(6) செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன்
பிறருக்கு தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்கமாட்டான். அவனிடம் பேசமாட்டான். அவனை பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான்.
நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதிலும் தான் செய்த உதவியை சொல்லிக்காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட உதவி செய்துவிட்டு சொல்லிக்காட்டுபவன் அதிக குற்றத்திர்குரியவன். அவனுக்கு சாதாரண தண்டனை மறுமையில் கிடைக்காது. கடுமையான தண்டனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான் (அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல் : (முஸ்லிம் : 171)
தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித்தந்தாலும் அவருக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது, இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் (2 : 264)
ஓரு வழவழப்பான் பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்தப் பாறையின் மீது மழை நீர் விழும்போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு சிதறி காணாமல் போய்விடும், பாறையின் மீது சிறிய மண்துகளைக்க கூட காணமுடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காக தர்மம் செய்தவனின் செயல்கள் அûûத்தும் அளிக்கப்பட்டுவிடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.
தான் செய்த உதவியை சொல்லிக்காட்டாதவற்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செல விட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனி டம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் (2 : 262)
அல்லாஹ் குôஆனில் சொர்க்கவாசிகளின் சில பண்புகளை சுட்டிக்காட்டுகிறான்.அவர்கள் யாருக்கு உதவிசெய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்வதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொறுத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை
அல்குர்ஆன் (76 : 8)
(7) விபச்சாரம் செய்த வயோதிகன்
பொதுவாக வயோதிகம் என்பது மனிதனின் ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கிவிட்ட நிலையாகும். ஓரு வாளிபனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது. அவனைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்த தண்டனையை வழங்குகிறான்.
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம் : 156)
அல்லாஹ்வின் பார்வையில் பெறும்பாவமாக கருதப்படும் பாவங்களில் விபச்சாரம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்றாவது பாவமாக கூறினார்கள். அல்லாஹ் பெரும்பாவமாக ஓன்றை நினைக்கிறானென்றால் அதற்கு சாதாரண தண்டனையா கிடைக்கும். இந்த விஷயத்தில் நாம் அதிகம் எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகப்பெரியது எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது என்று சொன்னார்கள். நிச்சயமாக அது மிகப்பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு பிறகு எது என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உனவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொள்வது என்று சொன்னார்கள். நான் பிறகு எது என்று கேட்க உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி : 4477)
ஓரு முஸ்லிம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான். அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது. காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரணவேலையில் திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு. நமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரகவாதியாகவோ என்று நிர்ணயிக்கிறது. ஆக இந்த கொடிய பாவத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ளவது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.
விபச்சாரன் விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஓருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஓருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஓருவன் மக்கள் பார்த்துக்கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளையடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2475)
இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு 100 கசையடிகளை தரும் படி அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான். அவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றான். அவர்கள் வெட்கப்பட்டு தலைகுனிவதற்காகவும் மற்றவர் எவரும் இந்த மானக்கேடான செயலில் ஈடுபடாமல் இருப்பதற்காகவும் அவர்கள் பெறும் தண்டனையை காணும் படியும் கூறுகின்றான்.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
அல்குர்ஆன் (24 : 2)
(8) பொய்கூறும் அரசன்
பொதுவாக அரசன் குடிமக்களில் யாரைக் கண்டும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை, யாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்கு கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் அவன் பொய் சொல்வது பொய்சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் பொய் சொல்லக்கூடாது என்றிருக்கும் போது எந்த நிர்பந்தமும் இல்லாத இவன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தினால் இவனும் இந்த துரதிஷ்டநிலையை அடைகின்றான்.
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம் : 172)
சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய்சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விட பொய்களே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஓரு பொருட்டாக் கருதுவதில்லை. ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறுசெய்வான். அவனை நம்பி எதையும் ஓப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
அறிவிப்பாளபர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 33)
நாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஓரு மனிதர் உண்மைப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகிவிடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஓரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெறும் பொய்யர் எனப்பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
நூல் : (புகாரி : 6094)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக