அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

17-குர்ஆனில் உள்ள சஜ்தா வசனங்களை ஓதியதற்காக சஜ்தா செய்தல்.


அத்தியாயம் : 17
பாடம் : 1
குர்ஆனில் உள்ள சஜ்தா வசனங்களை ஓதியதற்காக சஜ்தா செய்வதும், அதன் வழிமுறையும்.
1067 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் அந்நநஜ்ம் எனும் (56ஆவது) அத்தியாயத்தை ஓதி சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தனர். அக்கிழவன் ஒரு கையளவு பொடிக் கற்களையோ மண்ணையோ அள்ளித் தனது நெற்றிக்குக் கொண்டுசென்று விட்டு இது எனக்குப் போதும் என்று (பரிகாசத் துடன்) கூறினான். பின்னர் அவன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப்போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
பாடம் : 2
தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும்) 32ஆவதுஅத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல்.
1068 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீன் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், ஹல் அத்தா அலல் இன்ஸான் (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
பாடம் : 3
ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல்.
1069 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸாத் அத்தியாயத்தில் உள்ள (24ஆவது) வசனம் (ஒதலுக்கான) சஜ்தா செய்ய வேண்டிய வசனங்களில் ஒன்றல்ல.ஆயினும் நபி (ஸல்) அவர்கள் (ஸாத் அத்தியாயத்தின்) அந்த (வசனம் வரும்) இடத்தில் சஜ்தாச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.
பாடம் : 4
அந்நநஜ்ம் (எனும் 56ஆவது) அத்தியா யத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல்.
1070 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) அந்நநஜ்ம் அத்தியாயத்தை ஓதி சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர அங்கிருந்த மக்களில் அனைவரும் (நபியவர் களுடன் சேர்ந்து) சஜ்தாச் செய்தனர். அவன் ஒரு கையளவு பொடிக் கற்களையோ மண்ணையோ எடுத்துத் தனது நெற்றிக்குக் கொண்டு சென்று விட்டு இது எனக்குப் போதும் என்று (பரிகாசத்து டன்)கூறினான். பின்னர் அவன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப்போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
பாடம் : 5
முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களுடன் சேர்ந்து (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தல்.
இணைவைப்பாளர் அசுத்தமானவர் என்பதால் அவர் உளூச் செய்ய முடியாது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் உளூவுடன் (ஓதலுக்கான) சஜ்தாச் செய்வார்கள்.
1071 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதி (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.
இந்த ஹதீஸ் மறறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது
பாடம் : 6
சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தாச் செய்யாமல் இருத்தல்.
1072 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் (அந்நநஜ்ம் அத்தியாயத்தில் சஜ்தா செய்வது பற்றிக்) கேட்டேன். அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை என்று கூறினார்கள்.
1073 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை.
பாடம் : 7
இதஸ்ஸமாவுன் ஷக்கத் எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல்.
1074 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதஸ்ஸமாஉன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி அதில் (சஜ்தா வசனம் வந்ததும்) சஜ்தாச் செய்வதை நான் கண்டேன். ஆகவே, நான் அவர்களிடம், அபூஹுரைரா அவர்களே! நீங்கள் சஜ்தாச் செய்வதை நான் பார்த்தேனே (ஏன்)? என்றேன். அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் (இந்த அத்தியாயத்தில்) சஜ்தாச் செய்வதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் சஜ்தாச் செய்திருக்க மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 8
ஓதுபவர் சஜ்தாச் செய்யும் போது கேட்பவரும் சஜ்தாச் செய்ய வேண்டும்.
சிறுவரான தமீம் பின் ஹத்லம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சஜ்தா வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அவரிடம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சஜ்தாச் செய்வீராக! ஏனெனில் இந்த விஷயத்தில் நீரே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறீர் என்று கூறினார்கள்.
1075 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும் போது அவர்கள் சஜ்தாச் செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தாச் செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கும் அளவுக்கு இடம் கிடைக்காது.
பாடம் : 9
இமாம் சஜ்தா வசனத்தை ஓதும் போது (சஜ்தாச் செய்யும்) மக்களிடையே நெரிசல் ஏற்படுவது.
1076 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும் போது சஜ்தா வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டினால் அப்போது அவர்கள் சஜ்தாச் செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சஜ்தாச் செய்வாம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு சஜ்தாவில் நெற்றி வைப்பதற்குக்கூட இடம் கிடைக்காது.
பாடம் : 10
(ஒதலுக்கான) சஜ்தாவை அல்லாஹ் கடமையாக்கவில்லை என்று கருதுவோரின் கூற்று.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், ஒரு மனிதர் மற்றொருவர் ஓதும் சஜ்தா வசனத்தை உட்காராமல் (போகிற போக்கில்) செவியுற்றால்... (அவர் சஜ்தாச் செய்ய வேண்டுமா?) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் உட்கார்ந்து கேட்டால்தான் என்ன? என்று திருப்பிக் கேட்டார்கள். இதன் மூலம் சஜ்தாச் செய்வது கடமையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
(சிலர் ஓரிடத்தில் அமர்ந்து சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தாச் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் கடந்து சென்ற) சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் (சஜ்தாச் செய்யவில்லை. அது குறித்து அவர்களிடம் வினவப்பட்ட போது), இதற்காக நாம் இங்கு வரவில்லை என்று பதிலளித்தார்கள்.
யார் (திட்டமிட்டு) அதைச் செவி தாழ்த்திக் கேட்கிறாரோ அவர் மீதே சஜ்தாக் கடமையாகும் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், தூய்மையுடன் இருந்தால்தான் சஜ்தாச் செய்ய வேண்டும். நீ உள்ளூரிலிருக்கும் போது சஜ்தாச் செய்ய நேர்ந்தால் கிப்லாவை முன்னோக்கிக் கொள். நீ பயணத்திலிருக்கும் போது (சஜ்தா வசனத்தை ஓதினால்) உனது முகம் எந்தத் திசையில் இருந்தாலும் குற்றமில்லை என்று கூறினார்கள்.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள், உரை நிகழ்த்துபவர் (சஜ்தா வசனத்தை ஓதி) சஜ்தா சஜ்தாச் செய்ததற்காக தாமும் சஜ்தாச் செய்ய மாட்டார்கள்.
1077 ரபீஆ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று அந்நஹ்ல் (எனும் 16ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் சஜ்தா வசனம் வந்ததும் இறங்கி (ஓதலுக்கான) சஜ்தாச் செய்தார்கள். மக்களும் சஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்த போது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது சஜ்தா வசனத்தை அடைந்ததும், மக்களே! நாம் சஜ்தா வசனத்தை ஓதப்போகிறோம். யார் சஜ்தாச் செய்கிறாரோ அவர் நல்லதைச் செய்தவராவார். யார் சஜ்தாச் செய்யவில்லையோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை என்று கூறினார்கள். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை.
இதுபற்றிய நாஃபிஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (ஓதலுக்காக) சஜ்தாச் செய்வதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை. நாமாக விரும்பிச் செய்தால் தவிர என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது..
பாடம் : 11
தொழுகையில் சஜ்தா வசனத்தை ஓதியதும் சஜ்தாச் செய்தல்.
1078 அபூராஃபிஉ நுஃபைஉஸ் ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத்தொழுகையைத் தொழுதேன். அவர்கள் இதஸ்ஸமாஉன் ஷக்கத் (எனும் 84அவது) அத்தியாயத்தை ஓதி, (அதில் சஜ்தா வசனம் வந்த) உடன் சஜ்தாச் செய்தார்கள். அவர்களிடம் நான், என்ன இது? (ஏன் தொழுகையிலேயே சஜ்தாச் செய்தீர்கள்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுத போது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காக சஜ்தாச் செய்துள்ளேன். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது இறக்கும்வரை) அதை நான் ஓதினால் சஜ்தாச் செய்வேன் என்று கூறினார்கள்.
பாடம் : 12
கூட்ட நெரிசலினால் சஜ்தாச் செய்வதற்கு இடம் கிடைக்காமல் போவது.
1079 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசனமுள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக்காட்டும் போது அவர்கள் சஜ்தாச் செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தாச் செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட இடம் கிடைக்காது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites