அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 ஜனவரி, 2011

இமாம் ஷாஃபி (ரஹ்)



இப்னு யூசுஃப், கடையநல்லூர்
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொழுகை, நோன்பு போன்ற சட்டங்களில் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றி வருகின்றனர். இந்த ஷாஃபீ மத்ஹபை, இமாம் ஷாஃபி அவர்கள் தோற்றுவித்தது என்று பலர் நினைக்கின்றனர். மேலும் தெளிவான திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளுக்கு மாற்றமாக ஷாஃபீ மத்ஹபில் சட்டம் இருந்தாலும் மத்ஹபையே பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
ஆனால் உண்மையில் இவர்கள் பின்பற்றும் இமாம் ஷாஃபி அவர்கள் தனி மத்ஹபை உருவாக்கவில்லை. மாறாக திருக்குர்ஆன், நபிமொழியை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் படித்து ஷாஃபீ மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் தெளிவடைய வேண்டுகிறோம்.
பிறப்பு
இமாம் ஷாஃபி அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிலுள்ள "கஸ்ஸா' என்ற ஊரில் ஹிஜிரி 150ஆம் வருடம் பிறந்தார்கள். இவர்களுடைய இயற்பெயர்: முஹம்மத், இமாம் அவர்களின் தந்தையார் பெயர் இத்ரீஸ் என்பதாகும். ஷாஃபி இமாம் அவர்களின் பரம்பரை நபி (ஸல்) அவர்களுடைய பாரம்பரியமாகிய "குஸை' என்ற கிளையாரிடமிருந்து ஆரம்பித்ததாகும்.
இமாம் ஷாஃபி அவர்கள் நபி (ஸல்) அவர்களோடு "அப்து மனாஃப்' கோத்திரத்தில் இணைகிறார்கள். அதாவது நபியவர்களின் பாரம்பரியமும், ஷாஃபி இமாம் அவர்களின் பாரம்பரியமும் "அப்து மனாஃப்' கிளையிலிருந்து பிரிகிறது.
இளமைப் பருவமும்  கல்வி கற்றலும்
இமாம் ஷாஃபி அவர்களுக்கு இரண்டு வயதான போது இமாமவர்களின் தாயார் மக்கமா நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். அங்கு தான் அவர்கள் வளர்ந்தார்கள். இன்னும் குர்ஆனை ஓதினார்கள். இமாம் அவர்கள் "ஹுதைல்' எனும் கோத்திரத்தாரிடம் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். அவர்களிடமிருந்து அரபி மொழிப் புலமையையும், கவிதைகளையும் கற்றுக் கொண்டார்கள். நாளடைவில் "ஹுதைல்' கோத்திரத்தாரின் கவிதைகளில் மக்களிலேயே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகி விட்டார்கள்.
இமாம் ஷாஃபி அவர்கள் "ஃபிக்ஹ்' எனும் மார்க்கச் சட்டக் கலையை அன்றைய சூழ்நிலையில் மக்காவில் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் முஃப்தியாக இருந்த அறிஞர் "முஸ்லிம் பின் ஹாலித் அஸ்ஸன்ஜி' என்பவரிடம் கற்றார்கள்.
பிறகு மதீனாவிற்குப் பயணம் செய்து அங்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் மாணவராகச் சேர்ந்தார்கள். அவர்களிடமிருந்து "முஅத்தா' என்ற நூலைப் பாடம் பயின்று அதை முழுவதுமாக மீண்டும்  அவர்களிடம் படித்துக் காட்டினார்கள். ஷாஃபி அவர்களின் நுண்ணறிவும், மனன சக்தியும், சமயோசிதமும், இமாம் மாலிக் அவர்களிடம் மிகவும் கண்ணியமிக்கவராகவும், நெருக்கத்திற் குரியவராகவும் ஆக்கியது.
தவறான குற்றச்சாட்டும் தெளிவும்
ஹிஜிரி 184ம் வருடம் யமன் நாட்டின் ஒரு பகுதியில் இமாம் ஷாஃபி அவர்கள் பணியாற்றும் பொறுப்பை ஏற்றார்கள். அப்போது இமாம் அவர்களைப் பற்றி ஒரு தவறான பொய் செய்தி அன்றைய மன்னராக இருந்த ரஷீத் என்பவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அதாவது இமாம் ஷாஃபி அவர்கள் ஷியா கொள்கையைச் சார்ந்தவர் என்றும் "அஹ்லுல் பைத்' எனும் நபியவர்களின் குடும்பத்தினர் மட்டும் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதாகவும் அவர்கள் மீது தவறான புகார் கூறப்பட்டது.
இதனால் அவர்கள் பக்தாத் நகரத்திற்கு அனுப்பப்பட்டார்கள். இதன் பிறகு முஹம்மத் பின் ஹசன் என்பவர் ரஷீத் அவர்களிடம் சென்று ஷாஃபி இமாம் அவர்களுக்கும், ஷியா கொள்கைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பதையும், அவர்கள் அதற்கு எதிரானவர் என்பதையும் அவர் திருப்தி கொள்ளும் வகையில் விளக்கினார்கள். இதன் காரணத்தினால் முஹம்மத் பின் ஹசன் அவர்களுக்கும் இமாம் ஷாஃபி அவர்களுக்கும் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது.
முஹம்மத் பின் ஹசன் அவர்களிடமிருந்து இமாம் ஷாஃபி அவர்கள் ஏராளமான அறிஞர்களின் நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள். இதைப் பற்றி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். "நான் பக்தாத் நகரத்திலிருந்து வெளியேறும் போது முஹம்மத் பின் ஹசன் அவர்களின் ஞானத்திலிருந்து ஒரு ஒட்டகத்தின் சுமை அளவிற்குப் பெற்றவனாக வெளியேறினேன்' என்று குறிப்பிடுகிறார்கள்.
பிறகு மீண்டும் மக்கமா நகரத்திற்கு வந்தார்கள். கல்விக்காக இராக்கிற்கும், ஹிஜாஸ் பகுதிக்கும் இடையே எண்ணற்ற தடவை பயணம் மேற் கொண்டார்கள். பிறகு ஹிஜிரி 199ம் ஆண்டிலிருந்து எகிப்து தேசத்தில் தங்கியிருந்தார்கள். அங்கு தான் அவர்கள் தங்களது மார்க்கப் பணியைத் துவக்கினார்கள். இமாம் அவர்களின் ஆய்வுகளும், கருத்துக்களும் உலகெங்கும் பரவியது. அவர்களிடம் கல்வி பயின்ற தலைசிறந்த மாணவர்களும் உருவானார்கள்.
நபி வழியைப் பாதுகாத்த இமாம் ஷாஃபி
இமாம் ஷாஃபி அவர்கள் ஃபிக்ஹ் துறையில் மட்டுமின்றி ஹதீஸ் கலை தொடர்பான விஷயங்களிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், சிந்தனை மிக்கவர்களாகவும் விளங்கினார்கள்.
நபியவர்கள் கூறியதாக வரக்கூடிய ஹதீஸ் உறுதியான அறிவிப்பாளர்கள் மூலம், அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பு விடுபடாமல் வருமென்றால் அதை யார் செய்திருந்தாலும்,  செய்யா விட்டாலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இமாம் ஷாஃபி அவர்களின் உறுதியான கருத்தாகும்.
ஆனால் இது இமாம் மாலிக் அவர்களின் கருத்துக்கு மாற்றமானது ஆகும். இமாம் மாலிக் அவர்கள் அதை மதீனாவாசிகள் செய்திருந்தால் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
மேலும் இது இமாம் அபூ ஹனீஃபாவின் கருத்துக்கும் மாற்றமானதாகும். அவர்கள் அதே செய்தி இன்னும் பல அறிவிப்பாளர்கள் மூலம் வந்தால் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இமாம் மாலிக் தன்னுடைய ஆசிரியராக இருந்தாலும், இமாம் அபூ ஹனீஃபா தனக்கு முந்திய கால அறிஞராக இருந்தாலும் அவர்களுடைய கருத்து தவறு என்பதைத் தெளிவு படுத்தி அதற்கு மாற்றமான தன்னுடைய கருத்தை இமாம் ஷாஃபி அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக ஹதீஸ் கலை அறிஞர்கள் இமாம் ஷாஃபி அவர்களுக்கு "நாஸிருஸ் ஸுன்னா' நபி வழிக்கு உதவி செய்தவர் என்ற பட்டப் பெயரைச் சூட்டியுள்ளனர்.
ஹதீஸ் கலை தொடர்பாக "அல் உம்மு'' என்ற நூலில் "அர்ரிஸாலா'' என்ற தொகுப்பை மிகப் பெரும் ஆய்வாக இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்துள்ளார்கள். ஹதீஸ் கலை தொடர்பாகவோ, நபி வழிச் சட்டங்கள் ஆய்வு தொடர்பாகவோ, நூல் எழுதக் கூடிய யாராக இருந்தாலும் அவர் இமாம் ஷாஃபி அவர்களுக்குக் கடன் பட்டவராகத் தான் இருப்பார்கள். அந்த அளவிற்கு யாரும் மறுக்க முடியாத தெளிவான ஆய்வுகளை வழங்கி உள்ளார்கள்.
அறிஞர்களின் கருத்துகள்
பல ஹதீஸ் கலை வல்லுநர்கள் இமாம் ஷாஃபி அவர்களின் ஹதீஸ் கலை தொடர்பான ஆய்வுகளைப் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
"ஹதீஸ் கலை அறிஞர்கள் என்றாவது ஒரு நாள் பேசினால் அது இமாம் ஷாஃபி உடைய நாவைக் கொண்டு தான் இருக்கும் (அதாவது அவரது கருத்தாகத் தான் இருக்கும்)'' என்று  முஹம்மத் பின் ஹசன் அவர்கள் கூறியுள்ளார்கள்
"ஹதீஸ் கலை அறிஞர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை ஷாஃபி விழிக்கச் செய்தார்'' என அறிஞர் "ஸஃபரானி' அவர்கள் கூறியுள்ளார்கள்.
"நாங்கள் நபியவர்களுடைய ஹதீஸ்களில் முஜ்மல் (மூடலானது) எது? "முஃபஸ்ஸிர்'' (தெளிவு படுத்துவது) எது? "நாஸிஹ்'' (பழைய சட்டத்தை மாற்றிய ஹதீஸ்) எது? "மன்ஸூஹ்'' (மாற்றப்பட்ட சட்டம்) எது? என்பதை ஷாஃபியுடன் அமர்கின்ற வரை அறியாதவர்களாகத் தான் இருந்தோம்'' என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஹுல்யத்துல் அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 97)
"(ஹதீஸ்கலை தொடர்பாக எழுதக்கூடிய) யாரும் தன்னுடைய அந்தத் தொகுப்பிலே ஷாஃபி உடைய உபகாரம் இருந்தே தவிர  மையையோ, பேனாவையோ தன்னுடைய கையால் தொட முடியாது'' என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுல் அஸ்மா பாகம்: 1, பக்கம்: 71)
"நான் ஷாஃபி அவர்களுக்குரிய "அர்ரிஸாலா'' என்ற தொகுப்பை பார்த்தவுடன் அது என்னை  மற்ற அனைத்தையும் மறக்க வைத்து விட்டது. ஏனெனில் நிச்சயமாக நான் அறிவுடைய, ஞானம் நிறைந்த, நல்லதை நாடக்கூடிய ஒரு மனிதரின் வார்த்தைகளைப் பார்த்தேன். நான் அவருக்காக அதிகம் பிரார்த்தனை செய்யக் கூடியவன்'' என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அஸ்ஸுன்னா பாகம்: 1, பக்கம்: 440)
கொள்கைப் பிடிப்பு
ஷாஃபி அவர்களுடைய கருத்துக்களையும், நடைமுறைகளையும் நாம் ஆய்வு செய்யும் போது அவர்கள் தமக்கென்று பிரத்யேகமாக எந்த ஒரு மத்ஹபையும் உருவாக்கவில்லை. குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் தான் அவர்கள் அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இதற்குப் பின்வரும் கருத்தை நாம் சான்றாகக் கொள்ளலாம்.
நபியவர்களுடைய காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய காலத்திலும், உமர் (ரலி) அவர்களுடைய காலத்திலும் இமாம் மிம்பரில் அமரும் போது கூறுகின்ற முதல் பாங்கு தான் ஜும்ஆவிற்குரிய பாங்காக இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆட்சியில் மக்கள் அதிகரித்ததால் உஸ்மான் இரண்டாவது பாங்கைக் கூறுமாறு கட்டளையிட்டார். எனவே அது கூறப் பட்டது. அதன் மீதே அது நிலைத்தும் விட்டது. "அதாவு'' என்ற அறிஞர் உஸ்மான் அவர்கள் தான் இதனைப் புதிதாக உருவாக்கினார்கள் என்பதை மறுத்து முஆவியா தான் அதனைப் புதிதாக உருவாக்கினார் என்று கூறுகிறார்.
ஷாஃபி இமாம் அவர்கள் "இரண்டில் எதுவாக இருந்தாலும் நபியவர்களின் காலத்தில் இருந்த நடைமுறை தான் எனக்கு விருப்பமானதாகும்' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அல் உம்மு பாகம்: 1 பக்கம்: 195)
ஆதாரம் இல்லாமல் ஏற்காதே!
எந்த ஒரு மார்க்கச் சட்டமாக இருந்தாலும் அதனை ஆதாரமில்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் இமாம் ஷாஃபி அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள் என்பதை பின் வரக்கூடிய அவர்களது கருத்திலிருந்து நாம் உறுதியாக விளங்கிக் கொள்ள முடியும்.
இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும்.  அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டி விடும். (இது போன்று தான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனை அக்கல்வி அவன் அறியாத விதத்தில் அவனை வழிதவறச் செய்து விடும்) (மத்கல் - இமாம் பைஹகீ பாகம்: 1, பக்கம்: 211)
ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பின்பற்று!
இமாம் ஷாஃபி அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் தான் ஆதாரமாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
மேலும் இமாம் ஷாஃபி அவர்கள் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள் என்பதையும், இதற்கு மாற்றமாக வேறு யாரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதையும் பின்வரும் அவர்களுடைய கூற்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் "நீ என்னை இணை வைப்பாளன் என்று நினைக்கிறாயா? அல்லது என்னுடைய இடுப்பில் (கிறிஸ்தவர்கள் போல்) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா? அல்லது தேவாலயத்திலிருந்து வெளியேறிய (கிறிஸ்த)வன் என்று நினைக்கிறாயா?
ஆம். நான் அதை (நபிவழியை) பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள். (முஹ்தஸர் அல் முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 58)
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம், நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் "எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்கவில்லையோ (அப்போது)  என்னுடைய அறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்' என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள். (முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)
நபிமொழிக்கு மாற்றமாக இருந்தால்...
"என்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நீங்கள் நபியவர்களின் வழி காட்டுதலைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் நபியவர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொல்லை விட்டு விடுங்கள். நிச்சயமாக நான் நபிவழியைத் தான் வலியுறுத்துபவன். (முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம்: 1 பக்கம்: 57)
நபிவழிக்கு மாற்றமாகக் கூறிய ஒவ்வொரு சட்டத்திலிருந்தும் உயிருடன் இருக்கும் போதும் இறந்ததற்குப் பிறகும் நான் விலகிக் கொள்கிறேன். (முஹ்தஸர் அல் முஅம்மல் பாகம்: 1 பக்கம்: 57)
நான் கூறிய ஒவ்வொன்றும் நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக இருக்குமென்றால் நபியவர்களுடைய ஹதீஸ் தான் ஏற்றமானதாகும். என்னை கண் மூடிப் பின்பற்றாதீர்கள். (முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம்: 1 பக்கம்: 57)
நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும் தான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து கேட்கவில்லை என்றாலும் சரியே! (முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம்: 1 பக்கம்: 57)
யார் நபிவழியைப் பின்பற்றுகிறாரோ நான் அவரோடு ஒன்று படுகிறேன். எவன் தடுமாறி அதனை விட்டு விடுகிறானோ அவனோடு நான் மாறுபடுகிறேன். நான் விட்டுப் பிரியாத என்னுடைய உறுதியான தோழன் நபியவர்களிடமிருந்து வருகின்ற உறுதியான நபிமொழிகள் தான். (முஹ்தஸர் அல்முஅம்மல்,      பாகம்: 1 பக்கம்: 57)
தவறு இல்லாத நூல்கள் இல்லை
ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். "நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறை வைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் "அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்' என்று தன் திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்தப் புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பி விட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழி தான் சரியானது என்பதாகும்) (முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)
இறப்பு
இமாம் ஷாஃபி அவர்கள் ஹிஜிரி 204ம் வருடம் வஃபாத் ஆனார்கள். இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன். அவர்கள் சென்று விட்டாலும் அவர்களுடைய ஆய்வுகள் இன்று வரை நிலைத்து நின்று நமக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்றன

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites