அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 ஜனவரி, 2011

மண வாழ்வா?



அப்துந் நாஸிர், கடையநல்லூர்
"வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தை நடத்திப் பார்'' என்பர். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் இன்றை தவ்ஹீத்வாதிகளின் நிலைமை அப்படித் தான் இருக்கிறது.
திருமணம் என்றாலே அங்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், குலைதள்ளிய வாழை மரத்தைக் கட்டினால் மணமக்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் வாழை மரங்களைக் கட்டி வைத்தல், கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக ஆரத்தி எடுத்தல்.
மணமகனுக்கு மாலை மாட்டுதல், அந்த மாலையைக் கூட பல வருடங்களுக்குப் பாதுகாத்தல், அந்த மாலையை யாராவது மிதித்து விட்டால் மணமக்களுக்கு நல்வாழ்க்கை அமையாது என்று எண்ணிக் கொண்டு காய்ந்து வாடிப் போன மாலையைக் கிணற்றில் போடுவது, அல்லது குழி தோண்டிப் புதைத்தல்.
மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல், மணமகளை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல், மணமகள் மாப்பிள்ளையின் வீட்டை அடையும் போது படியரிசி போடுதல், தாலி கட்டுதல், அதில் இத்தனை கருகமணி இருக்க வேண்டும், இத்தனை நெல் இருக்க வேண்டும், இத்தனை கோதுமை இருக்க வேண்டும், இத்தனை பவளம் இருக்க வேண்டும் என்று ஒரு மூட நம்பிக்கை, தாலி இல்லையென்றால் அவள் மனைவியாக மாட்டாள் என்ற நம்பிக்கை, தாலி கட்டும்போது அனைத்துப் பெண்களும் சுற்றி நின்று ஓவென்று சப்தமிடுதல்.
அனைவருக்கும் முன்னிலையில் மணமகளை மணமகனுக்குப் பாலும் பழமும் கொடுக்கச் செய்தல், அனைவருக்கும் முன்னிலையில் மாப்பிள்ளை பெண்ணை சுமந்து செல்ல வேண்டும் என்ற அசிங்கம், பந்தக் கால் தோண்டும் போதும் ஃபாத்திஹா, மாலையை மாட்டும் போதும், தொப்பியை மாட்டும் போதும், மாப்பிள்ளை புத்தாடை அணியும் போதும் ஃபாத்திஹா ஓதுதல்.
திருமணத்தின் போது பெண்ணைப் பெற்றெடுத்த தந்தை வலியாக இருந்து திருமணம் செய்து வைப்பதற்கு பதிலாக யாரோ ஒருவர் வலியாக இருந்து அப்பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது, திருமண ஒப்பந்தத்தின் போதும் கூட நபியவர்கள் தடை செய்த பிரார்த்தனையாகிய "பிர்ரிஃபாயி வல் பனீன்'' (இறைவா, இவர்களுக்கு செல்வத்தையும், ஆண்மக்களையும் வழங்குவாயாக) என்று ஒன்றுக்கு மூன்று முறை ஓதுவது இப்படி எண்ணற்ற அனாச்சாரங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
நபி வழியின் அடிப்படையில் இப்படிப்பட்ட அனாச்சாரங்களைத் தவிர்த்து, பித்அத்துகள் இல்லாமல் ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மார்க்கத்தை விளங்காத பெற்றோர்கள், சொந்த பந்தங்கள், வட்டாரவாசிகள் இவர்கள் அனைவருக்கும் மத்தியில் ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது போர்க்களம் போன்றாகி விட்டது.
ஒரு ஆண்மகனுக்கே இவ்வளவு சிரமங்கள் இருந்தால் ஒரு பெண் மணியின் நிலை என்ன? என்பதை நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்றைக்கு ஏகத்துவத்தை விளங்கிய மணமகன் எவ்வளவு சிரமங்கள் துன்பங்கள் வந்தாலும் பெற்றோர்கள், குடும்பம், சமுதாயம் இவற்றையெல்லாம் எதிர்த்து நின்று தனது லட்சியத்தில் வெற்றியடைவதைப் பார்க்கிறோம்.
ஆனால் இது போன்ற நிலைகளை மார்க்கத்தை விளங்கிய ஒரு பெண் சந்திக்கும் போது தான் அவளுடைய நிலை இன்றைய சமுதாயத்தில் பரிதாபத்திற்குரியதாகி விட்டது. அவளுடைய மண வாழ்க்கை அவளுக்கு மரண வாழ்வைப் போன்று மாறி விடுகின்றது.
ஆம்! எனக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒரு சகோதரி! மார்க்கக் கல்வி பயின்றவர். அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அந்தச் சகோதரி ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதாவது "என்னுடைய திருமணம் நான் விரும்பிய அடிப்படையில் அனாச்சாரங்கள் இல்லாமல், மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் இல்லாமல் நபிவழியின் அடிப்படையில் நடைபெற வேண்டும்'' என்பதே அந்தச் சகோதரியின் நிபந்தனை. அதற்கு மணமகனும் சம்மதிக்கின்றார். ஆனால் திருமணம் நெருங்கி வரும் போது மணமகன் வாக்குறுதியை மீறுகின்றார். எனது குடும்பத்தினர் சம்மதிக்க மாட்டார்கள். வட்டாரத்தில் பிரச்சினை வரும். எனவே சமுதாய வழக்கப்படித் தான் திருமணத்தை நடத்த முடியும் என்று கூறி விட்டார்.
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதைப் போல மாப்பிள்ளையின் அண்ணன் மனைவிமார்கள் "நாங்கள் எங்கள் திருமணத்தில் 50000 ரூபாய் வரதட்சணை கொடுத்தோம். இன்னும் பண்ட பாத்திரங்கள் ஏராளமாக, சீர் வரிசையாகக் கொடுத்தோம். எனவே அதைப் போன்று இந்தக் கல்யாணத்திலும் வாங்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டோம்'' என்று கூறி அவர்களும் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.
தன்னுடைய திருமணம் நபி வழியின் அடிப்படையில் நடக்க வேண்டும் என விரும்பிய  அந்தச் சகோதரிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்தச் சகோதரி எவ்வளவு தான் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் பெற்றோர்களின் கெஞ்சுதல், குடும்பத்தினரின் கெடுபிடிகள் இவையெல்லாம் அவளை இயலாமலாக்கி விட்டது.
போதாக் குறைக்கு "ஒரு ஆம்புள பையனா இருந்தாக் கூட  பரவாயில்லை. ஒரு பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு வைராக்கியமா?'' என்று அந்தச் சகோதரியைப் பற்றி ஊர்ப் பேச்சு வேறு. இப்படித் தான் இன்றைக்கு எண்ணற்ற குடும்பங்களில் மண வாழ்க்கை மரண வாழ்வைப் போன்று விரும்பாத முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு இப்படியென்றால் மற்றொரு தவ்ஹீத் குடும்பத்தில் தங்கள் வீட்டுப் பெண்ணை மணமகனின் கொள்கையை கவனிக்காமல் செல்வத்தையும் குடும்ப பாரம்பரியத்தையும் பார்த்து திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். ஆனால் மாப்பிள்ளையோ சமாதி வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர். தினமும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை போராட்டம் போன்று தான் ஆகிவிட்டது. அந்தச் சகோதரியின் கணவர் வேண்டுமென்றே தர்ஹாவில் சமாதிக்கு நேர்ச்சை செய்யப்பட்டவற்றைக் கொண்டு வந்து நீ இதை சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றார்.
இதைச் சமாளிப்பதற்காகவே அந்தச் சகோதரி அந்தக் குடும்பத்தில் மௌலூது, ஃபாத்திஹா போன்ற இணை வைப்புக் காரியங்கள் நடைபெறும் போது நோன்பு நோற்றுக் கொள்கின்றார்.
இந்நிலையில் மார்க்கத்தை விளங்கிய அனைவரும் ஒன்றை சிந்ததிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளோம். அந்தக் கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்தால் தான் நாளை மறுமையில் சுவனம் செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில் நம்முடைய வாழ்க்கை மறுமையில் வெற்றி பெற்ற வாழ்க்கையாக அமைய வேண்டும் என்றால் ஒரே கொள்கையைச் சார்ந்தவர்களோடு நம்முடைய திருமண வாழ்வு அமைய வேண்டும். கொள்கையற்ற குடும்பங்களோடு சம்பந்தம் செய்த எத்தனையோ பேர் இன்றைக்கு அவர்களைப் போன்றே மாறி விட்டதை நாம் காண முடிகிறது.
தவ்ஹீத் சிந்தனையுடைய மணமகனைத் தான் நாங்கள் திருமணம் செய்வோம் என்று உறுதியோடு இருக்கக் கூடிய பல சகோதரிகள் பல்லாண்டுகள் இன்னும் திருமணம் ஆகாமல் தேங்கிக் கிடக்கிறார்கள். மேலப்பாளையம் போன்ற ஊர்களில் இது போன்று காத்திருக்கக் கூடிய சகோதரிகள் ஏராளம். ஆனால் தவ்ஹீத் கொள்கை உடைய சகோதரர்களின் நிலையோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. சமாதி வழிபாட்டில் ஊறிய குடும்பங்களில் பெண்ணெடுத்து கொள்கையை மறைத்து வாழக்கூடிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னால் மேலப்பாளையத்தைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர் ஒருவர் செல்போனில் என்னைத் தொடர்பு கொண்டு தன்னுடைய குடும்பத்தின் நிலையைப் பற்றிக் கூறினார். அவருடைய வாழ்க்கை நிலையைப் பற்றி படிக்கக் கூடிய ஒவ்வொரு தவ்ஹீத் சகோதரனும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளான்.
அவர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய தாய் தந்தையர்கள் வயோதிகர்கள். அவருடைய சகோதரியும் மார்க்கப் பற்றுடையவர். வரதட்சணை வாங்காத, அனாச்சாரங்கள் இல்லாத திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தான் அவர்களின் விருப்பம். ஆனால் இன்று வரை அப்படிப்பட்ட மணமகன் யாரும் அமையவில்லை. மணமகளுக்கோ வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
தன்னுடைய மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் பெற்றோர்களின் நோய் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருதி, என்னுடைய சகோதரியின் திருமணத்திற்காகவும், பெற்றோர்களின் மருத்துவச் செலவிற்காகவும்  நான் வங்கியில் கடன் வாங்கலாமா? என்பது தான் அந்தச் சகோதரரின் கேள்வி.
இப்படி எத்தனை குடும்பங்கள் இன்றைக்கு வாழ்வில் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதை ஏகத்துவ சிந்தனை உடையவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் சமாதி வழிபாட்டிற்கு எதிராகவும், மத்ஹப் குப்பைகளுக்கு எதிராகவும் மிகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த சில சகோதரர்கள் இன்று வாய்மூடி மவுனிகளாக இருப்பதைக் காண முடிகின்றது. அவர்களின் அருகில் சென்று விசாரிக்கும் போது தான் அவர்களின் மனக் குமுறல்கள் நமக்குத் தெரிகிறது.
கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர் ஒருவர். மிகவும் தீவிரமானவர். அவர் தன்னுயைட மகளை வரதட்சணை இல்லாமல், நபிவழியின் அடிப்படையில் யாராவது திருமணம் செய்வார்களா? என்று பல சகோதரர்களிடம் வெட்கத்தை விட்டு, வாய் விட்டுக் கேட்டுப் பார்த்தார். ஆனால் இறுதியில் யாரும் முன்வராத காரணத்தினால் இன்று ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து அவருடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் யாரிடம் சென்று என்ன பேச முடியும்? என்று அவர் கேட்கின்றார். இன்றைக்கு இரண்டு, மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற தவ்ஹீத் சகோதரர்கள் தன்னுடைய மகள்களுக்குத் திருமணம் ஆக வேண்டுமே என்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சம் தவ்ஹீத் சகோதரர்களோடு உள்ள தொடர்பை குறைத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலைகளை தமிழகத்தில் உள்ள மார்க்கப் பிடிப்புள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
அதே போன்று, ஸஹாபியப் பெண்களைப் போன்ற கொள்கை உறுதி நம்முடைய சகோதரிகளிடமும் வர வேண்டும். நான் திருமணம் செய்தால் வரதட்சணை வாங்காத, நபி வழியின் அடிப்படையில் திருமணம் செய்யக் கூடிய மணமகனைத் தான் தேர்ந்தெடுப்பேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என்கின்ற மனவுறுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சமுதாயத்தின் தியாகத்தில் தான் பின்வரக்கூடிய சமுதாயத்திற்குப் பலன் இருக்கிறது. அது போன்று இன்றைய நம்முடைய சகோதரிகள் இது போன்ற ஒரு உறுதிப்பாட்டைக் கடைப் பிடித்தால் நிச்சயம் வருங்காலம் பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு வாழ்க்கையைப் பெற்றுத் தரும். உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்வு இதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்த போது) அபூ தல்ஹா(ரலி)  அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள்.  அதற்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் "அபூ தல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்பட மாட்டார்கள். ஆனால் நீங்கள் காஃபிரான மனிதராக இருக்கின்றீர்கள். நானோ முஸ்லிமான பெண்மணியாக இருக்கின்றேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது தான் என்னுடைய மஹராகும். அதுவல்லாத வேறெதையும் நான் உங்களிடம் கேட்க மாட்டேன்'' என்று கூறினார். அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.  அதுவே உம்மு ஸுலைம் அவர்களின் மஹராகவும்  ஆனது.
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி)
நூல்: நஸயீ (3289)
இந்த ஹதீஸின் ஒரு அறிவிப்பாளராகிய ஸாபித் அவர்கள் கூறுகிறார்கள். "உம்மு ஸுலைம் அவர்களைத் தவிர இஸ்லாத்தை மிகச் சிறந்த மஹராக ஆக்கிய எந்தப் பெண்ணையும் நான் கேள்விப் பட்டதில்லை''
தன்னை விரும்பிப் பெண் கேட்டவரைக் கூட, அவர் மிகச் சிறந்தவராக இருந்தும் கூட தன்னுடைய கொள்கையைக் காரணம் காட்டி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் மறுக்க முன் வந்தார்கள். கொள்கையை ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களிக்கிறார்கள்.
அவர்களுடைய இந்தக் கொள்கைப் பற்று தான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது. மார்க்கப் பிடிப்புள்ளவர்களை இறைவன் கைவிட மாட்டான் என்பதைத் தான் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்வு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான். (65:3)
எனவே நாம் விளங்கிய     சத்தியக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை உறவினர்களாக ஆக்கும் போது தான் அது நமக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றியைப் பெற்றுத் தரும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites