அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

உடன் கட்டை

கணவன் இறந்து விட்டால் போதும்! அந்தப் பெண்ணுக்கு, சமுதாய மக்கள் மொட்டையடித்து விடுவர். வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில், மூளி என்று முடக்கி வைத்து விடுகின்றனர்.
ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலி; தாலி அறுத்தவள். நல்ல காரியத்திற்குச் செல்வோருக்கு முன்னால் அவள் குறுக்கே வந்து விட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்ட சகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை செய்கின்ற கொடுமை நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
மொட்டை அடித்து வதை செய்யும் கொடுமையுடன் நின்று விடுவதில்லை. இறந்த கணவனை எரிக்கும் போது அந்த நெருப்பில் மனைவியையும் தள்ளி விட்டு, உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் கொழுந்து விட்டு எரியச் செய்வர்.
04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.
தன்னைக் காப்பாற்றும்படி கதறிய கதறல், மவ்ட்டீக சிந்தனையில் ஊறிப் போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை. மறுமணம் புரிந்து மறு வாழ்வு காண வேண்டிய ஒரு மலர் குருட்டு நம்பிக்கையின் கோரத் தீயில் பலியாகிப் போகின்றாள்.
இன்றைய காலத்து 24 மணி நேரத் தொலைக்காட்சி அலை வரிசைகள் அன்று இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தச் செய்தியைக் கண்டு உலகமே வெகுண்டு, வீறு கொண்டு எழுந்திருக்கும். பத்திரிகைகள் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடித்துக் காட்டின. பாரதீய ஜனதா கட்சி மட்டும் அப்போது இந்த அநியாயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.
அகில இந்திய அளவில் கிளம்பிய எதிர்ப்பலையால் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. எனினும் ஊர் மக்களுக்கு எதிராக காவல்துறை தரப்பில் சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால் 31.04.2004 அன்று இந்த வழக்கைத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இவ்வாறு உடன்கட்டை ஏறவில்லை என்றால், கணவனை இழந்த கைம்பெண் இப்படிச் சாகவில்லை என்றால், அவளைச் சாகடிப்பதற்குச் சமுதாயம் வேறொரு முறையைக் கையாளும்.
ஆண்களோ அல்லது திருமணம் முடித்த பெண்களோ பார்க்காதவாறு விதவைப் பெண் ஒரு கருப்புத் திரையில் மூடப்பட்ட, ஆட அசைய முடியாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தனியறையில் அடைக்கப்படுவாள்.
நாள் முழுவதும் தரையில் தான் உட்கார வேண்டும். அதுவும் தன் இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து குத்த வைத்து உட்கார வேண்டும். ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். இதிலேயே அவள் மெலிந்து சாக வேண்டும். இதுவும் ராஜஸ்தானில் நடைபெறும் கொடுமையாகும்.
விதவைப் பெண்கள் அனுபவிக்கும் விதவிதமான கொடுமைகளைப் பார்த்தீர்களா? ஏற்கனவே கணவனை இழந்து தவிக்கும் அவளுக்குச் சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக, அரங்கேற்றும் அக்கிரமங்கள், இழைக்கும் அநியாயங்களைப் பாருங்கள்.
உடன் கட்டை ஏற்றி, உயிருடன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை இந்நாட்டில் இந்து மதத்தில் உள்ள நடைமுறையாகும்.
யூத மதத்தில் விதவையின் நிலை
யூத மதப்படி, கணவனை இழந்த கைம்பெண்ணுக்குக் குழந்தை இல்லையெனில் அவள் கண்டிப்பாகக் கணவனின் தம்பியைத் திருமணம் முடித்தாக வேண்டும். கணவனின் சந்ததி தழைப்பதற்காக இந்த ஏற்பாடு! இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கலாம்.
அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
ஆதியாகாமம் 38:8
இதில் வேடிக்கை என்னவெனில், இறந்தவனின் சகோதரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அவன் தன் அண்ணியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்.
விதவையான அந்தப் பெண்ணிடம் சம்மதம் கூடப் பெறப்படாது. காரணம், அவள் இறந்தவனின் மனைவியாக, ஒரு பெண்ணாக நடத்தப்படமாட்டாள். மாறாக, அவள் இறந்தவனின் சொத்தாகவே கருதப்படுவாள்.
அது மட்டுமின்றி விதவை களையும், விவாகரத்துச் செய்யப் பட்ட பெண்களையும் யூத உயர் குலத்தோர் மற்றும் மத குருமார்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது.
கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம் பண்ண வேண்டும்.
விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம் பண்ணாமல், தன் ஜனங்களுக் குள்ளே ஒரு கன்னிகையை விவாகம் பண்ணக் கடவன்.
அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 21:13-15
இப்படி யூத மதம் தன் பங்குக்கு விதவைப் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது; கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.
அரபியர்களிடம் விதவைகள்
இஸ்லாம் வருவதற்கு முன் வாழ்ந்த அரபியர்களிடம் விதவைகளை மணம் முடிக்கும் பழக்கம் இருந்தாலும் அவர்களிடத்திலும் ஒரு கொடுமை நீடித்து வந்தது.
சகோதரர்களின் மனைவிகளை சொத்துக்களைப் போல் பாவிப்பது யூதர்களின் நடைமுறை என்றால், அரபியர்கள் தங்கள் தந்தையரின் மனைவியரைச் சொத்தாகப் பாவித்து அவர்களைக் கட்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு விதவைகள் மற்றும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் விஷயத்தில் உலக மதங்கள் அனைத்தும் அநீதியையும், அக்கிரமத்தையும் இழைப்பதைப் பார்க்கிறோம். இதில் இஸ்லாம் மட்டும் தான் விதிவிலக்காகத் திகழ்கிறது.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 24:32
கைவிடப்பட்ட கைம்பெண்களை திருமணம் முடித்து வைக்க இந்த வசனம் சொல்கிறது. யூத, கிறித்தவ, இந்து மதங்கள் போன்று விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் சாபக்கேடுகளாக, சமுதாயச் சுமைகளாக இஸ்லாம் கருதவில்லை.
கைம்பெண்களின் சம்மதம் கேட்காமலேயே அவளைக் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கும் பழக்கத்தை யூத மதம் கொண்டிருப்பதைக் கண்டோம். கணவனின் சொத்துக்களில் ஒன்றாக அவளையும் பாவிக்கும் பொழுது, அந்தப் பெண்ணிடம் எப்படி சம்மதம் கேட்கச் சொல்ல முடியும்?
இதோ இஸ்லாம் எனும் இந்த எளிய மார்க்கத்தின் இனிய தூதர், இது தொடர்பாக வழங்கும் உரிமை முழக்கத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஹன்ஸா பின்த் கிதாம்(ரலி)
நூல்: புகாரி 5136
எவ்வளவு பெரிய விடுதலை உணர்வை இஸ்லாம் வழங்குகிறது என்று பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணம் முடித்த பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விதவையர் தான் என்றால், விதவைகளின் மறு வாழ்வுக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இறந்து விட்ட தந்தையின் மனைவியரை, தந்தையின் சொத்தாகப் பாவித்து, பிள்ளைகள் மணமுடிக்கும் வழக்கம் அரபியர்களிடம் இருந்ததைக் கண்டோம். இந்தப் பழக்கத்தை இஸ்லாம், அரபியர்களிடமிருந்து வேரறுத்து எறிந்து விடுகின்றது.
உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.
அல்குர்ஆன் 4:22
விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் மணம் முடிக்கும் வழக்கம் கிறித்தவர்களிடம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் வேதத்தில் இல்லை. எனவே இது வேதத்தின் குறைபாடாக ஆகிவிடுகின்றது. ஆனால் திருக்குர்ஆன் நிறைவான வேதம் என்பதால் இந்த நிவாரணத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், அதை மக்களிடம் நடைமுறையிலும் கொண்டு வந்தது.
இவ்வாறு விதவைப் பெண்களின் கொடுமைகளைப் போக்கும் எளிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. இந்த எளிய மார்க்கம் விதவைகளுக்கென சில வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அது தான் இத்தா சட்டமாகும்.

தீட்டான பெண்கள்
மாதவிடாய் என்பது மாதந் தோறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கைக் கூறாகும். கரு முட்டைகள் உடைந்து வெளிவரும் கழிவாகும்.
பெண்களுக்கு இவ்வாறு மாதவிடாய் ஏற்படும் போது மக்கள், அப்பெண்ணைத் தீண்டத் தகாதவளாகப் பார்க்கின்றனர். அவர்களைத் தீட்டுப்பட்டவர்கள் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. வீட்டுக்குத் தூரமானவர்கள் என்றும் குறிப்பிட்டு, அவ்வாறே நடத்தவும் செய்கின்றனர். அப்படி ஓர் அருவருப்பான தோற்றத்தை மதங்கள் மக்களிடம் உருவாக்கி விட்டிருக்கின்றன.
யூத மதம் இதில் தலைமை வகிக்கின்றது.
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.
அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக் கொள்ளுகிறாளோ எதின் மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
லேவியராகமம் 15:19-23
மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஏழு நாட்கள் வீட்டை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும், அவள் எதையெல்லாம் தொடுகிறாளோ அவையனைத்தும் தீட்டுப்பட்டவை என்றும், அவள் உட்கார்ந்த இடமும் தீட்டு என்றும் பைபிள் பழைய ஏற்பாட்டின் இந்த வசனங்கள் கூறுகின்றன.
அது மட்டுமின்றி, மாதவிடாய் பெண்களைத் தொட்டவர்களும், அவள் இருந்த இடத்தையும், படுக்கையையும் தொட்டவர்களும் தீட்டுப்பட்டவர்கள் என்றும் யூத மதம் கூறுகின்றது.
யூத மதத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு அமைந்த மனு தர்மமும் இது போன்றே குறிப்பிடுகின்றது.
சண்டாளன், விலக்கானவள், பிணம், பிணத்தைத் தொட்டவர் ஆகியவர்களைத் தொட்டால் நீராடுக!
தீட்டுக்கு மாற்று என்ற தலைப்பின் கீழ் 111வது வசனத்தில் மனு தர்மம் இதைக் கூறுகின்றது.
இஸ்லாம் தான் இந்தக் கொடுமைகளைக் களைந்து எறிகின்றது. இது பற்றி திருக்குர்ஆன் கூறுகின்றது.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:222
இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:222)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.  எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடலுறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், "இவர் (நபி (ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை'' என்று பேசிக் கொண்டனர்....
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 455, அபூதாவூத் 225
மாதவிடாய் பெண்களிடம் இல்லறத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆகும் என்று அறிவித்து, பெண்களின் மீது பூட்டப் பட்டிருந்த இரும்புச் சங்கிலிகளை இஸ்லாம் உடைத்தெறிகின்றது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவற்றை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 7:157
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள், பெண்கள் மீது போடப்பட்டிருந்த விலங்குகளை தகர்த்தெறிகின்றார்கள்.
இந்த எளிய மார்க்கத்தின் இனிய இறைத்தூதர் அவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை எப்படி எல்லாம் நடத்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள்!
கணவனுக்குத் தலை வாருதல்
யூத, இந்து மதங்கள் தீட்டுப்பட்ட பெண்களைத் தொட்டாலே குளிக்க வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இந்த எளிய மார்க்கத்தின் தூதர் (ஸல்) அவர்கள், தமது மனைவி மாதவிடாயாக இருந்த நேரத்தில் தமது தலையைக் கழுவி விடுமாறு கூறுகின்றார்கள்.
ஹிஷாம் பின் உர்வா அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா அவர்களிடம், "மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? பெருந்தொடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?'' என்று கேட்கப் பட்டது.
அதற்கு, "இதுவெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இயல்பான விஷயம் தான். (மாதவிடாய் ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரி விடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்குத் தலை வாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 296
மாதவிடாய்ப் பெண்ணை அணைத்துக் கொள்ளுதல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (தமது மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் வெளிப்படுமிடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உஙகளில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?
நூல்: புகாரி 301
ஒன்றாகப் படுத்துக் கொள்ளுதல்
(நபி ஸல் அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி, மாதவிடாய் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
நூல்: புகாரி 298
தீட்டு கையில் இல்லை
ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு, "ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்துக் கொடு'' என்று கூறினார்கள். அதற்கு, "நிச்சயமாக நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேன்'' என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவர்கள். "உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை'' எனக் கூறினார்கள். பின்னர் அத்துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 450, திர்மிதீ 124
மாதவிடாய்ப் பெண் தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற தீண்டாமையை இஸ்லாம் உடைத்து நொறுக்கி விடுகின்றது. அத்துடன் மாதவிடாய் ஏற்பட்ட பெண், தொழுகை விரிப்பை எடுத்து வருவதற்குக் கூட அனுமதிக்கிறார்கள். "மாதவிடாய் என்பது கையில் இல்லை'' என்ற அற்புதமான கூற்றின் மூலம் உலகில் உள்ள மற்ற மதங்களிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிகின்றார்கள்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites