை) ஒரு போதும் அது மூடவே படாது என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
நாங்கள் (ஹுதைஃபா ளரலின அவர்களிடம்) , உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எது வென்று அறிந்திருந்தார்களா? என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், ஆம்; நாளைய தினத்தைவிட இன்றைய இரவு மிக நெருக்கமானது என்பதை (அறிவதைப்) போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். (ஏனெனில்,) நான் பொய்கள் கலவாத செய்தியையே அவருக்கு நான் அறிவித்திருந்தேன். அவை (எனது) ஊகமோ ஆய்வோ அல்ல என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களை ளஹுதைஃபா (ரலி) அவர்களிடம் அது குறித்து கேட்குமாறுனப் பணித்தோம். மஸ்ரூக் அவர்கள் கேட்டதற்கு (அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்தாம் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
526 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், பக-ன்
இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான். அந்த மனிதர், இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 5
தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு.
527 வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி சைகை செய்தவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் தெரிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது? என்று கேட்டேன். அவர்கள், உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். தாய் தந்தையருக்கு நன்மை புரிவது என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவது என்று பதிலளித்தார்கள். இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாக பதிலளித்திருப்பார்கள்.
பாடம் : 6
ஐவேளைத் தொழுகைகள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
528 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவரது (வீட்டு) வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது (மேனி யிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடாது என்று மக்கள் பதிலளித்தார்கள். இது தான்  ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 7
கால தாமதப்படுத்தித் தொழுது தொழுகையை வீணாக்குவது.
529 ஃகைலான் பின் ஜரீர் அல்மஅவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற் றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், (கால தாமதப்படுத்தி) தொழுகை யைக்கூட நீங்கள் வீணாக்கிடவில்லையா? என்று கேட்டார்கள்.
530 முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
டமாஸ்கஸ் (திமஷ்க்) நகரிலிருந்த அனஸ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு) நான் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் (முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இன்று) என்னால் காண முடியவில்லை இந்தத் தொழுகைகூட (உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாமல்) வீணடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.
இதே கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸ் (சிறிது கூடுதலாக) உஸ்மான் பின் அபீ வர்ராத் (ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 8
தொழுது கொண்டிருப்பவர் வலிவும் உயர்வும் உடைய தம் இறைவனிடமே இரகசியமாக உரையாடுகிறார்.
531 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடுகிறார். எனவே (தொழுது கொண்டிருக்கும் போது எச்சில் வந்துவிட்டால்) அவர் தமது வலப் பக்கத்தில் உமிழவேண்டாம். ஆயின், தமது இடப் பாதத்திற்குக் கீழே உமிழட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடமி ருந்து சயீத் பின் அபீ அரூபா (ரஹ்) அவர்கள், தமக்கு முன்புறமாகத் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது தமது பாதங்களுக்குக் கீழேயோ துப்புக என்று (நபி ளஸல்ன அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
(கத்தாதா ளரஹ்ன அவர்களிடமிருந்து) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் தம் வலப் பக்கம் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ துப்புக! என்று (நபி ளஸல்ன அவர்கள் கூறியதாக) காணப்படுகிறது.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹுமைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், கிப்லா (கஅபா)த் திசையில் அவர் துப்பலாகாது; தமது வலப் புறமாகவும் துப்பலாகாது. எனினும் அவர் தமது இடப் பக்கமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ துப்புக! என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
532 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது. (தொழும் போது எச்சில் வந்துவிட்டால்) தமக்கு முன்புறம் துப்பலாகாது; தம் வலப் புறம் துப்பலாகாது. ஏனெனில் தொழுது கொண்டிருப்பவர், தம் இறைவனிடமே இரகசியமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 9
கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும் வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது.
533, 534 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெப்பம் கடுமையாகும் போது வெப்பம் தணியும் வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
535 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தோம். அப்போது) நபி (ஸல்) அவர்களின் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின் பிலால் ளரலின அவர்கள்) லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், வெப்பம் தணியட்டும்; வெப்பம் தணியட்டும்;' என்று கூறிவிட்டு, கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது. வெப்பம் கடுமையாகும் போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள் என்று கூறினார்கள். (எனவே நாங்கள் லுஹ்ர் தொழுகையை தாமதப்படுத்தினோம்). எந்த அளவிற்கென்றால் மேடுகளில் சாய்ந்து விழும் நிழலை நாங்கள் பார்த்தோம்.
536 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெப்பம் கடுமையாகிவிடும் போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
537 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தன் இறைவனிடம், இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே என முறையிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒருமூச்சு குளிர் காலத் திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இருமூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனு பவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
538 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹ்ர் தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம், நரகநெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 10
பயணத்தின் போது வெப்பம் தணிந்த பின் லுஹ்ரைத் தொழுவது.
539 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது பாங்கு சொல்பவர் ளபிலால் (ரலி) அவர்கள்ன லுஹ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), வெப்பம் தணியட்டும் பிறகு, தொழலாம் என்று கூறினார்கள். பிறகு (சிறிது நேரம் கழிந்து) மீண்டும் அவர் பாங்கு சொல்லமுற்பட்ட போது அவரிடம், வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம் என்று மேடுகளின் சாய்ந்து விழும் நிழலை நாங்கள் பார்க்கும் வரை - (இவ்வாறு) கூறினார்கள். பிறகு, கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகின்றது. எனவே வெப்பம் கடுமையாகும் போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் (அதன் ஆரம்ப நேரம் தாண்டிய பின்) தொழுங்கள் என்று சொன்னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(16:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யத்தஃபய்யஉ' எனும் சொற்றொடருக்கு சாய்கின்றன' என்று பொருள்.
பாடம் : 11
சூரியன் சாய்ந்த பிறகே (நண்பகலுக்குப் பின்பே) லுஹ்ர் நேரம் ஆரம்பமாகிறது.
(கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாத போது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
540 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்த (நண்பகலின்) போது (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்)தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டார்கள். பிறகு (அவர்கள் விரும்பாத பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்ட போது), (இன்று) யார் எது குறித்துக் கேட்கவிரும்பினாலும் கேட்கட்டும். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை எது குறித்து நீங்கள் என்னிடம் கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன் என்று (கோபத்துடன்) கூறினார்கள். எனவே மக்கள் மிகுதியாக அழலாயினர். நபி (ஸல்) அவர்களோ, கேளுங்கள் என்னிடம் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் எழுந்து, என் தந்தை யார்? என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஹுதாஃபாதாம் உன் தந்தை என்று பதிலளித்து விட்டு மீண்டும், கேளுங்கள் என்னிடம் என்று அடிக்கடி கூறலானார்கள். (நபியவர்களின் முகக்குறியை அறிந்து கொண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள், சற்றுமுன் இதோ இந்த சுவரின் பரப்பில் சொர்க்கத்தையும் நரகத்தையும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சி போன்று) நன்மையிலும் தீமையிலும் வேறெந்த காட்சியையும் நான் (ஒரு போதும்) கண்டதில்லை என்று கூறினார்கள்
541 அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவிற்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபி (ஸல்) அவர்களை சுப்ஹுத் தொழுவிப்பவராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை சுப்ஹுத் தொழுகையில் ஓதுவார்கள்.
சூரியன் சாயும் (நண்பகல் நேரத்தின்) போது லுஹ்ரைத் தொழுவிப்பார்கள்.
எங்களில் ஒருவர் (தொழுதுவிட்டு) மதீனாவின் கோடியிலுள்ள (தமது இல்லத்திற்குத் திரும்பிச்) சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெப்பம் தணியாமல் வெளிச்சம் குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும். (அந்த அளவிற்கு நேரம் இருக்கும் போது) அஸ்ர் தொழுவிப்பார்கள்.
-இதன் அறிவிப்பாளரான அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா அல்பஸ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மஃக்ரிப் தொழுகை (யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள். ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி(யில் முதல் பகுதி) வரை தாமதப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.
முஆத் பின் முஆத் (ரஹ்) கூறினார்கள்:
பிறகு ஒரு முறை அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்களை) நான் சந்தித்தேன். அப்போது அவர்கள், அல்லது இரவின் நடுப்பகுதி வரை (தாமதப்படுத்துவதை பொருட்படுத்த மாட்டார்கள் என்று சந்தேகம் தெரிவித்து) அறிவித்தார்கள் என ஷுஅபா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
542 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நண்பகல் நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் (லுஹ்ர்) தொழும் போது வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடையின் (ஒரு பகுதியின்) மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்பவர்களாக இருந்தோம்.
பாடம் : 12
லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது.
543 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) எட்டு ரக்அத்களாகவும் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து) ஏழு ரக்அத்களாகவும் தொழு(வித்)தார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஜாபர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், இ(வ்வாறு சேர்த்துத் தொழுத)து மழைக்காலத்தில் நடந்திருக்கலாமோ? என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரஹ்) அவர்கள் இருக்கலாம்' என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 13
அஸ்ர் தொழுகையின் நேரம்.
544 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது அறையிலிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்
545 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சூரியனின் வெளிச்சம் எனது அறையில் இருந்து கொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையிலிருந்து (சூரிய வெளிச்சம் படும் இடத்தின்) நிழல் உயர்ந்திருக்காது.
546 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சூரியன் எனது அறைக்குள் உதித்துக் கெண்டிருக்க நிழல் இன்னும் (எனது அறையிலிருந்து) உயராத நிலையில் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.
மா-க் (ரஹ்), யஹ்யா பின் சயீத் (ரஹ்), ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்), இப்னு அபீஹஃப்ஸா (முஹம்மத் பின் மைஸரா அல்பஸரீ- ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், சூரிய வெளிச்சம் உயராத நிலையில் என்று இடம் பெற்றுள்ளது.
547 சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும் அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, கடமை யான தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், -நீங்கள் முதல் தொழுகை எனக் கூடிய - நண்பகல் (லுஹ்ர்) தொழுகையை சூரியன் (நடுவானிலிருந்து மேற்கு நோக்கி) சாயும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக்கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பி சென்றுவிடுவார். சூரியன் (வெளிச்சம் குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும். என்று கூறினார்கள்.
-அறிவிப்பாளர் சய்யார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.
தொடர்ந்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அத்தமா' என்று நீங்கள் அழைக்கக்கூடிய இஷாத் தொழுகையைப் பிற்படுத்துவதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள்.
(எங்களில்) ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவில் வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறை (சுப்ஹு)த் தொழுகையை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை ஓதுவார்கள்.
548 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு (மதீனாவிலிருந்து 2மைல் தொலைவிலிருந்த குபா பகுதி வாழ்) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் எங்களில் சிலர் சென்றால் அக்குலத்தார் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.
549 அபூஉமாமா (அஸ்அத் பின் சஹ்ல் பின் ஹுனைஃப்-ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகையைத் (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு (மதீனாவின் துனை ஆளுநராயிருந்த) அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் அஸ்ர் தொழுகையைத் (அதன் ஆரம்ப நேரத்தில்) தொழுது கொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) என் தந்தையின் சகோதரரே! (என்று அழைத்து) இப்போது நீங்கள் தொழுதது எந்தத் தொழுகை (லுஹ்ரா? அல்லது அஸ்ரா?) என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், (இது) அஸ்ர் தொழுகை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் இவ்வாறே (ஆரம்பநேரத்தில்) நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம் என்று பதிலளித்தார்கள்.
550 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுவார்கள். அப்போது சூரியன் மேலேயே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும் போது ஏற்படும் நிறமாற்றம் நிகழாமல்) தெளிவாகவே இருக்கும். (நஜ்த் திசையிலிருந்த) மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளுக்குச் செல்பவர் அங்கே இருப்பவர்களிடம் சென்றடையும் போது சூரியன் மேலேயே இருக்கும். அந்த மேட்டுப் பாங்கான (கிராமப்) பகுதிகளில் சில மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு தொலைவில் அமைந்திருந்தன.
551 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப்பாங்கான பகுதிகளில் ஒன்றான) குபா'விற்குச் செல்வோர் அங்கே சென்றடைவர். அப்போதும் சூரியன் மேலேயே இருக்கும்.
பாடம் : 14
அஸ்ர் தொழுகை(யை அதன் உரிய நேரத்தைவிட்டு) தவறவிட்டவர் அடைந்துகொள்ளும் பாவம்.
552 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்(டு தன்னந் தனியாக விடப்பட்)டவரைப் போன்றவரே ஆவார்.
பாடம் : 15
அஸ்ர் தொழுகையை ஒருவர் விட்டு விடுவது...
553 அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேகமூட்டமுடைய ஒரு நாளில் புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்பநேரத்தில்) நிறைவேற்றுங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன என்று கூறியுள் ளார்கள் என்றார்கள்.
பாடம் : 16
அஸ்ர் தொழுகையின் சிறப்பு.
554 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
(இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில்) இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் பின் அபீகா-த் (ரஹ்) அவர்கள், (இந்தத் தொழுகைகளை) நீங்கள் தவறாமல் தொழுங்கள் என்று கூறினார்கள்.
555 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ்வான)வர்களிடம், (பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்று பதிலளிப்பார்கள்.
பாடம் : 17
சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை ஒருவர் அடைந்து கொண்டால் (அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள் ளட்டும்).
556 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரேனும் சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்து கொண்டால் அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்! சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்து கொண்டால் அவரும் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
557 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களுடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடுகையில் நீங்கள் (இவ்வுலகில்) வாழும் காலம் அஸ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும்.
தவ்ராத்திற்குரிய (யூத)ர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்பெற்றது. நண்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தனர். அவர்களில் (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு கீராத் (கூலி) வழங்கப்பட்டனர். பின்னர் இன்ஜீலுக்குரிய (கிறிஸ்த)வர்களுக்கு இன்ஜீல் வேதம் அருளப்பெற்றது. (நண்பக-லிருந்து) அஸ்ர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தனர். அவர்களில் (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு கீராத்' (கூலி) வழங்கப்பட்டனர். பிறகு நாம் குர்ஆன் அருளப்பெற்றோம். (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம் .இரண்டிரண்டு கீராத் நாம் வழங்கப்பெற்றோம். எனவே வேதம் அருளப்பெற்ற அவ்விரு சமுதாயத்தாரும், எங்கள் இறைவா! இவர்களுக்கு இரண்டிரண்டு கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு கீராத் வழங்கியுள்ளாயே?! நாங்கள் (இவர்களைவிட) அதிக வேலைசெய்திருந்தோமே? என்று வினவினர். அதற்கு வ-வும் மாண்பும் உடையோனாகிய அல்லாஹ், உங்களின் கூலியில் ஏதேனும் நான் (குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்திருக்கிறேனா? என்று கேட்டான். அவர்கள் இல்லை என்று கூறினர். அதற்கு அல்லாஹ், இது எனது அருட்கொடை; நான் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறேன் என்று கூறினான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: கீராத்' என்பது உஹுத் மலையளவு தங்கம் என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது)
558 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் நிலை, (குறிப்பிட்ட தொகைக் கூலிக்கு காலையிலிருந்து) இரவு வரை, தமக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. (அவர் முதலில் ஒரு பிரிவினரை கூலிக்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல் வரை வேலை செய்துவிட்டு, எங்களுக்கு உமது கூலி தேவையில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் இன்னொரு பிரிவினரைக் கூலிக்கு அமர்த்தி, இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தியாக்குங்கள்! (முதலாவது பிரிவினருக்கு நான் தருவதாகப் பேசியக் கூலியை உங்களுக்குத் தருகிறேன்) என்றார். அதன்படி அவர்கள் வேலை செய்ய(த் தொடங்கி) அஸ்ர் தொழுகையின் நேரம் வந்த போது, உமக்காக நாங்கள் செய்த வேலை (வீணாகட்டும்) என்றனர். எனவே அந்த மனிதர் மற்றொரு பிரிவினரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அன்று (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும் வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால் அவர்கள் முத-ரண்டு பிரிவினரின் கூலியையும் (சேர்த்து) முழுமையாகப் பெற்றுக் கொண்டனர்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்.
பாடம் : 18
மஃக்ரிப் தொழுகையின் நேரம்.
நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உசெய்து) தொழுது கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
559 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் (அம்பு எய்தால்) அவர் திரும்பிச் செல்லும் போது நிச்சயம் தனது அம்பு விழுமிடத்தை அவரால் பார்க்க முடியும். (அந்த அளவு வெளிச்சமிருக்க, ஆரம்பநேரத்திலேயே மஃக்ரிப் தொழுவோம்).
560 முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மதீனாவின் ஆட்சியராக) வந்தார். (அவர் தொழுகைகளைத் தாமதப்படுத்தி தொழுவித்தார்) அப்போது நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் பற்றிக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருக்கும் போது அஸ்ர் தொழுவார்கள். இஷாவை சில நேரம் (பின்னேரத்திலும்) சில நேரம் (முன்னேரத்திலுமாக சூழ் நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் முன்னேரத்திலேயே குழுமியிருக்கக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். மக்கள் தாமதமாகக் கண்டால் பிற்படுத்துவார்கள். சுப்ஹுத் தொழுகையை மக்கள்' அல்லது நபி (ஸல்) அவர்கள்' இருளிருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழுபவர்களாய் இருந்தார்கள்.
561 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சூரியன் அடிவானில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுபவர்களாக இருந்தோம்.
562 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஃக்ரிபையும் இஷாவையும்) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (லுஹ்ரையும் அஸ்ரையும்) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (ஜம்உ செய்து) தொழு(வித்)தார்கள்.
பாடம் : 19
மஃக்ரிப் தொழுகையை இஷாத் தொழுகை எனக் கூறலாகாது.
563 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது மஃக்ரிப் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களை கிராமப்புற அரபியர் மிகைத்துவிடவேண்டாம். கிராமப்புற அரபியர் அதனை இஷா' என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இதை அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
பாடம் : 20
இஷாத் தொழுகையை அத்தமா' எனவும் குறிப்பிடலாம்
நயவஞ்சகர் (முனாஃபிக்)களுக்கு பெரும் சுமையான தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தமாவிலும் ஃபஜ்ரிலும் உள்ள (மகத்துவத்)தை மக்கள் அறிவார்களானால் (அவ்விரண்டுக்கும் தவழ்ந்தாவது வந்து சேர்ந்துவிடுவார்கள்) என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (காண்க : ஹதீஸ் எண்-615)
அபூஅப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகின்றேன்:
(24:58ஆவது வசனத்தில்) அல்லாஹ், இஷாத் தொழுகைக்குப் பின்... என்று குறிப்பிடுவதால் இஷா' எனக் குறிப்பிடுவதே சிறப்பாகும்.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது:
நாங்கள் இஷாத் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களிடம் முறை வைத்துச் செல்பவர்களாக இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (அதாவது பிற்படுத்தித் தொழு(வித்)தார்கள். (காண்க : ஹதீஸ் எண்-567)
இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஆகியோர் கூறுகின்றனர் :
நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (பிற்படுத்தி)த் தொழுதார்கள்.
அத்தமாதொழுகையை நபி (ஸல்) அவர்கள் பிற்படுத்தித் தொழுதார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷாவை (சிலநேரம் முன்னேரத்திலும்) தொழுபவர்களாக இருந்தார்கள். (காண்க: ஹதீஸ் எண்-560)
அபூபர்ஸா (நள்ரா பின் உபைத்-ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷாவைப் பிற்படுத்து (வதையே விரும்பு)வார்கள். (காண்க: ஹதீஸ் எண்-547)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இறுதி இஷாவை பிற்படுத்துபவர்களாக இருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின் றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் தொழுதார்கள்.
(மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து இஷாத் தொழுகையை அத்தமா தொழுகை எனவும் இஷாத் தொழுகை எனவும் கூறலாம் என்று தெரிகின்றது).
564 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களால் அத்தமா' என்றழைக்கப்பட்டு வந்த இஷாத் தொழுகையை ஓர் (நாள்) இரவில் எங்களுக்கு (முன்னின்று) நடத்தினார்கள். தொழுது முடித்து எங்களை முன்னோக்கி (எழுந்து நின்று), இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர்கூட அப்போது எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.
பாடம் : 21
மக்கள் கூடுவதற்கேற்ப, அல்லது தாமதிப்பதற்கேற்ப இஷா நேரத்தை அமைத்துக் கொள்வது.
565 முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை (நேரம்) பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹ்ர் தொழுகையைத் தொழுவார்கள். சூரியன் (ஒளி குன்றாமல்) தெளிவாக இருக்கும் போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். (அதிக) மக்கள் குழுமிவிட்டால் இஷாவை சீக்கிரமாக (அதன் முன்னேரத்திலேயே) தொழுவார்கள்; மக்கள் குறைவாக இருந்தால் தாமதப்படுத்தியும் தொழுவார்கள். சுப்ஹுத் தொழுகையை இருளிருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழுவார்கள்
பாடம் : 22
இஷாத் தொழுகையி(னை எதிர்பார்ப்பத)ன் சிறப்பு.
566 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஸ்லாம் (மதீனாவிற்கு வெளியே) பரவுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள்,(தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர் எனத் தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து தொழுகை நடத்தப்) புறப்பட்டு வரவில்லை. பிறகு புறப்பட்டு வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி, (தற்போது) பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இதை எதிர் பார்த்துக் காத்திருக்கவில்லை என்று கூறினார்கள்.
567 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் (யமன் நாட்டிலிருந்து) என்னுடன் வருகை புரிந்த என் தோழர்களும் (மதீனாவிலிருந்த) பகீஉ புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தார்கள். ஒவ்வோர் இரவும் இஷாத் தொழுகை நேரத்தில் எங்களில் ஒரு குழுவினர் முறைவைத்து நபி (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்த போது) நானும் என் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற நேரம் அவர்கள் (போர் ஆயத்தம் சம்பந்தப்பட்ட) ஒரு விவகாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் நள்ளிரவு நேரமாகும் வரை இஷாவைப் பிற்படுத்தினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து மக்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்த போது வந்திருந்தோரை நோக்கி, அப்படியே இருங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள்! என்று கூறிவிட்டு, இந்த நேரத்தில் உங்களைத் தவிர மக்களில் வேறு யாரும் தொழவில்லை' அல்லது உங்களைத் தவிர வேறு யாரும் தொழவில்லை' என்று கூறினார்கள் -இந்த இரண்டு வாக்கியங்களில் எதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.- இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற விஷயத்தைக் கேட்டு பேருவகையடைந்தவர்களாக நாங்கள் திரும்பினோம்.
பாடம் : 23
இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவது வெறுக்கத்தக்க செயலாகும்.
568 அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.
பாடம் : 24
இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்.
569 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் (தங்களை எதிர் பார்த்துக் காத்திருந்து) உறங்கிவிட்டனர். தொழுவிக்க வாருங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் வரை அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் வந்து, உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும் இதை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்க வில்லை என்று கூறினார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் மக்கள் இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.
570 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அலுவல் காரணமாக ஓர் இரவு இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். நாங்கள் பள்ளியிலேயே உறங்குவதும் விழிப்பதும். பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தோம். பிறகு எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும் இத்தொழுகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கவில்லை என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இஷாநேரத்தைத் தாண்டி தூக்கம் தம்மை மிகைத்துவிடும் என்ற அச்சமில்லாத போது இஷாத் தொழுகையை முன்னேரத்தில் தொழுவதையோ பின்னேரத்தில் தொழுவதையோ இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள். (சில நேரம் முன்னேரம் தொழுவார்கள்; சில நேரம் பின்னேரம் தொழுவார்கள்).
இப்னு உமர் (ரலி) அவர்கள் (தூக்கம் தம்மை மீறிவிடும் என்ற அச்சமற்றிருந்ததால்) இஷாவுக்கு முன் உறங்குபவர்களாக இருந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
571 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து தொழுகைக்கு வாருங்கள் என்று (நபி ளஸல்னஅவர்களை) அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்(து தமது தலையிலிருந்து தண்ணீரைத் துடைத்)தவர்களாக புறப்பட்டு வந்ததை இன்றும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது அவர்கள், என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லை யாயின் அவர்களை இவ்வாறே (இந்த நேரத்தி லேயே) தொழுமாறு பணித்திருப்பேன் என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் ம-க்பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் தம் கைகளைத் தலையில் எவ்வாறு வைத்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்? என்று கேட்டேன். அப்போது அதாஉ (ரஹ்) அவர்கள் தமது விரல்களைச் சற்று விரித்து விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்தார்கள். பிறகு விரல்களை இணைத்து முகத்தை ஒட்டி அமைந்துள்ள நெற்றிப் பொட்டருகிலுள்ள காதுகளின் ஓரம், தாடியின் ஓரம் ஆகியவற்றில் படுமாறு தமது பெருவிரலை அப்படியே தடவிக் கொண்டே சென்றார்கள். அப்போது தாமதிக்காமலும் அவசரப்படாமலும் இப்னு அப்பாஸ் (ரலி) செய்து காட்டியது போன்றே செய்து காட்டியபடி என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின் இவ்வாறே (இந்த நேரத்திலேயே இஷாத் தொழுகையைத்) தொழுமாறு அவர்களை நான் பணித்திருப்பேன் என்று (நபி ளஸல்ன அவர்கள் குறிப்பிட்டதாகக்) கூறினார்கள்.
பாடம் : 25
இஷா நேரம் பாதி இரவு வரை உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை பிற்படுத்துவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
572 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள் இரவு) இஷாத் தொழுகையை பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள். பிறகே தொழு(வித்)தார்கள். பின்னர், மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். அறிந்துகொள்ளுங்கள்: ஓர் தொழுகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் அத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (என்றே கருதப்படுகிறது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், அன்றிரவு நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த மோதிரம் இலங்கியதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது
பாடம் : 26
ஃபஜ்ர் தொழுகையின் சிறப்பு.
573 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முழுநிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, அறிந்து கொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல்' அல்லது குழப்பமடையாமல்' காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத் தில் (வெளிவேலைகள், உறக்கம் உள்ளிட்டவை யால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் (அதாவது அந்நேரங்களில் தொழுங்கள்). என்று கூறிய பின், சூரியன் உதய மாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39 ஆவது) இறைவசனத்தை ஓதி(க் காட்டி)னார்கள்
574 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பக-ன் இரு ஓரங்களிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இருநேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.
இதை அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ் அல் அஷ்அரீ-ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 27
ஃபஜ்ர் தொழுகையின் நேரம்.
575 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் நோன்பு நோற்க உணவருந்தி (சஹர் செய்து)விட்டுப் பின்னர் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்தோம்.
இதை ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (ஸைத் ளரலின அவர்களிடம்), உணவு உட் கொண்டு (சஹர் செய்து முடிப்ப)தற்கும் தொழுகைக்(காக இப்னு உம்மி மக்தூம் ளரலின அவர்கள் பாங்கு செல்வதற்)கு மிடையே எவ்வளவு நேரம் இடை வெளி இருந்தது? என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) அளவு நேரம் (இடைவெளி இருந்தது) என்று பதிலளித்தார்கள்.
576 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (ஒன்றாக நோன்பு நோற்க) சஹர் உணவு உட் கொண்டனர். அவர்கள் இருவரும் சஹர் செய்து முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து (சென்று) தொழுதார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், அவர்கள் இருவரும் சஹர் உணவு உட் கொண்டு முடிப்பதற் கும் தொழுகையில் ஈடுபடுவதற்குமிடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது? என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி இருந்தது) என்று பதிலளித்தார்கள்.
577 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் குடும்பத்தாருடன் நோன்பு நோற்க (சஹர்) உணவருந்திவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் (வைகறைத்) தொழுகையில் கலந்துகொள்வதற்காக அவசர (மாகப் புற)ப்படுவேன்.
578 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர் களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது.
பாடம் : 28
ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாகக்கட்டும்).
579 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர் சுப்ஹுத் தொழுகையை அடைந்துகொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர் அஸ்ர் தொழுகையை அடைந்துகொள்கிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
பாடம் : 29
பொதுவாகத் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாக்கட்டும்).
580 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் அந்தத் தொழுகையை அடைந்துகொள்கிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 30
ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சூரியன் உயரும் வரை தொழுவது (கூடாது).
581 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (உயர்ந்து) சுடர்விடும் வரை தொழுவதையும், அஸ்ர் தொழுகைக்குப் பின்னால் சூரியன் மறையும் வரைத் தொழுவதையும் தடை செய்தார்கள் என (மார்க்கப் பற்று, வாய்மை ஆகியவற்றில்) திருப்திக்குரிய சிலர் என்னிடம் உறுதிபடக் கூறினர். அவர்களில் என்னிடம் மிகவும் திருப்திக்குரியவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
582 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
583 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரிய வட்டத்தின் ஒரு பகுதி தோன்றும் போது (தொழாமல்), அது (முழுமையாக) உயரும் வரைத் தொழுவதை பிற்படுத்துங்கள். சூரிய வட்டம் மறையும் போது அது (முழுமையாக) மறையும் வரை தொழுகையை பிற்படுத்துங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
584 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு வியாபார முறைகளையும், இரு ஆடை அணியும் முறைகளையும், இரண்டு நேரத்தில் தொழுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும் வரையிலும், அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறையும் வரையிலும் தொழவேண்டாமெனத் தடை செய்தார்கள்.
ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால்கட்டியபடி) உட்கார்ந்திருப்ப தற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். முனாபதா, முலாமஸா எனும் இரண்டு வியாபார முறைகளையும் தடை செய்தார்கள். ( காண்க : ஹதீஸ்எண்கள் : 367, 368)
பாடம் : 31
(அஸ்ர் தொழுகைக்குப் பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தை தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
585 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து தொழவேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
586 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறைவும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
587 ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையை தொழக் கண்டதில்லை. (ஏன், நீங்கள் தொழுதுவரும்) அந்த இரு ரக்அத்களைத் தொழவேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என முஆவியா (ரலி) கூறினார்கள். அதாவது, அஸ்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவதை தடை செய்தார்கள்.
588 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு நேரத்தில் தொழ வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்:
1) ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக உதயமாகும்) வரையிலும்.
2) அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து (முழுமையாகச்) சூரியன் மறையும் வரையிலும்.
பாடம் : 32
ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளுக்குப் பின்பு தவிர மற்ற எந்த நேரத்திலும் தொழலாம்.
இது குறித்து உமர் (ரலி), இப்னு உமர் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
589 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தோழர்களை எவ்வாறு (எந்நேரத்தில்) தொழக் கண்டேனோ அவ்வாறே நான் தொழு(து வரு)கின்றேன். இரவிலும் பக-லும் தாம் விரும்பியதைத் தொழும் எவரையும் நான் தடுக்க மாட்டேன். ஆயினும் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது.
பாடம் : 33
விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது.
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்) என்றும் கூறினார்கள்.
590 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்தவன் மீதாணையாக! (அஸ்ர் தொழுகைக்குப் பின்னுள்ள அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த-இரண்டு ரக்அத்களை அமர்ந்து கொண்டே தொழுவார்கள்.நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால் பள்ளிவாசலில் அதைத் தொழ மாட்டார்கள். தம் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சியதே இதற்குக் காரணம். தம் சமுதாயத்தாருக்கு இலேசாக்குவதையே விரும்புவார்கள்.
591 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்), என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு சஜ்தாக்கள் (ரக்அத்கள்)தொழுவதை என்னிடம் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் விட்டதில்லை.
592 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு தொழுகைகளை இரகசியமாகவும் நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை; பகிரங்கமாகவும் விட்டுவிடவில்லை. (அவை:) சுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
593 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் எந்த நாளில் என்னிடம் (என்வீட்டிற்கு) வந்தாலும் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
பாடம் : 34
மேகமூட்டமுள்ள நாளில் தொழுகையை விரைவாக (ஆரம்ப நேரத்திலேயே) நிறைவேற்றுவது.
594 அபுல் மலீஹ் (ஆமிர் பின் உசாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேகமூட்டமுடைய ஒரு நாளில் புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்களுடன் (ஒரு போரில்) நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்திலேயே) நிறைவேற்றுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் (அமல்கள்) அழிந்து விட்டன என்று கூறியுள்ளார்கள் என்றார்கள்.
பாடம் : 35
நேரம் சென்ற பிறகும் பாங்கு சொல்வது.
595 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்று கொண்டிருந்தோம். அப்போது மக்களில் சிலர், அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்யலாமே! என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன் என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், உங்களை நான் விழித்தெழச் செய்கிறேன் என்று கூறினார்கள். எனவே அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக் கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக் கொண்டிருந்த போது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் (முதன் முதலில்) உறக்கத்திலிருந்து விழித்தார்கள். உடனே, பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். இது போன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் தான் நாடும் போது உங்கள் உயிர்களை கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும் போது உங்களிடம் திருப்பித் தருகின்றான் என்று கூறிவிட்டு, பிலால்! எழுந்து, பாங்கு சொல்லி தொழுகைக்கு மக்களை அழைப்பீராக! என்று கூறினார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள்.
பாடம் : 36
(தொழுகையின்) நேரம் சென்ற பிறகு மக்களுக்கு ஒருவர் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) நடத்துவது.
596 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர் களை ஏசிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கசுத்தி (உளூச்) செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்).
பாடம் : 37
ஒரு தொழுகையை ஒருவர் தொழ மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதை அவர் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டியதில்லை.
ஒருவர் ஒரு தொழுகையைத் தொழாமல் இருபது ஆண்டு இருந்துவிட்டாலும் (விடுபட்ட) அந்தத் தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் திரும்பத் தொழ வேண்டியதில்லை என இப்ராஹீம் (பின் யஸீத் அந்நகஈ-ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
597 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக. (20:14)
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள வஅகிமிஸ் ஸலாத்த -திக்ரீ' எனும் வாக்கியத்தை) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் வ அகிமிஸ் ஸலாத்த -த் திக்ரீ' என்று ஓதக்கேட்டேன்.
இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமி ருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 38
தவறிய தொழுகைகளை முந்தையது அதற்கடுத்தது என (ஒன்றன் பின் ஒன்றாகத்) தொழுவது.
598 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது உமர் (ரலி) அவர்கள் (தங்களுடன் போரிட்ட குறைஷி) இறை மறுப்பாளர்களை ஏசிக் கொண்டே (வந்து), சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழமுடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள். எனவே, நாங்கள் புத்ஹான்' எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின்னர் (எங்களுக்கு இமாமாக நின்று) நபி (ஸல்) அவர்கள் (முதலில் அஸ்ர் தொழுகையைத்) தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்.
பாடம் : 39
இஷாத் தொழுகைக்குப் பிறகு (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பது வெறுக்கத்தக்க செயலாகும்.
599 அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (நள்லா பின் உபைத்-ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, கடமையான தொழுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு (எந்நேரத்தில்) தொழுவார்கள்? என்று கேட்டார்கள்.அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
-நீங்கள் முதல்தொழுகை' என்று அழைக்கக் கூடிய- நண்பகல் (லுஹ்ர்) தொழுகையை சூரியன் (நடு வானிலிருந்து மேற்கு நோக்கி) சாயும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்.
(பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவார். சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும்.
-மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷாத் தொழுகையைப் பிற்படுத்துவதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள்.
எங்களில் ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவிற்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறைத் தொழுகை (சுப்ஹுத் தொழுகை)யை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை ஓதுவார்கள்
பாடம் : 40
இஷாத் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சட்டங்கள் நல்ல விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது.
600 குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள் இரவு) ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) (அவர்களிடம் மார்க்கக் கல்வி பயில) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டி ருந்தோம். அவர்கள் (வழக்கத்திற்கு மாறாக அன்று) எங்களிடம் தாமதமாக வந்தார்கள். எந்த அளவிற்கென்றால், (வழக்கமாக அவர்கள் எங்களிடம் அமர்ந்து விட்டு) எழுந்து செல்லும் நேரமும் நெருங்கியது. அப்போது அவர்கள் வந்து, எம் இந்த அண்டை வீட்டர் எம்மை அழைத்தனர் (அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது) என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்:
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஓர் (நாள்) இரவில் (இஷாத் தொழுகைகைக்காக) நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவு நேரம் ஆகும் போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களிடம் உரையாற்றினார்கள் அப்போது அவர்கள் அறிந்து கொள்ளுங்கள்: (உங்களைத் தவிர மற்ற) மக்கள் அனைவரும் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஓர் தொழுகையில் உள்ளீர்கள் (என்றே கருதப்படும்) என்று கூறினார்கள்.
தொடர்ந்து ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் போதும் மக்கள் ஓர் நன்மையிலேயே இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர் குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களில் உள்ளதாகும்.
601 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் அந்திமக் காலத்தில் (ஒரு நாள்) இஷாத் தொழுகை நடத்தினார்கள். சலாம் கொடுத்(து தொழுகையை முடித்)ததும் எழுந்து நின்று, இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக்கூடியவர்களில் யாரும் அப்போது எஞ்சியிருக்க  மாட்டார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றை மக்கள் தவறாக விளங்கிக் கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப் பின் உலகம் அழிந்துவிடும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால், இன்று பூமி மேல் இருக்கக் கூடியவர்களில் (யாரும்) எஞ்சியிருக்க  மாட்டார்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதன் நோக்கம், அந்தத் தலைமுறை (நூறு ஆண்டுகளுக்குப் பின்) முடிவு பெற்றுவிடும்' என்பது தான் .
பாடம் : 41
விருந்தினருடனும் குடும்பத்தாருடனும் இரவில் பேசிக் கொண்டிருப்பது.
602 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்கள் வறிய மக்களாக இருந்தார்கள். (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால் (அவர் தம்முடன்) ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும் என்று கூறினார்கள்.
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப்பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள்.
(என் தந்தை வீட்டிற்கு வந்த போது வீட்டில்) நானும் (அப்துர்ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணிபுரிந்து வந்த பணியாளரும்தாம் இருந்தோம்.
-இதன் அறிவிப்பாளரான அபூஉஸ்மான் (அப்துர்ரஹ்மான் பின் மல்) அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
என் மனைவியும்... (இருந்தார்)' என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்கு (உறுதியாகத்) தெரியவில்லை (சந்தேகமாகவே இருக்கிறது).
அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷாத் தொழுகை நடைபெறும் வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை காத்திருந்துவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள். அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், உங்கள் விருந்தாளிகளை' அல்லது உங்கள் விருந்தாளியை' (உபசரிக்க வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், விருந்தினருக்கு உணவளித்தாயா? என்று கேட்டார்கள்.
அதற்கு என் தாயார், நீங்கள் வரும்வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் (உண்ண மறுத்து)விட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.
(என் தந்தை அபூபக்ர் ளரலின அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், விவரங்கெட்டவனே!-(என்றழைத்து என்னை) உன் காதறுந்து போக!' என்று கூறி ஏசினார்கள்.
(அவர்கள் உணவருந்த தாமதமானதற்கு அவர்களே காரணம் என்று அறிந்து கொண்ட போது) நீங்கள் தாராளமாக உண்ணுங்கள் என்று (தம் விருந்தினரிடம்) கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, என்னை எதிர் பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு போதும் இதை உண்ணப் போவதில்லை என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (பாத்திரத்திலிருந்து) ஒரு கவளத்தை எடுக்கும் போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் அனைவரும் பசியாறினர். அப்போது அந்த உணவு முன்பிருந் ததைவிட கூடி இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகக் காணப்பட்டது. உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! என்ன இது? என்று வினவ, அதற்கு என் தாயார், எனது கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இது இப்போது முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், (நான் ஒரு போதும் இதை உண்ண மாட்டேன் என்று என்னை சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான் என்று கூறிவிட்டு அதிலிருந்து இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று.
எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பனினிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். (அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்) அப்போது அவர்கள் அனைவரும் அதில் உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites