அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 30 மே, 2010

வீதியின் ஒழுக்கங்கள்

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும்.  அல்லாஹ் கூறுகிறான்:  (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன் 24:30, 31
 

வீதியில் ஆணவத்துடன் நடப்பது கூடாது

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறுவார்கள். அல் குர்ஆன் 25:63

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்''  அல் குர்ஆன் 31:18, 19

 
வீதிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ''அப்படி நீங்கள் அந்த சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் ''பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையி­ருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ர­லி)   நூல்: புகாரி 2465

மற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ர­லி)  நூல் முஸ்­லிம் 4365

 
பாதையில் கிடக்கின்ற தொல்லை தருகின்ற பொருட்களை அகற்றுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''தொல்லை தரும் பொருளை பாதையி­ருந்து அகற்றுவது தர்மமாகும்''   அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி 2631

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஈமான் என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்று கூறுவதாகும். அவற்றில் இறுதியானது பாதையில் கிடக்கின்ற இடையூறு தரக்கூடிய பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்''  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)   நூல்: முஸ்­லிம் 58

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு மனிதர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளைக் கிடப்பதைக் கண்டு அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்தி விட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான், பாவமன்னிப்பும் வழங்குகிறான்''  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 652

 
மக்கள் நடமாடும் பாதைகளிலும் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களிலும் மலம் ஜலம் கழித்தல் கூடாது

''சாபமேற்படக் கூடிய இரண்டு விஷயங்களை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் ''சாபமேற்படக்கூடிய இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''மக்கள் நடமாடும் பாதைகளிலும் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களிலும் மலம் ஜலம் கழிப்பதாகும்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)   நூல்: முஸ்­லிம் 448

அனுமதி கோருதல்

நம்முடைய வீட்டிற்குள் நுழையும் போதும் ஸலாம் கூறவேண்டும்.

வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அல் குர்ஆன் 24:61

பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முறை

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். அல் குர்ஆன் 24:27

அனஸ் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.''நூல்: புகாரி 6244
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்'' அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ர­லி)   நூல்: புகாரி 6245

நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்.

ஜாபிர் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''என் தந்தை ஒரு யூதருக்கு கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள் ''யார் அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் ''நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''நான், நான் என்றால்....?'' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். நூல்: புகாரி 6250

பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்த்த போது, அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை'' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி 6902

ஸஹ்ல் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வ­ச் சீப்பொன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்த போது ''என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே ''அனுமதி கேட்க வேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6901

அனுமதி பெறாமல் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம்

யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.  அல் குர்ஆன் 24:29

குழந்தைகளும் அனுமதி பெற்று வீட்டிற்குள் நுழைய வேண்டிய மூன்று நேரங்கள்

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பக­ல் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.  அல் குர்ஆன் 24:58, 59

அனுமதி கோரும் முறை

பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும் போது ''நான் நுழையலாமா?'' என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு ''நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு! 'அஸ்ஸலாமு அலைக்கும். நான் நுழையலாமா?' என்று (அனுமதி பெறும்போது) கூறவேண்டும் என்று அவருக்குச் சொல்'' என்று கூறினார்கள். அம்மனிதர் இதனைச் செவியேற்றார். உடனே ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறி ''நான் நுழையலாமா?'' என்று (அனுமதி கோரினார்) நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர்: ரிப்ஈ  நூல்: அபூ தாவூத் 4508

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites