அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 5 மே, 2010

தலையங்கம்: துணிவுதான் துணை...!


First Published : 05 May 2010 12:23:00 AM IST


மும்பை நகருக்குள் கடல்வழியாக உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட வழக்கில், உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப்,  குற்றவாளி என்று மும்பை தனிநீதிமன்றம், அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளது.கசாப் மீது நிரூபிக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்துமே சட்டப்படியாக மரண தண்டனை அளிக்கத் தக்கவை. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 6-ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கசாபுக்கு தூக்கு தண்டனை உறுதி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்த தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதில்தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது.புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்சல் குரு கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டும், இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், இந்த வழக்கிலும் சில அரசியல் காரணங்களுக்காக,  கசாபுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும்கூட, அவரை பல்வேறு காரணங்களுக்காக தூக்கிலிட மாட்டார்கள் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வடஇந்தியாவின் பல்வேறு இடங்களில், கசாபுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கசாபுக்கு மரண தண்டனை அளித்தால் இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு குந்தகமான விளைவுகள் ஏற்படும் என்றும், "எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை இத்தீர்ப்பு' என இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய கருத்து தேவையற்றது என்றும் பல்வேறு செய்திகளை இந்தியப் பத்திரிகைகளும் எழுதி வருகின்றன.இந்தியாவில் மும்பையில் புகுந்து அனைவரையும் சுட்டுத்தள்ளிய கொலைகாரன் என்ற அளவில், கசாபுக்கு இந்தியக் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ அந்த தண்டனை விதிக்கப்படுகிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, இதனை வேறு அரசியல் கோணங்களில் பார்ப்பதும், அதற்காக நீதியை வளைக்க முற்படுவதும் நியாயமில்லை. எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளைக் குருவியைச் சுடுவதுபோல சுட்டு வீழ்த்திய ஒரு கொலைகாரன், தீவிரவாதி எந்த நாட்டை, எந்த மதத்தை, எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால்தான் என்ன? வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில், இதுபோன்ற பிரச்னைகளை அணுக முற்படுவதே குற்றம்.கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவருக்கு பாகிஸ்தான் உதவிடுமா என்ற கேள்வியை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிடம் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள். அவரும், "யாராவது கேட்டால் உதவுவோம்' என்று கூறியுள்ளார். யாராவது கேட்டால் என்று தெரிவித்திருப்பதன் மூலம் "யார் வேண்டுமானாலும்  கசாபுக்காக உதவி கோரலாம்' என்பதை அவர் மறைமுகமாகச் சொல்கிறார். அபத்தமான கேள்வி. விஷமத்தனமான பதில். நமது அரசு இதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறது.மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திட சதித்திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடமும் பாகிஸ்தான் இன்னமும் விசாரணை நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்த விசாரணையின் நீட்சியாக, கசாபிடம் விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருக்கிறது. இப்போது, கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டால், விசாரணை முடிவுறவில்லை என்ற அடிப்படையில், கைது செய்த 7 பேரையும் பாகிஸ்தான் விடுதலை செய்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன. தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் விசாரணைக்கு அனுமதித்தாலும், அந்த 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படுமா என்பது வேறுவிஷயம்.ஆனால் இதற்காகவெல்லாம், கசாபை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றிவிட இந்திய அரசு முயற்சிக்குமேயானால், இந்தியாவின் பலவீனம் வெளிப்படுமே தவிர, மனமாற்றத்தையோ அல்லது அச்சத்தையோ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளிடம் ஏற்படுத்திவிட முடியும் என்று கருதுவது தவறு. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் வாதிடும்போது, கசாப் பற்றி குறிப்பிடுகையில், "பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கொலை இயந்திரம்' என்றே வர்ணித்துள்ளார். தவறுக்குப் பொறுப்பேற்பது மட்டுமன்றி, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதுதான் நாம் பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக இருக்க முடியும்.கசாப் மூளைச் சலவை செய்யப்பட்ட கொலை இயந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அதனை இங்குள்ள இஸ்லாமிய அன்பர்களும், அமைப்புகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதுவது இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்ட, இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமிய சமுதாயத்தையே இழிவுபடுத்துவதாகும். அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பைப் பற்றித் தெரியாதவர்கள்."கசாப் குற்றவாளி' என்று மும்பை தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன், இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் பலியான ஆம்பூரைச் சேர்ந்த ஓட்டல் பணியாளர் ரஹமத்துல்லாவின் மனைவி குர்ஷித் பேகம் சொன்ன கண்ணீரில் நனைந்த வார்த்தைகள்- "அவனைச் சுட்டுக் கொல்ல வேண்டும்' என்பதுதான்.நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்ல, இந்தச் சம்பவத்தை தொலைக்காட்சியில் காண நேர்ந்த, தன் குடும்ப அளவில் பாதிக்கப்படாத மக்களின் உணர்வும் கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதோடு, நிறைவேற்றப்படவும் வேண்டும் என்பதுதான். கசாபுக்கு தூக்கு தண்டனையை காலம்தாழ்த்துவதன் மூலம் பேச்சு வார்த்தைகளில் சுமுகமான, சாதகமான நிலைகள் உருவாகிவிடும் என்று இந்திய அரசு கருதினால் அதனை அப்பாவித்தனம் என்று கருத இங்கே யாரும் முட்டாள்கள் அல்ல. இன்றைய ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் என்றோ, திட்டமிட்டே இஸ்லாமிய சமுதாயத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் இன உணர்வைத் தூண்டும் முயற்சி என்றோதான் கூறத் தோன்றுகிறது.ஆட்சியாளர்கள் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும். சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இடம் கொடுத்தால் மடம் பிடுங்குபவர்கள்!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites