அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

18-கஸ்ர் தொழுகை


அத்தியாயம் : 18
18-கஸ்ர் தொழுகை (பயணத்தில் தொழுகை களை சுருக்கித் தொழல்.)
பாடம் : 1
பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவதும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை.
1080 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதவர்களாக பத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள். ஆகவே நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பயணம் மேற் கொண்டால் சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவோம். (அதை விட) அதிகமானால் (சுருக்காமல் வழக்கப் படி) முழுமையாகத் தொழுவோம்.
1081 யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனா திரும்பும் வரை நபி (ஸல்) அவர்கள் (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள் என்று கூறினார்கள். உடனே நான், குறிப்பிடும்படி நீங்கள் மக்காவில் எவ்வளவு நாட்கள் தங்கினீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பத்து நாட்கள் தங்கியிருந்தோம் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 2
மினாவில் சுருக்கித் தொழுதல்.
1082 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருடனும் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் மினாவில் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். உஸ்மான் (ரலி) அவர்கள் பின்னர் (சுருக்கித் தொழாமல்) முழுமையாகவே தொழுதார்கள்.
1083 ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அந்நாளில் அவர்கள் எப்போதுமில்லாத அளவுக்கு எந்த அச்சமும் இல்லாமல் இருந்தார்கள்.
1084 அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் எங்களுக்கு (இரண்டாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே தொழுவித்தார்கள். இதுபற்றி (அத்தொழுகையில் கலந்த கொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினப்பட்ட போது இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜீஊன் என்று கூறினார்கள். பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் (ரலி)அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். மினாவில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். (இப்போது நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் எனக்கு வாய்க்க வேண்டுமே! என்று கூறினார்கள்.
பாடம் : 3
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது எத்தனை நாட்கள் (மக்காவில்) தங்கினார்கள்?
1085 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜிற்கு இஹ்ராம் கட்டியவர்களாக (மக்காவுக்கு) வந்து சேர்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவிற்குரிய தாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 4
எவ்வளவு தொலைவு பயணம் செய்யும் போது சுருக்கித் தொழலாம்?
நபி (ஸல்) அவர்கள் (குறைந்த பட்சம்) ஒரு பகல் ஒரு இரவைப் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் 4 பரீத் அதாவது 16 பர்ஸக் (அதாவது 48மைல்) தொலைவிற்குப் பயணம் செய்யும் போது சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவார்கள்; நோன்பை விட்டுவிடுவார்கள்.
(குறிப்பு: 1 பரீத் என்பது 12 மைல். இதன்படி 4 பரீத் என்பது 48 மைல்கள் ஆகும்.
1 பர்ஸக் என்பது 3 மைல். இதன்படி 16 பர்ஸக் என்பது 48 மைல்கள் ஆகும்)
1086 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
1087 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
1088 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம்மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 5
(பயணத் திட்டத்துடன்) ஒருவர் தமது இல்லத்தை விட்டுப் புறப்பட்டதும் கஸ்ர் செய்து தொழலாம்.
அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகரிலிருந்து பயணம்) புறப்பட்டுச் செல்லும் போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும்போதே சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதார்கள். திரும்பி வந்த போது இதோ கூஃபா (தெரிகிறது. இனி தொழுகையை சுருக்குவீர்களா? அலலது முழுமையாக்குவிர்களா?) என்று அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (சுருக்கியே தொழுவோம்) என்று பதிலளித்தார்கள்.
1089 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா நோக்கிப் புறப்பட்ட போது) லுஹ்ர் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். (மதீனாவிலிருந்து 6ஆவது மைலிலுள்ள) துல்ஹுலைஃபாவில் (அஸ்ர் தொழுகையை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கி)த் தொழுதேன்.
1090 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத் களாகத் தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டிரண்டு ரக்அத் களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் (தொழும் லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகியத் தொழுகைகள் நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா (ரஹ்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைபாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக்கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார்கள்? என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், உஸ்மான் (ரலி) விளக்கம் கூறியது போன்று ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் கூறிவந்தார்கள் (அதாவது, பயணத்தின் இடையில் இறங்கித் தங்குபவர் உள்ளூரிலிருப்பவர் போன்ற வர்தாம் என்று அவர்களிருவரும் கருதினர்) என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 6
மஃக்ரிப் தொழுகையைப் பயணத்திலும் மூன்று ரக்அத்களாகவே தொழவேண்டும்.
1091 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் பிற்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (மஃக்ரிபின் கடைசி நேரத்தில் தொழுவார்கள்.
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் இவ்வாறே செய்வார்கள்.
1092 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (இஷாவில்) தொழுவார்கள்.
(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியார் ஸஃபிய்யா பின்த் அபீஉபைதின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வந்ததையொட்டி (அவசரமாகப் பயணம் புறப்பட்டார்கள். அதனால்) மஃக்ரிப் தொழுகையைப் பிற்படுத்தினார்கள்.அப்போது அவர்களிடம் நான்தொழுகை என்று நினைவூட்டினேன். அப்போது பயணத்தைத் தொடரு! என்று சொன்னார்கள். இரண்டு அல்லது மூன்று மைல்கள் சென்றதும் வாகனத்தில் இருந்து இறங்கி (மஃக்ரிப் தொழுகையை செம்மேகம் மறைந்தபின்) தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் இவ்வாறே செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் விரைவாக பயணம் புறப்பட நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைப் பிற்படுத்துவார்கள். (மஃக்ரிபைச் சுருக்கித் தொழாமல்) மூன்று ரக்அத்களாகவே தொழுது சலாம் கொடுப்பார்கள். பின்னர் சிறிதே இடைவெளிவிட்டு இஷாத் தொழுகைக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாக அதை (ச் சுருக்கி)த் தொழுவார்கள். பின்னர் சலாம் கொடுப்பார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகிலிருந்து நடு இரவில் அவர்கள் (தஹஜ்ஜுத்தொழுகைக்காக) எழும் வரை உபரியான தொழுகைகள் எதையும் தொழ மாட்டார்கள் என்று கூறினார்கள்.
பாடம் : 7
வாகனம் எத்திசையில் சென்றாலும் அதன் மீதமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல்.
1093 ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து அது செல்லும் திசைநோக்கி (உபரியானத் தொழுகைகளை) தொழுவதை நான் பார்த்திருக் கிறேன்.
1094 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும் போது கிப்லா அல்லாத திசை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.
1095 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து உபரியான தொழுகைகளையும் வித்ருத் தொழுகையையும் தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.
பாடம் : 8
வாகனத்தில் அமர்ந்து சைகை செய்து தொழுதல்.
1096 அப்தில்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பயணத்தின் போது வாகனத்தில் அமர்ந்து அது செல்ல வேண்டிய திசை நோக்கி (உபரியானத் தொழுகைகளை) சைகை செய்து தொழுவார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்வார்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.
பாடம் : 9
கடமையானத் தொழுகைகளைத் தொழும் போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1097 ஆமிர் பின் ரபிஆ (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து தாம் செல்ல வேண்டிய திசை நோக்கித் தமது தலையால் சைகை செய்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். கடமையான தொழுகைகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
1098 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது வாகன ஒட்டகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். அதன் முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் வாகனத்தின் மீது அமர்ந்து உபரியான தொழுகைகளையும் வித்ர் தொழுகை யையும் தொழுவார்கள். எனினும் கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழ மாட்டார்கள் (வாகனத்திலிருந்து இறங்கித் தான் தொழுவார்கள்) என்றும் குறிப்பிட்டார்கள்.
1099 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவாகள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பும் போது (வாகனத்திலிருந்து) இறங்கி கிப்லாவை முன்னோக்குவார்கள்.
பாடம் : 10
கழுதையின் மீது அமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல்.
1100 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அப்துல்மலிக் பின் மர்வானை சந்தித்து பஸ்ராவின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பற்றி முறையிட்டுவிட்டு) ஷாமிலிருந்து திரும்பி வந்த போது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். அப்போது அவர்களை நாங்கள் அய்னுத் தம்ர் எனும் இடத்தில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீதமர்ந்து (உபரியானத் தொழுகை) தொழுவதை நான் பார்த்தேன். அவர்களின் முகம் கிப்லாவுக்கு அந்தப்பக்கம் -அதாவது இடப்புறம்- நோக்கி அமைந்திருந்தது. கிப்லா அல்லாத வேறு திசையில் நீங்கள் தொழுவதை நான் கண்டேனே! என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்று விடையளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 11
பயணத்தின் போது (கடமையானத்) தொழுகைக்கு முன்பும் பின்பும் உபரியான தொழுகைகளைத் தொழாமலிருக்கலாம்.
1101 ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தின் போது இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களது தோழமையில் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தில் உபரியானத் தொழுகைகளைத் தொழுவதை நான் பார்த்ததேயில்லை. புகழோங்கிய அல்லாஹ்வே அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது (33:21) என்று கூறுகிறான் என்றார்கள்.
1102 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோழ‌மையில் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தின் போது (கடமையான) இரண்டு ரக்அத் களைவிட (கூடுதலாக) வேறெந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் இவ்வாறே நான் பயணம் மேற் கொண்டிருக்கிறேன் (அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்தனர்).
பாடம் : 12
கடமையான தொழுகைகளுக்கு முன்னரும் பின்னரும் தவிர மற்ற நேரங்களில் பயணத்தில் உபரியாகத் தொழுவது.
நபி (ஸல்) அவாகள் பயணத்தின் போது ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (முன் சுன்னத்)கள் தொழுதிருக்கிறார்கள்.
1103 அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுவதைக் கண்டதாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் அறிவிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூஉவையும் சஜ்தாவையும் பரிபூரணமாகச் செய்தார்கள் என்று உம்முஹானீ (ரலி) குறிப்பிட்டார்கள்.
1104 ஆமிர் பின் ரபிஆ (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து தாம் செல்லவேண்டிய திசை நோக்கி உபரியானத் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்திருக்கிறேன்.
1105 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து அது தாம் செல்ல வேண்டிய திசையில் தமது தலையால் சைகை செய்து உபரியானத் தொழுகைகளைத் தொழுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.
பாடம் : 13
பயணத்தின் போது மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்.
1106 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (இஷாநேரத்தில்) தொழுவார்கள்.
1107 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது லுஹ்ர் தொழுகை யையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள். மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள்.
1108 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 14
(பயணத்தில்) மஃக்ரிப் - இஷாவை சேர்த்துத் தொழும் போது பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டுமா?
1109 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் மேற்கொள்ளும் போது மஃக்ரிப் தொழுகையைப் பிற்படுத்தி இஷாவையும் மஃக்ரிபையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினார்கள்.
அவசரமாக (பயணம்) செல்ல நேரிட்டால் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி0 அவர்களும் இவ்வாறே செய்வார்கள். மஃக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லி மூன்று ரக்அத்கள் தொழுது சலாம் கொடுப்பார்கள். பிறகு சிறிய இடைவெளியேவிட்டு இஷாத் தொழுகைக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு சலாம் கொடுப்பார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே எதனையும் தொழ மாட்டார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகிலிருந்து இரவுத் தொழுகைக்காக எழும் நேரம் (-நடுநிசி) வரை வேறெதையும் தொழ மாட்டார்கள்.
1110 அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் -மஃக்ரிப், இஷா ஆகிய- இவ்விருத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள்.
பாடம் : 15
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற் கொண்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ர் வரை பிற்படுத்தலாம்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.
1111 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற் கொண்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம் வரை பிற்படுத்தி, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்கு முன்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து விட்டால் லுஹ்ர் தொழுகையைத் தொழுது விட்டே பயணம் மேற்கொள்வார்கள்.
பாடம் : 16
சூரியன் உச்சி சாய்ந்த பிறகு பயணம் புறப்பட்டால் லுஹ்ர் தொழுது விட்டே பயணம் மேற்கொள்ள வேண்டும்.
1112 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் புறப்பட்டு விட்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம் வரை பிற்படுத்துவார்கள். பிறகு (வாகனத்திலிருந்து) இறங்கி லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்கு முன்) சூரியன் உச்சி சாய்ந்து விட்டால் லுஹ்ர் தொழுது விட்டே பயணம் மேற்கொள்வார்கள்.
பாடம் : 17
உட்கார்ந்து தொழுவது.
1113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்த படியே தொழுதார்கள். (அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்திருந்த) மக்களில் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்காருங்கள் என்று மக்களுக்குச் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். எனவே அவர் ருகூஉச் செய்யும் போது நீங்களும் ருகூஉச் செய்யுங்கள் அவர் நிமிரும் போது நீங்களும் நிமிருங்கள் என்று கூறினார்கள்.
1114 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களுக்கு வலப்புற விலாப் பகுதியில் சிறாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது ஒரு தொழுகை(யின் நேரம்) வந்து விடவே அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். அப்போது நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்தபடியே தொழுதோம். (தொழுது முடித்ததும்) இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள். அவர் ருகூஉச் செய்யும் போது நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். (ருகூஉவிலிருந்து) அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறும் போது நீங்கள் ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
1115 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) கூறியதாவது:
நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவ ருக்கு நின்று தொழுபவரின் நற்பலனில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நற்பலனில் பாதியே உண்டு என்று விடையளித்தார்கள்.
பாடம் : 18
உட்கார்ந்து சைகை செய்து தொழுவது.
1116 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மூல வியாதி உடையவனாக இருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் நற்பலனில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நற்பலனில் பாதியே உண்டு என்று விடையளித்தார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள நாயிம் எனும் சொல்லுக்கு படுத்துத் தொழுபவர் என்று பொருள்.
பாடம் : 19
உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழலாம்.
படுத்துத் தொழும் போது கிப்லாவை நோக்கித் திரும்ப முடியாவிட்டால் எந்தத் திசை நோக்கியும் தொழலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1117 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மூலவியாதி இருந்தது. அகவே நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக! என்று சொன்னார்கள்.
பாடம் : 20
உட்கார்ந்து தொழும் போது நோய் நீங்கி விட்டால் அல்லது நோயின் கடுமை குறைந்து விட்டால் எஞ்சியதை எழுந்து தொழலாம்.
ஒரு நோயாளி விரும்பினால் இரண்டு ரக்அத்களை நின்றுதொழுது விட்டு (பிந்திய) இரண்டு ரக்அத்களை உட்கார்ந்து தொழலாம் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்..
1118 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதுமை அடையும் வரை ஒரு போதும் இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. (முதுமையடைந்த பின்னர்) உட்கார்ந்த வாறே ஓதுவார்கள். ருகூஉச் செய்ய எண்ணும் போது எழுந்து முப்பது அல்லது நாற்பது வாசனங்கள் அளவுக்கு ஓதிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்வார்கள்.
1119 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதி ருக்கிறார்கள்.அப்போது உட்கார்ந்தபடியே ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉச் செய்வார்கள். பின்னர் சஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக் அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக் கொள்வார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites