அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

10-பாங்கு - B


பாடம் : 53
(ருகூஉ, சஜ்தாவில்) இமாமுக்கு முந்தித் தலையை உயர்த்துவது குற்றமாகும்.
691 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக் கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவ மாகவோ அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 54
அடிமையும், விடுதலை செய்யப்பட்ட அடிமையும் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர்களுடைய அடிமையான தக்வான் என்பார் (தலைமை தாங்கித் தொழுவித்தால்) குர்ஆனைப் பார்த்தே ஓதுவார்.
தவறான உறவில் பிறந்தவன், கிராமவாசி, பருவடையாத சிறுவன் ஆகியோரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) அல்லாஹ்வுடைய வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று (பொதுப்படையாகவே) கூறியுள்ளார்கள்.
692 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை யிலிருந்த சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்கு தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.
693 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலர்ந்த திராட்சை போன்றத் தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற அடிமையொருவ)ர் உங்களுக்குத் தலைவராகக்கப்பட்டாலும் அவரது சொல்லுக்கு செவிசாயுங்கள்; அவருக்குக் கீழ்படியுங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 55
தலைமைத் தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர் (தொழுகையை) முழுமைப் படுத்தாவிட்டாலும் அவருக்கு பின்னால் இருப்பவர்கள் (அதை) முழுமைப்படுத்த வேண்டும்.
694 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இமாமாக நியமிக்கப்படுகின்ற) அவர்கள் உங்களுக்காகத் தொழுகை நடத்துகிறார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கு நன்மை உண்டு; அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் தவறு செய்வார் களானால் (நீங்கள் சரியாகத் தொழுவதற்காக) உங்களுக்கு நன்மை உண்டு; (தவறிழைத்ததற்காக) அவர்களுக்கு தீமை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 56
குழப்பக்காரர், (மார்க்க அடிப்படையற்ற) நூதனக் கருத்துக்கள் உடையவர் (பித்அத் வாதி) ஆகியோர் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.
நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனுடைய நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
695 உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று, நீங்கள் மக்களின் இமாம் (தொழுகை நடத்துபவர்) ஆவீர்கள். உங்களுக்கு சோதனை ஏற்பட்டிருப்பதை (முற்றுகையிட்டிருப்பதை) நாங்கள் காண்கிறோம். இந்நிலையில் (இன்று) எங்களுக்கு குழப்ப இமாம் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமா என்ற அச்சத்தில்) மனவேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?) என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், தொழுகை, மக்கள் செய்கின்ற செயல்களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளிலிருந்து நீங்கள் ஒதுங்கி விடுங்கள் என்று சொன்னார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
தவிர்க்க முடியாத காரணமில்லாமல் (ஆணும் பெண்ணுமல்லாத) அ-க்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம்.
696 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், (உங்களுக்குத் தலைவராக்கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும் அவரது சொல்லுக்கு நீங்கள் செவிசாயுங்கள்; அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று சொன்னார்கள்.
பாடம் : 57
இரண்டுபேர் (மட்டும் சேர்ந்து) ஜமாஅத்தாக தொழும் போது பின்பற்றித் தொழுபவர் தலைமைத் தாங்கித் தொழுபவருக்குச் சமமாக அவருக்கு நேராக வலப் பக்கத்தில் நிற்க வேண்டும்.
697 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டி ருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது (மிதமான) குறட்டைச் சப்தத்தை' அல்லது லேசான குறட்டைச் சப்தத்தை' நான் கேட்குமளவிற்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்
பாடம் : 58
ஒரு மனிதர் இமாமுக்கு இடப் பக்கம் (போய்) நிற்க, இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் (தமது கையால் இழுத்து) வலப் பக்கத்தில் நிறுத்துவதால் இருவரின் தொழுகையும் பாழாகிவிடாது.
698 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயாரும், நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் வீட்டில் ஓர் இரவு) உறங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் (சிறிது நேரம் உறங்கி எழுந்து) உளூ' செய்துவிட்டு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் (தொழுகையில் இருந்தவாறே) என்னைப் பிடித்து தமது வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் பதி மூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டைவிடும் அளவிற்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும் போது குறட்டைவிடும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள்.- பிறகு தொழுகை அறிவிப்பாளர் அவர்களிடம் வந்(து தொழுகை நடத்த அவர்களை அழைத்)த போது (பள்ளிக்குப்) புறப்பட்டுச் சென்று (புதிதாக) உளூ செய்யாமலேயே (சுப்ஹுத் தொழுகையை) தொழு(வித்)தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் ஹர்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை நான் புகைர் (பின் அப்துல்லாஹ் அல்அஷஜ்-ரஹ்) அவர்களிடம் அறிவித்த போது அவர்கள், இவ்வாறே ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப் பட்ட அவர்களின் முன்னாள் அடிமையானன குரைப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.
பாடம் : 59
தலைமை தாங்கித் தொழுவிக்கும் எண்ணமில்லாமல் (தனியாகத்) தொழுது கொண்டிருப்பவரை மற்றவர்கள் பின்பற்றித் தொழுதால் (தொழுகை நிறைவேறும்).
699 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தம் வலப் பக்கம் நிறுத்தினார்கள்.
பாடம் : 60
இமாம் தொழுகையை நீட்டித் தொழுது கொண்டிருக்கும் போது (அவசியத்) தேவை ஏதும் ஒருவருக்கு இருந்தால் அவர் (கூட்டுத் தொழுகையிலிருந்து விலகிச்) சென்று தனியே தொழுதுகொள்வது (செல்லும்.)
700 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு தலைமை தாங்கி (அந்தத் தொழுகையையே மீண்டும்) தொழுவிப்பார்கள்.
701 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்கூறியதாவது :
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத்
(ரலி) அவர்கள் அந்த மனிதரை கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் ளரலினஅவர்களிடம்)(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
 (நபி ளஸல்ன அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென) என் நினைவிலில்லை.
பாடம் : 61
இமாம் தொழுகையின் நிலை'யில் சிறிது நேரமே நிற்பதும் (அதே சமயம்) குனிவு, சிரவணக்கம் (ருகூஉ, சஜ்தா) ஆகியவற்றை பூரணமாக நிறைவேற்றுவதும்.
702 அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி ளஸல்ன அவர்களிடம் வந்து), அல்லாஹ்வின் மீதாணையாக, அல்லாஹ் வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன் (ஜமாஅத்திற்கு செல்வ தில்லை.) என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின் போது கோபப்பட்டதை விடக் கடுமை யாகக் கோபப்பட்டு நான் ஒரு போதும் கண்ட தில்லை. பிறகு அவர்கள், (மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள் சிலரும் உள்ளனர். ஆகவே, உங்களில் எவர் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)கட்டும். ஏனெனில் (பின் பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று சொன்னார்கள்.
பாடம் : 62
தனித்துத் தொழுபவர் விரும்பிய அளவுக்குத் தொழுகையை நீட்டிக் கொள்ளலாம்.
703 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது சுருக்கமா(கத் தொழுவி)க் கட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்களும், நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும் போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 63
நீண்ட நேரம் தொழுவிக்கும் தம் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது.
தொழுகையை நீட்டித் தொழுவித்த தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மா-க் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், அருமை மகனே! எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவித்துவிட்டீரே! என்று (கடிந்து) கூறினார்கள்.
704 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் ஃபஜ்ர் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன் என்று (முறையிட்டுக்) கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்கு கோபப்பட்டதைவிடக் கடுமையாக வேறு எந்த இடத்திலும் கோபத்துடனிருக்க நான் கண்டதில்லை பிறகு அவர்கள், மக்களே! உங்களில் வெறுப்பூட் டும் சிலரும் உள்ளனர். ஆகவே உங்களில் எவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துகிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட் டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் பலவீனர் களும், முதியவர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று கூறினார்கள்
705 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இரு நீரிறைக்கும் ஒட்டகங் களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்த போது முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷாத் தொழுகை) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தமது ஒட்டகத்தைவிட்டுவிட்டு முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகை யில் சேர்ந்)தார். அப்போது முஆத் (ரலி) அவர்கள் (நீண்ட அத்தியாயங்களான) அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை அல்லது அந்நிஸா (4ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச் ) சென்றுவிட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரிய வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஆத் (ர) அவர்களைப் பற்றி அவர் நபியவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் ளரலின அவர்களை வரவழைத்து) முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்? என்று (மூன்று முறை) கேட்டார்கள். சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்ஸ வளுஹாஹா (91), வல்லை- இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா? ஏனெனில் உமக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் தொழுகின்றனர் என்றும் சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(ஏனெனில் உமக்குப் பின்னால்...எனத் தொடங்கும்) கடைசி வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல் (அறிவிப்பாளரின் உரை அல்ல)'என்றே நான் கருதுகிறேன்
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றோர் அறிவிப்பில், முஆத் (ரலி) அவர்கள் அந்த இஷாத் தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்' என்று (மட்டும்) இடம் பெற்றுள்ளது.
பாடம் : 64
தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது.
706 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்க மாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரண மாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள்.
பாடம் : 65
(தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டி ருப்போரின்) குழந்தை அழுவதைக் கேட்டு (தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர்) தொழுகையைச் சுருக்கமாகத் தொழுது முடிப்பது.
707 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
இதை அபூகத்தாதா அல்ஹர்ஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
708 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் (அதே சமயம் எதுவும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிக்கக் கூடிய வேறு எந்த இமாமுக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை அழுவதை அவர்கள் கேட்க நேர்ந்தால் அக்குழந்தையின் தாயாருக்கு சஞ்சலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.
709 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் செவியேற்பேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால் என் தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
710 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை அழுவதைச் செவியேற்பேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கண் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால் நான் (என் தொழுகையை) சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 66
(இமாமுக்குப் பின்னால்) தொழுதவர், பிறகு (அதே தொழுகையை அவரே இமாமாக நின்று) மற்றவர்களுக்குத் தொழுவிப்பது.
711 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் (பின் ஜபல்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். பிறகு தம் சமுதாயத்தாரிடம் சென்று (அதேத் தொழுகையை) அவர்களுக்கு தலைமைத் தாங்கித் தொழுவிப் பார்கள்.
பாடம் : 67
இமாம் தக்பீர் சொல்வதை மக்களுக்குக் கேட்கும் விதமாக ஒருவர் (உரத்த குரலில்) கூறுவது.
712 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போய்விட்டார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு(க் கொண்டு அவர்கள் புறப்ப)ட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபி (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்
பாடம் : 68
இமாமைப் பின் பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள் தொழுவது.
நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் இருந்தவர்களிடம்) நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும் என்று சொன்னதாக அறிவிக்கப்படுகிறது.
713 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோய் அதிகரித்துவிட்ட போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுவதால்) அவர் களால் மக்களுக்குக் கேட்கும்விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே! என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் போசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உடல்நலம் சற்றுத் தேறக் கண்டார்கள். எனவே, இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி, தம்மிரு கால்கள் தரையில் பதித்து (அவற்றை சரிவர ஊன்ற முடியாமல்) கோடிட்டபடி வந்து பள்ளிக்குள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் போனார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி (அங்கேயே நில்லுங்கள் என) சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றபடி தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்தபடி தொழுது கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.
பாடம் : 69
இமாமுக்கு (தம் தொழுகை பற்றி) சந்தேகம் ஏற்பட்டால் (பின்பற்றித் தொழுத) மக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளலாமா?
714 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையொன்றை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். அப்போது அவர்களிடம் துல்யதைன்' என்பவர், தொழுகை (யின் ரக்அத்) சுருக்கப்ட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துல்யதைன் சொல்வது சரிதானா? என்று (மக்களிடம்) கேட்க, மக்கள் ஆம்' என்று பதிலளித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (முன்னேசென்று விடுபட்ட) இன்னும் இரண்டு ரக்அத்களை தொழு(வித்)துவிட்டு சலாம்' கொடுத்தார்கள். பிறகு தக்பீர்' கூறி (வழக்கமாகத்) தாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்வது போன்று' அல்லது (அதைவிட) நீண்ட நேரம்' (மறதிக்குரிய) சிர வணக்கம் செய்தார்கள்
715 அபூஹுûரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத் தொழுவித்தார்கள். அப்போது (அவர்களிடம்), நீங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழு(வித்)தீர்கள் என்று சொல்லப்பட்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (இன்னும்) இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் (மறதிக்குரிய) இரு சிரவணக்கங்கள் (சஜ்தா) செய்தார்கள்.
பாடம் : 70
தொழுகையில் இமாம் அழுதால்... (தொழுகை பாழாகிவிடுமா?)
அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த நான், என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின் றேன் எனும் (12:86ஆவது) வசனத்தை (தொழுகை யில்) ஓதியபடி உமர் (ரலி) அவர்கள் தேம்பியழு வதை செவியுற்றேன்.
716 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயிலிருந்த போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்யமுடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மக்களிடம்) கூறினார்கள். நான் (உமர் ளரலின அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே உமர் (ரலி) அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்கு தொழுகை நடத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிறுத்து! (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை என்று கூறினார்.
பாடம் : 71
இகாமத்' கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது.
717 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடு வான்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
718 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள் ளுங்கள். ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
பாடம் : 72
வரிசைகளை ஒழுங்குபடுத்தும் போது இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.
719 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள்.
பாடம் : 73
முதல் வரிசை(யின் சிறப்பு).
720 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தண்ணீரில்) மூழ்கி இறந்தவர், கொள்ளை நோயினால் இறந்தவர், வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதியால் இறந்தவர், (கட்டட) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் ஆகியோர் உயிர்த்தியாகிகள் ஆவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
721 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையை) ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் விரைந்து வருவார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள (மகத்துவத்)தை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தேனும் (கூட்டுத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 74
வரிசையை நேராக்குவதும் தொழுகையை பூரணமாக்குவதேயாம்.
722 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பின்பற்றப்படுவதற்காகவே இமாம் (தொழுகை நடத்துபவர்) ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவருக்கு நீங்கள் முரண்படாதீர்கள்! அவர் குனி(ந்து ருகூஉ செய்)யும் போது நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்! அவர் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறும் போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து' (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள்! அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
723 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 75
தொழுகை வரிசைகளை நிறைவு செய்யாமலிருப்பது குற்றம்.
724 புஷைர் பின் யசார் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் (பஸ்ராவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாறாக வித்தியாசமாக எதை நீங்கள் எங்களிடம் காண்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், நீங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்வதில்லை என்பதைத் தவிர வேறெதையும் நான் உங்களிடம் வித்தியாசமாகக் காணவில்லை என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் அனஸ் பின் மா-க் (ரலி) அவர் களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 76
தோள் புஜத்துடன் தோள் புஜத்தையும் பாதத்துடன் பாதத்தையும் சேர்த்துக் கொண்டு (தொழுகை) வரிசையில் நிற்பது.
(தொழுகையில் நிற்கும் போது) எங்களில் ஒருவர் தமது கணுக்காலை தம் அருகிலிருப்பவரின் கணுக்காலுடன் சேர்த்துக்கொள்வதை நான் பார்த்துள்ளேன் என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:
725 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துட னும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள்.
பாடம் : 77
இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வருடைய தொழுகை நிறைவேறவே செய்யும்.
726 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவு (என் சிறிய தாயார் மைமூனா ளரலின அவர்களின் வீட்டில்) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அப்போது என் பின் தலையைப் பிடித்து என்னை தம் வலப் பக்கத்தில் நிறுத்தி தொழுதுவிட்டு, (படுத்து) உறங்கினார்கள். (ஃபஜ்ர் நேரமான போது) அவர்களிடம் தொழுகைஅறிவிப்பாளர் (அவர்களை தொழுகைக்காக அழைக்க) வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே தொழுதார்கள்
பாடம் : 78
(ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் பெண்கூட ஒருவரிசை என்றே கருதப்படுவார்.
727 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள்.
பாடம் : 79
பள்ளிவாச-ன் வலப் புறத்தையும் இமாமின் வலப் புறத்தையும் தேர்ந்தெடுப்பது.
728 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார் மைமூனா ளரலின அவர்களின் வீட்டில்) ஓர் இரவில் நபி (ஸல்) (அவர் களைப் பின்பற்றி) அவர்களுக்கு இடப் புறமாக நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது கையை' அல்லது எனது புஜத்தை'ப் பிடித்து (அப்படியே என்னை நகர்த்தி) தம் தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். அப்போது என்னை தமது கரத்தினால் பிடித்து தம் பின் பக்கமாகவே கொண்டு சென்றார்கள்.
பாடம் : 80
இமாமுக்கும் மக்களுக்குமிடையே ஏதேனும் சுவரோ அல்லது தடுப்போ இருந்தால் (கூட்டுத் தொழுகையைப் பாதிக்குமா?)
ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
உனக்கும் உன் இமாமுக்குமிடையே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தாலும் (அவரைப் பின் பற்றி) நீ தொழுவதில் தவறில்லை.
அபூமிஜ்லஸ் லாஹிக் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இமாமுடைய தக்பீர் செவியில் விழுமானால் -இருவருக்கிடையே சுவரோ நடைபாதையோ இருந்தால்கூட- அந்த இமாமைப் பின்பற்றலாம்.
729 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்த போது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசிய போது, இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை) என்று கூறினார்கள்.
பாடம் : 81
இரவுத் தொழுகை.
730 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக்கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக்கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.
731 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்த போது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகை களை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள் ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 82
தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவது கட்டாயம்.
732 அனஸ் பின் மா-க் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்த போது (கீழே விழுந்து) அவர்களது வலப் பாகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அன்றைய தினம் அவர்கள் (கடமையான) ஒரு தொழுகையை உட்கார்ந்தபடியே தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். பிறகு அவர்கள் சலாம் கொடுத்(து முடித்)த போது (பின்வருமாறு) கூறினார்கள்: இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் (குனிந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்' (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ரப்பனா வல(க்)கல் ஹம்து' (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள்.
733 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் அவர்களுக்கு (உட-ன் வலப் பாகத்தில்) சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. (அன்றைய தினம்) அவர்கள் எங்களுக்கு உட்கார்ந்தபடியே தொழுகை நடத்தினார்கள். நாங்களும் உட்கார்ந்தபடியே (அவர்களுக்குப் பின்னால்) தொழுதோம். தொழுது முடித்ததும் அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்'* அல்லது (பின்பற்றப்படுவதற் காகவே) இமாம் இருக்கிறார்'. அவர் தக்பீர் (அல்லாஹ்ý அக்பர்' என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ்ý அக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவிலிருந்து நிமிரும் போது) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' என்று கூறினால், நீங்களும் ரப்பனா ல(க்)கல் ஹம்து' என்று கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்.
734 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஊ செய்)யுங்கள்; அவர் சமிஅல்லாஹு
-மன் ஹமிதஹ்' என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வல(க்)கல் ஹம்து' எனச் சொல்லுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 83
சரியாக, ஆரம்பத் தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்கும் போது இரு கைகளையும் உயர்த்துவது.
735 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (;கைகளை உயர்த்த  மாட்டார்கள்).
பாடம் : 84
ஆரம்பத் தக்பீரின்போதும், ருகூஉவிற்குச் செல்லும் போதும், (ருகூவிலிருந்து) உயரும் போதும் இருகைகளையும் உயர்த்துவது.
736 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றால் தம் தோள்களுக்கு நேராக இருக்கும்படி தம்மிரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். ருகூஉவிற் காகத் தக்பீர் கூறும் போதும் இவ்வாறு அவர்கள் செய்வார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து (நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்' என்றும் கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும், சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
737 அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழும் போது (முதலில்) தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ருகூஉவிற்குச் செல்ல நாடிய போது தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.
பாடம் : 85
கைகளை எந்த அளவு உயர்த்த வேண்டும்?
அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் பின் சஅத் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்த போது நபி (ஸல்) அவர்கள் (தொழும் போது)தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தினார்கள் என்று கூறினார்கள்.
738 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி தொழுகையைத் துவக்கினார்கள். தக்பீர் கூறும்போதே தம் கைகளை உயர்த்தி தோள்களுக்கு நேராக ஆக்கினார்கள். ருகூஉவிற்காக அவர்கள் தக்பீர் கூறிய போதும் அதைப் போன்றே செய்தார்கள். சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்' என்று கூறிய போதும் அதைப் போன்றே செய்தார்கள். ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்றும் கூறினார்கள். சஜ்தா (சிரவணக்கம்) செய்யும் போது அவ்வாறு செய்ய மாட்டார்கள்; சஜ்தாவிலிருந்து தம் தலையை உயர்த்தும் போதும் (அவ்வாறு) செய்ய மாட்டார்கள்.
பாடம் : 86
இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்துவது.
739 ளஇப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை யானன நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்' எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும் போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்தள்ளது.
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் சுருக்கமாக இது இடம்பெற்றுள்ளது..
பாடம் : 87
வலக் கையை இடக் கையின் மீது வைப்பது.
740 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழும் போது ஒருவர் தம் வலக் கையை தம் (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன் கையின் மீது வைக்கவேண்டுமென கட்டளையிடப்பட்டனர்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இது நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிப்பாளர்தொடர் சென்று முடியும் ஹதீஸ் (மர்ஃபூஉ) என்றே நான் அறிகிறேன்.
பாடம் : 88
தொழுகையில் உள்ளச்சத்துடனும் பணிவுடனும் இருக்கவேண்டும்.
741 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடைய குனிவும் (ருகூவும்) உங்களுடைய பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
742 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
 ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு பின்புறமாக' அல்லது என் முதுகுக்குப் பின்புற மாக' நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக்(ரலி) அறிவிக்கி றார்கள்.
பாடம் : 89
முதல் தக்பீர் கூறிய பின் ஓத வேண்டியவை.
743 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...' என ஓதியே தொழுகையை ஆரம்பிப் பார்கள்.
744 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸர்ஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சிறிது நேரம்' என்பதைக் குறிக்க) அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹுனையத்தன்' எனும் சொல்லைக் கையாண்டதாகவே நான் கருதுகிறேன்.-
(தொடர்ந்து) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்' என்று கூறுகிறேன் என்றார்கள்.
(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)
பாடம் : 90
745 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து விட்டுப் பிறகு (சஜ்தாவிற்குச் சென்று) நீண்ட நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பின்பு (முதல் சஜ்தாவிலிருந்து தலையை) உயர்ந்து விட்டுப் பிறகு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள்.
பிறகு (இரண்டாம் ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து தலையை) உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு (ருகூவிலிருந்து தலையை) உயர்த்தி சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் (தலையை) உயர்த்திவிட்டு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அவர்கள் கூறினார்கள்:
(நான் தொழுது கொண்டிருந்த போது) என்னை சொர்க்கம் நெருங்கி வந்தது; எனக்கு சக்தியிருந்திருக்கு மானால் அதன் பழக்குலைகளில் ஒன்றை நான் (பறித்து) உங்களிடம் தந்திருப்பேன். என்னை நரகமும் நெருங்கி வந்தது. எந்த அளவிற்கென்றால், இறைவா! நானும் இ(ந்த நரகத்திலிருப்ப)வர்களுடன் இருக்கப் போகிறேனா? என்று நான்(மருண்டு போய்க்)கேட்டேன். அ(ந்த நரகத்)தில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூணை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது. இவளுக்கு என்ன நேர்ந்தது (ஏன் இவள் இவ்வாறு வேதனை செய்யப்படுகிறாள்)? என்று நான் கேட்டேன். அதற்கு அ(ங்கிருந்த வான)வர்கள், இந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை இந்தப் பெண் அடைத்துவைத்திருந்தாள். அதற்கு தானும் உணவளிக்க வில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை என்று பதிலளித்தனர்.
பாடம் : 91
தொழும் போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்தலாமா?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்த போது, நான் பின்னே செல்வது போன்று என்னை நீங்கள் கண்ட போது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்று கூறினார்கள்.
(குறிப்பு: விரிவாக விவரம் அறியக் காண்க: பாகம்-2, ஹதீஸ்-1213)
746 அபூமஅமர் (அப்துல்லாஹ் பின் சக்பரா அல்அஸ்தீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள். அ(வர்கள் மெதுவாக ஓது)வதை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, அவர்களது தாடி அசைவதை வைத்து (நாங்கள் அறிந்து கொண்டோம்.) என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
747 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உண்மைக்குப் புறப்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது அவர்கள் ருகூஉவிலிருந்து (தலையை) உயர்த்தி சஜ்தாவுக்குச் சென்றுவிட்டதைப் பார்க்காத வரை நாங்கள் (சஜ்தாவுக்குச் செல்லாமல்) நின்று கொண்டேயிருப்போம்
748 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (அதற்காக) அவர்கள் (சூரிய கிரகணத் தொழுகை) தொழு(வித்)தார்கள். (தொழுகை முடிந்ததும்) மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டி ருக்கையில்) எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே (அது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனக்கு சொர்க்கத்தை எடுத்துக் காட்டப்பட்டது. அதிலிருந்து ஒரு (பழக்) குலையைப் எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் அதை நீங்கள் உண்டிருப்பீர்கள் என்று கூறினார்கள்.
(குறிப்பு: காண்க: பாகம்-5, ஹதீஸ்-5197)
749 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (லுஹ்ர் தொழுகையைத்) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது ஏறி பள்ளிவாச-ன் கிப்லாத் திசையில் சைகை செய்தவாறு
உங்களுக்கு நான் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இந்த (முன்) சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் உருவம் காட்சியளிப்பதைக் கண்டேன். நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று போல் என்றும் நான் கண்டதில்லை என மூன்று முறை கூறினார்கள்.
பாடம் : 92
தொழுது கொண்டிருக்கும் போது வானத்தைப் பார்ப்பது.
750 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சில மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தொழும் போது அவர்கள் வானத்தை நோக்கித் தம் பார்வையை உயர்த்துகின்றனர்! என்று கூறினார்கள். இவ்வாறு செய்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் வன்மையாகவே கண்டித்தார்கள்; இதை விட்டும் அவர்கள் தவிர்ந்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்களுடைய பார்வை பறிக்கப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டார்கள்.
பாடம் : 93
தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்ப்பது.
751 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்ப்பது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அ(வ்வாறு செய்வ)து ஓர் அடியாருடைய தொழுகையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும் என்று கூறினார்கள்.
752 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சதுரமான கறுப்பு நிற ஆடையொன்றை அணிந்து தொழுதார்கள். அதில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (தொழுது கொண்டிருந்த போது அந்த வேலைப்பாடுகளின் பக்கம் தம் கவனம் சென்றுவிடவே,) இதன் வேலைப்பாடுகள் (தொழுகையிலிருந்து) என் கவனத்தை ஈர்த்துவிட்டது. இதை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, (அபூ ஜஹ்மிடமிருக்கும் வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர சாதாரண) ஆடையை என்னிடம் வாங்கிவாருங்கள்! என்று கூறினார்கள்.
பாடம் : 94
ஒருவர் தமக்கு ஆபத்து நேரப்போவதாக உணருகிறார். அல்லது (ஊறுவிளைவிக்கும்) எதையேனும் பார்த்துவிடுகிறார். அல்லது தொழும் திசையில் எச்சிலைக் காண்கிறார் இதுபோன்ற தேவைகளுக்காக தொழுகையில் அவர் திரும்பிப் பார்க்கலாமா?
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
(குறிப்பு: காண்க: இதேபாகம், ஹதீஸ்எண்-684)
753 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு முன் நின்று தொழுவித்துக் கொண்டிருந்த போது பள்ளிவாசலின் கிப்லாத் திசையி(லுள்ள சுவரி)ல் எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டிவிட்டார்கள். தொழுகை முடிந்ததும் (மக்களைப் பார்த்து), உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவரது முகத்துக்கெதிரே இருக்கிறான். எனவே தொழும் போது யாரும் தம் முகத்திற்கெதிரே (கிப்லாத்திசையில்) உமிழவேண்டாம் என்று கூறினார்கள்
754 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் ளரலின அவர்கள் இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்த போது (உடல் நலமில்லாமல் இருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களை திகைப்புள்ளாக்கி விட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:)
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர் களது அறையின் திரையை விலக்கித் தொழுகை யில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அறையிலிருந்து) வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின் வாக்கில் வந்தார்கள். (நபி ளஸல்ன அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தம் (கவனம் சிதறி) தொழுகை குழம்பிப் போகுமோ என எண்ணலாயி னர். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்' என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலே அவர்கள் இறந்தார்கள்.
பாடம் : 95
ஊரிலிருக்கும் போதும் பயணத்தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும் தலைமை தாங்கித் தொழுவிப்பவரும் , பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங்களை) ஓதியாக வேண்டும் என்பதும், எந்தெந்தத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும்? எந்தெந்தத் தொழுகைகளில் (சப்தமின்றி) மெதுவாக ஓதவேண்டும்? என்பதும்.
755 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ரலி) அவர்கள் சஅத்
(ரலி) அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ரலி) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?) என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும் போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே' என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ஒருவரை' அல்லது சிலரை' சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரலி) அவர்கள் குறித்து கூஃபாவாசிகளிடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகளிடம் விசாரனை மேற் கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்ளி வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்த போது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்:
சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்ல மாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட  மாட்டார். தீர்ப்பு அளிக்கும் போது நீதியுடன் நடக்க மாட்டார் என்று (குறை) கூறினார்.
இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன் என்று கூறிவிட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல் ம-க் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது என்று கூறுவார்.
அப்துல் ம-க் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னா(ளி)ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை கிள்ளி அவர்களைத் துன்புறுத்துவார்.
756 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
757 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழுதார். (தொழுது முடிந்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்லிவிட்டு, திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதை விட அழகாக எனக்குத் (தொழத்)தெரியாது. எனவே நீங்களே எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும், தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூவில் (குனிந்ததும் நிமிர்ந்து விடாமல்) (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
758 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவாசிகள் கூறிய புகாருக்கு) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் (கூஃபாவாசிகளான) அவர்களுக்கு மாலைத் தொழுகை(களான லுஹ்ர் அஸ்ர் ஆகிய) இரண்டையும் தொழுவித்துவந்தேன். (நபி-ஸல்) அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை; முதல் இரண்டு ரக்அத்களிலும் நான் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன் என்று (விளக்கம்) கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி நமது எண்ணமும் அதுவே! என்று கூறினார்கள்.
பாடம் : 96
லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும்.
759 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் (அல்ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். (அவ்விரு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள். அஸ்ர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) (அல்ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாத்தையும் வேறு இரு அத்தியாயங் களையும் ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்டநேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள்.
760 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள். அ(வர்கள் (மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டிருந் தீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை வைத்து (அறிந்து கொண்டோம்) என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 97
அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும்.
761 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், அவர்கள் (மெதுவாக) ஓதுவதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடிந்தது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை வைத்து தான்  என்று பதிலளித்தார்கள்.
762 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் (அல் ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாயத்தையும் (அவ்விரு ரக்அத்கள் ஒவ்வொன்றிலும்) மற்றோர் அத்தியாத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள்.
பாடம் : 98
மஃக்ரிப் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும்.
763 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் வல்முர்சலாத்தி உர்ஃபன்' எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நிறைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிடமிருந்து செவியேற்றதாகும் என்று கூறினார்கள்.
764 மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நீங்கள் என் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங் களையே ஓதுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
பாடம் : 99
மஃக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.
765 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்' (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கையில் நான் செவியேற்றேன்.
பாடம் : 100
இஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.
766 அபூ ராஃபிஉ (நுஃபைஉஸ் ஸாயிஃக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழுதேன். அதில் அவர்கள், இதஸ் ஸமாஉன் ஷக்கத்' (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (அதில் சஜ்தா வசனம் வந்ததும்) சஜ்தா (ஓதலுக்குரிய சிரவணக்கம்) செய்தார்கள். ஆகவே அது குறித்து நான் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள், அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் சஜ்தாச் செய்திருக்கிறேன். நான் அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது இறக்கும் வரை) நான் அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்து கொண்டுதானிருப்பேன் என்று கூறினார்கள்.
767 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (98 ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனி'யை ஓதினார்கள்.
பாடம் : 101
இஷாத் தொழுகையில் சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது.
768 அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையை தொழுதேன். அதில் அவர்கள், இதஸ் ஸமாஉன் ஷக்கத்' (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஆகவே நான் (அவர்களிடம்) என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத்திற்காக சஜ்தா செய்தீர்கள்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுத போது) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய) தற்காக சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும் வரை) அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்து கொண்டுதானி ருப்பேன் என்று கூறினார்கள்.
பாடம் : 102
இஷாத் தொழுகையில் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும்.
769 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத் தூனி'யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட அழகிய குரலில்' அல்லது அழகிய ஓதல் முறையில்' வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை
பாடம் : 103
(இஷாத் தொழுகையின்) முத-ரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓத வேண்டும். இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓத வேண்டும்.
770 ஜாபிர் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ரலி) அவர்களிடம், (கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக் காட்டிய முனையைப் பின்பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் உன்மையே கூறினீர்கள். உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்' அல்லது உங்களைப் பற்றி எனது எண்ணமும்' அதுவே என்று சொன்னார்கள்.
பாடம் : 104
ஃபஜ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும்.
(ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் அத்தூர்' (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
771 சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை சூரியன் (நடுவானிலிருந்து மேற்கு வாக்கில்)
சாயும் போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையை தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடி(யிலுள்ள தம் வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும்.
-மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.-
இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை பிற்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டி ருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையை தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தம் அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) இரு ரக்அத்களில்' அல்லது அவற்றில் ஒன்றில்' அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்
772 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்படவேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் (உன் தொழுகை) நிறைவேறிவிடும் ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும்.
பாடம் : 105
சுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுவது.
நபி (ஸல்) அவர்கள் அத்தூர்' (எனும் 56ஆவது) அத்தியாத்தை ஓதித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் (இறையில்லத்தை தவாஃப்) சுற்றிக் கொண்டிருந்தேன் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
773 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உ(க்)காழ்' எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச் செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்த னர். அப்போது அக்கூட்டத்தார்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டனர். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமி டையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள் என்றனர்.
அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்த போது, உகாழ்' சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் நக்லா' எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான்  என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது... என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி வஹி'யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
774 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) மெதுவாக ஓதினார்கள். (ஏனெனில்,) உம் இறைவன் மறப்பவன் அல்லன் (19:64) என்றும் அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
பாடம் : 106
ஒரே ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும், அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும், ஓர் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை மட்டும் ஓதுவதும் (செல்லுமா?)
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் அல்முஃமினூன்' (எனும் 23ஆவது) அத்தியா யத்தை ஓதித் தொழுவித்தார்கள். மூசா (அலை), ஹாரூன் (அலை) பற்றிக் குறிப்பிடும் வசனம்' (23:45) அல்லது ஈசா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படும் வசனம் (23:50) வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. உடனே ருகூஉ செய்துவிட்டார்கள் என அப்துல்லாஹ் பின் சாயிப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
உமர் (ரலி) அவர்கள் (தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்திலிருந்து நூற்றி இருபது வசனங்களை ஓதினார்கள்; இரண்டாம் ரக்அத்தில் (நூறுக்கும் குறைவான வசனங்களுடைய) அல்மஸானீ' அத்தியாயங்களில் ஒன்றை ஓதினார்கள்.
அஹ்னஃப் பின் கைஸ் (ரலி) அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல் கஹ்ஃப்' (எனும் 18ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் யூசுஃப்' (12ஆவது) அத்தியாயத்தை' அல்லது யூனுஸ்' (10ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்விரண்டு அத்தியாயங்களையும் ஓதித் தொழுத போது அவர்களுக்குப் பின்னே தாமும் தொழுததாகவும் அஹ்னஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தொழுகை யின் முதல் ரக்அத்தில்) அல்அன்ஃபால்' (8ஆவது) அத்தியாயத்தில் நாற்பது வசனங்களையும் இரண்டாம் ரக்அத்தில் நடுத்தர (அல்முஃபஸ்ஸல்) அத்தியாயங்களில் ஒன்றையும் ஓதினார்கள்.
இரண்டு ரக்அத்களிலும் ஒரே அத்தியாயத்தை ஒருவர் ஓதுவது அல்லது ஓர் அத்தியாயத்தை (இரண்டாகப் பிரித்து) இரண்டு ரக்அத்களிலும் ஓதுவது பற்றி கத்தாதா (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் எல்லாம் அல்லாஹ்வின் வேதமே' என்று கூறினார்கள்.
774-ஆ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் (குல்ஸும் பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு முன் குல் ஹுவல்லாஹு அஹத்' (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது குல்ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்து அவரிடம் மக்கள், நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்) என்று கூறினார்கள். அதற்கு அவர், நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு (ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களை(ப் பின்னிறுத்தித் தொழுவிப்பதை) விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்) என்றார்.
அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், நான் இந்த அத்தியாயத்தை நேசிக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியா யத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும் என்று கூறினார்கள்.
775 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் நேற்றிரவு அல்முஃபஸ்ஸல்' அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன் என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த ஒத்த (பொருள் கொண்ட) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன் என்று கூறிவிட்டு, அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.
பாடம் : 107
(நான்கு ரக்அத் தொழுகையின்) பிந்திய இரண்டு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா' ஆரம்ப அத்தியாயத்தை ஓத வேண்டும்.
776 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் உம்முல் கிதாப்' (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையிலும் செய்வார்கள்; இவ்வாறே சுப்ஹுத் தொழுகையிலும் செய்வார்கள்.
பாடம் : 108
லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது.
777 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கப்பாப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள். நாங்கள், (அதை) நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை வைத்துத்தான் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 109
(சப்தமின்றித் தொழும் தொழுகையில்) இமாம் ஒரு சில வசனங்களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?)
778 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை' எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும் அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தைவிட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்.
பாடம் : 110
(பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல்.
779 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தில் குறைவாக ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites