அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

ஜிஹாத் - ஓர் ஆய்வு

இப்னு ஜமீலா
ஜிஹாத் - இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது.
ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன?  ஓர் உண்மை முஸ்-ம் ஜிஹாத் பற்றி எப்படிப் புரிந்து நடக்க வேண்டும்? என்பதை விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு தான் "ஜிஹாத் - ஓர் ஆய்வு'.
ஜிஹாத் பற்றிய இந்த ஆய்வில், முஸ்-மல்லாதவர்களில் பலர் ஜிஹாதைப் பற்றி ஏன் வெறுக்கின்றார்கள்? அதற்கு அவர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் என்ன? அவை சரியானவை தாமா? என்பதை அலசவிருக்கின்றோம்.  மேலும் முஸ்-ம்களிலேயே ஜிஹாதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  அவை யாவை?  குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எந்தக் கருத்து சரியானது? என்பதை நாம் இன்ஷா அல்லாஹ் காணவிருக்கின்றோம்.
இது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குச் செல்வதற்கு முன்,         முத-ல் ஜிஹாத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஆயுதமேந்திப் போரிடுவது தானா? அல்லது ஜிஹாத் என்பதற்கு வேறு பொருளும் உண்டா? என்பதைப் பார்ப்போம்.
திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற பதம் பல்வேறு நல்ல அமல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றது.  "ஜஹத' என்ற மூலச் சொல்--ருந்து பிறந்தது தான் "ஜிஹாத்' எனும் பதம்.  இதற்கு நேரடி அகராதிப் பொருள் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.  திருக்குர்ஆனின் பல இடங்களில் ஜிஹாத் ஃபீ ஸபீ-ல்லாஹ் என்று குறிப்பிடுவதன் நேரடி அர்த்தம் அல்லாஹ்வின் வழியில் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.
திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற வார்த்தை பல இடங்களில் வெவ்வேறு அர்த்தம் தரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளதை இப்போது பார்ப்போம்.
உழைத்தல் - பாடுபடுதல்
ஜிஹாத் என்பதற்கு உழைப்பது, பாடுபடுவது என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.



தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.  அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் 9:79)
மேற்கண்ட வசனத்தில் உள்ள "ஜுஹ்த' என்ற அரபுச் சொல்லுக்கு "உழைப்பு' என்ற பொருள் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்தில் ஜிஹாதுக்கு வழக்கத்தில் உள்ள அர்த்தத்தைக் கொடுத்தால், "தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது ஜிஹாதை (போரை) தவிர எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறிக் கே- செய்கின்றனர்'' என்ற தெளிவற்ற - அர்த்தமற்ற வாசகமாக ஆகி விடும்.  எனவே இதி-ருந்து ஜிஹாத் என்பதற்கு உழைப்பது என்ற பொருள் உள்ளதை அறிய முடிகின்றது.



உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.  (அல்குர்ஆன் 29:6)
மேற்கண்ட வசனத்திலும் உழைப்பவர் என்பதற்கு "ஜாஹத' என்ற வார்த்தையும், உழைக்கிறார் என்பதற்கு "ஜாஹிது' என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.



நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 29:69)
இந்த வசனத்திலும் "உழைப்போருக்கு' என்பதற்கு, "ஜாஹதூ' என்ற வார்த்தையே இடம் பெறுகின்றது.
மேற்கண்ட வசனங்கள் மூலம் "ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுவது என்பது நேரடிப் பொருளல்ல!  உழைப்பது, பாடுபடுவது என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.
வற்புறுத்துதல் - கட்டாயப்படுத்துதல்
"ஜிஹாத்' என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமாக உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.




தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். 
(அல்குர்ஆன் 29:8)
மேற்கண்ட வசனத்தில் "உன்னை வற்புறுத்தினால்' என்பதற்கு "ஜாஹதாக' என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்தில் ஜாஹதாக என்பதற்கு உன்னை ஆயுதமேந்தினால், உன்னைப் போரிட்டால், உன்னை தியாகம் செய்தால், உன்னைப் பாடுபட்டால் என்ற அர்த்தம் கொடுத்தால் என்ன நிலை ஏற்படும்.  யாருக்காவது ஏதாவது விளங்குமா?  எனவே இந்த வசனத்தி-ருந்து ஜிஹாத் என்பதற்கு வற்புறுத்துதல் என்ற அர்த்தம் உள்ளதை விளங்க முடிகின்றது.





உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
(அல்குர்ஆன் 31:15)
இந்த வசனத்திலும் "உன்னைக் கட்டாயப்படுத்தினால்' என்பதற்கு "ஜாஹதாக' என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்திலும் ஜிஹாத் என்பதற்கு மேற்சொன்ன ஏனைய பொருள்களைப் பயன்படுத்த முடியாது என்பதை எளிதாகப் புரிய முடிகின்றது.
எனவே இவ்விரு வசனங்களின் மூலம் "ஜிஹாத்' என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.
"ஜிஹாத்' என்பதற்கு மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்       காண்போம்.
ஜிஹாத்                              தொடர் - 2
ஜிஹாதின் அர்த்தங்கள்
இப்னு ஜமீலா
"ஜிஹாத்' என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம்.  மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம்.
உறுதி
ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம்.



"நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே' என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. நஷ்டமடைந்தோரில் அவர்களும் ஆகி விட்டனர்.  (அல்குர்ஆன் 5:53)



"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன என (முஹம்மதே!) கூறுவீராக! அது நிகழும் போது அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?  (அல்குர்ஆன் 6:109)



இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 16:38)



(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 24:53)





தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர் வழி பெற்றோர் ஆவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்த போது அது அவர்களுக்கு வெறுப்பையும், பூமியில் பெருமையடிப்பதையும், கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்.     (அல்குர்ஆன் 35:42,43)
மேற்கண்ட வசனங்கள் அனைத்திலுமே "உறுதியாக'' என்ற பொருள்பட அல்லாஹ்வின் மீது செய்யப்பட்ட சத்தியத்தின் வ-மையைக் காட்டுவதற்கு "ஜஹத' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இடங்களிலெல்லாம் "ஜஹத' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்ற அர்த்தம் செய்தால் "அல்லாஹ்வின் மீது ஆயுதமேந்திப் போரிட்டு'' சத்தியம் செய்தார்கள் என்று விபரீதமான பொருளைத் தந்து விடும். (நவூதுபில்லாஹ்)  அது போல் முன்பு செய்யப்பட்ட உழைப்பு, கட்டாயப் படுத்துதல் போன்ற வார்த்தைகளும் இந்த இடத்திற்குப் பொருந்தாது.  எனவே இந்த வசனங்களின் மூலம் ஜிஹாத் என்பதற்கு "உறுதி' என்ற அர்த்தமும் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
அழைப்புப் பணியில் ஈடுபடுதல்
"ஜிஹாத்' என்பதற்கு "அறப்போர்' என்ற பொருளடங்கிய வசனங்களையும், சத்தியத்தை எடுத்துரைத்து பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதும் அறப்போர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் காண்போம்.





அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். (அல்குர்ஆன் 22:78)
இந்த வசனத்தின் மூலம் தஃவா - அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை தெளிவாக விளங்க முடியும். மேலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தப் பணி எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.
அல்லாஹ்வுக்காக ஜிஹாத் - அறப்போர் செய்ய வேண்டும் என்று கூறும் இறைவன், அதை எவ்விதத்தில் செய்ய வேண்டும் என்பதையும் இந்த வசனத்தில் விளக்குகிறான். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு சத்தியப் பிரச்சாரம் செய்ததையும், அந்த சத்தியத்தை அறிந்து கொண்டவர்கள் அறியாத மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும், இதுவே அறப்போர் - ஜிஹாத் செய்யும் விதம் என்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.


எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக! (அல்குர்ஆன் 25:52)
இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம் பெறுகிறது. ஆனால் இந்த வசனம் "குர்ஆன் மூலம் போரிடுங்கள்'' என்று சொல்வதிலிருந்து, ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளங்க முடியாது.
குர்ஆனைக் கொண்டு கடுமையாகப் போரிட வேண்டும் என்பதற்கு, குர்ஆனில் இறைவன் அருளியுள்ள சத்தியத்தைக் கொண்டு கடுமையான பிரச்சாரம் செய்வது என்பதே பொருள்.
வளரும் இன்ஷாஅல்லாஹ்
ஜிஹாத்    ஓர் ஆய்வு                     தொடர் - 3

இப்னு ஜமீலா
"ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல!  அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம்.  ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக் கடந்த இதழ்களில் கண்டோம்.
அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை வ-யுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.


நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன்9:73)
இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நேரடியாக ஆயுதமேந்திப் போரிடுவதைக் குறிக்கக் கூடியதல்ல. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இறை மறுப்பாளர்கள் எல்லோருடனும் ஆயுதமேந்தி போர் செய்ய அனுமதி கிடையாது. (இதுபற்றி பின்னர் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் காண்போம்).
மேலும் இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் - நயவஞ்சகர்களுடனும் போரிடுமாறு நபி (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் கூறுகின்றான். முனாஃபிக்கீன்களைப் பொறுத்த வரை அவர்கள் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மாற்றி, மாற்றி பேசக்கூடியவர்களாகவும், முஸ்லிம்களிடம் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும், போரிலும் கூட முஸ்லிம்களுடன் கலந்து கொள்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை, முனாஃபிக்கீன்களின் தன்மைகள் குறித்த ஏராளமான குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களைக் காண்போம்.


நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே.  நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.(அல்குர்ஆன்2:14)
மேற்கண்ட வசனம் முனாஃபிக்கீன்களின் இரட்டை நிலையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.


நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.  (அல்குர்ஆன் 4:142)


அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.  (அல்குர்ஆன் 9:54)
மேற்கண்ட வசனங்கள் முனாஃபிக்கீன்களின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் மறுத்த போதும் உள்ளுணர்வோ, இறையச்சமோ இன்றி அசட்டையாக, மக்களுக்குக் காட்டுவதற்காக தொழுகையில் ஈடுபட்டதையும், இறைவழியில் செலவு செய்ததையும் பற்றி கூறுகிறது.




(முஹம்மதே!) உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் "என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!'' என்று கூறுவீராக!              (அல்குர்ஆன் 9:83)
இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் வேண்டா வெறுப்புடன் முஸ்லிம்களுடன் சேர்ந்து போர் செய்து வந்ததையும், அந்த அடிப்படையிலேயே அவர்கள் போருக்குச் செல்ல அனுமதி கேட்டால், மறுத்து விடுமாறு இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். இதிலிருந்து முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களின் அணியில் சேர்ந்து இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட்டு வந்ததையும், அந்த வழக்கப்படியே அனுமதி கேட்டார்கள் என்பதையும் விளங்க முடிகிறது.
மேலும், முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டதை அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. (ஆனால் அவர்கள் போரிட்டது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக அல்ல, மக்களுக்குக் காட்டுவதற்காக என்பது தனி விஷயம்)
முனாஃபிக்கீன்கள் நபி (ஸல்) அவர்களை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர்கள் மறைமுகமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலைகளைச் செய்துள்ளனர். எனவே தான் முனாஃபிக்கீன்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஆயுதமேந்தி போரிட்டது கிடையாது.
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளக்கம் தந்தால், முனாஃபிக்கீன்களுடன் (ஆயுதமேந்தி) போரிடுமாறு இறைவன் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்ததாக ஆகிவிடும். (நவூதுபில்லாஹி மின்ஹா)
எனவே முனாஃபிக்கீன்களுடன் ஆயுதமேந்தி நபி (ஸல்) அவர்கள் போரிடாமல் இருந்ததிலிருந்து இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள "ஜிஹாத்' என்பதற்கு குர்ஆனைக் கொண்டு கடுமையான முறையில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து அவர்களின் தவறான பிரச்சாரங்களை முறியடித்தார்கள் என்றே பொருள்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம் அழைப்புப் பணியில் ஈடுபடுவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.
- வளரும் இன்ஷா அல்லாஹ்
ஜிஹாத் ஓர் ஆய்வு                     தொடர் : 4
நீதிக்குக் குரல் கொடுப்போம்
இப்னு ஜமீலா
"ஜிஹாத்' என்பதற்கு உழைத்தல் - பாடுபடுதல், வற்புறுத்துதல் - கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு "ஜிஹாத்' என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஹஜ் செய்வதும் ஜிஹாத்

அரபி புகாரி 1861 ???





அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்'' என்றார்கள்.  நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-),  நூல் : புகாரி 1861
(மேலும் பார்க்க: புஹாரி ஹதீஸ் எண் 1520, 2784)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் மூலம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது சிறந்த ஜிஹாத் என்பதை விளங்க முடிகிறது.
பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத்


அரபி புகாரி 3004 ???


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள், "உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அம்மனிதர், "ஆம்'' என்று பதிலளித்தார்.  "அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ர-),  நூல் : புகாரி 3004
(மேலும் பார்க்க: புஹாரி ஹதீஸ் எண்:5972)
பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை ஜிஹாத் என்ற வார்த்தையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுத்தலும் ஜிஹாத்




ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : நஸயீ 4138


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : அஹ்மத் 18074





"ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : அபூதாவூத் 3781
மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்துக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அது தான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.



???






 எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை.  அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்.  அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.  அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள்.  தாம் செய்யாதவற்றை அவர்கள் சொல்வார்கள்.  தமக்குக் கட்டளையிடப் படாதவற்றைச் செய்வார்கள்.  ஆகவே யார் இவர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் தாம்.  இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-), நூல் : முஸ்-ம் 71
மேற்கண்ட ஹதீஸ் முஃமின்களின் பண்பைப் பற்றிக் கூறும்போது கை, நாவு, உள்ளம் ஆகிய மூன்று வழிகளிலும் தீமைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றது.

???


உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),  நூல் : நஸயீ 3141
மேற்கண்ட ஹதீஸ் கை, நாவு, பொருளாதார உதவி ஆகிய மூன்று வழிகளில் தீமைக்கெதிராக போர் புரிவதையும் ஜிஹாத் என்று தான் சொல்கிறது.
இதன்மூலம் அநீதி, அக்கிரமம் போன்ற எத்தகைய தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் ஜிஹாத் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடிகிறது.
மனதைக் கட்டுப்படுத்துவதும் ஜிஹாத்
???





தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபுழாலத் பின் உபைத் (ரலி),  நூல் : திர்மிதி 1546
மேற்கண்ட ஹதீஸ் மூலம் தீய எண்ணங்களைக் கொண்டு நம்மை வழிகெடுத்து, இறைவனுக்கு மாறு செய்யக்கூடிய செயல்களை செய்விக்கத் தூண்டும் நமது மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஜிஹாத் ஓர் ஆய்வு                      தொடர் - 5
செல்வத்தால் போரிடுதல்
இப்னு ஜமீலா
இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் "ஜிஹாத்' என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தொடரில் நாம் பார்த்தோம்.
இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் "ஜிஹாத்' (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை உதாரணத்திற்குக் காண்போம்.

??? அரபி


நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்கள் மற்றும் உயிர்களால் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும் அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:95)
??? அரபி

(படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!  நீங்கள் அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 9:41)

??? அரபி
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போருக்குச் செல்லாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:44)

??? அரபி

அல்லாஹ்வின் தூதர் (முஹம்மத், தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில் புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது'' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?  (அல்குர்ஆன்9:81)
??? அரபி

இத்தூதரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்9:88)
??? அரபி

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 61:11)

??? அரபி
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.  (அல்குர்ஆன் 49:15)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும், பொருட்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போரிட வேண்டியதன் அவசியத்தை வ-யுறுத்துவதோடு, அவ்வாறு போரிடுவது "ஜிஹாத்' என்றும் கூறுகின்றன.
இந்த வசனங்களில் கூறப்படும் பொருட்கள் - செல்வங்கள் என்பது, போர்க்களத்தின் தேவைக்காக - அதாவது வாகனங்கள், போர்க்கருவிகள், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக செலவாகும் தொகையைக் குறிக்கக் கூடியது.
ஒரு நாட்டின் அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட முறையான இராணுவம், இராணுவப் பயிற்சி மையம், இராணுவத் தளவாடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இராணுவம் அல்லது பாதுகாப்புத் துறைக்கான முறையான கட்டமைப்பு, அதற்கான செலவினங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் முறை ஆகியவை இப்போது உள்ளது போல் அக்காலத்தில் கிடையாது.
பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று, ஜிஹாத் (யுத்தம்) செய்ய முன் வந்தவர்கள் மூன்று வகையினராக இருந்தனர்.  முதல் வகையினர் - யுத்தக் களம் சென்று நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குத் தேவையான உடல் வ-மையுடன் குதிரைகள், ஒட்டகம், போர்க் கருவிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவு போன்ற தேவைகளை சுயமாகப் பெற்றிருந்தவர்கள் அல்லது அவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதியைப் பெற்றிருந்தவர்கள்.  இரண்டாவது வகையினர் - போரில் ஈடுபடுவதற்கான உடல் வ-மையை மட்டும் பெற்றிருந்தவர்கள்.
மூன்றாவது வகையினர் - பொருளாதார வசதியை மட்டும் பெற்று, போரில் நேரடியாக ஈடுபடுவதற்கான ஆற்றலைப் பெறாதவர்கள்.  இந்த வகையினர் தங்களிடமிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு, இரண்டாவது வகையினருக்குத் தேவையான போர் செலவினங்களைச் செய்தனர்.  இந்த முறையில் தான் அக்கால முஸ்-ம்கள் போர் முனைகளைச் சந்தித்தனர்.
இதை ஆர்வமூட்டுகின்ற வகையில் தான் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும், "பொருட்களாலும், உயிர்களாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (யுத்தம்) செய்யுங்கள்'' என்று இரண்டு வகை நற்செயல்களையும் ஒன்று சேர்த்து, அந்த இரு வழிகளுமே "ஜிஹாத்' தான் என்று கூறுகின்றன.
நாம் இது வரை பார்த்த திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆயுதமேந்திப் போரிட்டு எதிரிகளை வெட்டுவது, கொல்வது போன்ற செயல்கள் மட்டுமே ஜிஹாத் அல்ல என்பதையும், மாறாக அது மேலும் பல நற்செயல்களைக் குறிக்கக் கூடிய ஒரு பொதுவான சொல் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.                    வளரும் இன்ஷா அல்லாஹ்
ஜிஹாத் ஓர் ஆய்வு                     தொடர் - 6
ஜிஹாதும் கிதாலும்
இப்னு ஜமீலா
"ஜிஹாத்' என்றாலே முஸ்-ம் அல்லாதவர்களை முஸ்-ம்கள் அழிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்ற தவறான கருத்து இன்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது.  இன்னும் சொல்லப் போனால் தங்களை முஸ்-ம்கள் என்று சொல்-க் கொள்வோர் சிலர் கூட இந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய தவறான கருத்து நிலவுவதற்கு மிக முக்கிய காரணம் மேற்கத்திய ஏதேச்சதிகார சக்திகளின் ஊதுகுழலாய் விளங்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களும், முஸ்-ம்களிடம் ஜிஹாதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையும் தான்.  இந்தத் தவறான கருத்துக்கு சாவு மணி அடிக்கின்ற வகையில் திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் அமைந்துள்ளன.
அல்லாஹ்வின் பாதையில் - அவனது திருப் பொருத்தத்தை நாடி செய்யக் கூடிய பல்வேறு நற்செயல்களும், பொதுவாக "ஜிஹாத்' என்ற வார்த்தை வட்டத்திற்குள் வந்தாலும் அந்தந்த செயல்களைக் குறிக்கக் கூடிய நேரடி வார்த்தைகளும் உள்ளன என்று நாம் பார்த்தோம்.  (உதாரணம் : அழைப்புப் பணி (தஃவா), நீதிக்குக் குரல் கொடுப்பது போன்றவை) 
அதே போல் நியாயமான காரணங்களுக்காக அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இட்ட கட்டளையை ஏற்று, ஆயுதமேந்திப் போரிடுவதும், போர்க்களங்களில் எதிரிகளைச் சந்திக்கும் போது அவர்களை வெட்டி வீழ்த்துவதும் அல்லது எதிரிகளால் வெட்டப்படுவதும் "ஜிஹாத்' என்று பொதுவாக அழைக்கப் பட்டாலும் அச்செயல்களுக்குரிய நேரடி வார்த்தை "கிதால்' என்பதாகும்.  அதற்கான சான்றுகளை திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் காண்போம்.
ஆயுதமேந்திப் போரிடுவதற்கும், போரில் எதிரிகளை வெட்டுவதற்கும், அல்லது எதிரிகளால் வெட்டப்படுவதற்கும், திருக்குர்ஆனில் "கிதால்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.  "கிதால்' என்ற வார்த்தையை உள்ளடக்கிய ஏராளமான வசனங்கள் உள்ளன.  உதாரணத்திற்கு சில வசனங்களைக் காண்போம்.
ஆயுதமேந்திப் போரிடுதல்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.  (அல்குர்ஆன் 2:190)



மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்'' என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதி இழைத்தோரை அறிந்தவன்.  (அல்குர்ஆன் 2:246)


இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில் உங்களுக்குச் சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டனர். (ஏக இறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர். தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது.  (அல்குர்ஆன் 3:13)




தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.  அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவு படுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். நம்பிக்கை கொண்ட சமுதாயத்தின் உள்ளங்களுக்கு அவன் ஆறுதல் அளிப்பான்.  (அல்குர்ஆன் 9:13, 14)


நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.  (அல்குர்ஆன் 4:76)

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன் 22:39)

(ஏக இறைவனை) மறுத்தோர் உங்களுடன் போருக்கு வந்தால், புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் பொறுப்பாளனையோ உதவி செய்பவனையோ காண மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 48:22)


மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.  அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 60:9)
மேற்கண்ட வசனங்களில் ஆயுதமேந்திப் போரிடுவதற்கு "கிதால்' (அடிக்கோடு இடப்பட்டவை) என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளதால், ஆயுதமேந்திப் போரிடுவதற்கான நேரடி அரபுச் சொல் "கிதால்' என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.
போரில் கொல்லுதல், கொல்லப்படுதல்

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.  (அல்குர்ஆன் 2:154)


(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்!  (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.  (அல்குர்ஆன் 2:191)



நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து "அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப் பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று கூறிய (ஏக இறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.  அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.  நீங்கள் இறந்தாலோ, கொல்லப் பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:156-158)



"அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டு இருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்று போருக்குச் செல்லாதோர், தம் சகோதரர்கள் பற்றி கூறினர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.  (அல்குர்ஆன் 3:168, 169)

இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.  (அல்குர்ஆன் 4:74)



அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும் இருந்தால் மேலும் தமது கைகளைக் கட்டுக்குள் வைக்கவில்லையானால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.
(அல்குர்ஆன் 4:91)


நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான்.  அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
 (அல்குர்ஆன் 4:93)



நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத், இஞ்சீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:111)


அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்படுவோர், அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன். 
(அல்குர்ஆன் 22:58)

அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.  (அல்குர்ஆன் 33:61)
மேற்கண்ட வசனங்களில் கொலை, கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற அர்த்தத்தில் "கத்ல்' (அடிக்கோடு இடப்பட்டவை) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வசனங்களி-ருந்து ஆயுதமேந்திப் போரிடுவதற்கும், அந்தப் போரின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் நேரடி வார்த்தை "கத்ல்' என்பதையும், இந்த "கத்ல்' என்ற செயல் "ஜிஹாத்' என்னும் பரந்து விரிந்த சொல்-ல் அடக்கம் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.
"ஜிஹாத்' என்பதன் முழுமையான அர்த்தத்தை விளங்காதவர்கள், அதன் ஏனைய அம்சங்களை விட்டு விட்டு, ஜிஹாதை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து, ஆயுதமேந்திப் போரிடுவது மட்டும் தான் "ஜிஹாத்' என்ற தவறான சித்திரத்தை வடித்துள்ளனர்.  ஆயுதமேந்திப் போரிடுவதை மட்டும் குறிப்பிடக் கூடியவர்கள் - அத்தகைய போருக்கு அழைப்பவர்கள், "ஜிஹாத்' என்ற வார்த்தைக்குப் பதிலாக "கிதால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.  இதனால் ஜிஹாத் என்பதற்குத் தவறான வர்ணம் பூசப்படுவதைத் தடுக்க முடியும்.
இதுவரை ஜிஹாத் என்றால் என்ன? என்பதை விரிவாகப் பார்த்தோம்.  ஜிஹாதின் முக்கிய ஓர் அம்சமான ஆயுதமேந்திப் போரிடுதல் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
ஜிஹாத் ஓர் ஆய்வு                       தொடர் - 7
ஜிஹாதின் அடிப்படை
இப்னு ஜமீலா
"ஜிஹாத்'' என்றால் என்ன? என்னென்ன நற்செயல்கள் எல்லாம் "ஜிஹாத்' என்ற வட்டத்திற்குள் வருகிறது என்பதையும் நடைமுறையில் ஜிஹாத் என்றாலே ஆயுதந்தாங்கிப் போரிடுவது மட்டும் தான் என்று விளங்கி வைத்திருப்பது தவறு என்பதையும் இதுவரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பார்த்தோம்.
ஜிஹாதின் முக்கிய ஓர் அங்கமான "கிதால்' (ஆயுதம் ஏந்திப் போரிடுதல்) பற்றி இனி விரிவாக நாம் பார்ப்போம்.
முஸ்லிம்கள் ஆயுதமேந்திப் போரிடுவதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்ற தொடரில் நாம் மேற்கோள்காட்டியிருந்த வசனங்களே போதுமானவை.
ஆயுதமேந்திப் போரிடுவதை கடமை என உணர்த்தும் இறைவன், தான்தோன்றித்தனமாக ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு, நினைத்த மாத்திரத்தில், நினைத்தவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கும் படியோ, ஜிஹாத் என்று சொல்லிக் கொண்டு, கொலை - கொள்ளையில் ஈடுபடும்படியோ, வீண் சண்டையில் இறங்கும்படியோ விட்டு விடவில்லை.
இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றச் சொல்லும் இறைவன் ஒவ்வொரு கடமைக்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, விதிமுறைகள், விதிவிலக்குகளை அளித்தே இருக்கிறான்.
இஸ்லாத்தின் முதல் கடமையான தொழுகை இருக்கிறதென்றால், அந்தத் தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும், எப்படித் தொழுதால் அந்தத் தொழுகை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தனது திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் நமக்குக் காட்டித் தந்துள்ளான்.
இறைவன் நம்மைத் தொழச் சொல்லி விட்டான் என்பதற்காக நாம் நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில், நினைத்த முறையில் தொழுதுவிட முடியாது. அவ்வாறு செய்தால் அது இறைவனால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பது மட்டுமல்லாமல் அது போலச் செய்வது நமக்கு மறுமையில் தண்டனையைத்தான் பரிசாகப் பெற்றுத் தரும்.
"தொழுகையை நிலை நாட்டுங்கள்' என்று சொல்லக் கூடிய வசனங்கள் திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தொழுவதற்கு முன் "உளு'ச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய வசனம் ஓரிரு இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதிலிருந்து தொழுகைக்கு முன் உளு அவசியம் என்ற விதிமுறையை நாம் உணருகிறோம். அது போல நான் இறைவனைத் தொழப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, நினைத்த நேரத்தில் தொழ முடியாது. ஏனென்றால் தொழுகைக்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, தொழுவதற்குத் தடைச் செய்யப்பட்ட நேரமும் இருக்கிறது. அதுபோல ஆண், பெண் இருபாலர் மீதும் தொழுகை கடமை என்பதற்காக ஒரு பெண் தனது மாதவிடாய் காலத்திலும், நான் தொழுவேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் தொழுவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல இஸ்லாத்தின் மற்றொரு கடமையான நோன்பு. இறைவன் நோன்பு வைக்கச் சொல்லிவிட்டான் என்று சொல்லிக் கொண்டு, 24 மணி நேரமும் பட்டினி கிடந்துவிட முடியாது. நோன்பு வைக்கும் நேரத்தையும், நோன்பு திறக்கும் நேரத்தையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. வெள்ளிக்கிழமைக்கென்று நோன்பு வைக்க முடியாது. பெருநாள் தினங்களில் நோன்பு வைக்க முடியாது. மாவிடாய் காலங்களில் பெண்கள் நோன்பு வைக்க முடியாது. இவற்றுக் கெல்லாம் தெளிவான தடையிருப்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.
நோன்பு வைத்துள்ள ஒருவர், நோன்பாளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீறி, தன் விருப்பப்படி செயல்பட முடியாது.
ஆக, நோன்பை கடமையாக்கிய இறைவன், அதற்கான ஒழுங்குகளையும், விதிமுறைகளையும், விதிவிலக்குகளையும் நமக்கு அளித்துள்ளான். அதைப் புரிந்து கொண்டுதான் நாம் அக்கடமையை நிறைவேற்ற வேண்டும். மாறாக. அதைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது தவறாகப் புரிந்து கொண்டோ நோன்பை நிறைவேற்ற நினைத்தால், அது இறைவனிடமிருந்து நமக்கு நன்மைக்குப் பதிலாக தண்டனையைத்தான் பரிசாகப் பெற்றுத் தரும்.
அதுபோல, இஸ்லாமியக் கடமைகளில் மற்றொன்று ஜகாத். அதைக் கடமையாக்கிய இறைவன், நாம் நினைத்த மாத்திரத்தில், நமது விருப்பப்படி நாம் விரும்பியவர்களுக்கு ஜகாத்தை நிறைவேற்றும்படி விட்டுவிடவில்லை.
ஜகாத் யார் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும். அதை எப்போது கொடுக்க வேண்டும். யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இறைவன் அளித்துள்ளான். அந்த விதிமுறைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அல்லது தவறாகப் புரிந்து கொண்டு ஜகாத் என்ற கடமையை நம் விருப்பப்படி நிறைவேற்றினால் அது இறைவனால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மாறாக இறைக் கட்டளையை புறக்கணித்த குற்றம் தான் நமக்கு வந்து சேரும்.
 இவ்வாறே இஸ்லாத்தின் மற்றொரு கடமையான ஹஜ். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறை புனித மக்காவுக்குச் சென்று ஹஜ் செய்ய வேண்டும் என்று இறைவன் கூறுகிறான் என்று சொல்லிக் கொண்டு, ஊர் முழுவதும் கடனை வாங்கிக் கொண்டு மக்காவுக்குச் செல்ல முடியாது. நோய் வாய்ப்பட்டவர் நடக்கவே சக்தி பெறாதவர் நான் ஹஜ் செய்தாக வேண்டும் என்று கூறிக் கொண்டு, ஸ்ட்ரச்சரில் படுத்துக்கொண்டு போக முடியாது.
ஹஜ்ஜைக் கடமையாக்கிய இறைவன், அதை யார் செய்ய வேண்டும். அவர்கள் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளான்.
ஹஜ்ஜுக்காக ஒருவர் புறப்பட்ட பின் இஹ்ராம் கட்டுவதிலிருந்து அவர் ஹஜ்ஜுக்கான கிரியைகளை முழுவதுமாக நிறைவு செய்வது வரை ஒவ்வொரு கட்டங்களிலும் என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்ற ஒழுங்குமுறைகள்  உள்ளன. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல். நம் விருப்பப்படி ஹஜ்ஜுடைய கிரியைகளை அமைத்துக் கொள்ள முடியாது. ஹஜ்ஜுக்கான விதிமுறைகளைப் புரிந்து அதன்படி செய்யும் போதுதான் நாம் ஹஜ்ஜை நிறைவேற்றியதாக கருத முடியும்.
குர்பானியும் அதுபோலத்தான். குர்பானி கொடுப்பதற்கென்றே விதிமுறைகள் உள்ளன. இறைவன் குர்பானி கொடுக்கச் சொல்லிவிட்டான் என்பதற்காக நாம் எந்தப் பிராணியையும் பிடித்து அறுத்து குர்பானி கொடுத்துவிட முடியாது. நாம் நினைக்கும் போது, நினைக்கும் நாளில் குர்பானி கொடுக்க முடியாது. குர்பானி கொடுக்கும்படி அல்லாஹ் சொல்லிவிட்டான் என்பதற்காக, நம்மிடம் அதற்குரிய சக்தி இல்லாத நிலையில், அடுத்தவன் வீட்டு ஆட்டையோ அல்லது மாட்டையோ, அல்லது தெருவில் திரியும் கால்நடைகளையோ பிடித்து வந்து அறுக்க முடியாது.
குர்பானி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடும் இறைவன், அதற்கான தகுதியையும், ஒழுங்கையும், விதிமுறைகளையும் கூறியிருக்கிறான். அந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் கொடுக்கப்படும் குர்பானி இறைவனிடமிருந்து சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்தைப் பரிசாகத் தரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நாம் மேலே கூறியுள்ள உதாரணங்களிலிருந்து, இஸ்லாத்தின் பெயரால் செய்யக்கூடிய எந்த நற்செயல்களாக இருந்தாலும், அந்தச் செயலைச் செய்யும்படி வலியுறுத்திய இஸ்லாம், அவற்றுக்கான ஒழுங்குகள், வரம்புகள், கட்டுப்பாடுகள், செயல்முறைகள், விதிவிலக்குகள் ஆகியவற்றுடன் கூடிய வழிமுறைகளை, விதிமுறைகளாக்கியே வைத்திருக்கிறது. அந்த வழிகாட்டல்களைச் சரியாகப் புரிந்து, அதன்படியே நம்முடைய அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
அதேபோல் "ஜிஹாத்' என்று அழைக்கப்படும் "கிதால்' (ஆயுதமேந்திப் போரிடுதல்) என்ற நற்செயலுக்கும், இஸ்லாம் பல்வேறு வழிகாட்டல்களையும், வரம்புகளையும், கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும், விதிவிலக்குகளையும் உள்ளடக்கிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய பிறகே அச்செயலைச் செய்யும்படி வலியுறுத்துகிறது.
நாம் மேலே குறிப்பிட்ட "ஜிஹாத்' அல்லாத ஏனைய நற்செயல்களைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் அதன் விதிமுறைகளை நன்றாக விளங்கி, அதன்படி அமல் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.
ஆனால் "ஜிஹாத்' விஷயத்தில் மட்டும், இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நமக்குக் காட்டியுள்ள விதிமுறைகளைச் சரியாகப் புரிந்து, அதன்படி செயலாற்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தவறி விடுகிறோம்.
"ஜிஹாத்' அல்லாத ஏனைய வணக்க வழிபாடு சம்பந்தமான விஷயங்களில் "மஸாயில்' (மார்க்கச்சட்டம்) பிரச்சனையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அவற்றால் மிகப்பெரிய ஆபத்தோ, உயிரிழப்புகளோ ஏற்பட வாய்ப்பில்லை.
ஆனால் ஜிஹாத் (கிதால்) சம்பந்தமான விஷயத்தில் மிக மிக அதிகமான கவனம் செலுத்த வேண்டும். பல முறை ஆய்வு செய்து, சரியான - தெளிவான விளக்கத்தைப் பெற வேண்டும். மாறாக இவ்விஷயத்தில் நுனிப்புல் மேய்ந்தால், அதன் விளைவு மிக மோசமானதாக அமைந்துவிடும்.
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாதுகாப்புக் கேடயமாக விளங்க வேண்டிய ஜிஹாத் (கிதால்) இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கக் கூடிய ஆயுதமாக அமைந்துவிடும்.
இறைவனிடத்தில் சொர்க்கத்தைப் பரிசாகப் பெறும் நோக்கத்தில் செய்யப்படும் ஜிஹாத் (கிதால்) நம்மை நரகின் கொடிய வேதனைகளை அனுபவிக்கச் செய்துவிடும்.
எனவே, ஜிஹாத் (கிதால்) விஷயத்தில் அதற்கான நிபந்தனைகள், விதிமுறைகளை மிகச் சரியாக ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கும் முன், ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால், இஸ்லாமிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பு அத்தியாங்களைப் பற்றி இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.
ஜிஹாத் ஓர் ஆய்வு                      தொடர் - 8
ஜிஹாதின் பெயரால் நடந்த
உஸ்மான் (ரலி) கொலை!
அதிர்ச்சி வரலாறு
இப்னு ஜமீலா
"ஜிஹாத்' என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம்.
ஜிஹாத் (கிதால் - ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பற்றியும் பார்ப்போம்.
ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்த போர் முனைகளில் வெட்டி வீழ்த்தப்பட்ட இஸ்லாத்தின் எதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்களுக்குப் பிறகு ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் நடந்த கலகங்களினாலும், உள்நாட்டுக் குழப்பங்களினாலும் முஸ்லிம்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று சொல்லுமளவிற்கு பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
இத்தகைய துயரச் சம்பவங்கள் ஏற்படாமலிருக்க எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்காமலிருக்கவில்லை. இது பற்றிய எச்சரிக்கையைச் செய்யாமலும் மரணிக்கவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது, அரஃபா பெருவெளியில் ஆற்றிய உரையில், முஸ்லிம்களின் உயிர்களும், உடைமைகளும், மானமும் கியாமத் நாள் வரை புனிதம் வாய்ந்தது என்று பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். தனக்குப் பிறகு முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டு இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)களாய் ஆகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் எச்சரித்திருக்கிறார்கள்.
பெருமானாரின் இறுதி ஹஜ் உரை
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்.  நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள்.  அப்போது அவன் உங்கள் செயல்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்வான்.  அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள்.  இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள்.  ஏனெனில் இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவர்களில் சிலரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "நான் (உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? நான் உங்களிடம் சேர்த்து விட்டேனா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),  நூல்: புகாரி 7447
நபி (ஸல்) அவர்கள் விடை பெறும் ஹஜ்ஜின் போது, (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், "மக்களை மவுனமாக இருக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.  பின்னர், "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி),  நூல்: புகாரி 6869
மேலும் பார்க்க: ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்: 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6785, 6868, 7077, 7078, 7079, 7080
வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்தும், அரும்பெரும் தியாகங்களைச் செய்தும், ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டி, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் நிறுவினார்கள்.
அந்த சாம்ராஜ்ஜியத்தின் தூண்களான முஸ்லிம்கள் (நபித்தோழர்கள்) தங்களுக்கிடையே சண்டையிட்டு அழிந்து விடக் கூடாது, இஸ்லாமிய சாம்ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் எந்த அளவுக்குக் கவலையும், அக்கறையும் கொண்டு, தங்களின் இறுதிக் காலத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் எடுத்தியம்புகின்றன.
ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பின் இன்று வரை முஸ்லிம் சமுதாயம் அவர்களின் எச்சரிக்கையை மறந்து செயல்படக் கூடிய காட்சியைத் தான் காண முடிகிறது. அதனால் தான் முஸ்லிம்களுக்குள் குழப்பமும், பிளவும், பிரிவும் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக் கூடிய பரிதாப நிலை ஏற்பட்டது.
ஜிஹாத் (கிதால்) என்ற பெயரால் முஸ்லிம்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கும் அளவிற்கு நிலைமை மோசமானதற்கு என்ன காரணம்? ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு மத்தியில் குழப்பம் எங்கிருந்து துவங்குகிறது? அது எவ்வாறு தொடர்கிறது? என்பதை பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாத்தின் ஆரம்ப வரலாற்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து பார்ப்போம்.
பொதுவாகவே நபி (ஸல்) அவர்களின் காலந்தொட்டே முனாஃபிக் என்றழைக்கப்படும் நயவஞ்சகர்களின் ரகசிய நடவடிக்கைகள் முஸ்லிம்களைப் பெரிதும் பாதித்தே வந்துள்ளது. எதிரிகளையாவது அடையாளங்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும். ஆனால் முனாஃபிக்குகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடக்க இயலாது. பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் முனாஃபிக்குகள் பற்றி அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்ததால், மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கலானார்கள். அவர்களின் நயவஞ்சகத்தனம் எடுபடவில்லை. இஸ்லாத்தை அழிப்பதற்காக முஸ்லிம்களை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நிர்வாகத் திறமையுடன், சிறந்த ஆட்சித் தலைவர்களாக திகழ்ந்தார்கள்.
இவ்விருவரின் ஆட்சியின் போதும், முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் இருந்த போதும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நரித்தனம் எடுபடவில்லை. எனவே எவ்வித குளறுபடிகளோ, கலகமோ, உள்நாட்டுக் குழப்பமோ ஏற்படவில்லை.
முனாஃபிக்குகள் விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். அதன் விளைவாக உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் முனாஃபிக்குகள் அவர்களைக் கொலை செய்தார்கள்.
உமர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள்.
அதன் பின்னர் தான் முதன் முதலாக குழப்பம் தலை தூக்கியது. முனாஃபிக்(நயவஞ்சகர்)களும் தங்களின் கைவரிசையைக் காட்டத் துவங்கினார்கள். அவர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட சிறு சிறு அதிருப்தியால் ஏற்பட்ட குழப்பம் புரட்சியாக வெடித்து இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் போய் முடிந்தது.
இந்தத் துயரச் சம்பவத்தை நிகழ்த்துவதற்கு கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் "ஜிஹாத்' தான். ஜிஹாத் என்ற பெயரில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- உஸ்மான் (ரலி) அவர்கள் மீது ஒரு சாராருக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன?
- அந்த அதிருப்தி நியாயமானது தானா?
- அவர்களது ஆட்சிக்கு எதிராக "ஜிஹாத்' பிரகடனம் ஏன் செய்யப்பட்டது?
- அவ்வாறு செய்யப்பட்டது சரியா?
என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை பற்றிய வரலாற்றுப் பதிவுகளுக்குள் செல்வோம்.
எந்த ஒரு உயர்ந்த அதிகாரப் பதவியாக இருந்தாலும், அந்தப் பதவியிலிருப்போரின் நண்பர்கள், உறவினர்கள் என நெருக்கமானவர்கள் யாராக இருந்தாலும், தங்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அரசாங்க வேலைகளையோ அல்லது சிறு சிறு அதிகாரப் பதவிகளையோ பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். அவர்களது முயற்சிக்கு அப்பதவியிலிருப்பவர் வளைந்து கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிப்பார்கள். இதைப் பார்க்கக் கூடிய நடுநிலையாளர்கள் இதை எதிர்க்கக் கூடிய நிலையை பொதுவாக நாம் பார்த்து வருகிறோம்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது இது தான் நடந்தது. அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) அவர்களின் கோத்திரமான "பனூ உமைய்யா' கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது என்பது தான்.
இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், உறவு, நட்பு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஆட்சி புரிந்தார்கள். பெருமானாரின் கோத்திரமான ஹாஷிம் கோத்திரத்தில் எத்தனையோ பேர் இருந்தும் அலீ (ரலி) அவர்களுக்கு மட்டும் தான் தகுதி அடிப்படையில் பல பொறுப்புகளை அளித்தார்கள்.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் எந்தப் பதவியையும் அளிக்கவில்லை.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமர் (ரலி) அவர்கள் தங்களின் பத்தாண்டு கால ஆட்சியில், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நபருக்கு மட்டும் தகுதி அடிப்படையில் பதவியளித்தார்கள். அதுவும் குறுகிய காலத்திலேயே அந்த நபரையும் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள்.
திறமை - தகுதியின் அடிப்படையில் உறவினர்கள், நெருக்கமானவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ தடை செய்த காரியம் அல்ல. ஆனாலும், தேவையற்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவே அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
எவ்வளவு தான் நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்தாலும் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டினால் நிச்சயமாக அவப்பெயரையும், குழப்பங்களையும் சந்தித்து, ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்த காரணத்தால், உமர் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக வரலாம் என்று அவர்கள் கருதிய உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) ஆகிய மூவரையும் தனித்தனியே அழைத்து,
"எனக்குப் பிறகு நீங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்க நேரிட்டால், முஸ்லிம்களின் கடிவாளத்தை உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த எவரிடமும் கொடுத்துவிடக் கூடாது'' என்று வாக்குறுதி வாங்கினார்கள். (ஆதார நூல்: அத்தபரீ)
பனூ உமையாக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம்
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஜிஹாத் என்னும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை வரிசையாகக் காண்போம்.
முதலில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டான உறவினர்களைப் பதவியில் அமர்த்தியது பற்றி பார்ப்போம்.
மர்வான் பின் ஹகம்
உஸ்மான் (ரலி) அவர்களின் சிறிய தந்தையான ஹகம் பின் அபீ அல்ஆஸ் என்பவர் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர். அதன் பிறகு மதீனாவிற்கு குடியேறினார். அவர் மதீனாவில் இருக்கும் போது, அவரது நடவடிக்கைகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காததால் ஹகமை மதீனாவை விட்டு வெளியேறி தாயிஃப் நகருக்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள். அப்போது மர்வானுக்கு 8 வயது.
அவர் தாயிஃபிலிருந்து மீண்டும் மதீனாவுக்கு வர அனுமதிக்குமாறு ஹகம் விடுத்த கோரிக்கையை, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் தங்களின் ஆட்சிக் காலத்தில் நிராகரித்து விட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஹகமும் அவரது மகன் மர்வானும் மதீனாவுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி உஸ்மான் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே திரும்ப மதீனாவுக்கு அழைக்க, நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்ததாகவும், அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் வாக்குறுதியளித்ததாகவும் அதனடிப்படையிலேயே இருவரையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்ததாகவும்'' ஒரு அறிவிப்பில் காணப்படுவதாக இப்னு ஹஜர் (ரஹ்) அல் இஸாபா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் மீதான நன்னம்பிக்கையின் காரணமாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருப்பார்கள் என்று மக்களும் நம்பினார்கள். ஹகமையும், மர்வானையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டதில் மக்களிடத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் மர்வான் பின் ஹகமுக்கு தனது ஆட்சியில் செயலாளர் என்னும் பெரிய பதவியை அளித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. தன் மகன் மர்வானின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க விஷயங்களில் ஹகம் தலையிட்டதையும் மக்கள் எதிர்த்தார்கள்.
அப்துல்லாஹ் பின் ஆமிர்
பஸ்ராவின் ஆளுநராக அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்கள் தனது மாமா மகனான அப்துல்லாஹ் பின் ஆமிரை நியமித்தார்கள்.
முஆவியா (ரலி)
பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த முஆவியா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிரியாவின் ஒரு பகுதியான டமாஸ்கஸிற்கு மட்டுமே ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹிமஸ், ஃபலஸ்தீன், உர்துன், லெபனான் மற்றும் சிரியா முழுவதையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள்.
இப்போதைய சிரியா, லெபனான், உர்தூன், இஸ்ரேல் ஆகிய நான்கு நாடுகளின் மொத்த நிலப்பரப்புக்கும் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் முஆவியா (ரலி) உட்பட நான்கு ஆளுநர்கள் இருந்தார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் அனைத்தையும் முஆவியா (ரலி) தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து விட்டார்.
மேலும், ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டு மாகாண ஆளுநர் செயல்படுவதற்குப் பதிலாக, சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி), ஜனாதிபதியே தன்னைச் சார்ந்திருக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். அந்த அளவுக்கு முஆவியா (ரலி) அவர்களின் ஆதிக்கம் இருந்தது. இதைப் பலரும் ஜீரணிக்கவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் மீதான எதிர்ப்புணர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
வலீத் பின் உக்பா
வலீத் பின் உக்பா என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். உஸ்மான் (ரலி) அவர்களது தாயாரின் வேறொரு கணவருக்கு பிறந்த சகோதரர். நபி (ஸல்) அவர்கள், பனூ முஸ்தலிக் என்ற கோத்திரத்தினரிடம் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை வலீதிடம் ஒப்படைத்திருந்தார்கள். அவர் அக்கோத்திரத்தினரிடம் சென்று ஜகாத் தொகையைக் கேட்காமல், அவர்கள் தர மறுக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்லி விட்டார். நபி (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று, அவர்களுக்கெதிராக படை திரட்டி விட்டார்கள். இதை அறிந்த அக்கோத்திரத்தினர் மதீனாவுக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் "நாங்கள் ஜகாத் கொடுக்கக் காத்திருந்தோம். ஆனால் இவர் எங்களிடம் வந்து கேட்கவில்லை'' என்ற உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்கள்.
இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு வசனத்தையே இறக்கினான்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)
(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)
வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)
இத்தகைய தன்மையைக் கொண்ட வலீதை சில காலத்திற்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் பணியில் அமர்த்தினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் இறுதிக் காலத்தில் பனூ தக்ளப் கோத்திரத்தினர் வாழ்ந்த அல்ஜஸீரா  பகுதியில் சிறிய அதிகாரியாக பணியமர்த்தினார்கள். (ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப்,)
உஸ்மான் (ரலி) அவர்கள் தனது ஆட்சியின் போது, சிறு அதிகாரியாக கீழ் மட்டத்தில் பதவி வகித்த வலீத் பின் உக்பாவை திடீரென கூஃபாவின் ஆளுநராக ஆக்கினார்கள். அது வரை கூஃபாவின் ஆளுநராக பதவி வகித்த ஸஃது வின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பதவியிலிருந்து நீக்கினார்கள்.
ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமியப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்கள். கல்வியறிவிலும், மார்க்கப் பற்றிலும் வலீதை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். மேலும் "மஜ்லிஸ் ஷுரா' என்றழைக்கப்படும் தலைமை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினர். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என பத்து தோழர்களைப் பற்றி அறிவித்தார்கள். அஷ்ரதுல் முபஷ்ஷரா எனப்படும் அவர்களில் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களும் ஒருவர். எனவே அவர்களை நீக்கியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் வலீத் பின் உக்பா குடிகாரர் என்பதும், ஒரு முறை சுபுஹ் தொழுகையை 4 ரகஅத்துகள் தொழ வைத்தார் என்றும், தொழுகை முடிந்ததும் இன்னும் தொழ வைக்கவா? என்று கேட்டும் அசிங்கப்பட்டு போயிருக்கிறார். இச்செய்தி மதீனா வரை எட்டி மதீனாவில் மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்து, ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களின் கவனத்திற்குச் சென்ற பின், இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்கள். அக்குழுவின் விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டது. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுது, ஃபத்ஹுல் பாரி, உம்தத்துல் காரீ சுருக்கம்)
வலீத் பின் உக்பாவின் இச்செயலால் மக்கள் தங்களின் அதிருப்தியை உஸ்மான் (ரலி) அவர்கள் மீதே வெளிப்படுத்தினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸஃது
பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸஃது என்பவர் இஸ்லாத்தைத் தழுவிய பின்பு "முர்தத்' ஆக மாறினார். மக்கா வெற்றியின் போது, கொல்லப்பட வேண்டியவரின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு முறை அண்ணலாரிடம் இவரை அழைத்துச் சென்று மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அண்ணலார் இவரை மன்னித்தார்கள்.
எகிப்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) என்ற நபித்தோழர் ஆளுநராகப் பொறுப்பேற்று, அந்நாட்டு மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்று நல்ல செல்வாக்குடன் ஆட்சி நடத்தி வந்தார்கள். இவரது ஆட்சியின் போது, காரிஜியாக்கள் கூட்டத்தினர் முஸ்லிம்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். (காரிஜியாக்கள் என்றால் யார்? அவர்களது கொள்கை என்ன? போன்ற விரிவான விளக்கத்தை பின்னர் பார்க்கவிருக்கிறோம். இன்ஷாஅல்லாஹ்)
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் காரிஜியாக்களின் முயற்சிகளை முறியடித்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள். காரிஜியாக்களின் குழப்பத்தை முறியடித்த பிறகு எகிப்திய மக்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை விரும்பாத சிலரைக் கொண்டு, அவரை ஆளுநர் பதவியிலிருந்து இறக்குவதற்கு காரிஜியாக்கள் திட்டம் தீட்டினார்கள். அதனடிப்படையில் ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு நெருக்கடிகள் தரப்படுகின்றது. ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விட்டார்கள். பின்னர் அளவுக்கு மீறிய நெருக்கடி ஏற்பட்ட பின், அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி விட்டு அப்துல்லாஹ் பின் ஸஃதை எகிப்தின் ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்கள் நியமிக்கிறார்கள். ஆனாலும் தொழுகை நடத்தும் அதிகாரத்தை மட்டும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கே உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்தார்கள்.(அக்காலத்தில் ஆட்சித் தலைவர்கள் தான் தொழுகைக்கும் இமாமாக இருப்பது வழக்கம்). நாளடைவில் இமாமத் பொறுப்பும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
உஸ்மான் (ரலி) அவர்களின் இச்செயல் எகிப்திய மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, மக்களால் உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை தன்னை (மதீனாவுக்கு) வந்து சந்திக்குமாறு உஸ்மான் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அம்ர் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், தேவையெனில் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னை வந்து பார்க்கட்டும் என்று சொல்லி விட்டார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்
உஸ்மான் (ரலி) அவர்கள் உறவினர்களைப் பதவியிலமர்த்தினார் என்ற குற்றச்சாட்டிற்கு உதாரணமாக, பெரிய பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் பற்றியும், அவர்களது தகுதிகளைப் பற்றியும் அதுவே மக்களிடம் பெரும் அதிருப்தியைத் தோற்றுவிக்கக் காரணமானது என்பதையும் மேலே ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்த்தோம்.
பொதுவாக அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் குணநலன்களுக்கும், உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்களுக்கும் அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. உஸ்மான் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை மிகவும் இரக்க குணம், வெட்க குணம், எளிதில் யாரையும் நம்பி விடக் கூடிய சுபாவமும் உடையவர்கள்.
அவர்களின் இத்தகைய வெள்ளை உள்ளம் தான் உறவினர்கள் விஷயத்திலும் அக்கறைக் காட்ட வைத்தது. அதுவும் அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களை தகுதியற்றவர்கள் என்று தெரிந்து பதவியில் அமர்த்தவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள், தகுதியானவர்கள் என்று நினைத்தே அமர்த்தினார்கள். தகுதியற்றவர்கள் என்று தெரிந்த பின் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் செய்தார்கள், தண்டிக்கவும் செய்தார்கள் என்பதை "வலீத் பின் உக்பா'வின் சம்பவம் எடுத்துரைக்கிறது.
உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களில் பெரும்பாலோர் மக்கா வெற்றி வரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம்களை எதிர்த்து விட்டு, மக்கா வெற்றியின் போது பெருமானார் (ஸல்) அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினருமே (உ.தாரணம்: முஆவியா (ரலி), வலீத் பின் உக்பா, மர்வான் பின் ஹகம்) என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மூத்த நபித்தோழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.
எகிப்திலிருந்து ரகசியப் படை கிளம்புதல்
எகிப்தின் ஆளுநர் பதவியிலிருந்து அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களை நீக்கியதை ஏற்றுக் கொள்ளாத சிலர், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு கூட்டத்தைத் திரட்டுகிறார்கள். ஆட்சிக்கு எதிராக திட்டம் வகுத்து ரகசியமாக செயல்பட "பைஅத்' (உறுதிமொழி) செய்த 600 பேர் தயாராகிறார்கள்.
இந்த ரகசிய பைஅத் செய்த 600 பேர் கொண்ட கூட்டம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய - புனித நகரமான - சண்டையிடுவதற்குத் தடை செய்யப்பட்ட இடமான - மதீனாவுக்குள் நுழைந்து தலைநகரையே கைப்பற்றுவதற்கான திட்டத்தில் - அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டது.
600 பேரும் மதீனாவுக்குள் ஒட்டுமொத்தமாக நுழைவது கடினம். அது இயலாத காரியம் என்றெண்ணி உம்ராவுக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு இஹ்ராம் கட்டிய நிலையில் ஹிஜ்ரி 35-ம் ஆண்டு ரஜப் மாதத்தில் மதீனாவுக்குச் செல்கிறது.
உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிரான இந்த அதிரடி ரகசிய நடவடிக்கைகளை தனது உளவாளிகள் மூலம் அறிந்த எகிப்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அப்துல்லாஹ் பின் ஸஃத் அவர்கள், உடனடியாக உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தகவலைப் பெற்ற உஸ்மான் (ரலி) அவர்கள், தலைநகரைக் கைப்பற்ற எகிப்திலிருந்து ரகசியப் படை வரும் தகவலைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அதை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அலீ (ரலி) அவர்கள், தம்முடன் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக் கொண்டு மதீனாவின் நுழைவாயிலுக்குச் சென்று, எகிப்திலிருந்து வந்த ரகசியப் படையினருடன் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிராக அவர்கள் படை திரட்டி வந்ததற்கான காரணங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள்,  அவர்களின் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, ஒவ்வொன்றுக்கும் உஸ்மான் (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது போன்றே பதிலளித்து, அவர்களை ஓரளவு திருப்திப்படுத்தி, திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
உஸ்மான்(ரலி) மீதான குற்றச்சாட்டுக்கு அலீ (ரலி) விளக்கம்
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்புக்கும், அவர்களுக்கெதிரான புரட்சிக்கும் மிகமுக்கியக் காரணமான உறவினர்களுக்கு சலுகை அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த வரலாற்று ஆதாரங்களை மேலே பார்த்தோம்.
அவர்கள் தங்களின் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த புரட்சியாளர்ளை அலீ (ரலி) அவர்கள் மதீனா எல்லையில் தடுத்து நிறுத்திய போது, நாம் மேலே குறிப்பிட்டபடி மூத்த ஸஹாபாக்களையெல்லாம் புறக்கணித்து விட்டு இளைஞர்களையே உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்துகிறார் என்ற பிரதான குற்றச்சாட்டுடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அலீ (ரலி) அவர்களிடம் முன்வைத்தார்கள். அவற்றுக்கு அலீ (ரலி) அவர்கள் என்ன பதில் சொல்லி அவர்களைத் திருப்திபடுத்தினார்கள் என்பதை பார்ப்போம்.
1. மூத்த ஸஹாபாக்களை விட்டு விட்டு இளைஞர்களுக்குப் பதவி
உஸ்மான் (ரலி) அவர்கள் இளைஞர்களுக்குப் பதவியளித்தார்கள் என்பதை குற்றமாகக் கருத முடியாது. நபி (ஸல் அவர்களும் கூட மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற இளைஞர்களுக்குத் தகுதி அடிப்படையில் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி அதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார்கள். அவை யாவன:
•    அத்தாப் பின் உஸைது என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவியவர், அவருக்கு 20 வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் நிர்வாகியாக பதவியளித்தார்கள்.
•    உஸாமா பின் ஜைத் அவர்களை ஒரு போருக்குத் தளபதியாக பெருமானார் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள்.
•    தன்னை நபி என்று சொல்லிக் கொண்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த முஸைலமா என்பவனுக்கு எதிராக போருக்குப் புறப்பட்ட படையின் தளபதியாக இளைஞர் உஸாமா அவர்களை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று விளக்கமளித்தார்கள்.
2. கோத்திரத்தாருக்கு முன்னுரிமை
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து குடியேறி அங்கு ஆட்சி அமைத்த பிறகு எல்லாத் துறைகளிலும் மதீனா வாசிகளான அன்சாரிகளை விட மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைப் புறக்கணித்து விட்டார்கள். மக்கா வாசிகள் என்பதற்காக முன்னுரிமையளித்து விட்டார்கள் என்று குற்றமாக எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இது ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக படை திரட்டக் கூடிய அளவுக்கு பெரிய குற்றமாகாது என பதிலளித்தார்கள்.
3. குர்ஆனை எரித்தார்
அடுத்து அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) குர்ஆனை எரித்து விட்டார். எனவே குர்ஆனை எரித்தவர்களுக்கு எதிராக போர் செய்யலாம் என்ற வாதத்தை வைத்தார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு ஏன் உருவானது?
நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப 23 ஆண்டுகள் இறக்கப்பட்டது. அவ்வப்போது அவர்களுக்கு அருளப்படும் வசனங்களை எழுதிக் கொள்வதற்காக "காத்திபுல் வஹீ' - வஹீயை எழுதுபவர்கள் என்று சில நபித்தோழர்கள் இருந்தார்கள்.
திருக்குர்ஆனை எழுதி வைத்திருந்த நபித்தோழர்கள் அனைவரிடத்திலும், முழுக்குர்ஆனும் இருந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பல பகுதிகளுக்கும் சென்ற அந்த நபித்தோழர்கள் தங்களிடமிருந்த வசனங்களைக் கொண்டு மட்டுமே மக்களிடம் போதனை செய்து வந்தார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காக தமது ஆட்சியின் போது எல்லா நபித்தோழர்களிடமும் இருந்த கையெழுத்துப் பிரதியை சேகரித்து, முழுக் குர்ஆனையும் தொகுக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு "ஜாமிஉல் குர்ஆன்' (குர்ஆனை ஒன்று சேர்த்தவர்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
அவ்வாறு முழுக் குர்ஆனையும் தொகுத்த பின் துண்டு துண்டாக இருந்த வசனங்களை - அவை மட்டும் தான் குர்ஆன் என்ற நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எரித்து விட்டார்கள். (உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனின் கையெழுத்துப் பிரதி இன்று உலகிலேயே இரண்டு தான் உள்ளது. அவற்றில் ஒன்று ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்ட் மியூசியத்திலும், மற்றொன்று துருக்கியில் இஸ்தான்புல் மியூசியத்திலும் உள்ளது)
அவ்வாறு நல்ல நோக்கத்திற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் அத்தகைய குர்ஆன் பிரதிகளை எரித்ததை, காரிஜியாக்களும், முனாபிக்குகளும் பெரிதுபடுத்தி, உஸ்மான் குர்ஆனை எரித்து விட்டார். எனவே அவருக்கு எதிராக ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம்களிடம் பரப்பி விட்டார்கள். இந்த விளக்கத்தை அலீ (ரலி) அவர்கள் சொன்ன பிறகு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
4. ஹஜ்ஜின் போது தொழுகையில் மாறு செய்தார்
பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது தொழுகையில் கஸர் (குறைத்துத் தொழுதல்) செய்ய வேண்டும் என்றே வழிகாட்டி இருக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் கஸர் செய்யாமல் தொழுதார் என்பது அவர்கள் அடுத்து வைத்த குற்றச்சாட்டு
இதற்குப் பதிலளித்த அலீ (ரலி) அவர்கள், மக்காவை அவர் தனது சொந்த ஊராகக் கருதியதால் சொந்த ஊரில் கஸர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால் அவர் அப்படி தொழுதார் என்று விளக்கமளித்தார்கள்.
5. விளை நிலங்களை அரசுடமை ஆக்கினார்
(அக்காலத்தில் உரிமை கொண்டாடப்படாத விளைநிலங்கள் இருந்தன. அவற்றை யாரெல்லாம் தங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களுக்குச் சொந்தம் என்ற நிலை இருந்து வந்தது. அதை மாற்றி அத்தகைய) நிலங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் சட்டமியற்றினார்கள். இது மக்கள் விரோதச் செயல் என்று குற்றச்சாட்டை வைத்தார்கள்.
இதற்குப் பதில் அளித்த அலீ (ரலி) அவர்கள், உரிமை கோரப்படாத விளைநிலங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கியதற்குக் காரணம், ஜகாத் ஒட்டகங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவற்றின் மேய்ச்சலுக்காக நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு தான் உஸ்மான் (ரலி) இந்தச் சட்டத்தை இயற்றினார். இது ஒரு குற்றமாகாது. மேலும் ஏற்கனவே உமர் (ரலி) அவர்களும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று விளக்கமளித்தார்கள்.
ஆட்சித் தலைவருக்கு அலீ (ரலி)யின் அறிவுரை
அதன்பிறகு அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் "உங்களின் ஆட்சி முறையில் மக்களின் அதிருப்தி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நீங்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் நடத்திய ஆட்சி முறையைப் பின்பற்றிச் செல்லுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது'' என்று அறிவுரை கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு ஜும்ஆ குத்பாவின் போது, தனது ஆட்சியில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளுக்காக மனந்திருந்தி மக்களிடம் அழுது மன்னிப்புக் கேட்டார்கள்.
தான் இது நாள் வரை ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து சற்று விலகி இருந்து விட்டதாகவும், இனி அது போல இருக்க மாட்டேன், எந்த நேரமும் மக்கள் என்னை வந்து சந்தித்து தங்கள் குறைகளை முறையிடலாம். இனி சிறந்த முறையில் ஆட்சி செய்வேன் என்று உத்தரவாதமளித்தார்கள். அந்த குத்பாவின் போது, உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் நிலையை விளக்கி அழுததைப் பார்த்த மக்களும் அழுதார்கள்.
அதன் பிறகு சிலகாலம் மக்கள் ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்கக் கூடிய, குறை நிறைகளைப் பற்றி பேசக் கூடிய, ஆலோசனைகள் வழங்கக்கூடிய நிலை சிறிது காலம் தொடர்ந்தது.
மர்வானின் அடாவடி
உஸ்மான் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பின் மீது அதிக கவனம் செலுத்தி, குறைகளைக் களைந்து, நடவடிக்கை எடுத்து வருவதை ஜீரணிக்க முடியாத மர்வான் பின் ஹகம் (தலைமைச் செயலர்), ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே பல காரியங்களைச் செய்யத் துவங்கினார். அவரது செயல்களுக்கான பழியை உஸ்மான் (ரலி) அவர்களே சுமக்க வேண்டியதாயிற்று. ஏனைய சஹபாக்களுக்கும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டிக்க முற்பட்டார். தன்னை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார். மஜ்லிஸ் ஷுராவில் சஹாபாக்களைக் கண்டித்துப் பேசவும் ஆரம்பித்தார். இதைப் பெரும்பாலான சஹாபாக்கள் விரும்பவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியார் நாயிலா (ரலி) அவர்களுக்குக் கூட மர்வானின் செயல் பிடிக்கவில்லை. ஒரு முறை தனது கணவரிடம், "நீங்கள் மர்வானின் பேச்சைக் கேட்டு நடந்தால் உங்களைக் கொலை செய்யாமல் விடமாட்டார். அவருக்கு அல்லாஹ்வின் மீது அச்சமோ, அன்போ, மதிப்போ இல்லை'' என்று நேரடியாகவே எச்சரிக்கவும் செய்தார்.
மக்களெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களை மர்வான் தன் கையில் போட்டுக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மீண்டும் அதிருப்தியும், குழப்பமும் தலைதூக்குகிறது. அலீ (ரலி) அவர்களும் மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டிக்கிறார்கள்.
ஜிஹாத் (கிதால்) பிரகடனம்
இந்நிலையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் - ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால், "உஸ்மானை எதிர்ப்பது தான் மிகப்பெரிய ஜிஹாத் (அக்பருல் ஜிஹாத்)'' என்ற கருத்து மக்களிடம் உருவாக்கப்படுகிறது.
முன்னர் எகிப்திலிருந்து மட்டுமே ஒரு ரகசியக் கூட்டம் மதீனாவைக் கைப்பற்ற வந்த நிலை மாறி, இப்போது பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் அடங்கிய கூட்டம் ஆயுதங்களுடன் மதீனாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றக் கிளம்பி விட்டது.
அக்கூட்டத்தினரில் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அலீ (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு எகிப்திலிருந்து வந்த கூட்டமும், ஜுபைர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கூஃபாவிலிருந்து வந்த கூட்டமும், தல்ஹா (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஸராவிலிருந்து வந்த கூட்டமும் மதீனாவை முற்றுகையிட்டன. ஆனால் அம்மூவருமே இவர்களின் செயலை அங்கீகரிக்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை.
மேலும் "ஜிஹாத்' என்று சொல்லிக் கொண்டு படைதிரட்டி வந்தவர்கள் யாரும் தத்தமது பகுதி மக்களின் பிரதிநிதிகளுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரத்துடன் வந்தவர்களுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு எதிராக, புனித நகருக்குள் புகுந்து சண்டையிடுவதையும், ஹராமாக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதமேந்தி வருவதையும், முஸ்லிம்களுக்குள் அதுவும் பெருமானாரின் தோழர்களுக்குள் மோதிக் கொள்ளும் போக்கையும் பெரும்பாலான நபித்தோழர்கள் விரும்பவில்லை. இந்தப் போக்கைக் கண்டிக்கவே செய்தார்கள். ஏராளமான நபித்தோழர்கள் தடுத்தார்கள். எதிர்பாராத விதமாக கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களுடன் புகுந்ததாலும், நிராயுதபாணிகளாக அவர்கள் இருந்ததாலும், புனித மண்ணில் போரிடக் கூடாது என்ற காரணத்தாலும் அவர்கள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் போனது. இத்தகைய பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாக இருந்ததால் இறுதியில் கிளர்ச்சியானர்கள் உஸ்மான் (ரலி)யின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள், "நீங்கள் சொன்னவுடன் பதவி விலக முடியாது. அதேசமயம் உங்களின் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
உஸ்மான் (ரலி) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த போது நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் இது பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒரு சிலர் ஒன்று கூடி பதவி விலகச் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் பதவி விலகத் தேவையில்லை. அத்தகைய ஒரு நிலையை முஸ்லிம்களிடத்தில் நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள். அதற்கான வாசலைத் திறந்து விட்டு விடாதீர்கள்'' என்று கூறினார்கள். (தபகாத்து இப்னு சஅத்)
உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விடுவார்களோ என்று சில சஹாபாக்கள் அஞ்சினார்கள்.  எனவே அவர்களைப் பாதுகாக்க உஸ்மான் (ரலி) அவர்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டைச் சுற்றி மதீனாவிலிருந்த சஹாபாக்களில் ஒரு கூட்டம் காவல் காத்து வந்தது. அவ்வாறு பாதுகாப்புக்காக நின்றவர்களில் அலீ (ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்களும் ஒருவர். அந்தப் பாதுகாப்பு வளையத்தைச் சுற்றி உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக வந்த ஆயுதந்தாங்கிய கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாத அளவுக்கு காவல் நிற்கிறது.
இந்நிலையிலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆ குத்பா நிகழ்த்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ குத்பாக்களில் ஒரு முறை மிம்பரிலிருந்து இழுத்துக் கீழே வீசப்பட்டு உஸ்மான் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போது, முற்றுகையிட்டிருந்த கூட்டத்தினரிடம், "ஒருசில குற்றங்களின் அடிப்படையில் ஒருவரைக் கொலை செய்ய மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு எந்தக் குற்றமும் செய்யாத என்னை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். தான் செய்த நல்லறங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தார்கள்.
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, "ஒரு குடிநீர் கிணறு உள்ளது. அதை யாராவது விலை கொடுத்து வாங்கி வக்ஃப் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? நபியின் பள்ளிவாசலை விஸ்தீரணம் செய்தேனே! என்று ஒவ்வொன்றாகச் சொல்லி தன்னை விடுவிக்கும்படி கோரினார்கள். ஆனாலும் அக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை.
இதனிடையே உஸ்மான் (ரலி) அவர்களை வீட்டுக்காவலின் போது சந்தித்த ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நிலைமை மோசமடைவதைக் கண்டு அன்சாரிகள் அனைவரும் தங்களுக்காக அணிதிரளத் தயாராக உள்ளதாக அறிவித்தார். அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) ஆகியோரும் இதையே கூறினார்கள். ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் நான் அவர்களுடன் இப்புனித மண்ணில் போரிடத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார்கள்.
ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்பது ஒருபுறமிருக்க, ஒரு இஸ்லாமிய ஆட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சிக்கெதிராக அணிதிரண்டு வந்தவர்களை எதிர்த்து ஆட்சியாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு பாதுகாப்பாக வீட்டைச் சுற்றி இருந்த சஹபாக்களைக் கூட நீங்கள் எனக்காக கஷ்டப்பட வேண்டாம், போய் விடுங்கள் என்று கூறினார்கள்.
அச்சமயத்தில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். உச்சக்கட்டமாக உம்முல் முஃமினீன் என்றழைக்கப்படும் பெருமானார் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (முஆவியா (ரலி)யின் சகோதரி) கூட அவமானப்படுத்தப்பட்டார்கள். "இழிவான இச்சூறாவளியில் சிக்கி நானும் என்னை அவமானப்படுத்திக் கொள்ளவா?'' என்று கேட்டபடி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று விட்டார்கள்.
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக உஸ்மான் (ரலி) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இறுதியாக ஒருநாள் வீட்டிற்குள் வைத்தே உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். (இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவர்களின் வீடும் சூறையாடப்பட்டது. சொத்துக்களும் அபகரிக்கப் பட்டன.
உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் முனாஃபிக்குகள் என்று சொல்லப்பட்டாலும் அச்செயலில் ஈடுபட்டவர்களில் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பது தெளிவாகிறது.
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகனார் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி)  உஸ்மான் (ரலி) அவர்களின் தாடியைப் பிடித்து இழுத்த போது, உஸ்மான் (ரலி) அவர்கள் மிகவும் மனமுடைந்து போய் அவரிடம், "முஹம்மதே! உனது தந்தை அபூபக்கர் கூட எனது தாடியில் கை வைத்தது கிடையாதே'' என்று அழுதிருக்கிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகத் திரண்டவர்கள் - அவர்களைக் கொல்லுமளவுக்குச் சென்றவர்கள் அத்தனை பேரும் இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)கள் அல்ல. ஆனாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் ஏற்பட்ட குறையின் காரணமாகவே அவர்கள் தவறான முடிவுக்குச் சென்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அவை திருத்திக் கொள்ளக் கூடியவை தான். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இத்தகைய சாதாரண குற்றச்சாட்டுகளைத் தவிர அவர்களது ஆட்சி முறை போற்றத்தக்க வகையில் தான் இருந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது. அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் பரிகாரம் காணக் கூடியவையாகத் தான் இருந்தனவே தவிர பழிதீர்க்கக் கூடியதாக இல்லை.
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜிஹாத்
உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தவர்கள் வேண்டுமென்றே உஸ்மானைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, சொந்தப் பகையின் காரணமாகவோ இவ்வாறு செயல்படவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை அநீதி, அக்கிரமம் நிறைந்ததாக இல்லை. ஆனாலும் அவரை எதிர்த்தவர்கள் பார்வையில் சிறு சிறு தவறுகள் அநீதியாக - அக்கிரமமாகத் தெரிந்தது. அதன் காரணமாகவே "அக்கிரமக்கார ஆட்சியை எதிர்த்து ஜிஹாத்'' என்ற அஸ்திரத்தை எடுத்தார்கள். ஆனால் அதன் மறுபக்கமான - ஒரு ஆட்சித் தலைவரின் கீழ் குடிமக்கள் எப்படி நடக்க வேண்டும், ஆட்சியாளருக்கு எதிராக அணி திரள்வதற்கு உரிய காலகட்டம் என்ன? ஒரு ஆட்சியாளருக்கு எது வரை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் - என்று பெருமானார் (ஸல்) அவர்கள் விதித்துள்ள நெறிமுறைகளை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.
சுருக்கமாகச் சொல்தென்றால், நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட தவறு என்பது தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்ததும், அவர்களை எதிர்த்தவர்கள் நடந்து கொண்ட முறையும்.
(இந்த சமுதாயத்தில்) தலைவர்கள் தோன்றுவார்கள்.  (அவர்களை) அறிந்து (அடையாளங் கண்டு) வெறுப்பீர்கள்.  (அவர்களை) அறிந்து கொள்பவர் (பாவத்தை விட்டு) தப்பித்துக் கொள்வார்.  வெறுப்பவர் விமோசனம் அடைந்து விடுவார்.  எனினும் அவர்களை திருப்தி கொண்டு பின்பற்றுபவர்கள் தான் (விமோசனம் அடைய மாட்டார்கள்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அப்போது நபித் தோழர்கள், அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவா? என்று கேட்டனர்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், தொழுது கொண்டிருக்கும் வரை (அவர்களுடன் போராட) வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி),  நூல் : முஸ்லிம் 3445,3446
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப் படுவதையும் நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்'' என்று சொன்னார்கள்.  "அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகின்றீர்கள். அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், "(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கி விடுங்கள்.  உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),  நூல்: புகாரி 7052
மேற்கண்ட ஹதீஸ்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலும், அதற்கான தீர்வுகளைத் தத்ரூபமாக தருகின்ற வகையிலும் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
நன்மையையும், தீமையையும் (ஆட்சியில்) காணும் போது, தீமையைக் காண்பவர் அதைக் கண்டிக்க வேண்டும்; அவ்வாறு கண்டித்தால் தான் மறுமையில் தப்பித்துக் கொள்ள முடியும்; அந்தத் தீமையில் திருப்தியடைந்தால் தண்டனை தான் கிடைக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்பத்தான் அலீ (ரலி) போன்ற முக்கிய சஹபாக்கள் எல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்ததை அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. அதே போல அதிபருக்கு எதிராகப் படைதிரட்டி வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள். அவர்களின் செயலையும் சரி காணவில்லை. போர் (ஜிஹாத்) தொடுக்கும் அளவிற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் நடவடிக்கை வரம்பு மீறி விடவில்லை என்பதையும் எடுத்துரைக்கிறார்கள்.
ஆனால் உஸ்மான் (ரலி) அவர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய வந்தவர்கள், அவர்களைக் கொல்லுமளவிற்குச் சென்றவர்கள், "தொழுகையை நிலைநாட்டும் வரை போர் செய்யக் கூடாது'' என்ற விதிமுறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, முஸ்லிமில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம்.  நாங்கள் எந்த நன்மையில் இருக்கின்றோமோ அந்த நன்மையை (இஸ்லாத்தை) அல்லாஹ் கொண்டு வந்தான்.  இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள்.  "அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை உண்டா?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள்.  "அது எப்படி இருக்கும்?'' என்று நான் வினவினேன்.  அதற்கு அவர்கள், "எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள்.  அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.'' என்று பதிலளித்தார்கள்.  "அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலையை அடைந்து விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "அந்த ஆட்சியாளர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி, உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்கு செவி சாய்த்துக் கட்டுப்படு!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபத் அல் யமான் (ரலி),  நூல்: முஸ்லிம் 3435
இந்த நபிமொழி ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவது எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்தது, எது வரை கட்டுப்படுவது என்பதைத் துல்லியமாக விளக்குகிறது.
முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸ் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.
"யார் ஓர் ஆட்சியாளரிடத்தில் பைஅத் செய்து, அவரிடத்தில் கைப்பிடித்து உளமாற உறுதிமொழி வழங்கி விடுகின்றாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப் படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), நூல்:  முஸ்லிம் 3431
"நாங்கள் உற்சாகமாக இருக்கும் போதும், சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப் படும் போதும் கூட (ஆட்சியாளரின் கட்டளைக்கு) செவியேற்று, கட்டுப்பட்டு நடப்போம்; ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிட மாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை நாங்கள் ஆட்சியாளரிடம் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அறிவிப்பவர்: உப்பாதா பின் அஸ்ஸாமித் (ரலி),  நூல்: புகாரி 7056
ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவதின் ஒழுங்குகளையும், ஜிஹாத் என்ற பெயரில் ஆட்சிக்கெதிராக கலகம், குழப்பத்தை ஏற்படுத்துவதின் ஆபத்தையும் மேற்கண்ட நபிமொழி தெளிவாக எடுத்தியம்புகின்றது.
எனவே ஜிஹாத் (கிதால்) சம்பந்தமான இஸ்லாத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு மறுபக்கத்தை கவனிக்கத் தவறியதன் விளைவு தான் சத்திய சஹாபாக்களில் ஒரு பிரிவினர் கூட உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக களமிறங்கியதும், கொலைப் பழியை சுமந்ததும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதா எச்சரிக்கை எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை ஒன்றே போதும். முஸ்லிம் அரசாங்கத்திற்கு எதிராக அதன் அதிபர் என்ன தான் அக்கிரமம் செய்தாலும் ஆயுதம் தாங்குவதற்கு அனுமதியில்லை. ஜிஹாதை வலியுறுத்தும் எத்தனை ஆதாரங்களை அவர்கள் எடுத்துக் காட்டினாலும் அவை இதற்குப் பொருந்தாது.
ஒரு அதிபர் என்ன தான் அநியாயம் செய்தாலும் அவர் தொழுகையை நிலைநாட்டும் வரை ஆயுதம் தூக்கக் கூடாது என்ற நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையை இவர்கள் விளங்கியிருந்தால் ஜிஹாதின் பெயரால் நடந்த முதல் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஓரிறைக் கொள்கையை விட்டு விலகாத வரை எவருக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கக் கூடாது என்பதை விளங்கியிருந்தால் உஸ்மான் (ரலி) படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும். தவறாகப் புரிந்து கொண்ட ஜிஹாத் வெறி உஸ்மான் (ரலி), பத்து சொர்க்கவாசிகளில் ஒருவர் என்பதையும், நபிகள் நாயகத்தின் மருமகன் என்பதையும், நபிகள் நாயகம் அவர்களின் திருவாயால் அவர் பெற்ற எண்ணற்ற நற்சான்றுகளையும் அலட்சியப்படுத்தும் அளவுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டது.
சட்டதிட்டங்களிலும் உட்பிரிவுகளிலும் முஸ்லிம்களுக்கிடையே அன்று கருத்து மோதல்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இதன் காரணமாக ஒருவர் தலையை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்படவில்லை. ஆனால் ஜிஹாத் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் தான் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்பட்டது என்பதற்கு உஸ்மான் (ரலி) கொலை மட்டுமின்றி ரத்தக் கறை படிந்த வரலாறுகளின் பட்டியல் நீள்கின்றது.
ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த மேலும் பல அதிர்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.
(குறிப்பு: இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்று நூலான அல் பிதாயா வன் நிஹாயா மற்றும் அத்தபரீ, அல் இஸ்திஆப், அல் இஸாபா, தஹ்தீபுத் தஹ்தீப், தபக்காத்து இப்னு சஅத், தப்ஸீர் இப்னு கஸீர் ஆகிய நூற்களில் இடம்பெற்றவை)
ஜிஹாத் ஓர் ஆய்வு                     தொடர் : 9
அலீ (ரலி) சந்தித்த சவால்கள்   
இப்னுஜமீலா
முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் எந்தளவுக்கு எச்சரிக்கை செய்தார்கள் என்பதையும், அந்த எச்சரிக்கைக்கு மாற்றமாக முஸ்லிம் உம்மத் ஜிஹாதைத் தவறாக விளங்கி செயல்பட்டதால் உஸ்மான்(ரலி) அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் விரிவாக சென்ற இதழில் பார்த்தோம்.
ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த இரத்தக் கறை படிந்த அத்தியாயங்களின் தொடரில் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் போது நடந்த துயர நிகழ்வுகளும் அமைந்துள்ளன.
அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத்
உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35-ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் 18-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் கொந்தளிப்பில் இருந்தது.
ஒரு புறம் முஆவியா (ரலி) உள்ளிட்ட ஒரு சாரார் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்க்கத் துடிக்கிறார்கள். மறு புறம் இஸ்லாமிய அரசின் தலைமைக்கான வெற்றிடம் என இஸ்லாமிய சாம்ராஜ்யம் குழப்ப மேகங்களால் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் மதீனாவாசிகள் தவிக்கிறார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மதீனாவைத் தலை நகராகக் கொண்டிருந்தாலும் வடக்கே ஜோர்டான், சிரியா, துருக்கி, கிரேக்கத்தையும் தாண்டி இத்தாலி (ரோம்) எல்லை வரையிலும், தெற்கே எமன் வரையிலும், மேற்கே பாரசீகத்தைத் தாண்டி ஆப்கானிஸ்தான் வரையிலும், கிழக்கே தென்ஆப்பிரிக்கா வரையிலும் வியாபித்திருந்தது.
இஸ்லாமிய அரசின் எல்லை பரந்து விரிந்து காணப்பட்ட போதிலும் ஆட்சித் தலைமையை தீர்மானிக்கும் சக்தியாக மதீனா தான் விளங்கியது. அங்கு தான் மூத்த ஸஹாபாக்கள் பெரும்பாலோர் வசித்து வந்தனர். ஷூராக் குழுவும் அங்கு தான் இருந்தது.
எனவே தான் உஸ்மான் (ரலி) ஷஹீதாக்கப்பட்டவுடனேயே உரிய தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு "பைஅத்'' செய்து, இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டுமென மதீனாவாசிகள் துடித்தார்கள்.
தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக வருவதற்குத் தகுதியுடையவர்கள் என உமர் (ரலி) அவர்கள் சுட்டிக்காட்டிய ஆறு பேரில், அப்போது அலீ (ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர் (ரலி), சஃது பின் அபீவக்காஸ் (ரலி) ஆகிய நான்கு பேர் உயிருடனிருந்தனர். அவர்களில் அலீ (ரலி) அவர்களின் பெயரே முதலிடத்தில் இருந்தது.
அன்றைய சூழ்நிலையில் அலீ (ரலி) அவர்களையே ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கருத்தே மேலோங்கியது. அவரைத் தவிர தகுதி படைத்த வேறு யாரும் இல்லை. எனவே மதீனாவிலிருந்த ஸஹாபாக்களும், மதீனாவாசிகளும், அலீ (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்குரிய சிறப்புத் தகுதிகளையெல்லாம் எடுத்துக் கூறியதோடு, அப்போது நிலவிய குழப்ப நிலைகளையும் முறையிட்டு அதற்குத் தீர்வு காண தாங்கள் தான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டினார்கள்.
ஆனால் அலீ (ரலி) அவர்களோ முற்றிலும் நிராகரித்து விட்டு, தொந்தரவு தாங்க முடியாமல், "பனூ அம்ரு' தோட்டத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். ஹஸன் (ரலி) அவர்களும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டாமென தம் தந்தையைத் தடுக்கிறார்கள்.
ஆனால் ஸஹாபாக்கள் அலீ (ரலி) அவர்களை விடுவதாக இல்லை. அவர்கள் ஒளிந்திருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, பனூ அம்ரு தோட்டத்திற்கே சென்று, கதவைத் தட்டி மீண்டும் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். வேறு வழியின்றி அலீ (ரலி) அவர்கள் "பைஅத்'தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
(குறிப்பு: இஸ்லாமிய அரசின் அதிபரிடம் குடிமக்கள் அளிக்கும் உறுதி மொழி பைஅத் எனப்படும்.)
முதன் முதலில் தல்ஹா (ரலி) அவர்களும், அதைத் தொடர்ந்து மதீனாவின் பிரமுகர்களும், ஸஹாபாக்களும் பைஅத் செய்கிறார்கள். இச்சம்பவம் அனைத்தும் உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட தினத்திலேயே (ஹிஜ்ரி 35 துல்ஹஜ் 18) நடக்கிறது.
மறு நாள் துல்ஹஜ் 19 அன்று மஸ்ஜிதுந் நபவியில் பொதுக் கூட்டத்தில் வைத்து ஏனைய மதீனாவாசிகள் அனைவரும் அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்தார்கள். ஆனால் அன்சாரிகளில் (மதீனாவாசி) முக்கியமான 17 அல்லது 20 பேர் பைஅத் செய்ய மறுத்து விடுகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்தகவர்கள், ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), கஃபு பின் மாலிக்(ரலி), மஸ்லமா பின் முகல்லது (ரலி), அபூ ஸயீது (ரலி), முஹம்மது பின் மஸ்லமா(ரலி), நுஃமான் பின் பஸீர்(ரலி), ஜைத் பின் ஸாபித்(ரலி), ராஃபிவு பின் கதீஜ்(ரலி), ஃபலாலா பின் உபைத்(ரலி), கஃபு பின் உஜ்ரா(ரலி) ஆகியோர்.
அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்ய விருப்பமில்லாத அன்சாரிகளில் ஒரு கூட்டம் எங்கே நாம் கட்டாயப்படுத்தப்பட்டு விடுவோமோ? என்று அஞ்சி, மதீனாவை விட்டே வெளியேறி, முஆவியாவைத் தேடி சிரியாவுக்குப் புறப்பட்டு விடுகிறது.
அலீ (ரலி) அவர்களிடம் சில சஹாபாக்கள் பைஅத் செய்யவில்லை என்பதற்காக அவர்களின் "கிலாஃபத்' (ஆட்சித் தலைமை) செல்லாது என்று கூறி விட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவருக்கும் சஃது பின் உபாதா (ரலி) அவர்கள் பைஅத் செய்யவில்லை. அதற்காக அவ்விருவரும் தலைமையை உதறி விடவில்லை. அந்த அடிப்படையில் அலீ (ரலி) அவர்களின் தலைமைப் பொறுப்பும் செல்லத்தக்கதே. மேலும் சிரியாவைத் தவிர்த்து கிட்டத்தட்ட ஏனைய மாகாணங்கள் அனைத்தும் அலீ (ரலி)யின் தலைமையை ஏற்றுக் கொண்டன.
அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்த ஸஹாபாக்களில் பலரும், சிரியாவின் ஆளுநரான முஆவியா(ரலி)வும், உஸ்மான்(ரலி) கொலையாளிகளைத் தங்களிடம் ஒப்படைத்தால் பைஅத் செய்வதாகக் கூறியிருந்தார்கள்.
ஆனால் அச்சமயம் மதீனாவில் அவர்களின் கை ஓங்கியிருந்ததையும், இப்போது நடவடிக்கை எடுத்தால் நிலைமை விபரீதமாகி விடும் என்பதையும் எடுத்துச் சொல்லி, ஆட்சித் தலைமையை வலுப்படுத்திய பிறகு நடவடிக்கை மேற்கொள்வது தான் விவேகமான செயல் என்பதை அலீ(ரலி) எடுத்துக் கூறியும், அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.
மேலும் அலீ (ரலி) அவர்கள் தாமாக விரும்பியோ, பிறரைக் கட்டாயப்படுத்தியோ, வலிமையைப் பயன்படுத்தியோ தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மாறாக மக்களே முடிவு செய்து, அப்பொறுப்பை அலீ (ரலி) அவர்கள் மீது திணிக்கத் தான் செய்தார்கள்.
மேலும் அலீ (ரலி) அவர்களுக்கும்  முஆவியா(ரலி) அவர்களுக்கும் இடையே சிஃப்ஃபின் போர் நடந்த போது பைஅத்துர் ரிழ்வானில் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த நபித்தோழர்களில் 800 பேர் அச்சந்தர்ப்பத்தில் அலீ (ரலி) அவர்களுடன் இருந்துள்ளார்கள் என இப்னு அப்தில் பர் அல் இஸ்தீஆப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்த தல்ஹா(ரலி) அவர்கள் பஸராவின் ஆளுநராக தன்னை நியமிக்க வேண்டும் என்றும், ஜுபைர்(ரலி) அவர்கள் கூஃபாவின் ஆளுநராக தன்னை நியமிக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார்கள் என்று கூறப்படுவதாக இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒருவழியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அலீ(ரலி) அவர்கள் முன்பாக மிகப்பெரும் சவால்கள் காத்துக் கிடந்தன. பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று.
அலீ(ரலி) சந்தித்த பிரச்சினைகள்
1. உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்குப் பழிதீர்த்தே தீருவது என்ற வெறியுடன் இரண்டு குழுக்கள் கிளம்புகிறது. ஒன்று சிரியாவிலிருந்து முஆவியா (ரலி) தலைமையிலான குழு, மற்றொன்று அன்னை ஆயிஷா(ரலி) தலைமையிலான குழு மக்காவிலிருந்து கிளம்புகிறது.
2. உஸ்மான்(ரலி) அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும், அவர்களின் கொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டவர்களும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் அலீ(ரலி) அவர்கள் விரும்பாத நிலையிலும், அவர்களுக்கு "பைஅத்' செய்திருந்தார்கள். இது உஸ்மான் (ரலி) ஆதரவாளர்கள் மத்தியில் அலீ (ரலி) அவர்களைப் பற்றி மேலும் அவதூறுகளைப் பரப்ப வாய்ப்பாக அமைந்தது. எந்த அளவுக்கென்றால் உஸ்மான்(ரலி) கொலையில் அலீ (ரலி) அவர்களுக்கும் பங்குண்டு என்ற அளவுக்கு கருதத் துவங்கி விட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்தப் பிரச்சனைகள் அவர்களுக்குப் பெரும் சோதனையாகத் திகழ்ந்தன.  தங்கள் முன் எழுந்த இந்த சவால்களை அலீ (ரலி) அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள்? அலீ (ரலி) அவர்களின் கிலாஃபத்திற்கு எதிராக அணி திரண்ட கூட்டங்களும், அலீ(ரலி) அவர்களின் படையும் மோதிக் கொண்டது எப்படி? என்னென்ன விளைவுகள் ஏற்பட்டது? அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன? என்பவற்றை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம்.
ஜிஹாத் ஓர் ஆய்வு                    தொடர் - 10
அன்னையாரின் சபதம்

இப்னு ஜமீலா
அலீ (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.  அவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.  பெருமானாரின் மனைவிமார்களான உம்முல் முஃமினீன்களிடமிருந்தும், பல மூத்த நபித்தோழர்களிடமிருந்தும் எதிர்ப்புகளையும் கண்டனக் கனைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  இவை அனைத்திற்கும் காரணம் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை தான்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியும் அவர்களின் படுகொலையும் எப்படி ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டதோ, அதே வழிமுறையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதற்காகவும் ஜிஹாத் என்ற ஆயுதம் கையிலெடுக்கப் பட்டது.
ஒருவகையில் பார்த்தால் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் ஈடுபட்டவர்களில் பெயர் சொல்லும்படி விளங்கிய முக்கியமான நபித்தோழர்கள் யாரும் கிடையாது.  சாதாரண நிலையில் உள்ளவர்கள் தான் ஜிஹாத் என்ற பெயரில் உஸ்மான் (ரலி)க்கு எதிராகப் படை திரட்டி வந்தார்கள்.  பின்னர் கொலையும் செய்தார்கள்.
ஆனால் எதிர் நடவடிக்கையாக பழி தீர்க்கத் துடித்தவர்கள் அந்த வகையினர் அல்ல!  பெருமானாரின் மனைவிமார்கள், தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), முஆவியா (ரலி) போன்ற மிக முக்கியமானவர்கள் முன்னணியில் இருந்தனர்.  இவர்கள் தான் ஜிஹாத் என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழி தீர்க்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆட்சித் தலைவராக விளங்கிய அலீ (ரலி) அவர்களுக்கு எதிராகக் களம் இறங்கினார்கள்.
அலீ (ரலி) அவர்களுக்கு எதிராக யார் யாரெல்லாம் எவ்வாறு படை திரட்டிக் கொண்டு களமிறங்கினார்கள்? அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்தன? யார் யார் பக்கம் என்னென்ன தவறுகள் இருந்தன? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகளுக்குள் செல்வோம்.
சிரியாவில் உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழிதீர்க்க வெறியூட்டப்படுதல்
உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படும் போது, அவர்களின் மனைவியரில் ஒருவரான நாயிலா (ரலி) அவர்கள் தடுக்க முற்பட்டபோது, கிளர்ச்சியாளர்கள் அவர்களின் உள்ளங்கையோடு சேர்த்து நான்கு விரல்களை வெட்டிவிடுகிறார்கள். வெட்டப்பட்ட நாயிலா (ரலி) அவர்களின் விரல்களையும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்படும்போது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த சட்டையையும், அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்த நுஃமான் பின் பஸீர் (ரலி) எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்று முஆவியா(ரலி) விடம் ஒப்படைத்தார்.
அவற்றை மக்களின் பார்வைக்காக பள்ளிவாசல் மிம்பரில் வைத்து, உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற வெறியை மக்களுக்கு ஊட்டி, முஆவியா (ரலி) பிரசங்கம் நிகழ்த்துகிறார். சஹாபாக்களில் உபாதா பின் ஸாமித், அபுத்தர்தா, அபு உமாமா, அம்ர் பின் அன்பதா (ரலி-அன்ஹும்) உள்ளிட்ட பலரும் இந்த வெறிக்குத் தூபமிடுகிறார்கள்.
மக்களெல்லாம் மிம்பரைச் சுற்றி கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆயிரக் கணக்கான சிரியாவாசிகள் "உஸ்மானைக் கொன்றவர்களைக் கணக்குத் தீர்க்காமல் இல்லற வாழ்வில் ஈடுபடுவதில்லை'' என்று சபதமேற்கிறார்கள். இது ஒருபுறமிருக்க...
நபித்தோழர்களின் நிர்பந்தம்
மற்றொரு புறம் மதீனாவில் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) உள்ளிட்ட சில நபித்தோழர்கள் உஸ்மான் (ரலி) கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சித் தலைவரான அலீ (ரலி) அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
அலீ (ரலி) அவர்கள், "நீங்கள் வைக்கும் கோரிக்கையின் நியாயத்தை நான் நன்றாக உணர்வேன். ஆனால் அதற்குரிய தருணம் இதுவல்ல! குற்றவாளிகள் நம்மை விட அதிக வலிமையுடன் மதீனாவில் உள்ளனர்.  நிலைமை சற்று நமக்கு சாதகமாக அமைந்தவுடன் நாம் நடவடிக்கையில் இறங்குவோம்'' என்று பதிலளிக்கின்றார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சபதம்
உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்று அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் அனைவரும் ஹஜ் செய்வதற்காக மக்காவுக்குச் சென்றிருந்தார்கள்.  மதீனாவில் ஏற்பட்டிருந்த குழப்பங்களை அறிந்து, அவர்கள் மதீனா திரும்புவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று கருதி, மக்காவிலேயே தங்கி விடுகின்றார்கள்.
உஸ்மான் (ரலி) கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அலீ (ரலி) அவர்களின் பக்கம் இருப்பதாகவும், அலீ (ரலி) அவர்கள் அந்தக் கொலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும் மக்காவுக்குச் சென்று, அங்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து இப்பிரச்சனை பற்றி ஆலோசனை செய்கின்றார்கள்.  ஆலோசனையின் முடிவில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்,
"புனிதமான (துல்ஹஜ்) மாதத்தில், புனிதமான நகரத்தில், அல்லாஹ்வின் தூதருக்கு (அதாவது மஸ்ஜிதுந்நபவீக்கு) அருகில் உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டிருக்கிறார். இதற்குக் கணக்குத் தீர்த்தே ஆக வேண்டும்''
என்று சபதமேற்கின்றார்கள்.
யமன் மாகாண ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட யஃலா பின் உமைய்யா 600 ஒட்டகப் படையுடனும் ஆறு லட்சம் திர்ஹம் போர் நிதியுடனும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சேருகின்றார். உமர் (ரலி) அவர்களின் மகனார் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் பக்கம் சேர்ந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் படையுடன் புறப்படத் தயாரானார்கள்.  அச்சமயத்தில் மக்களிடம் மூன்று விதமான அபிப்ராயங்கள் தோன்றின.
1. மக்காவிலிருந்து புறப்பட்டு நேராக சிரியாவுக்குச் சென்று அங்கு முஆவியா (ரலி) அவர்களுடன் சேர்ந்து கொண்டு மதீனாவுக்குப் படையெடுப்பது.
2. மக்காவிலிருந்து நேராக மதீனாவுக்குச் சென்று, அங்கு அலீ (ரலி) அவர்களை நேரில் சந்தித்து, கொலையாளிகளை ஒப்படைக்கும்படி கோருவது.
3. நேராக பஸராவுக்குச் செல்வது. பஸராவிலும் கூஃபாவிலும் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரின் ஆதரவாளர்கள் கணிசமான அளவில் இருப்பதால் அங்கு சென்று படை பலத்தை அதிகரித்துக் கொண்டு பஸராவிலுள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் எதிரிகளைக் காலி செய்து விட்டு, அங்கிருந்து பெரும் படையுடன் மதீனாவுக்குச் சென்று பழிவாங்குவது.
இந்த மூன்று அபிப்ராயங்களில் மூன்றாவது அபிப்ராயமே பெரும்பாலோரின் கருத்தாக இருந்ததால், அதையே ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவாக அறிவிக்கின்றார்கள்.
ஆனால் இந்த முடிவில் பெருமானாரின் மனைவிமார்களில் ஹஃப்ஸா (ரலி) தவிர வேறு யாருக்கும் உடன்பாடில்லை. உஸ்மான் (ரலி) கொலையாளிகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஆதரித்தார்கள்.  நேராக மதீனாவுக்குச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் முறையிட வேண்டும் என்ற இரண்டாவது கருத்து ஏற்கப்படுவதாக இருந்தால் தங்களுக்குச் சம்மதம் என்றும் வேறு எங்கும் செல்வதாக இருந்தால் தாங்கள் தயாரில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.
900 குதிரைப் படையுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் பஸராவை நோக்கி பழிவாங்கும் படை புறப்படுகின்றது.  அந்தப் படையில் தான் கலகத்திற்குக் காரணமான பனூ உமைய்யா கோத்திரத்தைச் சார்ந்த  மர்வான் பின் ஹகம், ஸயீத் இப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இருந்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட பெருமானாரின் மற்ற மனைவிமார்கள் அனைவரும் மதீனாவாசிகளுக்கான இஹ்ராம் எல்லையான தாது இர்க் என்ற இடம் வந்ததும், தங்களின் பாதையை மதீனாவை நோக்கி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.  ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸராவை நோக்கிச் செல்கின்றது.
அடுத்து நடந்தது என்ன? வரும் இதழில் இன்ஷா அல்லாஹ்
ஜிஹாத் ஓர் ஆய்வு                      தொடர்-11
ஜிஹாதின் பெயரால் ஐயாயிரம் முஸ்லிம்கள் படுகொலை
இப்னு ஜமீலா
ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள்
உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது.
இந்நிலையில், "மர்ருழ் ழஹ்ரான்' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் ஆஸ், தனது ஆதரவாளர்களிடம், "நீங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளைப் பழி தீர்க்க விரும்பினால் இந்தப் படையில் உள்ள, தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோர் உட்பட உஸ்மான் (ரலி) ஆட்சியைக் குறை கூறியவர்கள், விமர்சனம் செய்தவர்கள், மதீனாவில் இருந்து கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் காப்பாற்ற முன் வராதவர்கள் போன்றவர்களும் குற்றவாளிகளே! எனவே இந்தப் படையில் உள்ள இந்த வகையினரைக் கொன்று விடுங்கள்'' என்று கூறினார்.
இதைக் கேட்ட மர்வான், "அப்படிச் செய்ய வேண்டாம். தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), அலீ (ரலி) ஆகிய மூவரையும் ஒருவரையொருவர் மோத வைப்போம்.  இதில் யார் தோல்வியடைகின்றார்களோ அவர்களின் கதை முடிந்து விடும்.  அப்போது அவர்களை நாம் எளிதில் வீழ்த்தி விடலாம்'' என்று மிகப் பெரிய கிரிமினல் ஐடியாவைக் கூறினார்.
கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்த கதையாக, சதிகாரர்களை உள்ளடக்கிய நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸராவை வந்தடைந்து, ஒரு மேட்டுப் பகுதியில் பாளையம் இறங்கியது.
பஸராவைக் கைப்பற்றுதல்
உஸ்மான் (ரலி) கொலைக்குப் பல்வேறு வகையில் காரணமானவர்கள் பஸராவில் ஓரளவு பலத்துடன் இருந்ததால் முதலில் அவர்களைப் பழி தீர்க்கத் தேவையான யுக்திகளை தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வகுத்தனர்.
இதற்கிடையில் இந்த மோதலைத் தவிர்ப்பதற்காக பஸராவில் இருந்த பல முக்கியப் பிரமுகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.
ஹாரிஸா பின் ஹுதாமா என்பவர், "உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளைப் பழி தீர்க்க வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை விட, உம்முல் முஃமினீனாகிய நீங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டு, முஃமின்களில் ஒரு சாராரை எதிர்த்துப் படை திரட்டி வந்தது மிகப் பெரிய விஷயம். எனவே மோதலைத் தவிர்த்து விடுங்கள்'' என்று அறிவுரை கூறினார்.
இது போல் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பலனில்லை. தம் படையினரிடத்தில் தல்ஹா, ஜுபைர், ஆயிஷா (ரலி) ஆகியோர் வீர உரை நிகழ்த்தி பஸரா மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படுகின்றது.  ஆயிஷா (ரலி) அவர்களின் படைக்கு ஆதரவு தர மறுத்தவர்களும் தாக்கப்படுகின்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளில் முக்கியமானவனான ஹக்கீம் பின் ஜபலா என்பவன் தலைமையில் ஓரளவு படை பலம் இருந்தது.  அவன் ஆயுதம் தாங்கிய 300 பேர் கொண்ட படையுடன் திடீர் தாக்குதல் நடத்தினான். ஆயிஷா (ரலி) அவர்களின் படையினர் திருப்பித் தாக்குதல் நடத்தி அவர்களில் 70 பேர் கொல்லப்பட்டு விடுகின்றார்கள்.  இத்தாக்குதலில் ஹக்கீம் பில் ஜபலாவும் கொல்லப்படுகின்றான்.
ஜுபைர் மற்றும் தல்ஹா (ரலி)யின் படையினர் இரவோடு இரவாகப் புகுந்து ஒரே தாக்குதலில் 40 பேரைக் காலி செய்து விடுகின்றார்கள்.  ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவு தர மறுத்த பஸராவின் முக்கியப் பிரமுகர் உஸ்மான் பின் ஹனீப் என்பவர் தூக்கி வரப்பட்டு தாக்கப்படுகின்றார்.  அவரது தாடி ரோமங்கள் பிடுங்கப்படுகின்றது. அவர் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து பஸராவை விட்டு ஓடுகின்றார்.
இரு தரப்பிலும் பெரிய இழப்பிற்குப் பின் ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸரா நிர்வாகத்தையே கைப்பற்றி விடுகின்றது.  பஸரா மாகாண நிதியமைச்சராக, பைத்துல் மால் பொறுப்பாளராக அபூபக்ர் (ரலி)யின் மகனும், ஆயிஷா (ரலி)யின் சகோதரருமான அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) நியமிக்கப்படுகின்றார்.  பஸராவின் மக்களைச் சரி கட்டுவதற்காக பைத்துல்மால் பொருட்கள் மக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன.
அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பஸராவை ஆயிஷா (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரின் படையினர் கைப்பற்றிய செய்தியை அறிந்த முஆவியா (ரலி) அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றார்கள்.
மதீனாவுக்குப் படையெடுக்க ஆயத்தம்
பஸராவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்களின் அடுத்த இலக்கான மதீனாவின் மீது குறி வைக்கின்றார்கள்.  பஸராவிலிருந்து மதீனா செல்லும் வழியில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவை அல்லது எதிர்க்காத நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஆயிஷா (ரலி) கடிதம் எழுதுகின்றார்கள்.
அவ்வாறு அப்துல் கைஸ் கூட்டத்தினரின் தலைவராக விளங்கிய ஜைத் பின் ஸவ்ஹான் என்பவருக்கு, தங்களுக்கு உதவி செய்யுமாறும் அல்லது நடுநிலையை மேற்கொள்ளுமாறும் கடிதம் அனுப்புகின்றார்கள்.
அதற்குப் பதில் எழுதிய ஜைத், "உம்முல் முஃமினீன் அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! தங்களை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் தாங்கள் வீட்டில் இல்லாமல் அல்லாஹ்வின் கட்டளையை மீறி போருக்குத் தலைமை ஏற்று வந்திருக்கின்றீர்கள்.  இவ்விஷயத்தில் நீங்கள் எங்களுக்குக் கட்டளையிடக் கூடாது'' என்று கூறிவிட்டார்.
ஆயிஷா (ரலி)க்கு எதிராக அலீ (ரலி) படையெடுப்பு
அமீருல் முஃமினீன் (அலீ-ரலி) அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்து அவர்களுக்கு எதிராக படை திரட்டிக் கொண்டிருந்த சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி) அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதற்காக, அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற முறையில் சிரியாவை நோக்கி படை திரட்டிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.  இந்நிலையில் பஸராவின் நிலையைக் கேள்விப்பட்டவுடன் தனது ஆட்சியின் கீழ் இருந்த பஸராவை மீட்டாக வேண்டும், குழப்பங்களைக் களைந்தாக வேண்டும் என்ற கடமையுணர்வு மேலிட்டதால் சிரியாவுக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு பஸராவை நோக்கிச் செல்ல முடிவெடுக்கின்றார்கள்.
பத்ரீன்கள் என்றழைக்கப்படும் பத்ருப் போரில் பங்கெடுத்த வீர ஸஹாபாக்கள் ஆறு பேர் உட்பட 900 வீரர்களுடன் படை மதீனாவிலிருந்து புறப்படுகின்றது.
அச்சமயத்தில் அப்துல்லாஹ் பின் ஸலாம் என்ற நபித்தோழர் அலீ (ரலி) அவர்களின் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துத் தடுக்கின்றார்கள்.  அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்கள் அதற்கு முந்தைய சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, பஸராவுக்குச் செல்ல வேண்டாம் என்று தடுக்கின்றார்கள்.
ஆனாலும் அலீ (ரலி) அவர்கள், தான் ஆட்சித் தலைவர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்லி மறுத்து விடுகின்றார்கள்.
மேலும் படை பலத்தை அதிகரிக்கச் செய்வதற்காக அபூபக்ர் (ரலி)யின் மகனான முஹம்மத் பின் அபூபக்ர் மற்றும் அலீ (ரலி)யின் சகோதரர் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் மகனான முஹம்மது பின் ஜஃபர் ஆகிய இருவரையும் கூஃபாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்பி அங்கிருந்து படை திரட்டுகின்றார்கள்.
சமாதான முயற்சியும் தோல்வியும்
மதீனாவிலிருந்து பஸரா செல்லும் வழிகளில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப் படை திரளுகிறது.  பஸராவுக்கு வந்து சேர்ந்த பிறகு பஸராவுக்கு வெளியே உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களின் படையில் 30 ஆயிரம் முஸ்லிம்களும், அமீருல் முஃமினீன் அலீ (ரலி) அவர்களின் படையில் 20 ஆயிரம் முஸ்லிம்களும் இடம் பெற்றிருந்தனர்.
இரு படைகளும் எதிரும் புதிருமாய் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து வேதனையடைந்தவர்கள், இறை விசுவாசிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அக்கறையும் கவலையும் கொண்ட நல்ல உள்ளம் படைத்தவர்கள் போரை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  அலீ (ரலி) அவர்களும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமாகப் போவதற்குத் தயாரானார்கள்.  அவர்களே கூட பல முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.  ஒரு வழியாக சமாதானம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் போர் தவிர்க்கப்படும் அளவுக்குச் சென்று விடுகின்றது.
ஆனால் அலீ (ரலி) அவர்களின் படையில் வந்திருந்த உஸ்மான் (ரலி) கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், சமாதானம் ஏற்பட்டால் தங்களின் கதி அதோகதியாகிவிடும் என்பதை உணர்ந்து சமாதானத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தார்கள்.
அதேபோல் ஆயிஷா (ரலி) அவர்களின் படையில் இருந்த சதிகாரர்கள், சமாதானம் ஏற்பட்டால் தங்களின் (அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரை மோத விட்டுக் காலி செய்யும்) திட்டம் நிறைவேறாமல் போய் விடும் என்ற காரணத்தால் அவர்கள் சமாதானத்திற்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள்.
ஒட்டகப் போர்
அதன் விளைவு இரண்டு பக்கத்திலும் திடீர் தாக்குதல் நடத்தப் பட்டு யுத்தம் துவங்கி விடுகின்றது.  சமாதான முயற்சிகள் அனைத்தும் வீண் போயின.  ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தின் கால் ஒடிக்கப்படுகின்றது.
அலீ (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று, போர்க்களத்தை விட்டு வெளியேறிய ஜுபைர் (ரலி) அவர்களை அம்ர் பின் ஜர்மூஸ் என்ற கொடியவன் கொன்று விடுகின்றான்.  அதே போல் அலீ (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று போர்க்களத்தில், முன் வரிசையிலிருந்து விலகி பின்புறம் சென்ற தல்ஹா (ரலி) அவர்களை மர்வான் பின் ஹகம் கொன்று விடுகின்றான்.
சொர்க்கத்திற்கு நன்மாராயம் சொல்லப்பட்ட அஷ்ரத்துல் முபஸ்ஸரா என்றழைக்கப்படும் பத்துப் பேரில் இருவரான தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவர் உட்பட 5 ஆயிரம் பேர் இந்த ஒட்டகப் போரில் கொல்லப்படுகின்றார்கள்.  இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாதின் பெயரால் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டு ஆயிரக்கணக்கில் மடிந்த முதல் நிகழ்ச்சி இது தான்.

1 கருத்துகள்:

//உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிராக அவர்கள் படை திரட்டி வந்ததற்கான காரணங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள்,//

நான் அறிந்த வகையில் இந்த இடத்தில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளது.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites