அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

15-மழைவேண்டிப் பிரார்த்தித்தல்


அத்தியாயம் : 15
பாடம் : 1
மழை வேண்டுதலும், மழைவேண்டிப் பிரார்த்திக்க நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றதும்.
1005 அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த போது தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளின் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
பாடம் : 2
யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
1006 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) கடைசி ரக்அத்தின் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும், இறைவா! (மக்காவில் சிக்கிக் கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா முளர் குலத்தாரின் மீது உன் பிடியை (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக! இறைவா (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயட்க! என்று கூறிவந்தார்கள். மேலும் ஃகிபார் குலத்தாருக்கு இறைவன் மன்னிப்பளிப் பானாக! அஸ்லம் குலத்தாருக்கு அல்லாஹ் சமாதானத்தை அளிப்பானாக! என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்தப் பிரார்த்தனை முழுவதும் சுப்ஹுத் தொழுகையிலேயே நடந்தது.
1007 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:
மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்ட போது, இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளை அளித்(து இவர்களை திருத்)திடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற் றையும் பிணங்களையும் புசிக்க நேர்ந்தது. பசி பட்டினியால் (கண் பஞ்சடைந்து பார்வை மங்கி) அவர்களில் ஒருவர் வானத்தை நோக்கினால் (தமக்கும் வானத்திற்குமிடையே) அவர் புகை (போன்ற ஒன்றையே) காண்பார். இந்நிலையில் (குறைஷிகளின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! நீங்கள் இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் உறவுகளைப் பேணவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றீர்கள். உங்கள் சமுதாயத்தார் அழிந்து விட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்.
பிறகு (நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர் பார்த்திருங்கள் என்று தொடங்கி நீங்கள் (பாவத்திற்கே) திரும்பிச் செல்கிறீர்கள் என்று முடியும் (44:10-15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
இந்த வசனத்திலுள்ள பலமான பிடி என்பது பத்ருப் போர் தினமாகும்.
புகையும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் அர்ரூம் அத்தியாயத்திலுள்ள (பாரசீகர்களால் ரோமர்கள் தோற்கடிக்கப்படுவது பற்றிய) முன்னறிவிப்பும் நடந்து முடிந்து விட்டன.
பாடம் : 3
பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது.
1008 அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ள நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தைன அபூதா-ப் பாடிய (பின்வரும்) கவிதையை இப்னு உமர் (ரலி) அவர்கள் எடுத்தாள்வதை நான் கேட்டிருக்கிறேன்:
.....................................................................
வெண்ணிறம் கொண்டவர்;
இவர் முகம்தனை முன்வைத்தே
முகில்மழை வேண்டப்படும்.
அநாதைகளின் புக-டம்;
விதவைகளின் காவலர்.
1009 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்த போது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் (சொற் பொழிவு மேடையிலிருந்து) இறங்கவில்லை. எல்லா நீர் வழிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நான்,
.....................................................................
வெண்ணிறம் கொண்டவர்;
இவர் முகம்தனை முன்வைத்தே
முகில்மழை வேண்டப்படும்.
அநாதைகளின் புக-டம்;
விதவைகளின் காவலர்
எனும் கவிதையை நினைத்துக் கொள்வேன். அது அபூதா-ப் அவர்களது கவிதையாகும்.
1010 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும் போது (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழைவேண்டிப் பிரார்த்திக்கும் படி கேட்டார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர் (ரலி) அவர்கள், இறைவா! நாங்கள் எங்கள் நபி (ஸல்-உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்ததன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை ளஅப்பாஸ் (ரலி) அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்ன வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக! என்றுவேண்டினார்கள். அதன்படியே மக்களுக்கு (பஞ்ச காலங்களில்) மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.
பாடம் : 4
(இமாம்) மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது.
1011 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது தமது மேல்துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோள்மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
1012 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது கிப்லாத் திசையில் திரும்பி, தமது தோள் துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி0 அவர்களே தொழுகை அறிவிப்பு முறையான பாங்கை (கனவில்) கண்டவராவார்கள் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அன்சாரி களிலுள்ள மாஸின் குலத்தைச் சேர்ந்தவராவார். (பாங்கைக் கனவில் கண்டவர் பனூதமீம் குலத்தைச் சேர்ந்தவராவார்.)
பாடம் : 5
அல்லாஹ்வின் புனிதச் சட்டங்கள் பாழாக்கப்படும் போது மாண்பும் மகத்து வமும் வாய்ந்த அதிபதியான அவன் தன் படைப்புகளை பஞ்சத்தால் தண்டித்தல்.
பாடம் : 6
ஜுமுஆத் தொழுகை நடைபெறும் பள்ளி வாச-ல் மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1013 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடைக்கு எதிர்த்திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிக்குள்) வந்தார். அவர் நின்று கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால் நடை(ச் செல்வங்)கள் அழிந்து விட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான் என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு), நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்து விட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம்.
இதன் அறிவிப்பாளரான ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், இ(ரண்டாவ தாக வ)ந்த மனிதர் முத-ல் வந்தவர்தாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்குத் தெரிய வில்லை என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 7
ஜுமுஆ உரை நிகழ்த்தும் போது கிப்லாவை நோக்கித் திரும்பாமல் மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1014 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடை மீது) நின்று உரையாற்றிக் கொண்டிருந்த போது தாருள் களா எனும் இல்லத்தின் திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் வந்தார். அவர் நின்று கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (கால் நடைச்) செல்வங்கள் அழிந்து விட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழியச் செய்வான் என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் பார்க்கவில்லை. எங்களுக்கும் சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டதும் சிதறியது. பிறகு மழை பொழிந்தது.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு), நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. (அடுத்த) ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றிக் கொண்டிருந்த போது அதே வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிக்குள்) வந்து நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (பெருமழையினால் கால்நûச்) செல்வங்கள் அழிந்து விட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களை விட்டு மழையை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்! என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்திய பின், இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை (மதீனாவில்) நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம்.
ஷரீக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்த மனிதர்தாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 8
சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1015 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடை மீது நின்று) உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்து விட்டது. ஆகவே, எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எங்களுக்கு மழை பெய்தது. (எந்த அளவிற் கென்றால்) எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியவில்லை. அடுத்த ஜுமுஆ வரை எங்களுக்கு மழை நீடித்துக் கொண்டிருந்தது. (அந்த ஜுமுஆவில்) அந்த மனிதரோ அல்லது மற்றொரு மனிதரோ எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த மழை மேகத்)தை எங்களை விட்டும் (வேறு பகுதிக்குத்) திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! எங்கள் சுற்றுப் புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக)! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகம் வலப் புறமும் இடப் புறமுமாகப் பிரிந்துசென்று அங்கிருந்தவர்களுக்குப் பொழிந்தது. மதீனாவாசிகளுக்கு மழை பொழியவில்லை.
பாடம் : 9
மழைவேண்டிப் பிரார்த்திக்க தனித்தொழுகை நடத்தாமல் ஜுமுஆத் தொழுகையை அதற்குப் பயன்படுத்திக் கொள்வது.
1016 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, கால் நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து நின்று விட்டது என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் (மழைவேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அந்த ஜுமுஆவில்) அதே மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! வீடுகள் இடிந்து விட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால் நடைகள் அழிந்து விட்டன. ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் மழையை நிறுத்துவான் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து, இறைவா! குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியனவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகம் ஆடை துண்டாவது போன்று (மதீனாவிலிருந்து) துண்டாகி(ச் சென்று)விட்டது.
பாடம் : 10
பெரு மழையால் பாதைகள் துண்டிக்கப் பட்டால் பிரார்த்திப்பது.
1017 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (பஞ்சத்தினால்) கால் நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவரை மக்களுக்கு மழை பொழிந்தது. (அந்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (பெருமழையால்) வீடுகள் இடிந்து விட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால் நடைகள் அழிந்து விட்டன! என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடு வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவைவிட்டும் ஆடை துண்டாவது போன்று துண்டாகி(ச் சென்று)விட்டன.
பாடம் : 11
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தம் மேல் துண்டை மாற்றிப் போடவில்லை (எனவே, ஜுமுஆ நாளில் மழைவேண்டும் போது மேல் துண்டை மாற்றிப் போடுவது அவசியமில்லை) எனும் கூற்று.
1018 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு ஜுமுஆ நாளில்) ஒரு மனிதர் (கடும் வறட்சியினால் கால்நடைச்)செல்வம் அழிவது பற்றியும் குடும்பம் அல்லலுறுவது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மழை பொழிவிக்குமாறு பிரார்த்தித்தார்கள்.
இதில் நபி (ஸல்) அவர்கள் தமது மேல் துண்டை மாற்றிப் போட்டதாகவோ கிப்லாவை முன்னோக்கிய தாகவோ அறிவிப்பாளர் (எவரும்) கூறவில்லை.
பாடம் : 12
மக்கள் இமாமிடம் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டால் அதை அவர் மறுக்கலாகாது.
1019 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால் நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து தடைப்பட்டுவிட்டது. (மழைவேண்டி) அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் (அந்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (பெருமழையால்) வீடுகள் இடிந்து விட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! மலைகள், குன்றுகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவை விட்டு ஆடை துண்டாவது போன்று துண்டாகி(ச் சென்று) விட்டது.
பாடம் : 13
பஞ்சத்தின் போது இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களிடம் பிரார்த்திக்கும்படி கோரினால்...
1020 மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் கூறினார்கள்:
குறைஷி (இணைவைப்பாளர்)கள் இஸ்லாத்தை ஏற்காமல் காலம் தாழ்த்திய போது (அவர்களைத் திருத்த) அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு அழிவைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் (மிகு பசியினால்) செத்தவற்றையும் எலும்புகளையும் புசிக்கலாயினர். இந்நிலையில் (குறைஷி இணை வைப்பாளர்களின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! உறவுகளைப் பேணுமாறு உத்தரவிட்டபடி நீர் வந்தீர். உமது சமுதாயமோ அழிந்து கொண்டிருக் கின்றது. எனவே (பஞ்சம் விலக) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள் எனு:ம (44:10ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
(பஞ்சம் விலகியதும் பழையபடி) குறைஷியர் தம் இறைமறுப்பிற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். இதைத் தான் (அவர்களை) நாம் பலமாகப் பிடிக்கும் நாளில் எனும் (44:16ஆவது) வசனம் குறிப்பிடுகிறது. இந்த வசனத்திலுள்ள (பலமானப் பிடி என்பது) பத்ருப் போர் தினமாகும்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
மற்றோர் அறிவிப்பில், அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்களுக்கு மழை பொழிந்தது. ஏழு நாட்கள் மழை நீடித்தது. பெருமழை குறித்து மக்கள் (நபியவர்களிடம்) முறையிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடு வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே! என்று பிராத்தித்தார்கள். உடனே தலை மேலிருந்த மேகம் விலகியது. (மதீனாவின்) சுற்றுப் புற மக்களுக்கு மழை பொழிந்தது.
பாடம் : 14
மழை அதிகமாகும் போது சுற்றுவட்டாரங்களுக்கு அதைத் திருப்பிவிடுமாறும் அது தமக்குப் பாதகமாக அமைந்து விடக் கூடாதெனவும் பிரார்த்திப்பது.
1021 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற் பொழிவு மேடை மீது நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து உரத்த குரலில், அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்து விட்டது; (பச்சை) மரங்கள் சிவந்து விட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன. எனவே, மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்? என்று கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று (இரு முறை) கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்போது வானத்தில் எந்த மேகத்தையும் நாங்கள் காணவில்லை. திடீரென ஒரு மேகம் உருவாகி மழை பொழிந்தது. நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடையிலிருந்து இறங்கி (ஜுமுஆத் தொழுகை) தொழுவித்தார்கள். தொழுகையை முடித்தார்கள். மழை விடாமல் அடுத்த ஜுமுஆ வரை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவர்களை நோக்கி மக்கள் எழுந்து (பெருமழையினால்) வீடுகள் இடிந்து விட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! அவன் நம்மைவிட்டும் மழையை நிறுத்துவான் என்று உரத்த குரலில் கூறினர். நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டு) புன்னகை புரிந்தார்கள். பின்னர், இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு (இதைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! என்று பிரார்த்தித்தார்கள். (சூழ்ந்திருந்த மேகம் விலகி) மதீனா தெளிவடைந்தது. அதன் சுற்றுப் புறங்களில் மழை பொழியலாயிற்று. மதீனாவில் ஒரு துளி மழையும் பெய்யவில்லை. அப்போது நான் மதீனாவைப் பார்த்தேன். அது கிரீடத்திற்குள் இருப்பது போன்றிருந்தது.
பாடம் : 15
நின்று கொண்டே மழை வேண்டிப் பிரார்த்தித்தல்.
1022 அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்றபொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்று கொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்ல வில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துள்ளார்கள்.
1023 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்காக மழை வேண்டிப் பிரார்த்திக்க மக்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். நின்ற வண்ணமே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாத் திசை நோக்கித் திரும்பினார்கள். தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளுக்கு) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். மக்களுக்கு மழை பொழிந்தது.
பாடம் : 16
மழைவேண்டித் தொழும் போது சப்தமாகக் குர்ஆன் ஓதுவது.
1024 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடல் நோக்கிப்) புறப்பட்டுச் சென்றார்கள். (திட-ல்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிரார்த்திக்கலானார்கள். தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளுக்கு) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமாக (குர்ஆன்) ஓதினார்கள்.
பாடம் : 17
நபி (ஸல்) அவர்கள் தம் முதுகை மக்களுக்குக் காட்டும் விதமாக திரும்பி நின்றார்களா?
1025 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க புறப்பட்டுச் சென்ற போது அவர்களை நான் பார்த்தேன். (உரையாற்றியபின் பிரார்த்திக்க முற்பட்ட போது) அவர்கள் மக்களை நோக்கி இருக்கும் விதத்தில் தமது முதுகைத் திருப்பி கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்கலானார்கள். தமது மேல்துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளுக்கு) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பிறகு எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமாக (குர்ஆன்) ஓதினார்கள்.
பாடம் : 18
மழைத் தொழுகை இரண்டு ரக்அத்களே.
1026 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
பாடம் : 19
திடலுக்குச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திப்பது.
1027 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க தொழும் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். தமது மேல் துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில் தமது மேல் துண்டின் வலப்புறத்தை இடது தோளின் மீது (மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்) என்று இடம்பெற்றுள்ளது.
பாடம் : 20
மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல்.
1028 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகை) தொழுவதற்காக தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் பிரார்த்தனை புரிந்த போது அல்லது பிரார்த்தனை புரிய முற்பட்ட போது கிப்லாவை முன்னோக்கினார்கள். தமது மேல்துண்டை (அதன் வலது புறத்தை இடது தோளின் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
பாடம் : 21
மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்துவது.
1029 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு ஜுமுஆ நாளில் கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியினால்) கால் நடைகள் அழிந்து விட்டன; குடும்பமும் அழிந்து விட்டது; மக்களும் அழிந்தனர் என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காக தமது கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து தம் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர். நாங்கள் பள்ளியைவிட்டு வெளியேறவில்லை. எங்களுக்கு மழைபெய்தது. மறு ஜுமுஆ வரும் வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டுவிட்டன என்று கூறினார்.
1030 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது அக்குள்களின் வெண்மையை நான் பார்க்குமளவிற்கு (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள்.
பாடம் : 22
மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாம் கைகளை உயர்த்துவது.
1031 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போதல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்த மாட்டார்கள் (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) தமது அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள்.
பாடம் : 23
மழை பொழியும் போது கூற வேண்டியவை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(2:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸய்யிப் எனும் சொல்லுக்கு மழை என்று பொருள்.
(ஸய்யிப் என்பதன் கடந்தகால வினைச் சொற் களான) ஸாப, அஸாபா ஆகியவற்றின் எதிர்கால வினைச் சொல் யஸூபு என்பதாகும்.
1032 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால் ஸய்யிபன் நாஃபிஆ (பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 24
ஒருவர் தமது தாடியில் தண்ணீர் வடியும் அளவிற்கு மழையில் நனைவது.
1033 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள்.-அப்போது எந்த சிறு மேகமும் வானத்தில் காணப்படவில்லை.- (நபி ளஸல்ன அவர்கள் பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள்) மலைகளைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது மேடையிலிருந்து இறங்கியிருக்கவில்லை. அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படி) மறு ஜுமுஆ வரை எங்களுக்கு மழை பொழிந்தது.
(மறு ஜுமுஆவில்) அதே கிராமவாசி அல்லது மற்றொரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்து விட்டன; செல்வங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே, (மழையை நிறுத்துமாறு) எங்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுங்கள்! என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எனப் பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அம்மேகம் களைந்து சென்றது. (மதீனா நகரைவிட்டும் மேகம் விலகி அதன் சுற்றுப் புறங்களில் நிலை கொண்ட தால்) மதீனா பாதாளம் போன்று மாறி விட்டது. கனாத் ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் இந்த பெருமழை பற்றிப் பேசாமல் இருக்கவில்லை
பாடம் : 25
கடுங்காற்று வீசும் போது (என்ன செய்ய வேண்டும்?).
1034 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடுமையான காற்று வீசும் போது அது (பற்றிய கலக்கத்தின் ரேகை) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் காணப்படும்.
பாடம் : 26
நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன் எனும் நபிமொழி.
1035 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ஆது சமுகத்தார் (தபூர் எனும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 27
நிலநடுக்கங்களும் இறுதிநாளின் அடையாளங்களும்.
1036 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி கைப்பற்றப்படாத வரை,
நில நடுக்கங்கள் நிறைந்து விடாத வரை,
காலம் சுருங்கிடாத வரை,
குழப்பங்கள் வெளிப்படாத வரை,
ஹர்ஜ் (கொந்தளிப்பு) மிகுதியாகாத வரை,
-ஹர்ஜ் என்பது கொலையாகும்; கொலை யாகும்.-
உங்களிடையே செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1037 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! என்று ளநபி (ஸல்)அவர்கள்ன கூறினார்கள். மக்கள் (சிலர்), எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!) என்று (மூன்று முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.
பாடம் : 28
உங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்திற்கு நீங்கள் பொய்பிப்பதையே (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? எனும் (56:82ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ரிஸ்கக்கும் என்பதை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஷுக்ரக்கும் (உங்கள் நன்றியாக) என்று ஓதினார்கள்.
1038 ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.- அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கித் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர். அப்போது, என்னை நம்பக் கூடியவர்களும் (நன்றி கொன்று) என்னை மறுக்கக் கூடியவர் களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும் தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை நம்பி நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தினால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) என்று கூறியவர்களோ (நன்றி கொன்று) என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் என அல்லாஹ் சொன்னான் என்று கூறினார்கள்.
பாடம் : 29
மழை எப்போது வருமென்பதை இறைவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குறிப்பு: காண்க ஹதீஸ்எண்-50)
1039 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவு கோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.
நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாகும் (பெண்ணா? ஆணா? என்று) யாரும் அறிய மாட்டார்கள்.
எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.
எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.
மழை எப்போதுவரும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites