அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 30 மே, 2010

அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் part 1


இந்த பூமியில் மனிதன் ஏராளமான குற்றங்களை செய்கிறான், அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனைகளை தருவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களின் மூலமும் இதை நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான்.அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள்.இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது.
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள்
(அல்குர்ஆன் 83 : 15)
மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண்கூடாக காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாக பார்க்கிறோமோ அதுபோன்று அல்லாஹ்வை காண்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ்
நூல் : (புகாரி : 7435)
அல்லாஹ்வை பார்ப்பது என்பது சாதாரணமான ஓன்றல்ல, மிகப்பெரிய பாக்கியம், சொர்க்கவாசிகள் சுவர்கத்தில் நுழையும் போது இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான்.நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச்செய்யவில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா? என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக எதுவும் இருக்காது,
அறிவிப்பாளர் : ஸþஹைப்
நூல் : (முஸ்லிம் : 266)

அல்லாஹ் பேசமாட்டான் என்பதை நல்லவார்த்தைகளால் அன்போடு பேசமாட்டான் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்., ஏனெனில் அல்லாஹ் நரகவாசியைப் பார்த்து வேதனையை சுவை என்று கூறுவதாக திருறைக் குர்ஆன் கூறுகிறது.
சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்.)
அல்குர்ஆன் ( 44 : 49 )
இன்னும் கேலிசெய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்தமாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்கமாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும் நம்பத்தகுந்த நபிமொழியிலும் கிட்டத்தட்ட பத்து நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்கள் என்று பலகீனமான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த 12 நபர்கள் யார் யார் என்பதை வரிசையாக இனி பார்ப்போம்.
(1) வேதத்தை மறைத்தவர்கள்
அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும்மாட்டான். அவர்களைத் தூய்ûம்படுத்தவும்மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அல்குர்ஆன் ( 2 : 174 )
 இன்று பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்த தவற்றை செய்துவருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸþக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்கள் அவர்களிடம் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.
 உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது பாத்திஹா கதம் போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆலிம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டது. இவற்றை செயல்படுத்தும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன்வருவதில்லை. பல வியாக்கானங்களைக் கூறி அவர்கள் செய்வதையே சரி காண்கிறார்கள்.
 இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்க்ள் எண்ணிப்பார்ப்பதில்லை.
இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிடமாட்டான்.
உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
அல்குர்ஆன் (15 : 92)
யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.
அல்குர்ஆன் (7 : 6)
இதைத் தெளிவாக சஹாபாக்கள் விளங்கியிருந்தார்கள். அபூஹீரைரா (ரலி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சஹாபாக்கள் குறையாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அபூஹீரைரா (ரலி) அவர்கள் ஓரு பொருட்டாக கருதாமல் தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்கு கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவாகள் எண்ணியதே இதற்கு காரணம்.
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழி யையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய) வர்களும் சபிக்கின்றனர்.
அல்குர்ஆன் (2 : 159)
இந்த வசனத்தை அபூஹீரைரா (ரலி) அவர்கள் சுட்டிகாட்டி இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஓரு ஹதீஸைக் கூட கூறியிருக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 118)
நாம் சிறிய சிறிய விஷயங்களில் உறுதிமொழி வாங்கமாட்டோம். மிக முக்கியமான விஷயத்தில் தான் உறுதிமொழி வாங்குவோம். மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தை செய்யக்கூடாது என்று நமக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்களான யூத கிரிஸ்தவர்களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தீமையை சம்பாதித்துக் கொண்டார்கள்.
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது
அல்குர்ஆன் (3 : 187)
நாம் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற்காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோர்களிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் (3 : 77)


(2) பொய்சொல்லி வியாபாரம் செய்தவர்கள்
இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்கு பொய் வியாபாரத்தில் கலந்துவிட்டது. உண்மையைக் கூறி நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய்சொல்லி ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
 நியாயமாக பிழைப்பவனுக்கு குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான் பரகத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரகத்தை அளித்துவிடுகின்றான். இதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமைபடைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.
அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல் :  (புகாரி : 2110)
வியாபாரிகள் அனைவரும் பொய்சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.வியாபாரி அசல் விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத்தயாராக இல்லை. அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்களில் இவ்வாறு பொய் கூறி வியாபாரம் செய்தவனும் ஓருவனாவான்.
மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும்மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஓருவன் தன் பொருளை அதிக விளைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விளையை விட அதிக விளைகொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2369)
(3) சுயநலத் தொண்டன்
ஓரு இயக்கத்திற்கோ அல்லது ஓரு குழுவிற்கோ நாம் ஓருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதாக இருந்தால் பொதுநலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும். இயக்கத்திற்கு விசுவாசமாக நடக்கும் நாணயமானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்கு மட்டும் பலனளிக்கும் நபரை தேர்வு செய்யக் கூடாது. நியாயமானவர்களின் முடிவு அப்படி இருக்கும்.
ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதை கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக கொல்லைக்காரர்களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்குளுக்கு வழங்கவில்லையென்றால் அவனை பகைக்கிறார்கள்.
 இன்று நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஓரு கட்சியில் தொண்டனாக இருப்பவர் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக உள்ளார். நேற்றுவரை தன் தலைவனை போற்றி புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக்கொண்டிருக்கிறாôகள். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் வெறுக்கிறார்கள். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கும் அல்லாஹ் இந்த தண்டனையை வழங்குவான்.
அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்,
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2358)
தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை செய்யும் படி கூறினால் அவருக்கு கட்டுப்பட கூடாது. ஏனெனில் (அல்லாஹ்வுக்கு) மாறுசெய்வதில் கட்டுப்படுதல் இல்லை. கட்டுப்படுதல் என்பது நல்ல விஷயத்தில் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலீ)
நூல் : (புகாரி : 7257)
தலைவர் அநீதமாக நடந்தாலும் அவருக்கு எதிராக நாம் களம் இறங்கக்கூடாது.
நமது தேவையை  அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறக்கூடாது. தலைவர் நம்மை விட அழகில் அந்தஸ்த்தில் தாழ்ந்தவராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும்.
                விரைவில் உங்களை விட பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்களும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி : 3603)
                உலர்ந்த திராட்சைப் போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்ப நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரது சொல்லை) கேளுங்கள். (அவருக்கு) கீழ்படியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்
நூல் : (புகாரி : 7142)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites